குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, February 13, 2020

நிலம் (62) - வீடு கட்டப் போறீங்களா? இதைக் கொஞ்சம் படியுங்க

வீடு என்பது இரண்டு எழுத்துக்கள் சேர்ந்த வார்த்தை. வேறு எந்தச் சொல்லுக்கும் இல்லாத விசேஷங்கள் பல உண்டு இந்தச் சொல்லுக்கு. வீடு என்பது எளிதில் கடந்து போகும் சொல் அல்ல. உணர்வு, வாழ்க்கை, வரலாறு என இந்தச் சொல்லின் பின்னால் மறைந்து கிடப்பவை அனேகம். வீடு என்பது ஒருவரின் வரலாறு மட்டும் அல்ல. சூரிய உலகில் பூமி எப்படி மனிதர்களுக்கு ஆதாரமோ அதைப் போல வீடு, ஒவ்வொரு மனிதர்களின் ஆதாரம். வீடின்றி மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. 

வீடுகளுக்கு இலக்கணம் ஒன்றே ஒன்று தான். மறைப்பு. அது பத்து அடி அளவில் இருக்கலாம். குடிசையாக இருக்கலாம். மாளிகையாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது வீடு தான். வீடு முழுமை அடைவது நல்ல தகப்பன், தாய், பிள்ளைகளால் மட்டுமே. யோசித்துப் பார்த்தால் வீடு பிள்ளைகளுக்காகத்தான் இருக்கும். தான் மட்டும் வாழ ஒருவர் வீடு கட்ட மாட்டார். தன் பிள்ளைகள், மனைவிக்காக, உறவினர்களுக்காக, அந்தஸ்துக்காக என்று பல காரணிகள் இருப்பினும் பிள்ளைகள் முதல் காரணமாக இருக்கும்.

சம்பாதித்து, வீடு கட்டி வாழ்வது என்பது சமூக அந்தஸ்து என முன்னாட்களில் கருதப்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை. காலம் மாற மாற வீடு மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டிருக்கின்றது.

பொருளாதாரத்தை முன்வைத்து சமூக அந்தஸ்து இப்போது முன்னிலைப் படுத்தப்படுகிறது. வல்லவர்களை முதன்மை மனிதர்களாக கருத ஆரம்பித்திருக்கிறது சமூகம். அவர்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் சரி, அது பற்றிய பிரக்ஞை சமூகத்தின் பால் பெரிதாக எடுபடுவதில்லை. பணம் இருந்தால், அவன் உயர்ந்தவன் என கருத ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற மனிதர்கள் தங்கள் நல்லியல்புகளை இழக்க ஆரம்பித்து விட்டார்கள். நல்லியல்புகள் மறைய மறைய, சமூகத்தில் குற்றங்களும், அக்கிரமங்களும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. பிறரின் வார்த்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை, சந்தோஷத்தை இழப்பதில் மனிதனுக்கு நிகர் மனிதன் மட்டுமே.

மனிதர்கள் எப்போதும் தன் வயத்தில் சிந்திப்பது இல்லை. யாரோ ஒருவரின் சிந்தனைக்கு உட்பட்டு தான் தனது செயல்களையும், சிந்தனைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஒரு இந்து தனக்கான வாழ்க்கையை சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருக்க முடியும். கட்டுப்பாட்டை மீற வேண்டுமானால் பெரும் தனக்காரனாக இருந்தால் தான் சாத்தியமாகும். இப்படியான சூழலில் ஒருவன் வீடு கட்டி வாழ்வது என்பது எதன் அடிப்படையில் என்றொரு கேள்விக்கு விடையைத்தான் கீழே எழுதி இருக்கிறேன். இதுதான் உண்மை. இதுதான் எதார்த்தம். மன்னர் கட்டிய கோட்டைகள் சிதிலமடைந்து கிடப்பது கண்முன்னாலே இருக்கும் சாட்சி. இதை மறந்து விடாதீர்கள். என்றைக்கும் இது உங்கள் நினைவிலிருக்க வேண்டிய உண்மை.

எனது அனுபவத்தில் ஒருவரின் வீடு பற்றிய சம்பவத்துக்கு வரலாம்.

சமீபத்தில் எனது நண்பரின் வேண்டுகோளுக்காக விற்பனைக்கு வந்திருக்கும் வீடு ஒன்றினைப் பார்வை இடச் சென்றிருந்தேன். வீட்டின் உரிமையாளரை வரச் சொல்லி இருந்தார் நண்பர். வீடு அல்ல அது. மாளிகை. ஒவ்வொரு சதுர அடியையும் செதுக்கி இருந்தார் உரிமையாளர். 

இது என் அறை, இது மகனுக்காக, மகள்களுக்காக என அவர் காட்டிய ஒவ்வொரு அறைகளிலும் பணம் கொட்டப்பட்டிருந்தது. நகரின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள அந்த வீடு தூசு படிந்து காணப்பட்டது. பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் வசிக்க மகனும் மகளும் மறுத்து விட்டார்கள். 

என் ரசனை வேறு, அப்பாவின் ரசனை வேறு என்றுச் சொல்லி வேறு வீடு கட்டிச் சென்று விட்டார்கள். கோடிகளைக் கொட்டி யாருக்காக கட்டினாரோ அவர்களுக்கு அந்த வீடு பிடிக்கவில்லை.  மனைவிக்கோ இவ்வளவு பெரிய வீட்டினைக் கட்டி மாளவில்லை என சலிப்புத் தட்டி விட, அவரின் கனவு வீடு அவரின் முன்னால் நின்று சிரித்தது. பார்த்துப் பார்த்து கட்டிய வீடு இப்போது விற்பனைக்கு வந்து விட்டது. அவர் அந்த வீட்டின் மீது கொண்ட அன்பு, ஆர்வம் விலை சொல்லும் போது கண்ணீராக வழிந்தது.

நான் வேறு, என் கனவுகள் வேறு. என் வாரிசுகளின் கனவு வேறு தங்கம். இதைப் புரிந்து கொள்ள இத்தனை ஆண்டுகாலம் பிடித்து விட்டது. இவ்வளவு பெரிய வீட்டினைக் கட்டியதற்கான செலவில் பாதியை வங்கியில் வைத்திருந்தால் இன்றைக்கும் ஏதாவது கொஞ்சம் வருமானம் வந்து கொண்டிருக்கும். அறிவு அப்போது வேலை செய்யவில்லை. உணர்ச்சிதான் என் அறிவை மழுங்க அடித்து விட்டது என்றார். 

இன்றைய காலத்தில் பொருளாதாரத்தை மிகத் துல்லியமாக கணித்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. படாடோபம் அழிவைத் தரும். சேமிப்பு நிம்மதியைத் தரும் என்று புரிந்து கொள்ள வேண்டும். முதலீடு என்பது எதிர்காலத்தில் வளர்ந்து இருக்க வேண்டும்.

வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்களுக்கு அவ்வீடு, முதலீட்டில் 4 சதவீதம் கூட சம்பாதித்து தருவதில்லை என்பது புரிவது இல்லை. புதிய வீடு பழைய வீடாகும், செலவுகள் வந்து கொண்டே இருக்கும் என்று புத்திசாலிகளுக்குப் புரியும். அக்கிரமம் செய்து சம்பாதிப்பவர்களின் கதை வேறு. அவர்களின் கதையே வேறு. பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்களைப் பற்றி இங்கு சொல்கிறேன். வீடு கட்டி வாடகைக்கு விடலாம். அது 20 பர்செண்டேஜ் லாபம் தருமென்றால். முதலீடு குறைவாக இருத்தல் அவசியம், அந்த முதலீட்டின் மூலம் வரக்கூடிய வருமானம் நிறைவானதாக இருக்க வேண்டும். 

அதற்கு என்ன செய்யலாம் என இனி எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

உங்களுக்காக வீடு கட்ட வேண்டும். அவ்வீடு நீங்கள் அர்த்தத்துடன் வாழ்வதற்காக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் செலவுகள் வந்து மிரட்டுவதாக இருக்க கூடாது. கடன் வாங்கி வீடு கட்ட கூடாது. எவருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் வீடு கட்டவே கூடாது என்று பல கூடாதுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வளவு கூடாதுகளைக் கருத்தில் கொண்டு வீடு கட்டினால் மிகச் சந்தோசமாக வாழலாம். அது சாத்தியமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. முடியாதது என ஒன்று இவ்வுலகில் உண்டா? டீக்கடைக்காரர் நாட்டை ஆளும் காலம் இது என்பதை மறந்து விடாதீர்கள். அவர் முடியாது என்று நினைத்திருந்தால் பிரதமராக முடிந்திருக்குமா?

பல முடியாதுகளை முடியும் என்ற கனவுகளோடு நாங்களும் உங்களுடன் பயணிக்க இருக்கிறோம். வீடு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்பதிவு. 

காலங்கள் மாற மாற வீடும், அதைப் பற்றிய தேவைகளும் மாறக்கூடும். ஆனால் மனிதர்கள் என்றைக்கும் அதே ஆசா பாசங்களுடன், தேவைகளுடன் தான் பிறக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.  மனிதர்களின் மாறாத அந்தக் குணங்களுடன் இயைந்து வீடு இருப்பின் அதை விட சந்தோஷம் வேறொன்றும் இருக்காது அல்லவா?

வாழ்க வளமுடன்....!

Friday, February 7, 2020

இறகா? சிறகா?

கோவை, சிவானந்தா மில் சாலையில் வாகனங்களின் பெருக்கம் அதிகமாகி விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் இருந்த கீரைத் தோட்டம் காணாமல் போய், பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. எப்போதும் குளிர்ச்சியாக இருந்த இடங்கள் வெப்பத்தால் சுடுகிறது. 

மூன்றாவது தெருவின் மூலையில் அழுக்கேறி கிடக்கும் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் உணவை உண்டு, அவ்விடத்திலேயே தங்கி ஒரு நாய் சில குட்டிகளை ஈன்று வளர்த்து வருகிறது. தாய் நாயின் உடம்பெல்லாம் வங்கு பிடித்தது போல இருக்கும். ஆனால் குட்டிகள் ஒவ்வொன்றும் அழகோ அழகு. வீட்டில் ஏற்கனவே இரண்டு லேப்ராடர்கள் இருப்பதால் இவைகளுக்கு இடம் கொடுக்க முடியாது. நினைத்தாலும் நடக்காது. அம்மணி ஓகே சொல்லனும்.

தினமும் அக்குட்டிகளை பார்ப்பது வாடிக்கை. 

காலை ஒன்பதரை இருக்கும். அத்தெருவினைக் கடக்கும் போது சிறு செவலைக் குட்டி, வாலை ஆட்டியபடி ஒருவரின் காலைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவர் மேரி பிஸ்கட் கட்டு ஒன்றினைப் பிரித்து, கால்களால் புற்களைச் சமப்படுத்தி, அதன் மேல் வைத்தார். 

“இந்தா, சாப்பிடு” என்றார்.

அச்சிறு குட்டி, வாலை ஆட்டிக் கொண்டு, அவசர அவசரமாக பிஸ்கட்டுகளை விழுங்கியது. அவர் குட்டையாக இருந்தார். நெற்றியில் விபூதி பூசி இருந்தார். கண்களில் கருணை. அக்குட்டி பிஸ்கட் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் அங்கிருந்து நகர்ந்தேன். மனதுக்கு இதமாய் இருந்தது. 

