குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, December 31, 2016

கரையை நோக்கிப் பயணிக்கும் அலைகள்

அலைகள் - இந்த வார்த்தையைப் படித்தவுடனே உங்களுக்குள் தோன்றி இருக்கும். 

உயரமான, தாழ்வான, மிகத்தாழ்வான, மிக மிக உயரமான அலைகள் கடற்கரை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு அலைகளும் கரையை அடைந்து ஆக்ரோசமெல்லாம் இல்லாமல், வெறுமென நீராக சலம்பி பின் மீண்டும் கடலுக்குள்ளே சென்று மறைந்து விடுகின்றன. அடுத்த அலை வருகிறது. அதன் பின்னாலே அலைகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே கரையைத் தேடி வந்து கொண்டே இருக்கின்றன. கரை வந்தவுடன் சிறுத்துப் போய் ’உஷ்’ என்றாகிறது. பின்னர் கடலுக்குள் சென்று வந்த இடம் தெரியாமல் மறைந்து போகிறது.

காற்று விடாமல் அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. அலைகள் கரையை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. மனித வாழ்க்கையும் அலைகளும் ஒன்று தான். 

புகழ், பதவி, அதிகாரம் இருந்தும் தன் உடலை தான் சொன்னபடி கேட்க வைக்க இயலாமல் ஒருவர் கரைந்தே போனார். உலக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவரின் மகளின் வாழ்க்கை இன்று கோர்ட்டில் வந்து நிற்கிறது. அவர் நடத்தி வரும் பள்ளி ஆசிரியர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்ற செய்திகள் வருகின்றன. இதெல்லாம் எதைச் சுட்டிக் காட்டுகிறது? 

ஓடம் தண்ணீரில் தான் செல்ல முடியும். அந்த தண்ணீர் தான் ஓடத்தை வழி நடத்தும், அந்த ஓடம் தண்ணீருக்குள் மூழ்கி விட வேண்டுமா? இல்லை கரையைத் தொட்டு விட வேண்டுமா என்பதை முடிவு செய்வது காற்றும், தண்ணீரும் தான். அந்த ஓடம் எந்தப் பக்கமாக பயணிக்க வேண்டும் என்பதை மட்டுமே நாம் முடிவு செய்ய இயலும். ஆனால் பயணம் செய்தே ஆக வேண்டும். தண்ணீருக்குள் இருக்க முடியாது. ஓடம் சென்று சேர வேண்டிய இடம் கரை.

அதிகாரமும், பணமும், புகழும் எந்த மனிதனுக்கு எதையும் தரப்போவதில்லை. வெற்று மாயை! பணமும் வந்த இடம் தெரியாமல் சென்று விடும். புகழோ - வெற்றுக்கூச்சலும், வெறும் ஈகோவும் தான் தரும். அதிகாரம் அயோக்கியத்தனம் செய்ய வைக்கும். ஒன்றுமே இல்லாத வாழ்க்கையில் எல்லாமும் இருப்பதாக நினத்துக் கொண்டிருப்பது ஏமாளித்தனமானது.

பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தனியானவன் தான். அவனவன் வலி அவனுக்கு மட்டுமே. அதை பிறர் அனுபவிக்க முடியாது. எத்தனை உற்றார் உறவினர்கள் இருந்தாலும் தான் என்ன? வலியை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்களா? அருமை பெருமையாக வளர்த்த அம்மா அப்பா மறைந்தவுடன் அவர்களுடனேவா பிள்ளைகள் இறந்து போகின்றார்கள்? இல்லையே? உறவுகள் நிதர்சனம் என்று நினைப்பது முட்டாள்தனம். உறவுகளின் பயன் பாதுகாப்புக்கு மட்டுமே.

2016 ஆம் ஆண்டின் கடைசி நாள் இன்றைக்கு. கடந்து வந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். என்ன செய்ய வேண்டுமென்ற திட்டமில்லாமல் வாழ்ந்த வாழ்க்கைப் பாதைக்கு ஒரு வழி கிடைத்தது. இந்தப் பாதையில் சென்றால் வாழ்க்கைப் பயணத்தை சிரமமில்லாமல் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை பிறந்த வருடம் இது. கணிணி, ஏற்றுமதி இறக்குமதி, டிரேடிங்க், விளம்பரத்துறை என்று அலைந்து கொண்டிருந்தவனுக்கு இதுதான் உன் பாதை என 2016 காட்டிக் கொடுத்திருக்கிறது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை மிக அழகாகப் புரிய வைத்தது 2016. இந்த வயதில் இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த வரமாகவே நினைக்கிறேன்.

உறவுகள், நட்புகள், வியாபாரங்கள் என்றால் என்ன அதன் முழு அர்த்தம் என்ன? மனிதர்களை படிப்பது எப்படி? என்றெல்லாம் அறிந்து கொள்ள முடிந்த வருடம் 2016. எந்த ஒரு உறவும், நட்பும், வியாபாரமும் பலனின்றி இல்லை என்பதினை சம்மட்டியால் அடித்துச் சொல்லியது 2016.

ஆன்மீக வாழ்க்கையில் இதுவரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத சூட்சுமான பாதையை அனுபவத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. தொட்டும் தொடாமலும், விட்டும் விடாமலும், இருந்தும் இல்லாமலும் இருப்பதைப் பற்றி பாடமே கிடைத்தது இந்த 2016ல். நோக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்பதை அட்சர சுத்தமாக அதன் சூத்திரத்தை புரிந்து கொள்ள வைத்திருக்கிறது 2016. 

நானும் ஒரு அலைதான். கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கிறேன். நீங்களும் ஒரு அலைதான். நீங்கள் எனக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ கரையைத் தேடி விரைந்து கொண்டிருக்கின்றீர்கள். நாம் அனைவரும் சென்று சேரும் இடம் கரைதான். கரையில் உங்களின் உயரமும், எனது உயரமும் கலைந்து நாம் நீராகி விடுவோம். கடலுக்குள் கலந்து விடுவோம்.

விடைபெறட்டும் 2016. அது வந்த வேலையை நிறைவாகச் செய்து விட்டு செல்லப்போகின்றது. அதற்கு நாம் விடை கொடுப்போம்.

அடுத்து வரப்போகும் 2017ல் நாம் அன்பாயிருப்போம், அமைதியாக இருப்போம். ஆனந்தமாக இருப்போம். 

2017ஆம் ஆண்டில் எதார்தத்தை உணர்ந்து கொண்ட வாழ்க்கையினை வாழலாம் வாருங்கள்!  கோபம் வேண்டாம், பொறாமை வேண்டாம், சூது வேண்டாம். எதனாலும் நம் வாழ்க்கை சிறப்படைய போவதில்லை. அன்பாயிருத்தலாலும், அமைதியாக இருத்தலாலும் நாம் அடைவது ஆனந்தமே!

Sunday, November 6, 2016

மாரிமுத்து திரையரங்க நினைவலைகள்

பிறந்து வளர்ந்த ஊர் ஆவணம். ஆனால் என் தகப்பனார் ஊர் நெடுவாசல். உறவினர் பிரச்சினைகளால் அடியேனால் மாமா வீட்டில் தான் பிறந்து வளர முடிந்தது. ஆவணத்தில் முக்கியமான இரண்டு தெருக்கள் இருக்கின்றன. ஒன்று வடக்குத் தெரு, மற்றொன்று தெற்குத் தெரு. இந்த தெருக்கள் பகுதியில் தான் பெரும்பான்மையான தேவர் இன மக்கள் வாழ்கின்றார்கள். மேலத்தெருவில் முஸ்லிம் மக்கள் அதிகம். ஊரின் கிழக்கே வயல்களும் மேற்கே தோட்டங்களும் உள்ளன. ஊரின் மேற்கே கைகாட்டியின் அருகில் உள்ள அரசு முந்திரித் தோப்பு இருந்தது. இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.

ஊரின் வடக்கே மாரிமுத்து திரையரங்கம் ஒன்று இருந்தது. எனது பள்ளித் தோழன் மாரிமுத்துவின் உறவினர் அவர்கள் தான் உரிமையாளர். தெற்கு வடக்கு நீளமான கொட்டகை. இடது பக்கம் பஜ்ஜிக்கடை. வலது பக்கம் டிக்கெட் கவுண்டர். இடது பக்கமாய் பெண்களுக்கான டிக்கெட் கவுண்டர் இருக்கும். சைக்கிள் ஸ்டாண்டு வெளியில் உள்ள கொட்டகைக்குள் இருக்கும். கைகாட்டியில் ஸ்டார் தியேட்டர் இருந்தது. ஆனால் அதன் சத்தம் சகிக்காது. மாரிமுத்து தியேட்டரில் சவுண்ட் வெகு துல்லியம். கைகாட்டியில் தங்கம் தியேட்டர் என்று நினைக்கிறேன். அது ஒரு நாள் லாரியில் வைக்கோல் ஏற்றிச் சென்ற போது கரண்டுக் கம்பியில் உரசி தீப்பற்றியதும், லாரி டிரைவர் நேராக அந்த தங்கம் தியேட்டருக்குள் கொண்டு போய் நிறுத்தி விட்டு ஓடி விட்டான். தங்கம் தியேட்டர் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. நல்லவேளை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொஞ்ச நாள் கரியும் கட்டையுமாக தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பிறகு சிமெண்ட் போட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் கைகாட்டி ஸ்டார் தியேட்டர்.





( நன்றி படங்கள் உதவி : கடல் பயணங்கள் சுரேஷ்குமார்)

மாரிமுத்து தியேட்டருக்குள் மூன்று இருக்கை பகுதிகள் இருந்தன. திரையின் முன்பு மண் கொட்டியிருக்கும். அடுத்து பெஞ்ச், அதை அடுத்து மரச்சேர்கள் போடப்பட்டிருக்கும். அடியேன் அம்மாவுடன் எம்.ஜி.ஆர் படம் பார்க்க சிறு வயதில் செல்வதுண்டு. சண்டைக்காட்சிகள் என்றால் எதிரில் அமர்ந்திருக்கும் பெண்களின் முதுகில் நானும் எம்.ஜி.ஆராகி குத்துக்கள் விடுவேன் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். சிவாஜி படம் பார்க்கப் போவார்கள். அழுக்காட்சி என்றால் எனக்கு அலர்ஜி. இதெல்லாம் அம்மா  சொல்லித்தான் தெரியும். நினைவில் இல்லை. அம்மாவுக்கு எந்த நடிகரின் படம் பிடிக்கும் என்று இதுவரையிலும் கேட்டதில்லை. 

வயலில் வேலை செய்பவர்களும், உழைப்பாளிகளும், சம்சாரிகளும் சற்றே ஆசுவாசப்படும் இடமாக மாரிமுத்து திரையரங்கம் இருந்தது. மண்ணில் துண்டை விரித்து தலையணை போலச் செய்து திரையின் முன்பாகப் படுத்துக் கொண்டே பலரும் திரைப்படத்தைப் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். நல்ல படமாக இருக்க வேண்டும். குடும்பத்தோடு செல்ல வேண்டும். அப்போதுதான் திரைப்படம் பார்க்க முடியும். தனியாக செல்ல வாய்ப்பே இல்லை. மாரிமுத்து திரையரங்கில் உள்ள டிஃபன் கடையின் முறுக்கு, இட்லி ரொம்பப் பிரபலம். சுவை அள்ளும். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அந்த பாக்கியம் கிட்டும். ஒரு திரைப்படம் சுமாராக ஒரு மாதமாவது ஓடும். இரண்டு காட்சிகளுக்கும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.

தீபாவளி சமயத்தில் மதியம் போல ஜில்மா படம் போடுவார்கள். ஊரில் இருக்கும் உறவினர்கள் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாதவாறு ரகசியமாகச் சென்று வருவார்கள். பொங்கல் நாளில் கூட்டம் அள்ளும். தினமும் ஐந்தே முக்கால் மணிக்கு பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். தியேட்டர்காரர்களும் திரையிடப்படும் படங்களின் பாடல்களை ஸ்பீக்கரில் பாட விடுவார்கள். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர் நோக்கி விரைவார்கள். மாரிமுத்து திரையரங்கை தொட்டு தூண்டிக்காரன் கோவில், சிவன் கோவில், துர்க்கை அம்மன் கோவில், பெரியகுளம் இருக்கும். மழைக்காலங்களில் தவளையின் சத்தமும், குளிரும் வாட்டும். விழா நாட்களில் நான்கு காட்சிகள் நடைபெறும். சுற்றிலும் படுதாவை இழுத்து விட்டுக் கொண்டு படம் பார்ப்பதுண்டு. பள்ளிக்கூடத்தில் ஏதாவது சிறுவர் படங்கள் வந்தால் அழைத்துச் செல்வார்கள். அப்போது தான் மேட்னி ஷோ பார்க்க முடியும்.

