குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, July 29, 2011

இரும்புத்தாது தொழிலில் அடியேன் - பகுதி 1


எல்லாத் தொழிலையும் எல்லோராலும் செய்து விட முடியாது என்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்து கொண்ட சம்பவம்தான் கீழே நாம் பார்க்க இருப்பது. எவ்வளவுதான் புத்திசாலியாக, திறமைசாலியாக இருந்தாலும், இந்தியாவில் சிலரின் துணையில்லாமல் எந்த ஒரு பெரும் தொழிலையும் அவ்வளவு எளிதில் நடத்தி விட முடியவே முடியாது என்பதை கண் கூடாக கண்டு கொண்டேன்.  பிசினஸ்ஸில் மாரல் எதிக்ஸ் எதுவும் கிடையவே கிடையாது. உடனடி லாபம் என்ன? என்பதுதான் பிசினஸ்ஸின் தாரக மந்திரமாய் சிலர் வைத்திருக்கின்றார்கள்.

உலகம் முழுவதும் எனக்கு கிட்டத்தட்ட 10,000க்கும் மேலான டிரேடிங் ஏஜெண்டுகள் தொடர்பில் இருந்தார்கள். தற்போதும் இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு, இந்திய இரும்புத்தாது சரியான பீக்கில் விலை போனது. அப்போது சில டிரேடிங் ஏஜெண்டுகள் மூலம் சைனாவில் பெரிய கம்பெனியிடமிருந்து 1 லட்சம் டன் மாதம் சப்ளைக்கு ஆர்டர் எடுத்து, அதைப் பெரிய கம்பெனிக்கு விலை பேசி, கமிஷன் பேசி, அக்ரீமென்ட் போட்டு, வங்கி மூலம் எண்டார்ஸ்டு செய்து லெட்டர் ஆஃப் கிரடிட்டும் வாங்கிக் கொடுத்து விட்டேன். இரண்டு பர்செண்டேஜ்ஜுக்கு சப்ளையரிடமிருந்து கேரண்டியும் வாங்கிக் கொடுத்து விட்டேன். இது ஏன் என்றால் இறக்குமதியாளர், ஏற்றுமதியாளரின் விலைக்கு வங்கியிலிருந்து பணவோலைக் கொடுத்து விட்டார். ஏற்றுமதியாளர் சொன்னபடி, சொன்ன தேதியில், சரியான பொருளை அனுப்பவில்லை என்றால் சரக்கின் மொத்த விலைக்கு இரண்டு பர்சண்டேஜ் பெனால்டியை ஏற்றுமதியாளர் வங்கி, இறக்குமதியாளரின் வங்கிக்கு அனுப்பி வைத்து விடும்.இது இருவருக்கும் தொழில் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு அக்ரீமெண்ட்.மாதா மாதம் எனக்கு கமிஷனாக 45 லட்சம் வங்கியிலிருந்து எனது அக்கவுண்டிற்கு வரும்படியான ஒரு வருட அக்ரீமெண்டினையும் போட்டு ஒரிஜினலும் வந்து சேர்ந்து விட்டது. அதை எனது வங்கியில் கொண்டு போய் கொடுத்ததும் வங்கி மேனேஜர் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் விட்டார். மாதம் 45 லட்சம் என்று ஒரு வருடத்திற்கு கமிஷன் தர இறக்குமதியாளரும், ஏற்றுமதியாளரும் ஒப்புக்கொண்டு, அதை அவர்களின் வங்கி மூலம் சான்றும் பெற்று என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். மேனேஜருக்கு இதயம் வெடிக்காமல் இருந்ததே பெரிய சம்பவம்.

எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்தது. கப்பல்துறைமுகத்தில் இருக்கும் யார்டில் சரக்கு சேர்ந்து கொண்டிருந்தது. தினம் தோறும் எனக்கு ஃபாக்ஸ் வரும். அதை நான் சைனாவிற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். லேப்பில் இருந்து ரேண்டம் டெஸ்ட் ரிப்போர்ட்டும் வந்து கொண்டிருந்தது. எல்லாம் மிகச் சரியாக போய்க் கொண்டிருந்தது. மொத்தச் சரக்கும் யார்ட்டில் சேர்ந்து விட கப்பல் பெர்த்திங் ஆகும் முன்னே இறக்குமதியாளரிடமிருந்து ஒரு ஃபேக்ஸ் வந்தது.

