எனது நண்பரும் உறவினருமான பெரியசாமி கவுண்டரின் தோட்டத்திற்கு கவுண்டர் அம்மணி ருசியாக சமைக்கும் அரிசி பருப்புச் சாதத்துக்காகவும், கவுண்டர் எனக்காக காரமும் புளிப்பும் சரி சமமாகக் கலந்து வைக்கும் எண்ணை மின்னும் கருவேப்பிலை ரசத்தினை ருசிக்கவும் அடிக்கடிச் செல்வதுண்டு. கவுண்டர் ஒரு பொமேரேனியன் வளர்த்து வந்தார். கூண்டுக்குள் இருக்கும் அது. முகத்தில் கருப்பும், வெள்ளையுமாய் என்னை முதன் முதலாகப் பார்த்த போது கர்ண கடூரமாக ’நீ! யார்?” என்று என்னைக் கேட்டுக் கொண்டிருந்தது.
அடுத்த முறை சென்ற போது விக்கிக்கு பிஸ்கெட் வாங்கிக் கொண்டு போனேன். முறைத்துக் கொண்டே சாப்பிட்டான். வீட்டுக்கு கிளம்பிய போது மீண்டும் கர்ண கடூரமாக போகக்கூடாது என்று கத்த ஆரம்பித்தான். சிரித்துக் கொண்டே வந்து விட்டேன். அந்தப் பக்கம் செல்லும் போது பிஸ்கெட்டோடு தான் செல்வேன். அவனுக்கு பிஸ்கெட் கொடுத்து விட்டு விரலை கம்பிக்குள் நீட்டினால் கழுத்தை கம்பியோடு வைத்து நிற்பான். ஒற்றை விரலால் அவனை தடவிக் கொடுப்பேன்.
என் நண்பர் என்னென்னவோ செய்து பார்த்தார். அவரை அவனுக்குப் பிடிக்கவே இல்லை. அதுமட்டுமல்ல எனது மனையாளையும் அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. பிஸ்கெட் போடுவார்கள், என்னென்னவோ சமாதானம் செய்வார்கள். அருகில் சென்றால் கடிக்க உறுமுவான். நண்பர் மட்டுமே என்னை சரிப்படுத்துவார், மனையாள் அடிக்கடி காரத்தை அதிகப்படுத்துவார் அதற்காகவோ என்னவோ அவர்கள் இருவரையும் விக்கிக்கு பிடிக்காது போல.
ஒரு நாள் என்னுடன் கூடவே ஓடி வந்து விட்டான். எனக்குத் தெரியாது. நீண்ட நேரமாக நான் சென்ற வழியில் நின்று கொண்டிருந்தானாம். கவுண்டர் போனில் சொன்னார். கேட்ட எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
(விக்கி)
என் உணர்வோடு உணர்வாக மாறினான் விக்கி. சாப்பிடும் போது அவனுக்குக் கொடுக்காமல் சாப்பிட மனது தடை போடும். அவனின் கண்கள் என்னைப் பார்ப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அவன் சாப்பிட்டால்தான் மனது நிம்மதியாகும். அது ஒரு உயிர். ஐந்தறிவு கொண்ட அவனின் அளவற்ற அன்பினை எதனால் அளவிட முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்?
‘அடேய் விக்கிப்பயலே! எனது நண்பன் ஜஹாங்கீர் ஆலம் மேல் உலகத்தில் தான் இருக்கான். அவனும் நானும் சேர்ந்து மகிழ்வோடு புகைக்க சிகரெட்டோடு பூமியில் என் காலம் முடிந்த பிறகு வருவேன். அத்துடன் உனக்குப் பிடித்த பிஸ்கெட்டோடு அங்கே உன்னைப் பார்க்கிறேன். உனது அழகான கழுத்தில் உனக்குப் பிடித்தமாதிரி என் விரல்களால் அலைந்து விடுகிறேன். உன் அன்பான வெது வெதுப்பான கழுத்தின் சூடு என் விரலில் பரவட்டும். எனக்காக காத்துக் கொண்டிரு’
நேற்று பெரியசாமிக்கவுண்டர் வந்திருந்தார் என்னைப் பார்க்க.
