குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, June 8, 2022

நிலம் (98) - கிராம வரைபடத்தில் இல்லாத நிலங்கள்

வருவாய்துறையில் நடைபெறும் வில்லங்க விவகாரங்களைச் சரி செய்து விட்டார் என்றால் ஸ்டாலின் தான் தமிழ் நாட்டின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார். அந்தளவுக்கு வில்லங்கங்களும், விவகாரங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், அக்கிரமங்களும் நடைபெறும் துறையாக வருவாய் துறை தொடர்ந்து பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு கிராமத்தில் இருக்கும் நிலங்களை வரைபடமிட்டு, அதற்கு சர்வே எண் குறித்து ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலங்கள் வரையறை செய்யப்பட்டு விட்டன. இல்லையென்றால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பைமாஷ் - சர்வே எண் என மாறிவிட்டது. இந்த பைமாஷ் கணக்கே இன்னும் சரியாகவில்லை. இதற்கிடையில் கொரலேஷன் அதாவது சர்வே எண்கள் இணைப்பு, நகர எல்லை விரிவாக்கம், வார்டுகள் மறுவரையறை ஆகியவற்றில் தமிழ் நாடு வருவாய்த்துறையினர் செய்யும் அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல. பைமாஷ் நம்பர், கிராமத்தின் பெயர், பழைய வார்டு, புது வார்டு, பிளாக், அதன் டி.எஸ் நெம்பர் என எதற்கும் அப்டேட் இருக்காது. எந்த பைமாஷ் நம்பருக்கு எந்த சர்வே நம்பர் அதன் பின்பு நகரமாக்கும் போது வழங்கப்பட்ட டி.எஸ். நம்பர் என்ன? பழைய சர்வே எண்ணில் உள்ள நிலம் அனைத்தும் ஒரே டி.எஸ். நம்பருக்குள் இருக்கிறதா? இல்லை பிரிபட்டிருக்கிறதா? என்ற விபரங்களைத் தேடினால் தலையில் இருக்கும் முடி ஒன்று கூட இருக்காது. அவ்வளவு குழப்பம். 

அத்தனை தகவல்களையும் பொதுமக்களுக்கு தராமல் தங்களிடம் வைத்துக் கொண்டு லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒரு சர்வே எண் விபரம் தருவார்கள். இதைப் போல எத்தனை கிராமங்கள்? எத்தனை சர்வே எண்கள்? நினைத்துப் பாருங்கள். எவ்வளவு லஞ்சம் என?

இதற்குள் சிக்கி என்னவென்று தெரியாமல் பலரும் பல இடங்களை வாங்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இணையதளத்தில் ஓசியில் விபரம் கேட்கின்றார்கள். கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்பவர்கள் நல்ல ஒரு லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெற்றால் என்ன கெட்டுப் போய் விடுகிறது? ஆனாலும் நப்பாசை விடுவதில்லை. அவரா நம்மை ஏமாற்றி விடப்போகிறார் என்று தனக்குள்ளே ஒரு சமாதானம்.

நகர எல்லைக்குள் ஒரு கிராமம் வந்து விட்டால் விலை ஏறும் என்ற ஆசையில் எவரும் வார்டு, பிளாக், டி.எஸ். நம்பர்கள், நிலங்கள் பற்றி கவனிப்பதில்லை. அதே போல கிராமபுறங்களில் கொரலேஷன் செய்த விபரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. கொரலேஷன் என்றால் பல சர்வே எண்களை ஒன்றாக இணைத்தும், பிரித்தும் புதிய சர்வே எண்களை உருவாக்குவது. இப்படியான கொரலேஷன்களில் பலரின் இடங்கள் காணாமல் போய் விடும். இது வருவாய் துறையினரால் செய்யும் செயலன்று. அங்கிருக்கும் ஒரு சில ஆடுகள் செய்யும் வேலையாக இருக்கும். கண்காணிப்பு இருந்தாலும் ஏமாற்றித் திருடும் கூட்டமும் இருக்கத்தானே செய்கிறது.

இதைப் போன்ற இடங்களை வாங்கும் போது வெகு கவனம் தேவை. பெரும்பாலும் எல்லா மாவட்டங்களிலும் இந்த கொரலேஷன் நடந்திருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். என்னால் இவ்வளவு தான் சொல்ல முடியும். முழுவதையும் எழுத இயலாது.

நில அளவை துறையினிலோ பல கிராம புல வரைபடங்கள் காணவில்லை. அது குறித்து இமெயில் அனுப்பி, போனில் பேசியும் ஐந்தாறு மாதமாக ஒரு கிராமத்தின் புல வரைபடத்தை அப்டேட் செய்யவே மாட்டேன் என்கிறார்கள்.

கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படியுங்கள்.

சென்னை வரைபடத்தில் இல்லாத சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்க மறுத்ததால் சென்னை கலெக்டர் விஜயராணி IAS மாற்றம் !? திடுக்கிடும் தகவல் !! வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மூலம் பழி வாங்கிய முதல்வர் தனிச் செயலாளர்!?

செய்தியின் உண்மைத்தன்மைக்கு நான் பொறுப்பாளி அல்ல. இப்படியெல்லாம் நடக்குமா என்றால் ஆம் நடக்கும். கவனமாக இருக்க வேண்டியது நாம் தான். 

சமீபத்தில் ஒரு கோர்ட் உத்தரவு படித்தேன். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்யவே கூடாது என்கிறது அந்த உத்தரவு. பெரும்பாலும் கிராமப்புறங்களில் மேய்கால் நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டு பொது மக்களுக்கு பட்டா வழங்கி இருக்கிறார்கள். அவர்களின் கதி என்னவாகும்? என்று தெரியாது.

அதென்ன மேய்க்கால், மேய்ச்ச்சல் நிலம் என்ற கேள்வி எழும்பினால் இந்த பிளாக்கில் எழுதி இருக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள்.

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.