ஜீவகாருண்யம். உலகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் உணர்ச்சி.

சக உயிர்களின் மீதான கருணை எல்லோருக்குள்ளும் உண்டு. ஆனால் அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் தெய்வமாய் வணங்கப்படுகிறார். எத்தனை எத்தனையோ கோடானு கோடி மனிதர்கள் துயரப்படுபவர்களுக்கு பொருளாகவும், பணமாகவும் கொடுக்கிறார்கள். பிறரின் துயரம் கண்டு உள்ளம் துடிப்பவர்கள் மனிதர்கள். கண்டும் காணாது செல்பவர்கள் மிருகங்கள்.

ஆந்திராவில் ஒரு ஏழைப் பாட்டி ரூ.2.50க்கு தோசை கொடுக்கிறது. கோவையில் சாந்தி கேண்டீன் 10 ரூபாய்க்கு அறுசுவை உணவு கொடுக்கிறது. அவர் பணத்தைப் பார்த்து விட்டார். புகழையும் அடைந்து விட்டார். இவை எதுவும் அவருக்கு எதையும் தரப்போவதில்லை. பணக்காரர்களிடம் பெயரும், புகழும் பெற்றதனால் கிடைக்கப்போவது ஒன்றும் இல்லை. சாந்தி கேண்டீன் சண்முகம் அவர்களுக்குள் பொங்கி வழிந்து கொண்டிருப்பது ஜீவகாருண்யம்.

கலெக்டரிடம் பல ஹோட்டல்காரர்கள் புகார் கொடுத்தனராம். ”விலை குறைத்து தான் கொடுப்பேன், விலை இல்லாமலும் கொடுப்பேன் , அது என் விருப்பம்” எனச் சண்முகம் சொன்னதாகச் செவிவழிச் செய்தி. ஜீவகாருண்யத்தையும் அரசாங்கம் தடுக்கும் என்பது நிதர்சன உண்மை.

மீண்டும் ஒரு ஹோலோஹாஸ்ட்டை (ஜெர்மனியில் ஹிட்லர் உருவாக்கிய வதைக்கூடம்) உருவாக்க நினைப்பவர்கள் இருக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம். அரசியல் மக்களுக்கானது அல்ல என்பதை காலம் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. கலிபுருஷன் அழிவு நடனம் ஆடுகிறான்.

(இன்று உலகையே வேவு பார்க்கும் தொழில் நுட்பத்தை உருவாக்கியவர்களின் மூதாதையர்களான ஜூவிஸ்கள் இவர்கள். இவர்களைப் படுகொலை செய்த மாபெரும் தலைவர் ஹிட்லர்)

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, அனைத்து உலக நாடுகளும் வேடிக்கை தான் பார்த்தன. இலங்கையில் குருடூ ஆயில் இருந்திருந்தால் அமெரிக்கா தலையிட்டு இருக்கும். நேச நாடுகள் போர்ப்படைகளை அனுப்பி இருக்கும். ஐ.நா. பொருளாதார தடை விதித்திருக்கும். ஜனநாயகத்தைப் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் உலக நாடுகளும், பத்திரிக்கையாளர்களும், அமைப்புகளும் கதறி இருப்பார்கள். அழிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் உலகமே வாளாயிருந்தது. வேடிக்கை பார்த்தன. தமிழும், தமிழர்களும் உலகில் வாழவே முடியாத, கூடாத உயிரினமாக மாறிக் கொண்டிருக்கிற அவலம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.



(இலங்கை தமிழர்களின் இனப்படுகொலைகள்)

சமையற்கட்டில் இன்று அடியேனுக்கு காய்கறிகள் நறுக்கும் வேலை இல்லை. காலையில் காலச்சுவடில் வெளிவந்திருந்த ’ரேமண்ட் கார்வரின்-இறகுகள்’ சிறுகதையைப் படிக்க ஆரம்பித்தேன்.  இட்லியும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காத தக்காளிச் சட்னியும் சாப்பிட்டு விட்டு (எவன் இந்தத் தக்காளியைக் கண்டுபிடித்தானோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் தக்காளி, தக்காளி. இது இல்லாத உணவு இல்லையென்று ஆகிவிட்டது) படுக்கையில் படுத்துக்கொண்டே கதையை  படிக்க  ஆரம்பித்தேன்.

உள்ளூர் சரக்கே விற்பனை ஆகவில்லை, இதில் வெளி நாட்டுச் சரக்கை எங்கே விற்பது என்பார்கள். அடியேனுக்கு வெளி நாட்டு நாவல்கள், சிறுகதைகள் மீது ஈர்ப்பே இருந்ததில்லை.

தமிழக எழுத்தாளர்கள் பெண்களின் கவட்டிக்குள்ளிருந்தும்,  ஜாதிய புனைவுகளிலுருந்தும், ஏழைப் புனைவுகளில் இருந்தும் வெளிவராத நிலையில், வெளி நாட்டுக்காரர்கள் புதிதாக என்ன எழுதி இருக்கப்போகின்றார்கள் என்ற நினைப்பு.

ஏனோ தெரியவில்லை இன்றைக்கு வெளி நாட்டு எழுத்தாளரின், அக்கதையைப் படித்தேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. படித்து முடித்ததும் இனம் புரியாத ஒரு உணர்வு என்னைப் பீடித்தது. இதற்குள் மனைவி, “என்னங்க, என்ன யோசிக்கிறீங்க? என்ன ஆச்சு?” எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

பொன்னிறக்கூந்தல் ஃபிரானும், அவள் கணவன் ஜேக்கும், தன்னுடன் வேலை செய்யும் பட்டின் வீட்டிற்கு விருந்துக்குச் செல்கிறார்கள். பட்டின் மனைவி ஓலா. ஃபிரானுக்கும் ஜேக்கிற்கும் குழந்தை இல்லை. பட் வீட்டில், பட்டின் அவலட்சனமான குழந்தை ஹெரால்டை இருவரும் பார்க்கிறார்கள். வீடு திரும்பிய பிறகு ஃபிரானும் ஜேக்கும் கலவி கொள்கிறார்கள். குழந்தையோடு வாழ்கிறார்கள். அதன் பிறகு ஜேக் பட்டின் வீட்டிற்குச் செல்லவில்லை. ஜேக்கும், பட்டும் அலுவலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அக்கதையில் வரும் ஒரு சிறு பகுதியைப் படியுங்கள்.

”பட்டை இப்போதும் தொழிற்சாலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கிறோம். நான் விசாரித்தால் அவனும் ஓலா, ஹெரால்டைப் பற்றிச் சொல்கிறான். ஜோயி இப்போது இல்லையாம். ஒருநாள் இரவு தூங்குவதற்கு மரத்துக்குப் பறந்து சென்ற அது, அப்புறம் காணவேயில்லை, திரும்பி வரவேயில்லை. அதற்கும் வயதாகிவிட்டிருந்தது. ஆந்தைகள் அதன் கதையை முடித்துவிட்டிருக்கும். பட் தோளைக் குலுக்கிக் கொள்கிறான். சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டே, “நீ இப்போது ஹெரால்டைப் பார்க்கவேண்டுமே. ஒருநாள் அவன் அமெரிக்கன் புட்பாலில் லைன்பேக்கராக விளையாடத்தான் போகிறான், பார்த்துக்கொண்டேயிரு,” என்கிறான். நான் ஒப்புதலாகத் தலையை அசைத்துக்கொள்கிறேன். நாங்கள் இன்னமும் நண்பர்கள்தாம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அவனிடம் எதைப்பற்றிப் பேசுவதென்பதில் கவனமாக இருக்கிறேன். அது அவனுக்கும் தெரிகிறது. இப்படி இருக்கவேண்டாமே என்றுதான் அவனும் நினைக்கிறான். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.”

(நன்றி:காலச்சுவடு, ரேமண்ட் கார்வர், ஜி.குப்புசாமி)

இக்கதையில் வரும் ஜோயி என்கிற மயில் ஹெரால்டோடு விளையாடும். கருப்பு கலரில், கைப்பெருசில், அவலட்சமான குயிலுக்கு இனியகுரலைக் கொடுத்த இறைவன், அழகிய நீண்ட தோகைகளை விரித்தாடும் போது, காண்பவரின் உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் அழகின் உருவமான மயிலுக்கு கர்ண கடூரமான குரலைக் கொடுத்திருக்கிறான். ஏன் இந்த வேறுபாடு? இயற்கைப் படைப்பின் ரகசியம் அது.

அவலட்சனமான குழந்தையின் தகப்பனான பட்டிடம் ஜேக், ஹெரால்டைப் பற்றி விசாரிப்பதைத் தவிர்க்க நினைக்கிறான். பட்டிற்கு ஹெரால்ட் மகன். அவலட்சணமானவன். இருப்பின் அவன் மகன்.

அவர்களுக்குள்ளான தயக்கங்கள் அழகு பற்றிய உளவியல் பிரச்சினையாக இருக்கிறது. ஜேக்கின் மன நிலையும், பட்டின் மன நிலையையும் என்னுள் உணர முடிந்தது. அதை நிகழ்த்தியது இறகுகள் கதை. வெறும் வார்த்தைகள் தான். ரேமண்ட் படிப்பவரின் மனதுக்குள் கதை மாந்தர்களின் உள்ளத்தை உணர வைத்திருக்கிறார். நீண்ட நேரமாக நானும் பட்டைப் போலவும், ஜேக்கைப் போலவும் உணர்ந்தேன்.

திடீரென இறகுகள், சிறகுகள் என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன என எனக்குள்  ஒரு கேள்வி எழுந்தது.

ஆமாம், பறவைகளுக்கு இருப்பது இறகா? சிறகா? எந்த வார்த்தைச் சரி?

உங்களுக்குத் தெரியுமா?

* * *

விடை : சிறகு - இறகுகளின் தொகுதி


Wednesday, January 29, 2020

சில்லுகருப்பட்டி சொல்லும் தமிழ் சினிமா பிசினஸ்

நெட்பிளிக்ஸில் சூர்யா தயாரித்த சில்லுகருப்பட்டி படத்தை நேற்று மாலையில் பார்த்தேன். நான்கு கதைகள். 


கதை ஒன்று: குப்பை பொறுக்கும் ஒரு சிறுவன் பிங்க் குப்பை பையில் கிடைக்கும் ஒரு போட்டோ அதைத் தொடர்ந்து ஒரு டேப் ரெக்காடர், அதைத் தொடர்ந்து கிடைக்கும் ஒரு வைர மோதிரம். அது ஒரு வளர் பருவ பெண்ணுக்கு சொந்தமானது. பிங்க் குப்பை போடப்படும் இடத்தைக் கண்டுபிடித்து அவளிடம் டேப் ரெக்காடரையும், மோதிரத்தையும் சேர்க்கிறான்.

கதை இரண்டு: பால்ஸ் (அது என்னா பால்ஸுன்னு எனக்குச் சத்தியமாக புரியவில்லை) கேன்சரால் பாதிக்கப்படு பையன். ஓலாவில் இணையும் ஒரு ஃபேஷன் டிசைனர் பொண்ணு. பால்ஸில் கேன்சரால் பேச்சு வார்த்தையோடு போன திருமணம். இருவரும் இணையும் கதை. காக்காவைக் காப்பாத்தினா அது பளபளன்னு மின்னும் பொருளைக் கொண்டு வந்து தினமும் அந்தப் பொண்ணு கிட்டே கொடுக்கிறது. இயக்குனரின் கற்பனை வளம் கண்ணதாசனை மிஞ்சுகிறது.

