2020 மார்ச் மாதம்
24ம் தேதி முதல் இந்தியா முடங்க ஆரம்பித்தது. இது நாள் வரை என்னவென்றே புரிந்து கொள்ள
இயலா நோய்க் கிருமியின் தாக்கத்தால் மனிதர்களின் வாழ்க்கை முடங்கியது. இந்தியாவின்
பொருளாதாரமே சரிந்து போனது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், உலகிலேயே பஞ்சைப் பராரிகளாக விளங்கும் சிலருக்கு தமிழகத்தில் இருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவர்களின் துயரைத் துடைத்து உதவி செய்திருக்கிறது. அதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்ப்போம்.
தனியார் கல்வி
நிறுவனங்கள் பொதுசேவை செய்கிறோம் என, டிரஸ்ட் பதிவு செய்து, அதன் மூலம் பள்ளி நடத்த
அனுமதி பெற்று நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தனியார்
பள்ளிகளும் மக்களுக்குச் சேவை செய்து, ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கின்றன என்பதை நாமெல்லாம்
அறிவோம். இதை அரசுகளும் அறியும். நீதிமன்றமும், நீதி தேவதையும், நீதி தேவதையின் சார்பாக
மைலார்டுகளும் (என் கடவுளே) அறிவார்கள். மைலார்டுகளுக்கு உண்மையின் வடிவாக உண்மையை மட்டும் எடுத்துச் சொல்லி, பணி செய்து வரும் வக்கீல்
புண்ணிய ஆத்மாக்களும் அறிவார்கள்.
தினக்கூலி பெறும்
கூலியை விட குறைவாக சம்பளம் பெறும், தனியார் கல்வித் தந்தைகள் கல்விச் சேவை செய்து ஏழைகளாக
பி.எம்.டபிள்யூ, ஆடி கார்களில் மட்டுமே வருவதைக் கண்டு நாமெல்லாம்
கண்ணீர் உகுத்து வருகிறோம். அவர்களுக்கு ஹெலிகாப்டர், விமானங்கள், கப்பல்கள் வாங்க
வக்கில்லையே என பெற்றோர்களும், அரசுகளும், நீதிமன்றங்களும், கல்வியாளர்களும்,
சமூக செயற்பாட்டாளர்களும், பத்திரிக்கைகளும், டிவிக்களும் வருத்தத்தில் இருந்து வருகின்றதையும்,
அவர்களின் வேதனைகளைக் கூட எழுத்தால் வடித்து விடக் கூடியதுமானதாகவும் இல்லை என்கிற வேதனை
எனக்கும் கூட உண்டு.
அதுமட்டுமல்ல தனியார்
கல்வி நிலையங்கள் பல கோடி மதிப்பு வாய்ந்த பாடப்புத்தகத்துக்கும்,
நோட்டுக்கும் மட்டும் மிகக் குறைந்த பட்சம் 7000 ரூபாய் வாங்குகிறார்கள். கேப்பிடேசன்
கட்டணம், அட்மிஷன் கட்டணம், அதற்கு, இதற்கு கட்டணம் என பெற்றோர்களிடம் மிக மிகச் சொற்ப
அளவிலான கட்டணத்தினைப் பெற்று, பள்ளி நடத்த வாங்கிய நிலத்தின் கடனையும், பள்ளிக்கட்ட
கடனையும் கட்டி வருகின்றார்கள். கடன் பெற்றாவது கல்விச் சேவை செய்ய வேண்டுமென்ற அவர்களின் நோக்கத்திற்கு ஈடு இணை ஏதுமுண்டா இவ்வுலகில்?
பொதுச் சேவை செய்தாலும், அதன் தரம் தாழ்ந்து விடக்கூடாது என்ற உயர் நோக்கத்திற்காக,
அவரவர் குடும்ப டிரஸ்டுகளுக்கு கடனில்லா சொத்துக்கள் உருவாக்கி பெரும் துன்பப்படுகின்றார்கள்.
