குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, August 14, 2018

இரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்

ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் இன்றும் என்னை விட்டு அகலாது அவ்வப்போது காலை நனைக்கும் கடலலைகள் போல நினைவுகளைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி என்றொரு ஓவிய ஆசிரியர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். ஆறாம் வகுப்பிற்கு அவர் ஓவியப்பயிற்சியுடன், ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார். கதைகள் சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு ஒரு உள் பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது. ஆங்கிலம் அவருக்குச் சரியாக வராது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். ஏனென்றால் அடியேன் தான் வகுப்பின் லீடர். பேப்பர் திருத்துவதிலிருந்து மக்கு பசங்களுக்கு மாலையில் டியூசன் சொல்லிக் கொடுப்பதிலிருந்து அவருக்கு நிரம்பவும் பிடித்த மாணவன் நான். வாரம் தோறும் அவரின் வீட்டுக்கு நானும் தங்கையும் சென்று விடுவோம். தனியாகத்தான் இருந்தார். எனக்கு ஆங்கில இலக்கணமும் படிக்கவும் சொல்லித்தருவார்.

என்னென்னவோ செய்து பார்ப்பேன். ஓவியம் மட்டும் எனக்கு வரவே வராது. முடிந்த அளவு முயற்சிப்பேன். ஓவியத்தில் இருக்கும் நாசூக்கு எனக்கு வரவில்லை. அவரும் பல தடவை சொல்லிக் கொடுத்தார். இருந்தால் தானே வருவதற்கு? ஒரு தடவை கூட முகம் சுளித்ததே இல்லை.


என்னைப் படைத்த இறைவனுக்கு எப்போதுமே என் மீது அதிக கரிசனம் உண்டு. என்னிடம் இருக்கும் ஒவ்வொன்றாய் பிடுங்கிக் கொண்டு ”இவன் என்ன செய்வான்னு பார்ப்போம்” என விளையாடிக் கொண்டே இருக்கிறான். பால் குடி மறக்கா குழந்தையாக இருக்கும் போது நடக்கமுடியாமல் கால்களை பறித்துக் கொண்டான். அசரவில்லையே நான். அது அவனுக்கும் எனக்குமான கணக்கு. அதை நான் அவனுடன் தீர்த்துக்கொள்கிறேன். இப்படித்தான் எனக்கு மிகவும் பிடித்த என் ப்ரிய ஆசிரியரை அவன் வேறு பள்ளிக்கு மாற்றினான். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னை விட்டு வேறோரு ஊருக்குச் சென்றார். இப்போது அவர் எங்கிருக்கின்றாரோ? இல்லையோ? தெரியவில்லை.

அதன் பிறகு ஜோசப் அமல்தாஸ் என்றொரு வாத்தியார் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை டியூசன் சொல்லிக் கொடுத்தார். அவரின் பெல்பாட்டம் பேண்ட் ரொம்ப பேமஸ். சைக்கிளில் வருவார். சட்டைக்காலர் கூட ஆட்டுக்காது போல கிடந்து அல்லாடும். ஒரு பைசா என்னிடம் வாங்கியதில்லை. நானும் அவர் எனக்குச் சொல்லித்தரும்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் அவரிடம் படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். ரொம்பவும் கண்டிப்பான ஆசிரியர். அவரைப் நெஞ்சுக்குள் திடுக்கென்று இருக்கும். ஆங்கிலத்தில் டென்ஸ் (TENSE) வைத்து வாக்கியங்கள் எழுதக் கற்றுக் கொடுத்தவர் அவர். அதை வைத்துதான் கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில புயலைச் சமாளித்தேன். இன்றைக்கும் எனது ஆங்கிலப் புலமையில் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவரே !

டியூசனுக்குச் செல்லும் போது அவர் அறையின் அருகில் இருந்த மற்றொரு அறையில் வேறொரு பள்ளியில் வேலை செய்து வரும் ஆசிரியர் தங்கி இருந்தார். பார்க்கும் எவரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் பழக்கம் எனக்கு. அந்த ஆசிரியருடன் பழகிக் கொண்டேன். ஒரு மண்ணெண்ணய் ஸ்டவ். இரண்டு மூன்று பாத்திரங்கள். ஒரு சில கரண்டிகள். நான்கைந்து உடைகள். கைலிகள் இரண்டு. ஏதோ ஒரு ஊர்ப் பெயர் சொன்னார். நினைவில் இல்லை. கல்யாணம் ஆகி விட்டது என்றார். அவர் சமைக்கும் போது அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். நாசூக்கு என்றால் அப்படி ஒரு நாசூக்கு. சுத்தமென்றால் அப்படி ஒரு சுத்தம். ஆனால் சமையலில் மண்ணெண்ணெய் வாடை அடிக்கும். ஏதேதோ பேசிக்கொண்டிருப்பார். கேட்டுக் கொண்டிருப்பேன். சிறிது நேரம் அமைதியாக இருப்பார்.

புல்புல்தாராவை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அவர் வைத்திருந்த புல்புல்தாராவை எடுத்து வாசிப்பார். அது அழுது கொண்டே இருக்கும். அவரின் நெஞ்சுக்குள் எந்தக் காதலி அமர்ந்து கொண்டு சோக கீதத்தை வாசித்துக் கொண்டிருந்தாரோ? தெரியவில்லை. அதைப் பற்றி என்னிடம் அவர் ஏதும் சொன்னதும் இல்லை. அவர் புல்புல்தாராவை வாசிக்கும் போதெல்லாம் சோகமாகவே இருக்கும். ஞாயிறுகளில் அவரைச் சந்திக்கச் சென்று வருவேன். அவரின் அந்த வாசிப்பு எனது அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அவர் அறையின் நேர் கீழே இருந்த வீட்டில் ஒரு குடும்பம் தங்கி இருந்தது. அந்தக் குடும்பத்தின் தொழில் ஐஸ் விற்பது. மலர்ந்த மல்லிகை போன்ற ஒரு முகம் எனக்கு மாலையில், விற்காமல் மீதமிருக்கும் ஐஸைக் கொண்டு வந்து நீட்டும். எனக்கு மட்டுமே நீட்டும். முக்காடிட்டு ஒற்றைக் கண்ணில் வழிந்தோடும் பாசத்தைக் காட்டும் அந்தக் கண்கள் இப்போதும் என் கனவுகளில் வந்து என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொள்வேன். பின்னர் தூக்கம் வராது. மனது தவியாய் தவிக்கும். அந்தக் கண்கள் இப்போது என்னவாக இருக்குமோ தெரியவில்லை.


கண்கள் என்றைக்கும் அழிவதில்லை. அதன் அழகும் குறைவதில்லை. கண்கள் சொல்லும் கவிதைகளும், அதன் பேச்சுகளையும் இதுவரை எழுதி எழுதியே களைத்துப் போன கவிதையாளர்களால் கூட கண்களின் பேச்சை எழுத முடியவில்லை. கண்களுக்கு மொழியே தேவையே இல்லை அல்லவா?

கருணை பொங்கி, ப்ரியமாய் வழிந்தோடிய அந்தக் கண்களின் அன்பில் நனைந்து, நனைந்து மூழ்கி அதிலேயே கரைந்து போக மனது தவிக்கிறது. 

Monday, August 13, 2018

தமிழகம் ஒரு தர்மபூமி

திருவள்ளுவர் !  இதைத்தவிர வேறொன்றினையும் தமிழகம் ஒரு தர்ம பூமி என்பதற்கு உதாரணமாகச் சொல்ல வேண்டியதில்லை. தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அதை எவரும் நம்புவதும் இல்லை. ஆனால் இப்போது நம்பித்தான் ஆக வேண்டும். இந்தக் காலத்தில் தர்மமாம், அதர்மமாம் என்று கேலி பேசுபவர்கள் அதிகமிருக்கின்றார்கள். புத்தகங்களில் இருப்பவை எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்றெல்லாம் அடுக்கடுக்காக காரணங்களை அடுக்குவார்கள். 

இப்படித்தான் கண்ணதாசன் ஆரம்பத்தில் கடவுளே இல்லை என்று கடுமையான நாஸ்திக உணர்வில் கடவுள் மறுப்பு கட்டுரைகளைத் தீட்டி வந்தார். பேசியும் வந்தார். அவரின் கடைசிக் காலத்தில் கண்ணனின் கீதைக்கு உரை எழுதினார். ”கண்ணா ! கண்ணா !!” என்று உருகினார். 

இதை இப்போது எழுதக்காரணம் இருக்கிறது. எழுதத்தான் வேண்டுமா? என்று கூட யோசித்தேன். 

பதினோறு வயசுக் குழந்தையைக் கூட கற்பழிக்கும் காமாந்தகர்கள் இங்கு இருக்கின்றார்கள். இன்றைக்கு என்ன? என்பது பற்றிச் சிந்திக்கும் சிந்தனாவாதிகளுக்கு, நின்று கொல்லும் தர்மம் பற்றிய ஒரு சில விஷயங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். 

