குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, July 29, 2022

வங்கிக் கடன் பிரச்சினையிலிருந்து வெளியேற உதவுகிறோம்

முன்னுரை :

தமிழகத்தில் வங்கியில் கடன் பெற்று கட்ட முடியாத நிலையில் இருக்கும் நிறுவனங்கள் எதுவாக இருப்பினும், ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கு புது புராஜெக்ட்டுக்கு நிதி உதவி பெற்று நல்ல லாபம் பெறவும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மிகச் சிறந்த முறையில் கடனைச் செலுத்தி, நிறுவனத்தை வெற்றிப் பாதையில் பீடு நடை போட வைக்க என்னால் இயன்ற உதவியினைச் செய்யத் தயாராக இருக்கிறேன். 

மேலும் வங்கியில் கடன் கட்ட எப்படி அணுகுவது என்ற வழி முறைகளையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

தொடர்பு கொள்ள - 9600577755 - காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை

பொருளாதாரம் சார்ந்த பணிகள் என்னென்ன என்பதறிய கீழே இருக்கும் இணையதளத்தினைப் பார்க்கவும்.

www.vsjinfra.com

* * *

அன்பு நண்பர்களே,

இதுகாறும் சொத்துக்களுக்கான 120 வருட ஆவணங்கள் ஆய்வு செய்யும் லீகல் அட்வைஸராக வேலை செய்து கொண்டிருந்த போது, நான் சந்தித்த ஒரு பிரச்சினை என்னை அதிர்ச்சியுற வைத்தது. எனக்கு ஏற்கனவே பொருளாதாரத்திலும், பங்கு வர்த்தகத்திலும் அனுபவம் இருப்பதால் இந்தப் பிரச்சினையை எப்படி எதிர் கொண்டேன் எனப் பார்க்கலாம்.

நண்பரொருவர் காலையில் அழைத்து, “எனது நிறுவனம் ஏலம் போகப் போகிறது தங்கம் என்று புலம்பினார். இனி இப்படி இந்தச் சமூகத்தை எதிர் கொள்ளப்போகிறேன்? என் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும்? என் நிலமை என்ன ஆகும் என்று தெரியவில்லை. தலைக்கு மேல் வெள்ளம் போய் விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை, இனி என் உயிரை வைத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது?” எனப் பேசி அதிர வைத்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்றேன்.

நண்பரின் நிறுவனம் தற்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லாபமும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் முன்பு வாங்கிய கடனுக்கான வட்டியை கொரானா பிரச்சினையினால் கட்ட முடியாமல் போனது. தற்போது வரக்கூடிய லாபம் நிறுவனத்தின் இயக்கத்துக்கும், பொருட்கள் வாங்கவும், சம்பளம், மின்கட்டணம் செலுத்தவுமே சரியாக இருக்கிறபோது வட்டி எங்கே கட்டுவது?

வங்கி கடனுக்கான நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பி வைக்க, அவர் யாரோ ஒரு வக்கீல் மூலம் கோர்ட்டில் தடை ஆணை பெற்று சமாளித்து வந்தார். இதற்கிடையில் வக்கீலுக்கு செலவு வேறு. வங்கி மேலாளர் சொத்து ரெக்கவரிக்கான வேலையினைச் செய்து விட்டார். ஓ.டி.எஸ்ஸுக்கு 10 சதவீதமே தள்ளுபடி செய்தாலும் உடனடியாக சொத்தினை விற்பனை செய்து கடனைக் கட்ட முடியாது. பெரிய அளவில் கடன் இருப்பதால் எவரிடமும் வாங்கவும் முடியாது.

வீடு, கார் எல்லாம் இ.எம்.ஐயில் போய் கொண்டிருக்கிறது. தப்பிக்கலாம் என்று சொத்துக்களை விற்கலாம் என்ற போது பாதி விலைக்குக் கேட்டிருக்கின்றார்கள்.

கடனுடன் கம்பெனியை விற்கலாம் என்று முடிவு செய்த பின்னார் கடன் தொகை அளவுக்கே வாங்க முடியும் என்று பலர் சொல்ல, வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டார் நண்பர்.

அடுத்த வாரம் வங்கி நிறுவனத்தையும், சொத்தினையும் முடக்கி விட்டு, இருக்கும் நிலையில் ஏலம் விட ஏற்பாடுகளைச் செய்து வந்தது கண்டு என்ன செய்வது என்று தெரியாத எல்லோரும் கைவிட்ட நிலையில் எனக்கு போன் செய்திருக்கிறார்.

முதலில் பதட்டத்தைத் தணியுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது. என்ன செய்யலாம் என்று பார்த்து, அதன் படி முனையலாம் என்று ஆறுதல் படுத்தினேன்.

அவரிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும் பெற்று, ஆய்வு செய்து, எனக்கு தொடர்புடைய பொருளாதார நண்பர்களிடம் பேசினேன். இந்த நிறுவனத்தின் வங்கிக் கடனைத் தீர்க்க ஒரு செயல்திட்டத்தினை உருவாக்கினோம்.

வங்கியின் கடன் வசூலிப்பாணையை நிறுத்தி வைத்து, முன்பே வங்கியில் கடன் வாங்கி செலுத்தாத நிலையில் பாதிப்படைந்த சிபில் ஸ்கோர் பற்றி விவரித்தும், நிறுவனத்திற்கான செயல் திட்டத்தினை உருவாக்கி தனியாரிடம் கொடுத்து மீள் கடன் பெற அனுமதி பெற்றோம்.

அவ்வளவுதான்! நண்பர் மீண்டும் தனது நிறுவனத்தை வெற்றிகரமான பாதையில் நடத்தி வருகிறார்.

இப்போது அந்த நிறுவனத்தின் நிதிப் பொறுப்பினை கண்காணிப்பில் வைத்திருப்பதால், தொழிலில் இறக்கம் வரும் போது சரி செய்ய எனது நண்பர்களான பொருளாதார நிபுணர் குழு உதவி செய்திட ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறேன். மிகச் சிறந்த நிதி மேலாண்மை, ஆடிட்டிங்க், விற்பனைக்கான ஆலோசனைக் குழு என அவருக்கு உதவிட ஏற்பாடுகள் செய்து கொடுத்திருக்கிறோம். இனி அவர் தன் நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கியே ஆக வேண்டிய சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

இதைப் போன்ற சர்வீஸ்களை இனி எல்லோருக்கும் கொடுக்கலாம் என்ற நினைப்பில் இந்தப் பதிவினை எழுதுகிறேன். என்னென்ன பணிகளைச் செய்கிறோம் என்று கீழே இருக்கும் இணைப்பில் உள்ள இணையதளத்தினை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.

www.vsjinfra.com

தமிழகத்தில் வங்கியில் கடன் பெற்று கட்ட முடியாத நிலையில் இருக்கும் நிறுவனங்கள் எதுவாக இருப்பினும், ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் நிறுவனங்களுக்கு புது புராஜெக்ட்டுக்கு நிதி உதவி பெறவும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மிகச் சிறந்த முறையில் கடனைச் செலுத்தி, நிறுவனத்தை வெற்றிப் பாதையில் பீடு நடை போட வைக்க என்னால் இயன்ற உதவியினைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

மேலும் வங்கியில் கடன் கட்ட எப்படி அணுகுவது என்ற வழி முறைகளையும் தங்களிடம் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.


