குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 8, 2012

புளி

குரு வாழ்க ! குருவே துணை !!

ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் “ஆறாம் திணை” தொடரில் ஒரு பகுதி இங்கே. புளியில் சமைத்த உணவின் சிறப்பைப் பற்றி எழுதி இருக்கிறார். புற்று நோய் வரக்கூடிய காரணிகளை ஆராய்ந்திருக்கிறார். படித்து மனதில் ஓரத்தில் குறிப்பிட்டு வையுங்கள். உபயோகமாய் இருக்கும்.

சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லும் விகடன் நிறுவனத்தாருக்கும், மருத்துவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் சமுதாயத் தொண்டு மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அனைத்து வளங்களையும் அருளட்டும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

ஆறாம் திணை - மருத்துவர் கு.சிவராமன் (ஆனந்த விகடன்)



குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்குச் சமையல் அறையில் பெண்கள் அதிக நேரம் செலவிட்டது அந்தக் காலம். அதே குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அதே பெண்கள், அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவது இந்தக் காலம். 'ஈவது விலக்கேல்’ என்பது மறந்து 'ஈ.எம்.ஐ. தவறேல்’ என்று வாழ்ந்துவரும் நம்மில் பலர் உடனடிக் கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம்.

சமைத்த உணவு, சில மணி நேரங்களில் கெட ஆரம்பிக்கும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் துவங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சி ஒவ்வொன்றாகத் தொடங்குவது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைக்க, நொதிக்காமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ், பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாது இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்களைச் சேர்த்துதான் 'உடனடியாகச் சாப்பிடலாம் வாங்க’ எனச் சந்தைக்கு வரு கின்றன, உடனடிச் சாப்பாட்டுச் சமாசாரங்கள். அதுவும் எதில் வருகின்றன? பாலிதீன் பைகள் அல்லது பிளாஸ்டிக் புட்டிகளில். இதை வாங்கிப்போய் நீங்கள் எங்கே வைப்பீர்கள்? ஃப்ரிஜ்ஜுக்குள். அவ்வளவும் சொந்த செலவில் சூனியம்வைத்துக்கொள்ளும் விஷயங்கள்தான்.

'மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும் போது சமைத்து வசதியாக ஃப்ரிஜ்ஜில்வைத்துச் சாப்பி டலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். ஃப்ரிஜ்ஜில் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டி லில்வைப்பது ஆகட்டும்; காய் கறிக் கடையில் வாங்கிய காய்கனிகளைப் பத்திரமாக பிளாஸ்டிக் பையில் பிரித்துவைப்பது ஆகட்டும்;  இன்னும் புத்திசாலித்தனமாக இரவே காய்களை வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு சமர்த்தாக ஃபிரிஜ்ஜில்வைத்து, காலையில் சமையல் செய்து வேகமாகக் கிளம்பு வது ஆகட்டும்... உங்கள் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நீங்களே வழிவகுத்துக் கொள்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

அதிசூட்டிலும் அதிகுளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து 'டயாக்ஸின்’ வாயு கசிந்துவருமாம். இரவு முழுவதும் ஃப்ரிஜ்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உங்கள் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். அப்புறம் அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டின் தருமோ என்னவோ... கண்டிப்பாக புற்றுநோயைத் தரக்கூடும்.

பள்ளிக்கூடத்துக்கு எவர்சில்வர் பாத்திரங்களில் தண்ணீரோ, சாப்பாடோ எடுத்துச் செல்ல முடியுமா? அதெல்லாம் அசிங்கம் என்று சொல்லும் குழந் தைகள் அதிகமாகிவிட்டார்கள். எல்லாம் நம் வளர்ப்புதான். அழகான பிளாஸ்டிக் டப்பர் வேர் வாங்கி, அதில் சூடான வத்தல் குழம்பைக் கொடுத்து அனுப்புவீர்கள் நீங்கள். வத்தல் குழம்பில் மெள்ளக் கசியும் டயாக்ஸின் அப்போது ஒன்றும் செய்யாதுதான். எப்போதுமே ஒன்றும் செய்யாமல் இருக்குமா என்ன?

புற்றுநோய்க்கான காரணிகளில் ரொம்ப முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையறாக்களும்தான்.

புற்றுநோய் மட்டுமா? சர்க்கரை நோய் அதிக ரித்து இருப்பதற்கு, தண்ணீர் விநியோகத்துக்கு பி.வி.சி. குழாய்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்று இப்போது ஆராய்கிறார்கள். பி.வி.சி. குழாய்கள் வளைந்து நெளிந்து வீட்டுக்குள் செல்ல, அதில் பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ கொஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல் உண்டாக்கி இருக்க லாம் என்று சந்தேகிக்கிறது இந்த ஆய்வு.

ரொம்பப் பயமுறுத்துவதற்கோ, அதிகப்படியான கற்பனையிலோ இதை எல்லாம் எழுதவில்லை. சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை வெளி யிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் மேற் சொன்ன பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது புற்றுநோயை உறுதியாகத் தோற்றுவிக்கும் என்று பொருள். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவாக உறுதிப்படுத்தாத காரணிகள்).

இந்த நேரத்தில், தேசிய உணவியல் கழகம் சொல்லும் உணவுத் தொழில்நுட்பம் தொடர்பான  தகவலைத் தருகிறேன்.

'நீர்க் காய்கறியைக் கூட்டாகவைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும் முற்றிய காயைப் பொரியலாகவும் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக் கரைசலில் வேக விடவும் வேண்டும்’ என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா? 'புளியில் வேக வைத்தால் அதன் புரதச் சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை.  நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்ட மின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது’ என்று சொல்கிறது தேசிய உணவியல் கழகம்.

நம் முன்னோர்கள் எவ்வளவு பாதுகாப்பாகத் தந்த வாழ்க்கையை எவ்வளவு அபாயகரமானதாகவும் நாசகரமானதாகவும் நாம் மாற்றிக்கொண்டு இருக்கிறோம்... பார்த்தீர்களா?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// பி.வி.சி. குழாய்கள் வளைந்து நெளிந்து வீட்டுக்குள் செல்ல, அதில் பயன் படுத்தப்படும் சில 'பாலிமர் துணை கள்’ கொஞ்சமாகக் கசிந்து இன்சுலின் சுரப்பில் சிக்கல் உண்டாக்கி இருக்க லாம் என்று சந்தேகிக்கிறது இந்த ஆய்வு. ///

சின்டெக்ஸ் இல்லாத (இப்போது கட்டப்படும்) வீடுகளே இல்லை... அதில் வரும் தண்ணீரே எல்லாவற்றிக்கும் பயன்படுத்துகிறோம்... அதே தவறு என்கின்றனர்... இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ...
முடிவில் சொல்லி உள்ளீர்களே... அதை சரியாக செய்து கொண்டியிருக்கிறோம்...

மாதேவி said...

அருமையான பகிர்வு.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.