குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label முதலமைச்சர். Show all posts
Showing posts with label முதலமைச்சர். Show all posts

Sunday, May 29, 2022

96 வருட பாரம்பரிய விகடனுக்கு முதல்வர் ஸ்டாலினால் தூக்கம் வரவில்லை

உச்சிக் குடுமியை விகடன் நினைத்தாலும் மறைக்க முடிவதில்லை. ஏனென்றால் வித்து அப்படி. தமிழர்களுக்கு விரோதமான செய்திகளை நாசூக்காக வெளியிட்டு வருவதில் விகடனுக்கு நிகர் விகடன் அன்றி வேறு எவருமில்லை. 

இவ்வளவுக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ் சன் டிவியில் கல்லா கட்டி வருகிறது. வயிறு வளர்ப்பது தமிழர்களின் காசில். செய்வது எல்லாம் தமிழர்களுக்கு துரோகம்.

அப்படி என்ன செய்கிறது விகடன்?

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நானும் எனது நண்பரும் ஒரு தென்னை தோப்பு விலைக்கு வாங்கச் சென்றிருந்தோம். சுற்றிப் பார்த்து விட்டு திரும்ப வரும் போது கனிமொழியின் சொத்து, ஏற்கனவே வாங்கி விட்டார் என்றார் எங்களை அழைத்துச் சென்றவர். 

தஞ்சைப் பகுதியில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் எனது உறவுக்கார பெண். அப்பெண் இந்தக் கல்லூரியையும் கனிமொழி வாங்கி விட்டாராம் என்றார்.

அந்த தோப்பு எனது மனைவியின் பெரியப்பாவின் உறவினருக்கு சொந்தம். இன்றும் அந்த தோப்பு அந்த உறவினரிடமே உள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வரிடம் கேட்ட போது சிரித்தார். யார் கல்லூரிக்கு யாரய்யா ஓனர் என.

இப்படித்தான் திமுக ஆட்சிக்கு வந்த உடனே எல்லாச் சொத்துக்களையும் திமுகவும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் கம்பெனிகளுக்கு சொத்து வாங்கிக் கொடுத்து கமிஷன் வாங்குகிறார் என்றும், சென்னையில் ஐந்து கோடிக்கு மேல் சொத்து வாங்கினாலே விற்றாலோ கமிஷன் கொடுத்தே ஆக வேண்டுமென்றும் புரளிகளை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல புரோக்கர்கள் மூலமாக அரசியல் கட்சிகள்.

எங்காவது கொலையோ, கொள்ளையோ, தவறோ நடந்தால் உடனடியாக வந்தேறிகளின் அடிமைகளும்,  முதுகெலும்பில்லா முட்டாள்களும் திமுக ஆட்சி வந்தால் இப்படித்தான் என்றும் விடியல் ஆட்சி என்றும் சோஷியல் மீடியாக்களில் கமெண்டுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சளைக்காமல். அவர்கள் எல்லோரும் ஃபேஸ்புக், டிவிட்டர் போலி ஹேண்டில்கள்.  ஒரே ஒரு ஆள் ஆயிரக் கணக்கில் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி போஸ்டுகளுக்கு பணம் வாங்கிக் கொண்டு இவ்வகையான போலிச் செய்திகளையும், வரன்முறை அற்ற வசவுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறான். 

அதிமுக ஆட்சியில் இருந்த போதும் திமுகவை வசைபாடிக் கொண்டிருந்தார்கள். 

இவர்களுக்கும் விகடன் நிறுவனத்துக்கு வேறுபாடு இல்லை. இணையதளத்தில் வெளியான செய்தியைத்தான் இப்போதெல்லாம் விகடன் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிரிண்ட் பத்திரிக்கைகள் பலவற்றை மூடி ஆகி விட்டது. வேறு வழி இன்றி ஆங்கிலேயர்களின் மன்னிப்புக் கேட்டுக் கதறிய டேஞ்சர் குற்றவாளி (D - Dangerous Prisoner - Click the link here https://thewire.in/history/bhagat-singh-and-savarkar-a-tale-of-two-petitions) சாவர்கர் பரம்பரை என்பதால் திமுக ஆட்சிக்கு வந்ததும் வயிறு எரிந்து, செத்துப் போன சோவின் நரித்தந்திரம் போல, எங்கிருந்தோ பெறப்பட்ட கொழுத்த நன்மைக்கு மக்களிடம் விஷ விதையைத் தூவ ஆரம்பித்துள்ளது.