Tuesday, July 26, 2022

நிலம் (100) - PACL LTD நிலங்கள் ஜாக்கிரதை

பி.ஏ.சி.எல் (Pearl Agriculture Private Limited) நிறுவனமானது சிட் பண்ட்ஸ் வணிகத்தில் முதலீட்டாளர்களுக்கு நிலம் வாங்கித் தரப்படும் என்று அறிவித்திருந்தது கண்டு கிட்டத்தட்ட 5.6 கோடி முதலீட்டாளர்கள் மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்த தொகை சுமாராக ஆறாயிரம் கோடி.

இந்த நிறுவனமானது 1996ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 120 கோடி முதலீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிரந்தர நிர்வாகியாக சுப்ரதா பட்டாசார்யா நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனமானது குறைந்த விலையில் நிலங்கள் தருவதாக விளம்பரம் செய்தது. முதலீட்டாளர்கள் குவிந்தனர். இந்தியா முழுமையிலும் நிலங்களை வாங்கிக் குவித்தது. அதன் பிறகு இந்த நிறுவனம் சுமார் 640 புதிய நிறுவனங்களை உருவாக்கி ஷேர்மார்க்கெட் மற்றும் இதர தொழில்களைச் செய்தன.

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கவனித்த செபி (SEBI) உசாரடைந்ததது. நிறுவனத்தின் செயல்களை நிறுத்தியதுடன் சுமார் 7269 கோடி ரூபாய் அபராதம் விதித்தது மட்டுமின்றி, இயக்குனர்களையும் கைது செய்தது. அன்றிலிருந்து இந்த நிறுவனம் செபி விதித்த அபராத தொகையினையும் கட்டவில்லை, முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற தொகையினையும் திருப்பிக் கொடுக்கவில்லை.  இதனால் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் கமிட்டி உருவாக்கி சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. முதலில் சொகுசுக் கார்கள் ஏலம் விடப்பட்டன. 

இந்த நிறுவனத்திற்கு 23 மாநிலங்களில் சுமார் 26,500 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் நாட்டில் மட்டும்  8,193 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. 

சென்னை, திண்டுகல், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராம நாதபுரம், சேலம், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சொத்துக்களை வாங்கி உள்ளனர். உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சொத்தின் ஆவணத்தினை கீழே பார்க்கவும்.


இவ்வாறு தமிழ் நாட்டில் வாங்கிக் குவிக்கப்பட்ட நிலங்களை அதிமுக ஆட்சியின் போது பல்வேறு சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த வித விசாரணையும் இன்றி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக பதிவுத்துறையின் சுற்றறிக்கையை துச்சமென நினைத்து பல மாவட்ட துணைப்பதிவாளர்கள் மோசடியாக பல ஆவணங்களைப் பதிவு செய்து கொடுத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் நிறுவனம் வாங்கி வைத்திருந்த சொத்துக்களை முடக்க செபி முயற்சி எடுத்து சுமார் 523 கோடி சொத்துக்களையும், சுமார் 889 கோடி மதிப்புள்ள ஷெரட்டன் மிரேஜ் ஹோட்டல் சொத்துக்களையும் முடக்கியது. ஆனால் இந்தச் சொத்துக்களின் தற்போதைய நிலை என்ன என்று செபி தெரிவிக்கவில்லை என முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.


மேற்கண்ட நிலங்களை விற்பனை செய்து, வரக்கூடிய பணத்தினை முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க செயல்பட்டுக் கொண்டிருந்த போது தமிழகத்தில் உள்ள நிலங்களை முறைகேடாக விற்பனை செய்தது போல ஆவணங்களை அதிமுக ஆட்சியின் போது பதிந்தார்கள். இந்த பதிவுகளை அறப்போர் இயக்கம் ஆர்.டி.ஐ மூலம் கண்டுபிடித்து பல்வேறு துணைப்பதிவர்கள் மீதும், பத்திரப்பதிவு துறையினர் மீதும் புகார் கொடுத்தது. 

இது பற்றி தற்போது ஆராய திமுக அரசு முறைகேடான பத்திரப் பதிவு ஆய்வுகளைக் கண்டறிய குழு அமைத்துள்ளது. பல துணைப்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் சொல்கின்றன.

இனி என்ன ஆகும்?

கோர்ட்டுகளில் இனி பத்திரம் பதிவு செய்தவர்கள் வழக்குத் தொடுப்பார்கள்.  பிஏசிஎல் முதலீட்டாளர்களுக்கு அவ்வளவு விரைவில் பணம் கிடைத்து விடுமா என்றால் வாய்ப்புகள் குறைவு என்பது நிதர்சனம்.  அதுமட்டுமல்ல இதுவரைக்கும் பிஏசிஎல் கம்பெனியில் முதலீடு செய்தவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்திருப்பார்களா? அப்படி வைத்திருப்பவர்கள் இறந்து போயிருந்தால் வாரிசுகளுக்கு அது தெரியுமா? என்ற பல கேள்விகள் இருக்கின்றன.

அப்படியே விற்றாலும் சுமார் 60 சதவீதம் தவிர இதர 40 சதவீதம் என்னவாகும் என்பதும் ஒரு கேள்விக் குறிதான்.

செபியில் சித்ரா ராமகிருஷ்ணன் போல பலர் வருவர். வந்தால் பிஏசிஎல் சொத்துக்களை  விற்பனை செய்ய விடுவார்களா? என்பது ஒரு கேள்விக் குறி.

ஆஸ்திரேலியாவில் முடக்கப்பட்ட ஹோட்டல் சொத்துக்கள் விற்கப்பட்டனவா என்று யாருக்கும் தெரியாது? அதன் நிலை என்னவென்றும் தெரியாது. 

தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்க விரும்புவர்களுக்கு பிஏசிஎல் சொத்துக்கள் எவையென்று தெரியாது. என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள். கட்டணத்துடன் கூடிய சேவை தர தயராக உள்ளேன்.

