குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, June 5, 2015

10 ரூபாயும் ஒரு மூதாட்டியும்

சமூக ஆர்வலர்கள் இப்போதெல்லாம் அழிக்கப்படுகின்றார்கள் அல்லது கொல்லப்படுகின்றார்கள். எல்லோருக்கும் உண்மை கசந்து விடுகிறது. சிலருக்கு கொலை செய்யும் மனத்தையும் தந்து விடுகிறது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை பார்க்கும் போது, ஓடோடி அவனுக்கு உதவி செய்யத் துடிக்காத இதயம் எவருக்கும் இல்லாமலிருக்காது. இருந்தும் பலரும் ஒதுங்கிக் கொள்கின்றார்கள். அதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. சமூகத்தின் நன்மைக்காக உதவிட வேண்டுமென்று நினைப்போருக்கு உண்மையில் கசப்பான அனுபவங்களே ஏற்படுகின்றன. சமீபத்தில் கோவையில் இப்படித்தான் மணல் கடத்தலுக்காக சமூக ஆர்வலர் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிலர் செய்யும் சில செயல்களால் மனித சமுதாயத்துக்கு கிடைத்திட வேண்டிய பல்வேறு நல்ல காரியங்கள் சீர்பட்டுப் போகின்றன.

நேற்றைக்கு கணபதி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அலுவலகத்தில் அடியேன் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அப்போது வாசலில் ஒரு குரல். நெடு நெடுவென்ற உயரம். கெச்சலான தேகம். மஞ்சள் பூசிய முகம். நெற்றியில் குங்குமம். பட்டுச்சேலை போன்று வெகு நேர்த்தியாக உடுத்தப்பட்டிருந்தது. கையில் ஏதோ ஒரு துணிக்கடையின் பை. 

ஏறிட்டுப்பார்த்தேன், “பன்னாரி அம்மன் கோவிலுக்கு காணிக்கை” என்றார் அந்த மூதாட்டி. அருகில் வரச்சொல்லி, பத்து ரூபாய் நோட்டினை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டி இப்படித் தொடர்ந்தார்.

”மகாராசனாட்டம் இருக்கிறாய், ஆனால் மனதுக்குள் பல்வேறு போராட்டங்கள். ஒவ்வொரு காரியத்திலும் தடை. மனதுக்குள் வலி. எந்தப் பிசினஸும் ஒழுங்காக நடப்பதில்லை. கண் திருஷ்டி இருக்கிறது. அதுதான் உன்னை இந்தப் பாடு படுத்துகிறது. உன்னால் கை காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு எங்கேயோ இருக்கின்றார்கள். ஆனால் நீயோ இருந்த இடத்திலேயே இருக்கின்றாய், இன்னும் கொஞ்சம் குறி சொல்லனும், அந்த சேரில் உட்காரட்டுமா?”

”பாட்டி நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் இல்லை. ஒன்றும் வேண்டாம். கிளம்புங்கள்” என்றேன்.

அந்த மூதாட்டியோ திரும்பவும் ”உனக்கு கண் திருஷ்டி நிறைய இருக்கு, அதைச் சரி செய்ய வேண்டும்” எனச் சொல்லிக் கொண்டே எதிரில் அமர எத்தனித்தார்.

”பாட்டி அப்படி ஏதாவதிருந்தால் அதோ அங்கே போட்டோவில் உட்கார்ந்திருக்கின்றாரே எனது குரு நாதர் அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்” என மறுத்தேன். சுவாமியைப் பார்த்தார் அந்த மூதாட்டி. ”நீ நன்றாக இருப்பாயப்பா” என்றுச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

மனதுக்குள் ஏதும் பிரச்சினையோடு இருந்திருந்தால் பாட்டி பர்சைக் காலி செய்திருக்கும்.

கடந்த வாரம் ஒரு பெரியவர் அலுவலக வாசலில் வந்து நின்று கொண்டு, “வயதானவன், நல்ல வார்த்தை சொல்வேன், காபி குடிப்பதற்கு ஏதாவது தர முடியுமா?” என்று கேட்டார். நான் திரும்பிக் கொண்டேன். எனது நண்பர் இரக்க சுபாவி. அவரை உள்ளே வர வைத்து எதிரில் அமர்ந்து கொண்டார்.

