குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, July 28, 2020

நிலம் (70) - அதிர வைக்கும் நீர் நிலை நிலமோசடிகள்

தமிழர்களின் சினிமாக் கனவுக் கன்னி, எனது நெருங்கிய தோழி, சென்னையில் ஓர் இடத்தில் சொகுசு பங்களா வாங்கி உள்ளார். அவர் அந்த பங்களாவை விற்பனை செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் கோஸ்டல் ஏரியா அருகில் உள்ள நிலம் என்று தெரிய வந்தது. அதற்கு என்.ஓ.சி இதுவரை பெறப்படவில்லை. இது பற்றிய வழக்கு கோர்ட்டில் உள்ளது. கோர்ட் என்ன சொல்லும் என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அதே போலத்தான் தற்போது தமிழக அரசு அறிவித்திருக்கும் மனை வரன்முறைத் திட்டம். சட்டத்தினை மீறினால் அபராதம் கட்டு. கட்டினால் சரி செய்யப்படும். எவராவது ஒருவர் வழக்குத் தொடுத்தால், அத்தனை பணமும் ஹோகயா? கோவை கணபதியில் அப்படி ஒரு நிகழ்வு நடந்து அப்பணம் இன்னும் தூங்கிக் கிடக்கிறது.

தன் கடுமையான உழைப்பினால் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட அந்தச் சொத்தை, தன் தேவைக்கு விற்பனை செய்ய முடியாமல் சிக்கி விட்டார். என்னைப் போல ஒரு லீகல் கன்சல்டண்ட் இடம் ஒரு ஒப்பீனியன் பெற்று இருந்தால் இந்தப் பிரச்சினை இருக்காது அல்லவா? பணம் சிக்கி விட்டது.

அடுத்து கொச்சினைச் சேர்ந்த மாபெரும் கட்டுமான நிறுவனத்தின் அபார்ட்மெண்டை சுப்ரீம் கோர்ட் இடிக்கச் சொன்னது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

2000ஆம் ஆண்டு வாக்கில் கொச்சினைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம் பல அடுக்குமாடி குடியிருப்புகளை கோஸ்டல் ரெகுலேசன் சட்ட விதிகளைப் பின்பற்றாமல், உள்ளூர் ஆட்களின் உதவியால் 375 அபார்ட்மெண்ட்களை கட்டி விற்பனை செய்து முடித்து விட்டது. 2007ம் ஆண்டு வாக்கில் கோஸ்டல் ரெகுலேசன் சட்ட விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடம் எனச் சொல்லி வழக்குப் போடப்பட்டு, அது சுப்ரீம் கோர்ட் வரை சென்று அனைத்து வீடுகளையும் இடித்தே ஆக வேண்டுமென உத்தரவிடப்பட்டு இடிக்கப்பட்டது. பல சினிமா பிரபலங்களும், பல கோடீஸ்வரர்களும் அபார்ட்மெண்ட் வாங்கி இருந்தனர். இவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர். இருப்பினும் பிளாட்டுகள் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டன.


செய்தி ஆதாரம்:


இதே போல, சென்னையில் ஒரு ஏரியை தூர்த்து, வீடு கட்டி வசித்து வருகின்றார்கள். யானை ராஜேந்திரன் போல ஒரு வக்கீல் அதை தூசு தட்டி எடுத்தால் பல மக்கள் வீடுகளை இழப்பது உறுதி. அது எந்த இடம் என்று எனக்குத் தெரியும். என்னை அணுகும் நபர்களுக்கு விபரம் சொல்லலாம். பொது வெளியில் எழுதினால், தேனிக் கூட்டைக் கலைத்த மாதிரி ஆகி விடும்.




கோஸ்டல் ரெகுலேசன் படி, கேரளாவில் ஆழப்புழா அருகில் இருக்கும் இடத்தின் மேப் மேலே இருக்கிறது. பார்த்து வையுங்கள். இது பற்றி அனுபவம் இருப்பவர்களுக்கு ஆலப்புழா வீடுகள், ஹோட்டல்கள் பற்றிய வில்லங்கங்கள் தெரியும்.

விரைவில் ஆலப்புலாவில் வில்லங்க விவகாரங்கள் அற்ற பண்ணை சொகுசு வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்படும். அங்கு இடம் வாங்க நினைப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

அடுத்து சச்சின் டெண்டுல்கர், நயன் தாரா, ரம்யா கிருஷ்ணன் வகையறாக்கள் இதே போன்ற ஒரு கோஸ்டல் ஏரியா நிலத்தினை வாங்கி ஏமாந்து போய் இருக்கிறார்கள் என்ற செய்தியை விகடன் இணையதளத்தில் படித்தேன்.

பாடுபட்டு சேர்த்த சொத்தினை இப்படியா இழப்பது?

இதோ அந்தச் செய்தியின் இணைப்பு கீழே. படித்து விட்டு நீங்களும் அதிர்ந்து போங்கள். சொத்துக்கள் வாங்கும் முன்பு கவனமாய் இருப்பது தவறில்லை. அதற்காக கொஞ்சம் செலவு செய்தால் அதுவும் தவறில்லை அல்லவா?

நிம்மதி முக்கியம்... !

ஹைதராபாத் அதிர வைக்கும் நீர் நிலை நில மோசடி பற்றிய விகடன் செய்தி இணைப்பு கீழே..




Sunday, July 26, 2020

நிலம் (69) - பட்டா மாறுதல்களில் நடந்த தவறுகள் உண்மையா?

அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக வருவாய் துறை மூலம் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையினைப் பாருங்கள். ஒரு சில இடங்களில் பட்டா மாறுதல்களில் பல்வேறு போலிப் பட்டாக்கள் உருவாக்கப்பட்டன. அடியேனும் பெரும் மதிப்பில் உள்ள ஒரு நிலத்தின் முறைகேடாக மாற்றப்பட்ட பட்டாவை, மீண்டும் சரி செய்தேன். அதன் கால அளவு ஒன்றரை வருடம். அலைச்சலும், கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் செலவு.

ஏன் பட்டா மாறுதல்களில் ஏகப்பட்ட தவறுகள் நடந்தன?

ஒவ்வொரு பட்டா மாறுதல்களின் போதும் அதற்கான ஆவணங்கள் கோப்பு எண் இடப்பட்டு பாதுகாக்கப்பட்டன. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. பட்டா மாறுதலுக்காக கோப்பு எண் மட்டும் இருக்கும். அதற்கான ஆவணங்கள் இருக்காது. தீர்ப்பு மட்டும் இருக்கும், சாட்சிகள் இருக்காது. 

இப்படியான ஒரு சூழல் சமீபத்தில் ரெவின்யூ டிபார்ட்மெண்ட்டில் நடந்தது. பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், அதற்கான ஆவணங்கள் மூன்றாண்டுகளுக்கு பிறகு அழிக்கப்பட்டன என்று தகவல் சொல்கின்றார்கள். 


அதை எவ்வாறு அரசு செய்யும் என்று எனக்குப் புரியாமல் இருந்தது. இடையில் ஏதோ ஒரு வில்லங்க உத்தரவோ அல்லது வேறு ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. 

இதன் காரணமாக பட்டா மாறுதல்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அதை தாமதமாக அறிந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

இப்பிரச்சினையில் எவரேனும் சிக்கி இருந்தால், கவலைப்படாதீர்கள். அதற்கு சரியான வழி உள்ளது இப்போது. என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் நடந்ததா என்று கேட்கும் நண்பர்களுக்கு இதோ தமிழக அரசு அனுப்பிய ஒரு சுற்றறிக்கை உங்களின் பார்வைக்காக.

நிலம் நம் வாழ்க்கை, வரலாறு மற்றும் வாழ்வியல் ஆதாரம் என்பதை மறந்து விடாதீர்கள்.



விரைவில் GOLDONLINE  யூ டியூப் சானலில் தண்ணீர் வசதியுடன் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர், 5 ஏக்கர் நிலங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். தேவைப்படுவோர் உடனடியாக தொடர்பு கொள்க. ஒவ்வொரு நிலங்களும் தண்ணீர் வசதி ஆராயப்பட்டு, லீகல் சரி பார்க்கப்பட்டு, வாஸ்து முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படும். 

 GOLDONLINE

இருந்த இடத்தில் இருந்து எந்த வித அலைச்சலும் இன்றி, மிகப் பாதுகாப்பான முறையில், சரியான இடத்தில், எதிர்கால பாதுகாப்புக்கு உகந்த நிலங்களைப் பார்வையிட்டு, முதலீடு செய்யலாம்.

என்னால் வெளியிடப்படும் எந்த நிலமாக இருப்பினும், வில்லங்க விவகாரங்கள் ஏதும் எதிர்காலத்தில் வந்தால், அதை எமது நிறுவனமே எந்த வித கட்டணமும் இன்றி சரி செய்து தரும் அல்லது பொறுப்பேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்.

நிலம் (68) - நில அளவை, உட்பிரிவு, வரைபடம் புதிய கட்டணங்கள்

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 21.07.2020ம் தேதியன்று - நில அளவை மற்றும் நிலவரித்திட்ட அலகு, நில அளவைப் பிரிவு 2(2) பிரிவின் படி ஒரு கட்டண உயர்வு ஆணையை வெளியிட்டு உள்ளது. அரசாணை நிலை எண். 330 - 21.07.2020.

இதன் படி நில அளவையின் போது உட்பிரிவு, புல எல்லை உருவாக்குதல், புலப்பட நகல் வழங்குதல், கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கான புதிய கட்டண உயர்வை அறிவித்திருக்கின்றார்கள். 