தெரிவிக்க வேண்டும் என நினைத்ததை எழுதி விட்டேன். 

தேவைப்படுபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.


Monday, July 25, 2022

நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்

2022ம் வருடத்திய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விடைபெற்று இருக்கும் என நினைக்கிறேன் சூர்யா. உங்களுக்கு முகம் தெரியாத எத்தனையோ ரசிகர்கள் வாழ்த்துக்களை சோஷியல் மீடியாக்கள் மூலம் தெரிவித்திருப்பார்கள். மனம் மகிழ்ந்திருப்பார்கள். நெருக்கமானவர்களின் அன்பில் நெகிழ்ந்திருப்பீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

தங்களின் ஆரம்பகால படங்களில் இருந்து தங்களைக் கவனித்து வரக் காரணம் உங்களின் தந்தையார் சிவகுமார். சுத்தமான நடிகரின் வாரிசுகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற ஆய்வுக்காகவும் உங்களைப் பின் தொடர்ந்தேன். அதைத் தொடர்கிறேன். தர்மத்தின் பாதை சூக்குமமானது அல்லவா? அதை அறியும் ஆவல் எனக்கு நிரம்ப உண்டு.

ஆரம்பகால திரைச்சித்திரங்களிலிருந்து தற்போது வரையுள்ள உங்களின் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் திரைச்சித்திர மாற்றங்களையும் கவனித்தே வருகிறேன். எவரும் செய்திடா ஒரு பணியை மக்களுக்குச் செய்து வருவதால், தாங்களின் அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி அறிவித்தவன் கடவுள் ஆவான் ஆனீர்கள் பலருக்கு.

கல்வியை காசுக்கு விற்பனை செய்யும் இந்திய ஜனநாயகத்தில் வாழவே தகுதியற்ற ஏழைகளின் வாரிசுகளுக்கு தாங்கள் செய்யும் பணிக்கு பாராட்டுகள் என்பது சரியாக இருக்காது. 

ஒரு சக மனிதனின் துயரத்தில், அவனது முன்னேற்றத்தில் ஒரு படியைக் கடக்க தாங்கள் செய்யும் அறச்செயலை இலவசம் என்றுச் சொல்ல முடியாது. கடமை என்றுச் சொல்வதுதான் சரியாக இருக்கும். அந்த வகையில் தாங்கள் பலரைக் கவர்ந்திருக்கின்றீர்கள்.

தாங்கள் நடித்த திரைச்சித்திரங்களில் ஜெய் பீம் படத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஃபிரிஞ்ச் எலிமெண்ட்ஸ் என்றுச் சொல்லக்கூடிய மத, இன, சாதிய விழுமியங்களை தங்களின் வயிற்றுப்பிழைப்புக்கு வைத்திருக்கும் பலர் எதிர்த்த்து போல உலகில் வேறு எங்கேயும் எவரும் எதிர்க்கவில்லை.

ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

ஜெய் பீம் படமானது எளியவர்களுக்கு நீதி கிடைப்பதைப் பற்றிப் பேசி இருக்கிறது. எளியவர்களுக்கு நீதி கிடைத்து விட்டால் ஃபிரிஞ்ச் எலிமெண்ட்ஸுகளுக்கு வயிற்றால் போய் விடும் என்பதை அவர்களின் எதிர்ப்பில் இருந்து கவனித்திருக்கலாம். எளியவர்களுக்கு எதுவும் கிடைத்து விடக்கூடாது என்பதில் இன, சாதிய வன்முறை ஜனநாயக போலி அமைப்புகள் மிகக் கவனம் கொண்டுள்ளன என்பது தாங்களுக்குப் புரிந்து இருக்கும்.

எத்தனையோ கொடுமைகள் அனு தினமும் நடந்து கொண்டிருக்கும் உலகில் ஒரு காலண்டரும், ஒரு பெயரும் தான் சாதிய வன்முறை ஜனநாயக போலிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர்கள் கதறிய போது அவர்களின் அரசியல் களம் எதுவென உலக மக்களுக்கு தெளிவுபடுத்தியது.

இந்தியா எவ்வளவு பெரிய போராட்டங்களைச் செய்து, எளியவர்களின் வாழ்க்கையை மைய நீரோட்டத்துடன் இணைத்துள்ளது என்பதை அறிய அம்பேத்கார் அவர்களின் ‘இந்துவாக சாகமாட்டேன்’ என்ற புத்தகத்தின் சிறிய பகுதியை இங்கு அவர்களின் அன்பு அனுமதியுடன் பதிகிறேன்.




Thanks to Periyar Kazhagam

மேலே இருக்கும் பகுதிகளைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன். 

உருவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சக மனிதர்களுக்கு, தான் உயர் சாதி என்று கருதிக் கொண்ட மனிதர்களால் செய்யப்பட்ட   கொடுமைகளில் இருந்து இந்தியர்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதன் தாக்கம் இன்னும் சாதிய சுவடுகளாய் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

சுயநலத்திற்காகவும், தன் வயிற்றுப் பிழைப்புக்காகவும், அதிகார வெறிக்காகவும் ஜனநாயகம் வழங்கும் சட்டத்தின் பாதுகாப்பில் சுகமாக அமர்ந்து கொண்டு சாதிய வன்முறைகளை கட்டவிழ்த்து வரும் பல அமைப்புகள், சாதி வெறியினை இன்றைக்கும் நீரு பூத்த நெருப்பு போல ஊதிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

இன்றைய இந்தியாவிற்கும் அம்பேத்கர், பெரியார் வாழ்ந்த காலத்து இந்தியாவுக்குமான வேறுபாட்டினை நினைத்துப் பார்க்க வேண்டும். 

தூய்மையான துணி கூட உடுத்தக் கூடாது என்று அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில், பிரிட்டிஷாருடன் அதிகாரத்தில் அமர்ந்திருந்தவர்கள் செய்த கொடுமைகளைப் பட்டியல் இட்டுக் காட்டிட முடியுமா? அவ்வளவு எளிதில் நிறைவடையும் வேலையா அவைகள். கேரளாவில் பெண்களின் முலைக்கு வரி வசூலித்த வரலாற்று உண்மையைத் தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

அடிமைகள் இல்லாது போனால், தங்களது சுகபோகம் சின்னாபின்னமாகி விடுமே என்று கவலைப்பட்ட ஃபிரிஞ்ச் எலிமெண்டுசுகள் சாதியை மதமாக மாற்றி விட்டார்கள். மதத்தின் பின்னால் சாதியை மறைத்துக் கொண்டு வெறியூட்டப்படும் தன்மையில் மக்களை அரசியல் போர்வையில் வன்முறையாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஃபிரிஞ்ச் எலிமெண்ட்சுகள்.

