குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 30, 2010

காதல் திருமணத்தின் பத்தாவது ஆண்டு - அனுபவ வாழ்க்கை

இதோ இன்றைக்கு எனது காதல் திருமணத்தின் பத்தாம் ஆண்டு நாள். பத்து வருடத்திற்கு முன்பு, இன்றைய காலையில் தான் தஞ்சாவூரில் இருக்கும் அய்யனார் கோவிலில் மதியம் பனிரெண்டு மணிக்கு எனது காதலிக்கு திரு மாங்கல்யம் அணிவித்தேன். நான் படிக்க வைத்த மோகன் என்ற பையனும், டிரைவரும் ஆசீர்வாதம் செய்ய ஏதும் இல்லாத காரணத்தால், கோவிலின் அருகில் இருந்த செம்பருத்தி பூவை பறித்து, மலர் தூவினர். எங்கள் கல்யாணம் சம்பிரதாயங்களை மீறிய ஒன்று. எவரும் அய்யனார் கோவிலில் திருமணம் செய்யமாட்டார்கள் என்றுக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அய்யனார் எனக்குப் பிடித்தவர்.

திருமணம் முடிந்த பிறகு தான் அடுத்த போராட்டமே ஆரம்பிக்கும். உறவுகளின் எதிர்ப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நானும் என் மனைவியும் அனுபவிக்க ஆரம்பித்தோம். ஆனால் யாரையும் எதிர்ப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. ஆண்டாண்டு காலமாக இருந்த ஒரு நம்பிக்கைக் கோட்டை இருவரும் தகர்த்தோம். அதன் அதிர்வுகள் தீர நாட்களாகும் என்று நாங்கள் அமைதியாய் வாழ்க்கையின் சிக்கல்களில் மாட்டினோம்.

தொழிலில் 30 லட்ச ரூபாயை இழந்தேன். மாட்ரிட்டில் நடந்த குண்டு வெடிப்பில், நான் இழந்தது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். இருந்த வசதி வாய்ப்பெல்லாம் எங்களை விட்டுக் காணாமல் போனது. ஒரு ரூபாய் காசின்றி இருப்பேன். இந்தச் சமயத்திலும், ஏக்கர் கணக்கில் சொத்துக்கள் இருந்தும் நான் எந்த வித உதவியையும் என் வீட்டிலிருந்து எதிர்ப்பார்த்ததில்லை. ஆட்களை வைத்து வேலை செய்தவன், மற்றொருவரிடம் வேலை செய்தேன். இரவு பகல் பாராமல் உழைத்தேன். இந்தச் சமயங்களில் உணவுக்குப் பிரச்சினையாக இருக்கும். இரண்டு வருடம் தினந்தோறும் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டேன். என் பையனும், மனைவியும் சோற்றில் உப்பும், தண்ணீரும் சேர்த்துதான் சாப்பிடுவார்கள். என்றாவது ஒரு நாள் காய் கறிகள் வாங்குவோம். இடையில் வந்து சென்ற தீபாவளி, பொங்கல் எல்லாம் வந்த சுவடுகள் இன்றியே சென்றன. புது உடைகள் அணிய பணமிருக்காது. ஆனால் எங்கள் வீட்டில் இருக்கும் எந்தப் பிரச்சினையும் யாருக்கும் தெரியாது. அந்தளவுக்கு மனைவி வீட்டினைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள்.

நீண்ட நாட்கள் கழித்து தேடி வந்த உறவுகளை வரவேற்றோம். ஏனென்றால் குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதில் நாங்கள் இருவரும் உறுதியாக இருந்தோம். இக்கால கட்டங்களில் நான் அடைந்த பக்குவங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இன்றைக்கு எங்களது உறவு வட்டத்தில் நாங்கள் ஒரு முன்னுதாரண தம்பதிகள். ஏனென்றால் நாங்கள் வாழ்க்கை என்றால் என்ன என்பதனை நன்கு புரிந்தவர்கள். நண்பர்களும், உறவுகளும், சமூகமும், உலகமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. நாங்கள் எங்களை அதற்கேற்றவாறு தகவமைத்துக் கொண்டோம். பிரச்சினைகளில் இருந்து தப்பித்து, மற்றவர் பிரச்சினைக்கு ஆலோசனை சொல்லும் இடத்திற்கு முன்னேறி விட்டோம்.

