குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சுவாமி ஆத்மானந்தர். Show all posts
Showing posts with label சுவாமி ஆத்மானந்தர். Show all posts

Monday, July 24, 2023

சுவாமி ஆத்மானந்தர் - அஞ்சலி


1997ம் வருடம் கரூர் சுப்ரமணியம் அவர்கள் சுவாமி ஆத்மானந்தர் அவர்களிடம் என்னைச் சேர்ப்பித்தார். அன்றிலிருந்து 2001 வரை கரூர் ராமகிருஷ்ணர் ஆஸ்ரமத்தில் இருந்தேன். கணிணி ஆசிரியராகவும், இரண்டு கல்லூரிகளுக்கு கணிணி அசெம்பிளிங், சாஃப்ட்வேர் இன்ஸ்டாலேசன், நெட்வொர்க்கிங் வேலைகளை நானொருவனாகவே செய்து வந்தேன். சம்பளம் ஏதுமின்றி.

கல்லூரிகளுக்கு தேவையான கம்யூட்டர்கள் பாகங்களை சென்னை சென்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் வாங்கி வந்து அசெம்பிள் செய்து, ஆபரேட்டிங்க் சிஸ்டம், இன்னபிற சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து, அவைகளை நெட்வொர்க்கிங்கில் இணைப்பது, பிரிண்டர்கள் போன்றவைகள் வாங்க சுவாமியுடன் சென்னைக்குச் செல்வது என எப்போதும் வேலையாக இருப்பேன். மாலை வேலைகளில் சுமார் இரண்டு மணி நேரமாவது சுவாமிகளுடன் தனிமையில் பேசிக் கொண்டிருப்பது வாடிக்கை. தினமணிக்கு பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அடியேன் தான் டைப் செய்து கொடுப்பேன். தினமணி ஆசிரியர் வைத்திய நாதனுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது.

அவர் பெரிய படிப்பாளி. எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அவருக்குப் பிடித்த புத்தகம் தாயுமானசுவாமிகள் பாடல்கள். ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதோ ஒரு தாயுமான சுவாமிகள் பாடலைப் பற்றி விவரிப்பார். அப்போதெல்லாம் எனக்கு ஒன்றும் புரியாது. கேட்டுக் கொண்டிருப்பேன். இப்போது அடியேன் தாயுமான சுவாமிகள் எழுதிய பராபரக் கண்ணிக்கு விளக்க உரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இரு வரிகளுக்கான அர்த்தத்தை எழுதுவதற்குள் பெரும்பாடாக இருக்கிறது.

பரநாட்டத்தைப் பற்றியே பெரிதும் பேசுவார். ஆஸ்ரமத்தில் இருந்த போது பகவான் ராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றினை எனக்குச் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போது அது ஏதோ ஒரு கதை என்பது போலவே இருந்தது. இப்போது என்னால் தொடர்ந்து நான்கு பக்கங்கள் படிக்கமுடியவில்லை. மனது ஒன்றி விடுகிறது. தொடர்ந்து படிக்க இயலவில்லை. கண்ணீர் பெருகி விடுகிறது. பகவானின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு அர்த்தம் பொதிந்தவை. ஆன்றோர்கள், சான்றோர்கள், மகாபுருடர்களின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும் பக்குவம் காலத்தினால் மட்டுமே கிடைக்கும். 

எனக்குத் தெரிந்து சுவாமி ஆத்மானந்தர் அவர்கள், சுமார் 3000 பிள்ளைகளுக்கு மேல் இலவசமாக உடையும், உணவும் கொடுத்து படிக்க வைத்திருக்கிறார். பெண் பிள்ளைகள் அனேகம். தாயைப் போல அவர்களைக் கவனித்துக் கொண்டார்.

எத்தனையோ பேர்கள் அவரிடம் பொருளுதவி பெற்றிருக்கிறார்கள். எத்தனையோ நபர்கள் அவரிடமிருந்து ஏமாற்றி பெரும் பொருளைத்திருடி இருக்கிறார்கள். நான் அங்கிருந்த காலத்தில் அத்தனைக்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால் இது எதுவும அவரைப் பாதிப்பதே இல்லை. 