இதோ ஆதாரங்கள்:-

இந்த வார ஜூனியர் விகடனின் அட்டைப்படத்தில் (01.06.2022) - தலை நகரில் தொடர் கொலைகள் - கேள்விகுறியாகும் சட்டம் - ஒழுங்கு என வெளியிட்டு வன்மத்தைக் காட்டி இருக்கிறது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டதாம். மக்களிடம் பயத்தை உருவாக்க வேண்டுமாம்.  

பிஜேபியில் முருகன் தலைவராக இருந்த போது ரவுடிகளை கட்சியில் சேர்த்து விட்டதாகவும், அவர்களுக்குள் கொலை செய்து கொள்வதால் நானா பார்க்க முடியும் என்று அடிமை ஆடு புலம்பியதாக இதே பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தாலும் அட்டைப்படத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் என்று தமிழகமெங்கும் எங்கு நோக்கினும் கொலைகள் நடப்பது போல எழுதி இருப்பது விகடனின் நரித்தந்திரம்.

இந்த வன்மம் போதாது என்று மிஸ்டர் கழுகு பகுதியில் ஒரு தலைப்பு - ’மோடியின் ரோடு ஷோ - காத்திருந்த ஸ்டாலின்’ என்று எழுதி தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறது. அதன் உள்ளே ’முதல்வர் ஸ்டாலினை முந்திக் கொண்டார்கள் பழனிசாமியும், ஆளுநரும்’ என்று ஏதோ வாராது வந்த மாமழை போல மோடி வருவதாகவும், அவரை வரவேற்க போவதில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏதோ பின்னடைவு ஏற்பட்டதாகவும், மோடியின் ரோடு ஷோவினால் மோடிக்காக முதல்வர் காத்திருந்ததாகவும் செய்தி வெளியிட்டு உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறது.


நாடெங்கும் ராமர் கோவிலுக்கு செங்கல் வேண்டுமென்று கேட்டு ரதயாத்திரை செய்து பிஜேபியை வளர்த்த ஒரு தலைவர் துரோகத்தால் ஓரங்கட்டப்பட்டது  வரலாறு. காலையில் காலைப் பிடித்த துரோகி மாலையில் முதுகில் குத்தி விட்டு ஆட்சியில் அமர்ந்து தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து விட்டு ஐந்து லட்சம் கோடி கடனை தலையில் கட்டிச் சென்ற இனத் துரோகியின் ஆட்சியும் வரலாறு. துரோகம் துரோகத்தைச் சந்திப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

ஊழல், திருட்டு என்று முதலில் செய்தியை வெளியிட்டு மக்களிடம் பதிய வைப்பது. தவறான செய்தி என்றால் வாய் திறக்காமல் வேறு விஷயத்துக்குச் சென்று விடுவது. இந்த நச்சு வேலையை விகடன் தொடர்ந்து செய்து வருகிறது.

ஜி ஸ்கொயர் போல தமிழ் நாட்டில் பல நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றார்கள். வடநாட்டினர் பலர் லட்சக்கணக்கான கோடி ரூபாயில் முதலீடு போட்டு தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் செய்கிறார்கள். அவர்களில் பலர் பல அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள். அவர்களைப் பற்றி எல்லாம் விகடன் செய்தி வெளியிடாது. ஆனால் திமுக என்றால் வாயும் வயிறும் விகடன் குழுமத்துக்கு பற்றி எரியும். 

ஆட்சிக்கு வந்ததும் டாலர் விலை 44 ரூபாய்க்கு மாற்றுவேன் என்று முழங்கியவரைப் பற்றி பேசாது. காணாமல் போய் கொண்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டைப் பற்றி எழுதாது. ஆர்.பி.ஐ ஒன்றிய அரசுக்கு பணவீக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்துள்ளதைப் பற்றி எழுதாது. உலகே வியந்த எல்.ஐ.சி பங்குகளை விற்கிறேன் பேர்வழி என சாதாரணப்பட்ட பல முதலீட்டாளர்களின் 80000 கோடி ரூபாயை காணாமல் அடித்ததைப் பற்றிப் பேசாது. 