அரசாணை நிலை எண்.810 - 20.07.1987 - வணிகவரி மற்றும் அற நிலையத்துறை, அரசாணை நிலை எண்.33 - 28.05.2002 - வருவாய் துறை, அரசாணை நிலை எண்.206-28-05-2002, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரி கடித எண். ந.க.ச.6/26097/2017 ( நி.அ) நாள் 05.12.2018 மற்றும் 16.12.2019 ஆகிய அரசாணை மற்றும் குறிப்பாணைகள் மூலம் முன்புள்ள கட்டண விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

தற்போதைய உயர்த்தப்பட்ட கட்டணமானது - மத்திய நில அளவை அலுவலக இணை இயக்குனர் தலைமையில் தொழில் நுட்ப ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் பேரில் சட்டமாக்கப்பட்டது என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கீழே உயர்த்தப்பட்ட கட்டண விபரங்கள் உங்கள் பார்வைக்காக.






இனி சப்டிவிஷன், கிராம புல வரைபடங்கள் போன்றவற்றிற்கு இந்தப் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.


Wednesday, July 22, 2020

ஏழைக் கல்வித்தந்தையர்களின் துயர் துடைத்த உயர் நீதிமன்றம்


2020 மார்ச் மாதம் 24ம் தேதி முதல் இந்தியா முடங்க ஆரம்பித்தது. இது நாள் வரை என்னவென்றே புரிந்து கொள்ள இயலா நோய்க் கிருமியின் தாக்கத்தால் மனிதர்களின் வாழ்க்கை முடங்கியது. இந்தியாவின் பொருளாதாரமே சரிந்து போனது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், உலகிலேயே பஞ்சைப் பராரிகளாக விளங்கும் சிலருக்கு தமிழகத்தில் இருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவர்களின் துயரைத் துடைத்து உதவி செய்திருக்கிறது. அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.

தனியார் கல்வி நிறுவனங்கள் பொதுசேவை செய்கிறோம் என, டிரஸ்ட் பதிவு செய்து, அதன் மூலம் பள்ளி நடத்த அனுமதி பெற்று நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் மக்களுக்குச் சேவை செய்து, ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கின்றன என்பதை நாமெல்லாம் அறிவோம். இதை அரசுகளும் அறியும். நீதிமன்றமும், நீதி தேவதையும், நீதி தேவதையின் சார்பாக மைலார்டுகளும் (என் கடவுளே) அறிவார்கள். மைலார்டுகளுக்கு உண்மையின் வடிவாக உண்மையை மட்டும் எடுத்துச் சொல்லி, பணி செய்து வரும் வக்கீல் புண்ணிய ஆத்மாக்களும் அறிவார்கள்.

தினக்கூலி பெறும் கூலியை விட குறைவாக சம்பளம் பெறும், தனியார் கல்வித் தந்தைகள் கல்விச் சேவை செய்து ஏழைகளாக பி.எம்.டபிள்யூ, ஆடி கார்களில் மட்டுமே வருவதைக் கண்டு நாமெல்லாம் கண்ணீர் உகுத்து வருகிறோம். அவர்களுக்கு ஹெலிகாப்டர், விமானங்கள், கப்பல்கள் வாங்க வக்கில்லையே என பெற்றோர்களும், அரசுகளும், நீதிமன்றங்களும், கல்வியாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், பத்திரிக்கைகளும், டிவிக்களும் வருத்தத்தில் இருந்து வருகின்றதையும், அவர்களின் வேதனைகளைக் கூட எழுத்தால் வடித்து விடக் கூடியதுமானதாகவும் இல்லை என்கிற வேதனை எனக்கும் கூட உண்டு.

அதுமட்டுமல்ல தனியார் கல்வி நிலையங்கள் பல கோடி மதிப்பு வாய்ந்த பாடப்புத்தகத்துக்கும், நோட்டுக்கும் மட்டும் மிகக் குறைந்த பட்சம் 7000 ரூபாய் வாங்குகிறார்கள். கேப்பிடேசன் கட்டணம், அட்மிஷன் கட்டணம், அதற்கு, இதற்கு கட்டணம் என பெற்றோர்களிடம் மிக மிகச் சொற்ப அளவிலான கட்டணத்தினைப் பெற்று, பள்ளி நடத்த வாங்கிய நிலத்தின் கடனையும், பள்ளிக்கட்ட கடனையும் கட்டி வருகின்றார்கள். கடன் பெற்றாவது கல்விச் சேவை செய்ய வேண்டுமென்ற அவர்களின் நோக்கத்திற்கு ஈடு இணை ஏதுமுண்டா இவ்வுலகில்?

பொதுச் சேவை செய்தாலும், அதன் தரம் தாழ்ந்து விடக்கூடாது என்ற உயர் நோக்கத்திற்காக, அவரவர் குடும்ப டிரஸ்டுகளுக்கு கடனில்லா சொத்துக்கள் உருவாக்கி பெரும் துன்பப்படுகின்றார்கள். இன்னும் அனேக பிள்ளைகளுக்கு கல்விச் சேவை ஆற்ற, ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் கல்வித்தந்தைகள், பெற்றோர்கள் கட்டும் அந்தச் சிறிய தொகையில் மிச்சம் பிடித்து, மேலும் மேலும் இடங்களையும், கட்டடங்களையும் கட்டி கடனாளி ஆகின்றதை நினைத்து வேதனை உண்டாகிறது.

கல்வித் தந்தைகள் தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாதம் நான்கைந்து லட்சங்கள் சம்பளமாகவும், குழந்தைகளின் பெற்றோர்களிடம் வசூலிக்கும் பணத்தில் செலவு போக, மீதம் வரும் தொகையை ஒவ்வொரு பெற்றோருக்கும் பங்கு பிரித்துக் கொடுத்து வருவதையும் நாமெல்லாம் அறிவோம்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற நிலை தெரியாதபோது, வறுமையில் வாடி, கட்டணம் மூலம் வரும் லாபத்தில் பெற்றோருக்கும் பங்கு பிரித்துக் கொடுக்கும் ஒப்பற்ற கல்வித் தந்தையர்களின் துயர் தீர்க்க, ஒவ்வொரு பெற்றோரும் கல்விக் கட்டணத்தைச் செலுத்துக என கடைசி தேதி அறிவிக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாமெல்லாம் பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும்.

இந்திய மக்கள் பெரும்பான்மையாக ஏழ்மையில் இருந்தாலும், கல்விச் சேவைகளை வழங்கும் தனியார் கல்வித் தந்தைகளை இழந்து விடக்கூடாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக் கொண்டு, நாமெல்லாம் உடனடியாக கட்டணத்தில் 40 சதவீதத்தை கட்டி விட வேண்டும்.

மூடிக் கிடக்கும் பள்ளிதானே, எப்போது திறக்கும், என்னென்ன பாடங்கள் இருக்கும் என்று தெரியாத நிலையில் இருந்தாலும், அதுபற்றி பெற்றோர்கள் கவலைப்பட்டு விடக்கூடாது என்ற கவலையில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சாலச் சிறந்தது.

அரசு கட்டணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டாலும், நீதிமன்றம் சொல்லி விட்டால் மேல் அப்பீலே கூடாது என்ற நிலையில் அரசு ஏதும் ஏழைக் கல்வித்தந்தையர்களுக்கு உபத்திரவம் கொடுத்து விடக்கூடாது என பெற்றோர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். ஆகவே ஆளும் அரசு சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக்குக்குச் சென்ற போல அப்பீல் போய் விடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

வேலையில்லை, சம்பளம் இல்லை, தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன, சம்பளம் வாங்கியவர்களில் பாதிசம்பளம் கூட கிடைப்பதில்லை, விலை வாசி உயர்ந்து விட்டது, இந்தியர்களின் வீட்டில் பணம் இல்லை, அரசிடமும் பணம் இல்லை என்ற போதிலும் நாமெல்லாம் அடிக்கடிச் சொல்லும் மாதா, பிதா, குரு எனும் வரிசையில் மூன்றாவதாக வரும் குருவான ஆசிரியர்கள் உலாவும் பள்ளிக்கூடங்களை நடத்தும் கல்வித் தந்தையர்களுக்கு, தம் உயிரையோ அல்லது பட்டினியாக கிடந்தோ  காசு சேர்த்து, கட்டணத்தைக் கட்டி விட வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவினை சிரமேற்கொண்டு கடைபிடித்து விட வேண்டும்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தனியார் கல்வி நிலையங்களில் படித்த மாணாக்கர்களின் சம்பளத்தில் சுமார் 70 சதவீதத்தை, செய்நன்றி மறக்க கூடாது என்பதற்காக கல்வித் தந்தையர்களின் அக்கவுண்டில் கட்டி விட வேண்டுமென அரசோ அல்லது நீதிமன்றமோ உத்தரவிட்டால், அது உலகத்திற்கே முன்னுதாரனமாக இருக்கும். செய்நன்றி மறவாமைக்கு திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் அல்லவா? 30 சதவீதம் போதாதா உயிர் வாழ மனிதர்களுக்கு?

பனிரெண்டாம் வகுப்பு ரிசல்டினை முன் அறிவிப்பு இன்றி அறிவித்த பள்ளி அமைச்சகத்தின் செயற்பாடும், அதைத் தொடர்ந்து, என்று திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் இருக்கும் கல்லூரிகளுக்கு அட்மிஷன் பெற அனுமதி வழங்கி உத்தரவிட்ட வேகமும் எதனாலும் ஒப்பிட்டு விடக்கூட முடியாத அப்பற்ற அரசின் சாதனை. 

இதையெல்லாம் தவறான கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்ட எதிர்கட்சி டிவிக்காரர்களுக்கு பதில் சொல்லாமல் சென்ற அமைச்சரின் செயலை நாமெல்லாம் இருகரம் கொண்டு கரவோசை செய்து பாராட்டி மகிழ வேண்டும். ஒரு சரியானச் செயலைச் செய்கிற போது, எதிர்கட்சிகள் அதையும் குற்றம் என சொல்லும் கீழ்த்தர அரசியலைச் செய்யக்கூடாது. அது அறமல்ல அல்லவா நண்பர்களே?

