குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label sufiyum sujathayum. Show all posts
Showing posts with label sufiyum sujathayum. Show all posts

Saturday, July 4, 2020

காதலெனும் அபத்த நாடகம்


காதலை தெய்வீக உணர்வு என்பார்கள். காதலுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் அனேகம். இன்றைக்கும் காதலுக்காக கொலைகள் நடக்கின்றன. காதலர்களும் செத்துப் போகின்றார்கள். காதலர்களின் பெற்றோர்களும் செத்துப் போகின்றார்கள். காதல்,காதல், காதல், இல்லையெனில் சாதல் சாதல் சாதல் என்று கவிதை எழுதிச் சென்றார் பாரதி. உடுமலை நாராயண கவியின் காதல் பாடல்களும், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சினிமா காதல் பாடல்களும் என்றைக்கும் சிலாகிக்க வேண்டிய பொக்கிஷங்கள் என காதலில் வீழ்ந்து உருண்டு புரண்டவர்கள் கண்களில் மின்னலடிக்க பேசுவார்கள்.

காதல் சினிமாவில் இருக்கிறது. அதுவும் தமிழ் சினிமாவில் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. உலகெங்கும் காதலர்கள் காதலிக்கின்றார்கள். காதலித்துக் கொண்டே இருக்கின்றார்கள். கடைசி மனிதன் இவ்வுலகில் இருக்கும் வரை காதலும் இருந்து கொண்டே இருக்கும்.

காதலின் பெரும் நெருடல் என்னவென்றால் காதல் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பதில்லை. காதல் தோல்வியைத்தான் கொண்டாடுகிறது. சலீமின் காதலி அக்பரால் கொல்லப்பட்டார். காதலில் வெற்றி அடைந்தோர் பெரும்பாலும் இருப்பதில்லை. காதல் என்பது சாத்தானின் வடிவம் என்போர் பலர். அது மனத்தை மட்டும் அல்ல உறவினையும் சிதைத்து விடுகிறது. சமூகத்திற்கு கேடுகளை விளைவித்து விடுகிறது என்பார்கள்.

பெரியோர்கள் காதலை மனிதனின் அபத்த நாடகம் என்று வர்ணிப்பர். ஆரம்பம் மட்டுமே இருக்கும், முடிவென்பது இருக்காது. காதலின் வடிவம் இன்னதென்று சொல்ல முடியாது என்பார்கள்.

உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகின்றேன். அற்புதமான காதல் கதை. ஊமைப் பெண்ணின் காதல் இது. மொழியற்ற, ஓசைகளற்ற அழகான யுவதியின் அற்புதமான காதல் இது. ஒளிகளின் வழியே காதலைச் சொன்ன அற்புதமான பெண் அவள். பூமியில் சுழன்றடிக்கும் காற்றின் நெளிவு சுழிவுகளில் தன் உடலை லயத்துடன் இணைத்து நடனமாடிய இயற்கையின் அற்புதப் பேரழகியின் காதல் இது.

அவளின் காதல், அவள் கண்களில் பொங்கும் காதலெனும் உணர்வுகளால் ஒளிப்படமாக்கி காதலனின் மீது தவழ விட்ட அந்த பேசாமொழிப் பெண்ணின் காதல் இது.

கேட்கத் தயார் ஆகி விட்டீர்களா?

ஞானிகளும், சித்தர்களும், மகா யோகிகளும், சூஃபிக்களும், ஜென் குருக்களும், இறைத்தூதரைப் பற்றியே சிந்தித்துப் போற்றும் ஃபாஸ்டர்களும் தேடி அலைவது ஓசைகளற்ற அந்த இறைவனின் உலகில் ஓர் இடம். அவனின் அன்புக்கு அடிமையாகி விட வேண்டுமென்ற தாகத்தால் அவர்கள் தங்களைப் பெரும் துன்பங்களுக்குள்ளும் துயரத்துக்குள்ளும் ஆட்படுத்திக் கொள்கிறார்கள்.

ஓசை – இசை. மனிதனின் அற்புதமான கண்டுபிடிப்பு. இதிலும் மேன்மையான ஒன்று ஓசைகளற்ற உலகம். காற்றுடன் இசைவது, ஓசையில் மூழ்குவது முடிவில் ஓசையில்லா, ஒலியில்லா உலகில் அவனின் அற்புத தரிசனத்தை தரிசிப்பது என்பது பேரின்பமோ பேரின்பம் அல்லவா?