எனக்குத் திருமணமான புதிதில் தியேட்டர் வேலை செய்து கொண்டிருந்தது. அதை விலைக்கு வாங்கி நடத்தலாம் என்ற முயற்சி கூட செய்தேன். ஆனால் முடியவில்லை. டிஃபன் கடை வைத்திருந்த ஒரு நபர் செய்த உட்சதியால் அது நடைபெறாமல் போயிற்று. திருமணம் முடிந்த கையோடு தியேட்டரை வாங்கி ஊரிலேயே தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைப்பில் பல்வேறு கட்ட முயற்சிகளைச் செய்தேன். நடக்கவில்லை. ஆளாகி விட்டான் என்றால் சகித்துக் கொள்ளமுடியாது அல்லவா? ஆகவே என்னென்ன சதிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள் அப்போது. நான் திருமணம் செய்து கொண்டதே என்னை அறிந்தப் பலருக்கு இதயத்தில் ஊசியைச் செருகியது போல இருந்தது என்று என் நண்பன் ஒருவன் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பான். இப்போது அது கயிறு திரிக்கும் இடமாக மாறி விட்டது. ஊருக்குச் சென்றிருந்த போது அந்த தியேட்டரில் படம் பார்த்த நினைவுகள் மேகமாய் கவிழ்ந்து கொண்டன.

மண்ணைக் குவித்து அதன் மீது சிம்மாசனமாய் உட்கார்ந்து திரைப்படம் பார்ப்பது என்பது அன்றைய காலத்தில் எனக்கு எந்தளவு மகிழ்ச்சியைத் தந்தது என்று சொல்ல முடியவில்லை. அந்தச் சந்தோஷமும், மகிழ்ச்சியும் இன்றைக்கு எந்த தியேட்டரில் படம் பார்த்தாலும் கிடைக்கவில்லை. காலம் மனிதனின் சந்தோஷங்களை கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் இழுத்துக் கொண்டு விடுகிறது. 

இனி மாரிமுத்து திரையரங்கத்தை காண முடியாது. அதன் நினைவுகள் மட்டும் என்னுடன் கூடவே பயணிக்கின்றன. இனி அது உங்களுடன் கூட பயணிக்கும் என நினைக்கிறேன். நீங்களும் ஏதோ ஒரு திரையரங்கத்தில் என்னைப் போலவே படம் பார்த்திருப்பீர்கள். அந்த நினைவுகளை விட சுகமானது இனி நமக்கு வாய்க்கப்போவதில்லை.

குறிப்பு: டெண்ட் கொட்டகை சினிமா பற்றி கடல்பயணங்களில் சுரேஷ் குமார் எழுதி இருக்கிறார். அவரின் பதிவில் இருந்து சில படங்களை இங்கு லிங்க் கொடுத்திருக்கிறேன். அவரின் பதிவைப் படித்துப் பாருங்கள். நிச்சயம் நீங்கள் சிறுபிள்ளையாகவே மாறி விடுவீர்கள்.


Friday, November 4, 2016

யாருக்கும் தகுதியில்லை

தம் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் பாகவதர். வழியில் ஒரு சிற்றூர். அதைக் கடந்து வரும்போது ரயில்வே கேட் ஒன்று குறுக்கிடவே பாகவதரின் கார் நின்றது.

யாரோ ஒரு கட்டை வண்டிக்காரன்; அருகிலிருந்த காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்துக் கொண்டு அந்த வழியே வந்து கொண்டிருந்தான்.

“ஆஹா, என்ன பேரானந்தம்!”

பாகவதரின் பாட்டுத்தான். ஆனால் பாடியவர் பாகவதர் அல்ல; கட்டை வண்டிக்காரன்.

காருக்கு வெளியே தலையை நீட்டி அவனைப் பார்த்தார் பாகவதர். அவ்வளவுதான்.; “சாமி, நீங்களா?” என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிக் கொண்டே அவன் வண்டியை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான்.”எத்தனையோ நாளா என் சாமியைப் பார்க்கணும்னு நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன்? - இன்னிக்குப் பார்த்துட்டேன் சாமி, என் கண் குளிரப் பார்த்துட்டேன் - இருங்க - சாமி! இன்னிக்கு என் கையாலே ஒரு சோடாவாச்சும் வாங்கிக் சாப்பிடாமே நீங்க இங்கேயிருந்து போகக்கூடாது - ஆமாம்!” என்று படுகறாராகச் சொல்லிக் கொண்டே அவன் அங்குமிங்கும் ஓடினான். எங்கிருந்தோ ஒரு கோலிச் சோடாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாக வந்து அவரிடம் நீட்டினான்.

“அவரு இந்தச் சோடாவையெல்லாம் குடிக்கமாட்டாரு ஐயா!” என்றார் டிரைவர்.

“இங்கே சோடாவா பெரிது, அதைக் கொடுக்கும் அன்புக் கையல்லவா பெரிது!” என்று சொல்லிக் கொண்டே பாகவதர் காரை விட்டுக் கீழே இறங்கி, வண்டிக்காரன் கொடுத்த சோடாவை இரு கைகளாலும் வாங்கி, ‘மடக், மடக்’ கென்று குடித்தார்.

பரம திருப்தி வண்டிக்காரனுக்கு; ‘ஆஹா, என்ன பேரானந்தம்!” என்று அவன் மறுபடியும் பாடவே ஆரம்பித்து விட்டான்.

அதற்குள் ‘கூகுக்’ என்று கூவிக் கொண்டு ரயில் வந்து விடவே, டிரைவர் காரைக் கிளப்ப முயன்றார். என்ன ஆச்சரியம்! பாகவதரைத் தம் பெட்டியிலிருந்தபடி எப்படியோ பார்த்து விட்ட ‘கார்டு’ சிவப்புக்கொடி காட்டி ரயிலை நிறுத்தி விட்டு, “ஆஹா. என்ன பேரானந்தம்!” என்றார்.

அதைக் கேட்ட பாகவதரின் கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் நீரே துளிர்த்து விட்டது. ”நீங்களெல்லாம் என்னிடம் இத்தனை அன்புகாட்ட உங்களுக்கு நான் என்ன செய்து விட்டேன்? என்ன செய்யப்போகிறேன்?” என்று கரம் குவித்தார்.

”ஒன்றும் செய்ய வேண்டாம், நீங்கள் ஆனந்தமாகப் பாடிக்கொண்டே இருங்கள்; நாங்கள் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்!” என்ற ’கார்டு’ பச்சைக்கொடி காட்டி ரயிலை அங்கிருந்து நகர்த்தினார்.

விந்தன் எழுதிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை புத்தகத்திலிருந்து ஒரு சிறு துளி மேலே உள்ளது. இப்படியான ஒரு அன்பினை பெற்ற இறவா நடிகர் அல்லவா எம்.கே.டி அவர்கள்?


அசோக்குமார் படத்தில் எம்.கே.டி பாகவதரால் பாடப்பட்ட அருமையான பாடல் இது. இதில் இரண்டு வரியைத் தொடர்ந்தாற் போல இன்றைக்கு சினிமாவில் பாடுபவர்களால் பாடமுடியுமா? இந்தக் குரல் நம் மனதுக்குள் புகுந்து வரும் போது உண்டாகும் உணர்ச்சியினை வார்த்தைகளால் எழுதி விட முடியுமா? அமைதியாக அமர்ந்து இப்பாடலைக் கேளுங்கள். அது உங்களுக்குள் நிகழ்த்தும் வர்ண ஜாலங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

உலகில் நல்லவனாய் வாழ்வதை விட வேறு என்ன சந்தோஷம் மனிதனுக்கு இருக்கப்போகின்றது?

இதோ பாடல் வரிகள்:

பூமியில் மானிட ஜென்மம டைந்துமோர்
புண்ணியம் இன்றிவி லங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளநி ரம்பவீண்
காலமும் செல்லம டிந்திடப்போம்

உத்தம மானிட ராய்பெரும் புண்ணிய
நல்வினை யால்உல கில்பிறந்தோம்
சத்திய ஞானத யாநிதி யாகிய
புத்தரைப் போற்றுதல் நம்கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும கிம்சையும்
இல்லையெ னில்நர ஜென்மமிதே
மண்மீதி லோர்சுமை யேபொதி தாங்கிய
பாழ்மர மேவெறும் பாமரமே

பாடல் ஆசிரியர்: பாபநாசம் சிவன்
பாடகர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம்: அசோக்குமார்


நவம்பர் ஒன்றாம் தேதி மக்களால் நேசிக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் நினைவு நாள்.

தமிழகத்தில் நடிகர்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது. குழாயடிச் சண்டை கூட நடந்தது. அதையும் டிவிக்காரர்கள் பரபரப்பாக்கினார்கள். அந்தக் கூத்தையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். கூத்து முடிந்து நடிகர்கள் தலைமைப் பொறுப்புக்கும் வந்து விட்டார்கள். ஆனால் வந்ததும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது.

பழைய நடிகர்களைக் கவுரவிக்கிறோம் என்றெல்லாம் அட்ராசிட்டி செய்தவர்கள் தியாகராஜ பாகவதருக்கு நினைவு அஞ்சலியைக் கூட நடத்தவில்லை. தமிழக மக்களின் மனத்தில் தங்க நாற்காலியில் அமர்ந்து தமிழ் சினிமா உலகையே அசைத்து விட்டுச் சென்ற மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்தக் கூட மறந்து விட்டார்கள்.

ஆனால் பாகவதருக்கு அவரின் ரசிகர் செலுத்திய உண்மையான அஞ்சலியை விடவா இவர்கள் செய்து விடப்போகின்றார்கள்? 72 வயதான் பழைய புத்தகக்கடை வைத்து நடத்தி வரும் ஸ்ரீரங்கம் நடராஜன் அவர்கள் தன் ஆதர்ச நாயகனுக்கு திருச்சியில் அமைந்துள்ள சமாதியின் அருகில் அமர்ந்து, தியாகராஜ பாகவதர்  பாடிய பாடல்களைப் பாடியபடியே அஞ்சலி செலுத்தினார் என்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. பாகவதரின் உறவினர்கள் நினைவு நாள் கொண்டாடுவது வேறு. ஆனால் ஒரு ரசிகன் தன்னால் ரசிக்கப்பட்ட நாயகனின் நினைவினால் சமாதியின் அருகில் நின்று பாடலைப் பாடியபடி அஞ்சலி செலுத்துவது என்பது சாமானியமானதா?

எத்தனையோ ஹீரோக்கள் வந்து சென்றார்களே இப்படி ஒரு அஞ்சலி நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோமா? இல்லையே ஏனென்றால் வெகு கவனமாக தன் தந்தையர்களால் தயாரிக்கப்பட்ட ஹீரோக்களும், உறவுகளால் பீடிக்கப்பட்டு மூடப்பட்டு கிடக்கும் தமிழ் சினிமா உலகில் இருப்போர் பாகவதருக்கு அஞ்சலி செலுத்தக்கூட தகுதியில்லாமல் போனார்கள் என்பது தான் நெஞ்சில் அறையும் உண்மை.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் எம் தமிழ் மூதாதையர்கள் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்து அவர்களின் மனதில் இன்றைக்கும் இறவாது வாழ்ந்து வரும் எம்.கே.டி அவர்களுக்கு ஏதோ என்னாலியன்ற ஒரு சிறிய அஞ்சலி.

Wednesday, December 30, 2015

வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

பீப் சாங் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இதுவும் ஒரு சினிமாப்பாடல் தான். 

என்ன ஒரு பாடல்? இசைக் கோர்ப்பு? அந்தக்காலமெல்லாம் இனிமேல் வரத்தான் கூடுமா? நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது.





வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே கோவிலின் தேரழகோ முன்னழகிலே கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது மேனியின் மஞ்சள் நிறம் வானளந்ததோ பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது என்றும் நீஇன்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Saturday, August 16, 2014

பெண்ணின் அவஸ்தையில் இதுவும் ஒன்று

மானிடப் படைப்பில் பெண் என்பவளைப் போன்ற அற்புதம் வேறு இவ்வுலகில் கிடையவே கிடையாது. அவள் வாழும் போதே கடவுள் தன்மையில் வாழ்கிறாள். சகிப்புத் தன்மையின் மறு அவதாரம் பெண்கள்.

ஒரு உதட்டுச் சுழிப்பில் ஆணின் உயிரைப் பறித்து விடும் மகத்துவம் கொண்டவள் அவள். ஒரு அசட்டுச் சிரிப்பில் உலகையே சுடுகாடாக்கி விடுவாள். அவளின்றி  இயங்காது இப்பூவுலகம். 

அப்படிப்பட்ட மகா அற்புதமான பெண்ணின் அவஸ்தையில் இதுவும் ஒன்று. அடியேனும் இப்படிப்பட்ட அவஸ்தையில் சிக்கி இருக்கிறேன். பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த அவஸ்தை நிச்சயம் ஏற்பட்டிருக்கும். 

இளையராஜாவின் அற்புதமான இசைக்கோர்ப்பில் வார்த்தைகள் இசையுடன் சேர்ந்து தாலாட்டும் இந்தப் பாடல், ஏதோ ஒரு இன்பலோகத்துக்குள் அமிழ்த்தும் சக்தி கொண்டது.

தனிமையில் கேட்டுப்பாருங்கள். 




இதில் வரும் லட்சுமி கேரக்டரைப் பற்றி விரிவாக “குறுஞ்செய்தி” இதழில் காதலும் கலவியும் என்றொரு தொடரில் பார்ப்போம்.


Thursday, December 27, 2012

செப்பிடு வித்தைக்காரனின் கும்கி



( எனது நண்பர் இயக்குனர் கதிரின் ரீமிக்ஸ்- சொய் சொய் பாடல்) 

என் மகளின் பத்து நாள் போராட்டம், நேற்று வெற்றியடைந்தது. வழக்கம் போல அரசாங்கம் (அடியேன்)தோல்வியுற்றது. யானைப் படம் போச்சு, போச்சுன்னுச் சொல்லிச் சொல்லி நச்சரிப்பு தாங்காமல் அழைத்துச் சென்றேன்.

கும்கி படத்தில் யானையை போஸ்டரிலும், விளம்பரத்திலும் இடம்பெற வைத்து, தேர்வு விடுமுறையில் இருக்கும் மாணவர்களைக் கவர்ந்தார் ஞானவேல்ராஜா. இவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. வெறும் இரண்டு கோடி ரூபாயில் வாங்கப்பட்ட அட்டக்கத்தி பதினாறு கோடியைத் தந்தது என்றால் அவரின் சுக்ரதிசையை என்னவென்றுச் சொல்வது? அப்பா, அண்ணன், தம்பி, மாமா என்று ஒரு குடும்பமே “சுக்ரதிசையில்” சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று கோடிகளைக் குவிக்கின்றார்கள். அது அவர்கள் முன்பிறப்பில் செய்த பலன். அனுபவிக்கின்றார்கள். சுக்ரதிசை வந்தால் ரோட்டில் போகிறவன் கூட வீட்டுக்கு வந்து காசைக் கொடுத்து விட்டுப் போவான் என்பார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது எனக்கும்.

’நானும் செத்துருவேன்’ என்றுச் சொல்லும் அல்லியினால், பொம்மன் இழப்பது அவனுக்கு நடையாய் நடந்து சம்பாதித்துப் போட்ட யானை, மாமா, எடுபிடி உண்டியல் ஆகியோரை. எப்போதுமே பெண்களுக்கு இழப்பு அதிகமில்லை. பெரும்பாலும் ஆண்கள் தான் இழக்கின்றார்கள். பெண்களின் சில சொற்கள் ஒருவனை வாழவைக்கும், சிலரை அழித்து விடும்.ஹஸ்தினாபுரத்திலே பாஞ்சாலி தண்ணீர் என்று நினைத்து ஏமாந்து நின்ற துரியோதனனைப் பார்த்து சிரித்த சிரிப்பு, துரியோதனால் பலபேரின் முன்னிலையில் பாஞ்சாலியின் துகிலுரிய வைத்தது. அன்று அவள் அவிழ்த்து விட்ட கூந்தல் துரியோதனா வகையறாவையே அழித்தது. பெண்கள் எப்போதும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒன்றே ஒன்றுதான். பெண்கள் ஆயுதம் போன்றவர்கள். சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் குறுக்கே திரும்பி குத்திக் குதறி விடும். ஜாக்கிரதை நண்பர்களே !

என் மனையாள் படம் பார்த்து விட்டு திரும்பும் போது, ”ஏங்க, ஓங் பேக் என்ற படத்தில் சிறுவன் ஒருவன் யானையுடன் விளையாடுவதை அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்படத்தைப் பார்த்திருப்பார் போல, உடனே ஒரு ‘ நாட்’ கிடைத்து படத்தை எடுத்து விட்டார்” என்று கூறினாள். அப்படியும் இருக்கலாம். எப்போதுமே நம்மவர்களுக்கு சுயச் சிந்தனை வருவது குறைந்து வருகிறது. கூக்கிள் சிண்ட்ரோமினால் மூளை இறப்பு நோய் வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு இவ்விடத்தில் ஒரு கூடுதல் தகவல். ஆகவே நெட்டில் உலவும் நண்பர்கள் ஜாக்கிரதை.இதற்கென்று தனி வைத்தியம் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

கும்கி ஒன்றுமே இல்லாத வெறுமையான, முழுமையற்ற, விட்டேத்தியான கதை. காட்டுவாசிகளின் வீடுகள் அனைத்தும் செட்டிங்குகள். பச்சைப் பசேலைக் காட்டினால் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற பிரபு சாலமனின் நினைப்பு பலித்தே விட்டது. கோவில் யானை, காட்டு யானையை விரட்டி அடிப்பதுதான் கதை. அதாவது சொங்கி ஒருவன் வீரனை வெல்வது. கதைக்களமும், காட்சிப்படுத்தியதும் வித்தியாசமானது என்பதால் படம் போரடிக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்றபடி எரிச்சல் தரும் கிளைமேக்ஸ். முழுமையைத் தராத படமாக்கம். 

அதென்னவோ தெரியவில்லை, பிறரை அடிப்பதும், கேவலப்படுத்துவதும் தான் நகைச்சுவை என்பதாய் அனைத்து சினிமாப்படங்களும் வருகின்றன. கவுண்டர் மேனியா போய் அரை நூற்றாண்டு காலம் ஆகி விட்டது. இன்றைக்கும் இயக்குனர்கள் இப்படிப்பட்ட லூசுத்தனமான நகைச்சுவைக் காட்சிகளை படமாக்குவது எரிச்சலோ எரிச்சல்.

ஹீரோ யானைமீது வருகிறார். காதல் வந்தால் பைத்தியம் போல குதிக்கிறார். தலையை ஆட்டுகிறார். கையை விரித்து விரித்து காதலை வானத்தைப் பார்த்துச் சொல்கிறார். காதல் வேதனையில் முள்ளில் கையை வைத்து அழுத்தி ரத்தம் வர வைக்கிறார். (அதென்னவோ தெரியவில்லை, சினிமா காதலர்கள் கையை மட்டும் அறுத்துக் கொள்கிறார்கள்). 

அல்லிக்கு பின்புறம் அழகாவே இல்லை. சப்பைக் குண்டி ஹீரோயின். மூக்கு புடைத்து, உதடு புடைத்து இருக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறார். எத்தனையோ படங்களில் பார்த்திருக்கும் ஹீரோயின் போலவே தண்ணீரில் மூழ்குகிறார். பாடுகிறார். சிரிக்கிறார். சிணுங்குகிறார்.கொடுமை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஹீரோயின்கள் இப்படியே நடிப்பார்களோ தெரியவில்லை. ஹீரோயின் சுந்தரபாண்டியனில் கொஞ்சம் முற்றிப் போய் இருக்கிறார். காதல் வருவதும், அதைச் சொல்வதும், பின்னர் அதை மறுப்பதும் எரிச்சலைத் தரும் படமாக்கம். பொம்மனின் மாமாவாக வரும் தம்பி ராமையா மைண்ட் வாய்சிலேயே பேசிக் கொண்டு படம் நகர உதவி செய்கிறார்.

சிவாஜியின் பையனுக்கு முதல் படம் சூப்பர் ஹிட். பாடல்கள் அனைத்தும் படத்தில் ஒட்டாமல் தனியே நிற்கின்றன. படத்தின் களத்திற்கும் பாட்டுக்கும் இசைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. சிந்து பைரவி படத்தில் சிவகுமார் கர் நாடக சங்கீத மேடையில் வெஸ்டர்ன் மியூசிக் பாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அப்போது புரியும் நானென்ன சொல்ல வருகிறேன் என்று.

ஒன்றுமே இல்லாத கதை. எல்லாம் இருக்கிறது என்பதாய் காட்டும் செப்பிடு வித்தையைத்தான் பிரபு சாலமன் கும்கியில் செய்திருக்கிறார். இன்னும் 100 ஆண்டுகள் ஆக வேண்டும் தமிழர்களின் ரசனை மாற. 

Tuesday, December 4, 2012

ரனதந்திராவில் ஹரிப்ரியாவின் நீச்சலுடை காட்சிகள் புலம்பும் இயக்குனர்




சிலந்தி என்ற வெற்றிப்படத்தை இயக்கிய எனது நெருங்கிய நண்பர் ஆதியின் அடுத்த படம் கன்னடத்தில் ரனதந்திரா. திரு ரமேஷ் அவர்களின் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் அப்படத்தின் திரைப்பட ஷூட்டிங் பெங்களூரில் விறுவிறுப்பாய் நடந்து வருகிறது. 

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும், டாக்டர் ராஜ்குமாரின் மருமகனுமான விஜய ராகவேந்திரா ஹீரோவாகவும், தமிழ் படங்களில் நடித்த ஹரிப்பிரியா ஹீரோயினாகவும் நடிக்கின்றார்கள்.

ஷூட்டிங்கில் ஹரிப்பிரியாவின் நீச்சலுடைக் காட்சிகளை வெகு நேர்த்தியாய் அதற்கென்றிருக்கும் பிரத்யேகமான கேமராவினால் ஷூட் செய்திருக்கின்றார். 

"ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து எடுத்தேன் சார்” என்றார். 

”பின் ஏன் சோகமாய் பேசுகின்றீர்கள்?” என்றேன்.

”அட அத ஏன் சார் கேட்கின்றீர்கள்?”

“ ஹரிப்பிரியா அந்த சீனைப் பார்த்து விட்டு, புரோமோவில் வெளியிடக்கூடாது என்று அக்ரிமெண்ட் போட்டுடுட்டாங்க சார் !” என்றார்.

தான் பெற்ற இன்பம் ரசிகர்கள் பெற வேண்டுமென்ற ஆவல் இயக்குனருக்கு. 

ஆனால் நடந்ததோ வேறு !

மொத்தத்தில் ரசிகர்களுக்கு ” வடை போச்சே !”






Saturday, September 22, 2012

சாட்டை என்கிற சினிமாவும் ஹீரோயிசத்தின் கொடூரமும்



நேற்றைக்கு முதல் நாள் தேனியிலிருந்து ஒரு அழைப்பு. பேசியவர் ஒரு ஆசிரியர். ”பத்துக் கோடி ரூபாய் கடன் வேண்டும்” என்றார். தொடர்ந்து புதிதாக பள்ளிக்கூடம் கட்டப்போவதாகவும், ஐந்து வருடத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் சொன்னார். ”ஐந்து வருடத்தில் வட்டியுடன் பத்து கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கா பள்ளிகள் சம்பாதித்துக் கொடுக்கின்றன?” என்று கேட்டேன். ”நாமக்கல் பகுதிகளில் டொனேஷனைக் கொண்டு போய் கொட்டுகின்றார்கள் சார், நான் அதை விட மிகச் சிறந்த பள்ளியை உருவாக்குவேன்” என்றார்.

