குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 16, 2012

அட்டகத்தி திரைப்படம்

அழகான, அற்புதமான ஒரு பாசச் சந்திப்பின் பின்பு நானும் எனது நண்பரும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கோவை சிங்காநல்லூரில் இருக்கும் அம்பாள் சினி தியேட்டர் கூட்டத்தால் நிரம்பிக் கொண்டிருந்தது. நண்பர், அட்டகத்தி பார்ப்போமா என்றார். 

தியாகராஜர் காலத்திலிருந்து இன்று வரை காதல் காதல் காதல் என்றே தமிழ் சினிமா உலகம் படமாய் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறது. தமிழனுக்கு காதல் செய்வதே முழு முதல் தொழிலாய் மாறி இருக்கிறது. சிறிய வயதில் இருந்து உனக்கு20 எனக்கு 40 என்பது வரையும், முதல் மரியாதை காதல் என்பதாகவும் தமிழ் சினிமா உலகம் காதல் போதையில் ஊறி ஊறி அதிலே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சின்னஞ் சிறு குழந்தையைக் கூட விட்டு வைக்காமல் குஷி படத்தில் இயக்குனர் காதலைக் காட்டி தன் இயக்குனர் திறமையை வெளிப்படுத்தினார். அந்த வகையில் வந்த மற்றொரு படம் தான் அட்டகத்தி.

விடலைப் பருவத்தில் பார்க்கும் பெண்களை எல்லாம் காதலிக்க முயல்வோம் அல்லவா அதை ஹீரோ செய்கிறார். ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டே செய்கிறார். ஒரு பெண் கூட அவரைக் காதலிக்கவே இல்லை. இடைவேளைக்குப் பிறகு கல்லூரி செல்லும் ஹீரோ முன்பு தன்னை அண்ணன் என்றுச் சொல்லிய ஹீரோயினை மீண்டும் சந்திக்கிறார். ஹீரோயினின் சில சைகளை கண்டு அவள் தன்னைக் காதலிக்கிறார் என்று நினைத்து அவளின் மீது காதல் கொள்கிறார். முடிவில் பார்த்தால் தன் பெயரைக் கொண்ட வேறொருவரை அவள் திருமணம் செய்து கொள்கிறாள். விரக்தி அடையும் ஹீரோவை ஒரு பிச்சைக்காரன் என் பெண்ணைக் கட்டிக்கோ என்றுச் சொல்லும் போது ஹீரோ சிரிக்கிறார். அப்புறம் அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது. 

அட்டகத்தியை கீழே வரும் பாடலில் அடக்கி விடலாம்.

”ஆள்வார்ப்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா, ஒரே காதல் ஊரில் இல்லையடா” - என்ற கமல்ஹாசனின் பாடல் தான் படத்தின் ஒன் லைன்.

ஒரு காலத்தில் காதல் காதல் என்று உருகி உருகிக் காதலித்த கமல்ஹாசன் தான் (தேரே மேரே பீஜ்ஜுமா பாடல் நினைவில் இருக்கிறதா உங்களுக்கு) மேலே இருக்கும் பாடலைப் பாடி இருக்கிறார்.

காலம் மாறுகிறது. மாறிக் கொண்டே இருக்கிறது. காதலுக்கு ஒவ்வொரு காலத்திலும் டெஃபனிஷன் மாறிக் கொண்டே வருகிறது.

படத்தின் முதல் பாதி சுவாரஸியமாய் இருக்கிறது. அடுத்த பாதியை சொதப்பி விட்டார் இயக்குனர் என்றுதான் கருத வேண்டி இருக்கிறது. அடுத்த பாதியை பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கிளைமேக்ஸ் சோகமாய் இருக்கப் போகிறது என்றார். படத்தின் அடுத்த அடுத்த காட்சிகள் இப்படித்தான் இருக்கப் போகிறது எனபதையும், கிளைமேக்ஸை எளிதில் ஊகித்து விடும் திரைக்கதையும் படத்தின் பிளாக்மார்க்.

காலத்தால் அழிக்கவே முடியாத எத்தனையோ பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம். ரீமிக்ஸ் கூட பழைய பாடல்கள் இன்றைக்கும் ஹிட் அடிக்கின்றன. கானா பாடல்களில் புரட்சி செய்த இசையமைப்பாளர் தேவா இன்றைக்கு இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால் இளையராஜா இருக்கிறார். இன்றைக்கும் அவரின் பாடல்கள் தான் ஹிட்டோ ஹிட். இப்படத்தின் பாடல்கள் பற்றி எழுத ஒன்றுமில்லை. பின்னணி இசை சுமார் ரகம். கிடாரின் இசைக் கோர்ப்பு எரிச்சலைத் தருகிறது. குப்பத்து களத்தில் கிடார் இசையும், ஆங்காங்கே சில பழைய ட்யூன்களும் வருகின்றன. படத்தில் ஒட்டவே ஒட்டாத, தனியாக தெரிகிறது.

காதல் படங்களையும், ரவுடியிசத்தையும், ஒரே ஆள் நூறு பேரை அடிக்கும் படங்களையும் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகப் பெருமக்கள் மாறாத வரை இப்படியான படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

ஏன் இது போன்ற படங்களே வந்து கொண்டிருக்கின்றன என்று யோசித்தால் ஒரு காரணம் தெளிவாய் தெரிகிறது.