குறுக்கே நூல் போட்டவெனெல்லாம் கடவுள்கள் என்று பேசும் அறிவிலிகள் இங்கு அதிகமிருக்கின்றார்கள். கடவுளையும் காசு பண்ணும் அதிபுத்திசாலி மடையர்களும் இருக்கின்றார்கள். ஆன்மீகத்தின் பெயரால் ஒன்றுமறியா எதார்த்த மனிதர்களின் சொத்துக்களை உறிஞ்சிக் கொழுத்து காமத்தில் திளைத்து, உலகியல் இன்பங்களை நுகர்ந்து தெரியும் சாமியார்ப்பயல்களும் இங்கு இருக்கின்றார்கள். மதத்தின் பெயரால், வேதப் புத்தகங்களின் பெயரால் கொலை செய்யும் கொடூர மதிபடைந்த மாந்தர்களும் இங்கு இருக்கின்றார்கள். அரசியலின் பெயரால், அதிகாரத்துக்கு வந்து அடாத கொலைகளையும், துடிக்கதுடிக்க பறித்துத் தின்னும் கொள்ளையர்களும் இங்கு இருக்கின்றார்கள். நீதியின் பெயரால் அதிகாரத்திற்கு வரும் நீதிமான்களும் பதவிக்காக தர்மத்தை விற்றுக் காசாக்கும் அற்ப மனம் படைத்த அயோக்கியர்களும் இங்கு இருக்கின்றார்கள். தானொன்றே நிதர்சனம் என்று பேசித் திரிபவர்களும் இங்கு இருக்கின்றார்கள். பேனாவிற்குள் ரத்தத்தையும், நீதியைக்கொன்ற பாதகத்தையும், அரசியல்வாதிக்கும் அடிபணிந்து நக்கி விடும் எச்சிலையும் போட்டு எழுதும் பத்திரிக்காவாதிகளும் இங்கு இருக்கின்றார்கள். எது உண்மை? எது பொய்? என்று உணரா வண்ணம் தீது பேசி, புறம் கூறி வாழ்க்கை நடத்தும் இழிபிறந்தார்களும் இங்கு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் தர்மம் என்ற ஒன்று இருக்கிறது என்பது பற்றிய சிந்தனை இருப்பதில்லை. அதிகாரமும், அகங்காரமும் அனைத்தையும் மறைத்து விடுவதால் அடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அப்படியானவர்களின் கடைசி என்ன என்று எவருக்கும் தெரிந்திருக்கப்போவதில்லை. அதைப் பற்றித்தான் இப்போது படிக்கப்போகின்றோம். 

ஆட்டோ ஷங்கர் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது நமக்கு இப்படி ஒரு முடிவு இருக்குமா? என்று நினைத்துப் பார்த்திருப்பாரா? ஹிட்லர் தன் முடிவு இப்படித்தான் இருக்கும்? என நினைத்தாவது பார்த்திருப்பாரா? உலகையே ஆள நினைத்த நெப்போலியனுக்கும், அலெக்‌ஷாண்டருக்கும் அவர்களின் இறுதிக்காலம் இப்படி ஆகி விடும் என்று தெரிந்திருக்குமா? நிச்சயம் தெரிந்திருக்காது. அவ்வாறு தெரிந்து இருந்தால் எவரும் ஒருவரையாவது நாட்டினைப் பிடிக்கும் ஆசையில் கொலை செய்திருப்பார்களா? 

ஒரு காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் நான்கு கைகளாலும் லஞ்சம் வாங்கி சொத்துக்களைக் குவித்தார். தனது இரண்டு மகன்களும் அவரின் கண் முன்னே காரில் நசுங்கிச் செத்ததைப் பார்த்து பைத்தியமாகிப் போனார். கல்விக்கு காசு வாங்குவது தலைமுறைக்குற்றம். கல்வி அறிவித்தவன் கடவுள் ஆவான் என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் அதற்காக காசு வாங்கிக் குவித்த ஒருவர் தன் ஒரே மகனைப் பரிகொடுத்து இன்றைக்குப் படுக்கையில் இருக்கிறார். ஓடி ஓடி, அடித்துப் பிடித்து, அடுத்தவனைக் கெடுத்துப் பிடுங்கிச் சம்பாதிக்கின்றவர்களின் இறுதிகாலம் கொடுமையானதாக இருக்கிறது. வயதானவர்களிடம் பேசிப்பாருங்கள். பெற்ற பிள்ளைகள் பெற்றோர்களை காப்பகத்தில் கொண்டு போய் தள்ளி விட்டு விடுகின்றார்கள். பின்னே எதற்கு ஓடி ஓடி சம்பாதித்தார்கள் என்றால் அப்போது தெரியவில்லை, இப்போதல்லவா தெரிகிறது என்று தத்துவம் பேசுவார்கள். நோயில் வீழ்ந்து நொடிக்கு நொடி அவஸ்தைப் பட்டு அனாதையாகச் செத்துப் போவார்கள்.

பூமி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எல்லாமும் இருக்கிறது. ஆனால் அதை ஆளும் ஆட்கள் எங்கே போனார்கள்? தமிழகத்தை ஆண்ட அரசியல்வாதிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தால் அவர்கள் ஆடிய ஆட்டங்களும், அவர்களின் கடைசிக்கட்ட வாழ்க்கை முடிவுகளும் கண் முன்னே சாட்சியாக வந்து நின்று கொண்டிருக்கின்றன. இத்தனையும் தெரிந்தும் மனிதர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அது அவர்களின் அறிவிலித்தனமாகத்தானே இருக்க முடியும்?

அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டுக்குள் காவிரியில் பொங்கி வரும் தண்ணீரை திருப்பி விட முடியுமா? அவர் காவிரியில் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடக்கூடாது என்று பேசினாரே இப்போது பேசச் சொல்லிப் பாருங்களேன்.

அணையில் இத்தனை அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கக்கூடாது என்று கோர்ட்டில் அடாது செய்தார்களே இப்போது தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறார்களே, அந்த மழையிடம் சென்று அதிகாரத்தைக் காட்ட முடியுமா? கோர்ட்டில் வழக்குப் போட்டு, சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி மழையைத் தடுக்க முடியுமா? குறைந்த பட்ச மனிதாபிமானமும் இன்றி பேசியவர்களுக்கு இப்போது பிறரின் மனிதாபிமானம் தேவைப்படுகிறது அல்லவா? இதுதான் தர்மத்தின் கணக்குத் தீர்க்கும் வழி!

தண்ணீர் - உயிர் நீர். இயற்கையின் அற்புதப் படைப்பு. இயற்கையின் முன்னே மனிதர்கள் எல்லாம் அற்பத்திலும் அற்பமானவர்கள். எந்தத் தண்ணீரால் பாதிப்பு என்று பொய் பேசினார்களோ அது உண்மையாக நின்று அவர்களின் முன்னே “நாட்டியம் ஆடுகிறது”

அதைத் தரமாட்டோம் என்று பேசியவர்கள் எல்லோரும் இப்போது என்ன பேசுவார்கள்? இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து மழை பெய்தால் ஒரு மாநிலமே கடலுக்குள் சென்று விடும். இன்னொரு மாநிலமோ கதிகலங்கிப் போகும். அண்டை மாநிலங்களை நோக்கி நீளும் அவலக்குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அன்றைக்கு ஆணவக்குரல்கள் ஒலித்தன. இன்றைக்கு அவலக்குரல்கள் எழும்புகின்றன. ஒவ்வொரு  மாநில மக்கள்களையும் தன் சுய நலத்துக்காக பிரித்தாண்ட அரசியல்வாதிகள் இப்போது தங்கள் கட்சியினரை வைத்து எல்லாம் செய்ய வேண்டியதுதானே? ஏன் செய்ய முடியவில்லை? உதவுங்கள் என்று அலறுகின்றார்களே ஏன்?

தர்மம் நின்று கொல்லாது. சுத்தமாகத் துடைத்துப் போட்டு விடும். சென்னையில் அட்டூழியங்கள் அதிகரிக்கையில் சுனாமியும் வந்தது. மழையும் வந்தது. சுத்தமாகத் துடைத்து போட்டு விட்டுப் போனது.

இந்தியா தர்ம பூமி. அதில் தமிழகமோ ஆன்மீக பூமி. ஆடும் வரை ஆட விட்டு, பின் மொத்தமாகப் பிடுங்கிக் கொண்டு விடும் தர்மத்தின் கடவுள்கள் உறையும் அற்புதமான பூமி. தமிழகம் மட்டுமே மனிதர்கள் வாழ மிகத் தகுதி வாய்ந்த அற்புதமான பூமி. வேறு எங்கிலும் தமிழகத்தைப் போன்ற வாழ்விடம் இல்லை.  தமிழகத்துக்கு அடாது செய்தால் படாதபாடுபடுவார்கள் என்பது உண்மை.

தமிழகத்தில் தமிழராய் வாழ நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

இந்தப் பூமிப் பந்தில் மனிதர்கள் வாழும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு தமிழனும் வாழ்வான். வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான். ஏனென்றால் அவன் தர்ம பூமியில் பிறந்தவன். அவனின் பாதை தர்மத்தின் பாதை. 

(இக்கட்டுரை யாரையும் எவரையும் புண்படுத்த வேண்டுமென்று எழுதவில்லை. உண்மையை எடுத்துச் சொல்லி இருக்கிறேன். தர்மத்தின் பாதையைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழும் வரை பிறரை நிந்திக்கா வண்ணமாவது வாழலாம். நிந்தனை செய்து வாழ்பவர்கள் நித்தமும் சித்ரவதைப்பட்டு சீரழிந்து போவார்கள் என்கிறது தர்மம்)

Friday, August 10, 2018

கண்ணீர்

ஒரு கதை உங்களுக்காக !