பிறந்த நாள், நேரம், இடம் கேட்டார். நண்பர் சொன்னார். கையை நீட்டச் சொன்னார். தட்சிணை வைக்கச் சொன்னார். நண்பர் திகைத்து விட்டு எவ்வளவு என்று கேட்டார்.”ஒரு நூறு ரூபாய் வையுங்களேன்” என்றார் கிழவர். நண்பர் வேறு வழி இன்றி கையிலிருந்த நோட்டுகளை எடுத்துக் கையில் வைக்க அதைக் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டு பலன் சொல்ல ஆரம்பித்தார்.

மேலே அந்த மூதாட்டியார் சொன்னாரே அதையே அந்தப் பெரியவரும் சொன்னார். ஐந்து நிமிடங்களாய் ஒப்பேத்தி விட்டு, அடுத்து உங்கள் குழந்தைகளுக்கும் பார்க்கலாமா என்று ஆரம்பித்தார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டே நண்பரைப் பார்க்க, நண்பரோ அலறியடித்துக் கொண்டு போதும் என்றுச் சொல்லி எழுந்து விட்டார்.

அடுத்து பெரியவர் என்னைப் பார்த்து, ”அய்யா உங்களுக்கு?” என்று ஆரம்பித்தவுடனே பெரிய கும்பிடு போட்டு விட்டேன். ஆள் எழுந்து விட்டார்.

“அறுபது ரூபாய்” கொடுத்தேன் என்றார் நண்பர் வருத்ததுடன்.


Monday, April 6, 2015

நிலம்(15) - முப்பாட்டனார் சொத்தில் பேரனுக்கு பங்கு உண்டா?

கடந்த வாரத்தில் எனது நண்பரொருவர் என்னைச் சந்தித்தார். அவர் ஒரு இடத்தினை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், என்னிடம் லீகல் ஒப்பீனியன் பெறலாம் என்றும் வந்திருப்பதாகவும், வெகு கவனமாக ஆவணங்களைப் பரிசீலித்து கிரையம் செய்ய உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.

முப்பாட்டனாரின் சொத்தில் இன்றைய வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்பதை நாமெல்லாம் அறிவோம். தாத்தா சொத்துப் பேரனுக்கும் உண்டு என்று கிராமத்தில் கூடச் சொல்வார்கள். தந்தை கூட விற்க முடியாது என்பர் பலர். ஆமாம் அதுதான் உண்மையும் கூட.

நண்பர் கொண்டு வந்து கொடுத்த சொத்தானது, தற்போது விற்பனை செய்ய விரும்பியவரின் தாத்தாவுக்கும் தாத்தா கிரையம் பெற்ற சொத்து. எந்த வித உயிலும் எழுதி வைக்காமல் அனைவரும் காலமாகி விடுகின்றனர். இந்த நிலையில் தற்போதைய உரிமையாளர் என்றுச் சொல்லக்கூடியவரின் தந்தை இந்தச் சொத்தில் ஒரு பகுதியை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இது செல்லாது என்கிறார் த.உ.எ.சொ. அது உண்மைதான் என்று அனைவருக்கும் தெரியும். தாத்தா சொத்து பேரனுக்கு இல்லாமல் விற்க இயலாது.

ஆனால் அந்தக் கிரைய ஆவணத்தை படிக்கும் போது அதில் முக்கியமான விஷயமொன்று இருந்தது. குடும்பத்தின் பணத்தேவைக்காக மேற்படிச் சொத்தினை வேறொருவரிடம் அடமானம் செய்து வைத்திருந்திருக்கிறார் த.உ.எ.சொவின் தந்தை. அதை மீட்பதற்காகவும், மேலும் பணத்தேவைக்காகவும் மேற்படி முப்பாட்டனார் சொத்தினை விற்றிருக்கிறார் அந்த தந்தை. அதாவது குடும்பத்தின் பணத்தேவைக்காக பணம் தேவைப்படும் போது முப்பாட்டனார் சொத்தினை இதர வாரிசுகளின் அனுமதியின்றி ( நிரூபிக்கப்படும் பட்சத்தில்) விற்பது தவறில்லை என்கிறது ஒரு தீர்ப்பாணை.

அந்த விற்பனை செய்யப்பட்ட சொத்தினைத்தான் எனது நண்பர் வாங்குவதற்கு முடிவு செய்திருந்தார். 

கிட்டத்தட்ட நான்கு கோடி இருக்கும் அந்தச் சொத்து. தப்பித்துக் கொண்டார் நண்பர்.... 

வாழ்க வளமுடன் !!!