பிரம்மனுக்கு அடுத்தபடியாக, ஒரு தாய்க்கு அடுத்த படியாக இருக்கும் படைப்பாளியான இயக்குனர்கள், ஹீரோ வரும் போது மெய்பொத்தி எழுந்து நின்று சலாம் போடும் போக்கினை மாற்றாத வரை எந்த ஒரு படைப்பும் முழுமையானதாக இருக்க முடியாது. 

* * *

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல் நண்பரே...

/// காலம் மாறுகிறது. மாறிக் கொண்டே இருக்கிறது. காதலுக்கு ஒவ்வொரு காலத்திலும் டெஃபனிஷன் மாறிக் கொண்டே வருகிறது. ///

விமர்சனம் என்று எழுதாமல், மற்ற பல கருத்துக்களையும் சொன்னது சிறப்பு... பாராட்டுக்கள்...

நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

ilavaenil said...

நண்பரே,

இயக்குனரோ இளையர் !!! முதல் படம் வேறு !!!
மிக பழைய விஷயத்தை ரசிக்கும் படி சொல்லி இருக்கிறார் !!! அவ்வளவு தான் .

"கமல்" செய்ததுதான் தான் சினிமாவில் காதலுக்கான benchmarkஆ என்ன ?
அவர் அந்த விடலை ஏரியாவில் இருந்து retired ஆகி அறிவுரை பாட்டுக்கு போயாச்சு சார் !!

இப்பவும் அவர் இந்த மாதிரி படம் நடித்தால் , உங்கள் ஆதங்கம் பொருத்தமாக இருந்திருக்கும் !!

But , அட்டகத்தி ,உண்மையிலே வயதில் இளையவர்களால் , இப்ப இருக்கும் இளையர்களுக்காக
வந்திருக்கும் படம் என்பது தான் சரி !!!

Still the movie opens to uncles also to celebrate nostalgia !!!

Thangavel Manickadevar said...

இளவேனில்,

உங்கள் பதிலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழ் கலாச்சாரம் உலகின் உன்னதத்தில் ஒப்புயர்வற்றது.

தமிழ் சினிமா இளைஞனுக்கு காதலிக்க மட்டுமே சொல்லிக் கொடுக்கிறது. இதன் பின்விளைவுகளை நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றீர்கள்.

பெஞ்ச் மார்க் பற்றி கேட்டிருக்கின்றீர்கள். நம் தமிழர்கள் சினிமாக்காரர்களை அல்லவா தம்மை ஆள விட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் செய்வது ஒவ்வொரு காலத்திலும் பெஞ்ச் மார்க்காகத்தான் இருந்து வருகின்ற உண்மையும் உங்களுக்குத் தெரியும்.

அட்டகத்தி - இளைஞர்களை வேறு பாதையில் தள்ள முயலும் சமூக பிரக்ஞை அற்ற படைப்பு. வாழ்க்கையில் காதல் தவிர வேறு எதுவும் இல்லையா? தமிழ் கலாச்சாரத்தின் சீரழிவு என்பதாய்க் கூட காட்டாமல் வக்ரம் பிடித்த ஒரு விடலைப் பையனை பார்க்கும் பெண்களை எல்லாம் காதல் செய்கிறான் என்பதைப் போல காட்டினால் மனது எப்படி ஏற்றுக் கொள்ளும்?

உங்கள் பையனோ அல்லது பெண்ணோ இவ்வாறு இருந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

சரி !

உங்கள் பையன் இப்படத்தினை பார்த்தால் அவன் என்ன முடிவுக்கு வருவான்? என்று ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் !

படம் என்கிற வகையில் அட்டகத்தியை சீனுக்குச் சீன் விமர்சிக்கலாம். அது ஒரு மிகப் பெரும் விவரணையாக மாறி விடும் என்பதால் பதிவுலகின் இலக்கணம் கருதி சுருக்கமாய் எழுதி இருக்கிறேன்.

நன்றி நண்பரே !

ilavaenil said...

சமூகம் என்பது நாலு பேர் !!!

அரிவாள் சுத்தியும் இருக்கும்
அட்டகத்தியும் இருக்கும்

கலாசார போர்வை உருவப்பட்டால்
உள்ளே நிதர்சனம் நிர்வாணமாகத்தான் இருக்கும்

சமூகத்தை இயன்றவரை பிரதிபலிப்பது,
எப்படி சமூகத்தை இழிவுபடுத்துவதாக ஆகும் ?

உலகிலேயே உயர்ந்த தமிழ் கலாசாரம்
கேவலம் அட்டகத்தியால் அடிபட்டு வீழும் என்றால்
நாமெல்லாம் இப்பொழுதே வேறு நல்ல போர்வையாக தேட ஆரம்பிக்கலாம் !!!

Thangavel Manickadevar said...

கேவலம் அட்டகத்தி என்று சொல்கின்றீர்கள் இளவேனில். தூள் என்ற ஒரு படம் வந்தது. விக்ரம், ஜோதிகா நடித்திருந்தார்கள். அதில் ஒரே ஒரு பாட்டு பாடி, சில காட்சிகளில் வந்த ஒரு பாட்டி இப்போதையை நிலைமை அப்பாட்டியால் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. ஒரு சாதாரண சினிமா செய்யும் தாக்கம் பற்றி எளிதில் முடிவு கட்ட முடியாது இளவேனில்.


சமூகத்தின் பிரதிபலிப்பாக இருப்பது இழிவுபடுத்துவதாக இருக்க முடியாது என்கின்றீர்கள்.

படுக்கையறைக் காட்சிகளும் சமூகத்தில் நடப்பதுதான். அதை அப்பட்டமாக படம் பிடித்து வெளியிட்டால் அது சமூகத்தின் பிரதிபலிப்பு என்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.