குரு வாழ்க ! குருவே துணை !!

Sunday, July 17, 2011

செம்பருத்தியும் சில நினைவுகளும்


மக்களை ஏமாற்றும் டீலர்கள் பற்றிய பதிவிற்கு பல நண்பர்கள் யார் அந்த டீலர்கள் என்றுச் சொன்னால் பரவாயில்லை என்று கேட்டிருக்கின்றார்கள். சில பல பிரச்சினைகளால் பப்ளிக்காக பெயர்களை வெளியிட இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏமாறக்கூடாது என்பதற்காகவும், இது போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை அதே பதிவில் எழுதி இருப்பதை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு, அதன்படி செயல்பட்டாலே தப்பித்துக் கொள்ளலாம்.

கம்பெனி தரும் கமிஷனை விட பல மடங்கு அதிகம் லாபம் வைத்து விற்பவர்களைத்தான் நான் எழுதி இருந்தேன் என்பதையும் இவ்விடத்தில் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தி.ஜானகி ராமனின் “செம்பருத்தி” நாவலைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மூன்று நாட்கள் விடாமல் படித்து முடித்தேன். நாவலின் வெற்றி என்பது நாவலில் வரும் கதாபாத்திரங்களின் பாதிப்பை படிப்பவரின் மனதுக்குள் உருவாக்கி விடுவதுதான். சமீபகால எழுத்தாளர்கள் பலரின் நாவல்களை நான் படித்திருக்கிறேன். இது போன்ற பாதிப்பை அந்த நாவல்கள் எனக்குள் ஏற்படுத்தவில்லை. தி.ஜானகி ராமன் அவர்கள் எனக்குள் உருவாக்கிய ”கேரக்டர் பாதிப்பினை” இந்தக் கால எழுத்தாளர்களின் படைப்புகள் இதுகாறும் உருவாக்கிடவில்லை.

செம்பருத்தியில் வரும் சட்ட நாதனும், அவனின் மனைவியான புவனாவும் ஜானகி ராமனின் சொற்கள் வழியே மனதுக்குள் உருவமாய் உருவானார்கள். அவர்களின் எண்ண ஓட்டமும், கதை நகரும் தொனியும், என் புற உலகினை முற்றிலுமாய் மறக்கச் செய்து கதையுடனே என்னை இழுத்துக் கொண்டு சென்றது. வாசகனை நாவலுக்குள் இழுத்து, அவனுடனான புற உலக நினைவுகளை மறக்கச் செய்து, நாவலுக்குள் மூழ்க வைத்து விடும் கலை திரு ஜானகி ராமனின் எழுத்துக்கு இருக்கிறது. இவரைப் போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளை இதுகாறும் நான் படிக்கவில்லை. (பாஸ்கி ! உங்களுக்கு அப்படியான நாவலாசிரியர்கள் ஏதேனும் தெரிந்தால் தெரிவியுங்களேன் )

எனது இளம் பிராய காலத்தில், கல்லூரி நாட்களில் ”செம்பருத்தி” நாவலை  படித்த நினைவுகள் எழும்பின. அப்போது ”காதலித்த பெண் அண்ணனை திருமணம் செய்ததும், அண்ணன் இறந்ததும் காதலனைக் கட்டிப் பிடித்ததுமான” பாலியல் சம்பவங்களே எனக்குள் பதிந்திருந்தன. வயதுக் கோளாறு அல்லவா? அதையெல்லாம் இன்றைக்கு நினைத்த போது புன் சிரிப்பொன்றே பதிலாய் எனக்குள் பூத்தது.