ஒரு சிலர் தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு டிசி வாங்கி, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து விடக்கூடும் என்பதனால் அதற்கொரு தடையினை மாநில அரசு வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும். 

இன்னும் ஆறேழு மாதங்கள் தானே இருக்கின்றன, அதற்கு எதற்கு தனியார் பள்ளியில் நம் குழந்தை படிக்கணும் என்று எவரும் நினைத்து, கல்வித் தந்தையர்களை இன்னும் துன்பத்தில் ஆழ்த்தி விடக்கூடாது என்பதை அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

செல்போன் பார்த்தாலே கண் கெட்டுப் போகும், அதிக நேரம் கணிணி பார்க்காதீர்கள் என்று தினமலர் அடிக்கடி கட்டம் கட்டி செய்தி போடுவார்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள். ஆனால் பாருங்கள், ஆன்லைனில் கல்வி கற்கும் போது செல்போனும், கணிணியும் மனித குலத்துக்கு உதவி செய்யும் பொருளாய் மாறிப் போன அதிசயத்தை. மத்திய அரசு ஆன்லைன் கல்வி கற்க, வழிமுறைகளை வெளியிட்டு மக்களை மகிழ்விக்கிறது.

இத்தனை ஆண்டுகாலம் பொய் பிரச்சாரம் செய்து வந்த தினமலர், மற்றும் கண் மருத்துவர்களைக் கைது செய்து, தண்டனை பெற்றுத் தர சமூக செயற்பாட்டாளர்களும், கல்வியாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டுமென அடியேன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீதிமன்றம் இப்படியான பொய்ச் செய்தியை வெளியிட்ட தினமலரையும், மருத்துவர்களையும் கைது செய்ய, தானாக முன்வந்து வழக்கை  பதிவு செய்து விசாரித்து, தண்டனை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் அடியேனும் கேட்டுக் கொள்கிறேன்.

செல்போன் பார்த்தாலும், கணிணியில் நீண்ட நேரம் படித்தாலும், பார்த்தாலும் கண்கள் என்றைக்கும் கெட்டுப் போகாது என்று இப்போதைக்கு நாமெல்லாம் அறிந்து கொண்டோம், கொரானா நமக்களித்த சிறப்புக் கொடையென இதைக் கருத வேண்டும். ஆகவே நாமெல்லாம் கொரானாவுக்கு நன்றி சொல்லி விடுவோம். செய்நன்றி மறக்க கூடாது அல்லவா?

இப்படியாக ஏழைகளான தனியார் கல்வித் தந்தைகளைக் காப்பாற்றிய அரசினையும், நீதிமன்றத்தினையும், நீதியையும் நாமெல்லாம் தெய்வமென வணங்கி மகிழ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, July 19, 2020

கடவுள் பக்தி - கருப்பர் கூட்டம் - போராட்டம் – அலசல்


இறை பக்தி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியம். தன்னை யாரோ ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம், மனிதனிடத்தில் உள்ள மிருகதனம் வெளிவராமல் தடுக்கும். அதையும் மீறி சாத்தான்குளம் சாத்தான்களும் இருக்கத்தான் செய்கின்றன. அடித்தால் வலிக்கும் என்ற உணர்வு கூட இல்லாமல் வன்மம் கொண்டு அடித்துக் கொல்வதை மிருகத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். என்கவுண்டர் செய்திருக்க வேண்டிய ஆட்களைப் பாதுகாக்கிறது சட்டம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் மீது பக்தி கொண்டவர்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். இதற்கு அடியேன் ஓஷோவை அழைக்கிறேன்.

ஒரு சில மக்கள் பழக்கத்தினால் கடவுளை நினைக்கின்றனர்.

ஏனைய ஒரு சிலர் தொழில்ரீதியாக கடவுளை நினைக்கின்றனர்.

ஒரு பாதிரியார் அல்லது பூசாரி தொழில் நிமித்தமாக கடவுளை நினைக்கிறார்.

கடவுளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அதற்காக அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதில் அவர் திறமை வாய்ந்தவராக ஆகிவிட்டார்.

சிலர் பழக்கத்தினால் கடவுளை நினைத்துப் பார்க்கின்றனர். ஒரு சிலர் தொழில்ரீதியாக நினைக்கின்றனர்.

ஆனால் யாரும் ஆழ்ந்த அன்பினால் கடவுளை நினைத்துப் பார்ப்பதில்லை போல தெரிகிறது.

ஒரு சிலர் துன்பம் இருக்கும் போது கடவுளின் பெயரைக் கூறுகின்றனர்.

சில சமயங்களில் நீங்கள் கடவுளை நினைத்தாலும் கூட, அது வெறுமனே ஒன்றுமில்லாத வார்த்தையாக மட்டுமே இருக்கிறது.

நீங்கள் வேதனையில் இருக்கும்போது, அல்லது விரக்தி அடைந்து இருக்கும்போது, கடவுள் என்பவரை ஏதோ ஆஸ்பிரின் மாத்திரை போன்று கடவுளை பயன்படுத்துகிறீர்கள்.

மதங்கள் என்று அழைக்கப்படுபவை எல்லாம் உங்களை அவ்விதமாக நடக்கும்படி செய்துவிட்டன.

"கடவுள் என்ற மாத்திரையை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுங்கள் அப்போது நீங்கள் எந்த வேதனையையும் உணர மாட்டீர்கள்" என்று அவைகள் கூறுகின்றன.

எனவே நீங்கள் வேதனையில் துடிக்கும்போது மட்டுமே கடவுளை நினைக்கிறீர்கள்.

கடவுள் என்பவர் ஆஸ்பிரின் மாத்திரை அல்ல.

கடவுள் என்பவர் வலி நிவாரணியாக இல்லை.

மகிழ்ச்சியாக இருக்கும் போது யாரும் அவரை நினைப்பதில்லை.ஆனால் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் இருக்கின்ற நேரம்தான் அவரை நினைத்துப் பார்ப்பதற்கு சரியான நேரமாகும்.

ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சியுடன்,அளவுக்கு அதிகமான சந்தோஷத்துடன் இருக்கும் போது மட்டுமே நீங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள்.

நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது வெகு தொலைவில் இருக்கிறீர்கள்.

நீங்கள் துன்பத்தில் இருக்கும் போது நீங்கள் மூடப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது திறந்த உள்ளத்துடன் இருக்கிறீர்கள்.

அப்போது கடவுளின் கைகளை உங்களால் பிடிக்க முடியும்.
--ஓஷோ—

நன்றி : ஓஷோ

ஓஷோவின் கதையைப் படித்து விட்டீர்களா? இப்போது நாம் அக்கதையில் குறிப்பிடப்பட்டவர்களில் யார் என்பதை தெரிந்து கொள்ள, நீங்களே உங்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

கடவுளிடம் மனிதனுக்கு என்ன வேலை? ஏன் அவன் கடவுளை வணங்குகிறான்? போற்றிப் பாடுகிறான்? வழிபடுகிறான்? பயன்கருதா பக்தி என்று மனிதனிடம் இல்லவே இல்லை. இறை பக்தி கொண்டோர் என்பவர்கள் கடவுளிடம் பலனை எதிர்பார்த்துதான் பக்தி கொள்கிறார்களே தவிர, தூய பக்தி என்று எவரிடமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், உயர்நிலை ஆன்மீகத்தில், கடவுளை அடைவதற்கு ஆசை வைப்பது கூட தவறு என்கிறார்கள். ஆதிசங்கரருக்கு கூட கடவுள் ஆசை வலை விரித்து, அவரின் மன நிலையை சோதித்தார் என்று கூறுகின்றார்கள்.

ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்றார் திருமூலர். கடவுளை அடையும் எண்ணம் கூட இருக்க கூடாது என்கிறார் அவர். அந்த எண்ணம் கடவுளை அடைவதை தடுத்து விடும் என்கிறார்கள். கடவுளின் மீது பக்தி எனும் நினைப்பே கடவுளை அடைவதை தடுத்து விடும் என்கிறது உயர் பக்தி நூல்கள்.

இதற்கு மேல் பக்தியைப் பற்றி விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். நமது பக்தியின் தரம் என்னவென்று நாமெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதி உள்ளேன்.

இனி கருப்பர் கூட்டம் கந்தர் சஷ்டி கவசம் ஆபாசப் பேச்சுப் பற்றிப் பார்க்கலாம்.

இராமர் பிறந்த இடம் இந்தியா அல்ல, நேபாளம் என்று நேபாளப் பிரதமர் அஃபீஷியலாக அறிக்கை விடுகிறார். இராமர் கோவில், அயோத்திப் பிரச்சினை, அத்வானி யாத்திரை, அதன் பலன் பிஜேபி ஆட்சி என இன்றைய ஆட்சி அமைவதற்கு அடிக்காரணமாக இருந்த ஸ்ரீராமரின் பிறந்த இடத்தினைப் பற்றிய ஒரு தவறான விஷயத்தை நேபாளப் பிரதமர் பேசுகிறார்.

இந்தியாவில் மட்டுமல்ல, இன்றைக்கு தமிழகத்தில் பொங்கிப் பிரவாகம் எடுத்து யுடிபூப் வீடியோக்கள், போராட்டங்கள் என தகித்துக் கொண்டிருப்பவர்கள் அது பற்றி திருமொழி மலர்ந்தருள மாட்டேன் என்கின்றார்களே ஏன் என்று யாராவது யோசித்தீர்களா?

நேபாளப் பிரதமரை விமர்சித்து வீடியோ போட்டிருந்தால் மெச்சி இருக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள்.