கதை மூன்று: வயதான இரண்டு பெருசுகள் அன்பு கொள்வது, பின்னர் சேர்வது. 

கதை நான்கு: கிட்டே இருந்து பார்த்தா தெரியாது. எட்டே இருந்து பார்த்தா கோபுரமா தெரியும் என தத்துவம் பேசும் சமுத்துரக்கனி. பொண்டாட்டியைத்தான் சொன்னார். அயல் நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு எல்லாம் அவரவர் சம்சாரங்கள் கோபுரங்களாகத் தெரிகின்றார்கள் என்ற புதிய விஷயத்தை கற்றுக் கொடுத்தது. அப்புறம் இன்ப செக்ஸ் கணவனுக்கும் மனைவிக்கும். 

படமே முடிந்தது. இனி கதாகாலட்சேபத்துக்கு வருவோம்.

குடும்ப வாழ்க்கையில் வேலைக்குப் போகும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்துப் போடுவது, வீட்டினைப் பராமரிப்பது பெரும் கொடுமையானவை என்கிறார்கள் பெண்கள். பிள்ளைகள் பெற்றெடுக்க இனி ஹாஸ்பிட்டல் போதுமென்கிறார்கள். அந்தளவுக்கு ஆண்களால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் பெண்கள். டில்டோக்கள் விற்பனை இந்தியாவில் படு சூடாக நடக்கிறது என்கிறது ஒரு சர்வே.  அந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். 

இந்தக் கதையை ஏன் சூர்யா தேர்ந்தெடுத்து தயாரித்தார்? என்ன ரகசியம்? சூட்சுமத்தின் முடிச்சை கொஞ்சமே கொஞ்சம் அவிழ்க்கிறேன்.(இந்த வார்த்தை ஆபாசமானது அல்ல)

தமிழ் சினிமாவில் ரஜினி குரூப், கமல் குரூப், கவுண்டர் குரூப், மதுரை குரூப், ஐயர் குரூப் என தனித்தனி பிசினஸ் குரூப்புகள் பல உண்டு. 

ரஜினியுடன் தனுஷ், ரஜினியின் நண்பர் நடராஜ் மகளைக் கட்டி, ரத்துச் செய்த விஷ்ணு விஷால் போன்றோர்கள், அனிருத் சமாச்சாரங்கள் (இளையராஜா போல வருவாராம் இவர் என ரஜினி புகழாரம் சூட்டியது) இன்னும் பக்கத்து, தூர சொந்த பந்தங்கள் இவர் படங்களில் நடிப்பார்கள். அவ்வப்போது புரட்சிக்காக சில பல இயக்குனர்கள் படங்களில் நடிப்பது போன்ற அல்லுசில்லு வேலைகளை இவர்கள் செய்வார்கள்.

கமலுடன் ரமேஷ் அரவிந்த் நிச்சயம், ஐயராத்து அம்பிக்களாகவும், மாமிகளாகவும் திரைப்படங்களில் நடிப்பார்கள். இவர் அவ்வப்போது சில பல ஸ்டண்டுகளை அடிப்பார். இனப்பாசம் அதிகம். அத்தனையும் ஒன்றுக்கும் ஆவாது போய் விடும்.

கவுண்டர் குரூப்பில் சூர்யா,கார்த்திக், சத்தியராஜ், சிபிராஜ், சத்யன், ஞானவேல் ராஜா, அவ்வப்போது நண்பர்கள் என தனி ஆவர்த்தனம்.

மதுரை குரூப்பில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் இப்படி இன்னும் ஒரு சிலர் என இது கொஞ்சம் வித்தியாசமானது.

ஐயர் குரூப்பில் விசு (கிஸ்மு அவசியம்), சங்கர்( நண்பன் படத்தில் வரும் ஆஸ்துமா ஐயர்), மணிரத்னம் வகையறாக்களின் தனி ஆட்டம். 

சன் டிவி, ஒரு சில தயாரிப்பாளர்கள் எல்லாம் மேற்கண்ட க்ரூப்புகளோடு இணைந்து கொள்வார்கள். இன்றைய தினகரனில் ரஜினியும், பேர் கிரில்ஸும் போட்டோ ஷூட் செய்தியும், ரஜினி மீதான வருமான வரித்துறைச் செய்தியும் தடவிக் கொடுத்தபடியே வெளிவந்திருந்த மர்மங்கள் அது தனி ராஜ்ஜியம்.

விஜய், அஜித் சமாச்சாரங்கள் வேறு. அவர்கள் தங்களை பிராண்டாக மாற்றி வேஷம் கட்டிக் கொண்டார்கள். அஜித் ஐயராத்துக்காரர் என்பது தனிப்பட்ட விஷயம்.

ரெட்டி க்ரூப் விஷால், விஜய்சேதுபதி வகையறாக்கள் வேறு.
பெரும்பாலும் நல்ல சினிமாக்கள், கலெக்‌ஷன் ஆகும் சினிமாக்கள் எல்லாம் இவர்கள் தொடர்பானவர்களிடமிருந்தோ அல்லது இவர்களின் தயாரிப்பிலோ தான் வரும்.  கனவுகளோடு வரும் இயக்குனர்களின் அட்டகாசமான கதைகள் பற்றி இவர்களுக்குத் தெரியாமல் போகாது. இண்டஸ்ட்ரியில் அந்தளவுக்கு போட்டுக் கொடுக்கும் ஆட்கள் தடுக்கி விழுந்தால் லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி ஒரு படம் வெளி வந்து வெற்றி பெறுவது பெரும்பாலும் இல்லை எனலாம். 

விஜய் டிவி அலப்பரை நடிகர்கள். புதுமுக நடிகர்கள், இன்ன பிற அல்லுசில்லுகள் அவ்வப்போது எவராவது ஏமாந்த சோனகிரிகளின் தலையில் மிளகாய் அரைத்து ஹீரோக்களாக வேஷம் கட்டுவார்கள். பெரும்பாலும் ராமராஜன் கதையாக முடிந்து போவார்கள். இம்மாதிரி படங்களால் தான் தமிழ் சினிமா இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை சினிமாக்காரர்கள் சொல்வார்கள். 

இந்த ஐந்தாறு சினிமா குரூப்புகளுடன் இயைந்து செல்பவர்களால் தான் சினிமா தயாரித்து வெளியிட முடியும். தியேட்டர்கள் பெரும்பாலும் இந்த ஐந்தாறு குருப்களின் கண்ட்ரோலில் இருக்கும். இந்த குரூப்புகளுக்குள் தான் சண்டை சச்சரவுகள் நடக்கும். செய்திகளாகும், பரபரப்பாகும். இவர்களின் தொடர்பில் இருக்கும் வெளியீட்டாளர்களால் சினிமா வியாபாரமாகும். 

தனி ஒருவன் சினிமா தயாரிக்கவோ அல்லது ஹீரோவாக நடிக்கவோ விடவே மாட்டார்கள். அப்படி வந்து விட்டால் ஜெயிக்க வைத்து, மொத்தமாக ஜோலியை முடித்து விடுவார்கள். இங்கு ஜோலி என்பது வேலையை என்று அர்த்தம் கொள்ள வேண்டுமென்று சொல்லி விடுகிறேன். நமக்கெல்லாம் வக்கீலும் இல்லை, ஆதரவாளர்களும் இல்லை. ஜோலி என்கிற வார்த்தைக்கு அவ்வளவு மகிமை.

நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர் இந்தக் குரூப்பில் கதை சொல்ல வேண்டும். கதையில் ஒட்டுக்கள், வெட்டுக்கள், ஒரு சில இணைப்புகள் கோர்க்கப்பட்டு வேறு ஒருவரின் இயக்கத்தில் வெளிவரும். இப்போது கோர்ட்டுக்குப் போகின்றார்கள். அப்போதெல்லாம் அய்யோ பாவம் கதைதான். இப்போது ஆரம்பத்தில் இருந்து படியுங்கள் சூர்யா ஏன் இந்தக் கதையை தேர்ந்தெடுத்து தயாரித்தார் என்பதை...

சில்லுகருப்பட்டி திரைப்படம் சுட்டிக்காட்டும் தமிழ் சினிமா பிசினஸ் இதுதான். இதைச் சரி செய்ய இயலுமா? ஏன் முடியாது? ஆனால் ஒருவரும் செய்ய மாட்டார்கள். செய்யவும் விடமாட்டார்கள்.

புரிந்தவர்கள் சிரித்துக் கொள்ளுங்கள். ஆதர்சன ஹீரோக்களின் ரசிகசிகாமணிகள் அடியேனை மன்னித்து அருள்வீர்களாக. அவ்வளவுதான் இந்தப் பதிவு.

* * *

Friday, January 24, 2020

நிலம் (61) - வீடு கட்டலாம் வாங்க

அளவான ஒரு குடும்பத்தலைவரின் கனவு - வீடு, கார், ஓரளவு நிரந்தர வருமானம், பிள்ளைகள் படிப்பு, தனக்கும் பிள்ளைகளுக்கும் எதிர்கால பாதுகாப்புக்கு சேமிப்பு. இது இல்லாதவர் எவரேனும் உண்டா?

இந்தியாவில் உள்ள 130 கோடி மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்களுக்கு வசிக்க நல்ல வீடு இல்லை. பொருளை ஈட்டும் பொருட்டு, நகரங்களுக்குச் சென்றவர்களுக்கு, அங்கு சொத்து வாங்கவோ, வீடு கட்டவோ அவற்றின் விலை மிக அதிகம் என்பது முக்கிய காரணமாய் உள்ளது.

அபார்ட்மெண்ட்களில் வீடு கிடைத்தாலும், அந்த வாழ்க்கை உவப்பாக இருப்பதில்லை. தண்ணீர் பிரச்சினையிலிருந்து, இன்னும் பலப்பல பிரச்சினைகளை தினமும் சந்திக்க வேண்டி இருக்கும்.  நிர்வாகச் செலவுகள் வாடகை போல தொடரும். அபார்ட்மெண்ட் வீடுகள் விலையேற்றம் என்பது கிடையாது. 

நகரங்களை ஒட்டிய இடங்கள், வீடுகள் காலப்போக்கில் விலையேறலாம். நகரங்களை ஒட்டிய வீடுகளை விலைக்கு வாங்குவது என்பது சாதாரண மக்களுக்கு எளிதானதல்ல.

கடன் பெற்று வீடு வாங்குவது மட்டுமே பெரும்பான்மை மக்களுக்கு இப்போதைய ஒரே வழி. வீடுகளின் விலைகள் உயர்ந்து உள்ளன. வாடகை கொடுக்கும் பணத்துக்கு, மாதா மாதம் டியூ கட்டி விடலாம் என்று நினைத்து கடன் வாங்கும் நபர்களுக்கு மாத வருமானம் சரியாக கிடைக்கவில்லை என்றால் கடன்காரர்களின் தொல்லைகள் பெரிய அவஸ்தையை உருவாக்கும். 

அரசு அலுவலர்கள் ஓரளவு சமாளிக்கலாம். பிள்ளைகள் படிப்பு, நோய், அவசரச் செலவுகள், விழாச் செலவுகள், உறவுகள் என்றெல்லாம் கண் முன்னே செலவுக்கான வழிகள் கைகட்டி நிற்கும் போது வீட்டுக்கடன் அடைக்க இயலாமல் போனால் வங்கி ஏலத்துக்கு கொண்டு வந்து விடும். நிம்மதியற்ற வாழ்க்கை கடன் பெற்று வீடு வாங்கியவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு அமைந்து விடுகிறது.