Thursday, March 26, 2015

ரத்தம் கசியும் நினைவுகளூடே உப்புவேலி

எனக்குக் காந்தி மீது ஆற்றவே முடியாத கோபம் இருக்கிறது. எனது தாத்தா மறைந்த மாணிக்கதேவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் பணி செய்தவர். அவர் வம்சத்தில் வந்தவன் என்பதால் கூட காந்தி மீது கோபம் வர காரணமாக இருக்கலாம். 

தாத்தா மலேசிய சிறையிலிருந்து இந்தியா வந்த பிறகு அவர் கூடவே கொண்டு வந்திருந்த ராணுவ சட்டையை நான் மார்கழி மாதக் குளிருக்கு அணிந்து கொள்வேன். சொரசொரப்பான மடக்குக் கத்தி ஒன்றினை அவர் இடுப்பில் சொருகி வைத்திருப்பார். அதுவும் ராணுவத்தில் இருந்து கொண்டு வந்ததுதான் என்பார். அதை விரிக்க என் சிறு வயதில் வலுப் போதவில்லை. 

ஒரு முறை முயற்சித்து ஆள்காட்டி விரலின் நடுவில் கத்தி பிளந்தது போல வெட்டி விட்டது. அதன் பிறகு அந்தக் கத்தியைப் பார்த்தாலே எனக்குள் விரலில் இருந்து கொட்டிய இரத்தம் நினைவுக்கு வந்து விடும். ராணுவத்தின் கத்தி என்பதை அது சரியாக நிரூபித்தது. அதன் பிறகு எனக்கு விபரம் தெரிந்த நாள் வரை விரித்துப் பார்க்கவே இல்லை. அந்தக் கத்தியில் ஒரு குத்தூசி போல ஒரு பகுதி இருக்கும். அதை வைத்துதான் குத்துயிரும் குலையுயிருமாய் கிடக்கும் வீரர்களுக்கு மோட்சம் கொடுப்பார்களாம். நிற்க !

இந்திய வரலாற்றுச் சரித்திரத்தில் மறைந்து போன ஒரு விஷயம் என்பதாய் ஜெயமோகன் தனது இணையதளத்தில் உப்புவேலி என்ற புத்தகத்தைப் பற்றி எழுதி இருந்தார். எனது நண்பரிடம் சொல்லி உடனடியாக அந்தப் புத்தகத்தை வரவழைத்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு சாதாரண கம்பெனியாக இந்தியாவுக்குள் நுழையும் போது வளமுடன் இருந்த இந்தியாவை, ஏழை நாடாக மாற்றியது மட்டுமல்லாமல், கலாச்சாரத்தையும், கல்வியையும் சீரழித்து சின்னாபின்னப் படுத்தியவர்கள் கிழக்கிந்திய கம்பெனி என்கிற வரையில் வரலாறு சொல்லிக் கொடுத்தது. ஆனால் இந்த உப்புவேலி காட்டும் இன்னொரு முகம் மேற்கண்ட சீரழிவை விடவும் கொடூரமான ஒன்றாய் இருக்கிறது. 

உப்புக்கு வரி, அதனால் உருவான வேலி (சுங்கம்) அதனால் மாண்ட கோடிக்கணக்கான இந்தியர்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் பிரிட்டன் இந்தியாவை ஒரு இடம் விடாமல் சீரழித்து சின்னப்படுத்தி அழித்ததை ஒரு பிரிட்டன்வாசி எழுதி இருப்பதைப் படிக்கையில் நினைவுகளில் ரத்தம் துளிர்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

காந்தியின் அஹிம்சை மீது எனக்கு வெறுப்பு மண்டுகிறது. அதனால் அவர் மீது எனக்கு எல்லையில்லாக் கோபம் கொப்பளிக்கிறது. அஹிம்சை என்பது கெஞ்சுவது, இறைஞ்சுவது என்ற எண்ணம் உதித்தபடியே இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் உண்மை என்னை அப்படிச் சிந்திக் வைக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் அவசியம் படித்து உணர வேண்டிய அற்புதமான ஒரு நூல் “உப்புவேலி”. சிறில் அலெக்சின் மொழிபெயர்ப்பில் இந்தியாவின் வழிந்தோடிய ரத்தம் உறைய வைக்கும் உண்மை நிகழ்வுகள் படம் போல விரிகின்றன. எழுத்து பதிப்பகத்தின் அற்புதமான படைப்பு. 