என் மனைவியிடம் “ நீங்கள், ஹீரோயின் மாதிரி இருக்கின்றீர்கள்? எப்படி இவரைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள் என்று எல்லோரும் கேட்கின்றார்கள்” என்று ஒரு பெண்மணி கேட்டிருக்கின்றார். அதற்கு என் மனைவி சொன்னது “ என் வீட்டுக்காரரை விட அழகானவர், அன்பானவரை நான் இதுவரை சந்தித்தது இல்லை”.

தாம்பத்தியம் என்றால் விட்டுக் கொடுத்தல் என்று தான் அர்த்தம் வரும். எனக்கு கோபம் வரும். கன்னா பின்னாவென்று சத்தமிடுவேன். ஆனால் அடுத்த நொடி அக்கோபம் என்னை விட்டுக் காணாமலே போய் விடும். ஏனென்றால் கோபம் இருக்குமிடத்தில் தான் குணமிருக்கும் என்பார்கள் என்று என் மனைவி சொல்வார்.

காய்கறிகள் வெட்டுவதிலிருந்து, சமைப்பதிலிருந்து, துணி துவைப்பது வரையில் நான் உதவிகள் செய்து வருவேன். ஏனென்றால் நான் செய்வது என் குடும்பத்திற்கு என்பது எனக்குத் தெரிகிறது.

எங்களுக்கு இரண்டு வாரிசுகள் இருக்கின்றனர். பையன் ரித்திக் நந்தா, பெண் நிவேதிதா இருவரும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

டிவியில் ஒரு நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்தவர்களில் நூற்றுக்கு 90 பேர் பிரிந்து விடுகின்றனர் என்றார். அவர்கள் காதல் செய்யவில்லை. காமம் செய்தார்கள் என்று புரிந்து கொண்டேன்.

காமத்தில் ஆரம்பிக்கும் அன்பு, காதலில் முடிந்து அது குழந்தைகளாய் வடிவெடுத்து வளர ஆரம்பிக்கும் தருவாயில் வாழ்க்கையின் மற்றொரு பாதையில் நாம் பயணிப்போம். அந்தப் பாதையில் நாங்கள் வெற்றிகரமாய் பயணம் செய்கிறோம்.

என் லட்சியங்கள் நிறைவேற நான் மிகக் கடுமையாக உழைத்து வருகிறேன். என்னை உற்சாகப்படுத்தி,ஊக்கப்படுத்தி வருகிறார் மனைவி. இந்த நேரத்தில் என் லட்சியங்கள் வெற்றி பெற, என்னை நெறிப்படுத்தி, ஒழுங்குப் பாதையில் அழைத்துக் கொண்டு, என்னோடு சேர்ந்து வரும் எனது சகோதரருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் என் வாழ்க்கையில் நான் நன்றிச் சொல்ல வேண்டியவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சேர்த்துச் சொல்கிறேன்

“இறைவா எங்களை ஆசீர்வதியுங்கள்”

Friday, September 24, 2010

பஞ்சலோகம் அணிய வேண்டுமா?

சிறு வயதில் காலில் தண்டை அணிவது வழக்கம். ஆனால் மக்கள் தங்களது ஈகோவினால் வெள்ளி, தங்கத்தில் தண்டை செய்து குழந்தைகளுக்கு அணிவிக்கின்றனர். இதனால் எந்தவித பலனும் கிடையாது என்பதுடன், இக்காலத்தில் தங்கம் விற்கும் விலைக்கு, கிலோ கணக்கில் தங்கம் அணிந்தவருக்கு உயிராபத்தும் ஏற்பட்டு விடக்கூடும்.