சாத்தானை நோக்கி ஒருவன் மூச்சிரைக்க ஓடி வந்தான். சாத்தான் அவரை ஏறிட்டு என்னவென்பது போலப் பார்த்தான்.

“சாத்தானே! போச்சு! போச்சு!! எல்லாம் போச்சு. யாரோ ஒருவன் உண்மையைக் கண்டுபிடித்து விட்டானாம். அவன் அதை பிறருக்குச் சொல்லி விட்டால் நம் கதி அதோ கதிதான்” என்று கதறினான்.

சாத்தான் அவனைப் பார்த்துச் சிரித்தான்.

”அவ்வாறு கவலைப்பட ஏதும் இல்லை. அந்த உண்மையைக் கண்டுபிடித்தவன் கூட நம் ஆட்கள் இருக்கின்றார்கள், அவர்கள் அந்த உண்மையை வெளியிட விடாமல் பாதுகாப்பார்கள்” என்றான் சாத்தான்.

“அவ்வாறு நம் ஆட்கள் ஒருவரையும் அங்கு பார்க்கவில்லையே?” என்றான் ஓடி வந்தவன்.

“அவர்களை உனக்குத் தெரியாது. அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் அருகில் அறியவியலாளர்கள். தர்க்கவாதிகள், ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், மதவாதிகள், பூசாரிகள் போர்வையில் நம் ஆட்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவன் உண்மையை உலகுக்குச் சொல்லும் முன்பு, அதைப் பற்றி விவாதிப்பார்கள், ஆராய்ச்சி செய்வார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களைத் திணிப்பார்கள். ஆக அங்கே உண்மை காணாமல் போய் இவர்களின் பேச்சுக்களும், ஆராய்ச்சிகளும் தான் வெளியில் வரும். இவர்களைச் சமாளித்து அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் எங்கே வெளியில் சொல்லப்போகின்றான்? இவர்களைச் சமாளிக்கவே அவனுக்கு நேரம் போதாது. ஆகவே உண்மை வெளியில் போகாது. கவலைப்படாதே. என்றும் நம் ஆட்சி தான் இங்கே” என்றான் சாத்தான்.

ஓஷோ தனது “தாவோ - ஒரு தங்கக்கதவு” நூலில் சொன்ன கதைதான் இது.

அது என்ன தாவோ என்று கேட்கத்தோன்றும்.

எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ”அது ஏற்கனவே உள்ளது”. இதைப் பற்றி சீன தேசத்தைச் சேர்ந்த லாஓ-ட்ஸே என்பத்தோரு குறிப்புகளை எழுதி இருக்கிறார். இருப்பினும் தாவோ பற்றிய வார்த்தைகள் அதில் முழுமையற்றவையாக இருக்கின்றன.

Tao - Te Ching - நூலில் இருந்து ஒரு பகுதி
=====================================

Chapter Eighty-one
====================
Words of truth are not pleasing.
Pleasing words are not truthful.
The wise one does not argue.
He who argues is not wise.
A wise man of Tao knows the subtle truth,
And may not be learned.
A learned person is knowledgeable but may not know the subtle truth of Tao.
A saint does not possess and accumulate surplus for personal desire.
The more he helps others, the richer his life becomes.
The more he gives to others, the more he gets in return.
The Tao of Nature benefits and does not harm.
The Way of a saint is to act naturally without contention.

(உங்களுக்கு என் நன்றி லாஓ-ட்சே)

இயற்கையோடு இயற்கையாக கரைந்து போக, வந்த சுவடு கூடத் தெரியாமல், இருந்த இடம் தெரியாமல், வந்தது எப்படியோ அப்படியே சென்று விட வேண்டுமென்று சீனத்திலிருந்து புறப்பட்டு இமயமலைக்கு வந்த லாஓ-ட்சேவை நாட்டின் எல்லைப்பகுதி வீரன் தடுத்தான். அவர் இமயமலைக்குச் செல்ல வேண்டுமாயின் அவரின் அனுபவங்களை எழுதிக் கொடுத்த பிறகு அனுமதிக்கும்படி சீன மன்னன் உத்தரவிட்டிருந்ததைச் சொன்னான். லாஓ-ட்சே என்னனென்னவோ சொல்லிப் பார்த்தார். அந்த வீரன் விடுவதாயில்லை. வேறு வழி இன்றி அவனின் கூடாரத்தில் தங்கி மேற்கண்ட புத்தகத்தை அல்ல அல்ல குறிப்புகளை எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார் என்று சொல்கின்றார்கள்.

இப்படித்தான் தாவோவுக்கு புத்தகம் எழுதப்பட்டதாம். தாவோ என்பது இயற்கை. என்றும் இருப்பது. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்கிறார் ஓஷோ.

இயற்கையின் நியதி பிறப்பு - இறப்பு.

கலைஞர் - ஒரு வரலாற்றுப் புதினம். அவரின் வாழ்க்கையே வரலாறு. இவ்வுலகம் சர்வாதிகாரிகளையும், ஜனநாயகவாதிகளையும், கொடுங்கோலர்களையும் வரலாற்றாகப் பதிய வைத்திருக்கிறது. மக்களின் மூளைக்குள்ளே சர்வாதிகாரம், ஜனநாயகம் இரண்டும் எதிர் எதிர் துருவங்களாகப் பதிக்கப்பட்டு வருவதற்கு வரலாறு தான் காரணம். இவற்றை முன்னெடுத்தவர்களுக்கு வரலாற்றின் ஏடுகள் காத்திருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்களுக்கு ஜனநாயகக் கடமையாற்றிய ஒரு தலைவர் மறைந்து போகிறார் என்றால் அது மனிதர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஒன்றுதான். இயல்புதான். ஆச்சரியமில்லை. ஆனால் வயதானவர் தன் கடைசி நாட்களை எளிமையாக, எளிதாக, இயல்பாக கடக்க முடியாமல் மருத்துவச் சாதனங்களால் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுதான் அறிவியலின் கோரத்தைக் காட்டியது.

அறிவியல் இயற்கைக்கு முரணானது. அறிவியல் மனிதகுலத்துக்கே விரோதமானது. (அறிவியல் இல்லையென்றால் தங்கம் பதிவெழுத முடியுமா? என்று ஆரம்பித்து விடாதீர்கள். இது வேறு, நான் சொல்லி இருப்பது வேறு)

எல்லோரும் கலைஞராக முடியாது. ஒவ்வொருவரும் தனியானவரே. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒரு சாதாரண கூலித்தொழிலாளிக்கு விதிக்கப்பட்டது என்னவோ அதைச் செய்து அவன் தன் காலத்தை கடப்பான். அதைப் போலவே ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டது எதுவோ அதைச் செய்து அவர்கள் காலத்தைக் கடப்பார்கள். மனிதன் காலத்தைக் கடந்து செல்வதுதான் முழு வாழ்க்கை. இடையில் இருப்பது அவனின் நாட்கள். அதை இன்பமாகவோ, துன்பமாகவோ அவனின் அறிவுகேற்ப மாற்றிக் கொள்கிறான். அறிவு என்று வந்து விட்டால் துன்பம் தானாக வந்து விடும் என்கிறார் ஓஷோ.

கலைஞர் மறைவைத் தொடர்ந்து காவேரியில் பொங்கிய தண்ணீரை விட அவரின் தொண்டர்களின் கண்ணீரே அதிகமானது. இப்படியும் பிறரின் மனத்துக்குள் ஊடுறுவ முடியுமா? என்று ஆச்சரியம்தான். கலைஞரின் தொண்டர்கள் சிந்திய கண்ணீர் கண்டு உள்ளம் கனத்தது. ஸ்டாலின் அழுதது அவரின் அப்பாவுக்காக. அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு தொண்டன் (காவேரி நியூஸ்) அடித்துக் கொண்டு அழுதானே அதைக் காண்கையில் நெஞ்சுக்குள் வலித்தது. அவன் தன் தலைவன் மீது கொண்ட பக்தியை, பாசத்தை நினைக்கையில் பாசம் என்பது எவ்வளவு பெரிய கொடுமையான மாயவலை என்று அறிய நேர்ந்தது. 

கதையும், அதைத் தொடர்ந்த தாவோவின் பதிவும் இப்போது உங்களுக்குள் ஏதோ குழப்பத்தைனை உருவாக்கி இருக்கும். கலைஞருக்கும், இந்தக் கதைக்கும், தாவோவிற்கும் உள்ள தொடர்புகளையும், கலைஞரின் மறைவைத் தொடர்ந்து தற்போது நடந்து வருபவைகளை ஒவ்வொன்றோடும் ஒப்பிட்டுப் பாருங்கள். நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தெரிய வரும்.

இன்னொரு கண்ணீர் கதையை தொடருங்கள்.

ஒரு முறை மேட்டுப்பாளையம் செல்ல வேண்டி இருந்தது. மதிய நேரமாகையால் ஒரு ஹோட்டலில் உணவு உண்பதற்காக காரை நிறுத்தினார் நண்பர். நான் காரில் வழக்கம் போல அமர்ந்து கொண்டேன். நண்பரிடம் ’நான்கு கவழம் சோறும், இரண்டு கப் காய்கறிகளும் போதும்’ எனச் சர்வரிடம் சொல்லுங்கள் என்றுச் சொல்லி இருந்தேன். சாப்பாடு கொண்டு வந்தது ஒரு பெண். நான் ஒரு வாரம் சாப்பிடும் சாப்பாட்டினைத் தட்டில் வைத்து குழம்பு, கூட்டு வகையறாக்களை இன்னொரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தார். மலைத்தே போனேன். கையில் கொடுத்து விட்டு விடு விடுவென்று சென்று விட்டார்.