Tuesday, February 24, 2015

குரு பூஜை விழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே, வருகின்ற 01.03.2015 தேதியன்று கோயமுத்தூர் மாவட்டம், முள்ளங்காடு, பூண்டியில் அமைந்திருக்கும் எமது குரு நாதரின் ஆஸ்ரமத்தில் குருபூஜை விழா சிறப்புற நடைபெற உள்ளது. ஆன்மீக நண்பர்கள் விழாவில் கலந்து கொண்டு குருவின் அருள் பெற வேண்டுகிறேன்.



Monday, February 2, 2015

ஆனந்தக் குளியல்


விபரம் தெரிந்த வயதில் நான் ஆவணம் கிராமத்தில் உள்ள கிளை ஆற்றில் ஆட்டம் போடுவதுண்டு. கண்கள் சிவக்கச் சிவக்க குளியல். காவிரியாற்றின் கடைமடை ஊரின் கிழக்கிலே செல்லும் ஆற்றிலிருந்து ஒரு சிறு வாய்க்கால் போல பிரிந்து செல்லும் சிறு ஆற்றின் இணைப்பில் உள்ள படிகளில் தான் குளியல் போடுவது வழக்கம். தடுப்பிலிருந்து சீறும் தண்ணீரில் தலையைக்காட்டிக் குளிப்பது ஆனந்தமோ ஆனந்தம். மாலை வேளைகளில் இரு சுவற்றின் மருங்கிலும் சின்னஞ்ச் சிறு மீன்கள் பாசியில் குத்திக் கொண்டு சரம் சரமாய் தொங்கும் அழகு மனதை அள்ளும். அதைக் கையால் தண்ணீருக்குள் தள்ளி விடுவேன். மொசு மொசுவென மொய்க்கும். ஆஹா அற்புதம்.

ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால் குளத்தில் குளியல், கோடையில் வடக்குத் தெருக்காரரின் தோட்டத்தில் உள்ள போரில் குளியல் போடுவதுண்டு. எனது வகுப்புத் தோழன் பனைமரத்துக் கள் இறக்குவான். தோட்டத்துக்குப் போகும் வழியில் தான் அவன் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடம் ஒரு மக் பனங்கள் வாங்கிக் குடிப்பேன். அதற்கு சைடு டிஷ் நண்டு வறுவல், ஆம்லேட் மற்றும் காரச் சுண்டல். சும்மா அள்ளும். கள் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்றால் மாமா தோலை உரித்து உப்புத் தடவி விடுவார். ஆகவே அதை மறைக்க தோட்டத்து போரில் இரண்டு மணி நேரத்திற்கு குளியல் போட்டு விட்டு கள் வாசம் அடிக்காதவாறு சரி செய்து கொள்வதுண்டு.

ஆனால் வீரியன்கோட்டை சித்தப்பா வீட்டிலோ தலை கீழ். கோடையில் வீரியன்கோட்டைக்குச் செல்வதுண்டு. குளத்து மீனை விடிகாலையில் பிடித்து வந்து வறுத்து வைத்துக் கொண்டு, சின்ன தம்பி சிதம்பரம் வாங்கிக் கொண்டு வரும் தென்னங்கள்ளை குடித்துக் கொண்டே வறுத்த மீனைச் சாப்பிடுவது என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சித்தப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். சின்னம்மா தான் கோவித்துக் கொள்வார்கள். தம்பி விடவே மாட்டான். சின்னம்மா வைக்கும் மீன் குழம்பின் ருசியை இதுவரையில் நான் எங்கும் சாப்பிட்டதே இல்லை. அந்தக் கைப்பக்குவம் போனது போனதுதான். சின்னம்மா இறந்த பிறகு அந்தக் குழம்பின் ருசியும் அவரோடு சென்று விட்டது. இப்போது வாழ்க்கையோ முற்றிலுமாக மாறிப் போய் விட்டது. 

கோவை வந்த பிறகு குளியல் ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. உடம்புச் சூடு போக குளிக்க முடிவதில்லை என்பதில் எனக்குள் ஒரு ஆற்றாமை தொடர்ந்து கொண்டே இருந்தது. பாத்ரூமில் குளிப்பது எல்லாம் குளியலே இல்லை. சும்மா கோழி கொத்துவது போலத்தான் குளியலும். எரிச்சல் மண்டும் சில நேரங்களில். ஊருக்குச் செல்லும் போது கரூர் தாண்டி திருச்சி வழியில் செல்லும் போது சில நேரங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தால் ஒரு அவசரக் குளியலைப் போட்டு விடுவேன். இருப்பினும் அந்த சந்தோசம் கிடைப்பதில்லை.