சாதி போய் இப்போது மதம் வந்து விட்டது. மதத்தில் ஆகமங்கள், நியமங்கள், விதிகள் நீதிமன்றத்திலும் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கின்றன என்பதை சமீபத்திய தீர்ப்புகள் வழியாக தாங்கள் அறிவீர்கள். ஒரு எளியவனுக்கு கடவுள் என்பது தீண்டக் கூடாத ஒன்றாக இருப்பது கொடுமையிலும் கொடுமை. 

ஜெய் பீம் படத்தின் வெற்றி என்பது தாங்கள் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்திற்கு அளித்த ஒரு கோடி ரூபாயில் இருக்கிறது. அதுமட்டுமின்றி ரத்தமும் சதையுமாக நம் கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் அடிபட்டே செத்தவரின் குடும்பத்துக்கு பொருள் கொடுத்து கைதூக்கி விட்ட பண்பும் ஜெய் பீம் படத்தின் நோக்கத்தின் வெற்றிக்குச் சான்று.

சமூக பிரக்ஞையுடன் இனி வெளிவரப்போகும் தங்களின் திரைச்சித்திரங்கள் இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் மகிழ்ச்சியே. டிவிட்டரில் தங்களின் அடையாளமாக அகரம் பவுண்டேஷனை வைத்திருப்பது ஒன்றே போதுமானது. உலகில் நாம் பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்வதுதான் வாழ்க்கை. அதைத் திறம்பட செய்து கொண்டிருக்கும் பலரில் தாங்களும் ஒருவர் என்பது உலகறிந்தது.

இப்போது உங்களைச் சுற்றி வரும் ஒரு சில விஷயங்கள் தான் உங்களுக்கு ஒரு கடிதத்தை எழுதுவோம் என்று நினைக்க வைத்தது.

இவ்விடத்தில் ஒரு சிறு கதையைச் சொல்ல விரும்புகிறேன். 

”சூஃபி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?” என ஒரு மாணாக்கன் சூஃபி ஞானி அப்துல்லா பின் அப்துல் அஜீஸிடம் கேட்டான்.

”அதற்கு சாதாரண மனிதனாக இருந்தாலே போதும்” என்றார் சூஃபி.

“அப்படியென்றால்?”

“சக்திக்கு மீறி எதையும் செய்யாதவனாக இருந்தாலே போதும்”

“என் இளவயதில் என் சக்திக்கும் மீறி அதிகமாக கற்க விரும்புகிறேன். அது தவறா?” என்றான் மாணவன்.

“தவறில்லை” 

“பின்னே சூஃபி ஆவதுதான் எப்படி?” 

“சூஃபி என்ற பெயர் கூட பொது நலத்தால் மனிதனுக்கு கிடைக்கிறது. இந்தப் பெயர் மனிதனை எந்த விதத்திலும் உயர்த்துவதில்லை. அப்படி ஒருவன் நினைத்து விட்டாலே அவன் தன்னை இழக்கிறான் என்று பொருள்”

“ஓஹோ! பெருமை தேடி வரும் போது கூட அதைப் பெருமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது, அப்படித்தானே ஜனாப்?” 

சிரித்த சூஃபி அவனுக்கு ஒரு கதையினைச் சொல்கிறார்.

”அரண்மனையில் பணியாள் ஒருவன், அங்கு வரக்கூடியவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தான். அவ்வாறான நாளிலே, ஒருவன் தண்ணீர் குடிப்பது போல நடித்து, மறைத்து வைத்திருந்த கத்தியை பாதுஷா மீது எறிந்து அவரைக் கொல்ல முயன்றான். சமயோஜிதமாக செயல்பட்டு கத்தி வீச முயன்றவனை மடக்கிப் பிடித்து விட்டான். தன் உயிரைக் காப்பாற்றிய பணியாளனிடம், ’உனக்கு என்ன வேண்டுமென்று கேட்க, அதற்கு அவனோ எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றுச் சொல்லி விட்டான். பாதுஷாவோ மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்க, ’எனக்கு இந்த தண்ணீர் கொடுக்கும் பணியே போதுமானது’ என்றுச் சொல்லி விட்டான். இதைக் கேள்விப்பட்ட நாட்டு மக்கள் அவனை வான் அளவுக்குப் புகழ்ந்தனர். எத்தனையோ பேர் பாராட்டினர். அப்பாராட்டினால் மகிழ்ந்து அவன் தன் பணியைச் செய்யாமல் இல்லை. தொடர்ந்து தண்ணீர் கொடுக்கும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வந்தான். தன் பணி நிறைவான பின்பு அவன் சூஃபியாக மாறி விட்டான் என்று கேள்விப்பட்டேன்” 

”அந்த சூஃபி யாரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சொல்வீர்களா?” என்றான் மாணவன்.

“சூஃபி யாரென்று தெரியாது. ஆனால் அந்த அரண்மனையில் தண்ணீர் கொடுத்த பணியாள் நான் தான்” என்றுச் சொன்னார் அப்துல் அஜீஸ் என்கிற சூஃபி ஞானி.

கதை முடிந்தது சூர்யா.

புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தாங்கள் இனிமேல் எந்த வித எதிர்ப்புக்கும் பணிய மாட்டீர்கள் என்று தெரிந்து கொண்ட ஃபிரிஞ்ச் எலிமெண்ட்சுகள் உங்களை முற்றிலுமாக சமூகத்திலிருந்து நீக்க முனைந்திருக்கின்றன என தற்போது தங்களைச் சுற்றி நிகழ்ந்து வரும் நிகழ்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன.

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகளையும், ஆஸ்கார் அவார்டு கமிட்டியில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் நான் அவ்வாறே பார்க்கிறேன்.

விருதுகள் ஒருவனின் ஓட்டத்தை முடித்து விடும் தன்மை கொண்டவை. விருதுகள் என்பவை ஈகோவிற்கு கிடைத்த அங்கீகாரம். விருதுகளால் பெருபவர்களுக்கு பயன் ஒன்றும் இல்லை. ஓரிரு நாட்களுக்கு மக்களும், பத்திரிக்கை உலகமும் பேசும். பின்னர் மறந்து போகும். அப்துல் கலாம் விஞ்ஞானியாக தொடர்ந்திருந்தால் இந்தியாவிற்கு பல நலன்கள் கிடைத்திருக்க கூடும். ஆனால் அவரின் விதி மாற்றப்பட்டது. மனிதன் என்றைக்கும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

விருதுகள் என்பவை மனதிற்கு போடப்பட்ட கை விலங்குகள் போன்றவை. எதிர்ப்புகளும், சதிகாரர்களின் நய வஞ்சக நரித்தனமான அரசியல் நகர்வுகளுமே, எளியோரின் நன்மைக்காக வாழ்பவர்களுக்கு, அவர்களின் கடமையைச் செய்ய உதவும் தூண்டுகோல்களாக இருப்பவை. பெரியார் மூத்திரப்பையை சுமந்து கொண்டே சாதிய வன்முறைகளுக்கு எதிரான சமூக நீதிப்போரைத் தொடர்ந்தார் என்பதை நினைவில் கொள்க.