கரூர் ஆஸ்ரமத்தையும், சாரதா நிகேதன் கல்லூரியையும் திருப்பராய்த்துறை தபோவனம் அவரிடமிருந்து பிடிங்கிக் கொண்டது. அது அதர்மம் தான் என்னளவில். 

கரூர் சாரதா நிகேதன் கல்லூரியின் முன்பு இருக்கும் விவேகானந்தர் சிலை அமைக்கும் போது நான் அங்கிருந்தேன். அந்த மண்டபத்தில் இருக்கும் ஷாண்ட்லியர் ஒரு லட்ச ரூபாய். நான் தான் சென்னைக்குச் சென்று வாங்கி வந்தேன். கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் சிலையை உருவாக்கியவரே இந்தச் சிலையினையும் உருவாக்கினார். சுவாமிக்கு நிரம்பவும் பிடித்த இடம் அது. காலம் அவரை அங்கு இருக்கவிடவில்லை. 

காரைக்குடி அமராவதிபுதூரில் சாரதா சேவாஸ்ரமத்தின் அருகில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். கல்லூரி கட்டடம் வேலை செய்து கொண்டிருந்த போது, இஞ்சினியருக்கு பணம் கொடுக்கச் செல்லும் போது நானும் சுவாமியுடன் செல்வதுண்டு, அவருடன் அவரது அறையிலேயே தங்கிக் கொள்வேன். கல்லூரி கட்டி முடித்தவுடன் 50 கம்யூட்டர்கள் உருவாக்கி லேப் செட்டப் செய்து கொடுத்தேன்.  

கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமம் அவரை விட்டுச் சென்ற பிறகு சேலத்தில் பெண்கள் கல்லூரியினை உருவாக்கினார். அங்கு சுவாமி நித்தியானந்தருடன் பிரச்சினை ஏற்பட்டு, கல்லூரி இன்னும் பெரிதாக வளரவில்லை.  தஞ்சாவூர் பால்சாமி மடம், கோவை குங்குமப்பாளையம் பள்ளி, சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் பின்னால் இருந்த ராமகிருஷ்ண ஆஸ்ரமம் ஆகியவை என்ன ஆனதோ தெரியவில்லை. தஞ்சாவூர் பால்சாமி மடத்தின் இருந்த நிலத்தில் விவசாயம் செய்து, அங்கிருந்து தான் அரிசி வரும். 

கோவை பள்ளப்பாளையம் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்துக்கு நானும் அவருடன் வருவதுண்டு. அவர் பிறந்த ஊர். பல ஊர்க்கதைகளை காரில் வரும் போது என்னுடன் பகிர்ந்து கொள்வார். காண்டசா கிளாசிக் கார் - பதிவெண் 1011 என்று நினைவு, அக்காரில் அவருடன் அதிக நேரம் பயணம் செய்திருக்கிறேன். 

அவருக்கு சென்னை ராமகிருஷ்ண மடத்துடன் நல்ல தொடர்பு இருந்தது. ராம நாதபுரத்தில் சுவாமி விவேகாந்தர் மன்னருடன் சந்தித்ததன் காரணமாக, அங்கு ராமகிருஷ்ணர் மடத்தை உருவாக்கி, அதனை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைத்தார். அந்தளவுக்கு அவர் சுவாமி விவேகானந்தரின் மீது பக்தி கொண்டிருந்தார். 




ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தை கட்டி பேலூர் மத்திடம் ஒப்படைத்த போது பேசியது மேலே இருக்கும் வீடியோ

ஆன்றோர்களின் வார்த்தைகள் வீண் போவதில்லை என்பதற்கு இந்த மடம் ஒரு உதாரணம். சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளுக்கு எத்தனையோ ஆண்டுகாலம் சென்ற பிறகு வடிவம் பெற்றிருக்கிறது சுவாமி ஆத்மானந்தர் அவர்களால். ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த மடத்தின் இணைய தளத்தில் சுவாமிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.  இந்த வீடியோ மட்டும் இருக்கிறது.

சமீபத்தில் வீட்டுக்கு வருகை தந்தார். என் படுக்கையில் தான் படுப்பேன் எனச் சொல்லி படுத்து உறங்கினார். என் பையன் கார் ஓட்டனும் எனக்கு என்று கேட்டுக் கொண்டார். அவரை அருகில் வைத்து கார் ஓட்டி வந்தான் ரித்திக் நந்தா. அவரின் நினைவாக மகனின் பெயருடன் நந்தா இணைந்தது. அவருக்குப் பிடித்த நிவேதிதை பெயர் தான் என் மகளுக்கு வைத்திருக்கிறேன்.

