நேற்றைக்கு முதல் நாள் தேனியிலிருந்து ஒரு அழைப்பு. பேசியவர் ஒரு ஆசிரியர். ”பத்துக் கோடி ரூபாய் கடன் வேண்டும்” என்றார். தொடர்ந்து புதிதாக பள்ளிக்கூடம் கட்டப்போவதாகவும், ஐந்து வருடத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் சொன்னார். ”ஐந்து வருடத்தில் வட்டியுடன் பத்து கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கா பள்ளிகள் சம்பாதித்துக் கொடுக்கின்றன?” என்று கேட்டேன். ”நாமக்கல் பகுதிகளில் டொனேஷனைக் கொண்டு போய் கொட்டுகின்றார்கள் சார், நான் அதை விட மிகச் சிறந்த பள்ளியை உருவாக்குவேன்” என்றார்.
ஊட்டியில் இருக்கும் பிரபல தனியார் பள்ளியில் டொனேஷன் அதாவது கேப்பிடேஷன் ஃபீஸ் 5,00,000 லட்சம் வசூலிக்கின்றார்கள். யூனிஃபார்முக்கு 50,000 ரூபாய் கட்டணம். இப்படி அவர் சொன்ன விபரங்களைக் கேட்டதும் மயக்கம் தான் ஏற்பட்டது.
”அரசு இலவசமாய் கல்வி வழங்கினால் என்ன செய்வீர்கள்?” என்றேன். ”எந்த அரசாலும் சரி, எவராலும் சரி அப்படி செய்யவே முடியாது என்றார். கல்வி பிசினஸ் செய்யும் பணமுதலைகளும், ஒத்து ஊதும் திருடர்கள் கூட்டத்தாரும் ஒன்று சேர்ந்து பல தனியார் அமைப்புகளை வைத்து இருக்கிறார்கள். அவர்கள் அரசையே தூக்கி எறிந்து விடுவார்கள். பணத்திற்கு முன்பு அரசு சலாம் போடுமே தவிர வேறொன்றினையும் செய்யாது சார்” என்றார் அவர்.
”பூடானில் ஆசிரியப் பணியில் இருந்த போது, சாலையில் நடந்து சென்றால் எதிரே வரும் மக்கள் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்தி வழி விட்டு ஒதுங்கி நிற்பார்கள். இந்தப் பாழாய் போன மனித உரிமைகள் கமிஷனால் தான் ஒவ்வொரு மாணவனும் இன்றைக்கு சீரழிந்து போய் விடுகிறான்கள். ஒடித்து வளர்க்காத முருங்கை பலன் தராது சார். பூடானில் அரசாங்கம் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கின்றது. ஒவ்வொரு ஊரும் பள்ளியை நிர்வகிக்கின்றார்கள். அங்கு தனியார் அமைப்புகள் கிடையாது” என்றார் அவர்.
ஒரு வழியாக தனியார் கல்வி என்கிற மாஃபியாக்கூட்டத்தின் செயல்பாடுகளை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒருவன் வாழ பலர் உழைத்துக் கொடுக்கின்றார்கள். இது பற்றிய ஒரு கட்டுரை வருகின்ற மாதம் “பரபரப்புச் செய்தி” பத்திரிக்கையில் வெளிவரும். படித்துப் பாருங்கள்.
ஒரு குடும்பத்தின் தலைவன் சரியில்லை என்றால் குடும்பம் என்ன ஆகும்? சீரழிந்து போகும். தலைமை ஆசிரியரிடம் தொலை நோக்குப் பார்வையும், கண்டிப்பும் இல்லையென்றால் அப்பள்ளி என்ன ஆகும்? அப்படித்தான் இன்றைய அரசுப் பள்ளிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு உகந்த கிரேடு, டிகிரேடு சிஸ்டம் கொண்டு வந்தால் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் நிச்சயம் ஓரளவிற்கு முன்னேறும். பள்ளிகள் இருக்கும் ஊரின் மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் பள்ளியின் செயல்பாடுகள் மூலம் இந்த டிகிரேடு சிஸ்டம் செயல்படுத்தப்பட்டாலே போதும். அதுமட்டுமல்லாமல் அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் நன்மையைத் தரும். அதை ஏன் அரசுகள் செய்ய மறுக்கின்றன என்றால், தனியார் கல்வி மாஃபியாக்களிடமிருந்து வரும் பெட்டி டொனேஷன்கள் தான் காரணம் என்கிறார்கள்.
பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதுமா? பிற ஆசிரியர்களும் இருக்க வேண்டாமா? சாட்டை ஒரே ஒரு ஆசிரியர் ஒழுங்காக இருந்தாலே போதும் என்று ஹீரோயிசம் பேசுகிறது. பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருத்தி விட்டு வேறு பள்ளிக்குச் செல்கிறார் தயாளன் என்கிற சமுத்திரக் கனி. மாயாஜால வினோதக் கதை போல தமிழ் சினிமாக்களில் ஒரே ஒரு பாடலில் ஏழை ஹீரோ பெரிய கோடீஸ்வரனாக மாறுவதை காட்டுவார்களே அதே போலத்தான் சாட்டைப் படமும்.
