குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, April 10, 2020

தென்னைமரமும், நானும்


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளே. சுவாரசியங்களும், ஆச்சரியங்களும், கோபங்களும், தாபங்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. காரணம் என்னவென்று பார்த்தால் அத்தனையும் மனிதர்களின் அறிவிலித்தனத்தால் என்பது தெரியவரும். மனிதர்களால் தான் பூமி மட்டுமல்ல பிரபஞ்சமே சிக்கலுக்குள் உள்ளாகிறது.

கொரானா தொற்று பரவி பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் அடங்கி இருப்பதாகத் தெரியவில்லை. அவரவருக்கு ஒவ்வொரு காரணங்கள். விளைவு நோய் பரவல். தானும் கெட்டு, பிறரையும் கெட வைப்பது தான் வாழ்க்கை என நினைக்கும் மக்கள் இருக்கையில் எத்தனை சொன்னாலும் கேட்கப்போவதில்லை.

வெளியில் செல்லாதீர்கள், கொரானா ஒட்டிக் கொள்கிறது என்று அரசாங்கம் என்னென்னவோ செய்து பார்க்கிறது. ஹாஸ்பிட்டலில் வசதி இல்லை, மருத்துவர்கள் போதுமான அளவில் இல்லை, செவிலியர்களும் இல்லை. மிகப் பெரிய அவலத்தினை மக்கள் சந்திக்க நேரிடும் என்பதற்காக மாநில அரசுகள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.

இது போதாது என்று மத்திய அரசு கைதட்டு, விளக்குப் பிடி என பிரச்சினையை மேலும் மேலும் பூதாகரமாக்குகின்றார்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வரக்கூடிய வரியை எல்லாம் வைத்துக் கொண்டு மத்திய அரசு போடும் ஆட்டம் சொல்லும்படி இல்லை,

கொரானா பரவிக் கொண்டிருக்கிறது. இந்திய மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாய் கிடக்கிறது. கோடீஸ்வரர்களெல்லாம் பிச்சைக்காரனாகின்றார்கள். பிச்சைக்காரர்கள் எல்லாம் பசியால் சாகப் போகின்றார்கள். மிடில் கிளாஸ் மக்களோ மன அழுத்தத்தின்  பிடியில் சிக்கி தினமும் செத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நோயின் பயங்கரம் வேறு. மத்திய அரசின் கையாலாகாத தனம் வேறு. இவற்றுக்கிடையில் சிக்கி இந்தியர்கள் சின்னாபின்னப்படுகிறார்கள்.

இது போதாது என்று மதப்பிரச்சாரம் வேறு. அவனால் தான் பரவியது. இவனால் தான் பரவியது என்ற குற்றச்சாட்டு வேறு.

வெளிநாட்டில் இருந்து தான் கொரானா இந்தியாவிற்குள் இறக்குமதி ஆனது அல்லவா? வானூர்திகளில் வந்த டிப்ளோமேட்ஸ்களின் வாரிசுகள், பணக்காரர்களின் பிள்ளைகள், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அவர்களின் உறவினர்கள் அனைவரும் இந்தியாவிற்குள் வந்து சேரும் வரை அமைதியாக இருந்து விட்டு, பின்னர் இண்டர்நேஷனல் பிளைட்டுகளுக்கு தடை போடுகின்றார்கள். இந்தியர்கள் கொரானாவால் பாதிக்கப்பட  முழுக்காரணமே ஆளும் மத்திய பாஜக அரசு என்கிறார்கள் பலரும். ஒவ்வொரு இண்டர்னேஷனல் பிளைட்கள் இறங்கும் இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தி இருந்தால் இத்தனை கஷ்டம் மக்களுக்கு வந்திருக்குமா? இந்த உத்தரவு போடுவது மத்திய அரசு அல்லவா? வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இல்லையென்று சொல்லவோ மறுக்கவோ காரணங்கள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் கையைத் தட்டு, விளக்குப் பிடி என வேண்டுகோள் விடுத்து, மக்களைப் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு என்கிறார்கள் பல அரசியல் பார்வையாளர்கள்.

பண மதிப்பிழப்பில் ஆரம்பித்து இது வரையிலும் மத்திய அரசு செய்து வரும் செயல்கள் எதுவும் இந்திய மக்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.

பாகிஸ்தானை விட்டு விட்டு, இப்போது முஸ்லிம் மக்களிடம் சென்றிருக்கின்றார்கள் பாஜகவினர் என இன, மொழி பேதம் பார்க்காத நடு நிலையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் மத்திய அரசோ, இன்னும் எத்தனை நாள் ஊரடங்கு என்று சொல்வதற்கு, டிவிக்களில் போட்டியில் வென்றவரை அறிவிக்கும் கவுண்டவுன் போல நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் ஒவ்வொருவரும் என்ன நடக்குமோ என பீதியில் கிடக்க, பிரதமரோ பத்திரிக்கையுடன் பேசுவதை தவிர்த்து வருகிறார். அவர் தன் மீதான இந்தியர்களின் அவ நம்பிக்கையை, நேரிடையாக மக்களுடன் பேசுவதைத் தவிர்த்து, பத்திரிக்கைகள் வாயிலாகப் பேச வேண்டும். இல்லையெனில், அவர் மீதான, வெறுப்பி பிம்பம் வளர்ந்து கொண்டே தான் போகும் என்கிறார்கள் அரசின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.

இந்தக் கொடுமை இன்னும் நான்காண்டுகள் தொடரும் என்பது இந்தியர்களின் மாபெரும் அவலம் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். இது தேவையற்ற கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கும் என பாஜகவினர் சிந்திக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்.

தர்மம் கொன்றாருக்கு தர்மமே கூற்றாகும். அதற்கான விலையை மக்களும் கொடுத்தே ஆக வேண்டும். நல்லவர்களைத் தேர்ந்தெடுக்காமல், மதம், மொழி, இனம், ஜாதி, சொந்தக்காரர்கள் என வகைப்படுத்தி தேர்ந்தெடுத்தார்கள் அல்லவா? போதாதற்கு ஓட்டுக்குக் காசு வேறு. கடமையில் இருந்து தவறியவர்கள் மக்கள். ஆகவே எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அனுபவிக்கிறோம் என்பதைத் தவிர, கொரானா பரவுவதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

இன்னும் மக்கள் மாறவில்லை என்பதை நொடிக்கொரு தரம் ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். திருந்தாத ஜென்மங்கள் என்றைக்கும் திருந்தப் போவதில்லை.

மதமோ, மொழியோ, கட்சியோ, இனமோ எதுவும் மக்களுக்கு நன்மை செய்வதில்லை என்பதை இனிமேலாவது எனது பிளாக்கைப் படித்து வரும் நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

அவ்வாறானவர்களிடமிருந்து உடனடியாக விலகி விடுங்கள். அவர்கள் கூட இருந்தே தானும் செத்து, தனக்காகப் பிறரையும் சாகடிப்பார்கள்.

இனி தென்னை மரத்துக்கு வந்து விடுவோம்.


தென்னை என்பது உண்மையில் கடவுள் தன்மை வாய்ந்தது. இறைத்தன்மை என்பது அன்பு என்று அர்த்தம் கொள்க. சமீபத்தில் மிகவும் ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அதற்கு நானே சாட்சி. ஆக இருந்த காரணத்தால் இப்பதிவு.

வீட்டினைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டிக் கொண்டிருந்தோம். வீட்டின் பின்னால் இரண்டு தென்னை மரங்களும், வீட்டின் முன்னால் இரண்டு தென்னை மரங்களும் வாசலில் பெரிய வேப்பமரமும் உள்ளது. வேப்பமரத்தில் மயில்கள், கிளிகள், சிட்டுக்குருவிகள், காக்கைகள், இன்னும் பெயர் தெரியாத பல வித பறவைகள் இருக்கும். 

தென்னைமரத்தில் மயில்கள் தங்கி இருக்கும். சுவருக்கு இடைஞ்சலாக இருப்பது போல ஒரு தென்னை மரம் இருந்ததால், வெட்டி விடலாமா என, அந்த மரத்தின் அடியில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அப்படி ஆகவில்லை. சுவர் கட்டி முடித்து விட்டோம்.

