குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, August 22, 2012

ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார்


குரு வாழ்க !
குருவே துணை!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்க ளெல்லாம்
சொற்பன ந்தானா? பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்க ளெல்லாம்
கானலின் நீரோ? - வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே
போனதனால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையில் மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லோடு சேர்ப்பாரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றாம் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலோ - நித்தம் விதிதொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் - இந்தக் காட்சி நித்தியமாம் - மகாகவி பாரதி

சித்தன் பாரதியின் பாடல்கள் புரியாத ஒன்றையும் புரிய வைத்திடும் செதுக்கல்கள். எதுவும் உண்மையில்லை, எல்லாமே சொற்பனம் என்கிறார். இப்பாடலை மூன்று நான்கு முறை தொடர்ந்து படியுங்கள். பாரதி ஒரு சித்தன் என்று உணர்வீர்கள்.

பெருவெடிப்பில் நிகழ்த்தப்பட்ட அற்புதத்தின் பேராற்றல் துண்டு துண்டாய் சிதறிய போது, ’எப்போதான் விடியுமோ, என்றைக்குத்தான் வருவானோ’வால் மனித வாழ்க்கைத் துவங்கிய அன்று முதல் இன்று வரை விரிவடைந்து கொண்டே செல்லும் வெடிப்பின் துகள்கள் ஒன்று சேரும் நாளுக்கு அடுத்து சிவத்தலம் தெரியும். வெடித்தவை பேராற்றல் ஈர்ப்பினால் மீண்டும் ஒன்று சேரும், பின்பு வெடிக்கும். 

மனித குல நன்மைக்கு,அண்டக்கல்லைத் தாண்டிச் சென்று திரும்பி வந்த மூவர் மட்டுமே இன்றைக்கும் மனித குலத்தின் அடையாள விருட்சமாய் திகழ்ந்து நிற்க, மனித கூட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது அந்த எல்லையின் எல்லைக்குள் தஞ்சமடைய.

பேராற்றலும், பெருமையும் உடைய நாட்டின் மகாராஜா அவர். அவரின் கொடையின் கீழ் சுகம், துக்கம், இன்பம், துன்பம் என்பனவற்றின் ஆட்சியின் கீழ் மனித குலம் வாழ்ந்து வந்தது. இந்த மகாராஜாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அழகின் தத்துவமாய், அறிவின் சிகரமாய் திகழ்ந்த அந்த குழந்தையின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் ஒரு விபரம் கிடைத்தது.

21ம் வயதில் இக்குழந்தை சன்னியாசம் போய் விடும். ஆசையாய் பெற்ற மகவு இப்படிப்போக எந்த தகப்பனுக்குத்தான் மனது வரும். வேறொருவரிடம் கேட்டபோது அரண்மனைக்குள் வைத்தே வளர்த்து வாருங்கள், அந்த வயது வரும் வரைக்குள் என்று பாசிட்டிவ் அப்ரோச் கான்செப்ட் கிடைத்தது மன்னருக்கு. அதன் படி வாழ்க்கையின் அத்தனை சுகமும் அந்தக் குழந்தைக்கு அரண்மனைக்குள்ளே கிடைக்க ஆரம்பித்தன.

21 அகவையில் வீட்டின் வாயிலுக்கு வந்த மகாராஜாவின் மகன் கண்களில் பட்டது ஒரு சவ ஊர்வலம். ஒரு சவ ஊர்வலம் மன்னாதி மன்னனின் தவப்புதல்வனை சன்னியாசம் கொள்ள வைத்தது. (ஏன்?) எல்லாவற்றையும் உதறிவிட்டு கிளம்பினார். அவர் புத்தர். எத்தனை எத்தனையோ புத்திசாலிகள், முனிவர்கள், அறிவாளிகள், உறவினர்கள் எல்லோரும் அவரை திரும்ப அழைக்கச் சென்றனர். சென்ற எவரும் வீடு திரும்பவில்லை. ஏன் ? மூவரில் சிவத்தலம் சென்று திரும்பிய சித்தார்த்தனின் அருட்வளைவில் சிக்கினர். ஆசையை துற என்றார் சித்தார்த்தன்.

மூவரில் ஒருவர் சித்தார்த்தன். மற்ற இருவர் யார்? 

ஓம் என்ற வார்த்தைக்குள் அகரம், உகரம், மகரம் மூன்றும் மறைந்து கிடக்க “ஆதியில் இறைவன் வாக்கியமாய் இருந்தார் ”.

குருவின் ஆசீர்வாதப்படி -

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படைப்பு... வாழ்த்துக்கள்... நன்றி...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.