யாரோ ஒரு இயக்குனர் ஏதோ ஒரு பேட்டியில் தம்பி ராமையா என்கிற நடிகரின் நடிப்பைப் பார்த்த போது எம்.ஆர்.ராதாவை பார்த்தது போல இருந்தது என்றார். எம்.ஆர்.ராதா எங்கே இந்த ராமையா எங்கே? இப்படிப்பட்ட இயக்குனர்கள் தான் இன்றைக்கு தமிழ் சினிமாவை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மூளை வறட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமாக்கள். நடிப்பு என்றால் என்ன என்று தெரியாமலே நடிக்கும் கலைஞர்கள், இயக்கும் இயக்குனர்கள் என்று ஒரு கூட்டம் சினிமாவைக் கேவலபடுத்தி வருகின்றார்கள். இதற்கு உதாரணம் மாண்புமிகு இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இதயம் டிக்கென்றிருக்கும்.
சாட்டை என்கிற பெயரில் அக்மார்க் ஹீரோயிசப்படம். ஆசிரியர்கள் ஹீரோக்கள் அல்ல ! அவர்கள் ஞானிகள். எதையும் எதற்காகவும் எதிர்பாக்காத தியாகிகள். இக்கால ஆசிரியர்களில் எத்தனை எத்தனையோ இளம் ஆசிரியர்கள் முழுத் தியாகத்துடன் தங்கள் குழந்தைகளை நேசித்து அவர்கள் படிப்பதையும், எழுதுவதையும் நேசிக்கின்றார்கள். நேற்று என் பையன் கூடப்படிக்கும் சகமாணவன் என் மனைவியிடம் ”உங்கள் பையனுக்குச் சுத்திப் போடுங்கள், ரொம்ப அழகாக எழுதுகிறான் என்று டீச்சர் கண் வைத்து விட்டதாகவும், அதை டீச்சரே சொல்லச் சொன்னதாகவும்” சொல்லி இருக்கிறான். ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நூற்றில் பத்து சதவீதம் பேர் சுய நலவாதிகளாய் இருப்பார்கள். அவர்கள் பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை. பயிரில் களைகள் இல்லையென்றால் பயிரைப் பற்றி விவசாயி சிந்திக்க மாட்டான். களைகளும் வேண்டும், அதை களையெடுக்கும் வித்தையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசுப்பள்ளிகள் மட்டுமல்ல தனியார் பள்ளிகளும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினாலே நிர்வகிக்கப்பட்டாலே போதும். இது போன்ற பிரச்சினைகள் ஓவர்.
பள்ளிப்பருவ காதல்கள் சுவாரசியமானவை. அக்காதல்கள் எதுவும் முழுமை பெறுவதில்லை. அதை ஒழுங்காக காட்டிய விதத்தில் சாட்டை நன்மை செய்திருக்கிறது. அதைக்கூட காசாக்கி அதை வைத்து தமிழ் சினிமாக்கள் ஹீரோக்களை உருவாக்கி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவர் இது போன்ற கவட்டிக் கிளர்ச்சிப் படங்களில் நடித்துதான் தானுமொரு ஹீரோ என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார். முன்னனி ஹீரோவான ஒருவர் கபடி விளையாண்டும், பாத்ரூமில் காதலியின் மாமியாருக்கு சோப்பு போட்டும்தாம் ஹீரோவாக உயர்ந்தார். தற்போது பிரபலமாய் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் மலையாள மொழிகளில் செக்ஸ் படம் எடுத்துச் சம்பாதித்தவர்தான். பல பிரபலங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே பெண்கள்தான். இவர்கள் இல்லையென்றால் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்கள் ஆகி விடுவார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.
தனி மனித துதி என்பது அரசியல் மட்டுமின்றி சினிமாவிலும் தூக்கலாய் இருக்கும். எந்த ஒரு தனி மனிதனாலும் எதையும் பிடுங்கி விட முடியாது. மஹாத்மா காந்தி மட்டும் உண்ணாவிரதம் இருந்திருந்தால் எவனும் திரும்பிக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். காந்தியின் கொள்கைகளால் உயிரை இழந்தோரும், சிறையில் கிடந்து செத்தோரும் லட்சோப லட்ச மக்கள். அவர்கள் பற்றி யாருக்கு என்ன தெரியும்? இது போன்ற தனி மனித துதிகளும், போற்றுதல்களும் முற்றிலும் தவறானவை. அது ஒரு ஆகப் பெரிய கொடூரம் என்கிறேன்.
சாட்டைப் படத்தினை அனைவரும் பார்க்கலாம். ஏனென்றால் இப்படம் ஏதோ சொல்ல வருகிறது. பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எங்கே ஹீரோ, ஹீரோயின் காதலைச் சேர்த்து வைத்து விடுவார்களோ என்று பயந்தேன். அப்படி ஏதும் ஆக வில்லை. சமுத்திரக்கனி சொல்லும் கடைசி வாக்கியத்திற்காக சாட்டையைப் பார்க்கலாம். ஹீரோயிசம் என்கிற விஷத்தினுள்ளே ஒரு மெசேஜ்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.