பிரச்சினை என்னவென்றால் அந்த தென்னை மரம் சுத்தமாக காய்க்கவில்லை. ஒரு குரும்பை கூட விடவில்லை. தென்னம்பாளைகள் வருகின்றன. ஆனால் காய்கள் இல்லாமல் பூக்களாக கொட்டின. மனைவி இதைக் கவனித்து என்னிடம் சொன்னாள். எனக்கோ ஆச்சரியம். என்ன காரணம் என பார்த்தால் ஒன்றுமில்லை. மரம் நன்றாகத்தான் இருக்கிறது. இது என்னடா சோதனை என நினைத்துக் கொண்டிருந்த போது, மனைவி சுவர் கட்டும் போது பேசிக் கொண்டிருந்த விஷயத்தை நினைவுபடுத்தினார்.

ஒருவேளை அது காரணமாக இருக்குமோ என எனக்குள் ஒரு சிந்தனையோட்டம். தென்னை மரத்திடம் பேசினேன். உன்னை வெட்டுவதாக இல்லை. கோபித்துக் கொள்ளாதே என நான்கைந்து நாட்களாக அதனுடன் பேசினேன். மனைவியும் அதனிடம் சென்று தடவிக் கொடுத்து, உன்னை எந்தக் காலத்திலும் வெட்ட மாட்டோம் என சொல்லி வருவாள்.

ஆச்சரியம், அடுத்து வெடித்த தென்னம்பாளையில் காய்கள் கொத்துக் கொத்தாய் பிடித்தன. மரம் கொள்ளாமல் காய்த்து தள்ளுகிறது இப்போது. இளநீரோ முன்பிருந்ததை விட சுவையாக இருக்கிறது.

அன்றிலிருந்து மரம், செடி கொடிகளைப் பார்க்கும் போது அதுவும் ஒரு உயிர் எனத் தோன்றுகிறது.

இதைத்தான் வள்ளலார் பெருமான், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுச் சொன்னாரோ?

அவருக்கு பயிரும் உயிர் தான் என்று தெரிந்ததோ?

அன்பு நண்பர்களே, அன்பு கொள்ளுங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் மீது. அதன் ஒவ்வொரு படைப்பின் மீதும். நம் அன்பு பெருக பெருக, பிரபஞ்சம் நம் மீது அன்பு கொள்ளும். அன்புக்கு இடைஞ்சலாக இருப்பது பற்று.

திருமூலர், எழுதிய திருமந்திரத்தில் இப்படித்தான் சொல்லி இருக்கிறார்.

ஆசை அறுமின்கள்,
ஆசை அறுமின்கள்,
ஆசை அறுமின்கள்,
ஈசனோ டாயினும்
ஆசை அறுமின்கள்.

பற்றாயிருப்பது அன்பு காட்டுவதை தடுக்கும் பெரும் தடை. பற்று அறுப்பது மட்டுமே பிற உயிர்கள் மீது அன்பு கொள்ள வைக்கும்.

பற்றே எல்லாப் பிரச்சினைக்களுக்கும் ஆரம்ப விதை. தான், தனது என்ற பற்றை அறுப்போம்.

அன்பை விதைப்போம்…  

Tuesday, April 7, 2020

கொரானாவைக் கொல்லுமா சித்தரத்தை?

அந்தக் காலத்தில் மளிகைக் கடைகளில் சித்தரத்தை வேர் ஒரு துண்டை வாங்கி வாயில் அடக்கிக் கொள்வார்கள். கல்லூரியில் படிக்கும் போது அம்மா, எனக்கு மாசிக்காய் என்ற ஒரு உருண்டையான வஸ்துக்கள் நான்கைந்து வாங்கித் தருவார்கள். பஸ்ஸில் ஏற்றி விடும் போது வாய்க்குள் ஒரு வஸ்துவை அடக்கிக் கொள்வேன்.

ஹாஸ்டல் சென்று சேரும் போது முற்றிலுமாக எச்சிலில் ஊறி, வயிற்றுக்குள் சென்று சேரும். வயிற்றுப் புண், வாய்ப்புண் எல்லாம் போயே போய் விடும்.

தாத்தா சித்தரத்தை வேர் வாங்கித் தருவார். வாய்க்குள் வைத்திருந்து துப்பி விடுவேன்.

கொரானா நுரையீரலைத் தாக்கி, மூச்சு விட சிரமப்படுத்தி மரணிக்க வைத்து விடுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

இதோ சித்தரத்தையின் மகத்துவம் என்னவென்று நெட்டில் வந்துள்ளதை கீழே தருகிறேன். படித்துப் பாருங்கள். சித்தரத்தைப் பொடி எனக்கு கிடைக்கவில்லை. உங்களுக்கு கிடைத்தால் விட்டு விடாதீர்கள்.



சித்தரத்தை (Alpinia officinarum) வேர் கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆஸ்துமா, சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு அரு மருந்து. இது கொரானாவை சரி செய்யுமா என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் சளிக்கும், நுரையீரலுக்கும் அது நல்லது செய்கிறது. 

நமது தேசத்திலிருந்து ஏற்றுமதியாகி, நமது நாட்டுக்கே திரும்பவும் மேலை மருந்துகளின் வழியே வரும் முக்கியமான மூலிகைகளில், ஒன்றுதான் சித்தரத்தை.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு. ( நன்றி - உயிர் ஆன்லைன் இணையதளம்)

இதுபற்றிய மேலதிக விபரங்களை ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் வியாபார நோக்கமின்றி ஆராய்ந்து சொன்னால் மக்களுக்கு நன்மை பயக்கும்.

புற்றீசல் எண்ணங்களை தடுப்பது எப்படி?

வெற்றியடைய சூட்சுமம் என்னவென்ற ரகசியத்தின் ஒரு துளியை எழுதி இருந்தேன். வெற்றி என்பது வாழ்க்கையின் முறையில் உள்ளது. அது பொருளாக இல்லை, உறவுகளாக இல்லை. வெற்றி மனத்தின் தன்மையில் இருக்கிறது.

புற்றீசலாய் மனதுக்குள்ளிருந்து வந்து கொண்டே இருக்கும் எண்ணங்களை வேடிக்கை பார்க்க வேண்டுமென எழுதி இருந்தேன். 

இது பற்றிய எனது ஓஷோ சொல்லியதை இங்கு பதிவிடுகிறேன். படித்துப் புரிந்து கொள்ளுங்கள். நன்றி ஓஷோ...


எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்துவது எப்படி?

எண்ணங்களை நிறுத்த முடியாது!

அது நிற்காது என்பதல்ல,ஆனால் அதை நிறுத்த முடியாது!

அது தானாகவே நிற்கின்ற ஒன்றாகும்.

இந்த வித்தியாசமானது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.இல்லையெனில் உனது மனதைத் துரத்திக்கொண்டு சென்று நீ பைத்தியமாகிவிட முடியும்.

எண்ண ஓட்டத்தை நிறுத்துவதால் மனம் அற்ற நிலை எழுவதில்லை.

எண்ணவோட்டம் இல்லாத போது,மனமற்ற நிலை இருக்கிறது.

அதை நிறுத்துவதற்கான அந்த முயற்சியே அதிக கவலையை உருவாக்கிவிடும்.

அது அதிக சச்சரவை உருவாக்கிவிடும்.அது உன்னை இரண்டாக பிளவு பட்டவனாக ஆக்கிவிடும்.

நீ உனக்குள் இடைவிடாத குழப்பத்தில் இருப்பாய்,இது உனக்கு உதவப்போவதில்லை.

மேலும் வலுக்கட்டாயமாக ஒருசில நொடிகள் அதை நிறுத்துவதில் நீ வெற்றி பெற்றாலும்கூட,அது ஒரு சாதனையே அல்ல.ஏனெனில் அந்த ஒரு சில நொடிகள் கிட்டத்தட்ட உயிரற்றவையாகவே இருக்கும்.

அவை உயிர்த்துடிப்புடன் இருக்காது.ஒருவித அசையாத தன்மையை நீ உணரலாம்.ஆனால் அமைதியை உணர முடியாது.ஏனெனில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அசையாத தன்மையானது அமைதி அல்ல.

அதற்கு அடியில் தன்னுணர்வு இழந்த நிலையில் ஆழத்தில் அடக்கி வைக்கப்பட்ட மனமானது வேலை செய்து கொண்டே இருக்கிறது.

ஆகவே,மனதை நிறுத்துவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது.ஆனால் மனம் என்பது நிற்கிறது.அது நிச்சியம்.அது தானாகவே நிற்கிறது.

மனதை ஆழ்ந்த மரியாதையோடு பார்.சண்டை போடுபவனாக இருக்காதே.

நன்றாக கவனி.

