எம் தமிழ்ப்பெண்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது, இடுப்பில் வெற்றிலை போன்று தங்கத்தில் செய்து அணிந்திருப்பார்கள். பருவ வயதுப் பெண்கள் தாவணி உடுத்தி மஞ்சள் பூசி இருப்பார்கள். வீட்டு வேலையின் போது கணுக்கால் தெரியும் படி பாவாடையை இடுப்பில் செருகி இருப்பார்கள். கெண்டைக்கால் கூடத் தெரியாது. புதிய ஆண்கள் வீட்டுக்கு வரும் போது கண்கள் மட்டுமே வெளியில் தெரியும்படி நின்று கொண்டு பேசுவார்கள். பெண்களின் முகங்கள் தேஜஸ்சில் ஜொலிக்கும். திருமணமான பெண்கள் மெட்டி ஒலிக்க உடம்பு அதிரா வண்ணம் காற்றில் மிதந்து வருவார்கள். இப்படித்தான் நான் என் சிறுவயதில் கண்டு, பழகிய பெண்களைப் பார்த்திருக்கிறேன். என் சகோதரிகளும், அம்மாவும், உறவுப் பெண்களும் இப்படித்தான் இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கின்றார்கள்.
உடல் அதிர ஓடியோ அல்லது நடந்தோ கூட நான் பார்த்தது இல்லை. இது தமிழ்ப் பெண்களின் அடையாளம் என நான் அறிந்திருந்தேன். எம் தமிழ்பெண்களை இளையராஜா என்கிற ஓவியக்கலைஞர் அழகாக பட்டை தீட்டி இருந்தார். அந்தப் புகைப்படங்கள் கீழே !
(ஓவியம் : இளையராஜா - நன்றி)
பத்து நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் லைவ் நாடகமான ”பிக் பாஸ்” நிகழ்ச்சியை வீட்டில் பார்க்கின்றார்கள். நேற்று தூக்கம் வரவில்லை என்பதற்காக நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். மும்தாஜை வைத்து டெம்ப்ட் ஏற்ற ஏற்பாடு செய்திருப்பதைக் கண்டு கொண்டேன். அவருடன் மமதிசாரி என்றொரு (இது யாரென்று தெரியவில்லை) பெண்ணைப் பார்த்தேன்.
பிக் பாஸ் பணிப்பெண்ணாக இருக்க வேண்டும் எனக் கொடுத்த டாஸ்க்கில் இவர் ”தான் தன் கணவனைத் தவிர வேறு எவரையும் தொட மாட்டேன் என்றும், நான் தமிழ்ப்பெண்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது பணிப்பெண்ணாக ஆண்களுக்கு சேவை செய்ய மாட்டாராம். அவர் தமிழ்ப் பெண்ணாம். இத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை.
ஒரு சில பெண்கள் பெண் சுதந்திரப் பைத்தியம் பிடித்து நாறிப்போவார்கள். அதில் இவர் ஒருவர் என்று நினைத்துக் கொள்ளலாம். மும்தாஜ் மற்றும் மமதியினால் தான் ஷாப்பிங்க் செய்யும் டாஸ்க்கில் தோற்றுப் போய் பணிப்பெண் தண்டனையை, பெண்கள் அனைவரும் டாஸ்காகச் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஸ்கிரிப்ட் படி நடிக்கிறார்கள். பிக் பாஸ் இந்த ஸ்கிரிப்டில் இருக்கும் பிழையினைக் கவனிக்காமல் விட்டு விட்டார்.
கடந்த பிக் பாஸ் சீசனில் நடித்த ஜூலியைக் கூட ஒரு வகையாக சகித்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த மமதிசாரியின் சேட்டைகள் பெண்கள் மீது வெறுப்பினை உண்டாக்கும் அளவுக்கு எரிச்சலின் உச்சத்தில் தள்ளுகிறது. மும்தாஜுடன் அவரின் கேணங்கிச் சேட்டைகளைச் சகித்துக் கொள்ளவே முடியாது. அவ்வளவு ஒரு கேவலமான நடிப்புச் சேட்டை. பேச்சு அதற்கும் மேல். நான் தமிழ்ப்பெண் என்பதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. மாலையில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மமதி சாரி காலையில் சொன்ன நான் தமிழ்ப்பெண் என்ற வார்த்தை மாலையில் அவர் தன்னை எப்படி வெளிப்படுத்தினார் என்பதைக் கீழே இருக்கும் புகைப்படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
(புகைப்பட உதவி : பிக்பாஸ் - விஜய் டிவி - ஹாட்ஸ்டார்)
இணையத்தில் இவரைப் பற்றித் தேடினேன் பிராமின் பொண்ணாம். டிவியில் எல்லாம் வந்திருக்கிறதாம் என்று எழுதி இருந்தார்கள். நான் கண்ட பிராமின் பெண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கின்றார்கள்.
மமதிசாரி சொன்ன தமிழ்பெண் என்பவர் எம் தமிழ்ச்சமூகத்தைக் கேவலப்படுத்தும் சொல். தமிழ்பெண் என்பவள் இளையராஜா வரைந்த ஓவியம் போலத்தான் இருப்பார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால சமூகம் தமிழ்பெண் என்றால் இவரைப்போல இருப்பார்களோ என்று தவறுதலான முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதால் ஒரு ஒப்பீட்டுக்காக இப்பதிவினை எழுதுகிறேன்.
எனக்கு குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது மிகுந்த மதிப்பு உண்டு. ஏனென்றால் இவைகள் தான் இதுகாறும் மனித சமூகத்தின் மேன்மைக்கு பாதுகாவலனாய் இருக்கின்றன. ஆங்காங்கே நடக்கும் ஒரு சில தவறுதலான விஷயங்களால் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீதான நம்பிக்கை குறைவான விமர்சனங்கள் வரலாம். அது பெரும்பான்மையாக இருக்க முடியாது என்பது எனது எண்ணம்.
மமதி சாரி நவீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தமாக தன்னை தமிழ்பெண் என்றுச் சொல்லிக் கொண்டு அதன் அடையாளங்களை அழிக்க முற்படுவது சரியல்ல. அவர் தான் பேசும் சொல்லுக்கு இருக்கும் அர்த்தத்தை உணர்ந்து பேச வேண்டும்.