பஞ்சலோகமான தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகியவற்றில் உருவாக்கப்பட்ட தண்டையை அணிவதால், மனித உடலைச் சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலின் உலோக சக்தியை அதிகரிக்கும். ஏனென்றால் பூமியின் ஒவ்வொரு இடத்திற்கும் உலோக அம்சம் கலந்த மண் வித்தியாசப்படும். இந்த வித்தியாசத்தை நிவர்த்தி செய்வது பஞ்சலோக தண்டை என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். கோவில்களில் சாமி சிலைகள் பஞ்சலோகத்தில் அமைக்கப்படுவதன் காரணமும் இது தான்.

தண்டை என்பது கொலுசு போன்றதாகும். கையிலோ அல்லது கழுத்திலோ அணியலாம்.

உதவிய நூல் : ஓலைச்சுவடி

Wednesday, September 8, 2010

நடிகர் முரளியும் நானும்




முரளி உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

எனது நெருங்கிய நண்பரொருவர் நடிகர் முரளியை அறிமுகம் செய்து வைத்தார். அடிக்கடிப் பேசிக் கொள்வோம். வீட்டுக்கு அவசியம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார். பையன் அதர்வாவின் திரைப்படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்டார். படம் வெளியானவுடன் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

பூவிலங்கு படத்திலிருந்து மனதிற்குள் அச்சாய் பதிந்தவர் நடிகர் முரளி. சமீபத்தில் நடிகை லட்சுமியோடு ஒரு பேட்டியில் அவரைக் கண்டேன்.

அவரின் திரைப்படப் போராட்டத்தை விவரித்தார். ஹீரோவாக கமிட் ஆகி மறு நாள் சூட்டிங் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, செய்திதாளில் வேறொரு ஹீரோவை போட்டு விளம்பரம் வருமாம். உள்ளுக்குள் கதறிக் கொண்டு அமைதியாகி விடுவாராம். அப்பாவின் படத்தில் நடிக்கும் போது “டேய் கருப்பா” என்ற சத்தத்தைதான் முதலில் கேட்டாராம். சினிமா எல்லோருக்கும் தனது கதவுகளை திறந்து விடுவது கிடையாது. அதிர்ஷ்டமும், மாறாத அர்ப்பணிப்பும், திறமையும் கொண்டவர்களால் தான் வெற்றி பெற இயலும் என்று உணர்த்தினார்.

காலையில் என் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, முரளியின் மரணத்தைப் பற்றிய ஃப்ளாஷ் நியூஸ் பற்றிச் சொன்னதும் பதறிப் போய் விட்டேன்.

வழக்கம் போல அவருக்கு அழைத்தேன்.

மறு முனையில் அதர்வா.


Friday, September 3, 2010

மந்திர தீட்சை




கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சாரதா பெண்கள் கல்லூரி(கரூர், அமராவதிபுதூர்) மற்றும் பள்ளிகள் பத்துக்கும் அடியேன் தான் கம்யூட்டர் சிஸ்டம் அனலிஸ்டாக பணிபுரிந்து வந்தேன். நான்காண்டுகால வாழ்க்கையில், உலகின் மற்றொரு முகத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

மனிதர்கள் எவரானாலும் அவர்களின் பிறவிக் குணம் என்றைக்குமே மாறாத ஒன்று என்ற மாபெரும் அனுபவ உண்மையை இங்கு தான் நான் கண்டேன். அனுபவம் இல்லாத, இளமையும் இணைந்த இந்தக் கால வாழ்க்கையில், நான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் பெரும் கதைக்கான கருவாக இன்றளவும் என் முன்னே விரியும். உண்மையை மட்டுமே எழுத வேண்டுமென்ற ஆவல் காரணமாய் அதற்கான சந்தர்ப்பம் தற்போது கனியவில்லை. விரிவாக பின்னொரு காலம் அது வார்த்தைகளூடே தன்னை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன் என் மூலமாக.