மனதின் மிகச்சிறிய வேறுபாடுகளை,அதன் திடீர் திருப்பங்களை,அதன் அழகான திருப்பங்களை,திடீரென்று அது தாவிக் குதிப்பதை கவனி.

மனமானது விளையாடுகின்ற விளையாட்டுகளை,அது நெசவு செய்கின்ற கனவுகளை,கற்பனைகளை,நினைவுகளைக் கவனி.

அது உருவாக்குகின்ற ஆயிரத்தொரு திரையிடல்களைக் கவனி...கவனி.

அங்கு நின்று கொண்டு,தனியாக தூரவிலகி,அதில் ஈடுபடாமல் மனதைக் கவனி.

அப்போது நீ மெல்ல மெல்ல அதை உணர ஆரம்பிப்பாய்.

உனது முழுக்கவனம் எந்த அளவுக்கு ஆழமானதாக ஆகிறதோ அந்த அளவுக்கு உனது விழிப்புணர்வு ஆழமானதாக ஆகிறது.

மேலும் அதில் இடைவெளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.ஒரு எண்ணம் போகிறது.ஆனால் அடுத்த எண்ணம் இன்னும் வரவில்லை.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

ஒரு மேகம் கடந்து சென்றுவிட்டது.அடுத்த மேகம் வந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியில் மனம் அற்ற நிலையின் சிறு காட்சியை நீ முதன்முறையாக காண்பாய்.

மனம் அற்ற நிலையின் ருசியை நீ தெரிந்து கொள்வாய்.

ஆரம்பத்தில் இவை வெறுமனே அபூர்வமான தருணங்களாக இருக்கும்.

இடைவெளிகள் சிலவாகவும் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே அதிக காலம் எடுத்துக் கொள்வதாகவும் இருக்கும்.

ஆனால் சமாதி நிலை என்றால் என்ன என்கிற ஒரு சிறிய காட்சியை உனக்கு கொடுக்கும்.

சிறிய குளம் போன்ற அமைதி வரும்,அதன் பின்னர் அது மறைந்து விடும்.

ஆனால் இப்போது நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை நீ தெரிந்து கொள்வாய்.

எனவே மீண்டும் கவனிக்க ஆரம்பி.

--ஓஷோ--


குறிப்பொன்று நினைவுக்காக:

நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு பதிவினைப் படிக்கும் போது பாரதியாரையும், ஓஷோவையும் ஒப்பிட்டு எழுதி இருந்தார்கள். பாரதியார் ஜாதி மதம் இல்லையென்று பாடியவர் என்கிறார். பாரதியாரின் கவிதை புத்தகத்தை படித்த போது அவர் எந்தளவுக்கு ஜாதிப் பிடிப்பில் சிக்கி இருந்து வெளி வந்தார் என்று அறிய நேர்ந்தது.

யாரோ ஒரு மஹானுபாவன் ஓஷோவை மிகக்கடுமையாக தாக்கி எழுதி இருந்தார். தனக்கென கூட்டம் கூட்டினார் என்றும், கடைசி வரை பணக்காரராகவே வாழ்ந்தான் என்றும் சாடி இருந்தார். பாரதி ஏழையாகவே இருந்தார், ஏழையாகவே வாழ்ந்தார் என்று பச்சாதாபம் காட்டி எழுதி அவருக்காக அந்த பிரகஸ்பதி புலம்பி இருந்தார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் தேவை என இயற்கை மனிதர்களை வெளிப்படுத்தும். அந்த வகையில் உலகையே பீடித்திருக்கும் மன நோயான மதத்தையும், அதன் கட்டமைப்பையும், அதன் ஆச்சார அனுஷ்டாங்களையும் தோலுறித்து தொங்கவிட்டவர் ஓஷோ. தாலியம் என்ற விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட இந்த மாபெரும் மனித மிருகங்கள் உலாவும் கூட்டத்திடம் உண்மை மட்டுமே பேசியவர். இந்த கொலைக்கு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் காரணமாய் இருந்தார் என்று எழுதப்பட்டிருக்கிறது.

“ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்ற கவிதைக்காக போற்றப்பட்ட பாரதியை விட, ஓஷோ எவருடன் ஒப்பிடவே முடியாத மனிதர். பாரதி ஓஷோவின் ஒரு கருத்துக்குச் சமமானவர்.

ஒப்பீடுகள் பற்றிப் பேசுபவர்களின் அறிவு என்னவென்று காட்டி விடுகிறது.




Sunday, April 5, 2020

வெற்றியடைய சூட்சும ரகசியம்


வெற்றி என்பதன் விளக்கம் ’பணக்காரனாக இருப்பது’ என்று நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். பணக்காரர்களின் நிலை இன்றைக்கு என்னவென்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்னும் மூன்று மாதங்கள் கொரானாவால் வீட்டில் முடங்கினால் ஒவ்வொரு பணக்காரனும் பிச்சைக்காரனாகி விடுவான். கீழ்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமும் ஏற்கனவே பிச்சைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே வெற்றி என்பது மாயை என்று புரிந்து கொள்ளுங்கள்.

வாழும் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்கிறோமா என்பதைத் தான் என்னைப் பொறுத்தவரை வெற்றி எனக் கருதுவேன். நாம் ஒவ்வொருவரும் வாழும் சூழல்கள் விதவிதமானவை. சூழலுக்கு ஏற்ற பழக்க வழக்கங்கள், உணவுகள், மொழிகள், உடைகள் என ஒவ்வொருவரும் தனிப்பட்ட சூழலியல்வாதிகள்.

அமெரிக்கனைப் போல, இங்கிலாந்துக்காரனைப் போல, ஜப்பானியனைப் போலவெல்லாம் தமிழ்நாட்டில் வாழ முடியாது. பூமியின் தட்பவெட்பத்துக்கு ஏற்ப உருவான சூழ்நிலை, உருவாக்கி இருக்கும் சமூகக் கட்டமைப்புகளில் நம் வாழ்க்கையும் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதினை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இமயமலை, நேபாளம் ஆகிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைச் சூழல் அவர்கள் தினமும் உணவு தேடுவதாகத்தான் இருக்கின்றன. உணவைத் தேடுவது, அதற்காக உழைப்பது தான் அவர்களின் முதல் வேலை. பிறகு உண்பது, உல்லாசம், உறக்கம், ஆட்டம், பாட்டமாய் வாழ்க்கை சுகத்தில் கழிகின்றது. பல யுடியூப் வீடியோக்கள் காணக் கிடைக்கின்றன. அவைகளைத் தேடிப் பிடித்துப் பாருங்கள். அங்கு வசிப்பவர்கள் நோய் நொடி இன்றி சர்வசாதாரணமாக 100 வயதுக்கும் மேல் வாழ்கிறார்கள்.

இங்கோ, பசிக்காக படிப்பு, வேலை என ஒவ்வொருவரும் வாழும் வாழ்க்கையின் போக்கு படு கேவலமானதாக இருக்கிறது. படித்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்தால் காசு கிடைக்கும். அந்தப் பணத்தினால் சுகபோக வாழ்க்கை வாழலாம். ஆனால் வாழ்க்கை? இன்பம்? குழந்தையாக இருக்கும் போதே, படி படி படி. படித்து முடித்ததும் பணி, பணி, பணி. பணி கிடைத்ததும் வேலை, வேலை, வேலை. கிடைக்கும் பணத்தை அனுபவிக்க கூட முடியாமல் ஜக்கி, ரவிசங்கர், நித்தி ஆகிய அட்டைகளிடம் கொண்டு போய் கொட்டி விட்டு, தேடிக்கொண்டிருப்போம் மன நிம்மதியை, வாழ்க்கையை. எல்லாம் கை விட்டுப் போயிருக்கும். வயதும் போயிருக்கும். நல்ல சாப்பாட்டினைக் கூட சாப்பிட முடியாது. சாப்பிட்டால் உயிர் போய் விடும் என்பார்கள் மருத்துவர்கள்.

காசு சம்பாதிப்பதுதான் வாழ்க்கை என்று ஒவ்வொரு மனிதனும் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறான். இதிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதானதல்ல. மனம் எனும் அரக்கனிடமிருந்து விலகி, உண்மையை உணர்ந்து கொள்வது என்பது தற்போதைய சூழலில் முடியாத காரியம்.

இருக்கும் சூழலில் வெற்றியாக வாழ்க்கையை எளிதாக வாழ ஒரு சூத்திரம் ஒன்று உள்ளது.

