குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label புதிய தலைமுறை. Show all posts
Showing posts with label புதிய தலைமுறை. Show all posts

Thursday, May 17, 2012

புதிய சாட்டிலைட் சேனல்



எஸ் ஆர் எம் கல்லூரி நிறுவனர் திரு பச்சை முத்து அவர்களால் தொடங்கப்பட்ட ‘புதிய தலைமுறை’ பத்திரிக்கை பரவலாக பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. திறமைசாலிகளுக்கு மதிப்புக் கொடுத்த காரணத்தால், நல்ல கட்டுரைகள் வெளிவந்தன. ஆரம்பத்தில் நல்ல விஷயங்களோடு வெளியான பத்திரிக்கை, போகப் போக சலிப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் புரியாமல் குழம்பிய போதுதான், புதிய தலைமுறை சாட்டிலைட் செய்திச் சானல் வெளிவந்தது. பத்திரைக்கை பத்தோடு பனிரெண்டானது. டிவி சானல் எல்லோரும் சன் டிவியை விட அருமையாக இருக்கிறது என்று புகழ்ந்தார்கள். ஆனால் எனக்கொன்றும் அவ்வளவு பிரமாதமாய் இருப்பது போல தெரியவில்லை. இந்தச் சானலில் அதிகப் பிரசங்கித் தனமான செய்திகளும், சும்மா ஒப்பேற்றுவது போல நிகழ்ச்சிகளும், எல்லாம் தெரிந்த மேதாவித்தனமான வார்த்தைப் பிரயோகங்களும் வெளிப்பட்டன. 

எந்த ஒரு செய்திக்கும், நிகழ்ச்சிக்கும் நிறைவு என்ற ஒன்று உண்டு. அதை இவர்கள் கொடுக்கவே இல்லை. சானலில் வெளியாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நிறைவற்ற தன்மையைக் காணலாம். மேலும் இவர்கள் அரசியல் பின்புலம் அற்றவர்கள் என்று காட்ட முயற்சிக்கின்றார்கள். இந்தச் செய்தி சானலை உலகப் புகழ் பெறும் வகையில் நடத்தலாம். ஆனால் அதற்கான எந்த ஒரு முஸ்தீபும் புதிய வடிவும், நிகழ்ச்சிகளும் இதுவரை வரல்லை. 

இந்தப் பக்கமும் இல்லை அந்தப் பக்கமும் இல்லை நடு நிலை என்கிறார்கள்.’ஒப்புக்குச் சப்பாணி’ என்று தானே அர்த்தம் வரும். எது வரினும் உண்மையை உரக்கச் சொல்வோம் என்று புதிய தலைமுறை செய்திகள் வெளியிடாதவரை இதுவும் ஒரு சானலாகத்தான் இருக்கும். 

நேற்று நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் சொன்னார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிலர் வருவர். அவர்களால் இண்டஸ்ட்ரி புத்துணர்ச்சி பெற்று பலருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும். சினிமா உலகினர் சுறுசுறுப்பாய் உழைப்பர். திமுக குடும்பம் சினிமாவில் ஈடுபட்ட காரணத்தால் தமிழ் சினிமா உலகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அதே போல டாக்டர் சீனிவாசன், ரித்தீஷ் போன்றோரால் நிறைய தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. காசைப் பற்றியோ, படத்தின் தரம் பற்றியோ கவலைப்படாமல் இவர்களைப் போன்றோர் எடுத்து தள்ளிய சினிமாக்களினால்  சினிமா தொழிலாளர்கள் இரவும் பகலும் உழைத்தார்கள். இப்படிப் போன்றோர் தமிழ் சினிமாவிற்கு அடிக்கடி வந்து செல்வர். அது போன்றே தமிழ் சினிமா உலகில் எஸ் ஆர் எம் க்ரூப்பும் ஈடுபட இருக்கின்றார்களாம்.

சானல்கள் இல்லாத காலத்தில் படம் நன்றாக இல்லையெனில் தயாரிப்பாளார் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு சாலையில் போக வேண்டியதுதான். ஆனால் தற்போது டிவி சானல்கள், எஃப் எம் ரேடியோக்கள், வெளி நாட்டு உரிமை, டப்பிங் உரிமை, வேற்றுமொழி உரிமை என்கிற பல்வேறு விஷயங்களினால் போட்ட காசுக்கு பங்கம் வந்து விடாமல் பெரும்பான்மையான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் இருந்து தப்பிக் கொண்டனர். திமுக ஆட்சியில் இருக்கும் போது அரசியல் அதிகார பலத்தால் சன் டிவியும், கலைஞர் டிவியும் தாங்கள் விரும்பிய விலைக்கு திரைப்படங்களை வாங்கினார்கள் என்கிறார்கள். திமுக ஆட்சியின் முடிவிற்குப் பிறகு தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீ ஆரோக்கியமானதாக மாறி இருப்பதாகவும் பேசிக் கொள்கின்றார்கள். பெரும் பணத்தினை முதலீடுகளாய் போட்டு திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு மேலும் பல தமிழ் சாட்டிலைட் சேனல்கள் வருவது மன ஊக்கத்தினை தரும். போட்டி அதிகமிருக்கும் இடத்தில் நல்ல விலை கிடைக்கும் அல்லவா? 

சன், ராஜ், விஜய், கலைஞர், ஜெயா டிவிக்களின் சாட்டிலைட் உரிமைக்கான போட்டிக்கு மேலும் ஒரு சாட்டிலைட் சேனல் வரப்போகின்றதாம். எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் “வேந்தர் தொலைக்காட்சி” விரைவில் மலர இருக்கின்றதாம்.அவர்கள் பெரும் விலை கொடுத்து அரவான் திரைப்படத்தை வாங்கி இருப்பதாகவும், சகுனி படத்தின் விநியோக உரிமையுடன் சாட்டிலைட் உரிமையையும் வாங்கி இருப்பதாகவும் தமிழ் சினிமா உலகிலும், பத்திரிக்கை உலகிலும் பேசிக் கொள்கின்றார்கள். விரைவில் புதிய தலைமுறை செய்திச் சானலில் இது பற்றிய விளம்பரங்கள் வெளியாகலாம். 
திரைப்பட விநியோகஸ்தராகவும், டிவி சானல்களாகவும் மாற இருக்கும் ‘புதிய தலைமுறை’ குழுமத்தினர் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்.

- ப்ரியங்களுடன் 
கோவை எம் தங்கவேல்