பெரியார் என்பது சாதாரண வார்த்தை இல்லை. அந்த வரிசையில் ஈரோட்டுப் பெரியாருக்குப் பின்பு தான் சார்ந்த, அசுர பலம் கொண்ட மீடியாவில் இருக்கும் தாங்களை ‘இளைய பெரியாராகப்’ பார்க்கிறேன்.

ஆகவே விருதுகளை அகத்திலிருந்து நீக்கி விட்டு, தொடர்ந்து எளியோரின் வாழ்க்கையில் ஃப்ரிஞ்ச் எலிமெண்ட்சுகள் செய்யும் வன்முறைகளை உலகறியச் செய்திடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மனத்தூய்மையே பலத்திற்கு அடி நாதமென்பார்கள். அத்துடன் அறத்தூய்மையும் சேர்ந்து உங்களின் முயற்சிக்கு உதவட்டும்.

அன்புடன்

தங்கவேல் மாணிக்கம்

காருண்யா நகர், கோவை.

25.07.2022


Wednesday, July 20, 2022

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜெயகாந்தன் எழுதிய நாவல். அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததாக எழுதப்பட்ட இந்த நாவலை இன்றைக்குப் படிக்கும் போது வாழ்க்கையின் போக்கு என்பது அவரவர் முடிவில் தான் உள்ளது என்பது புரிந்தது.

கங்கா, அவளின் அம்மா, வெங்கு மாமா, கணேசன், பிரபு, மஞ்சு ஆகியோருடன் பயணிக்கும் இந்தக் கதையின் நாயகியான கங்கா இளம் வயதில் இக்கட்டான ஒரு நேரத்தில் முன் பின் அறியாத பிரபுவுடன் உறவு கொண்டு விடுகிறாள். அதை அவளின் அம்மாவிடம் சொல்ல கங்காவின் வாழ்க்கையை அவள் அம்மா சீரழிக்க ஆரம்பித்து விடுகிறார். பிராமணக் குடும்பத்தில் நிகழும் இந்தச் சம்பவத்தினால் கங்காவின் வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் சம்பவங்களின் தொகுப்பாய் விரியும் அந்த நாவலில் மன விசாரங்களை ஜெயகாந்தன் சம்பாஷனைகளாக விவரிக்கிறார்.



கங்காவை அவளின் அண்ணன் கணேசன் அடித்து விரட்டி விடுகிறான். வெங்கு மாமா அம்மாவையும் கங்காவையும் அழைத்துச் சென்று கங்காவைப் படிக்க வைக்கிறார். வெங்கு மாமா கங்காவை புணருவதற்கான கால நேரத்திற்காக விவாதங்களை கங்காவுடன் நிகழ்த்துவம் மட்டுமன்றி அவளுடன் பாலியல் சீண்டல்களை நிகழ்த்தி வருகிறார். 

பெண்களின் பெரும் பிரச்சினை இது. கையறு நிலையில் இருக்கும் பெண்கள் இந்தக் காலம் வரை ஆண்களால் வெங்கு மாமாவைப் போல சீண்டுகிறார்கள். வேறு வழி இன்றி பெண்கள் இணங்க வேண்டி வருகிறது.

சினிமாவில் பெண்களின் மீது ரகசிய வன்முறையை நிகழ்த்துகிறார்கள். எனது நண்பர் பைனான்ஸ் செய்திருந்த ஒரு படத்தின் சூட்டிங்க் சென்றிருந்தேன். நடிகை ஒத்து வர மாட்டேன் என்பதால் காலையில் மேக்கப் போட்டு சேரில் அமர வைக்கப்பட்டு மாலை வரை ஷூட் எடுக்காமலே அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்படி உட்கார்ந்திருப்பது எவ்வளவு நரகம் என்று அவளுக்கு மட்டுமே தெரியும். புரடக்‌ஷன் ஆளை அழைத்து விசாரித்தேன். அதெல்லாம் ஒரு கணக்கு சார் என்று சிரித்தார். கணக்கின் விடையையும் அவிழ்த்தார்.

பாலியல் சீண்டல்களை சினிமா ரகசியமாக நாசூக்காக செய்கிறது. பணம் வேண்டுமா? புகழ் வேண்டுமா? அப்போ இதைச் செய் என்று சொல்லாமல் சொல்கிறது. இப்போதெல்லாம் எல்லாக் கணக்குகளையும் தெரிந்து கொண்டுதான் சினிமா உலகம் பயணிக்கிறது. பணம் புகழின் முன்னால் அறம் என்ற ஒன்று இருக்கவே முடியாது. 

கங்காவுடன் அடையாளம் தெரியாத நிலையில் உறவு கொண்ட பிரபு தான் அவளின் கணவன், அவள் வேறு எவரையாவது திருமணம் செய்து கொண்டால் அது அறமல்ல என்ற கருத்தினை வெங்கு மாமாவும், கங்காவின் அம்மாவும் வைக்கிறார்கள். கங்காவின் மனதும் அதை நோக்கியே பயணிக்கிறது. கங்கா அவனைக் கண்டுபிடிக்கிறாள். அவனுக்கு திருமணமாகி குடும்பம் பிள்ளைகள் இருக்கிறது. அக்குடும்பத்துடன் நெருங்கிப் பழகுகிறாள். பிரபுவுடன் நெருங்கிப் பழகி அவனை உறவுக்கு அழைக்கிறாள். வப்பாட்டியாவது வைத்துக் கொள் என்கிறாள். அவன் மறுக்கிறான். கங்கா அவனை விட்டு விலகுகிறாள். கங்கா குடிக்கவும் புகைக்கவும் ஆரம்பிக்கிறாள். 

பெண் சூழலுக்கு கட்டுப்பட்டவள். தனித்தன்மையுடன் அவள் வாழ முற்பட்டால் சனாதன தர்மம் போல சூழல் தர்மம் அவளை நிர்மூலப்படுத்தி விடுகிறது. அவளைச் சார்ந்த உறவுகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி தன்னிலை குலைகிறாள்.