அடியேனுக்கு சிறிய வயதில் இருந்து சாமியார்கள், வயதானவர்களுடன் தான் நட்பு. என் வயது நட்புக்காரர்கள் எனக்கு இல்லை. என்னை விட அனுபவசாலிகளுடன் பேசுவதையும், நட்புக் கொள்வதையும் விரும்புவன். அந்த வகையில் எல்லா மதங்களிலும், யோக, ஆன்மீக தொடர்பான விஷயங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருக்கிறேன்.

தியானம், யோகம், யோகா, மூச்சுப்பயிற்சி எல்லாம் செய்து பார்த்தேன். எதுவும் எனக்கான தேடலை, நான் தேடிய வழியைக் காட்டக்கூட இல்லை. முதலில் என் மனத்தை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கண்ணை மூடினால் அதுபாட்டுக்கு எங்கெங்கோ அலைகிறது.

சுழித்தோடும் ஆற்றை நினைக்கிறது. பெருகி வழிந்தோடும் அருவியைப் பார்க்கிறது. அமெரிக்காவின் நயாகராவிற்குச் செல்கிறது. உருளைக் கிழங்கு மசாலாவுக்குச் செல்கிறது. ஆலப்புழா செல்கிறது. நயன்தாராவை நினைக்கிறது. ரூடோஸ் நாய்க்குட்டி சாப்பிட்டாச்சா என நினைக்கிறது. நிமிட நேரத்தில் லட்சக்கணக்கான மைல்கள் செல்கின்றது. எண்ணங்கள் புற்றீசல் போல பெருகிக் கொண்டே இருக்கின்றன. எப்படிக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி, சூட்சுமத்தில் மனதை நிலைக்க வைத்து தியானிப்பது?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை இப்படித்தான் மனது அலைந்து கொண்டிருந்தது வானத்தில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப அலையும் மேகங்கள் போல.

மனதை அடக்க வேண்டும். இல்லையெனில் மனது எனும் குப்பைத் தொட்டிக்குள் அடங்கிப் போகனும். இதைத்தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை தான் நம் ஒவ்வொருவருக்கும். எனக்கும் அப்படித்தா இருந்தது.

தேடிக் கொண்டிருந்தேன் எளிய வழியை. அது கிடைத்தே விட்டது.

ஒரு ஜப்பானியன் போல அமைதியாக, எளிமையாக, வலிமையாக, அன்பாக வாழ துவங்கினேன். வெற்றி பெறுவது எங்கனம்? வாழ்க்கையின் போக்கிற்குத் தகுந்தவாறு எப்படி தொடர்வது என்று ஓரளவிற்குப் புரிந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.

2008ல் இருந்து பிளாக் எழுதுகிறேன். அன்றையிலிருந்து இப்போது வரையிலும் எழுதியிருக்கும் எழுத்துக்கள் சொல்லும் நானெப்படி மாறி இருக்கிறேன் என்று. அவ்வப்போது படித்துப் பார்ப்பேன். வேடிக்கையாக இருக்கும். இருப்பினும் அவைகள் நான் நடந்து வந்த வாழ்க்கைப் பாதை எனப் புரிந்து கொள்வேன்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். இந்த வாக்கியம் உலகப் புகழ் பெற்றது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எதுவும் மாறவே இல்லை என்பதுதான்.

நான் கண்டடைந்த ‘அந்த எளிய’ வழியின் ஒரு பயிற்சியை நான் பழகத் துவங்கினேன். அது நான் தேடிய பாதைக்குத் தள்ளிக் கொண்டு சென்றது.

ஜப்பானியரின் வாழ்க்கையில் ‘டீ அருந்துவது’ என்பது ஒரு சமுதாய வழக்கம். அமைதியாக காலை மடக்கி அமர்ந்து அரைத்த பச்சைத் தேயிலைத் தூளில் சுடுநீர் விட்டு வடிகட்டிய தேநீரை அவர்கள் மகத்தான ஒரு மவுனத்தின் மூலம் அருந்துவார்கள்.

வெள்ளையும் பழுப்பும் நிறைந்திருக்கும் அமைதியான வீட்டு அறை ஒன்றில் அமைதியான, ஆனந்தமருளும் மவுனத்தின் பிடியில் அமர்ந்து கொண்டு தேநீர் அருந்துவதை தவமாகச் செய்வார்கள்.

அதுதான் ஆரம்பத்துவக்கம்.

மவுனம், அமைதி, புன் சிரிப்பு முதலில் இதை பழகிக் கொள்ளுங்கள்.

என் குரு நாதர் வெள்ளிங்கிரி சுவாமியின் வாக்கியம், ”பேச்சைக் குறைத்து மூச்சைக் கவனி”. இது ஏதோ ஒரு சாதாரண வாக்கியம் என்று நினைத்து விடாதீர்கள். பேச்சைக் குறைத்து விட்டு, உயிர் நாதமெனும் மூச்சைக் கவனி என்கிறார். கவனி என்பதுதான் எல்லாவற்றுக்குமான ஆரம்பப் புள்ளி.

தொடர்ந்து படியுங்கள்.

ஜப்பானின் புகழ் பெற்ற ஜென் தத்துவங்களைப் படித்திருப்பீர்கள். ஜென் என்பதைப் பற்றிய புரிதல்கள் பலப்பல. ஜென் தத்துவங்களின் ஒரே நிலை தன்னை அறிதல். தன்னை அறிதல் என்பது சூனியத்தில் தன்னைக் கரைப்பது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவுடனும் தன்னையும் இணைத்துக் கொள்வது. அவ்வாறு இணைத்துக் கொண்டவர்கள் தொட்டால் நோய் நீங்கும். பழுதானவற்றை நீக்கிப் பழையபடி உருவாக்குவார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஒவ்வொரு அணுவும் இயங்கும். அவ்வாறானவர்கள் தான் புனிதர்கள் என்று அழைக்கிறோம்.

சரி, எங்கெங்கோ சென்று விட்டேன்.

ஒரு சிறிய பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள். எல்லாமும் தெளிவாகி விடும்.

முன்பே பலரும் சொல்லி இருப்பதுதான் இது.

படிக்கின்றீர்கள் என்றால் நீங்கள் படிப்பதாக நினையுங்கள். சாப்பிடும் போது சாப்பிடுவதாக நினையுங்கள். எந்த வேலை செய்தாலும் வேலை செய்கிறேன் என நினையுங்கள்.

மனதினை இரண்டாகப் பிரியுங்கள். ஒரு மனதை வெளியில் கொண்டு வந்து நீங்கள் செய்வதை நீங்களே வேடிக்கைப் பாருங்கள். புரிகிறதா? நீங்கள் செய்வதை நீங்கள் வேடிக்கைப் பாருங்கள்.

ஆரம்பத்தில் சுவாரசியமாக இருக்கும். போகப்போக பழகி விடும். பின்னர் இரண்டு மனதும் ஒன்றாகும் போது நடக்கும் மாயா ஜாலத்தை அப்போது உணர்வீர்கள்.

அந்த மனதும் இல்லாது போக வேண்டுமெனில் அதற்கும் ஒரு பயிற்சி இருக்கு. அது இப்போது வேண்டாம். ஏனென்றால் நாமெல்லாம் லெளகீக வாழ்க்கையில் இருக்கிறோம். அது நமக்குச் சரிப்பட்டு வராது.

இதை வெற்றியின் முதல்படி என அடித்துச் சொல்கிறேன்.

நிதானம், நேர்மை, ஒழுக்கம், அமைதி, பேரமைதியுள்ளம் ஆகியவை உங்களுக்கு வெற்றிக் கனியை பறித்து தரும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

உங்களுக்கும் தானே…..

நம்பிக்கையே வாழ்க்கை….!


Saturday, April 4, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)


மறுநாள் நீதிபதி சங்கர் கோர்ட்டுக்கு வந்து அமர்ந்தார். ஏகப்பட்ட வக்கீல்கள் முகக் கவசத்துடன் அக்மார்க் குரங்கு போலவே உட்கார்ந்திருந்தார்கள். என்னே ஒரு காட்சி? மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும். எல்லோரும் குரங்குகள் போலவே இருக்கின்றார்கள். மனதுக்குள் சிரித்துக் கொண்டார். வக்கீல் அமித் இருக்கானா என்று பார்த்தார். ஆளைக் காணவில்லை. எங்கே போனானா அந்தக் கருமாந்திரம் புடிச்சவன், என்னை மாற்றப்போகிறானாமே, பார்ப்போம் இவன் என்ன கிழிக்கிறான்னு என மனதுக்குள் கருவிக் கொண்டார். ஒரு நீதிபதியையே மிரட்டுகிறானே அவன். அவனுக்கு ஒரு கொரானா பார்சல் செய்து விட வேண்டியதுதான்.