என்னவென்று பார்த்தால் ஏற்றுமதியாளர் ஆர்டரை கேன்சல் செய்து, இரண்டு பர்சண்டேஜ் பெர்மான்ஸ் பாண்டைக் கிளியர் செய்து விட வங்கிக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இறக்குமதியாளர் என்ன நடந்தது என்று தெரியாமல் அலறினார்.

அடித்துப் பிடித்துக் கொண்டு, மும்பைக்குச் சென்றேன். சப்ளையரிடம் விசாரித்தேன். அவர் கூலாக என்னிடம் சொன்னது “ அக்ரீமென்ட் விலையோடு பதினைந்து டாலர் அதிகம் கொடுத்து வேறு ஒருவர் சரக்கினை அப்படியே வாங்கிக் கொண்டார். ஆகையால் 2% பிபிஐக் கிளியர் செய்து விட்டேன். சரக்கு அனுப்பமுடியாது. உங்களுக்கும் கமிஷன் தர இயலாது” என்று மறுத்து விட்டார். மேட்டர் ஓவர். இந்தச் சப்ளையர் மீது எங்கும் ஏதும் நடவடிக்கை கூட எடுக்க இயலாது. ஏனென்றால் அக்ரீமென்ட் படி சரக்கினை அனுப்பவில்லை என்றால் 2% பிபி கிளியர் ஆகி விடும். அதையும் சப்ளையர் செய்து விட்டார். கிட்டத்தட்ட 15 டாலரில் இரண்டு டாலரை பெனால்டியாக கட்டி விட்டு,  டன் ஒன்றிற்கு 13 டாலரை குவித்து விட்டார்.

மும்பையிலிருக்கும் இறக்குமதியாளரின் அலுவலகத்தில் தனியொருவனாக அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் பேசிக் கொண்டிருந்தேன். ” தங்கம், இது பிசினஸ். காசுதான் இங்கே பேசும். மாரல் எதிக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தால் நான் பிழைக்க முடியாது. எவனோ ஒருவன் கோடி கோடியாய் சம்பாதிக்க, நான் ஏன் எனக்கு வரும் லாபத்தை இழக்க வேண்டும்? சைனாக்காரன் சம்பாதித்தால் எனக்கா கொடுத்து விடப்போகிறான். அக்ரிமெண்ட் படி நான் தான் 2% பெனால்டி கட்டி விட்டேனே? வேண்டுமென்றால் உங்களுக்கு  செலவு தொகையாக பத்தாயிரம் தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னார்.

அவரிடம் நான் என்ன பேச முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். எனது வாழ்வில் நடந்த மிகப் பெரும் அதிர்ச்சியான சம்பவம் இது.

அன்றைக்கு நான் பிசினஸ் என்றால் என்ன என்பதை ஓரளவு கற்றுக் கொண்டேன். இந்தக் கம்பெனி மூன்று வருடங்களுக்கு முன்பு மஞ்சள் நோட்டீஸ் விட்டது. இன்றைக்கு காணாமலே போய் விட்டது அந்தக் கம்பெனி.

அடுத்ததாக ஒரு இரும்புத்தாது சுரங்கத்தையே மூட வேண்டி வந்த கதையைச் சொல்கிறேன்.அதற்கடுத்து தமிழகத்தில் மிகப் பெரிய நிறுவனத்திற்கு எதிராய் ஏலத்தில் ஜெயித்தும், உயிர் பயத்தால் ஏலத்திலிருந்து வாலண்டிரியாக வெளியேறிய சம்பவம் ஒன்றினையும் எழுத இருக்கிறேன்.

* * *

1 comments:

HajasreeN said...

intresting

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.