அந்தப் பேரின்பத்தை, இவர்களுக்கு எளிதில் கிடைத்து விடாத அந்த இறையின் கொடையை, ஒரு பேசாமொழிப் பெண்ணுக்கு இறைவன் கொடுத்திருந்தான். கடவுள் மயங்கிக் கிடந்த போது, நான் உங்களுக்குச் சொல்லப் போகும் கதைநாயகிக்கு கொடுத்து விட்டான் போல.

இனி கதைக்குப் போகலாமா?

மலைகளில் இருந்து வழிந்தோடும் நீர் தழுவிச் செல்லும் ஆற்றங்கரையோரமாக கவனிப்பாரற்று கிடக்கும் ஒரு அழகான மசூதி. விடிகாலைப் பொழுதில் பாங்கு சொல்வதற்காக கதவைத் திறந்த பெரியவர், அவனைக் காண்கிறார்.

அவன் பெயர் சூஃபி. பெரியவரிடம் தானே பாங்கு சொல்கிறேன் என்று கேட்கிறான். அன்றைக்கு பாங்கு ஒலிக்கிறது. ஓசை மசூதியிலிருந்து எழுந்து இயற்கையைச் சூழ்கிறது. அழகான கோர்வையான இசையுடன் ஒலிக்கும், இறைவனை துதிக்க வாருங்கள், இது அதற்கான நேரம் என்று அழைக்கும் குரலுக்குக் கட்டுப்பட்டு பெரும்பாலானோர் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். தொழுகையின் போது, சூஃபி தன் உயிரை விடுகிறான்.

அன்பு நண்பர்களே…!

ஆறடி நீளத்தில், ஆழத்தில் மண்ணுக்குள் ஒரு குழி வெட்டப்படுகிறது. இக்குழி அவனுக்கானது அல்ல, காதலின் அபத்த நாடகத்தின் முடிவினை அக்குழி தனக்குள் புதைத்துக் கொள்ளப்போகிறது. அந்தக் குழியில் புதையுண்ட காதல், உங்களின் நண்பனான கோவை தங்கவேலின் வார்த்தைகளில் உங்களிடம் வந்து சேர, அக்குழி வெட்டப்படுகிறது நண்பர்களே.

அந்தக் காதலின் அபத்தத்தை இனிச் சொல்லப் போகிறேன் உங்களுக்கு. கேளுங்கள்.

அந்த ஊமைப் பெண் ஒரு நாள் பஸ்ஸில் அழகிய யுவனான சூஃபியைப் பார்க்கிறாள். பார்த்த நொடியில் கண் வழியே சென்று மனதின் புதைந்து போனான் சூஃபி. சூஃபியின் பிரார்த்தனை மாலை அவளிடத்தில் கிடைக்கிறது. அதை மறந்து விட்டுச் சென்று விடுகிறான் சூஃபி.

மசூதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரியவர் அபூப்பின் கிளாரினெட் இசைக்கு கதகளி நடனமாடுவாள் அந்த ஊமைப் பெண்.

கிளாரினெட்டில் இருந்து தவழும் இசையின் மகத்துவத்தை நீங்கள் யூடியூப்பில் கேளுங்கள். மனதை உருக்கும் ஓசை வெளிவரும். அந்த ஓசை தன்னை அழித்துக் கொண்டு காற்றோடு கலந்து போகும். கேட்போரின் மனதை ஆக்கிரமத்து தனக்குள் இழுத்து, மனதை இல்லாமல் அழிந்து போகவிடும். அப்பெரியவரின் கிளாரினெட் இசைக்கு அழகாய், காற்றாய் நடனமாடுவாள் அப்பெண். அது ஒரு கவிதையாக மலரும் அற்புதமான நேரம்.

அந்தப் பெரியவரின் சீடன் தான் இந்த சூஃபி. அங்கு அவனைப் பார்க்கிறாள் அவள். காதல் படறுகிறது குளத்திற்குள் படறும் பாசி போல.