சமீபத்தில் எனது குரு நாதரைத் தரிசிக்க வெள்ளிங்கிரி சென்றேன். பாரஸ்ட் காரர்கள் ஆஸிரமத்துக்குச் செல்லும் வழியில் பெரிய பள்ளத்தை தோண்டி விட்டார்கள். ஏனென்றுதான் தெரியவில்லை. அங்கிருக்கும் மக்கள் பள்ளத்துக்குள் இறங்கி ஆற்றுக்கு குளிக்கச் சென்று கொண்டிருந்தார்கள். ஆக்டிவா ஆசிரமத்துக்கு போக முடியாது. காரும் போக முடியாது. எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமிகள் ஒரு வண்டியை வாங்கி விட்டார். காங்கேயம் காளைகள் பூட்டிய வண்டி. ஆக்டிவாவை கொண்டு போய் நிறுத்திவிட்டு வண்டியில் அமர்ந்தேன். ’ஜல் ஜல்’ என சலங்கை மணிகள் இசைக்க மாட்டு வண்டியை வெள்ளிங்கிரி மலையிலிருந்து வழிந்து வரும் ஆற்றுக்குள் இறக்கி ஆற்றின் ஊடே ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றார் சாமி. வண்டியை நிறுத்தி விட்டு, மாடுகளை அவிழ்த்து அங்கிருந்த கரையோரமாய் மேய்வதற்காக கட்டி வைத்து விட்டு சாமி வண்டியில் அமர்ந்து விட்டார். 

குளியல் போட ஆரம்பித்தேன். அப்பப்பா என்ன ஒரு ஜில்! ஐஸ் கட்டி போல தெளிந்த தண்ணீர். உடம்பே சில்லிட்டது. நல்ல குளியல். உடம்பெல்லாம் சில்லிட்டு விட்டது. அப்படி ஒரு குளியல். புத்துணர்ச்சி என்றால் புத்துணர்ச்சி. எத்தனை மூலிகளைக் கடந்து வருகிறதோ தெரியவில்லை. சுவையோ சுவை. ஆசை தீர குளியலை முடித்து விட்டு ஆசிரமம் வந்தேன். அற்புதமான மனம் ஒடுங்கிய தியானத்தினை என் குரு நாதர் அருளினார். சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பினோம்.

மனத்தில் எந்த வித சிந்தனையும் இல்லாது, மனம் ஒடுங்கிய நிலையில் எனது குரு நாதரின் ஆசீர்வாதத்தில் குளித்த அந்தத் தருணங்களை இனி எப்போது எனக்கருளுவாரோ?



Friday, January 9, 2015

சித்து விளையாட்டு

இரண்டாண்டுகளுக்கு முன்பு காலை நேரத்தில் வீடு தேடி வந்தார் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகச் சொன்னார். எனது பிளாக்கினைப் படித்துப் பார்த்தவர் என்னைச் சந்தித்து விட்டு அதன் பிறகு அவர் அவரின் முடிவினைத் தேடிக்கொள்ள இருப்பதாகச் சொன்னார்.

குடும்ப உறவுக்குள் பிரச்சினை. சொத்து சம்பந்தமாக கோர்ட்டில் வழக்காடுகிறார்கள். பணம் பிரச்சினை. குழந்தையில்லை. அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் நண்பராகவும், குருவாகவும் மதித்த ஒருவரைச் சந்திக்கும்படியும், அதன் பிறகு தற்கொலை செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

இரண்டாண்டுகள் ஓடோடின.  நேற்று என்னைச் சந்தித்தார் அவர்.

அவருக்கு ஒரு பெண் குழந்தை. ரோஜாப்பூ மாதிரி இருந்தது அப்பெண் குழந்தை. மீண்டும் பணப் பிரச்சினை. எந்தத் தொழில் செய்வது என்று தெரியவில்லை. குழப்பம். குழந்தையை எப்படி வளர்ப்பது? ஒரே பிரச்சினை. குடும்பத்தின் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இன்னும் இழுத்துக்
கொண்டிருக்கிறது. புலம்ப ஆரம்பித்தார்.