சென்னையிலிருக்கும் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் திரு கெளதமானந்தாவும், கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் தலைவர் திரு ஆத்மானந்தாவும் நெருங்கிய நண்பர்கள். அப்போது சென்னையிலிருக்கும் ராமகிருஷ்ண மடம், யுனிவர்சல் டெம்பிள் என்ற கோவிலைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஆத்மானந்தா அவர்கள் நிறைய நன்கொடையும், வேலை செய்ய ஆட்களையும் அனுப்பி வைத்தார். ஆத்மானந்தாவுடன் அடிக்கடி சென்னைக்குச் சென்று வருவேன்.

எனது வேலை ரிச்சி தெருவிலிருக்கும் கம்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையோடு. கரூர் ஆஸ்ரமத்தின் கிளையொன்று கோயம்பேடு மார்கெட் பின்புறம் இருக்கிறது. முட்காட்டில் இரண்டு கீற்றுக் கொட்டகையில் 15 அனாதைச் சிறுவர்களோடு, எனது நெருங்கிய நண்பராக இருந்த நாராயணனந்தா என்பவரின் கட்டுப்பாட்டில் அந்த ஆஸ்ரம் இருக்கிறது. இங்கு தான் நானும், ஆத்மானந்தாவும் வந்து தங்கிக் கொள்வோம். நாங்கள் வருகிறோம் என்றுச் சொன்னால் மதியம் காலிஃபிளவர் சாம்பார் மணக்கும். நாராயணனந்தா சாம்பாரில் ஸ்பெஷலிஸ்ட். மாலை எனக்குப் பிடித்த இடியாப்பம் மற்றும் குருமாவை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து தருவார் நாராயணனந்தா அவர்கள்.

ஒரு முறை, நான் சென்னை ராமகிருஷ்ண மத்தில் சுவாமி ஆத்மானந்தாவுடன் தங்கினேன். அன்பாக கவனித்துக் கொண்டார்கள். அதன் பிறகு சென்னை சென்று வரும்போதெல்லாம் புத்தகங்கள் வாங்கி வருவதற்கு நான் அடிக்கடி அந்த மத்திற்கு சென்று வருவேன்.

யுனிவர்ஸல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கான அழைப்பும் வர, நான் கரூர் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த வெள்ளுடை பிரதர்கள் சிலரோடு சென்னைக்குச் சென்றேன். ஆத்மானந்தா என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, சென்னை மத்தில் இருக்கும் பகவான் ராமகிருஷண்ர் உயிரோடு இருக்கிறார் என்பார். அவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவலிலும், மந்திர தீட்சை வாங்க வேண்டுமென்ற விருப்பத்தின் காரணமாய்த் தான் அங்கு சென்றேன்.

அங்கு தான் பேலூர் மடத்தின் தலைவர் திரு ரங்க நாதானந்தா மகராஜ் என்றவரைச் சந்தித்தேன். எனக்கு மந்திர தீட்சை தந்தார். ஒரு நொடி அவரைப் பார்த்தேன். ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். முடிந்தது. அவர் இறந்து கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஆகிறது. இன்றைக்கும் அவரின் அன்பும், அந்தப் பார்வையும் என்னை விட்டு அகலவே இல்லை.

சில மனிதர்கள் பிறப்பார்கள். இறப்பார்கள். அவர்களில் சிலர்தான் பலர் மனதில் வாழ்வார்கள். இவர்களைத்தான் இறப்பே இல்லாதவர்கள் என்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் எனக்கு தீட்சை அருளிய சுவாமி. திருமணம் செய்து கொள்ளாமல் மக்களுக்காக வாழ்ந்த ஸ்ரீ ரங்க நாதானந்தா அவர்கள் 1908 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் கையால் முதன் முதலில் மந்திர தீட்சை பெற்றுக் கொண்ட பாக்கியத்தை அளித்த இறைவனுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலே இருப்பவர் தான் ஸ்ரீ ரங்க நாதானந்தா. யுனிவர்சல் டெம்பிளையும் பார்க்கலாம்.