ஊட்டியில் இருக்கும் பிரபல தனியார் பள்ளியில் டொனேஷன் அதாவது கேப்பிடேஷன் ஃபீஸ் 5,00,000 லட்சம் வசூலிக்கின்றார்கள். யூனிஃபார்முக்கு 50,000  ரூபாய் கட்டணம். இப்படி அவர் சொன்ன விபரங்களைக் கேட்டதும் மயக்கம் தான் ஏற்பட்டது.

”அரசு இலவசமாய் கல்வி வழங்கினால் என்ன செய்வீர்கள்?” என்றேன். ”எந்த அரசாலும் சரி, எவராலும் சரி அப்படி செய்யவே முடியாது என்றார். கல்வி பிசினஸ் செய்யும் பணமுதலைகளும், ஒத்து ஊதும் திருடர்கள் கூட்டத்தாரும் ஒன்று சேர்ந்து பல தனியார் அமைப்புகளை வைத்து இருக்கிறார்கள். அவர்கள் அரசையே தூக்கி எறிந்து விடுவார்கள். பணத்திற்கு முன்பு அரசு சலாம் போடுமே தவிர வேறொன்றினையும் செய்யாது சார்” என்றார் அவர். 

”பூடானில் ஆசிரியப் பணியில் இருந்த போது, சாலையில் நடந்து சென்றால் எதிரே வரும் மக்கள் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்தி வழி விட்டு ஒதுங்கி நிற்பார்கள். இந்தப் பாழாய் போன மனித உரிமைகள் கமிஷனால் தான் ஒவ்வொரு மாணவனும் இன்றைக்கு சீரழிந்து போய் விடுகிறான்கள். ஒடித்து வளர்க்காத முருங்கை பலன் தராது சார். பூடானில் அரசாங்கம் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கின்றது. ஒவ்வொரு ஊரும் பள்ளியை நிர்வகிக்கின்றார்கள். அங்கு தனியார் அமைப்புகள் கிடையாது” என்றார் அவர்.

ஒரு வழியாக தனியார் கல்வி என்கிற மாஃபியாக்கூட்டத்தின் செயல்பாடுகளை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒருவன் வாழ பலர் உழைத்துக் கொடுக்கின்றார்கள். இது பற்றிய ஒரு கட்டுரை வருகின்ற மாதம் “பரபரப்புச் செய்தி” பத்திரிக்கையில் வெளிவரும். படித்துப் பாருங்கள்.

ஒரு குடும்பத்தின் தலைவன் சரியில்லை என்றால் குடும்பம் என்ன ஆகும்? சீரழிந்து போகும். தலைமை ஆசிரியரிடம் தொலை நோக்குப் பார்வையும், கண்டிப்பும் இல்லையென்றால் அப்பள்ளி என்ன ஆகும்? அப்படித்தான் இன்றைய அரசுப் பள்ளிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு உகந்த கிரேடு, டிகிரேடு சிஸ்டம் கொண்டு வந்தால் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் நிச்சயம் ஓரளவிற்கு முன்னேறும். பள்ளிகள் இருக்கும் ஊரின் மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் பள்ளியின் செயல்பாடுகள் மூலம் இந்த டிகிரேடு சிஸ்டம் செயல்படுத்தப்பட்டாலே போதும். அதுமட்டுமல்லாமல் அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் நன்மையைத் தரும். அதை ஏன் அரசுகள் செய்ய மறுக்கின்றன என்றால், தனியார் கல்வி மாஃபியாக்களிடமிருந்து வரும் பெட்டி டொனேஷன்கள் தான் காரணம் என்கிறார்கள்.

பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதுமா? பிற ஆசிரியர்களும் இருக்க வேண்டாமா? சாட்டை ஒரே ஒரு ஆசிரியர் ஒழுங்காக இருந்தாலே போதும் என்று ஹீரோயிசம் பேசுகிறது. பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருத்தி விட்டு வேறு பள்ளிக்குச் செல்கிறார் தயாளன் என்கிற சமுத்திரக் கனி. மாயாஜால வினோதக் கதை போல தமிழ் சினிமாக்களில் ஒரே ஒரு பாடலில் ஏழை ஹீரோ பெரிய கோடீஸ்வரனாக மாறுவதை காட்டுவார்களே அதே போலத்தான் சாட்டைப் படமும்.

யாரோ ஒரு இயக்குனர் ஏதோ ஒரு பேட்டியில் தம்பி ராமையா என்கிற நடிகரின் நடிப்பைப் பார்த்த போது எம்.ஆர்.ராதாவை பார்த்தது போல இருந்தது என்றார். எம்.ஆர்.ராதா எங்கே இந்த ராமையா எங்கே? இப்படிப்பட்ட இயக்குனர்கள் தான் இன்றைக்கு தமிழ் சினிமாவை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மூளை வறட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமாக்கள். நடிப்பு என்றால் என்ன என்று தெரியாமலே நடிக்கும் கலைஞர்கள், இயக்கும் இயக்குனர்கள் என்று ஒரு கூட்டம் சினிமாவைக் கேவலபடுத்தி வருகின்றார்கள். இதற்கு உதாரணம் மாண்புமிகு இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இதயம் டிக்கென்றிருக்கும்.

சாட்டை என்கிற பெயரில் அக்மார்க் ஹீரோயிசப்படம். ஆசிரியர்கள் ஹீரோக்கள் அல்ல ! அவர்கள் ஞானிகள். எதையும் எதற்காகவும் எதிர்பாக்காத தியாகிகள். இக்கால ஆசிரியர்களில் எத்தனை எத்தனையோ இளம் ஆசிரியர்கள் முழுத் தியாகத்துடன் தங்கள் குழந்தைகளை நேசித்து அவர்கள் படிப்பதையும், எழுதுவதையும் நேசிக்கின்றார்கள். நேற்று என் பையன் கூடப்படிக்கும் சகமாணவன் என் மனைவியிடம் ”உங்கள் பையனுக்குச் சுத்திப் போடுங்கள், ரொம்ப அழகாக எழுதுகிறான் என்று டீச்சர் கண் வைத்து விட்டதாகவும், அதை டீச்சரே சொல்லச் சொன்னதாகவும்” சொல்லி இருக்கிறான். ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நூற்றில் பத்து சதவீதம் பேர் சுய நலவாதிகளாய் இருப்பார்கள். அவர்கள் பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை. பயிரில் களைகள் இல்லையென்றால் பயிரைப் பற்றி விவசாயி சிந்திக்க மாட்டான். களைகளும் வேண்டும், அதை களையெடுக்கும் வித்தையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசுப்பள்ளிகள் மட்டுமல்ல தனியார் பள்ளிகளும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினாலே நிர்வகிக்கப்பட்டாலே போதும். இது போன்ற பிரச்சினைகள் ஓவர்.

பள்ளிப்பருவ காதல்கள் சுவாரசியமானவை. அக்காதல்கள் எதுவும் முழுமை பெறுவதில்லை. அதை ஒழுங்காக காட்டிய விதத்தில் சாட்டை நன்மை செய்திருக்கிறது. அதைக்கூட காசாக்கி அதை வைத்து தமிழ் சினிமாக்கள் ஹீரோக்களை உருவாக்கி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவர் இது போன்ற கவட்டிக் கிளர்ச்சிப் படங்களில் நடித்துதான் தானுமொரு ஹீரோ என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார். முன்னனி ஹீரோவான ஒருவர் கபடி விளையாண்டும்,  பாத்ரூமில் காதலியின் மாமியாருக்கு சோப்பு போட்டும்தாம் ஹீரோவாக உயர்ந்தார். தற்போது பிரபலமாய் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் மலையாள மொழிகளில் செக்ஸ் படம் எடுத்துச் சம்பாதித்தவர்தான். பல பிரபலங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே பெண்கள்தான். இவர்கள் இல்லையென்றால் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்கள் ஆகி விடுவார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தனி மனித துதி என்பது அரசியல் மட்டுமின்றி சினிமாவிலும் தூக்கலாய் இருக்கும். எந்த ஒரு தனி மனிதனாலும் எதையும் பிடுங்கி விட முடியாது. மஹாத்மா காந்தி மட்டும் உண்ணாவிரதம் இருந்திருந்தால் எவனும் திரும்பிக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். காந்தியின் கொள்கைகளால் உயிரை இழந்தோரும், சிறையில் கிடந்து செத்தோரும் லட்சோப லட்ச மக்கள். அவர்கள் பற்றி யாருக்கு என்ன தெரியும்? இது போன்ற தனி மனித துதிகளும், போற்றுதல்களும் முற்றிலும் தவறானவை. அது ஒரு ஆகப் பெரிய கொடூரம் என்கிறேன்.

சாட்டைப் படத்தினை அனைவரும் பார்க்கலாம். ஏனென்றால் இப்படம் ஏதோ சொல்ல வருகிறது. பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எங்கே ஹீரோ, ஹீரோயின் காதலைச் சேர்த்து வைத்து விடுவார்களோ என்று பயந்தேன். அப்படி ஏதும் ஆக வில்லை. சமுத்திரக்கனி சொல்லும் கடைசி வாக்கியத்திற்காக சாட்டையைப் பார்க்கலாம். ஹீரோயிசம் என்கிற விஷத்தினுள்ளே ஒரு மெசேஜ்.


Monday, September 10, 2012

இயக்குனர் சுந்தர்ராஜனுடன் ஒரு மணி நேரம்


குரு வாழ்க ! குருவே துணை !!





எனது நண்பர் கோவையில் ஃபில்ம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இருக்கிறார். இன்ஸ்டிடியூட் சம்பந்தமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, வேறு யாரிடமாவது கருத்துக்களை கேட்கலாம் என்று நினைத்தோம். இயக்குனர் சுந்தர் ராஜன் அவர்களுக்கு அழைத்தேன். ”கோவையில் தான் இருக்கிறேன் தங்கம், எட்டு மணிக்குச் சந்திக்கலாமா?” என்றார்.

நானும் நண்பரும் நேரு விளையாட்டு அரங்கம் சென்று பாப்கார்ன் கொரித்து விட்டு, இயக்குனர் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாங்கள் அன்று முதன் முதலாய் சந்தித்தோம். 

காருக்குள் அமர்ந்து கொண்டார். 

”குங்குமச் சிமிழில் விழுந்தவன் இன்றும் எழுந்து கொள்ள முடியவில்லை சார், ரேவதி போன்ற நடிகைகளைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது ” என்றேன். 

அவருக்கு நிரம்பப் பிடித்த படம் “குங்குமச் சிமிழ்” என்றார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன். இன்ஸ்டிடியூட்டுக்கு நிறைய ஆலோசனைகளும், கருத்துக்களும் சொன்னார்.
பத்து சில்வர் ஜூப்ளி கொடுத்த வெற்றி இயக்குனர். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். இன்றைய எதிர்கட்சித் தலைவரின் சினிமா வளர்ச்சிக்கு அவரின் பல திரைப்படங்கள் எவ்வளவு உதவி இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வெகு சாதாரணமாய் இருக்கிறார். பெரியவர்கள் எப்போதும் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அலட்டிக் கொள்வதில்லை. பெரியாரிசத்தின் பிடிப்பில் தன்னை முழுதாய் ஈடுபடுத்தி இருக்கிறார். 

ஆன்மீகவாதியான எனக்கும் பெரியாரிசத்தில் ஈடுபாடுடைய அவருக்குமான நட்பை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் உதிக்கும் சிரிப்பின் அர்த்தம் எனக்கே புரியவில்லை. அர்த்தம் விரைவில் விளங்கும் என்றே நினைக்கிறேன்.

சில்லிட்ட காற்று வீச இனிய வருகையாய் கை குலுக்குகினார். அவரின் கை “சில்லென்று” இருந்தது.

வெகு விரைவில் கோவையில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் அனைவருக்கும் சினிமா, டிவி, மீடியாக்களில் வாய்ப்புக்கள் உருவாக்கித் தரவும், நாடகக் கலையினை வளர்த்தெடுக்கவும், கற்பனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களுக்கு உதவிடவும் இந்த இன்ஸ்டிடியூட் செயல்படும் விதமாய் உருவாக்க வேண்டுமென்பது ஆவல். 



எங்களது ஃபெமொ மாடலிங் கம்பெனியின் மாடல்களை முழு வார்ப்பாக வார்த்தெடுக்க முயல்வோம். திறமைசாலிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு எட்டாத சினிமாக் கனவுகளை எட்ட வைக்கவும், பலருக்கு ஏணியாகவும் ஃபெமொவை விளங்கிட வைக்க விரும்புகிறோம். 

எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.  நண்பர்களின் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் எதிர் நோக்கும்

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Thursday, August 16, 2012

அட்டகத்தி திரைப்படம்

அழகான, அற்புதமான ஒரு பாசச் சந்திப்பின் பின்பு நானும் எனது நண்பரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கோவை சிங்காநல்லூரில் இருக்கும் அம்பாள் சினி தியேட்டர் கூட்டத்தால் நிரம்பிக் கொண்டிருந்தது. நண்பர், அட்டகத்தி பார்ப்போமா என்றார். 

தியாகராஜர் காலத்திலிருந்து இன்று வரை காதல் காதல் காதல் என்றே தமிழ் சினிமா உலகம் படமாய் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. தமிழனுக்கு காதல் செய்வதே முழு முதல் தொழிலாய் மாறி இருக்கிறது. சிறிய வயதில் இருந்து உனக்கு20 எனக்கு 40 என்பது வரையும், முதல் மரியாதை காதல் என்பதாகவும் தமிழ் சினிமா உலகம் காதல் போதையில் ஊறி ஊறி அதிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சின்னஞ் சிறு குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் குஷி படத்தில் இயக்குனர் காதலைக் காட்டி தன் இயக்குனர் திறமையை வெளிப்படுத்தினார். அந்த வகையில் வந்த மற்றொரு படம் தான் அட்டகத்தி.

விடலைப் பருவத்தில் பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்க முயல்வோம் அல்லவா அதை ஹீரோ செய்கிறார். ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டே செய்கிறார். ஒரு பெண் கூட அவரைக் காதலிக்கவே இல்லை. இடைவேளைக்குப் பிறகு கல்லூரி செல்லும் ஹீரோ முன்பு தன்னை அண்ணன் என்றுச் சொல்லிய ஹீரோயினை மீண்டும் சந்திக்கிறார். ஹீரோயினின் சில சைகளை கண்டு அவள் தன்னைக் காதலிக்கிறார் என்று நினைத்து அவளின் மீது காதல் கொள்கிறார். முடிவில் பார்த்தால் தன் பெயரைக் கொண்ட வேறொருவரை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். விரக்தி அடையும் ஹீரோவை ஒரு பிச்சைக்காரன் என் பெண்ணைக் கட்டிக்கோ என்றுச் சொல்லும் போது ஹீரோ சிரிக்கிறார். அப்புறம் அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது. 

அட்டகத்தியை கீழே வரும் பாடலில் அடக்கி விடலாம்.

”ஆள்வார்ப்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா, ஒரே காதல் ஊரில் இல்லையடா” - என்ற கமல்ஹாசனின் பாடல் தான் படத்தின் ஒன் லைன்.

ஒரு காலத்தில் காதல் காதல் என்று உருகி உருகிக் காதலித்த கமல்ஹாசன் தான் (தேரே மேரே பீஜ்ஜுமா பாடல் நினைவில் இருக்கிறதா உங்களுக்கு) மேலே இருக்கும் பாடலைப் பாடி இருக்கிறார்.

காலம் மாறுகிறது. மாறிக் கொண்டே இருக்கிறது. காதலுக்கு ஒவ்வொரு காலத்திலும் டெஃபனிஷன் மாறிக் கொண்டே வருகிறது.

படத்தின் முதல் பாதி சுவாரஸியமாய் இருக்கிறது. அடுத்த பாதியை சொதப்பி விட்டார் இயக்குனர் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. அடுத்த பாதியை பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கிளைமேக்ஸ் சோகமாய் இருக்கப் போகிறது என்றார். படத்தின் அடுத்த அடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கப் போகிறது எனபதையும், கிளைமேக்ஸை எளிதில் ஊகித்து விடும் திரைக்கதையும் படத்தின் பிளாக்மார்க்.

காலத்தால் அழிக்கவே முடியாத எத்தனையோ பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். ரீமிக்ஸ் கூட பழைய பாடல்கள் இன்றைக்கும் ஹிட் அடிக்கின்றன. கானா பாடல்களில் புரட்சி செய்த இசையமைப்பாளர் தேவா இன்றைக்கு இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் இளையராஜா இருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் ஹிட்டோ ஹிட். இப்படத்தின் பாடல்கள் பற்றி எழுத ஒன்றுமில்லை. பின்னணி இசை சுமார் ரகம். கிடாரின் இசைக் கோர்ப்பு எரிச்சலைத் தருகிறது. குப்பத்து களத்தில் கிடார் இசையும், ஆங்காங்கே சில பழைய ட்யூன்களும் வருகின்றன. படத்தில் ஒட்டவே ஒட்டாத, தனியாக தெரிகிறது.

காதல் படங்களையும், ரவுடியிசத்தையும், ஒரே ஆள் நூறு பேரை அடிக்கும் படங்களையும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகப் பெருமக்கள் மாறாத வரை இப்படியான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

ஏன் இது போன்ற படங்களே வந்து கொண்டிருக்கின்றன என்று யோசித்தால் ஒரு காரணம் தெளிவாய் தெரிகிறது.

பிரம்மனுக்கு அடுத்தபடியாக, ஒரு தாய்க்கு அடுத்த படியாக இருக்கும் படைப்பாளியான இயக்குனர்கள், ஹீரோ வரும் போது மெய்பொத்தி எழுந்து நின்று சலாம் போடும் போக்கினை மாற்றாத வரை எந்த ஒரு படைப்பும் முழுமையானதாக இருக்க முடியாது. 

* * *

Wednesday, August 1, 2012

தமிழ் சினிமாவில் புத்திசாலிகளின் பிசினஸ்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில புரட்சிகள் நடக்கும். திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வரின் வாரிசுகள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி சர்ச்சைகளையும், வெற்றிகளையும் குவித்தனர். கார்ப்பொரேட் நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் இறங்கி வெற்றிகளைக் குவித்தன(உண்மையா என்று தெரியவில்லை). ஆனால் பெரும்பாலான கார்ப்பொரேட் நிறுவனங்களின் சினிமாக்கள் தோல்வி அடைந்தன என்பதுதான் உண்மை. சன் க்ரூப்பின் முதல் படம் மட்டுமே பெருத்த லாபத்தைக் கொடுத்தது என்று சினிமா இண்டஸ்ட்ரீயில் பேசிக் கொள்கின்றார்கள்.

கார்பொரேட் நிறுவனங்களின் சட்டங்கள், திட்டங்கள், செயலாக்கங்கள் எதுவும் அதுவும் தமிழ் சினிமா உலகத்தில் பெரிய வெற்றியைத் தந்திட முடியாது. ஹாலிவுட் சினிமாவின் உருவாக்கம் போல தமிழ் சினிமாவில் பெரும் நிறுவனங்கள் சாதிக்க வாய்ப்புகள் சுத்தமாக இல்லை.

கிட்டத்தட்ட 31 சாட்டிலைட் சானல்கள், ஏழு பத்திரிக்கைகள், 48 எஃப் எம் சானல்கள், ஒரு விமான நிறுவனத்தை நடத்தும் சன் குழுமத்தினால் தமிழ் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. இதை விட பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தற்போது ஏதும் இல்லை. சமீபத்தில் தான் சினிமாவின் பெரிய சாதனையாளர் ஒருவர் “கார்ப்பொரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் நின்று விட்டது மகிழ்ச்சியைத் தருகிறது” என்று பேசினார்.

சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்கள்தான் அதிகம் இழந்திருக்கின்றார்கள். ஆனால் டெக்னீசியன்களும், நடிகர்களும் பெரும்பான்மையானவர்கள் எவரும் பொருளாதார இழப்பினைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.

சினிமாவில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அழிவைத்தான் சந்தித்திருக்கின்றார்கள் என்றுச் சொல்வார்கள். ஆனால் சிலர் சினிமாவை தன் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமான பிசினஸ்ஸாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சன் குழுமத்தின் மூலம் நில மோசடியில் கைதான சக்சேனா அவர்கள் தற்போது படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்திருக்கின்றார். அவரின் பேனரில் தினத்தந்தியில் “சாருலதா” படத்தின் பெயர் பளிச்சிடுகிறது. ஏற்கனவே இருக்கும் சினிமா அனுபவத்தில் வெகு எளிதாக இந்த பிசினஸ்ஸை அவரால் வெற்றிகரமாக நடத்தி விட முடியும். ஏரியாவிற்கு ஐம்பது லட்சம் லாபம் கிடைத்தால் போதுமே. அதைத்தான் இவரைப் போன்றவர்கள் தற்போது செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

எஸ்.ஆர்.எம் குழுமத்தின் வேந்தர் டிவி சார்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் நல்ல விலைக்கு வாங்கப்பட்டு, நல்ல லாபத்தோடு விற்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தமிழகத்தின் பெரிய பஸ் கம்பெனி ஒன்று சினிமா வியாபாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கின்றார்களாம்.

புத்திசாலிகளின் பிசினஸ் இப்படித்தான் இருக்கும்.

கதை கேட்க வேண்டியதில்லை, இயக்குனருடன் சண்டை பிடிக்க வேண்டியதில்லை இப்படி பலப்பல தயாரிப்புப் பிரச்சினைகள் இல்லாமல் சினிமாவில் பிசினஸ் செய்து லாபம் ஈட்டுவது என்பது புத்திசாலிகளின் பிசினஸ்தானே.

- கோவை எம் தங்கவேல்


Wednesday, June 27, 2012

கரிசல் மண் திரைப்படத்தின் மனதை மயக்கும் பாடல்


மிகச் சமீபத்தில் எனது ஊர் பகுதியைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், சினிமா பட இயக்குனருமான சுப. தமிழ்வாணன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

இவர் தற்போது “கரிசல் மண்” என்ற தமிழ் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். பேராவூரணி பகுதி, கீரமங்கலம், பைங்கால், வேமங்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.

இளையராஜாவிடம் வேலை செய்து கொண்டிருந்த திரு யானிதேஷ் என்ற புது இசையமைப்பாளர் தன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்றும், நீங்கள் அவசியம் திரைப்படப் பாடல்களை கேட்டு கருத்துச் சொல்ல வேண்டுமென்றும் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரை முதன் முதலில் ஒரு திரைப்படப்பாடலைக் கேட்கின்ற போது மனது பட்டென்று பாடலோடு ஒட்ட வேண்டும் என்று நினைப்பேன். அத்தகைய பாடல்கள் எப்போதாவது தான் தமிழ் சினிமாவில் வெளியிடப்படுகின்றன.

எனது தாத்தா மாணிக்கதேவர் இந்திய தேசிய ராணுவத்தில் வேலை செய்து, பின்னர் கைதாகி மலேசியா சிறையில் இருந்து வெளிவந்த போது வானொலிப் பெட்டி ஒன்றினை வாங்கி வந்திருந்தார். அதை நான் வெகு பத்திரமாக பாதுகாத்து வந்தேன். பெண்கள் கல்லூரி ஒன்றில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டராக பணி புரிந்து விட்டு, பத்து நாள் லீவில் தாத்தா வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

1997ம் வருடம் என்று நினைக்கிறேன். படப்பைக் கற்கள் பதிந்த வீட்டு வாசலில் குளிர் காலமொன்றின் சூரியன் உதிக்காத பொழுதில் செய்தி கேட்பதற்காக வானொலியை ஆன் செய்த போது, இளையராஜாவின் காதலுக்கு மரியாதை படத்தின் “என்னைத் தாலாட்ட வருவாளா?” பாடலை முதன் முதலாய் கேட்க நேர்ந்தது. வானொலி என்பதால் அதே பாட்டை அடுத்த தடவை உடனடியாக கேட்க இயலாதே. கேட்ட பொழுதே மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது பாடலும், ராகமும்.

அப்பாடலைக் கேட்பதற்காகவே வாக்மென் வாங்கி, கேசட்டில் அப்பாடலைப் பதிவு செய்து பலமுறை கேட்டிருக்கிறேன்.


அவரிடம் நிச்சயம் கேட்கிறேன் என்றுச் சொல்லி இருந்தேன். தற்போது வரக்கூடிய திரைப்படப்பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டுவதே இல்லை. அத்தி பூத்தாற்போல ஏதோ ஒன்றிரண்டு பாடல்கள் மட்டுமே மனதில் பதிகின்றன. 