ஏதாவது எக்குத்தப்பாக இனி பேசினான் என்றால், கோர்ட்டை அவமதித்தான் எனச் சொல்லி கொரானா வார்டில் சுத்தம் செய்யப் போட்டு விடுகிறேன். அப்போதான் அவன் அடங்குவான் என மனதுக்குள் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

அன்றைக்குப் பார்த்து அமித்துக்கு காலையில் தும்மல் வந்து விட்டது. விடாமல் தும்மலாக போட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கோர்ட்டுக்கு வந்து, ஏற்கனவே நீதிபதியையே மிரட்டி இருப்பதால், அந்த ஆளு கொரானா டெஸ்ட் செய்த அறிக்கை வந்த பிறகு, கோர்ட்டுக்கு வா எனச் சொல்லி விட்டால், எந்த ஊரு ஆஸ்பத்திரியோ, எந்த வார்டோ? அதுவும் இது தமிழ்நாடு. இவனுக கையில் மாட்டினால் வச்சு செஞ்சுருவான்களே என்ற பயத்தில் தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார்.

இங்கே கோர்ட்டில் ஒரு புதிய வக்கீல் எட்டப்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

மனுவைப் படித்த நீதிபதி சங்கருக்கு தலையே சுற்றியது. என்ன எழவு மனுடா இது? என்று கோபத்தில் கொந்தளித்து வக்கீல் எட்டப்பனைப் பார்த்தார். வக்கீல் எட்டப்பன் கோர்ட்டில் நிற்கவில்லை. குனிந்தபடியே கை இரண்டையும் கூப்பியபடி வைத்துக் கொண்டு, டைனோசார் தலையை நீட்டுவது போல நீட்டியபடி நீதிபதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

”எட்டப்பன், நிமிர்ந்து நில்லுங்கள்” என்றார்.

”என்னால் முடியாது கனம் நீதிபதி அவர்களே, என் உடல் வாகுவே அதுதான். அது மட்டும் காரணம் அல்ல. நான் பிறரின் காலை வாரி விடுவதில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்தவன். ஆகவே குனிந்து கொண்டிருந்தால் தான் காலை வாரி விட முடியும். நான் பிறந்ததில் இருந்தே இப்படி இருப்பதால், என் உடல் வளைந்து போய் விட்டது. ஆகவே என்னால் நேராக நிமிர்ந்து நிற்க முடியாது ஆனர் அவர்களே…”

“ஓ… உங்கள் வழக்கமே அதுதானா? கொரானா வழக்கில் உங்களையும் இணைத்துக் கொள்ள மனுக் கொடுத்திருக்கின்றீர்களே? வழக்குப் போடச் சொன்னவர்கள் பெயர் தவறாக இருக்கிறதே, புரியும்படிச் சொல்கின்றீர்களா?”

கோர்ட்டில் டைப் செய்யும் பெண்மணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
“கனம் நீதிபதி அவர்களே, எனது கிளையண்டுகள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அமைப்பின் பெயர் கள்ளக்காதலர் சங்கம். முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அரசிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது” என்றார் எட்டப்பன் வக்கீல்.

எல்லோரும் எட்டப்பனைப் பார்த்தனர். டிவி கேமராக்கள் அனைத்தும் எட்டப்பனை ஜூம் செய்தன. டிவி பார்த்துக் கொண்டிருந்த மக்களில் 90 சதவீதம் பேர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தனர்.

(** இங்கு ஒரு விஷயத்தை உற்றுக் கவனித்தீர்களா வாசகர்களே. நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள் எல்லோரும் கள்ளக்காதல் சங்கத்தின் ரகசிய உறுப்பினர்கள். அவர்களின் வக்கீல் எட்டப்பனோ நிமிர்ந்து நிற்க முடியாதவர். கோவை தங்கவேல் தர்மம் தர்மம் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பார் அல்லவா? அவர் இந்த நாவலின் இந்த டிவிஸ்டை உற்று நோக்க வேண்டும். தர்மம் இல்லாத வக்கீல் கூனிப்போய் இருப்பதைக் கவனிக்க வேண்டும். ஆகவே அடியேனும் தர்மத்தைதான் இங்கு போதிக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இராமாயணத்தில் ஒரு கூனி, இந்த நாவலில் ஒரு எட்டப்பன். சரியா மிஸ்டர் கோவை தங்கவேல் அவர்களே. **)

சரி இனி வழக்குக்கு வந்து விடுவோம்.

நீதிபதி சங்கருக்கு ஏண்டா, இந்த வழக்கை விசாரணை செய்ய எடுத்தோம் எனத் தோன்றியது. ஆனாலும் கட்டழகு டைப்பிஸ்ட் கவிதாவைப் பார்த்தார். கவிதாவின் கண்கள் சங்கரைப் பார்க்க, சங்கரின் கண்ணுக்குள் மின்னல் அடித்தது. விசாரியுங்கள் என்று கண்ணாலே அம்பு விட, அந்த அம்பு நீதிபதி சங்கரின்  விழிகளுக்குப் பாய்ந்து நின்றது.

“கனம் நீதிபதி அவர்களே, இந்தக் கொரானா மனித உரிமைகளை மீறுகின்றது. மனிதர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் உரிமை தாம் விரும்புவதைச் செய்வது. எனது கிளையண்டுகள், அவரவர் கள்ளக்காதலிகளையும், காதலர்களையும் சந்திக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளி வர இயலாமல், தங்கள் கள்ளகாதலை வளர்க்க முடியாமல், எங்கே தங்கள் காதலின் புனிதச்செடி பட்டுப்போகுமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கொரானாஒ எல்லோரையும் வீட்டுக்குள் இருக்க வைத்து விட்டது. இதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகி உள்ளது தெரியுமா உங்களுக்கு?”

நீதிபதி சங்கருக்கு கூன் வக்கீல் எட்டப்பனின் வாதம் சுவாரசியமாக இருந்ததால் அவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார். டைப்பிஸ்ட் கவிதாவை ஒரு கண்ணால் லுக் விட்டு விட்டு, எட்டப்பனை நோக்கினார்.

எதேச்சையாக டிவியைப் பார்த்த பூஜா ஹெக்டேவுக்கு இந்த வழக்கின் லைவ் கன்னில் பட, டிவியில் அர்னாப் கோஸ்வாமி இந்தியாவே இந்த வழக்கை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்று லைவ் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து கேமரா நீதிபதி சங்கரைக் காட்டியது. அவரைப் பார்த்தவுடன் பூஜா ஹெக்டேவுக்கு பிடித்து விட்டது. நீதிபதி செல்வம் விரும்பிய பூஜா ஹெக்டேவுக்கே நீதிபதியைப் பிடித்துப் போன விஷயம் தெரியாமல், கோர்ட்டில் கூனன் வக்கீல் எட்டப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

(வாசகர்களே, உங்களின் பார்வை பூஜாவின் முகத்தில் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்)

இடைவேளைக்குப் பிறகு தொடரும்.... 

விட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்


பிரதமர் டிவியில் பேசுகிறார் என்றாலே இந்தியாவே பதறுகிறது. என்றைக்கு டிமானிட்டிஷேசன் பற்றி அறிவித்தாரோ அன்றிலிருந்து இந்திய மக்கள் பிரதமரின் டிவி பேட்டி என்றாலே அலறுகின்றார்கள். ஒரு செயல் மக்கள் மனதில் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்திருக்கிறதோ அந்தளவு, அந்தச் செயலைச் செய்ய காரணமாய் இருந்தவர் மீது அன்பின்றி போகும் என்பது நிதர்சன உண்மை.

ஆகவே பிரதமர் பேட்டி என்றால் மக்கள் விரோத அறிவிப்பு என்ற மன நிலையில் இந்திய மக்கள் இருப்பது காலத்தின் கோலம் என்று தான் சொல்ல வேண்டும். இனி அவர் என்ன தான் நல்ல விஷயமாகச் சொன்னாலும், அவர் அதை அறிவிப்பதற்கு முன்பு மக்கள் மனதில் திடுக் என ஒரு பதட்டம் உண்டாவது இயல்பு. இது இப்போதைக்கு மாறப்போவதில்லை,

உலக மக்கள் கொரானா பாதிப்பிலிருந்து வெளிவர நாமெல்லாம் சேர்ந்து விளக்கேற்றி எல்லாம் வல்ல இறை சக்தியிடம் பிரார்த்தனை செய்வோம். மதம், இனம், மொழி, கலாச்சாரம் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டிய கட்டம் இதுவல்ல. நாத்திகர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கட்டும். ஆத்திகர்கள் வழக்கம் போல பிரார்த்தனை செய்யட்டுமே.