நகர வாழ்க்கை முறை வருடம் தோறும் புதுப்புது வைரஸை, நோயை உருவாக்கி மக்களை மரண பீதியடைய வைக்கிறது. தன்னளவில் பொருளாதார மேம்பாடு அடைய, மனிதர்கள் தங்களின் உடல் நலத்தை பணயம் வைப்பது,  சம்பாதித்து சேர்த்து வைப்பதில் பாதி நோய்க்காக, உடல்நலத்துக்காக செலவழிக்கப்படுகிறது. 50, 60களில் இருப்போரிடம் பேசிப் பார்த்தால் சொல்வார்கள்.

அந்தக் காலத்தில் கூரை - ஓடுகள் வேய்ந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் 80, 90 வயது வரை நோயின்றி வாழ்ந்தார்கள். உடல் உழைப்பு மட்டுமல்ல வீடு என்பது முழு ஓய்வுக்கான இடமாக இருந்தது. கவலையற்ற வாழ்வு, அவர்கள் சுயசார்பு வாழ்க்கை முறையில் வாழ்ந்ததால் நோய்கள் அவர்களை அண்டாமல் இருந்தது. சுயசார்பு வாழ்க்கை என்றால் என்ன என கேட்கத் தோன்றும்

வீட்டில் இரண்டு தென்னை மரங்கள், ஒரு கொய்யா, கருவேப்பிலை, கொடத்தடிப் பக்கம் நான்கு கத்தரி, வெண்டைச் செடிகள், அவரை, பரங்கிச் செடி, புடலைச் செடி, பீர்க்குச் செடிகள், கீரைகள் இருந்ததால் உணவுக்காக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இவைகள் முழுச் சுகாதாரமான, உரங்கள் அற்ற சுத்தமான காய்கறிகள். நல்ல வெளிச்சம், காற்றோட்டமாய் வீடுகள் என கொசுக்கள் இல்லாத வீடுகளில் அவர்கள் வசித்தார்கள். மின்சாரத்துக்கும், தண்ணீருக்கும் மட்டுமே அவர்கள் அரசை நாடினார்கள். நோய்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களையே மருந்துகளாகப் பயன்படுத்தினார்கள். நல்ல செழிப்பும், வளமும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். இன்றைக்கும் நகரங்களை ஒட்டிய கிராமங்களில் அவ்வாறுதான் வாழ்கிறார்கள்.

இப்போதைய நவ நாகரீக வாழ்க்கை முறை, நோய் இல்லாமல் இருப்பவர்கள் எங்கே உள்ளார்கள் என தேட வைத்திருக்கிறது. சுகர், பிரஷர் எல்லாம் ஃபேஷன் நோய்கள். அதற்கும் மருந்துச் செலவுகள் ஆகிக் கொண்டிதான் இருக்கின்றது. மக்கள் அதையும் ஏற்று வாழப் பழகிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் அவர்களுக்கு வேறு வழி இல்லை. 

இதையெல்லாம் யோசித்து, மிகக் குறைந்த விலையில் 30 வருட உத்தரவாதமளிக்கும் சுயச்சார்பு ஆரோக்கிய வீடுகளை ஏழை, எளிய மக்களுக்கும், மிடில் கிளாஸ் மக்களுக்கு வழங்கி, கடனற்ற வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டுமென்ற ஆவல் இதே ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 15 வருட அனுபவத்துடன் இருக்கும் எனக்கு ஏற்பட்டது.

இந்த ஆவலில் விளைந்ததுதான் ஆரோக்கிய வீடுகள் கட்டும் திட்டம். அதுவும் மிகவும் குறைந்த விலையில். மாதா மாதம் தவணைகள் இல்லா வாழ்க்கை முறை. சொர்க்கத்தை வழங்கும் இயற்கைசார் வீடுகள். வருமானமே வரவில்லை என்றாலும் மிகச் சொற்பமான செலவில் அமைதியாக வாழும் வீடுகள்.

விரைவில் வெளியிட இருக்கிறேன். எனது பிளாக்கிலும் எனது யூடியூப் சேனலான https://www.youtube.com/user/fortunebricksindia இணைந்திருங்கள். வெகு விரைவில் அவ்வகை வீடுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.

ஊட்டியில் 25 செண்ட் ஃபார்ம் ஹவுஸ் வீடுகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன. அதைப் பற்றியும் எனது பிளாக்கிலும், யூடியுப் சேனலிலும் தெரிந்து கொள்ளலாம்.

Thursday, January 23, 2020

நரலீலைகள் - அரசியல் என்றால் என்ன? (9)

பீமாவும் தங்கவேலும் சந்தித்தார்கள்.

”உன் பேச்சைக் கேட்டேன் தங்கம். மக்கள் சேவை என்றால் மகேசன் சேவை என்றுச் சொன்னாயே? மகேசன் வந்து உன்னிடம் சொன்னானா எனக்குச் சேவை செய் என்று”

“பீமா, மனிதனின் கடமை தான் என்ன? மக்களுக்குச் சேவை செய்வது தானே?”

“தங்கம், பூமியில் ஒரே ஒரு உண்மை மட்டுமே உண்டு. பசி. உன் பசியைத் தீர்த்துக் கொள்வதுதான் உனக்கு இயற்கை தந்திருக்கும் கடமை. பசி தீர்ப்பதற்காக பல வித உபாயங்களை உருவாக்கினார்கள். அந்த உபாயங்கள் மனிதர்களைத் தின்று கொண்டிருக்கிறது. உபாயங்களுக்குள் சிக்கிய மனிதர்கள் மீழ முடியாமல் மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கின்றார்கள்”

“என்ன சொல்கிறாய் பீமா? ஒன்றும் புரியவில்லையே?”

“உனக்கு புரிந்து விட்டால் இது போல பேசி இருப்பாயா? அரசியல் என்பது வேறு. வாழ்க்கை என்பது வேறு. அரசியல் பலி கேட்கும் போர்க்களம். இந்தப் போர்க்களத்தில் வெற்றியாளர்கள் எவரும் இல்லை. வெற்றி என்பதெல்லாம் அரசியலில் இல்லவே இல்லை.

அரசியல்வாதிகளின் முதன்மை எண்ணம் தன் நலம் மட்டுமே. தன் நலம் விரும்பாத ஒருவன் அரசியலுக்கு வரமாட்டான். துணியை உதறி தோளில் போட்டு விட்டு மனிதர்கள் இல்லாத இடத்துக்குச் சென்று விடுவான்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிறாய் நீ. யார் மக்கள்? அந்த மக்களின் தகுதி என்ன? அவர்களின் ஆசைகள் என்ன? அவர்களின் எண்ணங்கள் என்ன? இப்படி ஏதாவது தெரியுமா உனக்கு?

நீ அரசியலுக்கு வரலாம். வந்தால் நீயும் உன் வாரிசுகளும் பலி வாங்கப்படுவார்கள். அந்தக்கால மன்னர்களுக்கு இப்போது வாரிசுகள் இல்லை என்பதை நீ அறிவாய் தானே? அதே போலத்தான் அரசியல் தலைவர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் நடக்கும்.

அரசியலில் தர்மம் இல்லவே இல்லை. அறமும் இல்லை. தெளிந்த நீரோடை போலத் தெரியும் அரசியல் ஆற்றின் அடியில் கொடூரங்கள் நிறைந்து கிடக்கும். ஆசைப்படுபவன் மட்டுமே அரசியலுக்கு வருவான். நல்ல எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரவே மாட்டார்கள். வரலாற்றினைப் புரட்டிப் பார் தங்கம். அதன் பிறகு அரசியலுக்கு வர முயற்சி செய்.

மக்களுக்குச் சேவை செய்கிறேன் பேர்வழி என பிதற்றி குழம்பி நிற்காமல் தெளிவாய் முடிவெடு. நீ சுகமாக இருக்க உழைக்க உன் எதிரில் இருக்கும் ஆயிரமாயிரம் வழிகளில் அரசியல் வழி ஒன்று. அரசியல் என்றால் அதிகாரம். அதிகாரம் என்றால் கட்டளை. கட்டளை என்றால் அகங்காரம். அகங்காரம் என்றால் அழிவு. இதைத்தான் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அனுபவித்து பின்னாலே, சேரும் இடம் சேர்கின்றார்கள். உனக்கும் அதுதான் வேண்டுமா? என்பதை நீ யோசித்து முடிவு செய்.

மகேசன் என்றாயே...! கோவில்கள் எல்லாம் இப்போது கோவில்களாகவா இருக்கின்றனவா? அவன் சொன்னான், இவன் சொன்னான், அந்த புத்தகத்தில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று எவரோ சொல்வதைக் கேட்டுக் கேட்டு, கோடானு கோடியாய் அடிமையாக வாழ்ந்து கொண்டிருப்பதை நீ அறியவில்லையா தங்கம்?”

தங்கவேல் குழம்பி போய் பீமாவைப் பார்த்தான். பீமா சிரித்துக் கொண்டே விடை பெற்றான்.

* * *

”சந்து, கவனித்தாயா? அரசியலுக்கு ஒரு கேரக்டர் வரப்போகிறது என நினைத்தேன். அதையும் பீமா கேட்டைப் போட்டு பூட்டி விட்டான். இனி தங்கவேல் கதை என்ன ஆகப் போகின்றதோ தெரியவில்லையே?”

“மாயாண்ணே, நம்ம கதாசிரியர் என்ன மவுனியா, ஜானகிராமனா? ரெகுலர் கதை விட. இந்த ஆள் வேற... பார்க்கலாம் அண்ணே... என்னதான் எழுதுகிறார் என்று”

“ஆமாடா சந்து. உனக்கும் இன்னும் எழுதவில்லை. பார்க்கலாம்....!”

* * *

உண்மையான உயரம்
எப்போதும் தாழ்வானது,
உண்மையான வேகம் 
எப்போதும் மெதுவானது,
மிகவும் உணர்ச்சியுள்ளது
மரத்துப் போனது,
பெரிய பேச்சாளன், ஊமை
ஏற்ற  இறக்கம், ஒரே அலையில் தான்,
வழியில்லாதவனே, சரியான வழிகாட்டி,
மிகப் பெரியதென்பது
மிகச் சிறிதானது
எல்லாம் கொடுப்பவனே
எல்லாம் பெறுபவன் 
- The Book of Mirdad





தொடரும்............................

Saturday, January 11, 2020

அம்மாவின் உயிர்

மனிதனைப் போன்ற சுயநலவாதி இந்த உலகத்திலேயே வேறு எந்த உயிரும் இல்லை. உடலில் ரத்தத்தின் சூடு இருக்கும் வரை அவன் எதையும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. வயதான பிறகு ஞானோதயம் வந்து என்ன புண்ணியம். போனது போனதுதான்.

நண்பரொருவரின் உறவினர்கள் கோவை வடவள்ளி அருகில் இருக்கும் முதியோர்கள் தங்குமிடத்தில் தங்கி, தங்களின் கடைசிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து விட்டு வரலாம் என நானும், நண்பரும் சென்றிருந்தோம்.