ஒழுக்கம் என்ற வேலியைத் தாண்டி அவள் வரும் போது, ஆண்களால் அவள் சூரையாடப்படுகிறாள். அவமானப்படுத்தப்படுகிறாள். கைவிடப்படுகிறாள். அவளின் மனம் குத்திக் கிழிக்கப்படுகிறது. பெரும்பான்மையான இந்திய பெண்களின் நிலை இன்றும் இப்படித்தான் இருக்கிறது. 

பொருளாதாரத்தில் நிறைவான பெண்கள் விட்டில் பூச்சிகளாய் மாறி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.எது சரி? எது தவறு? என்றும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் போக்கினை பொருளாதார சுதந்திரம் மறைத்து விடுகிறது.

என் தோழியிடம் கங்காவைப் பற்றிப் பேசினேன். இதெல்லாம் ஒரு கதையா என்று ஜெயகாந்தனை கிழித்து தொங்க விட்டாள். ஜெயகாந்தனுக்கு இவளைப் போல பெண்கள் வேண்டியிருக்கும். அதனால் இப்படியான கதைகளை எழுதி இருப்பார் போல என்று கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினாள். இன்றைய நவ நாகரீகப் பெண்ணின் மன நிலை இது. இந்த நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதினைப் பரிந்துரைத்தவர்கள் மடையர்கள் என்று சாடினாள்.

அப்படி அல்ல, அந்தக் காலத்தில் இந்த நாவல் ஒரு பெண்ணின் புரட்சியாகப் பார்க்கப்பட்டது என்பதால் விருது வழங்கப்பட்டிருக்கிறது. பிராமண சமூகத்தில் பெண்களை இழிவு செய்தது போல வேறு எந்தச் சமூகமும் இழிவு படுத்தவில்லை என்பதற்கான பல்வேறு தரவுகள் இருக்கின்றன என்று விவரித்தேன். சனாதன தர்மங்கள் அழிவுக்கானவை என்று சாட்சியங்களுடன் விவரித்தேன்.

பன்னாட்டு நிறுவனத்தின் மேலாளராக இருக்கும் அவருக்கு ஆண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ. சிங்கிள் மதராக இருக்கிறார். கொடுமை என்னவென்றால் தன் மகன் மீது அவர் வைத்திருக்கும் பிரியம். மீண்டும் சிறைக்குள் சிக்கிக் கொண்டிருந்தார்.

வாழ்க்கையின் சிக்கல் இங்கு தான் ஆரம்பிக்கிறது. ஒரு ஆணை வெறுக்கும் பெண், தன் உறவில் உருவான மற்றொரு மகன் என்கிற ஆண் மீது வைக்கும் பாசமென்பது வேடிக்கையானது.

மனிதர்கள் சக மனிதர்களுடன் நேசம் கொள்ளவில்லை எனில் பைத்தியமாகி விடுவார்கள். அரவணைப்பு, அன்பு, பாசம், நட்பு இன்றி வாழவே முடியாது. அப்படி வாழ்ந்த எவரும் தன் இறுதிக் காலத்தில் நிலைகுலைவர்.

ஒரு பறவை முட்டை இட்டு, குஞ்சு பொறித்து, இரை கொடுத்து வளர்த்து, குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்தவுடன் விட்டு விடுகிறது. மனிதன் தான் கடைசி வரை இழுத்துக் கொண்டு தொங்குகிறான்.

என் அம்மாவுக்கும் மனைவிக்கும் சச்சரவு உண்டானது. நான் அம்மாவிடம் சொன்னேன், ”என்னுடன் அவள்தான் பயணிக்கப் போகிறாள், உனது பயணம் இவள் வந்தவுடன் நின்று விட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னேன். சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை. அம்மாவின் வாழ்வியல் சூழல் வேறு, மனைவியின் வாழ்க்கைச் சூழல் வேறு.  எப்படி சச்சரவு இல்லாமல் இருக்கும்? அதை சரி செய்யும் வழி என்ன? யோசித்தேன். விடை கிடைத்தது. இன்றைக்கு அம்மாவின் மனதுக்குப் பிடித்த மருமகள் ஆகி விட்டாள். அவ்வளவுதான் விஷயம்.

நான் என் தோழியிடம் சொன்னேன், ”உன் மகன் உனக்கு உரியவன் அல்ல, வேறு எவளுக்கோ உரியவன். அவனால் உருவாகும் பிள்ளைகளுக்கு அவன் தகப்பன். எவரோ ஒருவருக்கு மருமகன், மச்சான். அவனை நல்ல முறையில் வளர்த்து, நல் குணங்களுடன் இன்னொரு பெண்ணிடம் ஒப்படைப்பதே உன் வேலை, அதை விட்டு விட்டு என் மகன் தான் எனக்கு எல்லாம் என்று கதை விட்டுக் கொண்டிருக்காதே” என்று தெளிவு படுத்தினேன்.

மகன் இன்றைக்கு திருமணமாகி மிக நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 

கங்கா வாழ்ந்த காலமும், அவளின் சூழலும் யாரால் அவளுக்கு பிரச்சினைகள் உருவானதோ அவனுடனேயே உறவு கொண்டு, தன் அடையாளத்தை அவன் பின்னால் மறைத்துக் கொள்ள தூண்டியது. அவன் கிடைக்கவில்லை என்கிற போது அவளின் வாழ்க்கை முறை மாறுகிறது. சூழல் முடிவுகள் எப்போதும் சுதந்திரமானவை அல்ல. அது எப்போதும் சிக்கல்களையே தரும்.

பெண்கள் எப்போதும் வேலிகளைப் போட்டு வைத்துக் கொண்டு, அந்த வேலிக்குள்ளேயே நின்று கொண்டு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அது மேலும் மேலும் துயரங்களையே அவர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.

தீராத சிக்கல்கள் அவர்களின் இறப்பின் வரை இருந்து கொண்டே இருக்கிறது.

சில நேரங்களில் சில மனிதர்கள் போலத்தான் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள். நேரமும் சூழலும் தான் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கிறது. ஆகவே எப்போதும் மறந்து விடவே கூடாதது,”சில நேரங்களில் சில மனிதர்கள்”.

Friday, July 15, 2022

வலிகளுடன் ஸ்வரங்கள் இசைக்கப்படுகின்றன

சங்கீதத்திலே சரிகமபதநி என ஏழு ஸ்வரங்கள் உண்டு. இந்த ஸ்வரங்களை ஆதாரமாகக் கொண்டு ராகங்கள் இசைக்கப்படுகின்றன. ராகங்கள் ஸ்வரங்களின் கூட்டுக் கலவை ஒலியாக இருப்பவை.