”செம்பருத்தியில்” நுண்ணிய ஒரு பிரச்சினையை ஜானகி ராமன் எழுப்பி இருப்பார். அதைப் பற்றிப் பேசும் முன்பு கதையின் கரு என்னவென்று பார்க்கலாம். சட்ட நாதனுக்கு அண்ணன் இருவர். மூத்தவர் திருமணமானதும் வெளியூரில் செட்டிலாகி விடுவார். இளையவர் உறவுகள், குடும்பம் என்று வாழ்பவர். இளைய அண்ணனின் சம்பாத்தியத்தில் சட்ட நாதன் கல்வி பயின்று வரும் கால கட்டத்தில், ஆசிரியராய் இருந்தவரின் மகளின் மீது காதலை வளர்த்துக் கொள்வான்.ஆனால் அக்காதல் நிறைவேறாது. இளைய அண்ணனுக்கு மணம் பேசி முடித்து விடுவர். தான் காதலித்த பெண், அண்ணனின் மனைவியாகி விடுவதை மனதுக்குள் வைத்து மருகுவான் சட்ட நாதன். இளைய அண்ணன் திடீரென்று காலராவால் காலமாகி விட அண்ணி விதவையாவார். ஆனால் இளைய அண்ணனின் விருப்பப்படி புவனாவைத் திருமணம் செய்து கொள்வார் சட்ட நாதன். புவனாவிடம் தன் காதல் அனுபவத்தைச் சொல்லி தன்னை நியாயவான் என்று நிரூபிப்பார்.தன் மனைவியிடம் ஆண்கள் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பது தவறானதோ என்று சட்ட நாதன் பிற்காலத்தில் நினைக்கும் படி ஆகி விடும்.  கதை இத்தோடு முடியவில்லை. படு ரகளையான பல முடிச்சுகள், தத்துவ விசாரணைகள் இருக்கின்றன.  நுண்ணிய பிரச்சினை என்றுச் சொன்னேன் அல்லவா அது என்னவென்றால் மனத்தின் புரிதல்கள் காரணத்தை முன்னிட்டு வருவதில்லை என்பதும், அது சுற்று சூழல்களாலும் வரக்கூடியது என்பதும்தான்.

வாழ்க்கையின் சில புரிபடாத சூட்சுமங்களில் இவ்வகையான குடும்பத்தினரின் மனபுரிதல்கள் சில நேரங்களில் மட்டுமே இன்பத்தை வழங்கும். பெரும்பான்மையான சமயங்களில் பெரும் மனத்துன்பத்தை தந்து விடும். இதை உணர்ந்து, தனக்குள்ளான விசாரணை செய்து உணரும் பக்குவத்தினை ஆண்களும், பெண்களும் பெற வேண்டும். அவ்வகையான புரிதல்கள் இந்த நாவல் வாசிக்கும் போது எனக்குக் கிடைத்தன. நண்பர்களுக்கும் அவ்வகையினான புரிதல்கள் கிடைக்க வேண்டுமென்பதற்குத்தான் இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

சில பேரின் வாழ்க்கை அவர்களின் கடைசிக் காலம் வரை துன்பமாகவே கழிந்து போய் விடும். அதையே அவர்கள் தங்களுக்கான இன்பமாய் கருதி விடும் இயல்பும் நாளடைவில் உண்டாகி விடும். இந்த நாவலில் குஞ்சம்மாளை ஜானகிராமன் அவ்வாறே உருவாக்கி விட்டார். ஏன் இந்தக் கதாபாத்திரம் துன்பத்தினை மட்டுமே ஏற்று வாழ்ந்தது என்பதை, நம் வாழ்க்கையோடு சேர்த்துப் பார்க்கும் போது, கடவுளின் மீதான நம்பிக்கை கூடுகிறது.

படைப்பாளிகள் என்போருக்கு கடின மனது இருக்குமோ என்பதை ஜானகி ராமனும் தன் எழுத்தின் வழியே சொல்கிறார் போலும். பிரம்மனின் படைப்பிலும் ஜானகி ராமனின் கதாபாத்திரங்களைப் போன்றோரை நாம் பார்த்து வருகிறோம் அல்லவா?

உங்களுக்கு நேரமிருந்தால் ”தி.ஜானகி ராமனின் செம்பருத்தியை” வாசித்துப் பாருங்கள். ஏதேனும் உங்களுக்குப் புரிய வரலாம். 

அன்பும் நட்பும் உங்களிடம் என்றைக்குமே நிரந்தர வாசமாகட்டும்.

-பிரியமுடன் 
கோவை எம் தங்கவேல்


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.