பத்தாண்டுகளுக்கு முன்பாக வாங்கிய வீடியோகான் ஃப்ரிட்ஜ் தன் ஆயுளை முடித்துக் கொண்டது. கம்ப்ரஷர் மாற்றலாமா என்ற யோசனையை நிராகரித்து, புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கி விடலாம் என்று முடிவெடுத்தேன்.பத்து நாட்களுக்கும் மேலாய் இணையங்களை அலசி ஆராய்ந்து, ஏகப்பட்ட விசாரணைகள் செய்து ஒரு வழியாய் ஒரு கம்பெனியின் ஃப்ரிட்ஜை வாங்கலாம் என்று முடிவெடுத்து, கடைகளில் விசாரணைப் படலத்தை ஆரம்பித்தோம்.
கோவையில் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் கடைகள் ஒவ்வொன்றிலும் விசாரணையை ஆரம்பித்தவுடன் மிகப் பெரும் அதிர்ச்சியை சந்தித்தேன். இணைய தளங்களில் ஒரு விலை, ஷோரூம்களில் ஒரு விலை என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட நான்காயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் வித்தியாசம் இருந்தது. ஏற்கனவே தயாரிப்பாளர்கள் 30 பர்சண்டேஜ் கமிஷன் வழங்குகிறார்கள். அதற்கு மேலும் நான்காயிரம், ஐந்தாயிரம் என்றால் வரக்கூடிய லாபம் தயாரிப்பாளர்களை விட, விற்பனையாளருக்கு கிடைக்கிறது என்பது தான் என் அனுபவத்தில் கண்ட ஸ்பெஷல் செய்தி.
அதுமட்டுமா, ஆளைப் பார்த்து பொருளுக்கு விலை சொல்லும் கலாச்சாரத்தை ஒவ்வொரு கடையிலும் கண்டேன்.அசந்து போய் விட்டேன். கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லாமல், பகல் கொள்ளையை விட மோசமானதாய் மேற்படி கோயமுத்தூர் எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சிலர் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். மக்களின் உழைப்பை உறிஞ்சும் இவ்வகை டீலர்களுக்கிடையில் ஏதோ சில பேராவது நாணயத்தோடு தொழில் செய்பவர்கள் இருப்பார்களே அவர்களைத் தேடலாம் என்று ஒரு நாள் மாலையில் கண்டு பிடித்தேன்.
கிட்டத்தட்ட நான் விசாரித்த ஃப்ரிட்ஜை பிரபல எலக்ட்ரானிக்ஸ் டீலர்கள் சொன்ன விலையிலிருந்து 5000 ரூபாய் குறைவாக, புத்தம் புதிய ஃப்ரிட்ஜ் ஒன்றினை வாங்கினேன் வெகு நேர்மையாக தொழில் செய்யும் அந்த டீலரிடமிருந்து. கடந்த பத்து வருடத்திற்கு முன்னால் அவரிடம் தான் ஃப்ரிட்ஜை வாங்கி இருந்தேன். அந்த ஃப்ரிட்ஜ் கடந்த பத்து வருடங்களாய் எந்த வித பிரச்சினையும் தராமல் வேலை செய்தது. டீலரிடம் மேற்படி விஷயத்தைப் பகிர்ந்து கொண்டு, அவர் கம்பெனி கொடுத்த ரிசீப்டைக் காட்டிய போது மகிழ்ச்சியா மேலும் தள்ளுபடி கொடுத்தார்.
ஒரு ஃப்ரிட்ஜ்க்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வைத்து விற்பனை செய்கிறார்கள் என்றால், ஒரு நாளைக்கு கோவையில் எத்தனை ஃப்ரிட்ஜுகள் விற்கின்றார்கள் என்பதையும், எவ்வளவு பணத்தை மக்களிடமிருந்து திருடுகிறார்கள் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கோவையிலே இவ்வளவு திருட்டு என்றால் பிற ஊர்களில் எல்லாம் கணக்கெடுத்துப் பார்த்தால் தலையே சுற்றும்.
இந்த வகைத் திருட்டிலிருந்து தப்பிப்பது எப்படி என்று நினைப்பீர்கள். எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பொருள் வாங்கும் போது விலை குறைவான பொருட்களை வாங்க முயலுங்கள். நேற்றைக்கு எல்சிடி பிரபலமாய் பேசப்பட்டது. இன்றைக்கு எல்யிடி, த்ரீடி என்றுச் சொல்கிறார்கள். 60,000 ரூபாய் கொடுத்து வாங்கிய எல்சிடி டிவியை மாற்ற வேண்டுமென்று நண்பரின் வீட்டில் பிரச்சினையாகி விட்டது. எந்தப் பொருள் என்ன பயன் என்று முடிவு செய்தவுடன், வெப்சைட்டுகளில் தேடிப்பார்த்து அதன் விலையினை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு டீலரிடம் செல்லுங்கள். சில ஆயிரமாவது மிச்சமாகும்.