இசைக்கருவிகள் வழியாக வழிந்து வரும் இசைக்கோர்வைகள் ஒவ்வொன்றும் வலிகளின் பின்புலத்திலிருந்து வருகின்றன. மிருதங்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் தோலிருந்து வெளிவரும் நாத இசைக்கு ஒரு உயிர் பலியாக்கப்படுகிறது. இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றின் உயிர் பலியின் மீது உருவாக்கப்படுகின்றன. கூர்ந்து அவதானித்துப் பாருங்கள். 

வயலின் கூட அவ்வாறு தான் உருவாக்கப்படுகிறது. வயலினில் பயன்படுத்தும் ஸ்வர தந்திக் கம்பிகளும் அவ்வாறே. குரலோசையோ தொண்டை வலியின் வழியே பாடப்படுகின்றது.

இசையானது வலிகள் நிரம்பியவை.  வலிகளுடனே தான் மனிதனும் வாழ்க்கை நடத்துகிறான். வலி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இசை எங்கணம் வலிகளுடன் உருவாக்கப்படுகிறதோ அது போலவே மனிதனின் வாழ்க்கையும் வலிகளுடனே பயணப்படுகிறது. ஏதோ ஒரு தருணத்திலே மனிதர்கள் வலிகளை உணர்வர். பலர் வலி தாளாமல் அழுவதுண்டு. ஒரு சிலர் கண்களில் திரையிடும் கண்ணீர் வழியாக வலியை மறைப்பர். 

அந்த வீட்டில் எல்லா வசதிகளும் உண்டு. பொருளாதராத்தில் நிறைவான வீடு. அந்த வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் எனக்குள் உண்டாகும் வலியின் வேதனையை வார்த்தைகளால் விவரித்து விடமுடியாது.

என் மகள் நிவேதிதா, கே.எம்.சி.எச். மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு படுத்திருந்தாள். அவளின் அருகில் அமர்ந்திருந்தேன். கழிவறை செல்ல ஊசி நீக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும்.’அப்பா..! வலிக்குதுப்பா’ என்பாள். அவளுக்குள் உடலில் வலி. ஆனால் எனக்கு உயிருக்குள் வலிக்கும். கடவுள் மீது கோபம் கொப்பளிக்கும் தருணங்கள் அவை. 

எனக்கு மகள் பிறந்த பிறகு தான் தகப்பன் என்ற தர்மத்தை அறிந்து கொண்டேன். அதன் பிறகு பெண்களைப் பார்க்கும் விதம் மாறிப் போனது. நானொரு தகப்பன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றைக்கும். தகப்பனாக இருப்பது ஒரு தவமென கருதுகிறேன். என் அறமற்ற செயல்கள் என் பிள்ளைகளை எந்த விதத்திலேனும் பாதித்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன். எவரையும் துன்பப்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கிறேன்.

மாறிப்போனது வாழ்க்கை என் மகள் பிறப்பின் பின்பு.

நீண்ட நாள் கழித்து அந்த வீட்டுக்குச் சென்றேன்.

அம்மா வாங்கிக் கொடுத்தாங்க என்று விளையாட்டு பொருட்களைக் கொண்டு வந்து காட்டுகிறது. இது தலைக்கு ஹேர் பின், இது பொம்மை, இது சைக்கிள், புத்தகம் என ஒவ்வொன்றாய் என்னிடம் கொண்டு வந்து காட்டுகிறது. அழகிய வெண்சிட்டு போல சுறுசுறுப்பு. மெல்லிய, மென்மை தழுவும் கள்ளம் கபடமற்ற முகம் அக்குழந்தைக்கு. கண்களில் ஏதோ ஒரு சோகம். 

நானும் அவளும் ஒன்று தான்.

நாங்கள் இருவரும் அப்பா இல்லாதவர்கள். எனக்கும் அவளுக்கும் அப்பா இருந்தும் இல்லை. அம்மாவின் அரவணைப்பிலே வளர்ந்தவன் அடியேன். அதுவும் அப்படியே. என்னுடன் ஒட்டிக் கொண்டது. வாஞ்சையுடன் அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். மனசோடு ஒட்டிக் கொண்டது. விட்டுப் பிரிய மனமில்லை. ஆனால் பணி என்னை அழைத்தது.

என்னுடன் அவளை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து வந்தேன். ஓடிப் போய் காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே அமர்ந்து கொண்டது. நானும் கூட வருவேன் என்றது. 

எனக்குத் தெரியும் அவளை அங்கேயே விட்டு விட்டு திரும்பப் போகிறேன் என. அவளுக்குத் தெரியாது. நான் அவளை அழைத்துச் செல்லப் போகிறேன் என்று நம்பினாள். அவளிடம் சமாதானம் செய்த போது, எனக்குள் ஊசி குத்த ஆரம்பித்தது. வலி தாளாமல் கண்கள் வெடித்து விடுவது போல இருந்தது. அந்த வலியின் வேதனையை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். 

அன்றலர்ந்த மலர் போல ஒரு பூங்கொத்தாய் அக்குழந்தை என்னுடன் வர, அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்திலே நம்பிக்கை பூத்திருந்தது. நான் அந்த நம்பிக்கையை கசக்கி எரிந்தேன்.

’ஹாஸ்பிட்டலுக்குச் சென்று விட்டு வந்து அழைத்துச் செல்கிறேன்’ என சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தக் கண்கள் நம்பிக்கையுடன் என்னைப் பார்த்துக் கொண்டே ’நானும் வாரேன்’ என்று சொல்லச் சொல்ல, என் இதயம் வெடித்து விடும் போல வலிக்க ஆரம்பித்தது. 

சிறிது நேரத்தில் அவளுக்கு தெரிந்து விட்டது நான் அழைத்துச் செல்லமாட்டேன் என. அந்த ஏமாற்றத்தை அழுகைக்கு முன்பு வரும் ஒரு உதட்டுச் சுழிப்பில் அக்குழந்தை மறைத்ததைக் கண்டேன்.

அவளும் என்னைப் போலத்தான். ஏமாற்றங்களை நாங்கள் அப்படித்தான் மறைத்துக் கொள்கிறோம்.

வலித்தது நிரம்பவும். 

அந்த வலியோடு இன்னொரு தீரா வலியும் பாரமாய் நெஞ்சில் அழுத்திக் கொண்டிருந்தது. அது அந்தக் குழந்தையின் அம்மா. என் மகள் வளர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார் அவர். 

‘வாங்க, அங்கிள்’ என்று வரவேற்ற போது எனக்குள் உண்டான மனபாரத்தை இதோ எழுதிக் கொண்டிருக்கும் போதும் கூட இறக்கி வைக்க முடியவில்லை. அவரும் எனக்கு மகளே. எந்தப் பெண்ணாலும் மகள் என்று நினைப்பு வந்து விடுகிறது.