பிரதமரைப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற காரணமெல்லாம் இந்த இடத்தில் தேவையில்லை. நம்மை வாழ வைத்த இந்தியாவின் பிரதமர் அவர். ஆகவே அவரின் வேண்டுகோளை இந்தியாவின் குடிமகன் என்ற வகையில் நிறைவேற்றுவோம்.

சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கன் என்கிற உலக விதிக்குள் வந்து விடுவோம்.

கோடி கோடியாய் பணம், குவியல் குவியலாய் பொன்னும், வைரமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அறுசுவை உணவு. இவைகளை ஒரு மாதம் பட்டினியாய் கிடந்தவனிடம் காட்டினால் அவன் எதை முதலில் எடுப்பான்? உங்களுக்குத் தெரியும் தானே…

ஆகவே சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கன். வயிறு காய்ந்தால் காதல் வருமா? மமதை வருமா? ஆணவம் வருமா? டிக்டாக்கில் குண்டி ஆட்ட முடியுமா? கால்சட்டை ஓட்டை தெரியும்படி வீடியோ போட முடியுமா? ஒன்றும் வராது அல்லவா? ஆகவே தான் பசி என்னும் தீரா நோயை கடவுள் ஒவ்வொரு உயிருக்குள்ளும் வைத்தான்.

இன்றைக்கு விட்மின்சி (விட்டமின் சி ரசம்) ரசம் பற்றிப் பார்க்கலாம். இந்த ரசத்தின் காப்பிரைட் என்னிடம் உள்ளது. எவராவது சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்தால், என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் எழுத மாட்டேன். நானென்ன அடிக்கடி கைகழுவும் உலகப் பணக்கார ஏழை எழுத்தாளரா என்ன?

இனி விட்மின்சி ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரசம் தக்காளியை வைத்து எலும்பு ரசத்தின் சுவைக்கு போட்டி போடும் வகையில் செய்யப்படும் மசாலா ரசம். விட்டமின் சி அதிகம் உள்ள ரசம். உடல் இளைக்கவும் பயன்படுத்தலாம்.

நான்கு தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

இரண்டு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி, இரண்டையும் ஒரு சட்டியில் சேர்த்து, அதனுடன் ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

மூன்று டீஸ்பூன் மல்லித்தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் சோம்புத்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள் நான்கையும் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

ஐந்து பூண்டு பற்களை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம் வெந்தவுடன் நீரை வடித்து விட்டு தக்காளியையும், வெங்காயத்தையும் மசித்து, பிறகு வடித்த நீரை விடவும். அதனுடன் கரைத்து வைத்த மசாலா கரைசல், தட்டி வைத்த பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வரும்வரை கொதிக்க விடவும். மறந்து விடாதீர் இரண்டு கொதி. மீறினால் ரசம் கடுத்துப் போய் விடும்.

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெந்தயம் அரை டீஸ்பூன் சேர்த்து சிவக்க வைக்கவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடல்பாசி, பிரிஞ்சி இலை இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதிக்க வைத்த ரசத்தை இதனுடன் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி விடவும்.

சூடான சாதத்தில் இந்த ரசத்தைச் சேர்த்து பிசைந்து, தொட்டுக்கொள்ள வாழைக்காய் வறுவல் சேர்த்துக் கொண்டால் ‘டிவைன்’.

இந்த ரசத்தில் தக்காளி அதிகம் சேர்ப்பதால் காரம் இரண்டு டீஸ்பூன் அவசியம். காரமும் புளிப்பும் சரி விகிதத்தில் சேர்ந்தால் தான் ரசம் சுவையாக இருக்கும். இப்படி ஒரு ரசத்தை எவரும் செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தஞ்சாவூர் பக்கம், ஆட்டு எலும்புடன் முருங்கைக்காய், கத்தரி, உருளைக்கிழங்கு சேர்த்து ரசம் வைப்பார்கள். அதன் சுவைக்கு ஈடாக எந்த ஒரு ரசத்தையும் ஒப்பீடு செய்ய முடியாது. கரண்டி கரண்டியாக வாங்கிக் குடிப்பார்கள். அதே அளவு சுவையுடன் இந்த ரசமும் இருக்கும். ஆனால் இது சைவ ரசம் என்பது ஸ்பெஷல்.

வாரம் ஒரு தடவை வீட்டில் மனையாள் செய்வார். பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்பளம், இல்லையென்றால் வாழைக்காய் வறுவல் இதற்கு நல்ல காம்பினேஷன். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.

Thursday, April 2, 2020

குருவைக் கண்டடைதல் மானிடக் கடைமை


உலகின் அத்தனை இன்பங்களும் கொட்டிக் கிடக்கும் அமெரிக்கா ஏன் இப்போது இத்தனை தடுமாற்றத்தில் தள்ளாடுகிறது எனத் தெரியுமா? உலகம் முழுவதையும் டாலரில் வர்த்தகம் செய்ய வைத்து, தன் நாட்டை வளமையின் உச்சிக்கு உயர்த்திய அமெரிக்காவின் பிம்பத்தை உடைத்தெரிந்த கொரானா என்ற கிருமி ஏதோ இயற்கையின் சீற்றத்தால் விளைந்ததா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இது கர்ம வினைப்பயன். உலகத்தாரின் அத்தனை பேரின் நிம்மதியையும் குலைத்த பலனை அமெரிக்கா அனுபவிக்கிறது. அமெரிக்கா இனி தள்ளாட ஆரம்பிக்கும் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அமெரிக்க அதிபராக டிரம்ப் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? வியாபாரிகளுக்கு நாட்டை ஆளத் தெரியாது. அவர்கள் வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டி இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. ஆட்சி என்பது வேறு. அமெரிக்கா என்பது பிற நாட்டினருக்கு கனவு உலகம். அமெரிக்க மக்களின் மனம் வாழ்க்கை ஒரு பிசினஸ் என்று நம்பத் தொடங்கியதன் விளைவுதான் இன்றைய நிலைக்கு காரணமாய் இருக்கும் என நம்புகிறேன். ஒரே நாளில் 1000 பேர் மரணம் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை 5000 ஆக இருக்கலாம் என நினைக்கிறேன். அது காலத்தின் விதி. செயல்பலன் அமெரிக்காவிற்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறது. அதன் முதல் விதை ஒரு பிசினஸ்மேன் அதிபராக வந்தது.

புரியும்படிச் சொல்கிறேன். விதி தனக்கான நிகழ்வுகளை எப்படி உருவாக்கும் என்பதை உங்களுக்குத் தெரிந்த புராணத்தைக் கொண்டு விளக்குகிறேன்.

மகாபாரதத்தில் காந்தார நாட்டின் இளவரசி காந்தாரி. காந்தாரியின் சகோதரன் சகுனி. பீஷ்மர், இளவரசர் திருதராஷ்டிரனுக்கு காந்தார மன்னர் தன் மகளை திருமணம் செய்து தர சம்மதிக்கவில்லை எனில், எடுத்துக் கொள்ள தகுதி உண்டு என அச்சமேற்படுத்துவார். காந்தார மன்னர் தன் மகன் சகுனி அடுத்த மன்னனாக வர வேண்டுமென்பதற்காக, ஹஸ்தினாபுரத்தை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆகையால் தன் மகளை இரு கண்களும் இழந்த திருதராஷ்டிரனுக்கு கன்னிகாதானம் செய்து வைக்க சம்மதிக்கிறார். சகுனிக்கு இந்த விஷயம் தெரியவர, ஹஸ்தினாபுரத்தை அடியோடு அழிக்க முடிவெடுக்கிறான். தொடர் நிகழ்வு உங்களுக்குத் தெரியும். சகுனியால் விஷமேற்றப்பட்ட துரியோதனன் முற்றிலுமாக அழிக்கப்பட்டான். அதர்மத்தின் பக்கம் நின்றவர்களை அழிக்க விதி செய்த சித்து விளையாட்டுதான் மஹாபாரதம். விதி தன்னை நிலை நிறுத்த, அதற்கான ஆட்களை சிக்க வைக்க பெரும் சதிராட்டங்களை நிறைவேற்றும். விதியை மதியால் வெல்ல முடியாது நண்பர்களே. பகவான் கிருஷ்ணரும் விதியின் முன்னாலே தோற்று, ஒரு வேடனின் அம்பாலே மாண்டார், விதியின் முன்னாலே கடவுளால் கூட வெற்றி அடைய முடியவில்லை அல்லவா?

