குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சர்வதேச நீதிதினம். Show all posts
Showing posts with label சர்வதேச நீதிதினம். Show all posts

Friday, July 17, 2020

நிலம் (67) – கிராம நீதிமன்றங்கள் கண்டுகொள்ளாத அரசுகள்? ஏன்?


அவ்வப்போது சுனாமி, நில நடுக்கம், கொள்ளை நோய்கள் என கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார். ஆனாலும் இந்த மனிதர்கள் இன்னும் திருந்தியபாடு இல்லை. உலக பணக்காரர்களில் முதல் பத்து இடத்துக்கு முகேஷ் அம்பானி முன்னேறினார் என்று பேசிக் கொண்டலைகின்றார்கள்.

இந்த உலகத்தின் டிசைன் பணம். பணத்தை முன்னிறுத்தியே மனிதனின் வாழ்க்கை டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. எல்லோருக்கும் முகேஷ் அம்பானி ஆக வேண்டுமென்ற ஆசை. ஆனால் அதை எப்படி அடைவது என்பதுதான் எல்லோருக்குள்ளும் இருக்கும் கேள்வி. சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் இந்த ஆசையை அழகாக அறுவடை செய்து கொள்கிறார்கள். அவர்கள் எழுதும் புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகின்றன. அவர்கள் பேச அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு லட்சங்களில் பணத்தை கொட்டிக் கொடுக்கின்றார்கள் பணக்காரர்கள் ஆகத்துடிக்கும் அடிமுட்டாள்கள்.

அம்பானி வரலாற்றினை இன்னொருவர் அதே போல உருவாக்க முடியாது என்று தெரியாத அரைகுறைகள் அம்பானி, அம்பானி என பேசித் திரிகின்றார்கள்.

டீ விற்றவர் பிரதமரானார் என்று பெருமை பொங்கப் பேசிக் கொள்கிறார்கள். ஒரே ஒரு மோடிதான் இங்கு இருக்க முடியும். இன்னொரு மோடி இனிமேல் வர முடியாது என்று இவர்களுக்குப் புரிவதில்லை. ஒரே ஒரு அப்துல்கலாம் தான் இருக்க முடியும். 

இன்னொரு அப்துல்கலாம் இனி வரவே முடியாது. காந்தி, காந்தி, காந்தி என்றார்களே? ஏன் இன்னும் இன்னொரு காந்தி வரவில்லை? ஏன் என்று யோசித்துப் பார்த்தோமா?

எண்ணமே வாழ்வு – இந்த இரண்டு வார்த்தைகளில் இருக்கிறது வெற்றியின் ரகசியம். எது வெற்றி என்பதற்கு அளவுகோல்கள் இல்லை. வெற்றி என்பது வெற்றுக் கூச்சல். வாழ்ந்தோமா என்று அறிவதுதான் வெற்றி. மூன்று கோடியில் கார் வாங்குவது வெற்றி அல்ல, எதற்காக அதை வாங்கினோம் என்பதை அறிவதுதான் வெற்றி.

அரசியல்வாதிகள் அரசியலை கீழ்தரமானதாக்கி விட்டார்கள். இனி அரசியலை சரி செய்யமுடியுமா எனில் முடியாது. இனி இன்னொரு கக்கன் வரமாட்டார். இனி நல்ல அரசியல் இருக்காது. அழிவு அரசியல் மட்டுமே உலகை ஆளும். மக்களும் அதைத்தான் விரும்புகின்றார்கள். எண்ணமே வாழ்வு. மக்களிடம் நல்ல எண்ணங்கள் அற்றுப் போயின. அதனால் அவர்கள் துன்பங்களை அடைகின்றார்கள். மக்கள் திருந்தினால் நல் அரசு வரும். திருந்தவில்லை எனில் நாசகார அரசியலும், ஆட்சியாளர்களும் தான் வருவார்கள்.

நிற்க, இனி கிராம நியாயாலயா சட்டம் 2008 பற்றிப் பார்க்கலாம்.

இன்றைக்கு சர்வ தேசநீதிதினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கொண்டாடப்படுவதில்லை. ஏனென்று அடியேன் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இந்தியாவில் நீதிமன்றங்கள் இல்லை, நீதியரசியல் மன்றங்கள் தான் உள்ளன. நீதிபதிகள் சட்டத்தின் வழியாகப் பேசாமல் அரசியல் பேசிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம்.

சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் பற்றிய விபரங்களை கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பாருங்கள். அரசியல் ரீதியாக, தொழில் ரீதியாக பல நாடுகளை சிக்கல்களுக்கு உட்படுத்தும் விதமாகவும், மனித உரிமைகள் பற்றி கண்டுகொள்ளாத விதமாகவும் தான் இந்த நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இலங்கையில் நடந்த பேரழிவு மனித உரிமைகள் பற்றி இன்றைக்கு என்ன நடக்கிறது சர்வதேச நீதிமன்றத்தில் என்று அறிந்து கொள்ள இயலாத நிலைமைதான்.


