குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, August 21, 2012

தென்னாடுடைய தமிழனே

சமீபத்தில் தேனியில் எடுக்கப்பட்ட டிஎன்யே(DNA) டெஸ்ட்டில் உலகின் மூத்த டிஎன்யே இது என்று செய்தி வந்திருக்கிறது. தமிழன் தான் உலகின் மூத்த குடி என்று அர்த்தம் ஆகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழ் நாடு தான் உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சீதோஷ்ண நிலை கொண்ட பூமி. வேறு இடங்களில் ஒன்று குளிர் அதிகமாய் இருக்கும். அல்லது வெப்பம் அதிகமாய் இருக்கும். மழை அதிகமாய் இருக்கும். ஆனால் நான்கு காலங்களும் மனிதர்கள் வசிக்கத் தகுந்த பூமியாக இருப்பது தமிழகம் தான். இப்படிப்பட்ட பூமியில் வசிப்போரின் சிந்தனைகள் தான் உலகிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் வாழ்வியல் நெறிமுறைகள்.

தமிழர்களின் அறிவுக்கும் திறமைக்கும் முன்னால் எந்த மனிதர்களும் ஈடு கொடுக்கவே முடியாது. வாழ்வியல் நெறி சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, கொடூரமானாலும் சரி, வீரமானாலும் சரி, தியாகமானாலும் சரி. எல்லாவற்றிலும் தமிழர்களுக்கு நிகர் தமிழர் தான். அப்பேர்பட்ட தமிழர்கள் வாழும் புண்ணிய பூமி நம் தமிழகம். தென்னாடு என்றழைக்கப்படும் ஆன்மீக பூமியில் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள். எங்கு நோக்கினும் கோவில் விழாக்கள், பூஜைகள், புனஸ்காரங்கள் என்று ஆண்டு முழுமையும் கோவில் விழாக்கள் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும். கோவில் விழாக்கள் இல்லையென்றாலும் குடும்பங்களில் சுபகாரியங்கள் நடந்து கொண்டே இருக்கும். தமிழர்கள் ஒன்று கூடிக் கொண்டே இருப்பார்கள். ஆன்மீகத்தில் தழைத்து, அறத்தில் திளைத்து வாழும் மனித கூட்டம் தான் தமிழர்கள் கூட்டம். தமிழர்கள் தியாக உணர்வும், நன்றியுணர்ச்சியும் உள்ளவர்கள்.

எத்தனை எத்தனை புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும் அவைகள் எல்லாம் தமிழர்கள் வாழ்வியலில் புதை பொருளாய், மறை பொருளாய் மறைந்து கிடக்கும். எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. வானவியலில் இருந்து, மரணமில்லா பெருவாழ்வு வரை தமிழர்களிடம் அத்தனைக்கும் விடை கிடைக்கும். அதுவும் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் இருக்கின்றன.

தமிழகத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மறைந்து, புதைந்து போய் கிடைக்கும் மெய்ஞான அறிவியலில் ஒரு சதவீதம் கூட மேல் நாட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை. சித்தர்களுக்கெல்லாம் தலைவர் சுப்ரமண்யர் என்பார்கள். அப்பேர்ப்பட்ட சித்தர்கள் பூமியில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு, இப்போதிருக்கும் எந்த சயின்ஸ் உபகரணங்கள் இன்றி உடம்பின் அத்தனை ரகசியங்களையும் சித்தர்கள் பாடி வைத்திருக்கின்றார்கள். இதெல்லாம் எப்படி அவர்களுக்குச் சாத்தியமாயிற்று என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளவே முடியாத மர்மம் தான் நம் முன்னே நிழலாடும். பிண்டோற்பத்தி பற்றிய ஒரு பாடல் கீழே,

கேளப்பாமனமான வாயுகூடி
கெடியானசித்தமா காசம்பொங்கி
வேளப்பா ஆங்கார சிகாரமிஞ்சி
மேவுதற்குப்பெண்மேலே மோகமாகும்
நாளப்பா ஐந்துக்கும் மலமேதென்றால்
நலம்பெறவே சொல்கின்றேன் நன்றாய்க்கேளு
தனியானநாதத்தில் பானன்தானே
தானென்றவிந்துவினிற் சமானன்கூடும்
தனியானசித்தத்தில் வியானன்சேரும்
 நானென்ற ஆங்காரம் கர்ச்சிப்போடே
கலந்து நிற்கும் உதானனப்பா கண்டுகொள்ளு
வேனென்றபத்துமொன்றாய் மனதுங்கூடி
மேவியவன்கலந்துவந்து விழுகும்போது
மானென்றமெளனபர வசமேயாஅவாள்
மருவுகின்ற பெண்ணுக்கும் முறைதன்கேளே

இப்படிப் போய்க் கொண்டே இருக்கிறது இப்பாடல். கருத்தரிக்கும் விதம் பற்றி விவரித்துச் செல்லும் பாடல்களை எங்கனம் உருவாக்கினார்கள்? ஆராய்ச்சிகள் செய்தார்களா? அதெல்லாம் அந்தக் காலத்தில் எப்படிச் சாத்தியமாயிற்று என்று கேள்விகளை முன்வைத்தால் மனதின் முன்பு மாபெரும் புதிர் முடிச்சொன்று வந்து நின்று நம்மை ஏளனம் செய்யும். உலகில் புரியாத எத்தனையோ மர்மங்கள் இருக்கின்றன. இதுவரையிலும் வெஸ்டர்ன் சயின்ஸால் மனித உடம்பில் உயிர் எங்கே இருக்கிறது என்று ஆதாரபூர்வமாய் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் சித்தர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

யோகிகள், சித்தர்கள் பரம்பரை நம் தமிழர்களின் வாழ்வியலில் தான் உண்டு. வேறு எங்கேனும் தேடினாலும் கிடைக்கவே கிடைக்காது இப்பேர்பட்ட மனித குல வரலாறு. இப்படிப்பட்ட நம் தமிழர்களின் வரலாற்றில் இன்னும் கண்டுபிடிக்க முடியாத, புரிந்து கொள்ள இயலாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அந்த விஷயங்களில் எனக்குத் தெரிந்த ஏதேனும் அனுபவப் பூர்வமாய் உணர்ந்த சில விஷயங்களை எழுத முயல்கிறேன். அதுவும் எனது ஆன்மீகக் குருவின் அளப்பறிய அன்பின் காரணமாக. அவரின் கட்டளைக்கு இணங்க அவரின் வழிகாட்டுதல்கள் படி எழுதுவேன்.

மனிதர்கள் தானாக பிறப்பதில்லை. தானாக வளர்வதில்லை. அவர்கள் பிறக்கவும், வளரவும் சக மனிதர்களின் உதவி தேவை. ஓவ்வொரு மனித உயிர்களின் கடமை பிற உயிர்களுக்கு உதவுவது மட்டுமே. அனுபவமும், அறிவும், உழைப்பும் பிறருக்காக வாழ வேண்டும். அந்த வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை.

ராஜ ராஜசோழனும் வாழ்ந்தான், மன்னாதி மன்னர்களும் வாழ்ந்தார்கள் பெரும் பொருளாதாரத்துடன், அழிக்கவே முடியாது பலத்துடன். இன்றைக்கு அவர்கள் எங்கே? காலம் கொடுக்கும், எடுக்கும், கொடுக்கும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத தகவலுக்கு நன்றி...

விளக்கங்கள் அருமை...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.