சினிமாக்காரர்கள் பொங்கிய பொங்கு இருக்கிறதே அடேயப்பா? ஆபாசத்தைப் பற்றி இவர்கள் பேசுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை. என்ன ஒரு வக்கிரம் பிடித்த எண்ணங்கள் இவர்களுக்கு என்று பாருங்கள். கந்த சஷ்டி கவசத்தை இவர்கள் படித்திருப்பார்களா என்றால் பெரும்பாலும் இருக்காது. பாட்டைக் கேட்டிருப்பார்கள். ஆனால் அந்த கருப்பர் கூட்டம் ஆள், கடவுளை நிந்திக்க வேண்டுமென்பதற்காக படிக்கிறார். ஒரு கட்டத்தில் கடவுள் தனக்குள் அவரை இழுத்துக் கொண்டு விடுவார் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா? 

அறிஞர் அண்ணாவை விடவும், கவிஞர் கண்ணதாசனை விடவும் இனி ஒருவர் கடவுள் நிந்தனை செய்திருப்பார்களா? அண்ணாவை விடுங்கள். அவர் அரசியல்வாதி.

கண்ணதாசன் இறுதியில் என்ன ஆனார்? கண்ணனை நினைத்து உருகினார். அவர் எழுதிய பகவத்கீதையைப் போல இன்னொருவரால் எழுத முடியுமா?

அந்தக் கருப்பர் கூட்டம் சேனல்காரர் தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றிய பாடலைப் படித்திருக்கின்றாரே அதுதான் உண்மை. இறைவனின் சித்து விளையாட்டில் இதுவும் ஒன்று. எவனொருவன் அதிகமாய் கடவுள் நிந்தனை செய்கின்றானோ அவன் இறை பக்தியில் மூழ்கி விடுவான்.

அவரின் வீடியோ பேச்சைக் கேட்டேன். கவசம் என்பதற்கான அர்த்தத்தை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பது அவரின் புரிந்து கொள்ளும் தன்மை பற்றியது. அவரின் அறிவிலித்தன்மைக்கு இத்தனை எதிர்ப்புகள் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆயிரம் பேர் அதைப் பார்த்து விட்டு போய் இருப்பார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று? ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவர்களை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

வானத்தைப் பார்த்து எச்சில் துப்பிய கதை ஆகி விட்டது.

அந்த வீடியோ வந்தாலும் வந்தது வீட்டில் வேலை இன்றி உட்கார முடியாமல் அவரவருக்கு காச், மூச் என கத்தி, அர்ச்சனை செய்து அவன் என்ன செய்தானோ அதை விட அதிகமாய் அக்கிரமம் செய்கின்றார்கள். 

அரசியல்வாதியை விடுங்கள். கடவுள் அவர்களைப் பொறுத்தவரை அரசியல் செய்வதற்கான கொள்கை. ஆனால் உண்மையான இறை பக்தர்களுக்கு கடவுள் என்பவர் வேறு.

மன்னிக்கும் எண்ணமும், அன்பு உள்ளமும் தான் இறை மனம்.

தமிழ்கடவுள் முருகப் பெருமானார் சல்லிப்பயல்களின் நிந்தனைகளைக் கூட வாழ்த்து மலராக மாற்றி விடுவார்.

எம் பெருமான் முருகனுக்கு நம்மைப் போன்றவர்கள் சப்பைக் கட்டு கட்ட வேண்டிய அவசியமில்லை.

நாம் அவரை வணங்குவதையும், நினைப்பதையும் உள்ள அன்புடன் செய்வோம். பிற விஷயங்களை அவர் பார்த்துக் கொள்வார்.

கடவுள் என்றும் இருப்பவர், நிரந்தரமானவர். ஆனால் மனிதன் நிலையற்றவன் என்பதை மறந்து விடலாகாது.

Friday, July 17, 2020

நிலம் (67) – கிராம நீதிமன்றங்கள் கண்டுகொள்ளாத அரசுகள்? ஏன்?


அவ்வப்போது சுனாமி, நில நடுக்கம், கொள்ளை நோய்கள் என கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும் இந்த மனிதர்கள் இன்னும் திருந்தியபாடு இல்லை. உலக பணக்காரர்களில் முதல் பத்து இடத்துக்கு முகேஷ் அம்பானி முன்னேறினார் என்று பேசிக் கொண்டலைகின்றார்கள்.

இந்த உலகத்தின் டிசைன் பணம். பணத்தை முன்னிறுத்தியே மனிதனின் வாழ்க்கை டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எல்லோருக்கும் முகேஷ் அம்பானி ஆக வேண்டுமென்ற ஆசை. ஆனால் அதை எப்படி அடைவது என்பதுதான் எல்லோருக்குள்ளும் இருக்கும் கேள்வி. சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் இந்த ஆசையை அழகாக அறுவடை செய்து கொள்கிறார்கள். அவர்கள் எழுதும் புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகின்றன. அவர்கள் பேச அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு லட்சங்களில் பணத்தை கொட்டிக் கொடுக்கின்றார்கள் பணக்காரர்கள் ஆகத்துடிக்கும் அடிமுட்டாள்கள்.

அம்பானி வரலாற்றினை இன்னொருவர் அதே போல உருவாக்க முடியாது என்று தெரியாத அரைகுறைகள் அம்பானி, அம்பானி என பேசித் திரிகின்றார்கள்.

டீ விற்றவர் பிரதமரானார் என்று பெருமை பொங்கப் பேசிக் கொள்கிறார்கள். ஒரே ஒரு மோடிதான் இங்கு இருக்க முடியும். இன்னொரு மோடி இனிமேல் வர முடியாது என்று இவர்களுக்குப் புரிவதில்லை. ஒரே ஒரு அப்துல்கலாம் தான் இருக்க முடியும். 

இன்னொரு அப்துல்கலாம் இனி வரவே முடியாது. காந்தி, காந்தி, காந்தி என்றார்களே? ஏன் இன்னும் இன்னொரு காந்தி வரவில்லை? ஏன் என்று யோசித்துப் பார்த்தோமா?

எண்ணமே வாழ்வு – இந்த இரண்டு வார்த்தைகளில் இருக்கிறது வெற்றியின் ரகசியம். எது வெற்றி என்பதற்கு அளவுகோல்கள் இல்லை. வெற்றி என்பது வெற்றுக் கூச்சல். வாழ்ந்தோமா என்று அறிவதுதான் வெற்றி. மூன்று கோடியில் கார் வாங்குவது வெற்றி அல்ல, எதற்காக அதை வாங்கினோம் என்பதை அறிவதுதான் வெற்றி.

அரசியல்வாதிகள் அரசியலை கீழ்தரமானதாக்கி விட்டார்கள். இனி அரசியலை சரி செய்யமுடியுமா எனில் முடியாது. இனி இன்னொரு கக்கன் வரமாட்டார். இனி நல்ல அரசியல் இருக்காது. அழிவு அரசியல் மட்டுமே உலகை ஆளும். மக்களும் அதைத்தான் விரும்புகின்றார்கள். எண்ணமே வாழ்வு. மக்களிடம் நல்ல எண்ணங்கள் அற்றுப் போயின. அதனால் அவர்கள் துன்பங்களை அடைகின்றார்கள். மக்கள் திருந்தினால் நல் அரசு வரும். திருந்தவில்லை எனில் நாசகார அரசியலும், ஆட்சியாளர்களும் தான் வருவார்கள்.

நிற்க, இனி கிராம நியாயாலயா சட்டம் 2008 பற்றிப் பார்க்கலாம்.

இன்றைக்கு சர்வ தேசநீதிதினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கொண்டாடப்படுவதில்லை. ஏனென்று அடியேன் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவில் நீதிமன்றங்கள் இல்லை, நீதியரசியல் மன்றங்கள் தான் உள்ளன. நீதிபதிகள் சட்டத்தின் வழியாகப் பேசாமல் அரசியல் பேசிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம்.

சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் பற்றிய விபரங்களை கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பாருங்கள். அரசியல் ரீதியாக, தொழில் ரீதியாக பல நாடுகளை சிக்கல்களுக்கு உட்படுத்தும் விதமாகவும், மனித உரிமைகள் பற்றி கண்டுகொள்ளாத விதமாகவும் தான் இந்த நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இலங்கையில் நடந்த பேரழிவு மனித உரிமைகள் பற்றி இன்றைக்கு என்ன நடக்கிறது சர்வதேச நீதிமன்றத்தில் என்று அறிந்து கொள்ள இயலாத நிலைமைதான்.


மறுக்கப்படும் நீதியை விட தாமதிக்கப்படும் நீதியை விட, எளிதில் நீதியைப் பெற வசதிகள் இல்லாத நிலமைதான் கொடுமையிலும் கொடுமை. உலகின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் நீதி எல்லோருக்கும் சமமானதாக கிடைப்பதில்லை. அதை எந்த அரசியல்கட்சியும் கிடைக்கவிடுவதில்லை.

காங்கிரஸ் கூட்டணி அரசாட்சியின் (கவனிக்க அரசாட்சி) போது தகவல் உரிமைச் சட்டமும், கிராம நீதிமன்றங்கள் சட்டமும் மக்களுக்கானதாக பெரும்பான்மை மக்களால் பாராட்டுப் பெற்றன. தகவல் உரிமைச் சட்டம் இந்தியாவின் ஆகச் சிறந்த சட்டம்.

அடுத்ததாக நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய இன்னொரு சட்டம் கிராம நீதிமன்றங்கள் சட்டம். ஊழல்கள் ஒழிப்பு பற்றி வீராவேசம் காட்டும் ஆளும் மத்திய அரசாங்கம் இது பற்றி வாயைத் திறப்பதில்லை.

இச்சட்டம் பற்றி எவரும், எந்த அரசியல்வாதியும், ஊடகங்களும் பேசுவதில்லை. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் கிராம அளவிலான ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பான வழக்குகளுக்கு எளிதில் தீர்ப்பு கிடைத்திருக்கும்.

