குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, July 19, 2020

கடவுள் பக்தி - கருப்பர் கூட்டம் - போராட்டம் – அலசல்


இறை பக்தி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியம். தன்னை யாரோ ஒருவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம், மனிதனிடத்தில் உள்ள மிருகதனம் வெளிவராமல் தடுக்கும். அதையும் மீறி சாத்தான்குளம் சாத்தான்களும் இருக்கத்தான் செய்கின்றன. அடித்தால் வலிக்கும் என்ற உணர்வு கூட இல்லாமல் வன்மம் கொண்டு அடித்துக் கொல்வதை மிருகத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். என்கவுண்டர் செய்திருக்க வேண்டிய ஆட்களைப் பாதுகாக்கிறது சட்டம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இறைவன் மீது பக்தி கொண்டவர்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம். இதற்கு அடியேன் ஓஷோவை அழைக்கிறேன்.

ஒரு சில மக்கள் பழக்கத்தினால் கடவுளை நினைக்கின்றனர்.

ஏனைய ஒரு சிலர் தொழில்ரீதியாக கடவுளை நினைக்கின்றனர்.

ஒரு பாதிரியார் அல்லது பூசாரி தொழில் நிமித்தமாக கடவுளை நினைக்கிறார்.

கடவுளுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அதற்காக அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதில் அவர் திறமை வாய்ந்தவராக ஆகிவிட்டார்.

சிலர் பழக்கத்தினால் கடவுளை நினைத்துப் பார்க்கின்றனர். ஒரு சிலர் தொழில்ரீதியாக நினைக்கின்றனர்.

ஆனால் யாரும் ஆழ்ந்த அன்பினால் கடவுளை நினைத்துப் பார்ப்பதில்லை போல தெரிகிறது.

ஒரு சிலர் துன்பம் இருக்கும் போது கடவுளின் பெயரைக் கூறுகின்றனர்.

சில சமயங்களில் நீங்கள் கடவுளை நினைத்தாலும் கூட, அது வெறுமனே ஒன்றுமில்லாத வார்த்தையாக மட்டுமே இருக்கிறது.

நீங்கள் வேதனையில் இருக்கும்போது, அல்லது விரக்தி அடைந்து இருக்கும்போது, கடவுள் என்பவரை ஏதோ ஆஸ்பிரின் மாத்திரை போன்று கடவுளை பயன்படுத்துகிறீர்கள்.

மதங்கள் என்று அழைக்கப்படுபவை எல்லாம் உங்களை அவ்விதமாக நடக்கும்படி செய்துவிட்டன.

"கடவுள் என்ற மாத்திரையை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுங்கள் அப்போது நீங்கள் எந்த வேதனையையும் உணர மாட்டீர்கள்" என்று அவைகள் கூறுகின்றன.

எனவே நீங்கள் வேதனையில் துடிக்கும்போது மட்டுமே கடவுளை நினைக்கிறீர்கள்.

கடவுள் என்பவர் ஆஸ்பிரின் மாத்திரை அல்ல.

கடவுள் என்பவர் வலி நிவாரணியாக இல்லை.

மகிழ்ச்சியாக இருக்கும் போது யாரும் அவரை நினைப்பதில்லை.ஆனால் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் இருக்கின்ற நேரம்தான் அவரை நினைத்துப் பார்ப்பதற்கு சரியான நேரமாகும்.

ஏனெனில் நீங்கள் மகிழ்ச்சியுடன்,அளவுக்கு அதிகமான சந்தோஷத்துடன் இருக்கும் போது மட்டுமே நீங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள்.

நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது வெகு தொலைவில் இருக்கிறீர்கள்.

நீங்கள் துன்பத்தில் இருக்கும் போது நீங்கள் மூடப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது திறந்த உள்ளத்துடன் இருக்கிறீர்கள்.

அப்போது கடவுளின் கைகளை உங்களால் பிடிக்க முடியும்.
--ஓஷோ—

நன்றி : ஓஷோ

ஓஷோவின் கதையைப் படித்து விட்டீர்களா? இப்போது நாம் அக்கதையில் குறிப்பிடப்பட்டவர்களில் யார் என்பதை தெரிந்து கொள்ள, நீங்களே உங்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

கடவுளிடம் மனிதனுக்கு என்ன வேலை? ஏன் அவன் கடவுளை வணங்குகிறான்? போற்றிப் பாடுகிறான்? வழிபடுகிறான்? பயன்கருதா பக்தி என்று மனிதனிடம் இல்லவே இல்லை. இறை பக்தி கொண்டோர் என்பவர்கள் கடவுளிடம் பலனை எதிர்பார்த்துதான் பக்தி கொள்கிறார்களே தவிர, தூய பக்தி என்று எவரிடமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், உயர்நிலை ஆன்மீகத்தில், கடவுளை அடைவதற்கு ஆசை வைப்பது கூட தவறு என்கிறார்கள். ஆதிசங்கரருக்கு கூட கடவுள் ஆசை வலை விரித்து, அவரின் மன நிலையை சோதித்தார் என்று கூறுகின்றார்கள்.

ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள், ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்றார் திருமூலர். கடவுளை அடையும் எண்ணம் கூட இருக்க கூடாது என்கிறார் அவர். அந்த எண்ணம் கடவுளை அடைவதை தடுத்து விடும் என்கிறார்கள். கடவுளின் மீது பக்தி எனும் நினைப்பே கடவுளை அடைவதை தடுத்து விடும் என்கிறது உயர் பக்தி நூல்கள்.