மறுக்கப்படும் நீதியை விட தாமதிக்கப்படும் நீதியை விட, எளிதில் நீதியைப் பெற வசதிகள் இல்லாத நிலமைதான் கொடுமையிலும் கொடுமை. உலகின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் நீதி எல்லோருக்கும் சமமானதாக கிடைப்பதில்லை. அதை எந்த அரசியல்கட்சியும் கிடைக்கவிடுவதில்லை.

காங்கிரஸ் கூட்டணி அரசாட்சியின் (கவனிக்க அரசாட்சி) போது தகவல் உரிமைச் சட்டமும், கிராம நீதிமன்றங்கள் சட்டமும் மக்களுக்கானதாக பெரும்பான்மை மக்களால் பாராட்டுப் பெற்றன. தகவல் உரிமைச் சட்டம் இந்தியாவின் ஆகச் சிறந்த சட்டம்.

அடுத்ததாக நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டிய இன்னொரு சட்டம் கிராம நீதிமன்றங்கள் சட்டம். ஊழல்கள் ஒழிப்பு பற்றி வீராவேசம் காட்டும் ஆளும் மத்திய அரசாங்கம் இது பற்றி வாயைத் திறப்பதில்லை.

இச்சட்டம் பற்றி எவரும், எந்த அரசியல்வாதியும், ஊடகங்களும் பேசுவதில்லை. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் கிராம அளவிலான ஊழல்கள், நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பான வழக்குகளுக்கு எளிதில் தீர்ப்பு கிடைத்திருக்கும்.

அப்கோர்ஸ் செஷன்ஸ் நீதிமன்றங்களில் நிலவும் அதிகார துஷ்பிரயோகங்கள் இங்கும் நடக்கலாம். ஆனால் மேல்முறையீடுகளில் நீதி கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கும். ஆனால் ஆளும் அரசுகள் இந்த நீதிமன்றங்களை உருவாக்கி இருந்தால், அவர்களின் தொண்டரடிகளின் வண்டவாளங்கள் வெளியாகி விடும் என்று அஞ்சி, கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். அதைத்தவிர வேறொரு காரணமும் இருக்கவியலாது.

மகாத்மா காந்தி அவர்களின் கனவு கிராமக்குடியரசு. காந்தியின் கனவினை நிறைவேற்ற காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின் ஒரு பிரிவு 29 வழங்கிய அதிகாரத்தின் படி கிராமப் பஞ்சாயத்துக்களில் நடைபெறும் ஊழல்கள், தில்லுமுல்லுகள், நில ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை வழக்காக தாக்கல் செய்து உடனடி நிவாரணம் பெற தற்போது உள்ள நீதிமன்ற நடைமுறைகள் பொதுமக்களுக்கு கடினமாக உள்ளன.

தாலுக்கா நீதிமன்றங்களுக்கு வந்து வழக்கு தாக்கல் செய்து, நடையாய் நடந்து தீர்ப்பு பெறுவதற்குள் தாவு தீர்ந்து விடும். தனிமனித வழக்குகளும் இதே நடைமுறையில் பெரும் துயரச் சம்பவமாக நடந்து கொண்டிருக்கின்றன.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் இன்னும் ஒரு அங்கமாக கிராம நீதிமன்றங்கள் சட்டம் உள்ளது.

கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் பயன் தரும் கிராம நியாயாலயா சட்டம் 2008னை காங்கிரஸ் கட்சி உருவாக்கி சட்டமாக்கியது. அது காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, 2009ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உள்ள லட்சோப லட்ச கிராமங்களில் கிராம நியாயாலயா நீதிமன்றத்தை உருவாக்குவது. இதை உருவாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது என்கிறது சட்டம்.

இந்தச் சட்டத்தின் முக்கியமான அம்சங்கள் என்னவெனில், இந்த நீதிமன்றத்தின் நீதிபதியானவர் முதலாம் நிலை தகுதி நீதித்துறை நடுவர் (First Class Judicial Magistrate) தகுதி பெற்றவராக இருப்பது. அடுத்து ஒவ்வொரு கிராமங்களிலும் இந்த கிராம நீதிமன்றம் அமைப்பது. இதற்கான நடைமுறை வழிகளை ஒவ்வொரு மா நில அரசுகள் உருவாக்குவது. நீதிமன்றம் மக்களைத் தேடிச் செல்லும் முறையில் வாகன வசதிகள் இருப்பது ஆகிய மிகச் சிறந்த அம்சங்கள் நிறைந்த இந்தச் சட்டம், மஹாத்மா காந்தியின் 140 பிறந்த நாள் அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் 11 மாநிலங்களில் மட்டும் 208 கிராம நீதிமன்றங்கள் (Village Courts) அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று கூட தமிழ் நாட்டில் இல்லை.