தட்டினை எடுக்க வரும் போது மீதமிருந்த சோற்றினைப் பார்த்து விட்டு, ”இன்னும் சாப்பிடல்லயா?” என்றார். 

 “சாப்டேம்மா, நீதானம்மா உண்மையான அன்னபூரணி” என்றேன்.

“என்ன சொன்னீங்க?”

“அன்னபூரணி”

ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தது. அவரின் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

“என்னை யாரும் இப்படிச் சொன்னதேயில்லைங்க” என்றுச் சொல்லியபடி தட்டுக்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றது.

”நீங்க சுத்த மோசம் தங்கம், எதையாவது சொல்லி எல்லோரையும் அழ வைத்து விடுகின்றீர்கள்” என்று நண்பர் கோபித்துக் கொண்டார்.

கண்ணீர் மனதை லேசாக்கும் காற்றைப் போல. 

காய்த்துப் போன கைகள், கலைந்த கேசம், கருத்துப் போன முகம். ஆனால் அந்தப் பெண்ணின் கைகளோ கர்ணன். பசிக்குச் சோறிடுவது அன்னபூரணிதானே?

உண்மையைச் சொன்னால் உடனே தர்க்கவாதிகளும், வேதாந்த சித்தாந்தவாதிகளும் குறை சொல்ல வந்து விடுகின்றார்கள். நண்பரின் பேச்சை நிராகரித்தேன்.


Thursday, June 28, 2018

நான் தமிழ்ப்பெண்

எம் தமிழ்ப்பெண்கள் சிறு குழந்தையாக இருக்கும் போது, இடுப்பில் வெற்றிலை போன்று தங்கத்தில் செய்து அணிந்திருப்பார்கள். பருவ வயதுப் பெண்கள் தாவணி உடுத்தி மஞ்சள் பூசி இருப்பார்கள். வீட்டு வேலையின் போது கணுக்கால் தெரியும் படி பாவாடையை இடுப்பில் செருகி இருப்பார்கள். கெண்டைக்கால் கூடத் தெரியாது. புதிய ஆண்கள் வீட்டுக்கு வரும் போது கண்கள் மட்டுமே வெளியில் தெரியும்படி நின்று கொண்டு பேசுவார்கள். பெண்களின் முகங்கள் தேஜஸ்சில் ஜொலிக்கும். திருமணமான பெண்கள் மெட்டி ஒலிக்க உடம்பு அதிரா வண்ணம் காற்றில் மிதந்து வருவார்கள். இப்படித்தான் நான் என் சிறுவயதில் கண்டு, பழகிய பெண்களைப் பார்த்திருக்கிறேன். என் சகோதரிகளும், அம்மாவும், உறவுப் பெண்களும் இப்படித்தான் இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கின்றார்கள். 

உடல் அதிர ஓடியோ அல்லது நடந்தோ கூட நான் பார்த்தது இல்லை. இது தமிழ்ப் பெண்களின் அடையாளம் என நான் அறிந்திருந்தேன். எம் தமிழ்பெண்களை இளையராஜா என்கிற ஓவியக்கலைஞர் அழகாக பட்டை தீட்டி இருந்தார். அந்தப் புகைப்படங்கள் கீழே !


(ஓவியம் : இளையராஜா - நன்றி)

பத்து நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் லைவ் நாடகமான ”பிக் பாஸ்” நிகழ்ச்சியை வீட்டில் பார்க்கின்றார்கள். நேற்று தூக்கம் வரவில்லை என்பதற்காக நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். மும்தாஜை வைத்து டெம்ப்ட் ஏற்ற ஏற்பாடு செய்திருப்பதைக் கண்டு கொண்டேன். அவருடன் மமதிசாரி என்றொரு (இது யாரென்று தெரியவில்லை) பெண்ணைப் பார்த்தேன். 

பிக் பாஸ் பணிப்பெண்ணாக இருக்க வேண்டும் எனக் கொடுத்த டாஸ்க்கில் இவர் ”தான் தன் கணவனைத் தவிர வேறு எவரையும் தொட மாட்டேன் என்றும், நான் தமிழ்ப்பெண்” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அதாவது பணிப்பெண்ணாக ஆண்களுக்கு சேவை செய்ய மாட்டாராம். அவர் தமிழ்ப் பெண்ணாம். இத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. 

ஒரு சில பெண்கள் பெண் சுதந்திரப் பைத்தியம் பிடித்து நாறிப்போவார்கள். அதில் இவர் ஒருவர் என்று நினைத்துக் கொள்ளலாம். மும்தாஜ் மற்றும் மமதியினால் தான் ஷாப்பிங்க் செய்யும் டாஸ்க்கில் தோற்றுப் போய் பணிப்பெண் தண்டனையை,  பெண்கள் அனைவரும் டாஸ்காகச் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஸ்கிரிப்ட் படி நடிக்கிறார்கள். பிக் பாஸ் இந்த ஸ்கிரிப்டில் இருக்கும் பிழையினைக் கவனிக்காமல் விட்டு விட்டார்.

கடந்த பிக் பாஸ் சீசனில் நடித்த ஜூலியைக் கூட ஒரு வகையாக சகித்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த மமதிசாரியின் சேட்டைகள் பெண்கள் மீது வெறுப்பினை உண்டாக்கும் அளவுக்கு எரிச்சலின் உச்சத்தில் தள்ளுகிறது. மும்தாஜுடன் அவரின் கேணங்கிச் சேட்டைகளைச் சகித்துக் கொள்ளவே முடியாது. அவ்வளவு ஒரு கேவலமான நடிப்புச் சேட்டை. பேச்சு அதற்கும் மேல். நான் தமிழ்ப்பெண் என்பதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. மாலையில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியில் மமதி சாரி காலையில் சொன்ன நான் தமிழ்ப்பெண் என்ற வார்த்தை மாலையில் அவர் தன்னை எப்படி வெளிப்படுத்தினார் என்பதைக் கீழே இருக்கும் புகைப்படத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



(புகைப்பட உதவி : பிக்பாஸ் - விஜய் டிவி - ஹாட்ஸ்டார்)

இணையத்தில் இவரைப் பற்றித் தேடினேன் பிராமின் பொண்ணாம். டிவியில் எல்லாம் வந்திருக்கிறதாம் என்று எழுதி இருந்தார்கள். நான் கண்ட பிராமின் பெண்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கின்றார்கள்.

மமதிசாரி சொன்ன தமிழ்பெண் என்பவர் எம் தமிழ்ச்சமூகத்தைக் கேவலப்படுத்தும் சொல். தமிழ்பெண் என்பவள் இளையராஜா வரைந்த ஓவியம் போலத்தான் இருப்பார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால சமூகம் தமிழ்பெண் என்றால் இவரைப்போல இருப்பார்களோ என்று தவறுதலான முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதால் ஒரு ஒப்பீட்டுக்காக இப்பதிவினை எழுதுகிறேன்.

எனக்கு குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீது மிகுந்த மதிப்பு உண்டு. ஏனென்றால் இவைகள் தான் இதுகாறும் மனித சமூகத்தின் மேன்மைக்கு பாதுகாவலனாய் இருக்கின்றன. ஆங்காங்கே நடக்கும் ஒரு சில தவறுதலான விஷயங்களால் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் மீதான நம்பிக்கை குறைவான விமர்சனங்கள் வரலாம். அது பெரும்பான்மையாக இருக்க முடியாது என்பது எனது எண்ணம்.

மமதி சாரி நவீனக்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக இருக்கலாம். அதற்காக ஒட்டு மொத்தமாக தன்னை தமிழ்பெண் என்றுச் சொல்லிக் கொண்டு அதன் அடையாளங்களை அழிக்க முற்படுவது சரியல்ல. அவர் தான் பேசும் சொல்லுக்கு இருக்கும் அர்த்தத்தை உணர்ந்து பேச வேண்டும். 

Monday, June 25, 2018

தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர் யார்?

இன்றைய தமிழகத்தின் நிலைமை பற்றி ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் ஒரு விதமான பதற்றத்தினை உருவாக்குகிறது. அம்மா இறந்த பிறகு நடந்த களேபரங்களின் காரணமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் என்று இணையதளங்களும், யூடியூப் வீடியோக்களும், செய்திசானல்களும் நொடிக்கொருதரம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். 

எது உண்மை என்று அறிய முடியவில்லை. ஆனால் இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஒரு விதமான எரிச்சல் இருப்பதை பலரும் சொல்கின்றார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவு மற்றும் அதைத் தொடர்ந்து மத்திய அரசால் தமிழகத்தில் கொண்டு வரப்படும் பல்வேறு திட்டங்களின் எதிர்ப்பு, அதற்கு மெய், வாய் பொத்தி சலாம் போடும் அரசு இது என பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. 

தமிழக அரசின் கல்வித்துறையில் நடக்கும் பல்வேறு நல்ல விஷயங்கள் இந்த களேபரங்களால் மறைந்து விடுகின்றன. அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் கல்வித்துறையில் கொண்டு வரப்படும் திட்டங்கள் மெச்சத் தகுந்தவையாக இருக்கின்றன. முதலமைச்சர் எடப்பாடியின் கைகள் கட்டப்படாமல் இருந்தால் நல்ல ஆட்சியினைக் கொடுத்திருப்பார் என்கிறார்கள் பலரும். எந்த முதலமைச்சருக்கும் இல்லாத பல குடைச்சல்களைச் சமாளித்து ஆட்சி நடத்துவது என்பது சாதாரணம் இல்லை. 

