வீட்டிற்குப் பின்புறம் வடமேற்கு மூலையில் கிணறு இருக்கும். பத்தடியில் நீர் நிறைந்திருக்கும். மழைக்காலங்களிலோ தண்ணீர் ததும்பி வழியும். விடிகாலை ஐந்து மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, வாளியை கிணற்றுக்குள் விட்டு, தண்ணீரை இறைத்து இறைத்து அருகில் இருக்கும் மண் பொக்கையில் நிரப்பி வைப்பேன்.
நான்கு படப்பைக் கற்கள் அருகருகே பாவி இருக்கும். அதன் மீது அமர்ந்து தான் குளிப்பேன். குளிக்கும் தண்ணீர் வாய்க்கால் மூலம் காசா லட்டு மாமரத்தின் அடியில் பாயும்.எனக்குப் பிடித்த சோப்பு மைசூர் ஜாஸ்மின். மல்லிகை மணம் வீசும். வெது வெதுப்பான கிணற்று நீரில் குளித்தால், உடம்பும், மனதும் எல்லையில்லா ஆனந்தத்தில் மிதக்கும்.
எனது பால்ய காலத்தில் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் கிணற்று நீரைத்தான் நான் அதிகம் பயன்படுத்தி வந்தேன்.
ஒரு முறை கிணற்றுக்குள் பாம்பு விழுந்து விட்டது. அதை எடுக்க வீட்டு வேலைக்காரர் போஸால் முடியவில்லை. பாம்பு பிடிக்கும் மாரிமுத்துவை அழைத்து வந்தார் தாத்தா. தட்டுக்கூடையில் வைக்கோலைப் பரப்பி நான்கு புறமும் கயிற்றினைக் கட்டி, தாம்புக் கயிறு மூலம் கிணற்றுக்குள் விட பாம்பு வசதியாய் கூடையில் வந்து விட்டது. மேலே கொண்டு வந்து, அதற்கு மேலோக பிராப்தி கொடுத்தார்கள்.
அதன்பிறகு, கிணற்றடிக்குச் செல்லுகையில் பாம்பு நினைவு வந்து விடும். கொஞ்ச நாள் தான். பயம் தெளிந்து விடும்.
கிணற்றுக்கு வடக்கே நானும் எனது மச்சானும் இணைந்து தோட்டம் ஒன்றினை உருவாக்கினோம். தினந்தோறும் தோட்டச்செடிகளுக்கு தண்ணீர் இறைத்து ஊற்றுவோம். தக்காளிச் செடியில் தக்காளி காய்த்து பழுத்து வருகையில் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம் கிளம்பும். அக்காவிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் சமையலுக்குப் பயன்படுத்துவார். மீன் குழம்பில் மிதக்கும் அந்த தக்காளியை ஆவலோடு எடுத்து சாப்பிடுவேன். இம்மாதிரியான சந்தோஷங்களை அளித்த அந்தக்கால வாழ்க்கையை இன்று என குழந்தைகளுக்கு என்னால் அளிக்க முடியவில்லையே என்ற நீங்காத வருத்தம் என்னை விட்டு நீங்கவில்லை. கிராமங்களில் இன்றைக்கெல்லாம் கிணறுகள் மறைந்து போய், ஆழ்துளைக்கிணறுகள் வந்து விட்டன. சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, எங்காவது கிணறுகள் தென்படுகின்றனவா என்று தேடிப்பார்த்தேன். பார்க்க முடியவில்லை. என் பிள்ளைகளுக்கு கிணறுகள் என்றால் என்ன என்பதைக் காட்டக் கூட முடியவில்லை.

இன்றைய காலத்தில் பைப்பில் கொட்டும் நீரை, மக்கில் அள்ளி தலையில் கொட்டிக் கொண்டு வருகையில், கிணற்று நீரும் அதன் வெது வெதுப்பான தன்மையும் மனதோடு வந்து செல்வதை மறக்க முடியவில்லை. தாயின் கதகதப்பை அந்தக் கிணற்று நீர் தந்ததை எப்படித்தான் மறப்பது.
* * *