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தின் ”ஏண்டி கள்ளச்சி” என்ற பாடல் என்னை அமைதியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதே போல நினைத்தாலே இனிக்கும் படத்தின் “அழகாய் பூக்குதே” என்ற பாடலு என்னைக் கவர்ந்த சமீபத்திய பாடல்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியான ஒரு பாடலை “கரிசல் மண்” படத்தில் கேட்க நேர்ந்தது. நீங்களும் கேட்டு விட்டு பாடல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். அபுதாபியைச் சேர்ந்த பாடகி வந்தனா இப்பாடலைப் பாடி இருக்கிறார். இயக்குனர் சுப.தமிழ்வாணனும், இசையமைப்பாளர் யானி தேஷ்க்கும், பாடகி வந்தனாவிற்கும், பாடலாசிரியர் சுப்ரமணிய நந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதோ அந்தப் பாடல்


- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Thursday, May 17, 2012

புதிய சாட்டிலைட் சேனல்



எஸ் ஆர் எம் கல்லூரி நிறுவனர் திரு பச்சை முத்து அவர்களால் தொடங்கப்பட்ட ‘புதிய தலைமுறை’ பத்திரிக்கை பரவலாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. திறமைசாலிகளுக்கு மதிப்புக் கொடுத்த காரணத்தால், நல்ல கட்டுரைகள் வெளிவந்தன. ஆரம்பத்தில் நல்ல விஷயங்களோடு வெளியான பத்திரிக்கை, போகப் போக சலிப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் புரியாமல் குழம்பிய போதுதான், புதிய தலைமுறை சாட்டிலைட் செய்திச் சானல் வெளிவந்தது. பத்திரைக்கை பத்தோடு பனிரெண்டானது. டிவி சானல் எல்லோரும் சன் டிவியை விட அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார்கள். ஆனால் எனக்கொன்றும் அவ்வளவு பிரமாதமாய் இருப்பது போல தெரியவில்லை. இந்தச் சானலில் அதிகப் பிரசங்கித் தனமான செய்திகளும், சும்மா ஒப்பேற்றுவது போல நிகழ்ச்சிகளும், எல்லாம் தெரிந்த மேதாவித்தனமான வார்த்தைப் பிரயோகங்களும் வெளிப்பட்டன. 

எந்த ஒரு செய்திக்கும், நிகழ்ச்சிக்கும் நிறைவு என்ற ஒன்று உண்டு. அதை இவர்கள் கொடுக்கவே இல்லை. சானலில் வெளியாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிறைவற்ற தன்மையைக் காணலாம். மேலும் இவர்கள் அரசியல் பின்புலம் அற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கின்றார்கள். இந்தச் செய்தி சானலை உலகப் புகழ் பெறும் வகையில் நடத்தலாம். ஆனால் அதற்கான எந்த ஒரு முஸ்தீபும் புதிய வடிவும், நிகழ்ச்சிகளும் இதுவரை வரல்லை. 

இந்தப் பக்கமும் இல்லை அந்தப் பக்கமும் இல்லை நடு நிலை என்கிறார்கள்.’ஒப்புக்குச் சப்பாணி’ என்று தானே அர்த்தம் வரும். எது வரினும் உண்மையை உரக்கச் சொல்வோம் என்று புதிய தலைமுறை செய்திகள் வெளியிடாதவரை இதுவும் ஒரு சானலாகத்தான் இருக்கும். 

நேற்று நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் சொன்னார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிலர் வருவர். அவர்களால் இண்டஸ்ட்ரி புத்துணர்ச்சி பெற்று பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். சினிமா உலகினர் சுறுசுறுப்பாய் உழைப்பர். திமுக குடும்பம் சினிமாவில் ஈடுபட்ட காரணத்தால் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அதே போல டாக்டர் சீனிவாசன், ரித்தீஷ் போன்றோரால் நிறைய தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. காசைப் பற்றியோ, படத்தின் தரம் பற்றியோ கவலைப்படாமல் இவர்களைப் போன்றோர் எடுத்து தள்ளிய சினிமாக்களினால்  சினிமா தொழிலாளர்கள் இரவும் பகலும் உழைத்தார்கள். இப்படிப் போன்றோர் தமிழ் சினிமாவிற்கு அடிக்கடி வந்து செல்வர். அது போன்றே தமிழ் சினிமா உலகில் எஸ் ஆர் எம் க்ரூப்பும் ஈடுபட இருக்கின்றார்களாம்.

சானல்கள் இல்லாத காலத்தில் படம் நன்றாக இல்லையெனில் தயாரிப்பாளார் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சாலையில் போக வேண்டியதுதான். ஆனால் தற்போது டிவி சானல்கள், எஃப் எம் ரேடியோக்கள், வெளி நாட்டு உரிமை, டப்பிங் உரிமை, வேற்றுமொழி உரிமை என்கிற பல்வேறு விஷயங்களினால் போட்ட காசுக்கு பங்கம் வந்து விடாமல் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக் கொண்டனர். திமுக ஆட்சியில் இருக்கும் போது அரசியல் அதிகார பலத்தால் சன் டிவியும், கலைஞர் டிவியும் தாங்கள் விரும்பிய விலைக்கு திரைப்படங்களை வாங்கினார்கள் என்கிறார்கள். திமுக ஆட்சியின் முடிவிற்குப் பிறகு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீ ஆரோக்கியமானதாக மாறி இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றார்கள். பெரும் பணத்தினை முதலீடுகளாய் போட்டு திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மேலும் பல தமிழ் சாட்டிலைட் சேனல்கள் வருவது மன ஊக்கத்தினை தரும். போட்டி அதிகமிருக்கும் இடத்தில் நல்ல விலை கிடைக்கும் அல்லவா? 

சன், ராஜ், விஜய், கலைஞர், ஜெயா டிவிக்களின் சாட்டிலைட் உரிமைக்கான போட்டிக்கு மேலும் ஒரு சாட்டிலைட் சேனல் வரப்போகின்றதாம். எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் “வேந்தர் தொலைக்காட்சி” விரைவில் மலர இருக்கின்றதாம்.அவர்கள் பெரும் விலை கொடுத்து அரவான் திரைப்படத்தை வாங்கி இருப்பதாகவும், சகுனி படத்தின் விநியோக உரிமையுடன் சாட்டிலைட் உரிமையையும் வாங்கி இருப்பதாகவும் தமிழ் சினிமா உலகிலும், பத்திரிக்கை உலகிலும் பேசிக் கொள்கின்றார்கள். விரைவில் புதிய தலைமுறை செய்திச் சானலில் இது பற்றிய விளம்பரங்கள் வெளியாகலாம். 
திரைப்பட விநியோகஸ்தராகவும், டிவி சானல்களாகவும் மாற இருக்கும் ‘புதிய தலைமுறை’ குழுமத்தினர் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.

- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

Thursday, May 3, 2012

மோகமுள் திரைப்படமும் நாவலும்




மோகமுள்ளை இன்று தான் வாசித்து முடித்தேன். நிஷ்டையில் இருந்தாட்போல மனது ஒரு முகப்பட்டு இருந்தது. 

ஒரு நாவல் அதுவும் கருப்பு மையிட்ட எழுத்துக்கள் படிக்கும் வாசகனின் மனதை நிஷ்டையில் கொண்டு போய் விடும் என்று உணர முடிந்தது.

படிக்கும் போதே கவட்டிக்குள் குமுற வைக்கும் எழுத்துக்களையும், படங்களையும் பார்த்துப் பார்த்தே மனது இது போன்ற நாவல்களைப் படிக்க முனைய மாட்டேன் என்கிறது.

ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்த போது முகத்தில் அறைந்த, நம்மை அடுத்த இன்னொரு உலகத்தினை அறிந்து கொண்ட அதிர்ச்சி என்னை விட்டு நீங்க இரண்டு நாட்களானது. அடுத்து இந்த நாவல் ! 

நாவல் மனதோடு இழைகிறது. காவிரிக்கரை, பாப நாசம், கும்பகோணம், தஞ்சாவூர் கண்ணை விட்டு அகலமாட்டேன் என்கிறது. திரைப்பட படப்பிடிப்பின் போது கும்பகோணம் எல்லையில் ஒரு நாள் ஷூட்டிங் சென்றிருந்த போது காவிரியின் அழகை காண நேர்ந்தது. சுழித்து ஓடும் காவிரியைக் கண்டாலே மனது அவள் மீது லயித்துப் போய் விடும்.

திருவையாறில் சின்னஞ் சிறு வயதில் அப்பாவின் திதிக்குச் சென்றிருந்த போது கரை நிரம்பி தளும்பிச் சென்ற காவிரின் அகண்ட பருவம் இன்றைக்கும் மனதை விட்டு அகலவே இல்லை. விடிகாலைப் பொழுதில் சற்றே குளிர்ந்த தண்ணீரில் முங்கி எழுந்த அனுபவத்தின் சிலிர்ப்பு இந்த எழுத்தை எழுதும் போது கூட உணர முடிகிறது. 

திஜாவின் எழுத்தில் காவிரியின் கரையோர ஊர்கள் கண் முன்னே நர்த்தனமாடுகின்றன. 

ஞானராஜசேகரனின் திரப்பட மோகமுள்ளைப் பார்த்துப் பார்த்து “அர்ச்சனாவை” யமுனாவாக நினைவில் அச்சாய் பதிந்து போய் விட்டது. அர்ச்சனாவின் சாயலை மனதில் இருந்து நீக்க படாத பாடு பட்டேன். ஒரு வழியான அர்ச்சனா மறைந்து போய் யமுனா ஆக்ரமித்து விட்டாள். பாபு கொண்ட காதலைப் போல யமுனாவின் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

திரை யமுனாவிற்கும், நாவல் யமுனாவிற்கு ஏணி வைத்தால் கூட எட்டவே எட்டாது.வாழைத்தண்டு பாதம் என்பதெல்லாம் திரை “அர்ச்சனாவிடம்” இல்லவே இல்லை. அர்ச்சனா ஒரு விதமான சோகத்தைப் பிழியும் முகம் கொண்டவர். ஆனால் திஜாவின் யமுனா மனித உருவில் இருக்கும் இறைவி போன்றவள்.

பாபு தன்னை விட 10 வயது அதிகமான யமுனாவைக் காதலிப்பது தானே முக்கியமான கரு என்றார் நண்பர். இது சரியும் அல்ல, தவறும் அல்ல, விதி விலக்கு என்றார். பாபுவின் காதல் பொருந்தாக் காதல் என்றார்.

காதலில் பொருந்தாக்காதல் என்று ஏதாவது இருக்கிறதா என்ன? 

சிக்கலான பல முடிச்சுக்களை போட்டுப் போட்டு மனிதன் தனக்குள்ளே பல சிக்கல்களை உருவாக்கி வாழ்க்கையை அபத்தமாக்கி வைத்திருப்பதன் நோக்கம் எனக்கு இது வரை புலப்படவே இல்லை.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்



Tuesday, May 1, 2012

யமுனாவின் மீதான மோகம் தீரவில்லை



கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சந்தர்ப்பவசமாய் யமுனா என்னிடம் சிக்கிக் கொண்டாள்.

எங்களூர் பட்டிக்காட்டு கிராமம். படிப்பறிவு கொஞ்சம் கம்மியாக இருந்த கால கட்டத்தில் பிறந்த காரணத்தால் புத்தக வாசனை பள்ளிக்கூடத்தின் மூலமாகவே கிடைத்தது. மூன்றாவது படிக்கும் போது என்று நம்புகிறேன், ராணி காமிக்ஸ் அறிமுகமாகி அன்றிலிருந்து காமிக்ஸ்ஸின் ரகசிய ரசிகனானேன். மாமாவோ பாடப்புத்தகத்தை தவிர வேறு புத்தகத்தைக் கையில் பார்த்து விட்டார் என்றால் மண்டையில் அழுந்த ஒரு குட்டுப் போடுவார்.  மாமாவின் குட்டுக்குப் பயந்து மர பீரோவின் அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சில கிழிந்து போன, கசங்கிப் போன காமிக்ஸ் புத்தகங்கள். எல்லாம் தெரிந்த மாமா இதுவரையிலும் மரபீரோவின் அடியில் எதையும் தேடுவதே இல்லை. ஏன் என்று எனக்கு இன்றைக்கும் புரியவில்லை.