மதிய உணவு நேரம். எங்களுக்கும் அவர்கள் சாப்பிடும் உணவு கிடைத்தது. சாத்வீக உணவு. பூசணிக்காய் மோர்குழம்பு, உருளைப் பொறியல், டம்ளரில் ரசம் கொடுத்தார்கள். தயிருடன் மோரும். சீரக தண்ணீர் குடிக்க. அப்பளம். பச்சை அரிசிச் சோறு. என்னுடன் சுமார் 25க்கும் அதிகமான, வயதான ஆண்களும், பெண்களும் சாப்பிட்டார்கள். ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளக் கூட இல்லை. என்னை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.  சாத்வீக உணவு எனது ஃபேவரைட். கோவை நேரம் ஜீவா போல இருக்க கொடுத்து வைக்கணும். நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருவதில்லை.

(பூசணிக்காய் மோர் குழம்பு - படம் உதவி கூக்கிளார்)

என்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் சோகம் கப்பிக் கிடந்தது. மகிழ்ச்சியாக ஒருத்தரைக் கூட பார்க்கவில்லை. என்னுடன் வந்த நண்பரின் உறவினர் தன் மனைவியுடன் தங்கி இருக்கிறார். ஆகையால் அவர் குழந்தை போல சிரித்துப் பேசினார். அவரின் மனைவி அக்மார்க் லட்சுமி தேவி. முகத்தில் அவ்வளவு சாந்தம். ’நல்லா இருங்க, நல்லா இருங்க’ன்னு சொல்லிக் கொண்டே இருந்தார். மனைவியுடன் கடைசிக் காலங்களைக் கழிப்பதுக்கும் குடுப்பினை வேண்டும்.

பேரன் பேத்திகளுடன் விளையாடிக் கொண்டு, ஆசையாக பெற்று வளர்த்த மகனை பார்த்தபடி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கால ஓட்டத்தில் பணம் பூதாகாரமாய் கண் முன்னே நிற்க, உறவுகளைத் தொலைத்து விட்டு, அதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிற வாழ்க்கை முறையில் அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா? எவரோ ஒருவருக்கு வேலை செய்யணும், காசு வரும். சுகப்படுத்தனும் நம்பி வந்தவர்களை. இல்லையெனில் சமூகம் காறித் துப்பி விடும். காசு அளவுகோல் கொண்டு மனிதன் அளக்கப்படுகிறான். வாழ்க்கை எடை போடப்படுகிறது. மனிதனின் நல்லது கெட்டது அதை வைத்துப் பேசப்படுகிறது. காசில்லாத வாழ்க்கை என்பது கனவில் கூட வராது மாமனிதர்களுக்கு.

ஊரிலிருந்து நடு நிசி ஒன்றைரைக்கு போன் வந்திருந்தது. விடிகாலையில் பார்த்தேன். அழைத்தால், ”உன் பிணம் என் வீட்டில் கிடக்கிறது, வந்து தூக்கிட்டுப் போ” என்றார் மாமா. என் மூத்த அக்காவின் கணவர். எனக்கு தாய் மாமா. பிணமென்று சொன்னது என் அம்மாவை. அம்மாவுக்கு மூன்று மகள்கள் வேண்டாத உறவாக அடியேன். அம்மா எப்போதும் மகள்கள் மீது அதுவும் முதல் மகள் மீது பிரியமாய் இருப்பார்கள். முதல் மகளின் பசங்களின் மீது அவ்வாறே. தலைச்சன் பிள்ளை அல்லவா? பாசம் இருக்கத்தானே செய்யும்.

இடையில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சுமார் 15 வருடத்துக்கு முன்பு, மனைவி கர்ப்பமாக இருந்த போது, காலையில் ஒன்பது மணிக்குத்தான் உணவு தருவார் அம்மா. பால் கூட எட்டு மணிக்குதான். என் அக்காவின் மகள் கர்ப்பிணியாக இருக்கும் போது காலை ஆறு மணிக்கே பால் கறந்து, காய்ச்சி கொடுப்பாராம் அம்மா. மனைவி ஊருக்குச் சென்றிருந்த போது பார்த்து விட்டு என்னிடம் ஆற்றாமையால் சொன்னார். மனைவியிடம் ”அது பேத்தி,  நீ வேறு வீட்டுப் பெண் அல்லவா, அப்படித்தான், இதையெல்லாம் கண்டு கொள்ளாதே” என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தேன்.

அம்மா ஊரில் இருக்கும் போது கையில் அருவாளால் வெட்டிக் கொண்டார். காயமேற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது. சமைக்க முடியவில்லை. கடையிலிருந்தும், அக்கா வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டில் ஏதோ பிரச்சினை. வயித்தால் எடுத்து விட்டது. மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தும் சரியாகவில்லை. டீ ஹைட்ரேட் ஆகி உடல் சோர்வடைந்து விட்டது. டிஸ் எண்ட்ரி நிற்காமல் தொடர்ந்திருக்கிறது.

மாமா வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உடம்பு ரொம்ப மோசமாகி விட பயந்து போனார் மாமா. 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு அழைப்பு. அன்றைக்கே கார் கொண்டு வந்து, என் தங்கை வீட்டில் கொண்டு போய் அம்மாவைப் போட்டு விட்டு வந்து விட்டார். தங்கையாலும் முடியாமல் மறுநாள், பேராவூரணியில் இருக்கும் தர்ஷணா மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். எனக்கு போன். பல வேலைகள் கிடக்க மனதுக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.

நானும் நண்பரும் கோவையிலிருந்து கிளம்பினோம். மதியம் 12க்கு பேராவூரணி சென்று விட்டேன். அது எலும்பு முறிவு மருத்துவமனை. அங்கு பெட்டில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. படுக்கையில் புரண்டு கொண்டு உளறிக் கொண்டிருந்தார் அம்மா. அருகில் தங்கை கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார்.

”கிட்னி பெயிலியர் ஆகி விட்டது. இன்றைக்கு இரவு தாங்காது” என்றார் டாக்டர். ரிப்போர்ட் கொண்டு வரச் சொல்லி பார்த்தேன். ரிப்போர்ட் பக்கா நார்மல். டி ஹைட்ரேட் ஆகி இருந்ததைக் கண்டேன். பிபி இல்லை, சுகர் இல்லை, பிற எல்லாம் நார்மல். ஆஹா ஏதோ சமாச்சாரம் போலத் தெரிகிறதே, விட்டு வைத்தால் டாக்டர் நீலகண்டன் முடித்து விடுவார் போல என நினைத்துக் கொண்டு, சில சீன்களை போட்டு விட்டு, கோவைக்கு வந்து விட்டேன். அம்மாவுக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. நீர் உணவும், சத்தான உணவும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் எனத் தெரிந்தது.

மறு நாள், வீட்டுக்கு அனுப்பி விட்டார் டாக்டர் நீலகண்டன். ஒரு பில் இல்லை. வெறும் டோக்கன். அதில் அமவுண்ட் குறித்துக் கொண்டு, சீல் வைத்து தருகிறார்கள் இந்த மருத்துவமனையில். மக்களே, யாரையாவது முடிக்க வேண்டுமென்றால் இங்கு அழைத்துச் செல்லுங்கள். பரலோக பிராப்தி கேரண்டி. அப்படி ஒரு கைராசி டாக்டர் இவர். (உண்மையில் நடந்த சம்பவத்தை எழுதி இருக்கிறேன். பொய் இல்லை,புரட்டு இல்லை).

வீட்டுக்கு வந்தவுடன் எலும்பு ரசம் வைத்து, சாப்பாடு கொடுக்கச் சொன்னேன் சின்ன அக்காவிடம். கோவையிலிருந்து மீண்டும் ஊருக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றேன். நான்கு நாட்கள் அங்கு இருந்தேன், நேரத்துக்கு உணவு கொடுக்க ஆள் தயாராகி விட்டார். கோவைக்கு அழைத்து வந்து விட்டேன். அவர் பாட்டுக்கு நடக்கிறார். கண் தெரியவில்லை என்றார். அதற்கு சொட்டு மருந்து ஊற்றி வருகிறேன். இப்போது நன்றாகத் தெரிகிறது என்கிறார். நான் சுத்த சைவம். அம்மாவோ அசைவம். இதை மட்டும் தான் என்னால் சரி செய்ய முடியவில்லை. இருப்பினும் 86 வயதுக்கு சைவமே சரியானது என மனதை தேற்றிக் கொள்கிறேன்.

மாமாவுக்கும், அக்காவுக்கும் வயதாகி விட்டது. தங்கையோ அம்மாவுக்கு சிலாக்கியமில்லாத மகள். இரண்டாவது மகளோ எப்போதும் ஏதாவது வைது கொண்டே இருப்பவர். நேரத்துக்குச் சாப்பாடு, குளியல். அவருக்கு அவைகள் தன் மகள்களிடமிருந்து கிடைக்கவில்லை.

அவன் என்ன செய்கிறான், அவன் பொண்டாட்டி சொகுசாத்தானே இருக்கிறாள், கொண்டு போய் வைத்துப் பார்க்கட்டுமே என்ற பேராசை என் உடன் பிறந்தார்களுக்கு. ”இங்கே பாரு கோதை, உன் மாமியாளை இனி இங்கு கொண்டு வந்து விடாதே, என்னால் பார்க்க முடியாது” என கடுமையான உத்தரவு வேறு போட்டிருக்கின்றார்கள் அக்காக்கள்.

அம்மாவுக்குச் சோறிடுவதும், பணி செய்வதும் எவ்வளவு கொடுமையான பாவச் செயல் தெரியுமா?  அந்தக் கொடுமையை மகள்கள் செய்யலாமா? மகன் தானே செய்ய வேண்டும். வேண்டாத மருமகள் இப்போது தாயாய் மாறினாள். எம் மகள்கள் என்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்று ரகளை செய்த அம்மா, அமைதியாக இருக்கிறார். காலம் சொல்லிய பதிலை அவர் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அவருக்குத் தெரியவில்லை வயோதிகர்கள் காப்பகம் பற்றி.

காலையில் பேரன் பேத்தியுடன் அளாவளாவல், நேரத்துக்கு உணவு, மருந்துகள், குளியல், அமைதியான தூக்கம், பழங்கதைகள் என சுவாரசியமாய் செல்கிறது அவரின் வாழ்க்கை.

மூத்தமகளின் மகன் ”தேவசேனாதிபதி பொங்கலுக்கு வருகிறேன் என்றுச் சொன்னானே வந்து விட்டானா?” என்று நேற்று மனைவியிடம் கேட்டாராம்.

தலைச்சன் பிள்ளையாகப் பிறப்பதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?

* * *

Saturday, December 7, 2019

2019ம் ஆண்டின் கார்த்திகை தீப பெருவிழா அழைப்பிதழ்


எம் குரு சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமத்தில் வரும் செவ்வாய் கிழமை, 10.12.2019ம் தேதியன்று குருவின் குருவான சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழாவும், அதே நேரத்தில் மாலை வேளையில், கார்த்திகை தீப விளக்கேற்றி வழிபடும் விழாவும் நடைபெற உள்ளதால், ஆன்மீக அன்பர்கள் அனைவரையும் விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

காலை எட்டு மணி முதல் மாலை நான்கு முப்பது வரை தொடர் தியானம்.

காலையில் சிற்றுண்டியும், மதியம் மதிய உணவும் அளிக்கப்படும்.

முள்ளங்காடு - வீரகாளியம்மன் கோவில் வழியின் இடது புறம் செல்லும் சாலை வழி ஆசிரமத்துக்கு செல்லலாம். 