என் வாழ்க்கையில் நடந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் தான் மேலே இருப்பது.

Sunday, August 8, 2010

அம்முவும் புஜ்ஜுவும்





அம்முவும், புஜ்ஜுவும் தோழிகள். புஜ்ஜு அம்முவின் பக்கத்து வீட்டுக்கார பெண் குழந்தை. வெகு சூட்டிகையான பெண். அம்முவின் அருமை பெருமைகளை எழுத ஆரம்பித்தால் அது ஒரு அம்முபாரதம் ஆகி விடும்.

அம்மு ஒரு தாதா. புஜ்ஜு ஒரு தாதா. இரண்டு தாதாக்களும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும். வீடே அதகளப்படும். ஞாயிறுகளில் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கும், கலாட்டாவுக்கும் இறுதிப் பரிசு இவர்கள் அம்மாக்களின் மொத்துகள். அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து என்று இரவு வரை நீண்டு கொண்டே இருக்கும் இவர்களின் ராஜ்ஜியம்.




கோவை ஹோப் காலேஜ் - காதலர்கள்

நேற்று நானும் எனது நண்பரும் கோவை ஹோப் காலேஜ்லிருக்கும் ஃப்ரூட் லேண்டில் விற்கப்படும் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தோம். நல்ல கூட்டம். அரை மணி நேரம் காத்திருந்து சூடான, ஆவியில் வேக வைக்கப்பட்ட சோளப்பிஞ்சை வாங்கிக் கொண்டு காரை ஃப்ரூட் லேண்ட் அருகில் இருக்குமொரு சந்தில் பார்க் செய்து விட்டு பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

இந்த ஸ்வீட் கார்ன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. ஆனால் இதன் மேல் உப்பையும், வெண்ணெயையும், லெமன் கலந்த மிளகாய்பொடியையும் தடவி தருவார்கள்.அதைத் தவிர்த்து விட்டுச் சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு மாருதி கார் பார்க் செய்யப்பட்டிருந்தது. காரின் சன்னல்கள் லேசாக திறந்து வைக்கப்பட்டிருந்தன. நண்பர் அதைக் கவனித்து விட்டு என்னிடம் காருக்குள் என்னவோ நடக்கிறது என்றார். மறந்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்று சொல்லி விட்டு கார்னில் மூழ்கி விட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த போது கார் கதவு திறந்து ஒரு பெண் இறங்கினாள். நண்பர், சார் அங்கே பாருங்க என்று அலறினார். அந்தப் பெண் எங்கள் காருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காருக்குச் சென்றார். நல்ல விளக்கொளியில் அவரைக் கவனித்தபோது திருமணமான பெண் என்று தெரிந்தது. ஏன் தவறாக நினைக்க வேண்டுமென்று சொல்லி அந்தப் பெண்ணின் உறவுக்காரராக இருக்கும் என்று நண்பரிடம் சொன்னேன். அதற்கு நண்பர் என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

அந்தப் பையனை பாருங்க என்றார். கல்லூரியில் படிக்கும் பையன் அவன். காரின் பின் சீட்டிலிருந்து டிரைவர் சீட்டுக்கு மாறி காரை எடுத்துக் கொண்டு சென்றான். அந்தப் பெண்ணும் தன் காரை எடுத்துக் கொண்டு சென்றார். இதெல்லாம் நடந்த நேரம் இரவு 7.30க்கு.

நண்பரிடம் இதுவும் ஒரு காதல் தான் என்றேன். தவறாகச் சொல்கின்றீர்கள், இதற்குப் பெயர் கள்ளக்காதல் என்றார்.