ஒரு மாலையின் அற்புதமான நேரத்தில், சூஃபியைச் சந்திக்கச் செல்வாள் அவள். சூஃபி இறைவனை நோக்கிப் முழங்காலிட்டு பிரார்த்திப்பான். அவனருகில் சென்று அமர்ந்து அவன் இறைவனை பிரார்த்திப்பது போல அவளும் முயல்வாள். பிரார்த்தனை முடித்து கண் விழிக்கும் சூஃபி அவளை அங்கிருந்து செல்லாதே என்று கேட்பான்.

காதல், காதல், காதல். பொங்கி வழியும் அந்த தருணத்தில் இருவருக்குள்ளும் நிகழும் அந்த உணர்வின் வீச்சினை என்னவென்று சொல்வது நண்பர்களே? எழுத்துக்கள் உணர்வின் முன்னே தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டன. எழுத முடியாது வார்த்தைகள் அவர்களின் காதலின் முன்னே மகிழ்வுடன் தோல்வியுற்று போயிற்று.

இக்காதல் பெரியவருக்குத் தெரிய வருகிறது. அவர் அவளிடம் ”நிம்மதியாக உறக்கம் கொள் மகளே!” என்றுச் சொல்கிறார்.

இந்த வார்த்தைகளுக்கு இன்னொரு நீண்ட பதிவு எழுதுகிறேன்.

”நிம்மதியாக உறக்கம் கொள் மகளே….!” சாதாரண வார்த்தைகள் அல்ல.

அவளின் தகப்பனுக்கும் தெரிய வருகிறது. உடனடியாக திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. சூஃபியைக் கடிந்து கொள்கிறார் அபூப். அந்த அழகான இறைவன் நிறைந்திருக்கும் மசூதியிலிருந்து வெளியேறுகிறான் சூஃபி.

அவனைச் சந்திக்கச் செல்லும் அவள், அவனை கட்டித்தழுவுகிறாள். காதல் அங்கு சங்கமித்து இயற்கையோடு உணர்வுகள் ஒன்றாகின்றன. கட்டித்தழுவலில் காதலில் முகிழ்ந்து விடலாம் நண்பர்களே. உணர்வுகளின் சங்கமம் மட்டுமே உண்மையான காதலாக இருக்க முடியும். உடல்களின் சங்கமம் காதலுக்குத் தேவையே இல்லை.

மறுநாள், சூஃபி அவளின் வீட்டு வாசலில் அவளுக்காக காத்து நிற்கிறான். அவளும் வருகிறாள் அவளைப் பெற்ற தகப்பன் தன் நெஞ்சில் குத்திக் கொள்கிறான். தகப்பனுக்காக அவளாய் மாறி நிற்கும் காதலன் சூஃபியை, தன் உயிரை, தன் காதலை, தன் வாழ்க்கையை விட்டு, மீண்டும் வீட்டுக்குள் திரும்புகிறாள் அவள். சூஃபி தன் உயிரை அங்கேயே விட்டு விட்டு, வெறும் உடலோடு எங்கோ சென்று விடுகிறான்.

இனியும் என்னால் எழுத முடியாது நண்பர்களே.

காதல் எப்போதும் அபத்தமானது. அந்த ஊமைப் பெண்ணின் காதலும் அபத்த நாடகமாகி, பைத்தியக்கார உலக வாழ்க்கைக்குள் மூழ்கிப் போய் விடுகிறது.

இதைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டுமா?

பிரைம் வீடியோவில் சூஃபியும் சுஜாதாயும் எனும் மலையாள திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் கதையைத்தான் மேலே சொல்லி இருக்கிறேன்.

அவசியம் அனைவரும் இப்படத்தை தனியாக அமர்ந்து பாருங்கள். இசைக் கோர்வையும் படமும் உங்களுக்கு கோடானு கோடி வர்ண ஜாலங்களை நிகழ்த்தும்.

அந்த இயக்குனருக்கு எனது வாழ்த்துகள். இசையமைத்தவருக்கும் அன்புகள்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த சூஃபியும், நடிகை அதிதி ராவும் பாராட்டத்தக்கவர்கள்.

வாழ்க மலையாள சினிமா உலகம்.

வாழ்க காதல்…!

இன்னொரு பதிவில் உங்களுடன் பேசுகிறேன்.

வாழ்க நலமுடன்…!