அப்கோர்ஸ் செஷன்ஸ் நீதிமன்றங்களில் நிலவும் அதிகார துஷ்பிரயோகங்கள் இங்கும் நடக்கலாம். ஆனால் மேல்முறையீடுகளில் நீதி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கும். ஆனால் ஆளும் அரசுகள் இந்த நீதிமன்றங்களை உருவாக்கி இருந்தால், அவர்களின் தொண்டரடிகளின் வண்டவாளங்கள் வெளியாகி விடும் என்று அஞ்சி, கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். அதைத்தவிர வேறொரு காரணமும் இருக்கவியலாது.

மகாத்மா காந்தி அவர்களின் கனவு கிராமக்குடியரசு. காந்தியின் கனவினை நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் ஒரு பிரிவு 29 வழங்கிய அதிகாரத்தின் படி கிராமப் பஞ்சாயத்துக்களில் நடைபெறும் ஊழல்கள், தில்லுமுல்லுகள், நில ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை வழக்காக தாக்கல் செய்து உடனடி நிவாரணம் பெற தற்போது உள்ள நீதிமன்ற நடைமுறைகள் பொதுமக்களுக்கு கடினமாக உள்ளன.

தாலுக்கா நீதிமன்றங்களுக்கு வந்து வழக்கு தாக்கல் செய்து, நடையாய் நடந்து தீர்ப்பு பெறுவதற்குள் தாவு தீர்ந்து விடும். தனிமனித வழக்குகளும் இதே நடைமுறையில் பெரும் துயரச் சம்பவமாக நடந்து கொண்டிருக்கின்றன.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் இன்னும் ஒரு அங்கமாக கிராம நீதிமன்றங்கள் சட்டம் உள்ளது.

கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் பயன் தரும் கிராம நியாயாலயா சட்டம் 2008னை காங்கிரஸ் கட்சி உருவாக்கி சட்டமாக்கியது. அது காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, 2009ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உள்ள லட்சோப லட்ச கிராமங்களில் கிராம நியாயாலயா நீதிமன்றத்தை உருவாக்குவது. இதை உருவாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது என்கிறது சட்டம்.

இந்தச் சட்டத்தின் முக்கியமான அம்சங்கள் என்னவெனில், இந்த நீதிமன்றத்தின் நீதிபதியானவர் முதலாம் நிலை தகுதி நீதித்துறை நடுவர் (First Class Judicial Magistrate) தகுதி பெற்றவராக இருப்பது. அடுத்து ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த கிராம நீதிமன்றம் அமைப்பது. இதற்கான நடைமுறை வழிகளை ஒவ்வொரு மா நில அரசுகள் உருவாக்குவது. நீதிமன்றம் மக்களைத் தேடிச் செல்லும் முறையில் வாகன வசதிகள் இருப்பது ஆகிய மிகச் சிறந்த அம்சங்கள் நிறைந்த இந்தச் சட்டம், மஹாத்மா காந்தியின் 140 பிறந்த நாள் அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 11 மாநிலங்களில் மட்டும் 208 கிராம நீதிமன்றங்கள் (Village Courts) அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று கூட தமிழ் நாட்டில் இல்லை.

கிராமப்புற ஏழைகளின் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறுகள், சிவில், குற்ற வழக்குகள் அனைத்தும் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். அதுமட்டுமல்ல கிராம ஊராட்சிகளில் நடக்கும் ஊழல்கள், நிலமோசடிகள் ஆகியவற்றையும் விசாரிக்கலாம். கிராமத்தின் பொதுச் சொத்துக்கள், நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், மேய்ச்சல் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், பாதைகள் ஆகியவற்றையும், கிராம ஊராட்சியில் நடைமுறைப்படுத்தப்படும், செயல்படுத்தப்படும் திட்டங்களின் தரம் ஆகியவற்றில் ஏற்படும் ஊழல்கள் பற்றியும் வழக்குத் தொடுத்து தகுந்த நிவாரணம் பெறலாம்.

கிராமங்களில் ஊழல்கள் மட்டுப்படுத்தப்பட்டால், அல்லது ஊழல்வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டால் ஊழல் குறையும். விஏஓ, ஆர்.ஐ. தாசில்தார் ஆகியோர் மீதும் வழக்குகள் தொடுக்கலாம். சேவை குறைபாடுகள் பற்றியும் வழக்குகள் தொடுக்கலாம். இந்த நீதிமன்றத்தினால் கிராம அளவில் தாமதமாகும் மக்கள் சேவைப்பணிகள் துரிதமாக நடக்கும். அரசு அலுவலர்கள் தங்கள் பணிகளை வேகமாகவும், சரியாகவும் செய்வார்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்யப் பயப்படுவார்கள்.

இந்தியக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருந்தால் கட்டப்பஞ்சாயத்து, ஊர் தீர்ப்புகள், ஜாதிய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கிடைத்திருக்கும். 

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றம் இருந்திருந்தால் வீண் அலைச்சல், சாமானிய மனிதருக்கான உரிமைகள் எளிதில் கிடைத்திருக்கும் சட்டப்படி அல்லவா?

அதுமட்டுமல்ல, தாலுக்கா, மாவட்ட, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை கொஞ்சம் அல்ல. அவைகள் எல்லாம் குறைந்திருக்கும். கிராம நீதிமன்றங்களில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பல்வேறு வழக்குகள் இந்த நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. ஊராட்சி அளவில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய எளிய வழக்குகள் கூட ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. கிராம நீதிமன்றங்கள் அவை எல்லாவற்றையும் சரி செய்யும். 

இதில் என்ன பிரச்சினை என்றால் இதர நீதிமன்ற வக்கீல்களுக்கு வருமானம் குறைந்து போகும். கிராம அளவில் வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டால் இதர நீதிமன்ற வக்கீல்களுக்கு வழக்கு வராது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மிகச் சொற்ப அளவில் உள்ள வக்கீல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதால் இந்த நீதிமன்றம் உருவாக்க அவர்கள் தடை ஏற்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது.

ஒரு வக்கீல் தான் இந்தியாவின் மகாத்மா என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் இந்த கிராம நியாயாலயா ஏன் நடைமுறைப் படுத்தவில்லை? சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கிராம நியாயாலயாவை உருவாக்க மாநில அரசுகளுக்கு விபரம் கேட்டு உத்தரவிட்டது. அதை அடுத்து ஒன்றும் நடக்கவில்லை. தினத்தந்தியில் ஒரு செய்தி வெளியானது. அவ்வளவுதான்.

இந்தச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வினை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ள ஊடகங்கள் மவுனமாக இருக்கின்றன.

கிராம நீதிமன்றங்களை ஒவ்வொரு கிராமம் தோறும் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மக்கள் அதற்கான முன்னெடுப்புகளை செய்தல் வேண்டும்.

கிராமம் என்பது இந்தியாவின் ஆன்மா. மகாத்மா காந்தியின் கிராமக் குடியரசு கனவு நிறைவேற்றப்பட்டால், இந்தியா ஊழல் அற்ற நியாய தேசமாக உருவாகும்.

மாண்புமிகு நம் பாரதப் பிரதமரும், என் ஆதர்ச ஹீரோவும் ஆன திரு மோடி அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். இச்சட்டத்தினை அவர் ஒவ்வொரு கிராமம் தோறும் நடைமுறைப்படுத்தினால் அவர் இந்தியாவின் நவீன மகாத்மா என்று அழைக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜூலை 17, 2020ம் தேதி சர்வதேச நீதி தினத்தில் இக்கட்டுரையை எழுதி உங்களுக்கு சமர்ப்பித்து, அடியேன் சர்வதேச நீதி தினத்தை கொண்டாடி மகிழ்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது சர்வதேச நீதி தின வாழ்த்துக்கள். மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமையுடன் அவர்கள் வாழ இந்த நாளில் நாமெல்லாம் உறுதி எடுப்போம்.

* * *

Saturday, July 4, 2020

காதலெனும் அபத்த நாடகம்


காதலை தெய்வீக உணர்வு என்பார்கள். காதலுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் அனேகம். இன்றைக்கும் காதலுக்காக கொலைகள் நடக்கின்றன. காதலர்களும் செத்துப் போகின்றார்கள். காதலர்களின் பெற்றோர்களும் செத்துப் போகின்றார்கள். காதல்,காதல், காதல், இல்லையெனில் சாதல் சாதல் சாதல் என்று கவிதை எழுதிச் சென்றார் பாரதி. உடுமலை நாராயண கவியின் காதல் பாடல்களும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சினிமா காதல் பாடல்களும் என்றைக்கும் சிலாகிக்க வேண்டிய பொக்கிஷங்கள் என காதலில் வீழ்ந்து உருண்டு புரண்டவர்கள் கண்களில் மின்னலடிக்க பேசுவார்கள்.

காதல் சினிமாவில் இருக்கிறது. அதுவும் தமிழ் சினிமாவில் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. உலகெங்கும் காதலர்கள் காதலிக்கின்றார்கள். காதலித்துக் கொண்டே இருக்கின்றார்கள். கடைசி மனிதன் இவ்வுலகில் இருக்கும் வரை காதலும் இருந்து கொண்டே இருக்கும்.

காதலின் பெரும் நெருடல் என்னவென்றால் காதல் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பதில்லை. காதல் தோல்வியைத்தான் கொண்டாடுகிறது. சலீமின் காதலி அக்பரால் கொல்லப்பட்டார். காதலில் வெற்றி அடைந்தோர் பெரும்பாலும் இருப்பதில்லை. காதல் என்பது சாத்தானின் வடிவம் என்போர் பலர். அது மனத்தை மட்டும் அல்ல உறவினையும் சிதைத்து விடுகிறது. சமூகத்திற்கு கேடுகளை விளைவித்து விடுகிறது என்பார்கள்.

பெரியோர்கள் காதலை மனிதனின் அபத்த நாடகம் என்று வர்ணிப்பர். ஆரம்பம் மட்டுமே இருக்கும், முடிவென்பது இருக்காது. காதலின் வடிவம் இன்னதென்று சொல்ல முடியாது என்பார்கள்.

உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகின்றேன். அற்புதமான காதல் கதை. ஊமைப் பெண்ணின் காதல் இது. மொழியற்ற, ஓசைகளற்ற அழகான யுவதியின் அற்புதமான காதல் இது. ஒளிகளின் வழியே காதலைச் சொன்ன அற்புதமான பெண் அவள். பூமியில் சுழன்றடிக்கும் காற்றின் நெளிவு சுழிவுகளில் தன் உடலை லயத்துடன் இணைத்து நடனமாடிய இயற்கையின் அற்புதப் பேரழகியின் காதல் இது.

அவளின் காதல், அவள் கண்களில் பொங்கும் காதலெனும் உணர்வுகளால் ஒளிப்படமாக்கி காதலனின் மீது தவழ விட்ட அந்த பேசாமொழிப் பெண்ணின் காதல் இது.

கேட்கத் தயார் ஆகி விட்டீர்களா?

ஞானிகளும், சித்தர்களும், மகா யோகிகளும், சூஃபிக்களும், ஜென் குருக்களும், இறைத்தூதரைப் பற்றியே சிந்தித்துப் போற்றும் ஃபாஸ்டர்களும் தேடி அலைவது ஓசைகளற்ற அந்த இறைவனின் உலகில் ஓர் இடம். அவனின் அன்புக்கு அடிமையாகி விட வேண்டுமென்ற தாகத்தால் அவர்கள் தங்களைப் பெரும் துன்பங்களுக்குள்ளும் துயரத்துக்குள்ளும் ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.

ஓசை – இசை. மனிதனின் அற்புதமான கண்டுபிடிப்பு. இதிலும் மேன்மையான ஒன்று ஓசைகளற்ற உலகம். காற்றுடன் இசைவது, ஓசையில் மூழ்குவது முடிவில் ஓசையில்லா, ஒலியில்லா உலகில் அவனின் அற்புத தரிசனத்தை தரிசிப்பது என்பது பேரின்பமோ பேரின்பம் அல்லவா?

அந்தப் பேரின்பத்தை, இவர்களுக்கு எளிதில் கிடைத்து விடாத அந்த இறையின் கொடையை, ஒரு பேசாமொழிப் பெண்ணுக்கு இறைவன் கொடுத்திருந்தான். கடவுள் மயங்கிக் கிடந்த போது, நான் உங்களுக்குச் சொல்லப் போகும் கதைநாயகிக்கு கொடுத்து விட்டான் போல.

இனி கதைக்குப் போகலாமா?

மலைகளில் இருந்து வழிந்தோடும் நீர் தழுவிச் செல்லும் ஆற்றங்கரையோரமாக கவனிப்பாரற்று கிடக்கும் ஒரு அழகான மசூதி. விடிகாலைப் பொழுதில் பாங்கு சொல்வதற்காக கதவைத் திறந்த பெரியவர், அவனைக் காண்கிறார்.

அவன் பெயர் சூஃபி. பெரியவரிடம் தானே பாங்கு சொல்கிறேன் என்று கேட்கிறான். அன்றைக்கு பாங்கு ஒலிக்கிறது. ஓசை மசூதியிலிருந்து எழுந்து இயற்கையைச் சூழ்கிறது. அழகான கோர்வையான இசையுடன் ஒலிக்கும், இறைவனை துதிக்க வாருங்கள், இது அதற்கான நேரம் என்று அழைக்கும் குரலுக்குக் கட்டுப்பட்டு பெரும்பாலானோர் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். தொழுகையின் போது, சூஃபி தன் உயிரை விடுகிறான்.

அன்பு நண்பர்களே…!

ஆறடி நீளத்தில், ஆழத்தில் மண்ணுக்குள் ஒரு குழி வெட்டப்படுகிறது. இக்குழி அவனுக்கானது அல்ல, காதலின் அபத்த நாடகத்தின் முடிவினை அக்குழி தனக்குள் புதைத்துக் கொள்ளப்போகிறது. அந்தக் குழியில் புதையுண்ட காதல், உங்களின் நண்பனான கோவை தங்கவேலின் வார்த்தைகளில் உங்களிடம் வந்து சேர, அக்குழி வெட்டப்படுகிறது நண்பர்களே.

அந்தக் காதலின் அபத்தத்தை இனிச் சொல்லப் போகிறேன் உங்களுக்கு. கேளுங்கள்.

அந்த ஊமைப் பெண் ஒரு நாள் பஸ்ஸில் அழகிய யுவனான சூஃபியைப் பார்க்கிறாள். பார்த்த நொடியில் கண் வழியே சென்று மனதின் புதைந்து போனான் சூஃபி. சூஃபியின் பிரார்த்தனை மாலை அவளிடத்தில் கிடைக்கிறது. அதை மறந்து விட்டுச் சென்று விடுகிறான் சூஃபி.

மசூதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியவர் அபூப்பின் கிளாரினெட் இசைக்கு கதகளி நடனமாடுவாள் அந்த ஊமைப் பெண்.

கிளாரினெட்டில் இருந்து தவழும் இசையின் மகத்துவத்தை நீங்கள் யூடியூப்பில் கேளுங்கள். மனதை உருக்கும் ஓசை வெளிவரும். அந்த ஓசை தன்னை அழித்துக் கொண்டு காற்றோடு கலந்து போகும். கேட்போரின் மனதை ஆக்கிரமத்து தனக்குள் இழுத்து, மனதை இல்லாமல் அழிந்து போகவிடும். அப்பெரியவரின் கிளாரினெட் இசைக்கு அழகாய், காற்றாய் நடனமாடுவாள் அப்பெண். அது ஒரு கவிதையாக மலரும் அற்புதமான நேரம்.

அந்தப் பெரியவரின் சீடன் தான் இந்த சூஃபி. அங்கு அவனைப் பார்க்கிறாள் அவள். காதல் படறுகிறது குளத்திற்குள் படறும் பாசி போல.


ஒரு மாலையின் அற்புதமான நேரத்தில், சூஃபியைச் சந்திக்கச் செல்வாள் அவள். சூஃபி இறைவனை நோக்கிப் முழங்காலிட்டு பிரார்த்திப்பான். அவனருகில் சென்று அமர்ந்து அவன் இறைவனை பிரார்த்திப்பது போல அவளும் முயல்வாள். பிரார்த்தனை முடித்து கண் விழிக்கும் சூஃபி அவளை அங்கிருந்து செல்லாதே என்று கேட்பான்.

காதல், காதல், காதல். பொங்கி வழியும் அந்த தருணத்தில் இருவருக்குள்ளும் நிகழும் அந்த உணர்வின் வீச்சினை என்னவென்று சொல்வது நண்பர்களே? எழுத்துக்கள் உணர்வின் முன்னே தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டன. எழுத முடியாது வார்த்தைகள் அவர்களின் காதலின் முன்னே மகிழ்வுடன் தோல்வியுற்று போயிற்று.

இக்காதல் பெரியவருக்குத் தெரிய வருகிறது. அவர் அவளிடம் ”நிம்மதியாக உறக்கம் கொள் மகளே!” என்றுச் சொல்கிறார்.

இந்த வார்த்தைகளுக்கு இன்னொரு நீண்ட பதிவு எழுதுகிறேன்.

”நிம்மதியாக உறக்கம் கொள் மகளே….!” சாதாரண வார்த்தைகள் அல்ல.

அவளின் தகப்பனுக்கும் தெரிய வருகிறது. உடனடியாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. சூஃபியைக் கடிந்து கொள்கிறார் அபூப். அந்த அழகான இறைவன் நிறைந்திருக்கும் மசூதியிலிருந்து வெளியேறுகிறான் சூஃபி.

அவனைச் சந்திக்கச் செல்லும் அவள், அவனை கட்டித்தழுவுகிறாள். காதல் அங்கு சங்கமித்து இயற்கையோடு உணர்வுகள் ஒன்றாகின்றன. கட்டித்தழுவலில் காதலில் முகிழ்ந்து விடலாம் நண்பர்களே. உணர்வுகளின் சங்கமம் மட்டுமே உண்மையான காதலாக இருக்க முடியும். உடல்களின் சங்கமம் காதலுக்குத் தேவையே இல்லை.

மறுநாள், சூஃபி அவளின் வீட்டு வாசலில் அவளுக்காக காத்து நிற்கிறான். அவளும் வருகிறாள் அவளைப் பெற்ற தகப்பன் தன் நெஞ்சில் குத்திக் கொள்கிறான். தகப்பனுக்காக அவளாய் மாறி நிற்கும் காதலன் சூஃபியை, தன் உயிரை, தன் காதலை, தன் வாழ்க்கையை விட்டு, மீண்டும் வீட்டுக்குள் திரும்புகிறாள் அவள். சூஃபி தன் உயிரை அங்கேயே விட்டு விட்டு, வெறும் உடலோடு எங்கோ சென்று விடுகிறான்.

இனியும் என்னால் எழுத முடியாது நண்பர்களே.

காதல் எப்போதும் அபத்தமானது. அந்த ஊமைப் பெண்ணின் காதலும் அபத்த நாடகமாகி, பைத்தியக்கார உலக வாழ்க்கைக்குள் மூழ்கிப் போய் விடுகிறது.

இதைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமா?

பிரைம் வீடியோவில் சூஃபியும் சுஜாதாயும் எனும் மலையாள திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் கதையைத்தான் மேலே சொல்லி இருக்கிறேன்.

அவசியம் அனைவரும் இப்படத்தை தனியாக அமர்ந்து பாருங்கள். இசைக் கோர்வையும் படமும் உங்களுக்கு கோடானு கோடி வர்ண ஜாலங்களை நிகழ்த்தும்.

அந்த இயக்குனருக்கு எனது வாழ்த்துகள். இசையமைத்தவருக்கும் அன்புகள்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த சூஃபியும், நடிகை அதிதி ராவும் பாராட்டத்தக்கவர்கள்.

