பிக்பாஸ் 2 - நேற்று ஆரம்பித்திருக்கிறார்கள். என் மகளின் பிரியமான புரோகிராம். 12 வயசு குழந்தைக்கு இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்ன சுவாரசியத்தைத் தந்து விடும் என்று புரியவில்லை. பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென ஷோபாவிலிருந்து எழுந்தார். வரும் நாட்களில் இசைப்பள்ளியின் ஆண்டு விழாவின்போது பாடுவதற்காக 'போகும் பாதை தூரமில்லை’ என்ற பாடலை சாதகம் செய்ய ஆரம்பித்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் பணத்தொப்பை வந்து விட்டது. முறுக்கிய மீசை வைப்பவர் எல்லாம் பாரதி ஆகிடமுடியாது என்று அவரைப் பார்த்ததும் எனக்குள் தோன்றியது.
பாரதி! பாரதிதான். ஆனால் எனக்குள் ஒரு உறுத்தலுண்டு. கமல் கட்சியின் பொலிட்பீரோவில் எனக்கு அறிமுகமான மென்னுணர்வு கொண்ட பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் ஒருவர் என்று கேள்விப்பட்டேன். கமலின் நுண்ணிய அரசியலின் தன்மை பற்றி அவர் புரிந்து கொண்டுள்ளாரா? எனத் தெரியவில்லை.
கமலின் மிக நுண்ணிய ஜாதி அரசியல் சாட்சியாகப் பதிவாகி இருக்கிறது அதன் பங்கேற்பாளர்களைப் பார்த்ததும். அவருக்கும் பிக்பாஸுக்கும் தொடர்பில்லை என்றெல்லாம் ஸ்கிரிப்ட் இருக்கிறது என்பார் அவர். வெளுத்ததெல்லாம் பால் எனக்கருதும் இயல்புடையோருக்கு கமல் சொல்வது ஒவ்வொன்றும் உண்மையாகத் தெரியும். ஆனால் எல்லோருக்கும் அப்படி இருக்க இயலாது அல்லவா?
சமீபகாலமாக உளவியல் தாக்குதல்களை நிகழ்த்தும் அரசியல் தீவிரவாதத்துக்கும் நிகரான ஒரு மனத்தாக்குதலை நிகழ்த்தப்போகும் பிக்பாஸ் ஸ்கிரிப்ட் உண்மையில் விதிக்கும் நிகரானது. அந்த ஸ்கிரிப்டின் விளைவுகள் சமூகத்தில் உருவாக்கபோகும் உளவியல் நிகழ்வுகளை, போராட்டங்களை, ஆத்திரங்களை, மகிழ்ச்சிகளை உன்னித்துப் பார்த்தால் இந்த நிகழ்ச்சியின் உள் அரசியல் விளங்கி விடும்.
பிக்பாஸ் மனமயக்கும், அசத்தும் ஒரு திரைக்கதை. இயக்குபவர் கமல்.
பதினாறு ஆட்களை வைத்துக் கொண்டு ஒரு சமூகத்தின் போக்கினை எளிதாக அவதானித்து விடலாம் என்கிற போக்கு மனிதத்துக்கு அழகல்ல. யார் எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைப் பற்றி யோசிக்க வேண்டுமென யாரோ ஒருவர் முடிவு செய்கிறார் என்றால் அந்த நிகழ்ச்சி ஒப்பற்ற ஒன்றாக இருக்கலாம்.ஆனால் அதன் துணையுடம் சமூகத்தின் பாதையை வழி மாற்றலாம் என்கிறபோது அதன் தீவிரவாதத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
யாரால் தனக்கு வாழ்க்கையும், வளமும் கிடைத்து சுகபோக வாழ்க்கையை வாழ்கிறோமோ அவர்களுக்கு தீமை செய்திடும் ஒரு நிகழ்ச்சியை செய் நன்றித்தனம் இன்றி ஒருவர் செய்கிறார் என்றார் அவர்களை நாம் என்ன சொல்லி அழைப்பது? மிருகங்களுக்கு கூட நன்றி உணர்ச்சி இருக்கும். ஆனால் மனிதர்களுக்கு? அதுவும் சினிமாக்காரர்களுக்கு????