இன்னும் அனேக பிள்ளைகளுக்கு கல்விச் சேவை ஆற்ற, ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் கல்வித்தந்தைகள், பெற்றோர்கள்
கட்டும் அந்தச் சிறிய தொகையில் மிச்சம் பிடித்து, மேலும் மேலும் இடங்களையும், கட்டடங்களையும்
கட்டி கடனாளி ஆகின்றதை நினைத்து வேதனை உண்டாகிறது.
கல்வித் தந்தைகள் தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாதம் நான்கைந்து லட்சங்கள்
சம்பளமாகவும், குழந்தைகளின் பெற்றோர்களிடம் வசூலிக்கும் பணத்தில் செலவு போக, மீதம்
வரும் தொகையை ஒவ்வொரு பெற்றோருக்கும் பங்கு பிரித்துக் கொடுத்து வருவதையும் நாமெல்லாம்
அறிவோம்.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற நிலை தெரியாதபோது, வறுமையில் வாடி, கட்டணம் மூலம் வரும் லாபத்தில் பெற்றோருக்கும் பங்கு பிரித்துக்
கொடுக்கும் ஒப்பற்ற கல்வித் தந்தையர்களின் துயர் தீர்க்க, ஒவ்வொரு பெற்றோரும் கல்விக் கட்டணத்தைச் செலுத்துக என கடைசி தேதி அறிவிக்கும்
நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாமெல்லாம் பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும்.
இந்திய மக்கள்
பெரும்பான்மையாக ஏழ்மையில் இருந்தாலும், கல்விச் சேவைகளை வழங்கும் தனியார் கல்வித்
தந்தைகளை இழந்து விடக்கூடாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக் கொண்டு, நாமெல்லாம் உடனடியாக கட்டணத்தில் 40 சதவீதத்தை கட்டி விட வேண்டும்.
மூடிக் கிடக்கும்
பள்ளிதானே, எப்போது திறக்கும், என்னென்ன பாடங்கள் இருக்கும் என்று தெரியாத நிலையில்
இருந்தாலும், அதுபற்றி பெற்றோர்கள் கவலைப்பட்டு விடக்கூடாது என்ற கவலையில் நீதிமன்றம்
அளித்த தீர்ப்பு சாலச் சிறந்தது.
அரசு கட்டணம் வாங்க
கூடாது என்று உத்தரவிட்டாலும், நீதிமன்றம் சொல்லி விட்டால் மேல் அப்பீலே கூடாது என்ற
நிலையில் அரசு ஏதும் ஏழைக் கல்வித்தந்தையர்களுக்கு உபத்திரவம் கொடுத்து விடக்கூடாது
என பெற்றோர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். ஆகவே ஆளும் அரசு சுப்ரீம் கோர்ட்டில் டாஸ்மாக்குக்குச்
சென்ற போல அப்பீல் போய் விடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.
வேலையில்லை, சம்பளம்
இல்லை, தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன, சம்பளம் வாங்கியவர்களில் பாதிசம்பளம் கூட
கிடைப்பதில்லை, விலை வாசி உயர்ந்து விட்டது, இந்தியர்களின் வீட்டில் பணம் இல்லை, அரசிடமும்
பணம் இல்லை என்ற போதிலும் நாமெல்லாம் அடிக்கடிச் சொல்லும் மாதா, பிதா, குரு எனும் வரிசையில் மூன்றாவதாக
வரும் குருவான ஆசிரியர்கள் உலாவும் பள்ளிக்கூடங்களை நடத்தும் கல்வித் தந்தையர்களுக்கு, தம் உயிரையோ அல்லது பட்டினியாக கிடந்தோ காசு சேர்த்து, கட்டணத்தைக் கட்டி விட வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவினை சிரமேற்கொண்டு கடைபிடித்து விட
வேண்டும்.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தனியார் கல்வி நிலையங்களில் படித்த மாணாக்கர்களின் சம்பளத்தில் சுமார் 70 சதவீதத்தை, செய்நன்றி மறக்க கூடாது என்பதற்காக கல்வித் தந்தையர்களின் அக்கவுண்டில் கட்டி விட வேண்டுமென அரசோ அல்லது நீதிமன்றமோ உத்தரவிட்டால், அது உலகத்திற்கே முன்னுதாரனமாக இருக்கும். செய்நன்றி மறவாமைக்கு திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார் அல்லவா? 30 சதவீதம் போதாதா உயிர் வாழ மனிதர்களுக்கு?