வாழ்க மலையாள சினிமா உலகம்.

வாழ்க காதல்…!

இன்னொரு பதிவில் உங்களுடன் பேசுகிறேன்.

வாழ்க நலமுடன்…!


Tuesday, June 30, 2020

நிலம் (66) – வெளிநாடு வாழ் இந்தியருக்கு நேர்ந்த வித்தியாசமான பிரச்சினை


அன்பு நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

தற்போதைய சூழலில் பெரும்பான்மையான வெளி நாடு வாழ் இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி விடலாம் என்ற சிந்தனையில் உள்ளனர். எனக்கு வரக்கூடிய அழைப்புகள், அவர்கள் இயற்கை சார்ந்த தற்சார்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கின்றனர் என்று சொல்கின்றன.

எதார்த்தம் என்பது இதுதான்.

வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு உண்மை இப்போது புரிந்து இருக்கும். சொந்த நாடு என்பது சொந்த நாடுதான்.

அடியேன் பெரும்பாலான நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, லேண்ட் சீலிங், லேண்ட் அக்குசேசன், பாதை எடுப்பு போன்ற வகைகளுக்குள் சிக்காத விவசாய நிலங்களாகவும், வாஸ்துவுக்குள் இருக்கிறதாகவும், தண்ணீர் வசதி உள்ளதாகவும் பார்த்து, லீகல் பார்த்து ஆன்லைனில் அப்டேட் செய்கிறேன்.

நமது யூடியூப் சானல் www.youtube.com/c/GoldOnline



மேற்கண்ட இணைப்பில் நிலங்களைப் பற்றி விவரித்துள்ளேன். அவசியம் பாருங்கள்.

வெளி நாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க நல்ல அனுபவம் பெற்ற ஆலோசகரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். தற்போது ஏகப்பட்ட கெடுபிடிகளை இந்திய அரசு விதித்திருக்கிறது.

என்னைப் போன்ற நிதி மற்றும் நில ஆலோசகர்களை அவசியம் தொடர்பு கொள்க. எனக்கு இதுதான் பணி. ஆகவே மிகத் துல்லியமான, சரியான, சட்ட விதிகளுக்கு உட்பட்ட ஆலோசனையை அவசியம் தருவேன்.

இனி வெளி நாடு வாழ் இந்தியருக்கு வந்த பிரச்சினையும், தீர்வும் பற்றிய செய்தியைப் பார்க்கலாம்.

டென்மார்க்க்கில் வசித்து வந்த ஒரு வெளி நாடு வாழ் இந்தியர் ஒருவர் டெல்லியில் ஒரு கடை ஒன்றினை வாங்கி, வியாபாரம் செய்ய முடிவெடுத்து, கடைகள் கட்டி வாடகைக்கு விடும் பில்டர் ஒருவரை அணுகி, விலை பேசி முழு தொகையினையும் வழங்கி விட்டார்.

ஆனால் அந்த ரியல் எஸ்டேட்காரர் குறித்த நேரத்திற்குள் கடையை அவரிடம் ஒப்படைக்காமல் காலதாமதம் செய்து வந்திருக்கின்றனர்.

டென்மார்க்–காரர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். அங்கே ரியல் எஸ்டேட்காரர் வக்கீல் மூலம் ஆஜராகி, டென்மார்க்காரர் கன்ஸ்யூமர் கேட்டகரியில் வரமாட்டார் எனவும், அவர் கடையினை வியாபாரத்துக்காக வாங்குகிறார் என வாதிடுகிறார்கள். தீர்ப்பு ரியல் எஸ்டேட்காரருக்கு ஆதரவாக கிடைக்கிறது. பின்னர் டென்மார்க்காரர் தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தில் (NCDRC) வழக்குத் தொடுக்கிறார். அங்கேயும் ரியல் எஸ்டேட்காரரின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகிறது. அதாவது டென்மார்க்காரர்  நுகர்வோர் அல்ல என்று வழக்கு திசை மாற்றப்படுகிறது.

வேறு வழிகள் இன்றி எதிர்காலத்தில் மாநில ஆளுநர்களாக வரப்போகும் வராமலும் போகும் நீதிபதிகள் பரிபாலனம் செய்யும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார் டென்மார்க்காரர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. எதிர்பாராத சூழ் நிலைகளில் ஒரு சில வழக்குகள் சில விதிகளை மாற்றி விடும் போக்குடையவை. இதைப் பற்றி பிரிதொறு நாளில் எழுதுகிறேன்.

அவ்வாறு நடந்த ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அதாவது கன்ஸ்யூமர் புரொடெக்‌ஷன் ஆக்ட் 1986- செக்சன் 2(1)d  சட்ட விதியின் படி, சில சூழல்களில் கமர்ஷியல் நோக்கத்திற்காக எதை வாங்கினாலும், அது நுகர்வோர் எனும் வகைக்குள் அடங்கும் என்பதால் டென்மார்க்காரரும் ஒரு நுகர்வோர் தான் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இப்போது டென்மார்க்காரர் நுகர்வோர் என்று உறுதி செய்யப்பட்டார். இனி அடுத்த வழக்கு தனி.

இந்த வழக்கு சுவாரசியமான ஒன்று. தற்போது பி.எம்.கேர் ஃபண்ட் பற்றி சர்ச்சைகள் இருக்கின்றன அல்லவா? அதைப் போன்றது தான் நுகர்வோர் - கமர்ஷியல் வழக்குகள். பி.எம்.கேர் ஃபண்ட் வெகுசுவாரசியமானது. அதைப் பற்றி பின்னர் ஒரு நாளில் எழுதுகிறேன்.

அந்த டென்மார்க்காரர் செய்த தவறென்ன? கடை வாங்க ரியல் எஸ்டேட்காரரிடம் விலை பேசி மொத்த பணத்தையும் செலுத்தி விட்டார். ஆனால் குறிப்பிட்ட ஒப்பந்த நாளுக்குள் கடையினை ஒப்படைக்கவில்லை. ஒப்படைக்க உத்தரவு போடுங்கள், எனக்கான தீர்ப்பினை வழங்குங்கள் என கோர்ட்டுக்குப் போனார். கோர்ட்டில் நடந்ததோ இவர் நுகர்வோரே அல்ல என்ற வழக்கு. பொருள் இழப்பு, நேர விரயம், வழக்குச் செலவுகள், மன உளைச்சல் என அவர் எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார். ஆகவே இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பினாலும், நிலம் வாங்க விரும்பினாலும் தக்க ஆலோசனை பெற்ற பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்லவும். இந்திய இணையதளச் செய்திகள் அப்டேட் செய்யப்படுவதில்லை என்பதை மறந்து விடாதீர்கள்.

புரிகிறதா உங்களுக்கு?

இதைப் போன்றதொரு சிக்கல்களில் சிக்கி விடாமல் இருக்க எம்மைப் போன்றோரை அணுகி (கொஞ்சம் செலவாகும்) ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

பின்னர் இன்னொரு விஷயம் கூட இருக்கிறது.

எங்களது வியாபாரத் தொடர்பில் இருக்கும் நண்பர்கள் ஸ்பெயின் மற்றும் டென்மார்க்கில் ரியல் எஸ்டேட் செய்கிறார்கள். அடியேனும் அவர்களில் ஒரு அங்கம். மேற்கண்ட நாடுகளில் நிலமோ அல்லது முதலீடோ செய்ய விரும்பினால் அழையுங்கள். இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, முறைப்படி நிலங்கள் பதிவு செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


Monday, June 29, 2020

தர்மத்தின் பாதையினை யார் அறிவார்?


அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்.

நீண்ட நாட்களாகிப் போகின மீண்டும் எழுத. கொரானா லாக்டவுன் நாட்களில் வீட்டில் இருந்தேனல்லவா, அதை ஈடுபடுத்தும் விதமான ஏதாவது பொருளீட்டி விடலாமென்ற முனைப்பில் பல வேலைகளைச் செய்திருந்தேன். தமிழகத்தில் கொரானா சமூகப் பரவல் அதிகமாகியதால், அவைகள் மீண்டும் முடங்கிப் போயின.

காலம் எல்லாவற்றுக்குமான பதிலை தன்னுள் வைத்திருக்கும் என்ற தத்துவத்தை நினைத்து மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டாலும், ஆளும் ஆட்சியாளர்களின் திறமையற்ற தன்மையினால் இந்தியர்கள் அடையும் கொடுமைகளை எண்ணி வேதனைதான் அதிகப்படுகிறது.

சார்பற்ற நிலையில் யோசித்துப் பாருங்கள்.

திறமையற்ற ஆட்சித்திறனாலேதான் இந்தியாவில் இவ்வளவு இழப்புகளும் உண்டாகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது அல்லவா?

குஜராத்தில் மதக்கொலைகள் நடைபெற்ற போது வாளாயிருந்தார் அன்றைய சி.எம்.மோடி என்பதால் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்த சம்பவத்தை நாமெல்லாம் படித்திருக்கிறோம். அதன் பிறகு அவர் சீனாவை நோக்கி தன் வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டார். இதுவரை எந்த ஒரு இந்திய தலைவரும் மேற்கொள்ளாத அளவு, சீன பயணங்கள் சென்றார். சமீபத்தில் கூட சீனா கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழகத்தில் சீன அதிபதிருடன் சந்திப்புகள் நிகழ்த்தி பல வியாபார ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். ஆனால் தற்போது நடந்து வருபவைகள் என்ன? சீனாவை நம்பிய பிரதமருக்கு ஏன் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன?