இதற்கு மேல் பக்தியைப் பற்றி விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். நமது பக்தியின் தரம் என்னவென்று நாமெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதி உள்ளேன்.

இனி கருப்பர் கூட்டம் கந்தர் சஷ்டி கவசம் ஆபாசப் பேச்சுப் பற்றிப் பார்க்கலாம்.

இராமர் பிறந்த இடம் இந்தியா அல்ல, நேபாளம் என்று நேபாளப் பிரதமர் அஃபீஷியலாக அறிக்கை விடுகிறார். இராமர் கோவில், அயோத்திப் பிரச்சினை, அத்வானி யாத்திரை, அதன் பலன் பிஜேபி ஆட்சி என இன்றைய ஆட்சி அமைவதற்கு அடிக்காரணமாக இருந்த ஸ்ரீராமரின் பிறந்த இடத்தினைப் பற்றிய ஒரு தவறான விஷயத்தை நேபாளப் பிரதமர் பேசுகிறார்.

இந்தியாவில் மட்டுமல்ல, இன்றைக்கு தமிழகத்தில் பொங்கிப் பிரவாகம் எடுத்து யுடிபூப் வீடியோக்கள், போராட்டங்கள் என தகித்துக் கொண்டிருப்பவர்கள் அது பற்றி திருமொழி மலர்ந்தருள மாட்டேன் என்கின்றார்களே ஏன் என்று யாராவது யோசித்தீர்களா?

நேபாளப் பிரதமரை விமர்சித்து வீடியோ போட்டிருந்தால் மெச்சி இருக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள்.

சினிமாக்காரர்கள் பொங்கிய பொங்கு இருக்கிறதே அடேயப்பா? ஆபாசத்தைப் பற்றி இவர்கள் பேசுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை. என்ன ஒரு வக்கிரம் பிடித்த எண்ணங்கள் இவர்களுக்கு என்று பாருங்கள். கந்த சஷ்டி கவசத்தை இவர்கள் படித்திருப்பார்களா என்றால் பெரும்பாலும் இருக்காது. பாட்டைக் கேட்டிருப்பார்கள். ஆனால் அந்த கருப்பர் கூட்டம் ஆள், கடவுளை நிந்திக்க வேண்டுமென்பதற்காக படிக்கிறார். ஒரு கட்டத்தில் கடவுள் தனக்குள் அவரை இழுத்துக் கொண்டு விடுவார் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருக்கிறதா? 

அறிஞர் அண்ணாவை விடவும், கவிஞர் கண்ணதாசனை விடவும் இனி ஒருவர் கடவுள் நிந்தனை செய்திருப்பார்களா? அண்ணாவை விடுங்கள். அவர் அரசியல்வாதி.

கண்ணதாசன் இறுதியில் என்ன ஆனார்? கண்ணனை நினைத்து உருகினார். அவர் எழுதிய பகவத்கீதையைப் போல இன்னொருவரால் எழுத முடியுமா?

அந்தக் கருப்பர் கூட்டம் சேனல்காரர் தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றிய பாடலைப் படித்திருக்கின்றாரே அதுதான் உண்மை. இறைவனின் சித்து விளையாட்டில் இதுவும் ஒன்று. எவனொருவன் அதிகமாய் கடவுள் நிந்தனை செய்கின்றானோ அவன் இறை பக்தியில் மூழ்கி விடுவான்.

அவரின் வீடியோ பேச்சைக் கேட்டேன். கவசம் என்பதற்கான அர்த்தத்தை அவரால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பது அவரின் புரிந்து கொள்ளும் தன்மை பற்றியது. அவரின் அறிவிலித்தன்மைக்கு இத்தனை எதிர்ப்புகள் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஆயிரம் பேர் அதைப் பார்த்து விட்டு போய் இருப்பார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று? ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவர்களை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

வானத்தைப் பார்த்து எச்சில் துப்பிய கதை ஆகி விட்டது.

அந்த வீடியோ வந்தாலும் வந்தது வீட்டில் வேலை இன்றி உட்கார முடியாமல் அவரவருக்கு காச், மூச் என கத்தி, அர்ச்சனை செய்து அவன் என்ன செய்தானோ அதை விட அதிகமாய் அக்கிரமம் செய்கின்றார்கள். 

அரசியல்வாதியை விடுங்கள். கடவுள் அவர்களைப் பொறுத்தவரை அரசியல் செய்வதற்கான கொள்கை. ஆனால் உண்மையான இறை பக்தர்களுக்கு கடவுள் என்பவர் வேறு.

மன்னிக்கும் எண்ணமும், அன்பு உள்ளமும் தான் இறை மனம்.

தமிழ்கடவுள் முருகப் பெருமானார் சல்லிப்பயல்களின் நிந்தனைகளைக் கூட வாழ்த்து மலராக மாற்றி விடுவார்.

எம் பெருமான் முருகனுக்கு நம்மைப் போன்றவர்கள் சப்பைக் கட்டு கட்ட வேண்டிய அவசியமில்லை.

நாம் அவரை வணங்குவதையும், நினைப்பதையும் உள்ள அன்புடன் செய்வோம். பிற விஷயங்களை அவர் பார்த்துக் கொள்வார்.

கடவுள் என்றும் இருப்பவர், நிரந்தரமானவர். ஆனால் மனிதன் நிலையற்றவன் என்பதை மறந்து விடலாகாது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.