அவரின் நண்பர்கள் மருத்துவமனையில் இருந்த போது என்னைப் பற்றிப் பேசும் போது, என் மகள் நிவேதிதா பெயரைச் சொல்லி, அவளின் அப்பா என்று சொல்வாராம். அவரின் சீடர் கோவைப்புதூர் ரங்கநாதன் அவர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.  

சுவாமிகளின் சீடர் மருத்துவர் ஜெகன்நாதன் அவர்கள் அவரை நன்றாக கவனித்துக் கொண்டார். இரண்டொரு மாதங்களாக சுவாமிகள் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டார். நான் அவரைக் கடைசியாகச் சந்தித்த போது கூட என் கையை இருகப் பற்றிக் கொண்டு, முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சாப்பிடுமாறு வேண்டினேன். கேட்கவே இல்லை. பர உலகை நாடிச் சென்று விட்டார்.

அவரால் வாழ்ந்தவர் கொஞ்ச நஞ்சமல்ல. அவரால் பயன் பெற்றவர் அனேகம். அவர் கடைசி வரை என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வார்த்தைகளுக்கு ஒப்பவே வாழ்ந்து வந்தார். 

https://www.amritapuri.org/5747/04karur.aum

மாதா அமிர்ந்தானந்த மயி அவர்கள் சாரதா கல்லூரிக்கு வருகை தந்த போது

ஒரு மாலை நேரம். கரூர் ஆஸ்ரமத்தில் இருந்த அவரது அறைக்குள் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம் தனிமையில். படுக்கை அறைக்குள் சென்று காக்கி நிறத்தில் கிழிந்து போன அட்டை போட்ட ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். 

முருகானந்தம் என்ற அவரை சுவாமி ஆத்மானந்தர் ஆக மாற்றிய அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அன்றிரவு தூங்காமல் படித்து முடித்தேன். காலையில் அவரிடம் சென்று காலில் விழுந்து நமஸ்கரித்தேன். அந்தப் புத்தகத்தின் பெயர் “வாழ்க்கையில் வெற்றி” - அப்துற் றஹீம் எழுதியது.

என்னைப் பொறுத்தவர் சுவாமி விவேகானந்தர் தான் சுவாமி ஆத்மானந்தர் உருவெடுத்து நம்மிடையே வாழ்ந்து சென்றிருக்கிறார்.

* * *

சுவாமி ஆத்மானந்தர் தீட்சை வழங்கி, அவரது நேரடி சீடர்கள் அறுவர். இவர்களில் சொரூபானந்தர், பசுபதீஸ்வரானந்தர், பக்திரூபானந்தர் மற்றும் ஹரிசேசவானந்தர் ஆகியோர் காலமாகி விட்டனர். 

சுவாமி ஞானேஸ்வரானந்தர், சுவாமி யோகேஸ்வரானந்தர் மற்றும் மாதா சிவ ஞானப்பிரியம்பா பெண் துறவி ஆகியோரின் சீரிய மேற்பார்வையில் சுவாமிகளால் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என நம்புகிறேன்.  இந்த நிறுவனங்கள் லாப நோக்கமின்றி மக்களுக்கு தொடர் பணியைச் செய்யும் எனவும் நம்புகிறேன்.



Monday, May 9, 2022

எமனோலையை மறுக்க முடியுமா? மரணத்தை வெல்ல முடியுமா? சாத்தியமா?

சனிக்கிழமையன்று அடிக்கடி நினைவில் வந்து கொண்டிருந்த சுவாமி ஆத்மானந்தர் அவர்களை போனில் அழைத்த போது என்னை யாரென்று தெரியவில்லை என்றுச் சொல்லியதும் பதட்டம் வந்து விட்டது.  கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் இருக்கும் ராமகிருஷ்ணர் ஆசிரமத்தில் இருப்பதாக சொன்னார். அருகில் தானே பள்ளப்பாளையம் என்று நினைத்து மகன், மகளுடன் அவரைச் சந்திக்க சென்றேன். வயதான பழுத்த ஆன்மீகவாதியாகி தன்னை முழுவதுமாய் இறைவனிடம் ஒப்படைத்து விட்ட நிலையில் இருந்தார் சுவாமி.