கள்ளக்காதல், நல்லகாதல் என்று காதலில் இன்னும் எத்தனை வகைகள் இருக்கின்றனோ தெரியவில்லை. வாழ்க்கையின் போக்கு சிலருக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுக்கும். அது மேற்படிச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கிடைக்கும்.

வாழ்க தமிழ் சமுதாயமும், கலாச்சாரமும்

- அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Wednesday, August 4, 2010

அன்றும் இன்றும்


பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது எனது தோழனும், எங்கள் வீட்டு விவசாய வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சந்திர போஸுக்கு கல்யாணம் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண் பார்த்து அனைவருக்கும் பிடித்து விட்டது. வீட்டு வாசலில் மாமா, தாத்தா, அம்மா, அக்கா, போஸ் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர். நான் அவனிடம் சொன்னேன். போஸு கல்யாணம் முடித்தவுடன் உன் பொண்டாட்டியை கொண்டு வந்து இங்கே விட்டு விட்டு வீட்டுக்குப் போயிடு என்று அவனைக் கலாட்டா செய்தேன். அவனும் சரிடா என்று சொல்லி விட்டான்.

கொஞ்ச நாட்களில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்தான். நான் வாசலில் சேரில் அமர்ந்திருந்தேன். அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு என் அருகில் வந்தனர்.

வந்தவன், தங்கம், நான் கிளம்புறேண்டா, அண்ணி கையை பிடித்து என் கையில் கொடுத்து, நீயே பாத்துக்க என்று சொல்ல வெட்கத்தில் நெளிய ஆரம்பித்தேன். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரி சிரி என சிரிக்க ஆரம்பித்தனர். அண்ணியோ ஒரு படி மேலே போய் என்னங்க, ஒன்னும் பேச மாட்டேங்குறீங்க என்று சொல்ல வெட்கத்தில் எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

அன்றைக்கு சரியான கலாட்டா.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஓடி விட்டன. போஸின் பையன் இஞ்சினியரிங் படிக்கப் போகிறான். பெண்ணும் படித்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு திடீரென்று பலா பிஞ்சு சாப்பிடனும் போல இருக்க, அவனுக்கு போன் போட்டேன். அண்ணி வாய்ஸ் கேட்டது. என் குரல் கேட்டவுடன் அடையாளம் தெரியாமல் போஸிடம் கொடுத்து விட்டார்கள்.

டேய் போனைக் அங்கே கொடுடா என்றேன். அண்ணி வாங்கிப் பேசினார்கள்.

என்ன அண்ணி, அப்படியே தான் இருக்கின்றீர்களா? இல்லை வயதாகி விட்டதா என்றேன். ஏன் நீங்களே வந்து பாருங்களேன் என்றார். நீங்க அப்படியே இருந்தா, வந்து கூட்டிக்கிட்டு வருகிறேன். என்னுடன் வருகின்றீர்களா என்றேன். அவரும் உடனே கிளம்புன்னு சொல்லுவாரு, நீங்க வாங்க உங்க கூட வந்துடுறேன் என்றார். சிரி சிரியென்று சிரித்தேன்.

அருகில் அமர்ந்திருந்த என் மனைவி, உங்களுக்கு ரொம்பவும் தைரியம் தான் என்றாள். அவ்ளுக்கு எங்கே தெரியப்போகிறது எங்களைப் பற்றி?

போஸிடம் பலா மோசு அனுப்பி வை என்றுச் சொன்னேன். இப்போ எங்கேடா போறது என்றான். அம்மாகிட்டே சொன்னேன், அவங்க உன்னிடம் சொல்லச் சொன்னாங்க, சொல்லிட்டேன் என்றேன். எங்காவது பிடித்து அனுப்பி வைப்பான்.

எனது உயிரோடு கலந்து, என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போஸ் அடுத்த பிறவியில் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன்.

