குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, August 14, 2018

இரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்

ஆவணம் அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க ஆரம்பித்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் இன்றும் என்னை விட்டு அகலாது அவ்வப்போது காலை நனைக்கும் கடலலைகள் போல நினைவுகளைச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி என்றொரு ஓவிய ஆசிரியர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தார். ஆறாம் வகுப்பிற்கு அவர் ஓவியப்பயிற்சியுடன், ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார். கதைகள் சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு ஒரு உள் பிரச்சினை இருந்து கொண்டே இருந்தது. ஆங்கிலம் அவருக்குச் சரியாக வராது. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். ஏனென்றால் அடியேன் தான் வகுப்பின் லீடர். பேப்பர் திருத்துவதிலிருந்து மக்கு பசங்களுக்கு மாலையில் டியூசன் சொல்லிக் கொடுப்பதிலிருந்து அவருக்கு நிரம்பவும் பிடித்த மாணவன் நான். வாரம் தோறும் அவரின் வீட்டுக்கு நானும் தங்கையும் சென்று விடுவோம். தனியாகத்தான் இருந்தார். எனக்கு ஆங்கில இலக்கணமும் படிக்கவும் சொல்லித்தருவார்.

என்னென்னவோ செய்து பார்ப்பேன். ஓவியம் மட்டும் எனக்கு வரவே வராது. முடிந்த அளவு முயற்சிப்பேன். ஓவியத்தில் இருக்கும் நாசூக்கு எனக்கு வரவில்லை. அவரும் பல தடவை சொல்லிக் கொடுத்தார். இருந்தால் தானே வருவதற்கு? ஒரு தடவை கூட முகம் சுளித்ததே இல்லை.


என்னைப் படைத்த இறைவனுக்கு எப்போதுமே என் மீது அதிக கரிசனம் உண்டு. என்னிடம் இருக்கும் ஒவ்வொன்றாய் பிடுங்கிக் கொண்டு ”இவன் என்ன செய்வான்னு பார்ப்போம்” என விளையாடிக் கொண்டே இருக்கிறான். பால் குடி மறக்கா குழந்தையாக இருக்கும் போது நடக்கமுடியாமல் கால்களை பறித்துக் கொண்டான். அசரவில்லையே நான். அது அவனுக்கும் எனக்குமான கணக்கு. அதை நான் அவனுடன் தீர்த்துக்கொள்கிறேன். இப்படித்தான் எனக்கு மிகவும் பிடித்த என் ப்ரிய ஆசிரியரை அவன் வேறு பள்ளிக்கு மாற்றினான். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னை விட்டு வேறோரு ஊருக்குச் சென்றார். இப்போது அவர் எங்கிருக்கின்றாரோ? இல்லையோ? தெரியவில்லை.

அதன் பிறகு ஜோசப் அமல்தாஸ் என்றொரு வாத்தியார் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை டியூசன் சொல்லிக் கொடுத்தார். அவரின் பெல்பாட்டம் பேண்ட் ரொம்ப பேமஸ். சைக்கிளில் வருவார். சட்டைக்காலர் கூட ஆட்டுக்காது போல கிடந்து அல்லாடும். ஒரு பைசா என்னிடம் வாங்கியதில்லை. நானும் அவர் எனக்குச் சொல்லித்தரும்படி வைத்துக் கொள்ளவும் இல்லை. ஆனால் அவரிடம் படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். ரொம்பவும் கண்டிப்பான ஆசிரியர். அவரைப் நெஞ்சுக்குள் திடுக்கென்று இருக்கும். ஆங்கிலத்தில் டென்ஸ் (TENSE) வைத்து வாக்கியங்கள் எழுதக் கற்றுக் கொடுத்தவர் அவர். அதை வைத்துதான் கல்லூரியில் படிக்கும் போது ஆங்கில புயலைச் சமாளித்தேன். இன்றைக்கும் எனது ஆங்கிலப் புலமையில் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவரே !

டியூசனுக்குச் செல்லும் போது அவர் அறையின் அருகில் இருந்த மற்றொரு அறையில் வேறொரு பள்ளியில் வேலை செய்து வரும் ஆசிரியர் தங்கி இருந்தார். பார்க்கும் எவரிடமும் எளிதில் ஒட்டிக் கொள்ளும் பழக்கம் எனக்கு. அந்த ஆசிரியருடன் பழகிக் கொண்டேன். ஒரு மண்ணெண்ணய் ஸ்டவ். இரண்டு மூன்று பாத்திரங்கள். ஒரு சில கரண்டிகள். நான்கைந்து உடைகள். கைலிகள் இரண்டு. ஏதோ ஒரு ஊர்ப் பெயர் சொன்னார். நினைவில் இல்லை. கல்யாணம் ஆகி விட்டது என்றார். அவர் சமைக்கும் போது அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பேன். நாசூக்கு என்றால் அப்படி ஒரு நாசூக்கு. சுத்தமென்றால் அப்படி ஒரு சுத்தம். ஆனால் சமையலில் மண்ணெண்ணெய் வாடை அடிக்கும். ஏதேதோ பேசிக்கொண்டிருப்பார். கேட்டுக் கொண்டிருப்பேன். சிறிது நேரம் அமைதியாக இருப்பார்.