என்னைப் பார்த்ததும் தங்கவேல் என்று அழைக்க அப்பாடா என்று இருந்தது. அவருடன் ஐந்து ஆறு வருடங்கள் வாழ்ந்தேன். ஞான தகப்பன் என்றால் எனக்கு சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் தான். அவரால் உருவாக்கப்பட்ட சொத்துகளுக்கு எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. எனக்கு வேண்டியதுமில்லை. விரும்பியதுமில்லை. ஒரு சிலருக்கு புரிய வேண்டும் என்பதால் இதைப் பதிவு செய்கிறேன்.

எனக்குள் ஒரு ஆசை இருந்தது. நன் மனையாள், நற்குழந்தைகள்,  அற நெறி வழுவா ஆன்மீக வாழ்க்கை என இப்போது வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு அச்சாரமிட்டுக் கொடுத்தவர் அவரே.  

வீட்டில் ஒரு பொழுதேனும் தங்கி இருந்து, ஒரு வேளை உணவு எடுத்தால் என் மனம் மகிழ்வுறுமே என பலமுறை அவரிடம் வேண்டுகோள் விடுத்தும் வருகிறேன் என்றுச் சொல்லியே காலம் தாழ்த்தி விட்டார்.

இனி விடக்கூடாது என்ற முடிவு செய்து கொண்டேன். தன்னை முழுமையாக இறைவனின் பாதத்தில் ஒப்படைத்து விட்ட தன்மையில் இருக்கும் சுவாமிகள் இன்றிரவு நான் வசிக்கும் வீட்டில் உணவு உட்கொள்ள வேண்டுமென்று எம் குருவினை வேண்டிக் கொண்டேன்.

அவரிடம் வேண்டினேன். வருவதாகச் சொன்னார். 

எனது குருநாதர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஆசிரமம் அழைத்துச் சென்றேன். குருநாதரைப் பார்த்த போது ”என்னை விட நான்கு மாதம் மூத்தவர் சாமி” என்று என்னிடம் சொன்னார். மேடையை வலம் வந்தார்.

உள்ளே இருக்கையில் ”நான் உன்னுடன் காரில் வர வேண்டும்” என்று கேட்டார். அதன் படியே என்னுடன் மகன் ரித்திக் நந்தா கார் ஓட்ட பூண்டி கோவிலின் அடியில் காரை நிறுத்தினான் மகன். மேலே செல்ல இயலாத காரணத்தால் காரில் அமர்ந்த படியே பூண்டி ஆண்டவரை வணங்கி வீட்டுக்கு வந்து விட்டோம்.

அடியேன் படுக்கும் படுக்கையில் நன்கு உறங்கி விழித்தார். வழமை போல மூன்று இட்லிகள், சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொஞ்சம் மாம்பழம் எடுத்துக் கொண்டார். ஆசீர்வாதம் செய்து விட்டு பள்ளப்பாளையம் ஆசிரமம் சென்று விட்டார். 

எனக்குள் ஒரு நிம்மதி பரவியது.

அவரின் உழைப்பால் எத்தனையோ லட்சம் மக்கள் உணவு அருந்தினார்கள். எத்தனையோ பேர்களுக்கு கல்வி கொடுத்தார். இன்றும் கொடுத்து வருகிறார். அவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்களும், ஆசிரமங்களும் இன்றும் இயங்கி வருகின்றன. அப்பேர்பட்ட தொண்டு செய்தே பழுத்த சுவாமிகள் என் உழைப்பில் ஒரு வாய் உணவு எடுத்தால் அது எனக்கு மகிழ்ச்சியானது அல்லவா? அவர் தகுதிக்கு எனக்கு ஐந்து வருடம் உணவிட்டு எனக்கு தொண்டு செய்ய அனுமதி தந்தார். என் தகுதிக்கு ஒரு வேளை உணவு. சின்ன ஆசை தானே.

