குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, July 17, 2021

நிலம் (85) - ரத்து செய்யக்கூடிய பத்திரங்கள் எவை?

நல்ல குளிர். காலையில் சீரகத் தண்ணீர் ஒரு குவளை அருந்தினால் தான் மட்டுப்படுகிறது. சுற்றிலும் மலை. எங்கெங்கு நோக்கினும் பச்சை. இன்னும் சிறிது நேரத்தில் பட்சிகள் படபடப்பாய் குரல் எழுப்ப ஆரம்பித்து விடும். அமைதி தவழும் இயற்கைச் சூழல்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரவாகமெடுக்கும் சிறுவாணியின் சுவையான நீர், நல்ல காற்று, இயற்கை சூழல் வீட்டின் மேற்கே சலசலத்து ஓடும் சிற்றோடை -- பிள்ளைகள் படிப்புக்காக மாறிய இடம். நடக்கும் தூரத்தில் கல்விச் சாலை. 

ஹாஸ்டலில் பிள்ளைகளைச் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

விளாங்குறிச்சியில் பரபரவென ஓடும் வாழ்க்கைச் சூழல். இங்கோ அமைதி. பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது.

மாற்றங்கள் ஒன்றே மாறாதது.

முதலில் ஒன்றியப் பிரச்சினையைப் பார்க்கலாம். 

இந்திய அரசமைப்பு மார்ச் மாதம் 31ம் தேதி 2008 - திருத்தி அமைக்கப்பட்டதன் தமிழ் வடிவத்தில் மாநிலங்கள் சேர்ந்த ஒன்றிய அரசு எனத் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் ஒன்றியம் என தான் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆதாரம் கீழே

இது இந்திய அரசுக்காக சட்ட (ஆட்சிமொழிப் பிரிவு) துறையினரால் மொழி பெயர்கப்பட்டு அது 2009 ஆண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆகவே ஒன்றிய அரசு என்பதே சரி. பேச்சு மொழிக்காக மத்திய அரசு என்று அழைக்கலாம். அல்லது பிஜேபி அரசு என்று அழைக்கலாம். அல்லது மோடி அரசு என்றும் அழைக்கலாம். அது அழைப்பவரின் வசதி.

ஆனால் மிகச் சரியானது இந்திய ஒன்றிய அரசு என்பதே. அது மட்டுமின்றி ஒவ்வொரு நீதிமன்றத் தீர்ப்பிலும் யூனியன் ஆஃப் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

அடுத்து கொங்கு நாடு பிரச்சினை

எல்.முருகன் மத்திய இணை அமைச்சராய் பொறுப்பேற்ற போது கொங்கு நாடு என்று கையொப்பம் இட்டாராம். அப்படி எல்லாம் தன் விருப்பத்துக்கு எழுத அவருக்கு உரிமை இல்லை. அது தனி பிரச்சினை. 

ஒரு மாநிலத்தினை பிரிக்க குடியரசு தலைவரின் பரிந்துரையின் பேரில் நாடாளுமன்றத்தின் வழியாக அந்த மாநிலத்தின் சட்டசபைக்கு பரிந்துரை கோரி அனுப்ப வேண்டும். அம்மாநில சட்டசபை அதை அங்கீகரிக்க வேண்டும். 

இது கடைசி நடைமுறை. 

இதற்கு முன்பு மாநிலத்தினை பிரிப்பதற்கான தேவை இருக்க வேண்டும். அதற்கான ஆவணங்கள் இருக்க வேண்டும். மக்கள் விரும்பி அதை போராட்டத்தின் வழியாக அரசுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். தமிழர்களைத் தனித்தனியாகப் பிரித்து விட்டால் எளிதில் ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைவது போல நுழைந்து விடலாம் என மனப்பால் குடிக்கும் சிற்றறிவு கொண்ட அதிகாரப் பசி கொண்டலையும் பாக்டீரியா தமிழர்களின் நயவஞ்சக எண்ணம் இது.

மொழி வழி  மாநிலங்களைப் பிரிப்பது என்பது இந்திய இறையாண்மைக்கே வேட்டு வைக்கும். இங்கு தமிழர்களாய் இருக்கும் நய வஞ்சக பதவி ஆசை பிடித்தலையும் நரிகளின் ஊளை இது.

