குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அட்டகத்தி. Show all posts
Showing posts with label அட்டகத்தி. Show all posts

Thursday, August 16, 2012

அட்டகத்தி திரைப்படம்

அழகான, அற்புதமான ஒரு பாசச் சந்திப்பின் பின்பு நானும் எனது நண்பரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கோவை சிங்காநல்லூரில் இருக்கும் அம்பாள் சினி தியேட்டர் கூட்டத்தால் நிரம்பிக் கொண்டிருந்தது. நண்பர், அட்டகத்தி பார்ப்போமா என்றார். 

தியாகராஜர் காலத்திலிருந்து இன்று வரை காதல் காதல் காதல் என்றே தமிழ் சினிமா உலகம் படமாய் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. தமிழனுக்கு காதல் செய்வதே முழு முதல் தொழிலாய் மாறி இருக்கிறது. சிறிய வயதில் இருந்து உனக்கு20 எனக்கு 40 என்பது வரையும், முதல் மரியாதை காதல் என்பதாகவும் தமிழ் சினிமா உலகம் காதல் போதையில் ஊறி ஊறி அதிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சின்னஞ் சிறு குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் குஷி படத்தில் இயக்குனர் காதலைக் காட்டி தன் இயக்குனர் திறமையை வெளிப்படுத்தினார். அந்த வகையில் வந்த மற்றொரு படம் தான் அட்டகத்தி.

விடலைப் பருவத்தில் பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்க முயல்வோம் அல்லவா அதை ஹீரோ செய்கிறார். ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டே செய்கிறார். ஒரு பெண் கூட அவரைக் காதலிக்கவே இல்லை. இடைவேளைக்குப் பிறகு கல்லூரி செல்லும் ஹீரோ முன்பு தன்னை அண்ணன் என்றுச் சொல்லிய ஹீரோயினை மீண்டும் சந்திக்கிறார். ஹீரோயினின் சில சைகளை கண்டு அவள் தன்னைக் காதலிக்கிறார் என்று நினைத்து அவளின் மீது காதல் கொள்கிறார். முடிவில் பார்த்தால் தன் பெயரைக் கொண்ட வேறொருவரை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். விரக்தி அடையும் ஹீரோவை ஒரு பிச்சைக்காரன் என் பெண்ணைக் கட்டிக்கோ என்றுச் சொல்லும் போது ஹீரோ சிரிக்கிறார். அப்புறம் அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது. 

அட்டகத்தியை கீழே வரும் பாடலில் அடக்கி விடலாம்.

”ஆள்வார்ப்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா, ஒரே காதல் ஊரில் இல்லையடா” - என்ற கமல்ஹாசனின் பாடல் தான் படத்தின் ஒன் லைன்.

ஒரு காலத்தில் காதல் காதல் என்று உருகி உருகிக் காதலித்த கமல்ஹாசன் தான் (தேரே மேரே பீஜ்ஜுமா பாடல் நினைவில் இருக்கிறதா உங்களுக்கு) மேலே இருக்கும் பாடலைப் பாடி இருக்கிறார்.

காலம் மாறுகிறது. மாறிக் கொண்டே இருக்கிறது. காதலுக்கு ஒவ்வொரு காலத்திலும் டெஃபனிஷன் மாறிக் கொண்டே வருகிறது.

படத்தின் முதல் பாதி சுவாரஸியமாய் இருக்கிறது. அடுத்த பாதியை சொதப்பி விட்டார் இயக்குனர் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. அடுத்த பாதியை பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கிளைமேக்ஸ் சோகமாய் இருக்கப் போகிறது என்றார். படத்தின் அடுத்த அடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கப் போகிறது எனபதையும், கிளைமேக்ஸை எளிதில் ஊகித்து விடும் திரைக்கதையும் படத்தின் பிளாக்மார்க்.

காலத்தால் அழிக்கவே முடியாத எத்தனையோ பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். ரீமிக்ஸ் கூட பழைய பாடல்கள் இன்றைக்கும் ஹிட் அடிக்கின்றன. கானா பாடல்களில் புரட்சி செய்த இசையமைப்பாளர் தேவா இன்றைக்கு இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் இளையராஜா இருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் ஹிட்டோ ஹிட். இப்படத்தின் பாடல்கள் பற்றி எழுத ஒன்றுமில்லை. பின்னணி இசை சுமார் ரகம். கிடாரின் இசைக் கோர்ப்பு எரிச்சலைத் தருகிறது. குப்பத்து களத்தில் கிடார் இசையும், ஆங்காங்கே சில பழைய ட்யூன்களும் வருகின்றன. படத்தில் ஒட்டவே ஒட்டாத, தனியாக தெரிகிறது.

காதல் படங்களையும், ரவுடியிசத்தையும், ஒரே ஆள் நூறு பேரை அடிக்கும் படங்களையும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகப் பெருமக்கள் மாறாத வரை இப்படியான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

ஏன் இது போன்ற படங்களே வந்து கொண்டிருக்கின்றன என்று யோசித்தால் ஒரு காரணம் தெளிவாய் தெரிகிறது.

பிரம்மனுக்கு அடுத்தபடியாக, ஒரு தாய்க்கு அடுத்த படியாக இருக்கும் படைப்பாளியான இயக்குனர்கள், ஹீரோ வரும் போது மெய்பொத்தி எழுந்து நின்று சலாம் போடும் போக்கினை மாற்றாத வரை எந்த ஒரு படைப்பும் முழுமையானதாக இருக்க முடியாது. 

* * *