அவர் என்னிடம் கேட்டது மூன்று. ஒன்று வேதாரண்யத்தில் தாயுமானவர் சுவாமிகளின் பெயரில் கல்லூரி, கரூரில் பெரிய சுவாமி என்று அழைக்க கூடிய சித்பவானந்தர் சுவாமிகள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம், மற்றொன்று பள்ளப்பாளையத்தில் ஒரு கல்லூரி (சுவாமி ஆத்மானந்தர் கல்லூரி - என் நினைப்பு). 

என்னால் இத்தொண்டினைச் செய்ய முடியுமா? முடியாதா? என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் கேட்டார். செய்யலாம் சுவாமி என்று சொல்லி இருக்கிறேன். இறைவனின் எண்ணமெதுவோ அதுவே நடக்கும்.

சேலத்தைச் சேர்ந்த தங்கவேல் என்ற சுவாமிகளின் அன்பர் எனக்கு இப்பிறப்பே இறுதி பிறப்பு என்று சொன்னதாகவும், ஆனால் எனக்கு அப்படி எல்லாம் வேண்டாம் நான் மீண்டும் மீண்டும் மனிதனாகவே பிறந்து தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்புவதாக அவரிடம் சொன்னதாகவும் என்னிடம் அடிக்கடிச் சொல்வார்.  இறைத்தொண்டாற்றிட மீண்டும் மீண்டும் மனிதபிறவி எடுத்தல் வேண்டுமென்ற ஆவல் அவரிடம் நிரம்பி இருந்தது. மேலோர் எப்போதும் மேன்மையாக சிந்திப்பர் அல்லவா?

எனது ஞானத்தந்தையார் எப்போதும் என்னைப் போன்ற லட்சோப லட்சம் அன்பர்களின் நினைவுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டே இருப்பார். 

இறைதொண்டு என்றால் அவர் சுவாமி ஆத்மானந்தர் ஒருவரே.

என் ஞானத் தந்தையான சுவாமி ஆத்மானந்தர் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

குருநாதரின் ஆசிரமத்தில் சுவாமி ஆத்மானந்தருக்கு ஜோதி சுவாமி சீரக நீர் ஆற்றிக் கொடுத்தார். அப்போது ஜோதி சுவாமி என்னிடம் சொன்னது இப்பாட்டு. 

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன

தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன

சீடர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்

செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை

ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!

இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்

உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்

கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

இந்தப் பாடல் நடராஜர் பத்து என்ற தொகுப்பில் உள்ளது. சிறுமணவூர் முனுசாமி அவர்களால் பாடப்பெற்றது இப்பாடல்.

நீங்களும் பாடலைப் படித்துப் பாருங்கள்.

படித்து விட்டீர்களா?

எமனின் ஓலையைத் தடுப்பார் எவருண்டு இதுவெல்லாம் சந்தை உறவு என்பதால் தான் உன் பாதம் பிடித்தேன் ஈசனே என்கிறது பாடல்.

இன்றைக்கு எனக்குள் கேள்வி எழுந்தது. ஜோதி சுவாமியை அழைத்தேன்.

“சாமி, என்ன செய்தாலும் மரணத்தை ஜெயிக்க முடியாதே, பின்னே ஏன் நடராஜர் பாதத்தைப் பற்றிப் பிடிக்கணும், தேவையில்லை அல்லவா?” என்றொரு கேள்வியை வீசினேன்.

அதற்கு அவர்,” ஆண்டவனே, உள்ளே ஓடும் மூச்சு தான் சிவம், சிவம் போனால் சவம். முச்சினை வெளியே விடாமல் உட்புறமாகச் செலுத்தி பயிலும் கால், உடலின் கூறுகளைப் பிணைத்திருக்கும் கொக்கிகளை நீக்கினால் பட்டினத்தார் போல நவகண்ட சித்து தன்மையில் காற்றில் கரைத்து பிரபஞ்சத்தோடு கலந்து விடலாம். வள்ளலார் ஒரு படி மேலே சென்று ஒளிதேகமாய் மறைந்தார். அது போலவே மரணத்தை வெல்லலாம். அதுவே சர்மார்க்கி என்பதாகும். அதுவே சீவனறிவு. பிறவறிவெல்லாம் அறிவல்ல.” என்றார்.

எமனோலையை மறுக்கலாம் என்று புரிந்து கொண்டேன். ஆகவே மரணத்தை வெல்லலாம் என்று அறிக.