”எப்படி இருக்கான்?” எனக் கேட்டேன்.
”விக்கிச் செத்துப் போயிட்டானுங்க சார்!” என்றார். தெரு நாய்கள் சேர்ந்து கழுத்தில் கடித்துக் குதறி விட்டனவாம். காயங்களோடு கூண்டுக்குள் வந்து படுத்து கொஞ்சம் தண்ணீர் குடித்தானாம். மயங்கிப் போனானாம். டாக்டரிடம் கொண்டு சென்றாராம். இறந்து விட்டானாம்.
இரண்டு நாட்களாக மனம் பாரமாய் கிடக்கிறது. சாப்பிடக்கூட முடியவில்லை. என்ன செய்வது எனப் புரியவும் இல்லை.
நிற்க.
(என் இனிய ரூடோஸ்)
கடந்த வாரத்தில் ஒரு நாள் விடிகாலையில் ரூடோஸ் கத்திக் கொண்டிருந்தாள். காருக்கு அடியில் ஒரு குட்டி படுத்திருந்தது. அது அவளின் ராஜ்ஜியம். நாங்கள் அவளின் அன்பிற்கு அடிமைகள். அவளின் ராஜ்ஜியத்துக்குள் எவருக்கும் அனுமதி இல்லை. அந்தக் குட்டியினை ரித்திக்கும், நிவேதிதாவும் எடுத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட ரூடோஸ் கடுப்பில் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தாள். தரையெங்கும் குரைத்ததன் எச்சில்கள். கண்கள் அகல குரைத்தாள். என்னால் அவள் படும் வேதனையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்தக் குட்டியை எங்கோ கொண்டு போய் விட்டு விட்டு வந்தான் ரித்திக். வந்தவன் சும்மா இருக்காமல், ‘அப்பா! அதை விட்டு விட்டு வந்ததும் ஓடி வந்து காலடியில் நின்று கத்தியதுப்பா?’ என்றான்.
அன்று முழுவதும் ரூடோஸ் சாப்பிடவில்லை. மாலையில் அவளை அருகில் வர வைத்து தடவிக் கொடுத்து சமாதானம் சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். அவளின் முகம் வாடிக் கிடந்தால் உள்ளத்தில் சோகம் படர்கிறது. அவளின் வாழ்வு பதினைந்து வருடம் இருக்கலாம். தொழில் ரீதியான பயணங்களும், எனக்கான ஓய்வும் அவளோடு நான் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டே வருகிறது..இனி வரும் இந்த நேரக்குறைவு காலகட்டம் என் முன்னால் வந்து நின்று என்னை அடிக்கடி சோகத்தின் பிடியில் தள்ளுகிறது. அவளின் மீது எல்லையில்லா அன்பு கொப்பளிக்கிறது.
நிற்க
சனி, ஞாயிறுகளில் விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பசங்களோடு பார்ப்பதுண்டு. மனையாளுக்கு ராஜியை ரொம்பவும் பிடிக்கும். எனக்கு அவரின் குரல் பிடிக்காது. செந்திலின் குரல் கவனிக்க வைக்கும் அளவுக்கு காந்தமுள்ளது. அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டேன். திடீரென ஒரு சனி அன்று ”ஏங்க, இந்த நிகழ்ச்சியில் யார் பாடுவது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?” என்று கேட்டார் மனையாள். அன்று சனிக்கிழமை என்பதை மறந்து போனேன். விதி வலியது என்பார்களே அது அடிக்கடி என் வாயில் வந்து விழும்.
வழக்கம் போல, “ஸ்வேதா மோகன்” என்றேன்.
”அதானே, என்ன அதிசயமா இருக்கேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். அதான் காரணமா?” என்று சொல்லியபடி அடுக்களைக்குள் சென்றார். அன்றைக்கு சட்டினியில் காரம் அதிகமாயிருந்தது.
சனி தன் வேலையைக் காட்டி விட்டான். சனிக்கிழமை அதுவுமாக சூனியம் வைத்துக் கொண்டேனே ??????????