(எல்.ஐ.சி பங்குகள் விற்பன் கிராப். டெய்லி டிரேடிங்க் செய்தவர்கள் பிழைப்பு என்ன ஆகி இருக்கும் என்று பாருங்கள். ஒரு அரசு செய்யும் வேலை இதுதானா என்று நினைத்துப் பாருங்கள்)

ஒன்றிய அரசு பணம் சம்பாதிக்க சாதாரண முதலீட்டாளர்களை  அழிக்கிறது பற்றி எழுதாது. இப்படி மக்களுக்கு கொடுமை நடப்பதைப் பற்றி எல்லாம் எழுதாமல் திமுக மீது சேற்றினை வாரி வீசுவது, பின்னர் பம்முவது போன்ற செயல்களைச் செய்து வரும் விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகளை  தமிழர்கள் புறக்கணித்து அறமற்ற அவர்களின் செயல்களுக்கு சரியான பாடம் புகட்டிட வேண்டும்.  

அறமற்ற எந்த ஒரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு என்பதை 96 வருட பத்திரிக்கைப் பாரம்பரியம் கொண்ட விகடன் குழுமம் உணரும் நாள் வந்தே தீரும்.

தமிழ் பூமி ஆன்மீக பூமி. அறத்தின் வழி நடக்கும் பூமி. அரசியலில் தைரியமிக்கவர் என்று சொல்லப்பட்ட ஜெவின் வாழ்க்கையை முடித்துக் கட்டியது அறம். அதிகாரமும், பணமும் ஒன்றும் செய்ய முடியவில்லை அறத்தின் முன்பு. 

விகடனின் நரித்தந்திரமும் அறத்தின் முன்னாலே தீர்க்கப்படும்.

* * *

நன்றி : விகடன், ஸ்கிரீனர் இணையதளம்

Monday, June 29, 2020

தர்மத்தின் பாதையினை யார் அறிவார்?


அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களாகிப் போகின மீண்டும் எழுத. கொரானா லாக்டவுன் நாட்களில் வீட்டில் இருந்தேனல்லவா, அதை ஈடுபடுத்தும் விதமான ஏதாவது பொருளீட்டி விடலாமென்ற முனைப்பில் பல வேலைகளைச் செய்திருந்தேன். தமிழகத்தில் கொரானா சமூகப் பரவல் அதிகமாகியதால், அவைகள் மீண்டும் முடங்கிப் போயின.

காலம் எல்லாவற்றுக்குமான பதிலை தன்னுள் வைத்திருக்கும் என்ற தத்துவத்தை நினைத்து மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டாலும், ஆளும் ஆட்சியாளர்களின் திறமையற்ற தன்மையினால் இந்தியர்கள் அடையும் கொடுமைகளை எண்ணி வேதனைதான் அதிகப்படுகிறது.

சார்பற்ற நிலையில் யோசித்துப் பாருங்கள்.

திறமையற்ற ஆட்சித்திறனாலேதான் இந்தியாவில் இவ்வளவு இழப்புகளும் உண்டாகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது அல்லவா?

குஜராத்தில் மதக்கொலைகள் நடைபெற்ற போது வாளாயிருந்தார் அன்றைய சி.எம்.மோடி என்பதால் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்த சம்பவத்தை நாமெல்லாம் படித்திருக்கிறோம். அதன் பிறகு அவர் சீனாவை நோக்கி தன் வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டார். இதுவரை எந்த ஒரு இந்திய தலைவரும் மேற்கொள்ளாத அளவு, சீன பயணங்கள் சென்றார். சமீபத்தில் கூட சீனா கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழகத்தில் சீன அதிபதிருடன் சந்திப்புகள் நிகழ்த்தி பல வியாபார ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். ஆனால் தற்போது நடந்து வருபவைகள் என்ன? சீனாவை நம்பிய பிரதமருக்கு ஏன் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன?

அதுமட்டுமல்ல, நம் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கொரானா தொற்று பற்றி பேசும் போது, எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது என்றுச் சொல்லி இருக்கிறார் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அதிகார பலமும், ஆட்சியும், அசுரபலமும் கொண்ட ஆட்சியாளர்கள் இன்று கைபிசைந்து நிற்கும் அவலம் ஏன் உண்டானது? என்ன காரணம்? இதைப் பற்றி அலசி ஆராய பல ஆட்கள் இருக்கின்றார்கள். அவரவர் சிந்தனைகளுக்கு ஏற்ப பல வழிகளில் அரசியல், பொருளாதாரம் போன்ற காரணிகளை வைத்து ஆராய்வார்கள் பெரும்பாலானோர்.

ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சுவாரசியமான அந்த காரணத்தைக் காணலாம் வாருங்கள் என்னுடனே!

இப்போது உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு கூறுகிறேன்.

கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

நம் பாரத பிரதமர் இந்தியாவிற்கு பிரதமரான வரலாற்றினை மனதுக்குள் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். அதே போல தமிழக முதலமைச்சர், முதலமைச்சரான வரலாற்று  நிகழ்வுகளை ஒரு நிமிடம் யோசித்து விடுங்கள்.

கட்சி சார்பற்ற, மதச் சார்பற்ற நிலையில் மனதை தெளிவாக வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். செய்து விட்டீர்களா? இனி தொடர்ந்து படியுங்கள்.

நேர்மையாக இருக்கிறேன், கடுமையாக உழைக்கிறேன், எவருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை, எவரையும் கொடுமைப்படுத்தியதில்லை, எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன். ஆனால் எனக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படித் துன்பங்களையே தொடர்ந்து செய்கிறான் என்று கவலைப்பட்டிருக்காத மனிதர்களே இப்பூமியில் இருக்கமுடியாது. அதில் நீங்களும் ஒருவர்தான் என்பதில் உங்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லையே? நீங்களும் ஒருவர் தான் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

ஒரு கதை சொல்கிறேன்.

இரவு கவிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மழையில் நனைந்து கொண்டே வந்த ஒருவர், எதிர்பட்ட சத்திரத்திற்குள் நுழைகிறார். அங்கே ஏற்கனவே இருவர் தங்கி இருப்பதைப் பார்க்கிறார்.

”நானும் உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா?” என்று கேட்கிறார். இருவரும் சம்மதிக்கின்றார்கள்.

இரவு ஆகிறது. பசி நேரம். புதிதாக வந்தவர், ”எனக்குப் பசியாக இருக்கிறது. அவசரத்தில் உணவு கொண்டு வர மறந்து போனேன். உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

முதலாமானவர் ”என்னிடம் மூன்று ரொட்டிகள் உள்ளன” என்றும், இரண்டாமாவர் ”என்னிடம் ஐந்து ரொட்டிகள் உள்ளன” என்றும் சொல்கிறார்கள்.

மூன்று பேர், எட்டு ரொட்டிகள் உள்ளன, சமமாகப் பிரித்து உண்டால் நன்றாக இருக்குமே, எப்படிப் பிரிப்பது என்று யோசிக்கிறார்கள். புதிதாக வந்தவர் ”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டாக்கினால் மொத்தமாக இருபத்து நான்கு ரொட்டித் துண்டுகள் வரும். ஆளுக்கு எட்டுத் துண்டுகளாக உண்ணலாம்” என்று சொல்கிறார். மூவரும் அதன்படியே செய்து, உண்டு விட்டு உறங்கினர்.

மறுநாள், புதிதாக வந்தவர் மீண்டும் தன் பயணத்தை துவக்கிய போது இருவரிடமும் எட்டு தங்க காசுகளைக் கொடுத்து பிரித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

முதலாமாவர் ”ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளலாம்” என்றார். 

இரண்டாமாவர் ”அதெப்படி சரியாக வரும்? நான் தானே அதிகம் கொடுத்தேன்? எனக்கு ஐந்து, உங்களுக்கு மூன்று என பிரித்துக் கொள்ளலாம்” என்றார். முதலாமாவரோ, ”என்னிடம் குறைவாக ரொட்டிகள் இருந்த போது கூட, நான் அவருக்கு உணவு கொடுத்தேன் அல்லவா? இருவரும் சேர்ந்து தானே அவருக்கு உணவு கொடுத்தோம். அவரின் பசி ஆற்றியதிலே இருவருக்கும் சமபங்கு உண்டுதானே? ஆகவே சமபங்காக பிரித்துக் கொள்ளலாம்” என்றார்.

எட்டு காசுகளைப் பங்கு பிரிப்பதில் இருவருக்கும் பிரச்சினை வந்து விட்டது.

மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு மூன்றும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஐந்து தங்க காசும் பிரித்துக் கொடுப்பது சரியா?

மூன்றாவதாக வந்தவரின் பசிக்காக இருவரும் சேர்ந்து உணவு கொடுத்ததற்தாக தானத்தில் அளவு வித்தியாசம் பாராமல் சரி சமமாகப் பிரித்துக் கொடுப்பது சரியா?