கிராமப்புற ஏழைகளின் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறுகள், சிவில், குற்ற வழக்குகள் அனைத்தும் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். அதுமட்டுமல்ல கிராம ஊராட்சிகளில் நடக்கும் ஊழல்கள், நிலமோசடிகள் ஆகியவற்றையும் விசாரிக்கலாம். கிராமத்தின் பொதுச் சொத்துக்கள், நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், மேய்ச்சல் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், பாதைகள் ஆகியவற்றையும், கிராம ஊராட்சியில் நடைமுறைப்படுத்தப்படும், செயல்படுத்தப்படும் திட்டங்களின் தரம் ஆகியவற்றில் ஏற்படும் ஊழல்கள் பற்றியும் வழக்குத் தொடுத்து தகுந்த நிவாரணம் பெறலாம்.

கிராமங்களில் ஊழல்கள் மட்டுப்படுத்தப்பட்டால், அல்லது ஊழல்வாதிகளுக்கு அச்சம் ஏற்பட்டால் ஊழல் குறையும். விஏஓ, ஆர்.ஐ. தாசில்தார் ஆகியோர் மீதும் வழக்குகள் தொடுக்கலாம். சேவை குறைபாடுகள் பற்றியும் வழக்குகள் தொடுக்கலாம். இந்த நீதிமன்றத்தினால் கிராம அளவில் தாமதமாகும் மக்கள் சேவைப்பணிகள் துரிதமாக நடக்கும். அரசு அலுவலர்கள் தங்கள் பணிகளை வேகமாகவும், சரியாகவும் செய்வார்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்யப் பயப்படுவார்கள்.

இந்தியக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருந்தால் கட்டப்பஞ்சாயத்து, ஊர் தீர்ப்புகள், ஜாதிய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கிடைத்திருக்கும். 

ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நீதிமன்றம் இருந்திருந்தால் வீண் அலைச்சல், சாமானிய மனிதருக்கான உரிமைகள் எளிதில் கிடைத்திருக்கும் சட்டப்படி அல்லவா?

அதுமட்டுமல்ல, தாலுக்கா, மாவட்ட, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை கொஞ்சம் அல்ல. அவைகள் எல்லாம் குறைந்திருக்கும். கிராம நீதிமன்றங்களில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பல்வேறு வழக்குகள் இந்த நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. ஊராட்சி அளவில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய எளிய வழக்குகள் கூட ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. கிராம நீதிமன்றங்கள் அவை எல்லாவற்றையும் சரி செய்யும். 

இதில் என்ன பிரச்சினை என்றால் இதர நீதிமன்ற வக்கீல்களுக்கு வருமானம் குறைந்து போகும். கிராம அளவில் வழக்குகள் தீர்க்கப்பட்டு விட்டால் இதர நீதிமன்ற வக்கீல்களுக்கு வழக்கு வராது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மிகச் சொற்ப அளவில் உள்ள வக்கீல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதால் இந்த நீதிமன்றம் உருவாக்க அவர்கள் தடை ஏற்படுத்துகிறார்களோ என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது.

ஒரு வக்கீல் தான் இந்தியாவின் மகாத்மா என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் இந்த கிராம நியாயாலயா ஏன் நடைமுறைப் படுத்தவில்லை? சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கிராம நியாயாலயாவை உருவாக்க மாநில அரசுகளுக்கு விபரம் கேட்டு உத்தரவிட்டது. அதை அடுத்து ஒன்றும் நடக்கவில்லை. தினத்தந்தியில் ஒரு செய்தி வெளியானது. அவ்வளவுதான்.

இந்தச் சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வினை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ள ஊடகங்கள் மவுனமாக இருக்கின்றன.

கிராம நீதிமன்றங்களை ஒவ்வொரு கிராமம் தோறும் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மக்கள் அதற்கான முன்னெடுப்புகளை செய்தல் வேண்டும்.

கிராமம் என்பது இந்தியாவின் ஆன்மா. மகாத்மா காந்தியின் கிராமக் குடியரசு கனவு நிறைவேற்றப்பட்டால், இந்தியா ஊழல் அற்ற நியாய தேசமாக உருவாகும்.

மாண்புமிகு நம் பாரதப் பிரதமரும், என் ஆதர்ச ஹீரோவும் ஆன திரு மோடி அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். இச்சட்டத்தினை அவர் ஒவ்வொரு கிராமம் தோறும் நடைமுறைப்படுத்தினால் அவர் இந்தியாவின் நவீன மகாத்மா என்று அழைக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜூலை 17, 2020ம் தேதி சர்வதேச நீதி தினத்தில் இக்கட்டுரையை எழுதி உங்களுக்கு சமர்ப்பித்து, அடியேன் சர்வதேச நீதி தினத்தை கொண்டாடி மகிழ்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது சர்வதேச நீதி தின வாழ்த்துக்கள். மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமையுடன் அவர்கள் வாழ இந்த நாளில் நாமெல்லாம் உறுதி எடுப்போம்.

* * *