இது ஒரு கதை. யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.
அந்தக் காலத்தில் ஒரு மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஆதீனங்களில் இறைப்பணி செய்து வந்த மடாதிபதிகள் (மடத்தின் அதிபதி) பல்லக்கில் மனிதர்கள் சுமக்க பட்டினப் பிரவேச வீதியுலா வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள்.
இந்தப் பிரவேசத்தைப் பற்றிக் கேள்வியுற்ற மன்னன் அதற்கு தடை விதித்தான். இப்போது தமிழக அரசு தடை விதித்தது போல.
உடனே அந்த குரு மஹா சன்னிதானங்கள் அவர்களிடத்தே பொருள் மற்றும் இன்னபிற சுகானுபவங்களைப் பெற்ற ஆன்மீக அன்பர்கள் மன்னனிடம் சென்று தடையகற்ற கோரிக்கை விடுத்தனர். அது மரபு என்று குரு சீடர்கள் பரம்பரை என்றும் தர்மம் உரைத்தனர்.
அதனைக் கேட்ட மன்னனும் ஒரு நிபந்தனையுடன் அனுமதி தரலாமென்றான்.
அந்த நிபந்தனை என்னவென்றால் கடவுளர் திருவுருங்களைப் பல்லக்கில் சுமந்து செல்வது ஏற்பவையே. ஆனால் அதற்கு நிகராக இந்த மானிடர்களைச் சுமப்பது சரியல்லவே. இருப்பினும் ஆன்மீக அன்பர்களின் வேண்டுகோளுக்காக கடவுளருக்கு நிகரான குரு என்று சொல்லப்படும் இந்த மஹா சன்னிதானங்கள் நான் இரண்டாக வெட்டிப் போடும் மாட்டினை மீண்டும் உயிர்ப்பித்தால் அனுமதி வழங்கப்படும் என்றான்.
கடவுள் நிகர் குரு எனில் வெட்டி கொல்லப்பட்ட மாட்டின் இருபாகங்களை உயிரோடு எழுப்பினால் குருவும் கடவுளுக்கு நிகரானவர் என்று ஒப்புக் கொண்டு பல்லக்கில் பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி அளிப்போம் என்பதாகும் மன்னனின் நிபந்தனை.
ஆன்மீக அன்பர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இதனை குரு மகா சன்னிதானங்களிடம் தெரிவிக்க, இதற்கு நாங்கள் ஏன், இதைச் செய்ய வேறொருவர் இருக்கிறார் என்று சொல்லி, சீடரே வெட்டப்பட்ட மாட்டினை உயிர்ப்பிப்பார் என்று சொல்லி அனுப்பினர்.
இந்த இடத்தில் ஒரு கேள்வி வரும்.
மன்னன் கேட்டதோ பல்லக்கில் பவனி வர துடித்துக் கொண்டிருக்கும் மகா சன்னிதானங்கள் மாட்டினை உயிர்ப்பிக்க வேண்டுமென்பதாம். ஆனால் மகா சன்னிதானங்கள் சொன்னதோ யாரோ ஒரு சீடர் அதைச் செய்வார் என்று என்பதால் நாங்கள் உயிர்ப்பிக்க வேண்டியதில்லை என்று.
என்ன காரணத்தினால் மன்னன் இந்த பதிலை ஏற்றுக் கொண்டான் என்பதறிய இயலவில்லை.
அதன்படி மகா சன்னிதாங்கள் வீர சைவ சீடர் ஒருவரிடம் செய்தி சொல்லி அனுப்புகின்றார்கள். மன்னனின் நிபந்தனையை நிறைவேற்றி பட்டினப் பிரவேசம் நடத்த ஏதுவாக மாட்டினை உயிர்ப்பிக்க வேண்டுமென்று கேட்க, அதற்கு அவர் எம் குருவின் அனுமதி கிடைத்தால் நிறைவேற்றி தரவியலும் என்று உரைத்தார்.