இந்த இரண்டு தீர்ப்புகளில் ஒரே ஒரு தீர்ப்புதான் சரி அல்லவா? அது எது என்று யோசித்துப் பாருங்கள். முடிவெடுத்து விட்டீர்கள் அல்லவா?

ஆம் நாமெல்லாம் இந்த இரண்டு தீர்ப்பினை மட்டும் தான் யோசிப்போம்.

ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தர்மம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்தப் பிரச்சினை அந்த நாட்டு மன்னனிடம் செல்கிறது. பிரச்சினையைக் கேட்டு மன்னன் குழம்பினான். அதே மனநிலையில் சென்று தூங்கிய போது, அவனது கனவில் அவன் வணங்கும் கடவுள் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்ப்பினை வழங்கினார்.

மறுநாள் அரசவை கூடியது. இருவரும் தீர்ப்புக்காக மன்னன் எதிரில் வந்து நின்றனர்.

”மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஏழு காசும் கொடுக்கும்படி” மன்னர் தீர்ப்பு வழங்கினார். கூடியிருந்த சபையினருக்கு இந்த தீர்ப்பின் அர்த்தம் புரியவில்லை. எதன் அடிப்படையில் இந்த தீர்ப்பினை மன்னர் வழங்கினார் என்று குழம்பினர்.

முதலாமானவரோ ”இது அக்கிரமமான தீர்ப்பு” என்றுச் சொன்னார்.

மன்னர் அனைவரையும் நோக்கினார்.

முதலாமானவரைப் பார்த்து, ”உங்களிடம் இருந்த ரொட்டிகள் எத்தனை” என்று கேட்டார்.

”மூன்று” என்றார் அவர்.

”எத்தனை துண்டுகளாக பிரித்தீர்?”

”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப் பிரித்தேன்” என்றார்.

”ஆக உங்களிடமிருந்த மூன்று ரொட்டிகளைப் பிரித்தால் ஒன்பது துண்டுகள் வந்திருக்கும். அதில் எட்டு துண்டுகளை நீங்களே சாப்பிட்டு விட்டீர்கள். ஒரே ஒரு துண்டை மட்டுமே புதிதாக வந்தவருக்கு தானம் செய்தீர்கள். ஆனால் இரண்டாமாவரோ ஐந்து ரொட்டிகளைப் பிரித்து, ஏழு துண்டுகளைத் தானம் செய்தார். அதன்படி உங்களுக்கு ஒரு தங்கக் காசு, அவருக்கு ஏழு தங்கக் காசு வழங்கும்படி ஆணையிட்டேன். தீர்ப்பு சரிதானே?” என்றார் மன்னர்.

நண்பர்களே,

தர்மம் வழங்கும் தீர்ப்பு உண்மை என்னவோ அதன்படிதான் இருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். நாம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நாம் செய்த தான தருமங்களின் படியே நடத்தப்படும். அதன் பலன்களே நமக்கு கிடைக்கும் அல்லவா? அதிக நற்பலன்களைச் செய்தவர்களுக்கு கடவுள் அதிகமாகவும், குறைவான நற்பலன்களைச் செய்தவர்களுக்கு குறைவாகவும் கிடைப்பதுதானே அறம்? தர்மம்? அதுதானே சரியாக வரும்.

கடவுள் அதிகாரத்திற்குப் பயப்படுவதில்லை. யார் என்ன நற்பலன்களைச் செய்திருக்கின்றார்களோ அப்பலன்களுக்கு ஏற்ற நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். பிரதமரானாலும் சரி, முதலமைச்சரானாலும் சரி அவர்களுக்கும் அவ்வாறே.

தர்மத்தின் தீர்ப்பு கட்சி சார்பற்றது. மதச் சார்பற்றது. என்றும் அழியாத உண்மையின் வழியில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மனித வாழ்க்கையும் இப்படித்தான்.

கடவுள் என்பவர் உண்மையானவர். அவர் எப்போதும் யாரையும் தண்டிப்பதும் இல்லை. கணக்கு வழக்குகள் பார்ப்பதும் இல்லை. மனித வாழ்க்கையின் சாரம் தர்மத்தின் பால் அமைக்கப்பட்டிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள். உங்களுக்கும், எனக்கும் நடக்கும் ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் காரணம் நாமே….!

இல்லையென உங்களால் மறுக்க முடியுமெனில் எனக்கு எழுதுங்கள்.

வாழ்க நலமுடன்….!