இப்படியான ஹிட்லர் வீட்டில், அக்கா மூலம் என்றோ ஒரு நாள் அறிமுகமானது மாலைமதி. அந்தக் கதை இன்றைக்கும் என் மனதை விட்டு அகலவில்லை. ஏன் என்று தெரியவில்லை. பழைய புத்தக கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாலைமதி கிடைத்து விடுமா என்ற நப்பாசையில் தேடிப் பார்ப்பேன். கிடைக்காது. செல்லம்மாவின் சமையல் குறிப்புகளாவது கிடைக்குமா என்று கூட பக்கங்களில் படருவேன். செல்லம்மா கால ஓட்டத்தில் காணாமல் போகும் குழந்தைப் பருவ நினைவுகள் போல காணாமல் போய்விட்டார்.

தொடர்ந்து எழுத்தாளர் சுபாவின் நாவல்களும், அட்டைப்படத்தின் மூலம் கேவி ஆனந்த்தும் எனக்கு தெரிய வந்தனர். சுபாவின் நாவல்களின் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் படு அசத்தலாய் இருக்கும். ஆரம்ப கட்டம் அல்லவா? பார்க்கும் புத்தகங்கள் எல்லாம் திகிலைக் கிளப்பிக் கொண்டிருந்தன. சுபாவின் தூண்டில் முள் நாவல் என்னை கலவரப்படுத்திய ஒன்று. அவரிடமிருந்து என் கடிதத்திற்கு ஒரு பதில் கடிதம் கூட வந்தது. அதன் பிறகு அவர் எழுத்தின் மீதான வாசிப்பு எனக்கு திகட்ட ஆரம்பித்தது. நரேன், வைஜெயந்தியின் உரையாடல்கள் அலுப்பினைத் தர ஆரம்பித்தது. நரேனின் சாகசங்கள் வயதானது போல தோன்றின. பிகேபியின் பரத், சுசீலா கூட அப்படித்தான் ஆகிப் போனார்கள்.

தொடர்ந்த என் வாசிப்பு, கல்லூரிப் படிப்பின் போது, ஜானகி ராமனின் மோகமுள் புத்தகத்தில் வந்து நின்றது. பூண்டிக் கல்லூரியின் நூலகருக்கு எனக்கு பதில் சொல்லிச் சொல்லியே சலித்து இருக்கும். மூன்று வருடப் படிப்பின் போது ஜானகிராமனின் மோகமுள் என்னிடம் சிக்கவே இல்லை. ஆனால் மோகமுள்ளின் மீதான பிறரின் பார்வைகள் மிகப் பெரும் ரகசிய ஆர்வத்தை அதன் மீது ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. குமுதத்தில் வெளி வந்த மோகமுள் திரைப்படத்தின் கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் எனது டைரியின் பக்கத்தில் நிரந்தரமாய் படமாக ஒட்டிக் கொண்டாள். அவளைப் பார்க்காது டைரியில் ஒரு எழுத்துக் கூட எழுத மாட்டேன்.

வாழ்க்கைச் சூழலின் மாறுபாட்டினால் கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாணம் முடிந்து ஓடிக் கொண்டிருந்த போது, மோகமுள் மனதின் அடியாளத்தில் புதைந்து போய்க் கிடந்தது.

பவர் கட்டின் பிரதிபலனாக பல நூல்களைப் படிக்க வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டேன். வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்து புத்தக அலமாரியை அணுகிய போது மனதுக்குள் ஒளிந்து கிடந்த “மோகமுள்” மெதுவாக வெளிவந்தது. நூலகரிடம் விசாரித்த போது இல்லையென்ற பதில் மோகமுள்ளின் மீதான ஆவலை மேலும் அதிகப்படுத்தியது.

இப்படியான தேடலில் போன சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் பிடித்தே விட்டேன் மோகமுள்ளை. யமுனாவின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தழுவிக் கொள்ள, திரைப்பட மோகமுள் யமுனாவிற்கும் ஜானகிராமனின் மோகமுள் யமுனாவிற்கும் எந்த வித தொடர்பும் இன்றி இருப்பதைக் கண்டு மனது அதிர்ந்தது.

ஜானகி ராமனின் யமுனா ஒரு முழு நிலவு(?). அவளைத் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். 20 வருட ரகசியப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


குறிப்பு : மோகமுள் திரைப்பட கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் ஒரு கதக் நடன மாது. அவரின் வெப்சைட்டை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதோ அவரின் வெப்சைட் முகவரி.







Saturday, April 28, 2012

மனதுக்கு வலி தரும் காதல்

மூளை முதல் கொண்டு நரம்புகள் அனைத்தும் விரைத்து இதயம் துடி துடிக்க, உதிர அணுக்கள் எல்லாம் காதலியின் பெயரை உச்சரித்துக் கொண்டு உடம்பெல்லாம் பரவ, உதிரச் சூட்டின் வலி தாளாமல் உடல் சோர்ந்து வீழ, மனது வெந்து வெதும்பி வீழ, காதலியின் வருகைக்காக வரும் வழி பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப் போக, காதலியின் குரல் கேளாமையால் காதுகள் எல்லாம் பஞ்சடைத்து போக மொத்தத்தில் அவளின் நினைவாலே உருமாறிப் போய் நிற்கும் காதலனின் தவிப்பை கமல் இக்காட்சிகளின் வழியே உருவகப்படுத்துவார்.

இதோ அந்தப் பாடலும் காட்சியும் உங்களுக்காக.



- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்

Saturday, March 3, 2012

காதலில் சொதப்புவது எப்படி? - 2

அறம், பொருள், இன்பம் என்று வரிசைப்படுத்தி உலகப் பொதுமறையை எழுதினார் திருவள்ளுவர். முதலில் அறம், அதன் படி பொருள், பின்னர் காதலின்பம் என்று வாழ்வியலை வரிசைப்படுத்தினார். ஆனால் இன்றோ முதலில் காதல், பின்னர் கொடுஞ்செயல் செய்து பொருள் என்று வாழ்வியல் முறை தவறிக் கிடக்கிறது.

”ஒரு பெண்ணிடத்தில் நீக்க முடியாத காதல் கொண்டு, அவள் காதலைத் தான் பெறாது போய் விட்ட போது, அவன் பனையின் கருக்குமட்டைகளை எடுத்து அவற்றைக் கொண்டு குதிரை உருவம் ஒன்று செய்வான். அதில் மணிகளும் மயிலிறகுகளும் வைத்து ஒப்பனை செய்து, கடிவாளம் போல ஒரு கயிற்றை அதன் மீது மாட்டிக் கொண்டு, தெருவழியாக அதன் மீது ஊர்வான். ஊரும் போது தன் காதலி மீது காதற்பாட்டுக்களைப் பாடிக் கொண்டே செல்வான்.

இக்காட்சி கண்டு சில சமயம் காதலியே இரங்கி மனமாறுவதுண்டு. அல்லது அவள் உறவினர் அவனை மணம் செய்யும்படி அவளைத் தூண்டுவர். ஆனால் காதலை இந்த அளவு வெளிப்படுத்தியும் காதலி அவனிடம் கனிவு காட்டவில்லையானால், அவன் செங்குத்தான குன்றிலிருந்து வீழ்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வான்.”

( நன்றி : ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - திரு வி.கனகசபை (1962) )

பாரதி சொன்னான் “காதல் காதல் காதல், காதல் இல்லையென்றால் சாதல் சாதல் சாதல்”. இப்படியான கலாச்சாரத்தில் பிரேக் அப் என்கிற காதலைப் பற்றி சொல்கிறது. காதல் மணம் முறிந்து சென்றால் அடுத்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் உயர்ந்த குன்றிலேறி தற்கொலை செய்து கொண்ட ஆணின் அறம் எங்கே, இப்படத்தில் அடுத்தவனைத் திருமணம் செய்து கொள்ள விழையும் பெண்ணின் அறம் எங்கே?

அடுத்து காதலைச் சொல்லும் வழி பற்றியது.

பார்வையிலே காதலை சொல்லுவது (காட்டுவது) பற்றி திருவள்ளுவர் காமத்துப்பாலில் விரிவாக எழுதி இருக்கிறார். மயிலாள் விழிகளை கொல்லும் கூற்றுவன் அம்புகளுக்கு இணையானது என்கிறார் அவர்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு. - திருக்குறள் காமத்துப்பால் (1083)

கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை. - கலைஞர் உரை

முதற்பகுதியில் கன்னியொருத்தி காளையொறுவன் தன் மீது கொண்ட காதலை எப்படி நயத்தகு முறையில் உறுதிப் படுத்துகிறாள் என்பதைப் படித்தீர்கள். ஆனால் இன்றைய சினிமாவில் காதல் வயப்படுவது எப்படிக் காட்டப்படுகிறது?

ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்த்தால் காதல் வந்து விடும் என்கிறார் ரஜினி. பெண்ணே தேடித் தேடித்தேடிப் போய் அலைந்து திரிய வேண்டுமென்கிறார்கள். போனால் போவுது உன்னைக் காதலிக்கிறேன் என்கிறார் அஜீத் குமார். பெரும்பான்மையான தமிழ் சினிமாக்காதல் காட்சிகளை ஒரு நிமிடம் மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள். அபத்தங்கள் புரியும்.

கற்பு என்பது பெண்ணுறுப்பை சிதைப்பதால் சீரழிந்து விடுவது அல்ல. ஆணுக்கும் பெண்ணுக்குமான அறத்தின் பெயர்தான் கற்பு. இயற்கை எப்படி ஒரு கட்டுக்குள் இயங்குகிறதோ மனிதனின் அக்கட்டுக்குள் இயங்கினால் அவன் வாழ்க்கை சீராக்கி அமைதியாய் வாழ்வான். அதில் சில கொடுமைகள் இருக்கின்றன. வாய் வழிச் சொல் எப்படி ஒரு மூலச் சொல்லை பாழ் படுத்தி விடுகிறதோ அது போல அந்தக் கொடுமைகள் தொடர்ந்து வந்து விடுகின்றன. அதையெல்லாம் பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

இன்றைய திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல கேவலமான முறையில் காதல் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. நாங்கள் நடப்பதைத்தான் காட்டுகிறோம் என்பார்கள். அயோக்கியத்தனம் செய்வதற்கு தயரானவர்களுக்கு சமூகத்தின் மீதான பிடிப்பு இருப்பதில்லை. அமைதியான வாழ்க்கைத் தந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஏதாவது செய்து விட்டுப் போவோம் என்ற அக்கறையின்று இன்றைக்கு என்ன கிடைக்கிறது என்பதை மட்டுமே கவனத்தில் கொள்கின்றார்கள்.

பெரும்பாலானோர் இப்படத்தை ஒரு நல்ல படம் என்கிறார்கள். கல்லூரிகள் காதற்களமாய் உருவகப்படுத்தி காட்டப்படுகின்றன. கோயிலாய் காட்ட வேண்டிய இடம் கேவலமானதாய், வாழ்க்கைச் சீரழிக்கும் இடமாய் காட்டப்படுகிறது. படிக்கின்ற வயதில் காதல் கொண்டால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை எல்லாம் சினிமா காட்டுவதில்லை. ஆரம்பத்தில் பதிவில் படித்த காதற் காட்சிகளையும் இப்படத்தினையும் ஒரு நிமிடம் படம் பார்த்தவர்கள் ஒப்பிட்டுப்பாருங்கள். உலகத்திற்கே உதாரணமாய் திகழ்ந்த நம் தமிழ்க் கலாச்சாரத்தை இப்படம் எந்தளவுக்கு தரம் தாழ்த்தி இருக்கிறது என்பது புரிய வரும். இதை ஒரு சிறந்த படம் என்று எப்படிக் கூற முடியும்?

மிட்டாய் கடையில் விற்கப்படும் பலப்பல பலப்பங்கள் போலத் தான் தற்போதையை திரைப்படங்கள் வெளியாகின்றன. அவைகளில் தமிழர்களும் தமிழ் கலாச்சாரமும் உருவகப் படுத்துவது இல்லை. இப்பேர்ப்பட்ட கலாச்சார மேன்மையுடை சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பது கூட இல்லை. அதைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லை.