குரு அனுமதி தந்து விட்டதாக சீடரிடம் தகவல் சொல்ல அவர் திருவண்ணாமலை வரைக்கும் ஒரு காதம் தாண்டி கொதிக்கலன்கள் அமைக்கும்படியும் அதற்குள் ஆணியால் வேயப்பட்ட காலணிகள், தண்டம் இவைகளை வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
அதன்படியே செய்ய, சீடரும் கொதிகலனுக்குள் இருந்த ஆணி செருப்பு அணிந்து கையில் தண்டம் கமண்டலமேந்தி ஒரு காதம் தூரம் நடந்து அங்கிருந்த மற்றொரு கொதிகலனில் மேற்படிகளை நீக்கி, புதியன அணிந்து மாடு வெட்டிக் கிடந்த இடத்தருகே வருகிறார்.
மன்னனும் வருகிறான்.
கையில் இருந்த ஒரு வெள்ளித் தண்டத்தினால் வெட்டுப்பட்ட மாட்டின் இருபாகங்களைத் தட்ட மாடு உயிர் பெறுகிறது. மன்னனுக்கோ அதிசயம்.
இருப்பினும் மாயா வித்தையாக இருக்குமோ என்று நினைத்து, கல் நந்தியை உயிர்பிக்கலாமே என்று கேட்க, சீடரும் அதன்படி வெள்ளித் தண்டத்தால் கல் நந்தியை தட்ட அதுவும் உயிர் பெற்று ஓடியது.
மன்னன் மிக மகிழ்ந்து பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி கொடுத்ததாக ஒரு கதை ஒன்று உண்டு.
அதன் பிறகு கடவுளர் திரு உருவங்கள் முன்னே பல்லக்கில் வர, பின்னாலே மகா சன்னிதானங்கள் பல்லக்கில் உலா வந்தனர் என்றும் சொல்லப்படுவதுண்டு.
இந்தக் கதையை சித்தர் பீடம் 200 என்ற நூலில் படித்துக்கொள்ளுங்கள்.
அன்றைக்கு நடந்த நிகழ்வு இன்றைக்கு வேறு வழியில் நடைபெற உள்ளது. காலம் தான் மாறி இருக்கிறது. சம்பவங்கள் மாறவில்லை.
ஆகவே மரபினை மதித்து அனுமதி தரும் அரசாங்கம் #உடன்கட்டை ஏறுவதை தடை செய்த சட்டத்தை நீக்கி அனுமதிக்கும் காலம் வரும் என்று நம்பலாம்.
ஏனென்றால் இது மரபாகும்.
மரபினை மாற்ற எவருக்கும் இங்கு அனுமதி இல்லை. அங்கனம் செய்வது ஆன்மீக அன்பர்களின் மனத்தை வருத்தமுடையச் செய்யும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மனிதனை மனிதன் சுமப்பது மரபு என்றால் இதுவும் மரபேயாம்.
அதாவது கணவன் இறப்பின் அவன் மனைவி உயிரோடு சிதையில் உடன் கட்டை ஏறி எரிந்து அவனோடு சாம்பலாக வேண்டுமென்பது மரபு.
அதுமட்டுமல்ல, சினிமா பாடல் புகழ் #சின்மயி அவர்களின் தாயார் கூறியதைப் போல, புகழ் பெற்ற கோவில்களில் #தேவதாசி மரபினை மீண்டும் கொண்டு வருதலும் மரபேயாம். அவ்வாறு தேவதாசி முறை கொண்டு வந்தால் அது கோவிலில் இறைவனுக்கு தொண்டாற்றும் ஆன்மீக அன்பர்களின் காம நோய் தீர தேவதாசிகள் பயனாயிருப்பர் என்பதும் மரபே. ஆகவே அரசுகள் மேற்கண்ட இரண்டு மரபுகளுக்கும் மனம் உவந்து தடை நீக்கி சட்டமியற்றி ஆன்மீக மரபுகளை காத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்க ஆன்மீகம், தழைக்கட்டும் மரபுகள்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.