புல்புல்தாராவை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அவர் வைத்திருந்த புல்புல்தாராவை எடுத்து வாசிப்பார். அது அழுது கொண்டே இருக்கும். அவரின் நெஞ்சுக்குள் எந்தக் காதலி அமர்ந்து கொண்டு சோக கீதத்தை வாசித்துக் கொண்டிருந்தாரோ? தெரியவில்லை. அதைப் பற்றி என்னிடம் அவர் ஏதும் சொன்னதும் இல்லை. அவர் புல்புல்தாராவை வாசிக்கும் போதெல்லாம் சோகமாகவே இருக்கும். ஞாயிறுகளில் அவரைச் சந்திக்கச் சென்று வருவேன். அவரின் அந்த வாசிப்பு எனது அந்த வயதில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அவர் அறையின் நேர் கீழே இருந்த வீட்டில் ஒரு குடும்பம் தங்கி இருந்தது. அந்தக் குடும்பத்தின் தொழில் ஐஸ் விற்பது. மலர்ந்த மல்லிகை போன்ற ஒரு முகம் எனக்கு மாலையில், விற்காமல் மீதமிருக்கும் ஐஸைக் கொண்டு வந்து நீட்டும். எனக்கு மட்டுமே நீட்டும். முக்காடிட்டு ஒற்றைக் கண்ணில் வழிந்தோடும் பாசத்தைக் காட்டும் அந்தக் கண்கள் இப்போதும் என் கனவுகளில் வந்து என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொள்வேன். பின்னர் தூக்கம் வராது. மனது தவியாய் தவிக்கும். அந்தக் கண்கள் இப்போது என்னவாக இருக்குமோ தெரியவில்லை.


கண்கள் என்றைக்கும் அழிவதில்லை. அதன் அழகும் குறைவதில்லை. கண்கள் சொல்லும் கவிதைகளும், அதன் பேச்சுகளையும் இதுவரை எழுதி எழுதியே களைத்துப் போன கவிதையாளர்களால் கூட கண்களின் பேச்சை எழுத முடியவில்லை. கண்களுக்கு மொழியே தேவையே இல்லை அல்லவா?

கருணை பொங்கி, ப்ரியமாய் வழிந்தோடிய அந்தக் கண்களின் அன்பில் நனைந்து, நனைந்து மூழ்கி அதிலேயே கரைந்து போக மனது தவிக்கிறது. 

2 comments:

நரசிம்மன் said...

கடந்த நான்கு நாட்களில் மட்டும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு முப்பது டி.எம்.சி இருக்கும் என்கிறார்கள். அணையின் மொத்த கொள்ளளவு இது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மட்டும் 11 டி.எம்.சி வெளியேறியிருக்கிறது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஏக்கர் நிலத்துக்கான ஒரு போக பாசன அளவின் நீர் இது. யாருக்கும் பைசா பலனளிக்காமல் வெளியேறியிருக்கிறது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பியிருக்கிறது. அது இப்படி அர்த்தமேயில்லாமல் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

இது பற்றியெல்லாம் யார் பேசுவது? யாரிடம் கேள்வி கேட்பது?அமைச்சரிடம் கேட்பதா? எம்.எல்.ஏக்கள் பதில் சொல்வார்களா? அல்லது அதிகாரிகள் வாய் திறப்பார்களா? எங்கே போனது நம் நீர் மேலாண்மை?

இன்னமும் ஐந்து நாட்களுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் மழை இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு காவிரியில் வரும் 1.90 லட்சம் கன-அடி நீரின் அளவு அதிகரிக்கும் போதும், பவானிசாகரில் திறந்துவிடப்படும் 70 ஆயிரம் அடி கன-அடி என்ற அளவும் அதிகரிக்கும் போதும் நிலைமை என்னவாகும் என்று பதற்றமாக இருக்கிறது. ஆனால் பத்து இருபது நாட்கள் கழிந்த பிறகு ஆற்றில் நிலைமை சீராகிவிடும். ஆனால் சற்று தள்ளி இருக்கும் பல ஊர்களிலும் அதன் பிறகும் இதே வறட்சிதான் நிலவும்.

ஒரு சாமானியனாக இந்தக் கேள்வியைத்தான் எழுப்பத் தோன்றுகிறது- மழை பெய்தாலே நம் ஊர் பெண்கள் வீட்டில் இருக்கும் வாளியெல்லாம் நிரப்பி வைத்துக் கொள்கிறார்கள். ஆற்றில் கரை கடந்து ஓடும் நீரைக் கொண்டு குளம் குட்டைகளையெல்லாம் நிரப்பாமல் ஏன் இன்னமும் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொருவரும் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏன் இது குறித்த எந்த சிந்தனையும் இல்லை? அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், அதிகாரிகளும் ஒரு கணம் கூடவா யோசித்திருக்க மாட்டார்கள். இவர்களின் மெளனத்தைப் பார்த்தால் அந்த விவசாயிகள் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. பராமரிப்பு செய்ய வேண்டிய காலத்தில் ஏய்த்து விட்டாகிவிட்டது. ஒதுக்கிய பணத்தையெல்லாம் வாயில் போட்டாகிவிட்டது. இந்த லட்சணத்தில் இன்றைக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பலனில்லாமல் ஆற்றில் பாயும் நீரானது செல்பி எடுத்துக் கொண்டாட வெறும் வேடிக்கைப் பொருளில்லை. சிவந்து பெருக்கெடுக்கும் அது அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தின் ரத்தக் கண்ணீர்.

Ramesh DGI said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.