குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, July 18, 2011

பிஎஸ்என்எல் எரிச்சலூட்டும் நிறுவனம்



பியெஸ்ஸென்னில் புது இண்டெர்னெட் கனெக்‌ஷன் எடுக்க பீளமேடு டெலிபோன் எக்சேஞ்சை அணுகினேன். யாரிடமோ ஒரு பெண்மணி பேசினார், முகவரி கேட்டார் சொன்னேன். அங்கே தற்போது கனெக்‌ஷன் கொடுக்க இயலாது என்றுச் சொல்லி, பேசாமல் டேட்டா கார்டுக்குப் போய் விடுங்கள் சார் என்றார். அதற்கு யாரைப் பார்க்கணும் என்றேன். சம்பந்தப்பட்டவர் வெளியில் சென்றிருக்கிறார், பிறிதொரு நாள் வாருங்களேன் என்றார்.

என்ன சொல்ல முடியும்? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம். இதே ஏர்டெல், ரிலையன்ஸ், டாடாவாக இருந்தால் ஒரு போன் போட்டால் போதும், வீடு தேடி வந்து அப்ளிகேஷன்ஸ், கட்டணம் வசூலித்துச் செல்வார்கள். ஆனால் பியெஸ்சென்னில் மட்டும் ஏன் இந்தப் பிரச்சினை வருகிறது?

இணையத்தில் பதிவு செய்த உடன் ஒரு யெஸ்ஸெம்மெஸ் வந்தது. அதில் ஒருவரின் மொபைல் எண் கொடுத்து, அவர் உங்களைத் தொடர்பு கொள்வார் என்றார்கள். இதுவரையில் அவர் அழைக்கவே இல்லை. நானே முயன்று பார்த்தேன். யாரோ ஒருவர் வீட்டிற்கு வந்து, பள்ளம் தோண்ட வேண்டும் சார், காண்ட்ராக்டர் இல்லை என்றார். அவர் எப்போதுதான் வருவார் என்றேன். தெரியாது சார். ஆனால் விரைவில் சொல்கிறேன் சார் என்றார். தொடர்ந்து நானே பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்யட்டுமா என்றேன். அதெல்லாம் முடியாது சார். காண்ட்ராக்டர்தான் பள்ளம் தோண்டி, வயர் போட வேண்டுமென்றுச் சொல்லி விட்டு போயே போய் விட்டார். வேறு வழி இன்றி தனியாரிடம் இணைய இணைப்புப் பெற வேண்டியதாகி விட்டது. இதே போன்று ஒவ்வொரு கஸ்டமரும் தனியாரிடம் சென்று கொண்டிருந்தால், பின் ஏன் பியெஸ்ஸென்னல் இருக்க வேண்டும்? தேவையற்ற செலவுகள் ஏன்? தொலைத்தொடர்புத் துறையை தனியாரிடம் ஒப்படைத்து விடலாமே?

எனது வீட்டின் பக்கத்து வீட்டில் பியெஸ்ஸென்னல் டெலிபோன் இருக்கிறது. ஆனால் என் வீட்டிற்கு கொடுக்க பள்ளம் தோண்ட வேண்டுமென்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எத்தனை நாள் ஆகும் போன்ற விபரங்களைக் கூட சொல்ல மறுக்கின்றார்கள்.

தனியார் நிறுவனங்கள் லாபங்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பியெஸ்ஸென்னலோ நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றுச் சொல்கின்றார்கள்.

தனியாரிடம் ஒரு போன் அழைப்பில் புது கனெக்‌ஷன் கிடைக்கிறது என்கிறபோது, அரசாங்க நிறுவனத்தில் ஏன் அவ்வாறு நடக்கவில்லை? என்ன காரணம்?  எங்குப் பிரச்சினை இருக்கிறது? என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப சில முடிவுகளை எடுக்கவில்லை என்றால் பியெஸ்ஸென்னல் விரைவில் முழுகிப் போய்விடும் ஆபத்து நிகழத்தான் போகிறது.

மாண்புமிகு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு கபில்சிபல், இது போன்ற மக்களுக்கு எரிச்சல் தரும் சேவைப் பிரச்சினைகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்தப் பதிவு இமெயில் செய்யப்படுகிறது. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பதிவு மூலம் தெரிவிக்கிறேன்.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.