ஆனால் விதியை ஒருவரால் வெல்ல முடியும். அது யார் தெரியுமா? குரு….!

குருவானவர்கள் (கோவில் குருக்களை மறந்து விடுங்கள். அவர்கள் குருவின் வேடத்தில் இருக்கும் வியாபாரிகள்) இறைவனுடன் ஒன்றி இருப்பார்கள். அவர்கள் தன்னையே நம்பி இருக்கும் சீடர்களுக்கு விதியால் வேகமாய் வீசப்படும் கத்தியைத் தடுக்கும் கேடயமாய் இருப்பார்கள். நல்ல குரு, சீடன் அமைவதும் குருவின் விருப்பத்தைப் பொறுத்தது. குருவானவர் தன் சீடனுக்குப் பல்வேறு பரிட்சைகள் வைப்பார். சீடன் தன் நிலை மாறுகிறானா என்று பார்ப்பார். ஏனென்றால் நாளை அந்தச் சீடன் இன்னொருவரின் குருவாவான். புடம் போட்ட தங்கம் தான் ஜொலிக்கும்.

ஒரு சூஃபிக் கதை உங்களுக்காக. படித்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு படிப்பறிவில்லாத நாட்டுப்புறத்தான் ஒரு சூஃபிக் குருவை வைத்து என்ன செய்தான் என்பதைத் தொடர்ந்து படியுங்கள்.
அபுல்ஹசன் என்ற சூஃபி ஞானியை படிப்பறிவில்லாத ஒரு நாட்டுப்புறத்தான் சந்தித்து, “என்னுடைய கழுதை காணாமல் போய் விட்டது, அதை நீங்கள் தான் திருடினீர்கள் என எனக்கு நன்கு தெரியும். ஆகவே எனக்கு எல்லாமுமாக இருந்து என் வாழ்க்கை நடத்த உபயோகமாய் இருக்கும் அந்தக் கழுதையை உடனடியாக என்னிடம் திருப்பித் தாருங்கள். இல்லையென்றால் ஊரைக் கூட்டி, நீங்கள் என் கழுதையைத் திருடி விட்டதாகச் சொல்லி விடுவேன்” என்று முறையிடுகிறான்.

அதைக் கேட்ட அபுல்ஹசன், ”என்ன சொல்கிறாய்? நான் ஏன் உன் கழுதையைத் திருட வேண்டும். இதுவரையிலும் உன்னைப் பார்த்ததே இல்லையே, நீ சொல்லும் குற்றச்சாட்டை என்னால் ஏற்க இயலாது. சென்று விடு இங்கிருந்து” என்கிறார்.

“முடியாது. நீங்கள் தான் என் கழுதையைத் திருடினீர்கள். என் கழுதையை வாங்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்” என்று சொல்லி கைகூப்பி நின்றான்.

செய்வதறியாது திகைத்து நின்ற அந்த சூஃபி இறைவன் மீது இறையச்சம் கொண்டவர். இறைவனிடம், “இறைவா, உன் நாட்டம் எதுவோ அதுவே நடக்கட்டும், உங்களின் விருப்பத்தின் படியே எல்லாம் நடக்கட்டும்” என முறையிடுகிறார்.

அங்கு, எங்கிருந்தோ வந்த ஒருவன், “உன் கழுதை கிடைத்து விட்டது” எனச் சொல்கிறான்.

அதைக் கேட்ட உடன், அந்த நாட்டுப்புறத்தான் சூஃபி அபுல்ஹாசனின் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, “குருவே, என்னை மன்னித்து அருளுங்கள். என் கழுதைக் காணாமல் போய் விட்டது. கழுதை இல்லையென்றால் என் வாழ்க்கை அழிந்து விடும். ஆகவே உங்களிடம் வந்து நீங்கள் தான் என் கழுதையைத் திருடினீர்கள் என்றால், நீங்கள் இறைவனிடம் முறையிடுவீர்கள். இறைவன் உங்களின் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றுவார் என தெரியும். ஆகவே தான் நீங்கள் தான் கழுதையைத் திருடினீர்கள் என்று சொன்னேன்” என சொல்லி மன்னித்து விடும்படி மன்றாடினான்.

அதற்கு அபுல்ஹாசன், “இதுவும் இறைவனின் நாட்டமே” என்றுச் சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தார்.

இன்றைக்கு பெரும்பாலானவர்கள் குருவினை அணுகுவது இந்த நாட்டுப்புறத்தான் போலத்தான். குருவிற்குத் தெரியும் யார் உண்மையானவர் என.

இறைவனின் நாட்டமும், வல்லமையும் ஒருங்கே அமையப்பெற்ற நல்ல குருவினை தேடிக் கண்டடைதல் ஒவ்வொரு மனிதனின் முதற்கடைமை. அவர்கள் போதகராக இருக்கலாம், சூஃபியாக இருக்கலாம், முனிவராக இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோரும் பல மணம் வீசும் மலர்களே…!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மணம். ஆனால் அவர்கள் அன்றலர்ந்த மலர்களே…!

மலர்கள் பூப்பது இயற்கை. தேனிக்கள் மலர்களைத் தேடிச் செல்வது வாழ்க்கை அல்லவா நண்பர்களே..! புரிந்து விட்டதா உங்களுக்கு….???

வாழ்க வளமுடன்…!


உலகை உலுக்கிய கொரானா வழக்கு(3)


வேலனின் வாதம் முடிந்தது.

வக்கீல் அமித் எழுந்தார்.

”நீதிபதி அவர்களே, குற்றம் சுமத்தப்பட்ட கொரானாவின் வக்கீல் சொல்லிய அனைத்து விஷயங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இதுவரையில் நான் அரசியல்வாதிகளுக்கு எதிராக வாதிட்டு இருக்கிறேன். அவர்கள் ஊழல் செய்வார்கள், அதற்காக இன்கம்டாக்ஸை வைத்து மிரட்டுவோம், பின்னர் தீர்ப்பையே நான் தான் எழுதி தருவேன். அதைத்தான் நீதிபதியும் படிப்பார். இந்தக் கோவை நீதிமன்றமும், நீங்களும் எனக்குப் புதிது. இன்னும் இந்த கோர்ட்டின் நடைமுறைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் வழக்கின் நீதிபதியா இருக்க வேண்டுமா? இல்லை என் தீர்ப்பினை படிக்கும் நீதிபதியை இங்கு கொண்டு வர வேண்டுமா? என யோசிக்க வேண்டும். ஆகவே எனக்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் தேவை என உங்களுக்கு உத்தர விடுகிறேன்”

“என்ன, உத்தரவா?” என்று சொல்லியபடி நாற்காலியில் அமர்ந்த அமித்தை கோபப்பார்வை பார்த்தார் நீதிபதி சங்கர்.

நீதிபதியை அவர் கண்டு கொள்ளவே இல்லை. செமகாண்டான நீதிபதி உன்னை வச்சு செய்யப்போறேண்டா அமித்து என்றுக் கருவிய படி எழுந்து சென்றார். கோர்ட் கலைந்தது.

தலைமைச் செயலர் நன்கு தூங்கிக் கொண்டிருந்தார். கொரானா வந்தாலும் வந்தது தூக்கம் போச்சு அவருக்கு. இந்தப் பயல்களை வீட்டுக்குள் இருங்கள் என்றுச் சொன்னால் ஒருவனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். லேசாக அடித்தால் அய்யோ குய்யோ எனக் கத்துகிறார்கள். பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் படம் போட்டு விடுகிறார்கள். அந்தப் படங்களைப் பார்க்கும் எனக்கே பீதியைக் கிளப்புகிறார்கள். நான் செய்து கொண்டிருக்கும் ஊழல் சமாச்சாரங்கள் நாளைக்குத் தெரியவந்தால், என் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லையே எனக் கலங்கினார். காவல்துறையினர் இப்படியெல்லாம் அடிப்பார்களா எனத் தெரிந்ததும் குலை நடுக்கம் ஏற்படுகிறதே என்று எண்ணிப் பயந்தபடியே தூங்கச் சென்றார்.