மேலும் விபரங்களுக்கு ஜோதி சுவாமிகளை (9894815954) அழைக்கவும்.


Tuesday, November 26, 2019

நிலம் (60) - பட்டா வழங்கப்பட்ட புறம்போக்கு நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.  அதற்கு முன்பாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லி விட்டு தொடர்கிறேன்.

முஸ்லிம் மதத்தினர் கண்டிஷனல் பட்டா நிலங்களை வாங்கலாமா? என்று ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். பட்டாவின் கண்டிஷன் என்ன என்பது தெரிந்தால் தான் வாங்கலாமா? வேண்டாமா? என்று சொல்ல இயலும். பொதுவாக கருத்துரு வழங்க இயலாது. ஆகவே பட்டாவின் நகலினை எனக்கு அனுப்பி வைக்கவும்.

இனி வெகு முக்கியமான இந்த விஷயத்துக்கு வருகிறேன்.

ஒருவர் குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தினைப் பட்டா மாற்றித் தரும்படி கேட்டுக் கொண்டார். இப்போதெல்லாம் ஆன்லைனில் எளிதாகப் பட்டாவுக்கு அப்ளை செய்து விட்டால் இரண்டொரு மாதங்களில் இன்ஸ்பெக்‌ஷன் முடிந்தவுடன் பட்டா மாறுதல் ஆகி விடும். கொஞ்சம் அலைச்சல் ஆகும். இவர் எதற்கு என்னிடம் பட்டா மாற்றித் தரும்படி வந்திருக்கிறார் என்று தெரியவில்லையே என நினைத்துக் கொண்டேன். ஆனால் கேட்கவில்லை.

அவர் கொடுத்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் புறம்போக்கு நிலத்தினைப் பட்டா பெற்ற உரிமையாளரிடமிருந்து, இவர் கிரையம் பெற்று இருப்பதும், அந்த நிலத்தின் பட்டா இவர் பெயருக்கு மாறவில்லை என்பதும் தெரிய வந்தது. 

’பலமுறை பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பம் செய்து, ஒன்றும் ஆகவில்லை, என்னால் அலைய முடியவில்லை, எனவே நீங்கள் செய்து தாருங்கள் என்றும், அதற்கு கட்டணமும் கொடுத்து விடுகிறேன் எனவும், கட்டணமாக அதிகத் தொகையையும் குறிப்பிட்டார்’. குடுமி சும்மா ஆடாது என்று புரிந்து போனது.

ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். சொல்வதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும். கொஞ்சம் அசந்தால், நேரமும் உழைப்பும் வீண். ரியல் எஸ்டேட் தொழிலில் நிதானம் ரொம்பவும் முக்கியம். நிதானம் தவறினால் படுகுழிக்குள் தள்ளி சுவடு தெரியாமல் மூடி விடுவார்கள். அந்தளவுக்கு நல்லவர்கள் இந்தத் தொழிலில் அதிகம்.

ஒரு புரோக்கர், அவருக்கு கமிஷன் கிடைக்காது எனத் தெரிந்தால் போதும், இன்னொருவரின் பிழைப்பில் செம்மண்ணை அள்ளிப் போட்டு விடுவார். 16 ஆண்டுகால அனுபவத்தில் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், எப்படியெல்லாம் சிக்க வைப்பார்கள் என்று தெரிந்து கொண்டேன். வேற லெவல் ஆட்களை இங்குப் பார்க்கலாம். கசங்கிய சட்டையுடன், படிக்காதவர்கள் போல, அப்பிராணிகளாய் இருப்பார்கள். மனசாட்சியே இல்லாமல் பிடுங்கி விடுவார்கள்.

அதுமட்டுமல்ல ஒரு சில, நிலத்தின் உரிமையாளர்களிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள முடியவே முடியாது. அக்ரிமெண்ட் போடுவார்கள், பணம் பெற்றுக் கொள்வார்கள். கிரையத்துக்கு ஆளைப் பிடிக்க முடியாது. அடித்துப் பிடித்து வீட்டுக்குச் சென்றால், ’எங்க வீட்டில் இந்த விலைக்கு விற்காதே, விற்றால் தூக்குப் போட்டுக் கொள்கிறேன் என்று ஒரே பிரச்சினை சார்’ என்பார்கள். இங்கு நான் சொல்வது ஒரே ஒரு பர்ஜெண்டேஜ் பிரச்சினை. பல வித முயற்சிகளுக்குப் பின் புரோக்கர் ஒருவர் நிலத்தினை விற்றுக் கொடுப்பார். அவருக்கு கமிஷன் கூட கொடுக்கமாட்டார்கள் ஒரு சிலர்.  இதெல்லாம் எளிய பிரச்சினைகள். இதை விட கொடூரமாக புதிய புதிய பிரச்சினைகள் வரும்.

பட்டா மாற்ற வந்தார் அல்லவா? அவருக்குத் தெரிந்திருக்கும் அந்த நிலத்தில் ஏதோ பிரச்சினை என்று. என்னிடம் இது ஏதோ எளிதான வேலை என்பது போலவும், நம்மால் அலைய முடியவில்லை என்பதால் தான், உங்களிடம் வந்திருக்கிறேன் என்பது போலவும் பேசினார்.

அய்யோ பாவம் என்று நினைத்தால் போதும். ஜபர்தஸ்தாக உட்கார்ந்து கொண்டு என்ன ஆச்சு சார்? என்று கேள்வி கேட்கலாம் அல்லவா? கொடுத்த பணமும் வேலை முடியவில்லை எனில் திரும்பக் கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் அவர்  வந்து இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.

அவரால் ஏன் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை என்பதை இப்போது பார்ப்போம்.


அந்தக் காலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் மேய்ச்சல் நிலம், மந்தை வெளி நிலம் என்று இரண்டு வகையான நிலங்கள் இருந்தன. சமீப காலமாக, அதை புறம்போக்கு நிலம் எனச் சொல்லி, அனுபோக பாத்தியம் ஏற்பட்டு விட்டதாக அறிக்கை கொடுத்து, அந்த நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்தவர்களுக்குப் பட்டா வழங்கினார்கள். ஒரு சிலர் அவ்வாறு பெறப்பட்ட பட்டாவை வைத்துக் கொண்டு, நில  உபயோகத்தின் தன்மையை மாற்ற கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுக்க ஆரம்பித்தனர். நிலத்தின் தன்மையை ஆராய்ந்த சென்னை அலுவலகம், மனுக்களைத் திருப்பி அனுப்பி வைத்தது.

ஒவ்வொரு ஊரிலும் ஏக்கர் கணக்கில் இருந்த மேய்ச்சல் நிலங்களையும், மந்தை வெளி நிலங்களையும், பல கில்லாடி வேலைகளைச் செய்து பட்டா பெறப்பட்டு மனை நிலங்களாக மாற்றப்பட்டதை அரசாங்கம் கண்டு பிடித்து அதற்கு தடை போட்டு விட்டது.

அதென்ன மேய்ச்சல் நிலம், மந்தை வெளி நிலம் என்று கேட்க தோன்றும். மேய்ச்சல் நிலம் என்பது கால் நடைகள் மேய்ச்சலுக்காக அரசால் விடப்பட்டிருக்கும் பொது உபயோகத்துக்கான புறம்போக்கு நிலமாகும். அதில் கால் நடைகள் மேயும்.

மந்தை வெளி நிலம் என்பது நத்தம் என்கிற பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக இருப்பதால், கால் நடைகளை ஓட்டிச் சென்று காலையிலும், மாலையிலும் இந்த இடத்தில் ஒன்று சேர்த்த பிறகு மேய்ச்சலுக்கும், வீட்டுக்கும் பிடித்துச் செல்வார்கள். அந்தக் காலத்தில் இது போல ஒன்று சேரும் மாடுகளை மேய்க்க ஆட்கள் தனியாக இருந்தனர். கால்நடைகள் ஒன்று சேர்க்கப்பட்டு மேய்ச்சலுக்கும், மாலையில் அவரவர் வீடுகளுக்கும் பிரித்து பிடித்துச் செல்ல பயன்படுத்திய நிலத்தினை மந்தை வெளி நிலம் என்று சொல்வார்கள். இந்த நிலத்தில் பொங்கல் விழா கொண்டாடுவார்கள். இந்த நிலத்தில் மாடுகளின் கழிவுகள் சேரும். அதனை விவசாயிகளுக்கு உரமாக விற்பனை செய்வார்கள். எனது கிராமத்தில் மாட்டுச் சாணத்திற்காக  ஏலம் விடுவார்கள். ஆள் வைத்து காலையிலும் மாலையிலும் சேரும் சாணத்தை சேகரம் செய்து, நெல் வயல்களுக்கு உரமாகப் போடுவார்கள்.

இந்த இரண்டு இடங்களும் அரசின் சொத்து. இந்த நிலங்களைக் கூட விடாமல் புறம்போக்கு என ஆவணங்கள் தயார் செய்து,பட்டா பெற்று விடுகின்றார்கள் ஒரு சிலர்.

இப்படியான நிலத்தில் ஒரு பகுதியை அவர் ஏமாந்து வாங்கி விட்டு, பட்டா பெற முடியாமலும், நிலத்தினை விற்றவரிடம் பணத்தினைப் பெற முடியாமலும் ஏமாந்து விட்டு, என்னிடம் வந்து நின்றார் அவர். இந்த விஷயம் அவருக்குத் தெரிந்து இருக்கும். தெரிந்து ஏன் என்னிடம் வந்தார் என்றால் ஏதாவது செய்து பட்டா மாற்றி தந்து விட்டால் லாபம் தானே என்ற நினைப்பு.

அவரிடம்,” இது மேய்ச்சல் நிலம் என்று உங்களுக்குத் தெரியும். அதனால் தான் பட்டா பெற முடியவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். அத்தனையும் தெரிந்து வைத்துக் கொண்டு என்னிடம் ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டேன்.

“அய்யோ...! சார்... ! எனக்குத் தெரியவே தெரியாது சார். இது மந்தை வெளி நிலமென்று ஊரில் ஒருத்தர் சொன்னார் சார். பல பேரு பட்டா வாங்கி இருக்காங்க சார். அதான் சார் உங்களிடம் வந்தேன்” என்று ஆரம்பித்தார்.

”அரசாங்கம் இந்த வகையான நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து விட்டது. இல்லை எனக்கு இந்த நிலம் தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், நீங்கள் வைத்திருக்குமிடத்தின் அளவுக்கு வேறு இடத்தில் நிலம் வாங்கி, அதை சுத்தப்படுத்தி அரசிடம் ஒப்படைப்புச் செய்த பிறகு, இந்த நிலத்துக்கு பட்டா பெறலாம். இது ஒன்று தான் வழி, வேறு வழி ஏதும் இல்லை” எனச் சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.