* * * * *

Tuesday, August 3, 2010

கோவைக்கு வந்த முதல்வரும் இந்திய ஜன நாயகமும்


மதியம் பனிரெண்டு மணிக்கு காந்திபுரம் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் ட்ரெண்டியில் சென்று கொண்டிருந்தேன். நேற்றைக்கு சற்றே வெயில் கடுமையாக இருந்தது. குளிர் காற்று வீசினாலும் வெயிலின் சூடு உடம்பிலேறி வியர்வை பெருகியது. என்னடா இது கோவைக்கு வந்த சோதனை என்று வெயிலை நொந்து கொண்டு எரிச்சலுடன் காந்திபுரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நேரம் வெயிலில் நிற்க முடியவில்லை. சோர்வும், எரிச்சலும் ஒரு சேர வந்தன. மனதில் அயர்ச்சியும் ஏற்பட்டது.

இள நீர் கடையில் செவ்வெளநீர் ஒன்றை பருகினேன். கடைக்காரர் புன்னகை முகத்தோடு பேசினார். வெயில் ரொம்ப போலிருக்கு என்றேன். அடுத்த வார்த்தையாக அயோக்கியப்பயல்கள் அதிகம் சார் அதனால் தான் வெயில் இப்படிக் கொளுத்தி எடுக்கிறது என்றார். அயோக்கியப் பயல்களுக்கும் வெயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

அவினாசி சாலை முழுதும் துடைத்து வைத்தாற்போல இருந்தது. இருபக்கமும் வழி நெடுகவும் காவல்துறையினர் பத்தடிக்கு ஒருவராய் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் வருகிறார் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ஒருபக்கம் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் மறுபக்கம் சுத்தமாய் நிறுத்தி விட்டார்கள்.

முதல்வர் வந்தால் அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செய்வார். நீங்கள் எதற்கு இப்படி வேகாத வெயிலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கத் தோன்றியது. கேட்க முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியும், எரிச்சலும் அவர்களுக்கும் ஏற்படும் தானே என்று நினைத்தேன். ஒருத்தருக்காக இத்தனை பேர் வெயிலில் நிற்கின்றார்களே இது தான் மக்களாட்சியா என்று தோன்றியது.

அரை மணி நேரம் அவினாசி, மசக்காளிபாளையம் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அத்தனை வண்டிகளும் உறுமியபடியே நின்றன. வெயிலும், டீசல் பெட்ரோல் புகையும் சேர்ந்து கருக்கி எடுத்தன. தீங்கு விளைவிக்கும் புகையினை சுவாசித்துக் கொண்டிருந்தோம். முதல்வர் பத்திரமாய் ஹோட்டலுக்கு சென்று சேர எத்தனையோ பேரின் உடலாரோக்கியம் கெட்டது.

ஏன் நிற்கிறோம் என்று யோசித்தேன். இந்திய ஜன நாயகத்தின் காரணமாய் நிற்கிறாய் என்றது மனது.

உண்மைதானே?


* * * * *

Monday, August 2, 2010

மனிதர்களுள் மாணிக்கங்கள் - குமார்





கோவை மசக்காளிபாளையத்தில் சில நண்பர்களுடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். சில்லிட்ட காற்று உடம்பைத் தழுவ அந்தச் சமயத்தில் சூடாக ஏதேனும் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற நினைப்புடன், அருகிலிருந்த பேக்கரியில் லெமன் டீ ஆர்டர் செய்தோம்.

கம கம வாசனையுடன் லெமன் டீ சாப்பிட்டு விட்டு, எதிர்ப்புறமாக இருந்த அகண்ட சாலையில் காருக்குள் அமர்ந்து கொண்டு சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்த போது, மீன் வறுவல் வாசத்தை, காற்று எங்களிடம் கொண்டு வந்தது.