தற்கொலை செய்ய முடிவெடுத்தவருக்கு கையில் ஒரு குழந்தையைக் கொடுத்து தன் சித்து விளையாட்டை ஆட ஆரம்பித்திருக்கிறான் இறைவன் என்று கண்டு கொண்டேன். கர்ம வினைப் பயனை அனுபவித்தாக வேண்டுமய்யா என்று கூவ வேண்டுமெனத் தோன்றியது. ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அவர். அவரை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்பி வைத்தேன். எம் குரு அவரைக் கவனித்துக் கொள்வார். இனி அவர் வாழ்க்கை சிறக்கும்.

யாருக்குப் பிரச்சினையில்லை இவ்வுலகில். புரிந்து கொண்டவர்கள் அமைதியாக வாழ்வார்கள். புரியாதவர்கள் புலம்புவார்கள். எனக்கும் பிரச்சினை வந்தது. 

எனது குரு என்னிடம் கேட்டார், “உங்களுக்கு எத்தனை கோடி வேண்டும்?”. 

உடனடியாக மறுத்து விட்டேன். கர்ம வினை துரத்துமே, பணமா கர்ம வினையை சரி செய்யும்? நீங்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களே, இலங்கையிலும், தமிழகத்திலும் என்ன நடந்தது என்று. பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடிந்தது?

எல்லோருக்கும் எல்லாமும் புரிந்து விட்டால் !  இந்தப் பாடல் உங்களுக்குப் புரிந்தால் இப்பதிவும் புரியும்


மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதல் பூதமே. - திருமூலரின் திருமந்திரம்


Monday, December 29, 2014

ஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம் - தொடர்ச்சி

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கோவை டைம்ஸ் பகுதியில் ரஜினி காந்த் அவர்களின் சொத்து ஏலம் பற்றி ஒரு பத்தி வெளிவந்திருக்கிறது. எந்த ஒரு செய்திக்கும் விரிவான அலசலை அளிக்கும் பத்திரிக்கை ரஜினி என்கிற கோபுரத்தின் கதையைப் பற்றி விரிவாக அலசி இருக்க வேண்டிய தருணத்தை வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறது.

கோடம்பாக்கத்தின் தெருக்களிலும், ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் இளைமையையும், எதிர்காலத்தையும், குடும்பத்தையும் தொலைத்து விட்டு கட்டுக்கட்டாகப் பணமும், புகழும் கிடைக்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் மனதுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி இருக்க வேண்டிய அலசலை டைம்ஸ் ஆஃப் இந்தியா தவற விட்டு தன் ஊடக தர்மத்தை வசதியாக மறந்து விட்டது. சினிமா என்ற மாயா உலகத்தின் மறுபக்கம் தான் ரஜினியின் சொத்து ஏலத்திற்கு வந்தது. இதே போல அமிதாப்பச்சனின் சொத்தும் ஏலத்திற்கு வந்தது நினைவிலிருக்கலாம். சினிமா மோகத்தின் மீதான மாயையை அலசி ஆராய்ந்து கட்டுரையை வெளியிட வேண்டிய தர்மத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா மறந்து விட்டது.

என்னைப் போன்று எத்தனை எத்தனையோ லட்சோப லட்சம் வாசகர்கள் கொடுக்கும் சிறு பணத்தில் வளர்ந்து நிற்கும் இந்தப் பத்திரிக்கை மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடமைக்கு ஆட்பட்டது. ஆனால் ரஜினி போன்ற மாயா உருவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தர்மத்தைக் காக்கத் தவறி நிற்கிறது.

என்றைக்கு ஒரு தராசு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கிறதோ அன்றிலிருந்து தன் முடிவுக்கான ஆரம்பப் படியை அது எடுத்து வைத்து விட்டது எனலாம். நூற்றாண்டு கால டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய நிலைக்கு இன்னுமொரு உதாரணம்,

இன்றைய சினிமா விமர்சனத்தில் கயல் திரைப்பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வெள்ளைக்காரத்துரை திரைப்படத்தை தவறுதலாக வெளியிட்டு இருக்கிறது.

காலம் சொல்லும் பதிலுக்கு கேள்வியை இவர்களே தயார் செய்திருக்கிறார்கள். பதில் வெகு கடுமையாக இருக்கக் கூடாது என்று அதன் வாசகன் என்ற நிலையில் விரும்புகிறேன்.