சேலம் எட்டு வழிச்சாலைகான அவசியத்தையும், அதனால் விளையக் கூடிய பலன்களையும் அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். வாய்ச் சொல்லாக இல்லாமல் பத்திரிக்கை வாயிலாக மக்களிடம் தொடர்பு கொண்டிருக்கலாம். அதிகாரத்தினை அளித்த மக்களிடம் அதிகாரத்தைக் காட்டுவது எதிர்காலத்தில் ஓட்டுக் கேட்டு வீடு தோறும் செல்லும் போது வார்த்தைகளில் விவரிக்க இயலாத எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடலாம். 

விவசாய நிலங்களை அழித்துதான் சாலை அமைக்க வேண்டுமென்பது கொடுமை. உண்ண உணவு தரும் பூமியை அழிப்பது அன்னையை அழிப்பதற்குச் சமம். 

காலம் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் என்பார்கள். ஆனால் இப்போதைய காலம் எதையும் மறக்கடிக்க வைக்காது. டெக்னாலஜியின் காலம் அழியாப்பதிவுகளை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறது.

* * * 

கடந்த வாரம் சாமியைப் பார்க்கச் சென்றிருந்தேன்.  அடியேன் ஓஷோவைப் படிப்பவன்.  கடவுள் என்பதைப் பற்றிய பல்வேறு கேள்விகள் எனக்குண்டு. திருமூலரின் நீயே கடவுள் என்பதைப் பற்றியும் பல விதமான குழப்பங்கள் எனக்குண்டு. இன்னும் முடிவுக்கு வர இயலாத ஒரு விஷயமாக கடவுள் இருக்கிறார்.  இதற்கிடையில் ரஜினியின் அரசியல் மற்றும் காலா படம் எனக்கு ஏதோ சொன்னது.

இந்தியாவெங்கும் பிரபலமான, மக்களின் அன்பைப் பெற்ற ஒரு நடிகர் ரஜினியின் வாழ்க்கையில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு பெரும் குழப்பத்தினை உண்டாக்கியது. 

தூத்துக்குடி (ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது) சம்பவத்திற்காக ரஜினி செல்வது; அங்கு யாரோ ஒருவர் ’நீங்க யாரு?’ எனக் கேட்டது; அதன் பலனாக ரஜினியின் கோப பேட்டி வெளியானது; அதன் பிறகு ரஜினியின் மீது மக்களுக்கு உண்டான கோபம்;  காலா திரைப்படம் வெளியிடப்பட்டது; பிறகு ரஜினிக்கு மக்கள் நலனுக்கு எதிரானவர் என மாறியது ஆகிய நிகழ்வுகள் கடவுள் இருக்கின்றார் போல என எண்ண வைத்தது. தூத்துக்குடி சம்பவம் மட்டும் நடக்காமலிருந்தால் காலா திரைப்படத்தின் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேஷம் பெரிய புரட்சியினை உருவாக்கி இருக்கும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக ஏதோ ஒரு வலையில் ரஜினி சிக்கியதை மேற்கண்ட சம்பவம் சொல்லியது.

”கடவுள் இருக்கின்றாரா? சாமி” என மேற்கண்ட விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன்.

”ஏதோ ஒரு சக்தி - அதைத்தான் கடவுள் என்கிறோம் - இருக்கு ஆண்டவனே” என்றார்.

”சாமி, ரஜினி முதலமைச்சர் ஆவாரா? பிஜேபி கமல்ஹாசன், சீமான், ஸ்டாலின், டிடிவி இவர்களில் யார் முதலமைச்சராக வருவர்?” 

“ரஜினி அரசியலுக்கு வருவார் அவ்வளவுதான் ஆண்டவனே. புதியவர்கள் தான் தமிழகத்தின் ஆட்சிக்கு வருவார்கள். எல்லாக் கட்சியிலும் இருக்கும் நல்லவர்கள் திடீரென ஒன்றாவார்கள். இவனைத்தான் தேடினோம் என்பது போல மக்களும் வாக்களித்து அவர்களை உட்கார வைத்து விடுவார்கள். இது அடுத்து வரக்கூடிய தேர்தலில் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இல்லையெனில் அதற்கடுத்த தேர்தலில் அவர்கள் தான் வருவார்கள். அடுத்த இருபத்தைந்தாண்டுகளுக்கு அவர் ஒருவரே முதலமைச்சராய் இருப்பார்” என்றார்.

இப்படியும் நடக்குமா? என்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஏனெனில் அம்மா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட போது சாமியிடம் கேட்டேன். அவர் ஒரே வார்த்தையில் ’ஆத்மா சாந்தியடையட்டும்’ என்றார்.
“என்னங்க சாமி? இப்படிச் சொல்லீட்டீங்க?” என்றேன்.

“அதான் சொல்லீட்டேனே ஆண்டவனே, ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார் மீண்டும்.

அதேதான் நடந்தது. இதை முன்பே எழுதி இருக்கலாம். ஆனால் அது நன்றாக இருந்திருக்காது. ஆனால் இப்போது எதிர்காலத்தில் வரக்கூடிய நிகழ்வுகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எழுதவா என்று அவரிடம் அனுமதி கேட்டுத்தான் எழுதுகிறேன்.

நடந்தால் நமக்கு வேறென்ன வேண்டும்? எனது குருவின் வார்த்தை என்றும் தோற்றதில்லை என்பதால் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. அது நடந்தே தீரும் என்றே நினைக்கிறேன்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

“சாமி, ஊழல் செய்து கோடி கோடியாய் குவிக்கின்றார்களே அவர்களின் எதிர்கால கதி என்னவாகும்?”

“நாலாயிரம் பேரிடம் இருப்பதைப் பிடிப்பதை விட நான்கு பேரிடம் இருப்பதை எளிதில் பிடித்து விடலாம் அல்லவா? அதைப் போல எளிதில் எல்லா சொத்தையும் மீட்டு விடுவார்கள். கவலையே வேண்டாம்” என்றார்.

நடக்க வேண்டும். நடந்தால் நன்றாக இருக்கும்.

* * *

”ஏங்க ! எழுந்திரீங்க....! “ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

எதிரே மனையாள்.

“காய்கறியெல்லாம் வெட்டித்தாங்க, சமைக்கணும்” 

“ஏய் லூசு, இப்பத்தான் பிக்பாஸு ஐஸ்வர்யா தத்தாவின் உதட்டினை இழுத்து....!”

”என்னது????”

“ஒன்னுமில்லை, கனவு”

”அதானே பாத்தேன்....! சீக்கிரமா வாங்க, சமைக்க நேரமாயிடுச்சு” என்றார்.

கையில் கத்தியுடன் காய்கறிகளை இரக்கமே இல்லாமல், அதாவது விதி அதற்குரிய காலம் வந்தவுடன் மனிதர்களை எழும்பவே விடாமல் வைத்து கணக்குத் தீர்க்குமே, அதைப் போல வெட்டித்தள்ளினேன். கடுகு வெடித்து வெங்காயம் வதங்கும் வாசனை மூக்கினை எட்டியது. 

* * *

Monday, June 18, 2018

பிக்பாஸ் - 2 - கமலின் மனமயக்கும் ஸ்கிரிப்ட்

பிக்பாஸ் 2 - நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். என் மகளின் பிரியமான புரோகிராம். 12 வயசு குழந்தைக்கு இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்ன சுவாரசியத்தைத் தந்து விடும் என்று புரியவில்லை. பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென ஷோபாவிலிருந்து எழுந்தார். வரும் நாட்களில் இசைப்பள்ளியின் ஆண்டு விழாவின்போது பாடுவதற்காக 'போகும் பாதை தூரமில்லை’ என்ற பாடலை சாதகம் செய்ய ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் பணத்தொப்பை வந்து விட்டது. முறுக்கிய மீசை வைப்பவர் எல்லாம் பாரதி ஆகிடமுடியாது என்று அவரைப் பார்த்ததும் எனக்குள் தோன்றியது.

பாரதி! பாரதிதான். ஆனால் எனக்குள் ஒரு உறுத்தலுண்டு. கமல் கட்சியின் பொலிட்பீரோவில் எனக்கு அறிமுகமான மென்னுணர்வு கொண்ட பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் ஒருவர் என்று கேள்விப்பட்டேன். கமலின் நுண்ணிய அரசியலின் தன்மை பற்றி அவர் புரிந்து கொண்டுள்ளாரா? எனத் தெரியவில்லை. 

கமலின் மிக நுண்ணிய ஜாதி அரசியல் சாட்சியாகப் பதிவாகி இருக்கிறது அதன் பங்கேற்பாளர்களைப் பார்த்ததும். அவருக்கும் பிக்பாஸுக்கும் தொடர்பில்லை என்றெல்லாம் ஸ்கிரிப்ட் இருக்கிறது என்பார் அவர். வெளுத்ததெல்லாம் பால் எனக்கருதும் இயல்புடையோருக்கு கமல் சொல்வது ஒவ்வொன்றும் உண்மையாகத் தெரியும். ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்க இயலாது அல்லவா?

