குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, May 9, 2022

எமனோலையை மறுக்க முடியுமா? மரணத்தை வெல்ல முடியுமா? சாத்தியமா?

சனிக்கிழமையன்று அடிக்கடி நினைவில் வந்து கொண்டிருந்த சுவாமி ஆத்மானந்தர் அவர்களை போனில் அழைத்த போது என்னை யாரென்று தெரியவில்லை என்றுச் சொல்லியதும் பதட்டம் வந்து விட்டது.  கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் இருக்கும் ராமகிருஷ்ணர் ஆசிரமத்தில் இருப்பதாக சொன்னார். அருகில் தானே பள்ளப்பாளையம் என்று நினைத்து மகன், மகளுடன் அவரைச் சந்திக்க சென்றேன். வயதான பழுத்த ஆன்மீகவாதியாகி தன்னை முழுவதுமாய் இறைவனிடம் ஒப்படைத்து விட்ட நிலையில் இருந்தார் சுவாமி.

என்னைப் பார்த்ததும் தங்கவேல் என்று அழைக்க அப்பாடா என்று இருந்தது. அவருடன் ஐந்து ஆறு வருடங்கள் வாழ்ந்தேன். ஞான தகப்பன் என்றால் எனக்கு சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் தான். அவரால் உருவாக்கப்பட்ட சொத்துகளுக்கு எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. எனக்கு வேண்டியதுமில்லை. விரும்பியதுமில்லை. ஒரு சிலருக்கு புரிய வேண்டும் என்பதால் இதைப் பதிவு செய்கிறேன்.

எனக்குள் ஒரு ஆசை இருந்தது. நன் மனையாள், நற்குழந்தைகள்,  அற நெறி வழுவா ஆன்மீக வாழ்க்கை என இப்போது வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு அச்சாரமிட்டுக் கொடுத்தவர் அவரே.  

வீட்டில் ஒரு பொழுதேனும் தங்கி இருந்து, ஒரு வேளை உணவு எடுத்தால் என் மனம் மகிழ்வுறுமே என பலமுறை அவரிடம் வேண்டுகோள் விடுத்தும் வருகிறேன் என்றுச் சொல்லியே காலம் தாழ்த்தி விட்டார்.

இனி விடக்கூடாது என்ற முடிவு செய்து கொண்டேன். தன்னை முழுமையாக இறைவனின் பாதத்தில் ஒப்படைத்து விட்ட தன்மையில் இருக்கும் சுவாமிகள் இன்றிரவு நான் வசிக்கும் வீட்டில் உணவு உட்கொள்ள வேண்டுமென்று எம் குருவினை வேண்டிக் கொண்டேன்.

அவரிடம் வேண்டினேன். வருவதாகச் சொன்னார். 

எனது குருநாதர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஆசிரமம் அழைத்துச் சென்றேன். குருநாதரைப் பார்த்த போது ”என்னை விட நான்கு மாதம் மூத்தவர் சாமி” என்று என்னிடம் சொன்னார். மேடையை வலம் வந்தார்.

உள்ளே இருக்கையில் ”நான் உன்னுடன் காரில் வர வேண்டும்” என்று கேட்டார். அதன் படியே என்னுடன் மகன் ரித்திக் நந்தா கார் ஓட்ட பூண்டி கோவிலின் அடியில் காரை நிறுத்தினான் மகன். மேலே செல்ல இயலாத காரணத்தால் காரில் அமர்ந்த படியே பூண்டி ஆண்டவரை வணங்கி வீட்டுக்கு வந்து விட்டோம்.

அடியேன் படுக்கும் படுக்கையில் நன்கு உறங்கி விழித்தார். வழமை போல மூன்று இட்லிகள், சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொஞ்சம் மாம்பழம் எடுத்துக் கொண்டார். ஆசீர்வாதம் செய்து விட்டு பள்ளப்பாளையம் ஆசிரமம் சென்று விட்டார். 

எனக்குள் ஒரு நிம்மதி பரவியது.

அவரின் உழைப்பால் எத்தனையோ லட்சம் மக்கள் உணவு அருந்தினார்கள். எத்தனையோ பேர்களுக்கு கல்வி கொடுத்தார். இன்றும் கொடுத்து வருகிறார். அவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்களும், ஆசிரமங்களும் இன்றும் இயங்கி வருகின்றன. அப்பேர்பட்ட தொண்டு செய்தே பழுத்த சுவாமிகள் என் உழைப்பில் ஒரு வாய் உணவு எடுத்தால் அது எனக்கு மகிழ்ச்சியானது அல்லவா? அவர் தகுதிக்கு எனக்கு ஐந்து வருடம் உணவிட்டு எனக்கு தொண்டு செய்ய அனுமதி தந்தார். என் தகுதிக்கு ஒரு வேளை உணவு. சின்ன ஆசை தானே.