Saturday, December 27, 2014

ஊடகங்கள் செய்யும் மக்கள் துரோகம்

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கோவையில் தன் பதிப்பினை வெளியிட்ட ஆண்டு முதலாய் இது நாள் வரையிலும் தொடர்ந்து அப்பத்திரிக்கையை வாசித்து வரும் வாசகன் என்ற முறையில் இப்பதிவு எழுத எனக்கு உரிமை இருக்கிறது என்ற வகையில் எழுதுகிறேன்.

தினமணி, தினத்தந்தி, தினமலர் மற்றும் இதர நாளிதழ்களை நான் செய்திக்காக மட்டுமே படிப்பேன். ஒரு வகையான டெம்ப்ளேட் தனமான செய்திகளையே தொடர்ந்து வழங்கி வரும் இப்பத்திரிக்கைகள் மீதான ஒரு வித பிடிமானம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை மீது எனக்கு மிகுந்த பிரியம். அதன் செய்திகளும் தலைப்பும் செய்திக்குச் சம்பந்தப்பட்டவர்களை விமர்சித்தே வெளிவரும். தகவல் செய்திகள் கூட அப்படித்தான் இருக்கும்.

மக்களின் வரிப்பணத்தில் ஊழியம் பெறும் அரசு வேலையில் இருப்போரும், மக்கள் பணத்தை செலவிடும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் தன் கடமை மறந்து தனக்கு சம்பளமும், பணிப்பாதுகாப்பும் தரும் மக்களுக்குத் துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபடும் போது அந்தத் தவற்றினைச் சுட்டிக்காட்டி அவர்களை சட்டப்படியான வழியில் பணியைத் தொடரச் செய்ய வேண்டிய மாபெரும் சேவையில் இருக்கும் ஊடகத்தினர் தம் கடமை மறந்து செய்திகளை வெளியிட மறுப்பதும், மறைப்பதும் தகுமா? என்ற கேள்வி எனக்குள் உதித்தது.

ஏனென்றால் சின்னஞ் சிறு செய்தியாக இருப்பினும் அதை விரிவாக எழுதும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தமிழகத்தின் தன்னிகரில்லா நடிகரும், உலகத்திலேயே அதிக மக்கள் விரும்பும் நடிகருமான திரு.ரஜினி காந்த் சொத்து ஏலம் வருகிறது என்ற செய்தியை ஒரு வரியாகக் கூட வெளியிடவில்லை. ஏனென்று யாரும் கேட்கப்போவதில்லை அப்படியே கேட்டாலும்  அவர்கள் பதில் சொல்லப்போவதும் இல்லை. எந்தச் செய்தியை வெளியிட வேண்டும்? எந்தச் செய்தியை வெளியிடக்கூடாது என்ற சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது என்கிற போதிலும், டைம்ஸ் நவ் டிவியில் பலரைக் கேள்வி கேட்கும் அர்னாப்பை இனி பார்க்கும் போது மனதுக்குள் நகைப்புத்தான் தோன்றும்.

வேஷம் கலைந்து விட்டது....



Friday, November 28, 2014

கார்த்திகை தீப திருவிழா அழைப்பிதழ்



Wednesday, November 26, 2014

காலம் சொல்லித்தரும் பாடம்

வாழ்க்கை பல புதிர்களைக் கொண்டது என்கிறார்கள். புரியாதவர்களுக்கு புதிர். புரிந்தவர்களுக்கோ அது ஒரு விளையாட்டு மைதானம். 

அழகிய மயிலாள் ஒருத்திக்கு தன் அழகுமேல் அதீத ஆர்வம். அதனால் கர்வம் ஏற்படுகிறது. அவள் தன்னை மிக உயர்ந்தவள் என்று எண்ணிக் கொள்கிறாள். 

ஆனால் உண்மையில் என்ன நடக்கும்? நாட்கள் ஆக ஆக முகம் சுருங்கும், கண்கள் களையிழக்கும், அழகிய பிருஷ்டங்கள் கூனல் விழுந்து, முடி நரைத்து தள்ளாடி நடப்பாள். இதை அவள் இளைமையில் உணர்கின்றாளா என்றால் இல்லை. அப்படி அவள் வாழ்க்கையில் நிச்சயம் நடக்கப் போகின்ற இந்த மாறுதல்களை நினைத்துப் பார்த்திருந்தால் இளமையை எண்ணிக் கர்வம் கொண்டிருக்க மாட்டாள். இந்த உண்மையை அவள் அவளின் முதுமையான காலத்தில் தான் உணர்வாள்.