சமீபகாலமாக உளவியல் தாக்குதல்களை நிகழ்த்தும் அரசியல் தீவிரவாதத்துக்கும் நிகரான ஒரு மனத்தாக்குதலை நிகழ்த்தப்போகும் பிக்பாஸ் ஸ்கிரிப்ட் உண்மையில் விதிக்கும் நிகரானது. அந்த ஸ்கிரிப்டின் விளைவுகள் சமூகத்தில் உருவாக்கபோகும் உளவியல் நிகழ்வுகளை, போராட்டங்களை, ஆத்திரங்களை, மகிழ்ச்சிகளை உன்னித்துப் பார்த்தால் இந்த நிகழ்ச்சியின் உள் அரசியல் விளங்கி விடும்.

பிக்பாஸ் மனமயக்கும், அசத்தும் ஒரு திரைக்கதை. இயக்குபவர் கமல்.

பதினாறு ஆட்களை வைத்துக் கொண்டு ஒரு சமூகத்தின் போக்கினை எளிதாக அவதானித்து விடலாம் என்கிற போக்கு மனிதத்துக்கு அழகல்ல. யார் எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைப் பற்றி யோசிக்க வேண்டுமென யாரோ ஒருவர் முடிவு செய்கிறார் என்றால் அந்த நிகழ்ச்சி ஒப்பற்ற ஒன்றாக இருக்கலாம்.ஆனால் அதன் துணையுடம் சமூகத்தின் பாதையை வழி மாற்றலாம் என்கிறபோது அதன் தீவிரவாதத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

யாரால் தனக்கு வாழ்க்கையும், வளமும் கிடைத்து சுகபோக வாழ்க்கையை வாழ்கிறோமோ அவர்களுக்கு தீமை செய்திடும் ஒரு நிகழ்ச்சியை செய் நன்றித்தனம் இன்றி ஒருவர் செய்கிறார் என்றார் அவர்களை நாம் என்ன சொல்லி அழைப்பது? மிருகங்களுக்கு கூட நன்றி உணர்ச்சி இருக்கும். ஆனால் மனிதர்களுக்கு? அதுவும் சினிமாக்காரர்களுக்கு????

Tuesday, June 5, 2018

விக்கி ரூடோஸ் சூப்பர் சிங்கர்

எனது நண்பரும் உறவினருமான பெரியசாமி கவுண்டரின் தோட்டத்திற்கு கவுண்டர் அம்மணி ருசியாக சமைக்கும் அரிசி பருப்புச் சாதத்துக்காகவும், கவுண்டர் எனக்காக காரமும் புளிப்பும் சரி சமமாகக் கலந்து வைக்கும் எண்ணை மின்னும் கருவேப்பிலை ரசத்தினை ருசிக்கவும் அடிக்கடிச் செல்வதுண்டு. கவுண்டர் ஒரு பொமேரேனியன் வளர்த்து வந்தார். கூண்டுக்குள் இருக்கும் அது. முகத்தில் கருப்பும், வெள்ளையுமாய் என்னை முதன் முதலாகப் பார்த்த போது கர்ண கடூரமாக ’நீ! யார்?” என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த முறை சென்ற போது விக்கிக்கு பிஸ்கெட் வாங்கிக் கொண்டு போனேன். முறைத்துக் கொண்டே சாப்பிட்டான். வீட்டுக்கு கிளம்பிய போது மீண்டும் கர்ண கடூரமாக போகக்கூடாது என்று கத்த ஆரம்பித்தான். சிரித்துக் கொண்டே வந்து விட்டேன். அந்தப் பக்கம் செல்லும் போது பிஸ்கெட்டோடு தான் செல்வேன். அவனுக்கு பிஸ்கெட் கொடுத்து விட்டு விரலை கம்பிக்குள் நீட்டினால் கழுத்தை கம்பியோடு வைத்து நிற்பான். ஒற்றை விரலால் அவனை தடவிக் கொடுப்பேன். 

என் நண்பர் என்னென்னவோ செய்து பார்த்தார். அவரை அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அதுமட்டுமல்ல எனது மனையாளையும் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிஸ்கெட் போடுவார்கள், என்னென்னவோ சமாதானம் செய்வார்கள். அருகில் சென்றால் கடிக்க உறுமுவான். நண்பர் மட்டுமே என்னை சரிப்படுத்துவார், மனையாள் அடிக்கடி காரத்தை அதிகப்படுத்துவார் அதற்காகவோ என்னவோ அவர்கள் இருவரையும் விக்கிக்கு பிடிக்காது போல.

ஒரு நாள் என்னுடன் கூடவே ஓடி வந்து விட்டான். எனக்குத் தெரியாது. நீண்ட நேரமாக நான் சென்ற வழியில் நின்று கொண்டிருந்தானாம். கவுண்டர் போனில் சொன்னார். கேட்ட எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. 

(விக்கி)

என் உணர்வோடு உணர்வாக மாறினான் விக்கி. சாப்பிடும் போது அவனுக்குக் கொடுக்காமல் சாப்பிட மனது தடை போடும். அவனின் கண்கள் என்னைப் பார்ப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அவன் சாப்பிட்டால்தான் மனது நிம்மதியாகும். அது ஒரு உயிர். ஐந்தறிவு கொண்ட அவனின் அளவற்ற அன்பினை எதனால் அளவிட முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்?

நேற்று பெரியசாமிக்கவுண்டர் வந்திருந்தார் என்னைப் பார்க்க. 

”எப்படி இருக்கான்?” எனக் கேட்டேன். 

”விக்கிச் செத்துப் போயிட்டானுங்க சார்!” என்றார். தெரு நாய்கள் சேர்ந்து கழுத்தில் கடித்துக் குதறி விட்டனவாம். காயங்களோடு கூண்டுக்குள் வந்து படுத்து கொஞ்சம் தண்ணீர் குடித்தானாம். மயங்கிப் போனானாம். டாக்டரிடம் கொண்டு சென்றாராம். இறந்து விட்டானாம்.

இரண்டு நாட்களாக மனம் பாரமாய் கிடக்கிறது. சாப்பிடக்கூட முடியவில்லை. என்ன செய்வது எனப் புரியவும் இல்லை. 

‘அடேய் விக்கிப்பயலே! எனது நண்பன் ஜஹாங்கீர் ஆலம் மேல் உலகத்தில் தான் இருக்கான். அவனும் நானும் சேர்ந்து மகிழ்வோடு புகைக்க சிகரெட்டோடு பூமியில் என் காலம் முடிந்த பிறகு வருவேன். அத்துடன் உனக்குப் பிடித்த பிஸ்கெட்டோடு அங்கே உன்னைப் பார்க்கிறேன். உனது அழகான கழுத்தில் உனக்குப் பிடித்தமாதிரி என் விரல்களால் அலைந்து விடுகிறேன். உன் அன்பான வெது வெதுப்பான கழுத்தின் சூடு என் விரலில் பரவட்டும். எனக்காக காத்துக் கொண்டிரு’

நிற்க.

(என் இனிய ரூடோஸ்)

கடந்த வாரத்தில் ஒரு நாள் விடிகாலையில் ரூடோஸ் கத்திக் கொண்டிருந்தாள். காருக்கு அடியில் ஒரு குட்டி படுத்திருந்தது. அது அவளின் ராஜ்ஜியம். நாங்கள் அவளின் அன்பிற்கு அடிமைகள். அவளின் ராஜ்ஜியத்துக்குள் எவருக்கும் அனுமதி இல்லை. அந்தக் குட்டியினை ரித்திக்கும், நிவேதிதாவும் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ரூடோஸ் கடுப்பில் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தாள். தரையெங்கும் குரைத்ததன் எச்சில்கள். கண்கள் அகல குரைத்தாள். என்னால் அவள் படும் வேதனையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் குட்டியை எங்கோ கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் ரித்திக். வந்தவன் சும்மா இருக்காமல், ‘அப்பா! அதை விட்டு விட்டு வந்ததும் ஓடி வந்து காலடியில் நின்று கத்தியதுப்பா?’ என்றான். 

அன்று முழுவதும் ரூடோஸ் சாப்பிடவில்லை. மாலையில் அவளை அருகில் வர வைத்து தடவிக் கொடுத்து சமாதானம் சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். அவளின் முகம் வாடிக் கிடந்தால் உள்ளத்தில் சோகம் படர்கிறது. அவளின் வாழ்வு பதினைந்து வருடம் இருக்கலாம். தொழில் ரீதியான பயணங்களும், எனக்கான ஓய்வும் அவளோடு நான் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டே வருகிறது..இனி வரும் இந்த நேரக்குறைவு காலகட்டம் என் முன்னால் வந்து நின்று என்னை அடிக்கடி சோகத்தின் பிடியில் தள்ளுகிறது. அவளின் மீது எல்லையில்லா அன்பு கொப்பளிக்கிறது. 

நிற்க

சனி, ஞாயிறுகளில் விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பசங்களோடு பார்ப்பதுண்டு. மனையாளுக்கு ராஜியை ரொம்பவும் பிடிக்கும். எனக்கு அவரின் குரல் பிடிக்காது. செந்திலின் குரல் கவனிக்க வைக்கும் அளவுக்கு காந்தமுள்ளது. அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டேன். திடீரென ஒரு சனி அன்று ”ஏங்க, இந்த நிகழ்ச்சியில் யார் பாடுவது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?” என்று கேட்டார் மனையாள். அன்று சனிக்கிழமை என்பதை மறந்து போனேன். விதி வலியது என்பார்களே அது அடிக்கடி என் வாயில் வந்து விழும்.