அவர் என்னிடம் கேட்டது மூன்று. ஒன்று வேதாரண்யத்தில் தாயுமானவர் சுவாமிகளின் பெயரில் கல்லூரி, கரூரில் பெரிய சுவாமி என்று அழைக்க கூடிய சித்பவானந்தர் சுவாமிகள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம், மற்றொன்று பள்ளப்பாளையத்தில் ஒரு கல்லூரி (சுவாமி ஆத்மானந்தர் கல்லூரி - என் நினைப்பு). 

என்னால் இத்தொண்டினைச் செய்ய முடியுமா? முடியாதா? என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் கேட்டார். செய்யலாம் சுவாமி என்று சொல்லி இருக்கிறேன். இறைவனின் எண்ணமெதுவோ அதுவே நடக்கும்.

சேலத்தைச் சேர்ந்த தங்கவேல் என்ற சுவாமிகளின் அன்பர் எனக்கு இப்பிறப்பே இறுதி பிறப்பு என்று சொன்னதாகவும், ஆனால் எனக்கு அப்படி எல்லாம் வேண்டாம் நான் மீண்டும் மீண்டும் மனிதனாகவே பிறந்து தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்புவதாக அவரிடம் சொன்னதாகவும் என்னிடம் அடிக்கடிச் சொல்வார்.  இறைத்தொண்டாற்றிட மீண்டும் மீண்டும் மனிதபிறவி எடுத்தல் வேண்டுமென்ற ஆவல் அவரிடம் நிரம்பி இருந்தது. மேலோர் எப்போதும் மேன்மையாக சிந்திப்பர் அல்லவா?

எனது ஞானத்தந்தையார் எப்போதும் என்னைப் போன்ற லட்சோப லட்சம் அன்பர்களின் நினைவுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டே இருப்பார். 

இறைதொண்டு என்றால் அவர் சுவாமி ஆத்மானந்தர் ஒருவரே.

என் ஞானத் தந்தையான சுவாமி ஆத்மானந்தர் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

குருநாதரின் ஆசிரமத்தில் சுவாமி ஆத்மானந்தருக்கு ஜோதி சுவாமி சீரக நீர் ஆற்றிக் கொடுத்தார். அப்போது ஜோதி சுவாமி என்னிடம் சொன்னது இப்பாட்டு. 

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன

தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன

சீடர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்

செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை

ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!

இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்

உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்

கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

இந்தப் பாடல் நடராஜர் பத்து என்ற தொகுப்பில் உள்ளது. சிறுமணவூர் முனுசாமி அவர்களால் பாடப்பெற்றது இப்பாடல்.

நீங்களும் பாடலைப் படித்துப் பாருங்கள்.

படித்து விட்டீர்களா?

எமனின் ஓலையைத் தடுப்பார் எவருண்டு இதுவெல்லாம் சந்தை உறவு என்பதால் தான் உன் பாதம் பிடித்தேன் ஈசனே என்கிறது பாடல்.

இன்றைக்கு எனக்குள் கேள்வி எழுந்தது. ஜோதி சுவாமியை அழைத்தேன்.

“சாமி, என்ன செய்தாலும் மரணத்தை ஜெயிக்க முடியாதே, பின்னே ஏன் நடராஜர் பாதத்தைப் பற்றிப் பிடிக்கணும், தேவையில்லை அல்லவா?” என்றொரு கேள்வியை வீசினேன்.

அதற்கு அவர்,” ஆண்டவனே, உள்ளே ஓடும் மூச்சு தான் சிவம், சிவம் போனால் சவம். முச்சினை வெளியே விடாமல் உட்புறமாகச் செலுத்தி பயிலும் கால், உடலின் கூறுகளைப் பிணைத்திருக்கும் கொக்கிகளை நீக்கினால் பட்டினத்தார் போல நவகண்ட சித்து தன்மையில் காற்றில் கரைத்து பிரபஞ்சத்தோடு கலந்து விடலாம். வள்ளலார் ஒரு படி மேலே சென்று ஒளிதேகமாய் மறைந்தார். அது போலவே மரணத்தை வெல்லலாம். அதுவே சர்மார்க்கி என்பதாகும். அதுவே சீவனறிவு. பிறவறிவெல்லாம் அறிவல்ல.” என்றார்.

எமனோலையை மறுக்கலாம் என்று புரிந்து கொண்டேன். ஆகவே மரணத்தை வெல்லலாம் என்று அறிக.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.