அவரின் மனைவியோ இந்த மாதம் கூடுதல் பணம் வரவில்லையே என தூக்கம் வராமல் வீட்டுக்குள்ளேயே உலாவிக் கொண்டிருந்தார்.
இந்த சி.எம் என்ன செய்கிறார். புதிய டெண்டர்களை விட்டால் தானே 30 பர்செண்டேஜில் கொஞ்சமாவது வரும். சாலைகளைக் கழுவி விட மாம்பழப்பட்டி பார்ட்டிக்கு டெண்டர் விட்டிருக்கலாம். கழுவிய பிறகு கிருமி நாசினி தெளிக்க, நம் தம்பியின் கம்பெனிக்கு டெண்டர் தரலாம். கழுவியதாக கணக்கு காட்டினால் போதும். சொளையாக கிடைக்குமே பெட்டி பெட்டியாக என நினைத்த போதே அவருக்கு நாக்கில் எச்சில் சொட்டியது. நாளைக்கு சி.எம்மின் மனைவியிடம் சொல்லி விட்டால் காரியம் ஆகி விடும் என  நினைத்துக் கொண்டே பெட்டி வராத சோகத்தில் அலைந்து கொண்டிருந்தார். கொரானா என்ற வார்த்தையைக் கேட்டாலே கொதிக்க ஆரம்பித்தது தலைமைச் செயலர் மனைவிக்கு.

இது எது பற்றியும் தெரியாமல் தூக்கத்தில் இருந்த தலைமைச் செயலர் கனவு கண்டார். அக்கனவில் வந்தது சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா.

ஊழல் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தலைமைச் செயலர் கனவில் பரிசுத்தமான கடவுள் எப்படி வருவார் என உங்கள் அனைவருக்கும் வியப்பாக இருக்கும்.

நல்லவர்களும், நல்ல எண்ணங்களும், செயல்களும் உடையவர்களுக்கு கடவுள் தேவையே இல்லை. ஆனால் அயோக்கிய சிகாமணிகளுக்கு கடவுள் அவசியம் தேவை.

செய்யும் குற்றங்களுக்கு ஏற்ப உண்டியலில் காசு போட்டு, பரிகாரம் செய்து விட்டால் கடவுள் மன்னித்து விடுவார் அல்லவா? ஆகவே கடவுளுக்கும் காசு தேவை என்பதால் கடவுள் அயோக்கியர்களின் கனவில் தான் வந்து கொண்டிருக்கிறார் ஒவ்வொரு யுகங்களாக என்பதை புராணங்கள் வழியே நாமெல்லாம் படித்திருக்கிறோம் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளுங்கள்.

பூஜா ஹெக்டே அன்றைக்குப் பார்த்து கிருஷ்ணரை வணங்கினார். 

தலைமைச் செயலர் கனவில் வந்த கிருஷ்ண பரமாத்மா அவரிடம் என்ன சொன்னார்?

இடை வேளைக்குப் பிறகு தொடரும்…

கொரானா ரசம் செய்வது எப்படி?


கோவையில் கொரானா பரவல் அதிகரித்து வருவது திகைக்க வைக்கிறது. கோவை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெகு சிரத்தையாக கையாள்பவர்கள். தெருக்கள் எல்லாம் ஆள் அரவமற்று கிடக்கின்றன. கடைகளில் சொல்லும்படி கூட்டம் இல்லை. இருந்தாலும் கொரானா அதிகம் பரவிக் கொண்டிருக்கிறது மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், இன்றைய பத்திரிக்கைச் செய்தி அப்படித்தான் சொல்கிறது. மனது பெரும் கவலையில் சிக்குகிறது.

அன்பு நண்பர்களே…!

இந்த நேரம் நம்மையும், நம் நண்பர்களையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணம். வெகு கவனமாக இருங்கள். நேற்றிலிருந்து இன்னும் 7 நாளைக்கு யாரும் வீட்டை விட்டு எந்த காரணத்துக்காகவும் வெளியில் வருவதை இயன்ற அளவில் நிறுத்துங்கள். ஓடிக் கொண்டிருந்த வேளையில் அமைதியாக இருப்பது உடலளவில், மனதளவில் பாதிப்பினை உண்டாக்கும். ஆனால் நம் ஓட்டத்திற்கு இது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓய்வு என்று நினைத்துக் கொள்ளுங்கள். உள்ளத்தையும், உடலையும் இரும்பாக்குங்கள். வரும் காலம் இன்னும் சவாலான காலகட்டமாய் இருக்கும். அதை எதிர் நோக்கிட மனபலமும், உடல் பலமும் தேவை.

உடலளவில் கொரானா பாதிப்பை தடுக்கும் வலிமை கொண்ட ரசம் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த ரசம் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சரியாக வருமா எனத் தெரியவில்லை. இருப்பினும் கொஞ்சமாய் முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள் என்னவென்று படித்துக் கொள்ளுங்கள்.

கைப்பிடி அளவு துவரம்பருப்பு
மஞ்சள் தூள் சிட்டிகை அளவு

மேற்கண்ட இரண்டையும் குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் (கடாய்) மூன்று தக்காளியை நான்காக வெட்டிப் போடவும், நான்கு பச்சை மிளகாயைக் கீறி போடவும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை நன்கு துருவி வாணலியில் போடவும். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடவும். கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றைப் போட்டு, இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

பிறகு பருப்பை எடுத்து நன்கு மசித்து, இந்த தக்காளி வெந்த கலவையுடன் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் ரசப்பொடி சேர்த்து கிளறி விடவும். நுரை கட்டி வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.

ஒரு முழு எலுமிச்சைப் பழம் ஒன்றினைப் பிழிந்து சாறு எடுத்து அதனை இறக்கி வைத்த ரசத்தில் சேர்க்கவும்.

அடுத்து ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், சிவப்பு மிளகாய் வற்றல் இரண்டு, மீண்டும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டி கலக்கி விடவும்.

வெகு அருமையான சுவையில் இஞ்சி, லெமன் ரசம் தயார். தாளிப்பு நெய்யில் செய்தால் தான் ரசத்தின் தன்மை சரியாக வரும். இல்லையெனில் பித்தச் சூடு அதிகரித்து விடும். நெய் இல்லையெனில் இந்த ரசம் செய்ய வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Picture Courtesy : Google

இனி தேங்காய் துவையல் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

அரை மூடி தேங்காயை துருவியோ அல்லது பற்களாகவோ எடுத்துக் கொண்டு, அதனுடன் ஆறு சிவப்பு மிளகாய், கொஞ்சமே கொஞ்சம் புளி, நான்கு பூண்டு பற்கள், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்புச் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.

இந்த ரசத்துக்கு தேங்காய் துவையல் சேர்த்துக் கொள்வது இன்னும் சிறப்பு. துவையலில் தாளிப்பு, எண்ணெய் இல்லாததால் அனைவரும் சாப்பிடலாம்.

இப்போது இரண்டும் தயாராகி விட்டது.

தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். தட்டில் சுடு சாதத்துடன் ரசம் சேர்த்து கையால் நன்கு தளர பிசைந்து கொள்ளுங்கள். சோறு ரசத்தில் கலந்து இருக்க வேண்டும். நன்கு பிசைவது முக்கியம். ரசம் அப்போது தான் சாதத்துடன் கலக்கும்.

ஒரு வாய் ரசம் சாதம், ஒரு கிள்ளு தேங்காய் துவையல் எடுத்து, அருகில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வாயும், மனைவிக்கு ஒரு வாயும் ஊட்டி விடுங்கள். பிறகு உங்களுக்கு.

வாழ்க்கை இந்த ரசம் சுவைப்பது போல சுவைக்கும்.

நம் வாழ்க்கை நமக்காக அல்ல நண்பர்களே…!

நாம் பிறருக்காக வாழ படைக்கப்பட்டவர்கள் என்பதை உணருங்கள். கொடுப்பதில் இருக்குமின்பம் பெருவதில் இல்லை. கொடுக்க கொடுக்க, பிறருக்குக் கொடுப்பதற்காகப் பெருகிக் கொண்டே இருக்கும் அது எதுவாக இருந்தாலும்.

அதற்காக நபிகள் நாயகம் வாழ்க்கை போல இல்லாமல், நமக்கும் கொஞ்சம் வைத்துக் கொண்டு, பிறருக்கும் கொடுக்கலாம் அளவோடு என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்..! நலமுடன்…!