வழக்கம் போல, “ஸ்வேதா மோகன்” என்றேன். 


”அதானே, என்ன அதிசயமா இருக்கேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.  அதான் காரணமா?” என்று சொல்லியபடி அடுக்களைக்குள் சென்றார். அன்றைக்கு சட்டினியில் காரம் அதிகமாயிருந்தது. 

சனி தன் வேலையைக் காட்டி விட்டான். சனிக்கிழமை அதுவுமாக சூனியம் வைத்துக் கொண்டேனே ?????????? 

Monday, June 4, 2018

நிலம் (44) - அதிகச் சொத்துக்கள் அரசு வசமாகபோகிறது

நில உச்சவரம்புச் சட்டத்தினைக் கையில் எடுத்து வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது தமிழக அரசு. செய்தி வெளி வந்து விட்டது. இனி எவரும் ஏக்கர் கணக்கில் சொத்துக்களைக் குவிக்க இயலாது. டிரஸ்ட் மற்றும் நிறுவனங்களுக்கு விதி விலக்கு உண்டு எனினும் அதற்கான அப்ரூவல் பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படியே அப்ரூவல் பெற்றாலும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாகத்தான் கருதப்படுமே தவிர தனியார் நிலமாக இருக்காது. 

அதுமட்டுமல்ல இது போன்ற கம்பெனியின் கீழ் இருக்கக் கூடிய நிலங்களை வாங்கும் போது வெகு கவனமாக வாங்குதல் அவசியம். இல்லையென்றால் ஏமாற்றப்படுவீர்கள் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். தகுதியும், இது பற்றிய விவரங்கள் தெரிந்த நல்ல ஆலோசகரிடம் ஆலோசனைப் பெற்ற பிறகே அது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும். அதுமட்டுமின்றி டிரஸ்ட் கீழ் வரக்கூடிய பூமிகளை வாங்குவதற்கும் ஏகப்பட்ட சட்ட விலக்குகள் தேவை என்பதையும் கவனத்தில் கொள்க. யாருக்கு எங்கே எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? என்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறு கண்டுபிடிக்கவும் வழிகள் உண்டு. நன்கு ஆலோசித்த பிறகே இது போன்ற சொத்துக்களை வாங்க வேண்டும் என்பதினை மறந்து விட வேண்டாம்.


இதோ கீழே தினமலரில் வெளிவந்திருக்கும் செய்தி உங்களுக்காக.

நில உச்சவரம்பு சட்டப்படி, உபரி நிலம் தொடர்பான கணக்கெடுப்பு, மாநிலம் முழுக்க துவங்கியுள்ளது. மாநிலத்தில், உபரியாக உள்ள நிலங்களை மீட்க வகை செய்யும், நில சீர்திருத்த சட்டம், 1970 பிப்., 15 முதல் அமலில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும், நில உரிமை உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, உபரி நிலத்தை, அரசு கையகப்படுத்தி வந்தது.கடந்த, 1983ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், நாடு முழுக்க, ஒரு கோடியே, 11 லட்சத்து, 15 ஆயிரம் ஏக்கர், உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 71 லட்சத்து, 63 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 48 லட்சத்து, 90 ஆயிரத்து, 600 ஏக்கர் நிலம், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டன.அரசின் திடீர் உத்தரவையடுத்து, மீண்டும் உபரி நிலத்தை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 'ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவில், உபரி நிலம் தொடர்பான அறிக்கையை, வரும், 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:நில உச்சவரம்பு சட்டப்படி, நஞ்சை, புஞ்சை நிலம் என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு, அதிகபட்சம், 60 ஏக்கர் வரை மட்டுமே நிலம் இருக்க வேண்டும்.அறக்கட்டளை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு, நில உச்சவரம்பு சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும், ஒரு சென்ட் அதிகமாக இருந்தாலும், அது உபரி நிலமாக கருதப்பட்டு, வருவாய்த்துறை வசம் எடுக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. உபரி நிலம் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு விதிமுறைப்படி, 'நோட்டீஸ்' வழங்கி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர். 


குறிப்பு : ஒரு குடும்பத்திற்கு 60 ஏக்கர் என்பதன் கணக்கு வேறு. அரசு வைத்திருப்பது தர ஏக்கர் கணக்கு என்பது வேறு. 60 ஏக்கர் எனக் குறிப்பிடுவது நாம் பயன்படுத்தும் கணக்கு. ஊருக்கு ஊர் இந்த ஏக்கர் வித்தியாசப்படும் என்பதினைக் கவனத்தில் கொள்க.

Saturday, June 2, 2018

சம்பளமில்லா வேலைக்காரர்கள்

காலம் மாறிக் கொண்டிருக்கிறது. முன் காலத்தில் உள்ள எதார்த்தமான மனிதர்களை இனிக் காண இயலாது. எங்கும் பணம், எதிலும் பணம், பகட்டு இருந்தால் தான் சக மனிதனை மதிக்கின்றார்கள். திருடனிடம் இருக்கும் பணத்திற்குத்தான் சமூகத்தில் மரியாதை. அவன் திருடன் என்பது அல்ல பிரச்சினை. பணம் யாரிடம் இருக்கிறது? அவனை மதி, அவன் உயர்ந்தவன் என்கிறது சமூகம். அதை மதிக்கும்படியான மூளைச் சலைவகளை வீட்டுக்குள் இருக்கும் டிவி சைத்தானும், தினசரி சைத்தான்களும் செய்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் தர்மம், நியாயங்கள் இருக்கின்றன. நீ வாழ பிறரைக் கெடு என்கிறது அரசியல். பதவியில் அமர என்ன வேண்டுமானாலும் செய் என்கிறது அரசாங்கம். இங்கு மக்கள், அவர்களுக்கான துன்பங்கள், துயரங்கள் பிரச்சினையே இல்லை. பணம் தான் எல்லாவற்றுக்குமான பிரச்சினையாக, மூலமாக, ஆணி வேராக இருக்கிறது. பணமிருந்தால் போதும் கொலை செய்து விட்டு சட்டத்தின் எந்த பிடிக்குள்ளும் சிக்காது சிங்காரமாக வாழலாம். மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்தால் வளையாத எதுவும் வளைந்து நின்று சல்யூட் அடிக்கும். அது சட்டமானாலும் சரி, அரசானாலும் சரி, மக்களானாலும் சரி. ஓட்டுப் போட வைக்கவும் பணம் தான் தேவை. பணம் கொடுக்கின்றார்களா அவன் திருடனே ஆனாலும் சரி, வெற்றி பெற வைக்கும் மக்களின் மனோபாவம் மாறி விட்டது. 5 ரூபாயில் ஆரம்பித்த ஓட்டுக்குப் பணம் இப்போது பத்தாயிரமாக உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு லட்சம் கொடுப்பார்கள். 

தரமற்ற காண்ட்ராக்ட் வேலைகள், மக்கள் பணத்தை உறிஞ்சும் கார்ப்பொரேட் நிறுவனங்கள், லஞ்சம் பெறுவதே லட்சியம் என வாழும் அரசியல்வாதிகளும், அரசாங்க அலுவலர்களும் என மொத்த இந்தியாவும் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. 

வளர்ந்து வரும் அறிவியல் துணைகொண்டு மக்கள் என்ன சிந்திக்க வேண்டும், எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைப் பற்றிப் பேச வேண்டும், எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன. மக்களை குழுக்களாக, ஜாதிகளாக, அமைப்புகளாக, பிரச்சினைகளோடு போராடுபவர்களாக அரசியல் சக்திகள் பிரித்து வைத்திருக்கின்றன. தேர்தல் வரும் போது அவர்கள் ஒன்று கூடி பதவிக்கு வந்து விடுவார்கள். 

மனித வளத்தை எப்படி காசாக்குவது என்பதைப் பற்றிய சிந்தனைகளும், மனித மனத்தை தன் நோக்கி எப்படித் திருப்பிப் பயன் அடைவது என்பதற்காக முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. யாரை ஜெயிக்க வைக்க வேண்டுமென கார்பொரேட் மூளைகள் சிந்தித்து கோடிகள் பெற்றுக் கொண்டு மக்களின் மனத்தில் ஊடுறுவுகின்றார்கள். மக்களும் ஆட்டு மந்தைகள் போல சிந்திக்கும் திறனன்றி ஏற்றுக் கொள்கிறார்கள். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சாமியார்களும், அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய பலாபலன்களைக் காரணம் காட்டி அடிமை வம்சங்களை உருவாக்கி சம்பளம் தராத பணியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இருக்க இடமும், சாப்பாடும் கொடுத்தால் ஆன்மீகம் என்ற போர்வையில் அமைதி என்கிற தத்துவத்திற்காக சாமியாருக்காக உழைக்கின்றார்கள் ஒரு கூட்டம். 

கோவில் என்கிற பெயரில், பக்தி என்கிற தத்துவத்தில் உழைக்கும் பணத்தை சுரண்டுகிறது இன்னொரு கூட்டம். 

பதவி என்கிற மயக்கத்தில் மாமா வேலை கூடச் செய்ய அரசியல் எனும் பொதுத்தத்துவதிற்காக காசில்லா வேலைக்காரக் கும்பல்களை உருவாக்கி உறிஞ்சிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம். 