பனிரெண்டாம் வகுப்பு
ரிசல்டினை முன் அறிவிப்பு இன்றி அறிவித்த பள்ளி அமைச்சகத்தின் செயற்பாடும், அதைத் தொடர்ந்து,
என்று திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் இருக்கும் கல்லூரிகளுக்கு அட்மிஷன் பெற
அனுமதி வழங்கி உத்தரவிட்ட வேகமும் எதனாலும் ஒப்பிட்டு விடக்கூட முடியாத அப்பற்ற அரசின்
சாதனை.
இதையெல்லாம் தவறான கண்ணோட்டத்துடன் கேள்வி கேட்ட எதிர்கட்சி டிவிக்காரர்களுக்கு
பதில் சொல்லாமல் சென்ற அமைச்சரின் செயலை நாமெல்லாம் இருகரம் கொண்டு கரவோசை செய்து பாராட்டி
மகிழ வேண்டும். ஒரு சரியானச் செயலைச் செய்கிற போது, எதிர்கட்சிகள் அதையும் குற்றம்
என சொல்லும் கீழ்த்தர அரசியலைச் செய்யக்கூடாது. அது அறமல்ல அல்லவா நண்பர்களே?
ஒரு சிலர் தனியார்
பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளுக்கு டிசி வாங்கி, அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து
விடக்கூடும் என்பதனால் அதற்கொரு தடையினை மாநில அரசு வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இன்னும் ஆறேழு மாதங்கள் தானே இருக்கின்றன, அதற்கு எதற்கு தனியார் பள்ளியில் நம் குழந்தை
படிக்கணும் என்று எவரும் நினைத்து, கல்வித் தந்தையர்களை இன்னும் துன்பத்தில் ஆழ்த்தி
விடக்கூடாது என்பதை அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
செல்போன் பார்த்தாலே
கண் கெட்டுப் போகும், அதிக நேரம் கணிணி பார்க்காதீர்கள் என்று தினமலர் அடிக்கடி கட்டம்
கட்டி செய்தி போடுவார்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள். ஆனால் பாருங்கள்,
ஆன்லைனில் கல்வி கற்கும் போது செல்போனும், கணிணியும் மனித குலத்துக்கு உதவி செய்யும்
பொருளாய் மாறிப் போன அதிசயத்தை. மத்திய அரசு ஆன்லைன் கல்வி கற்க, வழிமுறைகளை வெளியிட்டு
மக்களை மகிழ்விக்கிறது.
இத்தனை ஆண்டுகாலம்
பொய் பிரச்சாரம் செய்து வந்த தினமலர், மற்றும் கண் மருத்துவர்களைக் கைது செய்து, தண்டனை
பெற்றுத் தர சமூக செயற்பாட்டாளர்களும், கல்வியாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுக்க
வேண்டுமென அடியேன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நீதிமன்றம் இப்படியான
பொய்ச் செய்தியை வெளியிட்ட தினமலரையும், மருத்துவர்களையும் கைது செய்ய, தானாக முன்வந்து
வழக்கை பதிவு செய்து விசாரித்து, தண்டனை அளிக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் அடியேனும் கேட்டுக்
கொள்கிறேன்.
செல்போன் பார்த்தாலும்,
கணிணியில் நீண்ட நேரம் படித்தாலும், பார்த்தாலும் கண்கள் என்றைக்கும் கெட்டுப் போகாது
என்று இப்போதைக்கு நாமெல்லாம் அறிந்து கொண்டோம், கொரானா நமக்களித்த சிறப்புக் கொடையென
இதைக் கருத வேண்டும். ஆகவே நாமெல்லாம் கொரானாவுக்கு நன்றி சொல்லி விடுவோம். செய்நன்றி
மறக்க கூடாது அல்லவா?
இப்படியாக ஏழைகளான
தனியார் கல்வித் தந்தைகளைக் காப்பாற்றிய அரசினையும், நீதிமன்றத்தினையும், நீதியையும்
நாமெல்லாம் தெய்வமென வணங்கி மகிழ வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.