ஆகவே கொங்கு நாடு என்பது கனவிலும் நடக்காத ஒன்று. தமிழர்கள் பிரித்து மேய்ந்து விடுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். தமிழ் பேசும் மக்களை தனி மாநிலமாக பிரிப்பது என்பது பெரிய ஆபத்தை உருவாக்கி விடும் என்று ஒன்றிய பாரதீய ஜனதாவுக்குத் தெரியும். வெட்டிப் பேச்சு, ஒன்றுக்கும் உதவாத அரசியல் வார்த்தைகள் என பார தீய ஜனதா கட்சி கேவலமாக அரசியல் செய்கிறது. தமிழக மக்கள் இக்கட்சியையும், இக்கட்சியினை தமிழகத்தில் வேரூன்ற வைத்த லீச்சசுமான ஊழலுக்காகவே நான்கு  லட்சம் கோடியை கடனாக வைத்துச் சென்றிருக்கும் அதிமுகவின் துரோகிகளையும் அடையாளம் கண்டு கொண்டு அமைதியாக அதற்கான வேலையினைச் செய்ய வேண்டும்.

டிவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ஸ் மூலம் போலி அடையாளத்துடன் லட்சக்கணக்கான பதிவுகள் போடப்படுகின்றன. அதையும் தமிழர்கள் தான் செய்கிறார்கள். ஆகவே இவ்வகைப் போலிப் பதிவுகளையும் அடையாளம் கண்டு கொள்வது நல்லது.

அடுத்து ரத்துச் செய்யக்கூடிய பத்திரங்கள் பற்றிப் பார்க்கலாம்.

சமீபத்தில் லீகல் ஒப்பீனியனுக்காக ஒருவர் அணுகி இருந்தார். தான செட்டில்மெண்ட் ரத்துப் பத்திரம் ஒன்றின் மூலம் சொத்தின் உரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நிராகரித்து விட்டேன். சொத்தானது கிரையம் ஆகவில்லை. மூன்று கோடி ரூபாய் தப்பித்தது.

தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்துச் செய்ய முடியாது. அவ்வாறு செய்து சொத்துரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது செல்லாது என்பதை அறிந்து கொள்க.

பதிவுத்துறை என்பது ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட நீதிமன்றத்தின் மற்றொரு பகுதி. ஆரம்பகாலத்தில் பத்திரங்கள் நீதிமன்றத்தில் தான் பதிவு செய்யப்பட்டன. இப்போதும் வங்கிக்கடனுக்காக மீட்கப்படும் சொத்துக்களின் பத்திரங்கள் நீதிமன்றங்கள் மூலமாக பதிவு செய்யப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆவணங்களை எளிதாகக் கையாள பதிவுத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சொத்துரிமைப் பதிவுகளை நீக்கவோ அல்லது ரத்துச் செய்யவோ நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்பதை அறிந்து கொள்க. யார் எதைச் சொன்னாலும் நம்பி விடக்கூடாது.

இந்த நடைமுறையில் ஒரு சில ஆவணங்களை ரத்துச் செய்வதற்கு பதிவுத்துறைக்கு அனுமதி உண்டு.

உயில் பத்திரம்

பொது அதிகார ஆவணம்

கிரைய ஒப்பந்த பத்திரம்

மேலே கண்ட மூன்று பத்திரங்களை மட்டும் துணைப்பதிவாளர் அலுவலகம் மூலம் ரத்துச் செய்யலாம்.

உயிலை எழுதியவர் அதை எப்போது வேண்டுமானாலும் ரத்துச் செய்து மறு உயில் எழுதலாம் அல்லது எழுதாமலும் இருக்கலாம். உயில் ரத்து, புதிய உயில் ஆகியவைகளை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளலாம்.

பொது அதிகார ஆவணத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்துச் செய்யலாம். இப்போது அதிகாரம் எழுதி வாங்கியவரும் பதிவு அலுவலகம் வர வேண்டும் என்கிறார்கள். இந்த ரத்துப் பத்திரம் பதிய பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் பொது அதிகார ஆவண அதிகாரம் பெற்றவர் சொத்தின் உரிமையாளர் இல்லை என்பது. சொத்தின் விற்பனைத் தொகையினை சொத்தின் உரிமையாளரின் பெயரில் மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டு முகவரின் பெயருக்கு வழங்கக் கூடாது.

கிரைய ஒப்பந்த ஆவணத்தை - அதில் குறிப்பிட்டிருக்கும் சாராம்சங்களின் படி  துணைப்பதிவாளர் அலுவலகத்தில் ரத்துச் செய்யலாம்.

சொத்துக்கள் வாங்கும் முன்பு இவைகளைக் கவனத்தில் கொள்க.

 ==================================

 #செட்டில்மெண்டுபத்திரம் #பாகபிரிவினைபத்திரம் #விடுதலைபத்திரம்
#இரத்துபத்திரம் #பாகபிரிவினை  #பொதுஅதிகாரம் #சிறப்புஅதிகாரபத்திரம் #உயில்பத்திரம் #நீதிமன்றம் #பதிவாளர் #செட்டில்மெண்டு #பவர்பத்திரம் #பங்குதாரர்  #கிரயபத்திரம் #பரிவர்த்தனைபத்திரம் #பதிவுதுறை #தாய்பத்திரம் #சார்பதிவகம்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.