ஒரு தள்ளுவண்டியில் மீன் வறுத்துக் கொண்டிருந்தார்கள். சுவாரசியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று தட்டுகள் நிறைய மீனை வறுத்தவர், அந்த எண்ணெயை அருகில் இருந்த சாக்கடையில் கொட்டினார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. என்னடா இது உலக அதிசயம் என்று எண்ணி அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அதற்குள் நண்பரொருவர் ஒரு தட்டு வறுவல் மீனை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

சார் என் கடைக்கு நிறைய கஸ்டமர்ஸ் இருக்காங்க. சின்னப் பிள்ளைகள் நிறைய பேர் வருவார்கள். இரண்டு லிட்டர் பாமாயிலை மீன் வறுத்தவுடன் கொட்டி விடுவேன். மேலும் மேலும் எண்ணெய் சேர்த்து வறுப்பது கிடையாது. என்னால் பிறரின் உடலுக்கும், குழந்தைகளின் நலத்துக்கும் தீங்கு நேரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் சார் அடிக்கடி எண்ணெயை மாற்றுகிறேன் என்றார்.

ஆச்சர்யம். மீந்து போன பொருட்களை மறு நாள் சூடாக விற்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாய் வெளியிட்டு மகிழ்வார்கள். கால்வதியான மருந்துப் பொருட்களை விற்பவர்களும், காலாவதியான உணவுப் பொருட்களை விற்கும் பன்னாட்டு விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு மிகச் சிறந்த தொழிலதிபர்கள் என்று அவார்டுகளை வழங்கும் நமது அரசாங்கம். வியாபாரம் என்ற பெயரில் மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற கொலைகாரர்கள் உலவும் இந்தப் பூமியில் தன்னை நம்பி சாப்பிட வரும் மனிதனின் நலத்தில், கவனம் வைத்துச் செயல்படும் மிஸ்டர் குமார் என்பவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைவோம். ஏனென்றால் இவர்களைப் போன்றவர்களால் தான் இன்னும் மனித நேயம் மனிதர்களின் உள்ளத்தில் இருப்பது தெரிய வருகிறது.

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Thursday, June 10, 2010

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

நிவேதிதா எல்கேஜி படிக்கிறார். நான்கு வருடங்களாக எங்கும் செல்லாமல் கூடவே இருந்த செல்லமகளை பள்ளியில் அட்மிஷன் செய்து விட்டு வந்தோம்.

இரண்டு நாட்கள் கழிந்த பிறகு அவர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். வேனில் பயணம். மாலை நான்குமணிக்குத்தான் வருவார். அவர் கூடவே ரித்திக் நந்தாவும் செல்கிறார். அட்மிஷன் போட்டு விட்டுவந்த பிறகு மனசுக்கு பாரமாக ஆகிவிட்டது. இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன்.

நிவேதிதாவின் அம்மா என்னிடம் சரியான ரகளை செய்து கொண்டிருந்தார். பிள்ளையை கூடவேவைத்திருக்கப்போகின்றீர்களா என்று வம்பு செய்து கொண்டிருந்தார். எனது சோகத்தைப் பார்த்துசிரித்துக் கொண்டிருந்தார். பிள்ளை படிக்கப் போகிறாள் அதற்கு ஏன் இத்தனை அழிச்சாட்டியம்செய்கின்றீர்கள் என்று கோபப்பட்டார். ஆனால் அவர் என்ன சொன்னாலும் மனசுக்கு அதுதெரியவில்லை.

அந்த இரண்டு நாட்களும் சோகமாகவே கழிந்தது. திங்கள் அன்று ஆறு மணிக்கு நிவேதிதா எழுந்துகுளித்து விட்டு சாப்பிட்டு விட்டு ஜம்மென்று பள்ளிக்கு கிளம்பினார். வேனில் ஏற்றி விட்டு வந்தநிவேதிதாவின் அம்மா என்னிடத்தில் வந்து நின்றார். என்னவென்று அவர் முகத்தை நோக்க, கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது இதுதானோ?