நிலம் (59) வது பகுதியில் பட்டாக்களின் தன்மையை ஆராய வேண்டுமென்று எழுதி இருந்தேன் அல்லவா? இதைப் போன்றதொரு நிலமாக இருந்தால் நிலம் வில்லங்கம் ஆகி விடும் அல்லவா? அதற்காகத்தான் லீகல் பார்க்கும் போது பட்டாவை ஆராய வேண்டும் என எழுதி இருந்தேன். இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இனி கிராமங்களில் மட்டும் அல்ல நகர்புறங்கள் கூட ஒரு காலத்தில் கிராமப்புறங்களாக இருந்தவை தான் என்பதையும், அந்தக் கிராமங்களில் மேய்ச்சல் நிலங்கள் இருந்திருக்கும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

மேய்ச்சல் நிலம் என எப்படிக் கண்டு பிடிப்பது என்று கேட்டீர்கள் எனில் அதற்கு தான் அடியேன் இருக்கிறேன். என்னைத் தொடர்பு கொள்ளவும். ஒரு சிலர் போனில் ஆலோசனை கேட்கின்றார்கள். ஆவணங்களைப் படித்துப் பார்க்காமல் நிச்சயம் என்னால் எதுவும் சொல்ல இயலாது. அவ்வாறு சொன்னால் அது தவறாகப் போய் விடும் ஆபத்து உள்ளது என்று ஒரு சில ஆலோசனைகள் வழங்கிய பிறகு தெரிந்து கொண்டேன். ஆகையால் ஆவணங்களைப் படிக்காமல் ஆலோசனை வழங்க இயலாது என்பதினை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேய்ச்சல் நிலம், மந்தை வெளி நிலம் என இருவகை நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* * *
ஒரு செய்தி உங்களுக்காக....!

மாடுகளைத் தெய்வம் எனச் சொல்லும் நம் பாரதப் பிரதமர் முன்பு முதலமைச்சராய் இருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள மேய்ச்சல் நிலங்களை, பாரதப் பிரதமரின் மலிவு விலை வீடுகள் கட்ட பயன்படுத்த ஒதுக்கும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி தர சட்டத்தில் திருத்தம் கொண்டு வர குஜராத் மந்திரி சபை முடிவு செய்திருக்கிறது என்கிறது கீழே இருக்கும் செய்தி. 

Saturday, November 23, 2019

நரலீலைகள் - எது நாவல்? (8)



முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒரு முகம் தெரியாத ஒருவர், ”நீ எழுதுவதெல்லாம் நாவலா?” என்று கேள்வி கேட்டிருந்தார்.  எது நாவல்? என்று கேள்வி கேட்டவருக்கு என்னிடமிருக்கும் ஒரு சில கேள்விகள் பதிலாய்.

’நீங்கள் வாழ்வது யாருடைய வாழ்க்கை? உங்கள் வாழ்க்கையா? இல்லை எவரின் வாழ்க்கை? நீங்கள் இந்த பூமியில் ஒரே ஒரு விஷயத்துக்காக இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று உங்களின் வேதம் சொல்கிறது. அது என்ன? உங்களின் பிறப்பின் நோக்கம் தான் என்ன?’ இதை நீங்கள் உணர்ந்து கொண்டால் நான் எழுதுவதும் நாவல் தான். கலைத்துப் போட்டு எழுத நானொன்றும் பின் நவீனத்துவப் படைப்பாளியும் இல்லை.  நாவலின் வடிவத்தை உடைக்க விரும்புகிறேன்.

என் மூளைக்குள் புகுந்திருக்கும் பல்வேறு குப்பை கூளங்களை நீக்கி, பரிசுத்தமாய், தேவகுமாரனாய், பரிசுத்த ஆவியாய், சுத்த ஆத்மாவாய், எல்லைகளற்ற பிரபஞ்சத்தை எனக்குள் உணர்வதற்காக, என்னைக் கட்டி ஆளும் அஸாஸில் எனும் மனதோடு போராடிக் கொண்டிருக்கும் பல துகள்களின் கூட்டிசைவுக் கரு நான்.

நாவல் என்றால் வடிவம் இருக்கும். வடிவம் என்றால் பொருள். பொருள் என்றால் உணர்வற்றது. உணர்வற்ற ஒரு பொருளை நான் உருவாக்க விரும்பவில்லை. எனது சொற்களுக்கு எங்காவது ஒரு காது கிடைக்கலாம். இல்லை கிடைக்காமலும் போகலாம். அது என் பிரச்சினை இல்லை. நான் விடுத்த சொற்களின் வீரம் பற்றியது அது. சொற்கள் மவுனத்தின் உடைப்பு என்பதையும், நான் சொல்ல விரும்புவது எனக்கே எனக்காக என்பதையும் நான் உணர்ந்து இருக்கிறேன். ஆகவே இந்த நாவல் உங்களுக்கானது அல்ல என்பதால் தயை கூர்ந்து நீங்கள் விலகி விடலாம். 

கேள்விகள் குறிகள் போல. அவை உம்மைத் தாக்கி அழித்து விடும். கேள்விகளின் பதில்கள் புரிதல் இல்லாத இடத்தில் சுயமோகம் கொள்ள வைக்கும். அகங்காரத்தின் தொனியில் மனித தன்மை இழக்க வைக்கும். ஆகவே விலகி விடுங்கள் என்னிடமிருந்து.

நீங்கள் ரசிக்க வேண்டுமென்பதற்காகவோ, உங்களிடமிருந்து எனக்கு பொருளோ, வேறு எதுவும் தேவை இல்லாத போது, நீங்கள் எனது நாவலைப் படிக்க வேண்டிய நிர்பந்தத்தை, நான் உங்களுக்கு தரவில்லை. 

நீங்கள் என்னை எளிதாகக் கடந்து போகலாம். உமது நாட்களை, இந்தப் பூமியில் பிரக்ஞையற்ற தன்மையாக நீங்கள் கழிப்பது போல. அதனால் எனக்கு துன்பம் இல்லை. இன்பமும் இல்லை. இன்பம் என்பது வேதனை மண்டியவை என நான் அறிந்து கொண்டிருக்கிறேன். 

எனது பெயர் தங்கவேல். தங்கவேல் இந்த உலகிற்கு தரப்போகும் இரண்டு சொற்கள் உண்டு. அந்தச் சொற்களால் தான் இவ்வுலகம் மேன்மை பெறும். உலகின் இயக்கம் அந்தச் சொற்களால் தான் உய்வு பெறும். உயர்வு பெறும். மனித உயிர்கள் மகிழ்ச்சியாய் வாழும். எனக்கு முன்னாள் வந்தவர்களும், வரப்போகின்றவர்களும், வந்து கொண்டிருப்பவர்களும் சொல்லிய, சொல்கிற, சொல்லக் கூடிய சொற்கள் தான் அவைகள். சொற்களில் என்ன இருக்கிறது மாற்றம் புரிதலுக்கு உட்படாத வரை? 

எவராலோ எழுதி வைக்கப்பட்ட குப்பைக் கூளங்களுக்கு அடிமையாக என்னால் வாழ இயலாது. எனது உலகம் வேறு. நான் பெற்றவை வேறு. பெற்றுக் கொண்டிருப்பவை வேறு. ஆகவே என்னைப் போன்ற தீவிரவாதியிடமிருந்து, அக்கிரமக்காரனிடமிருந்து, அயோக்கியனிடமிருந்து விலகி ஓடி விடுங்கள். 

ஏனென்றால் நெற்றியின் சுவடுகள் காய்த்து விடுவது தடுக்கப்பட்டு விடும் என நிமித்தம் கேட்கலாம். அந்த நிமித்தம் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரானதாய் இருக்கலாம். அதனால் நடுக்கம் உண்டாகலாம். பயம் ஏற்படலாம். சில்லிடும் உணர்ச்சி ஊசி போல குத்தலாம். கோபம் வரலாம். உடம்பு அதிரலாம். 

உண்மை என்னவென்று தெரியாத. அறியாமை விலகாத வரை, சித்தப் பிரமை விலகாத வரை என் எழுத்துக்கள் கோபம் கொள்ள வைக்கும் தன்மை உடையவைதான். 

உங்களைப் பொறுத்த வரை கரைகள் உடையவை ஆறுகள். எல்லைகள் உடையவை நாடுகள். எனக்கு கரைகளும் இல்லை, எல்லைகளும் இல்லை. நான் உங்களுக்கு முட்டாளாய் தெரிவேன். அறிவிலியாய் தென்படுவேன். என்னால் இந்த உலகிற்கு எந்தப் பயனும் இல்லாதவனாய் புரியப்படுவேன். பூமியில் புற்களுக்கு என்ன வேலை?

இப்படிக்கு நரலீலைகளின் நாவல் ஆசிரியன் கோவை எம் தங்கவேல்.

* * *

டிவியில் தங்கவேல் பேசிக் கொண்டிருந்தான். 

மக்கள் சேவையே மகேசன் சேவை, எனக்குப் பசிக்குச் சோறு போடுங்கள். உங்களுக்காக, உங்களின் குழைந்தைகளுக்காக, உங்களின் குடும்பத்திற்காக, உங்களுடன் இணைந்து பணி புரிய காத்து இருக்கிறேன். என் வீட்டு மின்சாரக் கட்டணத்தைக் கட்டுவாயா? என்று கேட்காதீர்கள். 

நீங்கள் உழைக்கும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை, உங்களிடமிருந்து பிடுங்கித் தின்பதை தடுத்துப் பாதுகாத்திட உங்களுக்காக உழைத்திடுவேன் எனச் சொல்கிறேன். உழைப்பின் ஊதியம் மொத்தமும் உங்களுக்கு கிடைத்தால் உங்களின் கனவுகள் நிறைவேறும்.

ஆனால் உங்களுக்கு ஊதியம் முழுமையாகக் கிடைப்பதில்லை. உங்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை 95 சதவீதம் எவனோ ஒருவன் தின்று கொழுக்கிறான். கிடைக்கும் 5 சதவீதத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவர்கள், வரிகள் என்ற பெயரில் 2 சதவீதத்தைப் பிடுங்கி, தனக்கும், தன் குடும்பத்துக்கும், பிடுங்க உதவி பெறும் ஊழியக்காரர்களுக்கும் பங்கு கொடுத்து விடுகிறார்கள். 

மிச்சமிருக்கும் 3 சதவீதத்தையும் அவர்கள் மாற்று வழியில் பிடுங்கி உங்களை ஏழைகளாக, கனவுகளோடு போராட வைத்து, முடிவில் ஏக்கத்துடன் மரணிக்க வைக்கிறார்கள். உங்கள் கனவுகளை, உங்களின் வாரிசுகளின் மீது சுமத்தி விடுகின்றீர்கள்.

அவர்களின் ஊதியமும் பிடுங்கி தின்னப்படுகிறது. அவர்களின் கனவுகளை அவர்களின் வாரிசுகளிடம் ஒப்படைத்துப் போய் விடுகின்றார்கள். இது காலம் காலமாய் நடந்து வரும் அக்கிரம். இதை எவரும் உணர்ந்து கொள்வதாய் இல்லை. 1 சதவீதத்தில் இருக்கும் அவர்கள், உங்களிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கித் தின்று விடுகின்றார்கள். உங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. உங்களிடமிருப்பவை எல்லாமும் அவர்களுடையவை. உங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கின்றார்கள். 

உண்மை என்ன என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உணர்ந்து கொள்ள முயலுங்கள்.

* * *

டிவியில் இருந்த கவனத்தைத் திருப்பி, எதிரே உட்கார்ந்திருக்கும் டி.ஜி.பி.ராஜ்குமார் மீது வெற்றுப் பார்வையை வீசினார் சி.எம்.

“யாருய்யா, இந்தத் தங்கவேல்? கேட்கும் எனக்கு நெஞ்சுக்குள் ஊசியைச் சொருகிய மாதிரி இருக்கு?”