அதுமட்டுமல்ல, நம் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கொரானா தொற்று பற்றி பேசும் போது, எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது என்றுச் சொல்லி இருக்கிறார் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அதிகார பலமும், ஆட்சியும், அசுரபலமும் கொண்ட ஆட்சியாளர்கள் இன்று கைபிசைந்து நிற்கும் அவலம் ஏன் உண்டானது? என்ன காரணம்? இதைப் பற்றி அலசி ஆராய பல ஆட்கள் இருக்கின்றார்கள். அவரவர் சிந்தனைகளுக்கு ஏற்ப பல வழிகளில் அரசியல், பொருளாதாரம் போன்ற காரணிகளை வைத்து ஆராய்வார்கள் பெரும்பாலானோர்.

ஆனால் இதற்கெல்லாம் மூலகாரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? சுவாரசியமான அந்த காரணத்தைக் காணலாம் வாருங்கள் என்னுடனே!

இப்போது உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவு கூறுகிறேன்.

கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.

நம் பாரத பிரதமர் இந்தியாவிற்கு பிரதமரான வரலாற்றினை மனதுக்குள் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். அதே போல தமிழக முதலமைச்சர், முதலமைச்சரான வரலாற்று  நிகழ்வுகளை ஒரு நிமிடம் யோசித்து விடுங்கள்.

கட்சி சார்பற்ற, மதச் சார்பற்ற நிலையில் மனதை தெளிவாக வைத்துக் கொண்டு யோசித்துப் பாருங்கள். செய்து விட்டீர்களா? இனி தொடர்ந்து படியுங்கள்.

நேர்மையாக இருக்கிறேன், கடுமையாக உழைக்கிறேன், எவருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை, யாரையும் கொல்லவில்லை, எவரையும் கொடுமைப்படுத்தியதில்லை, எல்லோருக்கும் நல்லதுதான் செய்கிறேன். ஆனால் எனக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படித் துன்பங்களையே தொடர்ந்து செய்கிறான் என்று கவலைப்பட்டிருக்காத மனிதர்களே இப்பூமியில் இருக்கமுடியாது. அதில் நீங்களும் ஒருவர்தான் என்பதில் உங்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லையே? நீங்களும் ஒருவர் தான் என்றால் தொடர்ந்து படியுங்கள்.

ஒரு கதை சொல்கிறேன்.

இரவு கவிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. மழையில் நனைந்து கொண்டே வந்த ஒருவர், எதிர்பட்ட சத்திரத்திற்குள் நுழைகிறார். அங்கே ஏற்கனவே இருவர் தங்கி இருப்பதைப் பார்க்கிறார்.

”நானும் உங்களுடன் தங்கிக் கொள்ளலாமா?” என்று கேட்கிறார். இருவரும் சம்மதிக்கின்றார்கள்.

இரவு ஆகிறது. பசி நேரம். புதிதாக வந்தவர், ”எனக்குப் பசியாக இருக்கிறது. அவசரத்தில் உணவு கொண்டு வர மறந்து போனேன். உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

முதலாமானவர் ”என்னிடம் மூன்று ரொட்டிகள் உள்ளன” என்றும், இரண்டாமாவர் ”என்னிடம் ஐந்து ரொட்டிகள் உள்ளன” என்றும் சொல்கிறார்கள்.

மூன்று பேர், எட்டு ரொட்டிகள் உள்ளன, சமமாகப் பிரித்து உண்டால் நன்றாக இருக்குமே, எப்படிப் பிரிப்பது என்று யோசிக்கிறார்கள். புதிதாக வந்தவர் ”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டாக்கினால் மொத்தமாக இருபத்து நான்கு ரொட்டித் துண்டுகள் வரும். ஆளுக்கு எட்டுத் துண்டுகளாக உண்ணலாம்” என்று சொல்கிறார். மூவரும் அதன்படியே செய்து, உண்டு விட்டு உறங்கினர்.

மறுநாள், புதிதாக வந்தவர் மீண்டும் தன் பயணத்தை துவக்கிய போது இருவரிடமும் எட்டு தங்க காசுகளைக் கொடுத்து பிரித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

முதலாமாவர் ”ஆளுக்குப் பாதியாக பிரித்துக் கொள்ளலாம்” என்றார். 

இரண்டாமாவர் ”அதெப்படி சரியாக வரும்? நான் தானே அதிகம் கொடுத்தேன்? எனக்கு ஐந்து, உங்களுக்கு மூன்று என பிரித்துக் கொள்ளலாம்” என்றார். முதலாமாவரோ, ”என்னிடம் குறைவாக ரொட்டிகள் இருந்த போது கூட, நான் அவருக்கு உணவு கொடுத்தேன் அல்லவா? இருவரும் சேர்ந்து தானே அவருக்கு உணவு கொடுத்தோம். அவரின் பசி ஆற்றியதிலே இருவருக்கும் சமபங்கு உண்டுதானே? ஆகவே சமபங்காக பிரித்துக் கொள்ளலாம்” என்றார்.

எட்டு காசுகளைப் பங்கு பிரிப்பதில் இருவருக்கும் பிரச்சினை வந்து விட்டது.

மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு மூன்றும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஐந்து தங்க காசும் பிரித்துக் கொடுப்பது சரியா?

மூன்றாவதாக வந்தவரின் பசிக்காக இருவரும் சேர்ந்து உணவு கொடுத்ததற்தாக தானத்தில் அளவு வித்தியாசம் பாராமல் சரி சமமாகப் பிரித்துக் கொடுப்பது சரியா?

இந்த இரண்டு தீர்ப்புகளில் ஒரே ஒரு தீர்ப்புதான் சரி அல்லவா? அது எது என்று யோசித்துப் பாருங்கள். முடிவெடுத்து விட்டீர்கள் அல்லவா?

ஆம் நாமெல்லாம் இந்த இரண்டு தீர்ப்பினை மட்டும் தான் யோசிப்போம்.

ஆனால் இந்தப் பிரச்சினைக்கு தர்மம் ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்தப் பிரச்சினை அந்த நாட்டு மன்னனிடம் செல்கிறது. பிரச்சினையைக் கேட்டு மன்னன் குழம்பினான். அதே மனநிலையில் சென்று தூங்கிய போது, அவனது கனவில் அவன் வணங்கும் கடவுள் இப்பிரச்சினைக்கு ஒரு தீர்ப்பினை வழங்கினார்.

மறுநாள் அரசவை கூடியது. இருவரும் தீர்ப்புக்காக மன்னன் எதிரில் வந்து நின்றனர்.

”மூன்று ரொட்டி வைத்திருந்தவருக்கு ஒரு காசும், ஐந்து ரொட்டி வைத்திருந்தவருக்கு ஏழு காசும் கொடுக்கும்படி” மன்னர் தீர்ப்பு வழங்கினார். கூடியிருந்த சபையினருக்கு இந்த தீர்ப்பின் அர்த்தம் புரியவில்லை. எதன் அடிப்படையில் இந்த தீர்ப்பினை மன்னர் வழங்கினார் என்று குழம்பினர்.

முதலாமானவரோ ”இது அக்கிரமமான தீர்ப்பு” என்றுச் சொன்னார்.

மன்னர் அனைவரையும் நோக்கினார்.

முதலாமானவரைப் பார்த்து, ”உங்களிடம் இருந்த ரொட்டிகள் எத்தனை” என்று கேட்டார்.

”மூன்று” என்றார் அவர்.

”எத்தனை துண்டுகளாக பிரித்தீர்?”

”ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப் பிரித்தேன்” என்றார்.

”ஆக உங்களிடமிருந்த மூன்று ரொட்டிகளைப் பிரித்தால் ஒன்பது துண்டுகள் வந்திருக்கும். அதில் எட்டு துண்டுகளை நீங்களே சாப்பிட்டு விட்டீர்கள். ஒரே ஒரு துண்டை மட்டுமே புதிதாக வந்தவருக்கு தானம் செய்தீர்கள். ஆனால் இரண்டாமாவரோ ஐந்து ரொட்டிகளைப் பிரித்து, ஏழு துண்டுகளைத் தானம் செய்தார். அதன்படி உங்களுக்கு ஒரு தங்கக் காசு, அவருக்கு ஏழு தங்கக் காசு வழங்கும்படி ஆணையிட்டேன். தீர்ப்பு சரிதானே?” என்றார் மன்னர்.

நண்பர்களே,

தர்மம் வழங்கும் தீர்ப்பு உண்மை என்னவோ அதன்படிதான் இருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். நாம் ஒவ்வொருவருக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நாம் செய்த தான தருமங்களின் படியே நடத்தப்படும். அதன் பலன்களே நமக்கு கிடைக்கும் அல்லவா? அதிக நற்பலன்களைச் செய்தவர்களுக்கு கடவுள் அதிகமாகவும், குறைவான நற்பலன்களைச் செய்தவர்களுக்கு குறைவாகவும் கிடைப்பதுதானே அறம்? தர்மம்? அதுதானே சரியாக வரும்.

கடவுள் அதிகாரத்திற்குப் பயப்படுவதில்லை. யார் என்ன நற்பலன்களைச் செய்திருக்கின்றார்களோ அப்பலன்களுக்கு ஏற்ற நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். பிரதமரானாலும் சரி, முதலமைச்சரானாலும் சரி அவர்களுக்கும் அவ்வாறே.

தர்மத்தின் தீர்ப்பு கட்சி சார்பற்றது. மதச் சார்பற்றது. என்றும் அழியாத உண்மையின் வழியில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு மனித வாழ்க்கையும் இப்படித்தான்.

கடவுள் என்பவர் உண்மையானவர். அவர் எப்போதும் யாரையும் தண்டிப்பதும் இல்லை. கணக்கு வழக்குகள் பார்ப்பதும் இல்லை. மனித வாழ்க்கையின் சாரம் தர்மத்தின் பால் அமைக்கப்பட்டிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள். உங்களுக்கும், எனக்கும் நடக்கும் ஒவ்வொரு நன்மை தீமைகளுக்கும் காரணம் நாமே….!

இல்லையென உங்களால் மறுக்க முடியுமெனில் எனக்கு எழுதுங்கள்.

வாழ்க நலமுடன்….!