யூதர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தங்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் காப்பாற்ற புலவர்களையும், கல்வியாளர்களையும் பெரும் துன்பத்திலும் கூட பிறர் அறியாவண்ணம் காப்பாற்றி தங்களின் வாழ்க்கையை, முறையை எழுத்தில் வடித்தும், ஆவணமாக்கியும் பாதுகாத்து வந்தார்களாம். அவர்கள் எங்கே, நாம் எங்கே?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Friday, March 2, 2012

காதலில் சொதப்புவது எப்படியும் மிட்டாய் கடையும் (A) - 1



( Art By Khalil Gibran )

ஒரு காலத்தில் தமிழ் கலாச்சாரம் உலகின் உன்னத கலாச்சாரமாய் மிளிர்ந்தது. இன்றைக்கு வெட்கம் என்றால் விலை என்ன என்று கேட்கும் பெண்களைப் பார்க்கிறோம். உடல் பிதுங்கி வெளித் தெரியும் உடைகள், சூழ் நிலைக்கு ஒவ்வாத உடையலங்காரம், சிகையலங்காரம் போன்றவற்றினால் நாங்கள் நாகரீகம் மிக்கவர்கள் என்று பெருமையடித்துக் கொள்கின்றார்கள் இன்றைய பெண்கள். தங்களின் பெண் குழந்தைகள் முலை தெரிய, குண்டிகள் பிதுங்கி வெளியில் தெரிய, பெண்ணுறுப்பு முட்டிக் கொண்டு தெரிய உடை அணிவதை பெற்றோர்கள் பெருமையாய் நினைக்கின்றார்கள். நேற்றையச் செய்திதாளில் வகுப்புத் தோழன் தன் தோழிக்கு லிக்கர் கொடுத்து மயக்கப்படுத்தி தானும் தன் நண்பர்களுமாய் சேர்ந்து காருக்குள் வைத்து உறவு கொண்டிருக்கின்றான் என்றும், அவனைக் காவல்துறைக் கைது செய்திருக்கிறது என்றும் செய்தி வந்திருந்தது. ஏன் அப்பெண்ணுக்கு இந்த நிலை வந்தது? யோசிக்கணும்.

நாகரீக மோகத்தில் மூழ்கித் திளைக்கும் தமிழ்ச் சமூகம் பெண்கள் பலபேரோடு படுப்பதையும் இனி நாகரீகமாய் மாற்றி விடும். அல்லது மாதம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்வதும் நாகரீகம் என்றும் சொல்லக்கூடும். அது தான் சுதந்திரம் என்றும் பேசக்கூடும். கூடும் என்ன இப்போதே அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சுப்ரமண்யபுரம் என்ற படத்தில் கண்களால் பார்த்துக் கொண்டே நடைபயின்ற நடிகையைக் காட்டி இதைப் போன்றொதொரு பெண் எனக்கு திருமணம் செய்யக் கிடைப்பாளா என்று கேட்டவர்களும் உண்டு.

பண்டைய தமிழகத்தில் தமிழர்களின் சமூக வாழ்க்கையில் காதலைப் பற்றி பல நூல்களில் காணக்கிடக்கும் ஒரு சில காட்சிகளை முதலில் காணலாம்.

இதோ ஒரு காதல் காட்சியை காதல் கொண்ட இளம் நங்கையாள் ஒருத்தி சொல்கிறாள். கேளுங்கள் !

“காயாம்பூ ஒத்த கருவிழி நங்காய், கேள் !”

“அழகிய மாலையணிந்து வில் ஏந்தியவனாய் ஏதோ வேட்டையைத் தொடர்ந்து வந்தவன் போல ஓர் இளைஞன் என் முன் வருவான். வந்து கனிவுடன் நீண்ட நேரம் என்னை நோக்குவான். ஆனால் ஒரு சொல்கூடச் சொல்லாமல் சென்று விடுவான். அவனைப் பற்றிய எண்ணம் என் உறக்கத்தையே கெடுத்தது. நான் உள்ளூரத் துயரடைந்தேன். அவன் தன் காதலைக் கண்ணினால் தெரிவித்தானே யன்றி, நாவால் உறைப்பதில்லை. நானும் பெண்ணாய் இருப்பதினால் நாணம் காரணமாக அவனை எவ்வளவு காதலிக்கிறேன் என்று அவனிடம் கூறமுடியவில்லை.”

“மறைவான என் காதலின் துன்பம் பொறுக்கமாட்டாமல் நான் செய்த ஒரு செயல் இப்போது நினைத்தால் கூட வெட்கப்படத் தக்கதாயிருக்கிறது. ஒரு நாள் நான் நம் பண்ணையருகில் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தேன். அவன் வழக்கம் போல என் முன்வந்து நின்றான். நான் அவனை அழைத்து, “ஐய என்னை ஊஞ்சலில் சிறிது ஆட்டி விடு” என்றேன். மகிழ்ச்சியுடன் “அப்படியே செய்கிறேன்” என்று கூறி அவன் ஊசலாட்டினான். அப்போது நான் ஊசலிலிருந்து நழுவி விழுபவள் போல நடித்து அவன் தோள்கள் மீது விழுந்தேன்.”

“அவன் என்னை உடனே தன் கைகளால் இறுகப் பிடித்தான். நானும் உணர்விழந்தவள் போல அவன் தோள் மீது கிடந்தேன். அவன் என்னை மேலும் இறுக அணைத்துக் கொண்டான். ஆனால் நான் கண் விழித்ததும் கனிவுடன் தடவிக் கொடுத்துப் போகும்படி விட்டு விட்டான். ஆனால் என்னை ஆர்வமாகத் தானும் காதலிப்பதை அவன் செயல் உறுதியாகக் காட்டி விட்டது”

அடுத்து இன்னும் ஒரு கொலைக்கார காதல் காட்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அதை நாளை எழுதுகிறேன்.
 
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, February 20, 2012

அருவி - ஒரு ஒன்லைன் கதை

நடு நிசி. யாரோ தண்ணீருக்குள் நடக்கும் பொலக் பொலக் சத்தம். உற்றுப் பார்த்தால் இரண்டு உருவங்கள் கண்மாய்க்குள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு உருவமும் ஜட்டி மட்டும் அணிந்திருக்கின்றன. மேலே ஒன்றுமில்லை. ஒரு உருவத்தின் தோளில் சாக்குப் பை போல ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொரு உருவம் தண்ணீருக்குள் கை விட்டு துலாவிக் கொண்டே நடக்கிறது.

ஒரு உருவம் கையை மேலே தூக்க, முரட்டு மீன் நிலவொளியில் துள்ளுகிறது. அதைப்  பிடித்து கோணிக்குள் திணிக்கும் போது, யாரங்கே?ன்னு” குரல் கேட்க, குரல் கேட்ட திசையைப் பார்க்க, அங்கு கையில் கம்போடு சத்தம் போட்டுக் கொண்டே ஒரு உருவம் ஓடி வருவதைப் பார்த்த இரு உருவமும், அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகின்றன.

வாய்க்கால், வரப்புகளைத் தாண்டி மரங்கள் சூழ்ந்த பகுதிக்குள் நுழைந்த அந்த உருவங்கள் ஓரிடத்தில் மூச்சு வாங்க நிற்கின்றன. அவர்கள்தான் முத்தையன்,மல்லையன். முத்தையன் மல்லையனைப் பார்த்து மூச்சு வாங்க வெற்றிப் புன்னகை பூக்கிறான். மல்லையன் அப்படியே தரையில் விழுகிறான்.

கோணிப்பைக்குளிருந்து இரண்டு விரால் மீன்கள் நழுவி வெளியில் வருகின்றன.இருவரும் வெற்றிப் பெருமிதத்தோடு அந்த மீன்களைப் பார்க்கின்றனர்.

காலையில் முத்தையன் ஊருக்குள் வரும் காவல்துறையினர், முத்தையனையும் மல்லையனையும் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.

காவல்துறையினர் எப்படி சரியாக இருவரையும் அடையாளம் கண்டார்கள்? மீன் பிடித்ததற்காகவா காவல்துறை இவர்களைக் கைது செய்தது? ஏன் கைது செய்தது? என்ன காரணம்? (கதையின் நகர்வு இந்தப் பிரச்சினையை வைத்துதான் நகர்கிறது) 

முத்தையன் இளம் வாலிபன். மல்லையன் முத்தையனின் பக்கத்து வீட்டுக்கார தோழன். முத்தையன் எள்ளலும், எகத்தாளமும் உடையவன். அவனுக்கு சரியாக மல்லையன். முத்தையனின் அப்பாவிற்கு இருக்கும் நிலங்கள் மூலமாய் வருமானம் வருவதால் சாப்பாடு மற்றும் இன்னபிற செலவுகளுக்கு முத்தையனுக்குப் பிரச்சினை இல்லை. ஊர் சுற்றல், அங்கங்கே ரகளை என்று திரிகின்றவன். இப்படியான நாட்களில் ஒரு நாள், கட்சிக்காரர் ஒருவரைப் பகைத்துக் கொள்கிறான். கட்சிகாரருக்கு முத்தையனைக் கண்டாலே ஆவதில்லை. அதே போல முத்தையன் கட்சிக்காரரைப் பார்த்தாலே எரிமலையாகி விடுவான்.

இதற்கிடையில் வீரபாண்டி என்பவரைச் சந்திக்கும் முத்தையன் அவருடன் கைகோர்க்கிறான். அதன் காரணமாய் அவன் அரசுக்கு எதிரான தீச்செயல்களில் ஈடுபடுகிறான். முத்தையன் அப்பாவின் நண்பர் ஏட்டாக இருக்கிறார். அவர் முத்தையனின்  நட்பு பற்றி, அப்பாவிடம் சொல்லி அவனைக் கண்டித்து வைக்கும்படிச் சொல்கிறார்.

முத்தையனின் அப்பாவும், அம்மாவும் அவனுக்கு திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார்கள். அதன்படி பக்கத்து ஊரில் இருக்கும் தன் உறவினரிடம் பெண் பார்க்கச் சொல்ல, அவர்களும் முத்தையனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைச் சொல்ல முத்தையனை வற்புறுத்திப் பெண் பார்க்கச் செல்லும்படிச் சொல்கின்றார்கள் பெற்றோர்கள்.

முத்தையன் அருவியைச் சந்திக்கிறான். அருவி குணத்தால் அழகானவள். படுரகளையானவள். ஏட்டிக்குப் போட்டி என்றாள் அருவிதான். அத்தனையும் குறும்பு. முத்தையனின் முரட்டுத்தனமும், அருவியின் குறும்பத்தனமும் ஒன்று சேர, காதலில் விழுகின்றார்கள். காதலியைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் அவனுக்கு ஏதாகிலும் ஒரு பிரச்சினை வந்து, அவளைச் சந்திக்க விடாமல் தடுத்து விடுகிறது. ஏன் இப்படியாய் பிரச்சினை வருகிறது என்பது அவனுக்குப் பெரும் புதிராய் இருக்கிறது.

காதலியைச் சந்திக்க விடாமல் தடுப்பது எது? யார்? ஏன்? எதற்கு? 

முத்தையன் வீட்டில் திருமணத் தேதியைக் குறிக்க நாள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, வீரபாண்டியுடன் அரசுக்கு எதிரான ஒரு சம்பவத்தில் சிக்கிக் கொள்கிறான் முத்தையன். இதன் காரணமாய் முத்தையன் அந்தப் பகுதி முழுவதும் பிரபல்யமாகின்றான்.காவல்துறை முத்தையனைத் தேடுகிறது.

தேதி குறிக்கச் செல்லும் முத்தையன் அங்கு தனக்கு மனைவியாக வரப்போகிற அருவி, தன்னால் முன்பு வெறுக்கப்பட்ட கட்சிக்காரரின் மகள் என்பதையும், அந்தக் கட்சிக்காரர் தன்னுடைய உறவினர் என்பதையும் அறிகிறான்.

ஆரம்பத்தில் காவல்துறை ஏன் முத்தையனைக் கைது செய்தது? யார் அந்த வீரபாண்டி? அவர் ஏன் அரசுக்கு எதிராய் நடக்கிறார்? இவர் கூட முத்தையன் ஏன் சேர்ந்தான்?  காவல்துறையினரையின் வழக்கிலிருந்து எப்படித் தப்பித்தான்? தன்னை வெறுத்த கட்சிக்காரரின் மகளை எப்படித் திருமணம் செய்தான்?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்