அனைவருக்கும் வணக்கம்.
இன்றைக்கு வெகு முக்கியமான காக்கா நிலங்கள் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
அதென்ன காக்கா நிலங்கள்?
HILLS AREA CONSERVATION AUTHORITY (HACA) என்று குறிப்பிடப்படும் பகுதிகளை காக்கா நிலங்கள் என்று சொல்வார்கள்.
சமீபத்தில் என்னிடம் லீகல் ஒப்பீனியனுக்காக ஒருவர் அணுகி இருந்தார். அவர் கொடுத்த நில ஆவணங்களை ஆய்வு செய்த போது அது காக்கா நிலப்பகுதியில் இருந்ததைக் கண்டுபிடித்தேன். முறைப்படி அனுமதி பெறப்பட்டிருக்கிறதா? என்று பார்த்தேன்.
என்றைக்குமே அனுமதி வழங்கவே வழங்கப்படாத காக்கா நிலத்தின் சைட் அது. அந்த நிலத்தினை வாங்கினால் அதன் சாதக பாதகங்கள் பற்றி எடுத்துரைத்தேன். அவர் அந்த நிலத்தினை வாங்கவில்லை. வேறு இடம் வாங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்கள் காக்கா நிலங்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் அனுமதி பெறாத (மக்களின் பார்வையில் அது பஞ்சாயத்து அப்ரூவ்ட் மனைகள்) மனையிடங்களை வரன்முறைப்படுத்தி, அனுமதி பெற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி தர புதிய சட்டத்தை அதிமுக அரசு வெளியிட்டது.
என்னைப் பொறுத்தவரை அந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சேலஞ்ச் செய்து ரத்து செய்யலாம். ஏனென்றால் மாநில வரையறைக்குள் மட்டும் HACA சட்டம் இல்லை. ஒன்றிய அரசின் ஒப்புதலும் வேண்டும். அது நமக்குத் தேவையில்லை. அரசின் பிரச்சினை. (ஈஷாவுக்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள். யானை வழித்தடங்களில் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்தலாம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது)
இந்தச் சட்டத்தின்படி அனுமதி வழங்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு சில தாலுக்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் இருக்கும் அனுமதி பெறாத மனைகளை அனுமதி பெறவே இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, திரு நெல்வேலி, விருது நகர், நீலகிரி, சேலம், வேலூர், விருது நகர் மாவட்டங்களில் ஒரு சில தாலுக்காக்களில் உள்ள கிராமங்கள் அனுமதி பெற இயலாதவை என்று சட்டம் சொல்கிறது.
உதாரணமாக கோவை மாவட்டத்தில் வீரபாண்டி, பூளுவம்பட்டி, ஆனமலை ஹில்ஸ், ஆனைகட்டி, தடாகம், ஓடந்துறை, கல்லார், ஜகனாரி, கலிக்கல், பில்லூர், நெல்லித்துறை, சுண்டப்பட்டி, கண்டியூர், நீலகிரி கிழக்கு, மேலூர், ஆனைகட்டி வடக்கு, மஞ்சம்பட்டி மற்றும் அமராவதி ஆகிய கிராமங்களில் இருக்கும் மனைப்பிரிவுகளை எப்போதும் வரைமுறைப்படுத்த இயலாது.
சமீபத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி தருவதாகச் சொல்லி பணம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுப்பதாகக் கேள்விப்பட்டேன். அனுமதி பெறா மனைப்பிரிவு போலவே அதுவும் அரசின் அனுமதி இல்லாத ஆவணம் என்பதை மறந்து விடாதீர்கள். அந்த அனுமதி பைசாவுக்கும் பிரயோஜனப்படாது.
காக்கா பகுதியில் நிலம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பல அரசின் சட்டங்கள் இருக்கின்றன.
காக்கா பகுதியில் தனிப்பட்ட முறையில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி, அதற்குள் வீடு கட்டுவதற்காக அனுமதி பெறுவது என்பது வேறு. ஆனால் மனை இடமாக பிரித்து விற்பனை செய்யும் போது அதற்கான அனுமதி பெறுவது என்பது வேறு. ஆகவே இரண்டையும் ஒன்றாக கருதி விடக்கூடாது.
காக்கா பகுதிகள் எவை, அவைகளில் நிலம் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை என்ன? அவைகளை வாங்கலாமா இல்லையா? என்பது பற்றி தெரிந்து கொள்ள என்னைத் தொடர்பு கொள்ளவும்.
கட்டணம் உண்டு.
காக்கா பகுதி மனைகளை வாங்க நினைப்பவர்கள் லீகல் கன்சல்டேசனுக்கு என்னை அணுகலாம்.
குறிப்பு : சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் நேரத்தில் பதிவு செய்யப்பட்ட அனுமதி பெறா வீட்டு மனைப்பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன. அவ்வாறு ரத்துச் செய்யப்பட்ட பத்திரங்கள் கொண்ட நிலத்தினை வாங்கி ஏமாற வேண்டாம். கடனும் கொடுக்க வேண்டாம்.