காலம் கடந்த ஞானோதயம் வந்து என்ன ஆகப்போகின்றது. இதைத்தான் மனிதனை மறைக்கும் மாயை என்கிறார்கள். 

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. அவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டு பெண்கள், ஒரு ஆண். அந்தப் பெண்மணிக்கு மூத்த மகள் மீது கொள்ளைப் பிரியம். மற்ற இரண்டு குழந்தைகளை அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார். மூத்த பெண்ணுக்குத் திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள். இரண்டையும் அப்பெண்மணிதான் கண்ணுக்குள்ளே வைத்து வளர்த்தார். 

பசங்களும் வளர்ந்தார்கள். இருவரும் பெரியவர்களாகி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். தனது பேரன்கள் மீது அந்தப் பெண்மணிக்கு அன்போ அன்பு. அப்படி ஒரு அன்பு. இளைய பேரன் வெளிநாடு சென்றான். போனில் பாட்டியோடு பேசிக் கொள்வான். காண்ட்ராக்ட் முடிந்து திரும்பி வருவதற்கு முதல் நாள் மூத்த பேரன் தன் பாட்டியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு வந்தான். ஏன் தம்மைத் திடீரென்று தன் வீட்டில் கொண்டு போய் விடுகிறார்கள் என்று அப்பெண்மணிக்கு புரியவில்லை. இளைய பேரன் வெளி நாட்டில் இருந்து வரும் போது தன் அம்மா கூட இருப்பதை மூத்த மகளும், மருமகனும் விரும்பவில்லை என்பதை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டார் அப்பெண்மணி.

பந்த பாசம் என்பதெல்லாம் இருக்கிறது என்று “கண்ணூ” பதிவில் படித்தோம். இந்தச் சம்பவம் வேறு மாதிரி இருக்கிறது. பந்தபாசம் எல்லாம் சும்மாதானா என்று நினைக்கத் தோன்றும்.

இந்தச் சம்பவத்தை நடத்தியது தர்மம். தர்மத்தின் வழி மிகவும் சூட்சுமமானது என்று நான் “தர்மத்தின் தீர்ப்புக் கதைகள்” என்ற பகுதியில் எழுதினேன். அப்பெண்மணிக்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் அவரே. எதைக் கொடுத்தாரோ அது இல்லை என்று உணர்ந்திருக்கிறார். 

தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்றேன் அல்லவா? இனி தெய்வத்தின் தர்மம் என்ன என்பதையும், அதற்கான விளக்கத்தையும் இப்போது பார்க்கலாம்.

பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.

இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை. துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், ''உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்'' என்றார்.

தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு... சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

''பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில்,நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?'' என்றார் உத்தவர்.

“உத்தவரே ! அன்று குருக்ஷேத்திரப்போரில் அர்ஜூனனுக்காக நான் சொன்னது, ‘பகவத்கீதை’. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள்,”உத்தவ கீதை”. அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை தந்தேன். தயங்காமல் கேளுங்கள்” என்றான் பரந்தாமன். 

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ''கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?''

''நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்'' என்றான் கண்ணன்
.
''கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள். நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ... 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி... முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. 'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் துரியோதனன்.அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, 'துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'' என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.

இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.

பகவான் சிரித்தார். ''உத்தவரே... விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்'' என்றான் கண்ணன்.

உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்:

''துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.

அது விவேகம். தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, 'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்'' என்று சொல்லியிருக்கலாமே?

சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது, அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா? போகட்டும்.

தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.

'ஐயோ... விதிவசத்தால் சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே! அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை. அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி... அபயம் கிருஷ்ணா... அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?'' என்று பதிலளித்தான் கண்ணன்.

''அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?'' என்றார் உத்தவர். ''கேள்'' என்றான் கண்ணன்.

''அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?''

புன்னகைத்தான் கண்ணன். 

''உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்'' என்றான்.

''நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?'' என்றார் உத்தவர்.

''உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?'' என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.

உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா... எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!

பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! 'அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?

அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான். அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை!. 

(மேற்கண்டவை நான் படித்தது.அதை அப்படியே தந்திருக்கிறேன். இப்போது புரிகிறதா தர்மத்தின் பாதை என்ன என்பது? அது வெகு வெகு சூட்சுமமானது)