குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, July 26, 2011

இன்ஸ்டண்ட் லெமன் ஊறுகாய் - பேச்சிலர் ஸ்பெஷல்

கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அவ்வப்போது பொருட்கள் வாங்குவதற்காக செல்வதுண்டு. மனைவியை கொண்டு போய் விட்டு விட்டு, ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் அங்கே “ஙே” என்று அங்குமிங்குமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். (வேறு வழி!). வாங்குவது என்னவோ குறைவுதான். ஆனால் அதற்கான நேரம் தான் அதிகம். ஒரு பிரட் பாக்கெட் வாங்கி விட்டு கிட்டத்தட்ட 30 நிமிடம் பில்லிங் போட நின்று கொண்டிருந்தார் மனைவி.

அப்படி நின்று கொண்டிருக்கையில் பழக்கமானார் ஒரு ஸ்வீட் மாஸ்டர். ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எதேச்சையாக இன்ஸ்டண்ட் ஊறுகாய் போடுவது எப்படி என்பதைச் சொன்னார். அச்சரம் பிசகாமல் கேட்டுக் கொண்டு, அன்றைக்கே மனைவியிடம் சொல்லி செய்யச் சொன்னேன். படு ரகளையாய் வந்திருந்தது. அதுதான் இங்கே உங்களுக்காக.

  1. இரண்டு எலுமிச்சை பழம்
  2. ஒரு ஸ்பூன் வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள்
  3. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. ஒரு ஸ்பூன் உப்பு
  5. இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய்
  6. ஒரு ஸ்பூன் கடுகு
  7. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை


எலுமிச்சையை நன்கு கழுவி, துடைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய துண்டுகளாய் நறுக்கி தேவையான தண்ணீர் விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு, அடுப்பினை சிம்மில் வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி விடும். நன்றாக வெந்த பிறகு எடுத்து சூடு ஆறிய பிறகு மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து கரண்டியால கிளறி வைத்துக் கொண்டு, மீண்டும் அடுப்பில் எண்ணெய்ச் சட்டி வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து அத்துடன் மேற்கண்ட கலவையைக் கொட்டி, கிளறி சூடு ஏறிய பிறகு எடுத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். கடுகு தாளித்து, மேற்படி கலவையைக் கொட்டி கிளறியவுடனே வரக்கூடிய வாசம் சும்மா ஜிகுஜிகுன்னு ஜொள்ளைக் கிளப்பும்.

இதே போல மாங்காய், மா இஞ்சி போன்றவற்றிலும் செய்யலாம். கை படாமல் எடுத்துப் பயன்படுத்தினால் ஒரு வாரம் தாங்கும். 

கோபமாய் இருக்கும் மனைவியை அசத்த முயல்பவர்கள் மேற்படி ஊறுகாய் சமாச்சாரத்தைப் பயன்படுத்துங்கள். காதலில் இருப்போர் இக்குறிப்பைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிற்காலத்திற்கு உதவும். பெண்களுக்கு இக்குறிப்பு தேவையில்லை. ஏனென்றால் உங்களுக்குத்தான் திருமணத்திற்குப் பிறகு ஒரு அடிமை கிடைத்து விடுவானே. பின் என்ன கவலை ?



2 comments:

HajasreeN said...

காதலில் இருப்போர் இக்குறிப்பைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிற்காலத்திற்கு உதவும்.//

ரொம்ப கவனத்துல வச்சிகிட்டேன்

Karthikeyan Rajendran said...

வலை உலகில் கலக்கியதோடு,,, ஊறுகாய் உலகையும் கலக்க போகிறீர்களா,,,,,,

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.