“எனக்கும், அப்படித்தான் இருக்கிறது சார். உண்மை அதுதானே? அதைத்தான் அவர் சொல்கிறார். மக்கள் கூட்டம் கூடுகிறது அவரின் பேச்சைக் கேட்க. ஆரம்பத்தில் பத்து இருபது எனக் கூடினார்கள். இப்போது பத்தாயிரம், இருபதாயிரம் என கூடுகிறார்கள். அவர் பொத்தாம் பொதுவாகத்தான் பேசுகிறார். ஆனால் அவ்வளவும் உண்மை”

“நம் அரசு அவருக்கு இணக்கமாக இருக்கும்படி, அவரின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு போடுங்கள். முடிந்தால் அவரின் வீட்டுக்கு நான்கைந்து காவல்காரர்களைப் போடுங்கள். அரசு அவரைப் பாதுகாக்கிறது என்று மக்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்யுங்கள் டி.ஜி.பி”

“நிச்சயம் சார், இவரின் பேச்சுக்களை மக்கள் புரிந்து கொள்ள முயன்றால், அடுத்த ஆட்சியில் நீங்கள் ஜெயிலில் கிடப்பீர்கள் சார்”

“ஆமாய்யா, அதான் எனக்கும் பயமாயிருக்கு”

* * *

”மாயாண்ணே...! மாயாண்ணே...!”

கூக்குரலிட்டான் சநி என்கிற சந்து.

நாவல் என்பது ஒரு பொருள். அது பிரக்ஞை அற்றது. மாயனை நாவல் ஆசிரியன் பொருள் எனச் சொல்லி விட்டான். மாயனுக்கு கோபம் கொப்பளித்து வருகிறது. சந்துவின் கூக்குரல் மாயனுக்கு கேட்கிறது. 

* * *

அம்மே நாராயணி !
தேவி நாராயணி ! !
லக்‌ஷுமி நாராயணி !!!

* * *

தொடரும்





Wednesday, November 20, 2019

நிலம் (59) - நில உரிமைக்கான பட்டாக்களின் வகைகள்

நண்பரொருவர் “சார் சொத்து உரிமைக்கு பட்டா மட்டும் இருந்தால் போதுமா? பத்திரம் தேவையில்லையா?” என்று கேட்டார். இது பற்றி பல முறை எழுதி இருந்தாலும் பட்டாக்களைப் பற்றி எழுத வேண்டுமென்பதால் இந்தப் பதிவு. 

ஆரம்பகாலத்தில் அதாவது பிரிட்டிஷ்ஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில் பத்திரங்கள் என்று எதுவும் இல்லை. நில உடமைப் பதிவு 1850ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. பின்னர் நில அளவை மூலம், நில உரிமைக்கானப் பதிவுகள் 1900, 1955 மற்றும் 1983ம் ஆண்டுகளில் தொடங்கி அரசின் நில உடமைப் பதிவேட்டில் உரிமையாளர்கள் பெயர்கள் பதியப்பட்டன.

1850ஆம் ஆண்டின் நில உரிமைப் பதிவேட்டிற்குப் பிறகு, இந்தியப்பதிவு சட்டம் 1908ன்படி பத்திரப்பதிவு தொடங்கப்பட்டிருக்கலாம். அதற்கு முன்பாக, நில உடமைப் பதிவேட்டில் உள்ளபடி நில உரிமை மாற்றங்கள், அந்தந்த கிராமக் கணக்காளர் மூலம் உரிமை மாற்றம் செய்யப்பட்டன என்கிறார்கள். பத்திரப்பதிவு வந்த பிறகு, நில உரிமை மாற்றத்திற்கான மூலம் பத்திரங்கள் என்று உறுதி செய்யப்பட்டன. பெரும்பான்மையான நில உரிமை மாற்றம் ,பத்திரங்கள் மூலம் தான் தற்போது செய்யப்படுகின்றன. இருப்பினும் சில நிலங்களின் உரிமை மாற்றங்கள் பட்டாக்களின் மூலமாக செய்யப்படுகின்றன. 

பட்டாக்களின் மாற்றங்கள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டிருக்கிறன. உரிமையை விட்டுக் விடுதல், ஒப்படைப்பு, அரசால் வாங்கப்பட்டவை, தனி நபரால் வாங்கப்பட்டவை, நீதிமன்ற ஆணையின் பெயரில் விற்பனை அல்லது மாற்றம், கொடையினால் பெறப்பட்டவை, வாரிசுகளால் உரிமை மாற்றம் செய்யப்பட்டவை, 12 ஆண்டுகளுக்கும் மேல் அனுபோகப் பாத்திய ஏற்பட்டவை, வாரிசு இன்றி அரசுக்கு சேர்ந்தவை, உட்பிரிவு செய்தல், பரிவர்த்தனை செய்தல், பாகப்பிரிவினை ஆகியவைகளின் மூலம் நிலத்தின் உரிமை மாற்றங்கள், பட்டாக்களில் பதிவு செய்யப்படுகின்றன என்பதினை கவனத்தில் வைத்துக் கொள்ளவும்.

ஒரு சொத்து வாங்கப்படும் போது, அதன் உரிமை மாற்றங்கள் எப்படியானவை என்று கண்டுபிடித்து, அதன் உரிமை மாற்றம் மிகத் துல்லியமாக ஆராயப்பட வேண்டும். இதைத்தான் அடியேன் செய்கிறேன். எந்தெந்த ஆவணங்கள், யாரிடம் இருக்கும் என்ற அனுபவ அறிவினால், சொத்தின் உரிமை மாற்றத்துக்கான ஆவணங்களைப் பெற்று, ஆராய்ந்து பின்னர் தான் லீகல் எப்படி இருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறேன். ஐந்து செண்ட், பத்து செண்ட் நிலங்களுக்கு அதாவது டிடிசிபி அப்ரூவல் மனைகளுக்கு என தனியான ஆராய்வுகள் உண்டு. 

ஒரு சிலர் கிராமம், புல எண்களைக் கொடுத்து, “சார், இந்தச் சொத்தினை வாங்கலாமா? வேண்டாமா? எனச் சொல்லுங்கள்” என போனில் கேட்பார்கள். அவர்களுக்கு என் பதில் மெளனம். இல்லையெனில் என்னால் இயலாது என்பதுதான். நான் ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.

பட்டாக்கள் பொதுவாக 
  1. தனிப்பட்டா 
  2. கூட்டுப்பட்டா
  3. 2சி (மரம் வளர்க்க) பட்டா
  4. நத்தம் பட்டா
  5. கண்டிஷனல் பட்டா (பஞ்சமி, எஸ்.ஸி/எஸ்.டி/, மலைவாழ் மக்கள் பட்டா இப்படிப்பல இனங்கள்)
  6. பி மெமோ பட்டா (புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளருக்கு வழங்கப்படுபவை),
  7. டி.கே.டி.(நிலமில்லா ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கண்டிஷனல்)பட்டா

என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட பட்டாக்களின் மூலமாக உரிமை மாற்றங்கள் பதியப்படுகின்றன.

தனிப்பட்டா என்பது ஒரு உரிமையாளருக்கு உரிமையான மொத்த நிலமும் தனியாகக் குறிப்பிடப்பட்டு வழங்குவது.

கூட்டுப்பட்டா என்பது பல உரிமையாளர்களுக்கு உரிமையான பல புல எண்களோ அல்லது ஒரே புல எண்ணோ கொண்ட மொத்த நிலத்தின் அளவு குறிப்பிடப்பட்டு வழங்குவது.

2சி பட்டா என்பது அரசின் புறம்போக்கு நிலத்தில் மரங்கள் வளர்க்க வழங்கப்படுவது.

நத்தம் பட்டா என்பது அரசால் நத்தம் என வகைப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படுபவை.

கண்டிஷனல் பட்டா என்பது பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

ஷெட்யூல்ட் கேஸ்ட் (SC) இனத்தினருக்கு வழங்கபடுவை, இராணுவத்தாருக்கும் வழங்கப்படுபவை, சிறப்பு வீட்டுமனை திட்டத்தின் கீழ் வழங்கப்படுபவை, நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்படுபவை, தியாகிகளுக்கு வழங்கப்படுபவை, அரசே நிலம் வாங்கி எஸ்.சி பிரிவினருக்கு வழங்கப்பட்டவை, பஞ்சமி (Depressed Class) நிலப்பட்டாக்கள் என மேலே குறிப்பிட்ட பட்டாக்க்கள் மூலம் நில உரிமையாளர்கள் ஆக்கப்படுவார்கள். ஆனால் அந்தப் பட்டாக்களில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும். அந்த நிபந்தனைகள் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லாமல் கண்டிஷனல் பட்டா நிலங்களைக் கிரையம் பெறக்கூடாது.

தற்போது என்ன செய்கிறார்கள் என்றால், கணிணி பட்டா வந்தவுடன் அதைக்காட்டி கிரையம் செய்து விடுகிறார்கள். அவ்வாறு கிரையம் பெற்ற பலர் இன்றைக்கும், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இயலாமல் திகில் அடைந்து கிடக்கின்றார்கள். 

நாட்டின் உயரிய பதவி வகிப்பவரின் ஆலோசகர் ஒருவர் இப்படித்தான் சிக்கி இருக்கிறார். நில ஆவணங்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றம் செய்ய முற்பட்டால் பின்னாட்களில் மாற்றம் செய்தவர்கள் சிக்கிக் கொள்வார்கள் என்பதால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக இன்று வரைக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய இயலவில்லை.

பி மெமோ பட்டா என்பது ஊரின் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவருக்கு வழங்கப்படுபவை. அது பி மெமோ ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

டி.கே.டி பட்டா என்பது நிலம் இல்லா மலை வாழ் மக்களுக்கு அரசால் வழங்கப்படுபவை. ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் டி.கே.டி பட்டாக்கள் அதிகம். இங்கு நிலம் வாங்கும் போது, நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெற்றால் நிம்மதியாக இருக்கலாம்.

சொத்து வாங்கும் முன்பு நிலத்தின் பட்டாவை பரிசீலனை செய்வது மிகவும் சாலச் சிறந்தது என்று இப்போது அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இது தவிர இன்னும் ஒரு சில பட்டாக்கள் உண்டு. அதையெல்லாம் பொதுமைப் படுத்தி தான் விவரித்திருக்கிறேன். பட்டாக்கள் பற்றி இந்த விஷயங்கள் போதுமானவை.

குறிப்பு: ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வகையான லீகல் பார்க்க வேண்டும். இந்தக் குறிப்புகளை வைத்து எந்த முன் முடிவுக்கு வர வேண்டாம் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

விரைவில் தர ஏக்கர் என்றால் என்ன என்பது பற்றிய விரிவான பதிவினை எழுத இருக்கிறேன். 

இந்த தர ஏக்கர் விபரம் தான் எதிர்காலத்தில் நிலம் வாங்குவதற்கு உண்டான முக்கியமான காரணியாக இருக்கப் போகிறது. நில உச்ச வரம்புச் சட்டத்தின் படி, பெரும் சொத்துக்காரர்களிடமிருந்து நிலத்தை அரசு கையகப்படுத்தப் போகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க...! வளமுடன்....!

மேலும் ஒரு குறிப்பு: 50 ஏக்கர் நிலம் வாங்கப் போகிறேன், பண்ணையம் செய்யப் போகிறேன் என்று திட்டமிடுபவர்கள் சரியான திட்டமிடல் செய்த பிறகு வாங்குங்கள். இல்லையெனில் நிலம் உங்களை விட்டு போய் விடும்.