பதவியும், அதிகாரமும், கொழுத்த பணமும் எனக்கும், என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கு மட்டுமே. வேலை செய்யவும், கோஷம் போடவும், வீசும் காசினைக் கவ்விக் கொள்ளும் நாயாகவும் இருக்க மட்டுமே உனக்கு தகுதி எனச் சொல்லி கும்மாளம்மடித்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம்.

சட்டங்கள் இருக்கின்றன என்று மக்களை நம்ப வைக்க அவ்வப்போது ஊழல் எனப் பிடிப்பார்கள். ஒரு சிலருக்கு தண்டனை கிடைத்து விட்டது என காட்டுவார்கள். கொழுத்த ஊழல்வாதிகள் சட்டத்தாலும் எவராலும் கண்டு கொள்ளாமலே ஓய்வு பெறுவார்கள். 

தர்மம், நியாயம், நீதி எனப் பேசுபவர்கள் இவை எதையும் கடை பிடிப்பது இல்லை. தனி மனிதனுக்கு ஒரு நியாயம், நிறுவனங்களுக்கு ஒரு நியாயம் என்று பத்திரிக்கைகள் சொல்லும். அது தான் உண்மை என்று ஒரு கூட்டம் நம்பும். அதைப் பற்றி ஒரு கூட்டம் பேசும், எழுதும், கத்தும், திட்டும்.  நீதி பிறழ்வதும், கொள்கை மாறுவதும் அரசியல் சாணக்கியத்தனம் என்பார்கள். தனி மனிதனுக்கு எனில் கடவுள் தண்டிப்பார் என்பார்கள். இப்படியெல்லாம் எதைப் பற்றியும் நேர் வழி சிந்திக்க விடமாட்டார்கள். இப்படியெல்லாம் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது இப்போது மட்டும் நடப்பது அல்ல. மனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்த காலத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் அக்கப்போர்கள் இவைகள்.

காலம் போன நேரத்தில் உடம்பு ஒத்துழைக்காக நேரத்தில் எல்லாவற்றையும் அசை போட்டு அழுது கொண்டிருக்கும் கூட்டத்தார் பெருகி இருக்கின்றார்கள். அறுபது வயதா ஓடிப்போ என மேலுலகம் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் மருத்துவத்துறையினரும், அரசும்.

யாரைப் பற்றிப் பேச வேண்டும், எவரைப் பற்றி எழுத வேண்டுமென ஃபேஸ்புக், டிவிட்டர்கள் முதலாளிகள் முடிவு செய்கின்றார்கள். எந்த வித பணமும் இன்றி, செலவும் இன்றி நாமெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். பேசிக் கொண்டிருக்கிறோம் யாருக்காகவோ. நமக்காக நாம் எதுவும் செய்து கொள்ளாமல் பிறருக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமைகள் நாம்.

சம்பளமே இல்லாமல் பிறர் உயரவும், வாழவும் இணையத்தில் காசைக் கரியாக்கி உழைப்பினைக் கொடுத்து அழிந்து கொண்டிருக்கிறோம் நாமெல்லாம். 

சிந்திக்க வேண்டுகிறேன். நமக்கான வாழ்க்கையை நாம் வாழ இப்படியான வேலைகளை, அலப்பறைகளை ஒதுக்கி விட்டு வாழ்வோம் வாருங்கள் !!







Saturday, May 12, 2018

நிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது?

பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம், ஆத்திரம் என பொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல போலிகள் புனைபெயர்களில் பல்வேறு அக்கப்போர்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை எது, பொய் எது என்று எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. எந்தச் செய்தி உண்மையானது? எந்தச் செய்தி போலியானது என்று உணர்வதற்குள் அடுத்தச் செய்தி வந்து விடுகிறது. பத்திரிக்கைகள் தங்கள் சுயதர்மத்தை இழந்து சார்பு நிலைகள் எடுத்து விட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் டிவி, பத்திரிக்கை இருக்கின்றன. எதிரானவர்களை கர்ணகடூரமாக விமர்சிக்கின்றார்கள். மொத்தத்தில் நிம்மதியற்றுப் போய் கிடக்கின்றார்கள். வயதாகையில் வாய்தா இல்லாமலே சேருமிடம் சேர்கின்றார்கள். அது அவர்கள் பாடு.

எதைக் கொடுக்கின்றோமோ அதைத் திரும்பப் பெறுதல் வேண்டும். எதைப் பெறுகின்றோமோ அதை கொடுத்தல் வேண்டும். இதுதான் இயற்கையின் விதி. எந்தக் கொம்பராலும் இதை மாற்ற முடியாது. 

சமீபத்தில் அன் அப்ரூவ்ட் மனைகளை அப்ரூவல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடையப் போகிறது என்பதால் மக்கள் அல்லோலகல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அரசும் ஆங்காங்கே கேம்ப்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தும் இனியும் 8 லட்சம் மனைகள் அப்ரூவல் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

என்னால் முடிந்த வரைக்கும் தெரிந்தவர்களுக்கு, ஆன்லைனில் அன் அப்ரூவ்டு மனைகளை பதிவு செய்து கொடுத்தேன். அன் அப்ரூவ்ட் லேயவுட்களையும் அப்ரூவ்ட் செய்து கொடுக்க தேவையான உதவிகளையும் செய்து வருகிறேன். அப்போது பல்வேறு விஷயங்களைக் கவனிக்க நேர்ந்தது. அதை உங்களிடம் பகிரத்தான் இந்தப் பதிவு.

அன் அப்ரூவ்ட் மனைகள் என்பது டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் என்று அர்த்தம். வீட்டு மனைகளை அங்கீகரிக்க மேற்கண்ட இரண்டு அமைப்புகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்து போர்டுகளுக்கு  அங்கீகாரம் வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வீடு கட்ட அனுமதி வழங்க இடமுண்டு. ஏனென்றால் பஞ்சாயத்து போர்டுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க அனுமதி உண்டு. கவனிக்க மனை அப்ரூவல் வழங்க அனுமதி இல்லை. வரி வசூலிக்க அனுமதி இருப்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அளவில் ஒரு குறிப்பிட்ட சதுரடிகள் வீடு கட்ட மட்டும் அனுமதி தரலாம்.

பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்டு மனைகள் என்றுச் சொல்லி மனைகளை விற்றார்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது உங்களின் அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை. 

அன் அப்ரூவ்ட் மனைகள் பதிவு செய்திருக்கக் கூடாது அல்லவா? அது அரசின் தவறுதானே என்று கேட்பீர்கள். ஒரு துணைப் பதிவாளர் என்பவர் எந்த ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுத்தாலும் பதிவு செய்து கொடுப்பார். குறைந்தபட்ச உரிமைகளை அவர் பரிசீலனை செய்து பதிவு செய்ய எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு சொத்து பற்றிய வில்லங்கங்கள் பார்க்க அனுமதில்லை. அது அவரின் வேலையும் இல்லை. ஆகவே பதிவாளர்கள் மீது குற்றம் சொல்வது என்பதும் ஏற்புடையதல்ல.

அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்குவதில் உள்ள பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் மனை விற்பனையாளர் குறிப்பிட்ட லேயவுட்டில் உருவாக்கி இருக்கும் மொத்த மனைகளையும் மனைகளாக விற்றிருந்தால் பிரச்சினை வராது. ஆனால் ஒரு சில மனை விற்பனையாளர்கள் லேயவுட்டில் இருக்கும் விற்காத மனைகளை நிலங்களாக மாற்றி விற்று விடுவார்கள். இப்போது புரிகிறதா பிரச்சினை? ஒரு சிலர் சாலைகளை பஞ்சாயத்துக்கு தானம் கொடுக்காமல் சாலைகளையும் சேர்த்து விற்று விடுவார்கள். அந்த மனைகள் நீர்வழிப்பாதையாக இருக்கலாம், விரிவாக்கத்துக்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். தொழிற்சாலைப்பகுதியாக இருக்கலாம். கோவிலுக்குப் பாத்தியப்பட்டதாக இருக்கலாம். நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். இப்படி பல்வேறு ’இருக்கலாம்களில்’ ஏதாவது ஒரு ’இருக்கலாமுக்குள்’ வந்து விட்டால் மனையும் போச்சு, மன அமைதியும் போய் விடும்.

அப்ரூவ்டு மனைகள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இருக்கலாம்களுக்குள் இல்லாத நிலமாக இருப்பின் மட்டுமே அனுமதி பெறுகின்றன. அதுமட்டுமல்ல எந்த ஒரு விரிவாக்கத்தின் போதும் மனைகளை அரசு பயன்படுத்தவும் சட்டத்தில் இடமில்லை.

இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஓர் நினைவூட்டல்.

இனி மேலும் ஒரு பிரச்சினை வர உள்ளது. அன் அப்ரூவ்ட் லேயவுட்களில் அப்ரூவ்ட் செய்யப்பட்ட மனைகளை வாங்கும் போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். அது என்ன பல விஷயங்கள் என்கின்றீர்களா? அது ஒவ்வொரு மனைக்கும் வேறுபடும் என்பதால் பொதுவாகக் குறிப்பிட முடியாது. அவ்வாறு எழுதினால் படிப்பவர்கள் குழம்பி விடுவார்கள். நல்ல பிராப்பர்ட்டி கன்சல்டண்ட்டிடம் விவாதித்த பிறகு மனைகளை கிரையம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் !!!