எந்த ஜீவனாக இருந்தாலும் கருணை கொள்வது, கருணையுடன் அணுகுவது என்ற மனப்பான்மை எனக்குள் முகிழ்த்து விட்டது. கருணையினால் நான் அடைவது வலிகள். அந்த வலிகள் தீரவே தீராது என்கிற போது உண்டாகும் வெம்மையினால் அவ்வப்போது மனசு உடைந்து போகிறேன். 

இயற்கையின் டிசைனான ஒவ்வொரு உயிரினங்களும் வலிகளுடனே வாழ உருவாக்கப்பட்டவை தானே. 

நீங்களும் உங்கள் வலிகளுடன் பயணம் கொண்டிருப்பீர்கள். தகிக்கும் பூமியில் கிடைக்கும் மர நிழல் போல, எல்லாம் சரியாகும் என்ற நினைப்பே வலிகளைச் சற்றே ஆசுவாசப்படுத்தும்.

ஸ்வரங்கள் உருவாக்கும் ராகங்கள் வழியே, நம் வலிகளை சற்றே மறக்கலாம் என்பதால் ராகங்களும் வலிகளுடனே இசைக்கப்படுகின்றன போலும்.

Thursday, July 7, 2022

கேரளாவில் நடந்த தீண்டாமைக் கொடுமைகள்

கடவுளின் மாநிலம் கேரளா. எனக்கு நிரம்பவும் பிடித்த நிலப்பகுதி. மலைக்கும் கடலுக்கும் இடையிலான பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றார்கள், இனி எதிர்காலத்தில் கேரளாவில் இந்துக்களே இருக்கமாட்டார்கள் என்றொருவர் சொன்னார். எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது? ஏன்? என்ன காரணம்? அதை ஆராய்ந்து தெளிவது நல்லது என்று நினைத்தேன். 

நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இனி வரப்போகும் சங்கதிகள் உண்மை. 

பிராமணரிடம் ஈழவ இனத்தவன் 36 அடி தூரத்திலிருக்க வேண்டும். புலயர் இனத்தவன் 96 அடி தள்ளி நிற்க வேண்டும். அடிமை வம்சத்தைப் பார்க்க நேரிடும் பிராமணர் தீட்டுப்பட்டவராக ஆவார். அவர் குளத்திலோ, அருவியிலோ குளித்து தீட்டுக் கழிக்காமல் உணவு உண்டால் சாதியிலிருந்து தள்ளி வைக்கப்படுவான்.

நாயர்களிடம் 12 அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும். புலயன் 60 அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும். முக்குவர்கள் என்ற இனத்தினர் நாயர் இனத்தவரைப் பார்த்தால் தரையில் நெடுஞ்சாண் கிடையாக படுக்க வேண்டும். அவர்கள் சென்ற பிறகு எழுந்து செல்ல வேண்டும். கீழ்சாதியினர் வீட்டை ஒட்டி வரும் போது குச்சியால் தட்டிக் கொண்டே வர வேண்டும். அந்தச் சத்தம் யாரோ ஒரு கீழ்சாதிக்காரன் வருகின்றான் என்று நாயருக்குத் தெரிவிக்கும். வயல்களில் வேலை செய்யும் கீழ் சாதிக்காரர்கள் பச்சை இலைகளை சொருகி வைப்பார்கள். ஜமிந்தார்கள் வரும் இலைகளுக்கு அப்பால் நின்று கட்டளைகளைச் சொல்வார்கள்.

பொதுக் கிணறுகள், குளங்கள், சந்தைகளுக்கு கீழ்சாதிக்காரர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டனர். கோவில்களுக்கு அனுமதியே இல்லை. கோவிலைச் சுற்றி இருக்கும் பிராமணர், நாயர்கள் வீடுகளுக்குள் வரவும் தடை இருந்தது. தெருமறிச்சான்கள் வைத்து கீழ் சாதிக்காரர்கள் வேறு வழியில் செல்ல வைக்கப்பட்டனர்.

இதுமட்டுமல்ல நாயர் ஒருவர் கீழ்சாதிக்காரனை விலகச் சொல்லி, அவன் விலகா விட்டால் கொலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அரசு அலுவலகங்களில், கோர்ட்டுகளில் கீழ்சாதி சாட்சிகள் சுமார் 60 அடி தூரத்துக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். நீதிபதிக்கும் சாட்சிக்கும் இடையில் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டு கீழ்சாதிக்காரர் சொல்வதைக் கேட்டு நீதிபதிக்குச் சொல்வார். நீதிபதி சொல்வதைக் கேட்டு கீழ்சாதிக்காரரிடம் சொல்வார்.

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை இங்கு பகிர வேண்டும்.

ஒரு நாயர் குடித்து விட்டு தெருவில் நடந்து வந்திருக்கிறார். அப்போது பறையர் இனத்தைச் சேர்ந்த ஒரு வயதான மூதாட்டி நகர முடியாமல் தெருவில் கிடந்திருக்கிறார். அதைக் கண்ட நாயர் அவரை அடித்திருக்கிறார். கண்டு பொறுக்காமல் கிழவியின் மகன் நாயரை அடித்திருக்கிறார். நாயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். வழக்கு தொடுத்த நாளில் இருந்து ஒரு மாதம் கழித்து நாயர் இறந்து விடுகிறார். நாயர் இறந்ததுக்கு காரணம் அடித்ததுதான் என்று கூறி கொலை வழக்காக மாற்றி பெரும் கொடுமைகளைச் செய்தார்கள்.

இந்தச் செய்திக்கு உதவியது : திருமதி முனைவர் ஜெயகலா அவர்கள் எழுதிய திருவிதாங்கூர் மன்னராட்சியும் தீண்டாமையும் என்ற ஆய்வுக்கட்டுரை. இணையத்தில் இருக்கிறது தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து குடியரசு பத்திரிக்கையில் 1925ல் வெளியான ஒரு கட்டுரை. படமாக இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். 

இந்தியாவில் இன்றும் இருக்கும் சாதீய வன் கொடுமைகளுக்கு என்று தான் தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை. 




நன்றி : குடியரசு பத்திரிக்கை.

இனி என்ன சொல்ல? பெரியாரைப் பற்றி எழுதினால் ஆதாரம் வேண்டும் என்பார்கள். ஆய்வுக் கட்டுரையோ பெரியார் எழுதி இருப்பதை விட பெரும் கொடுமைகளை வெளிப்படுத்துகிறது.

சாதி ஒழிந்தால் மட்டுமே இந்தியா ஆன்மீக பூமியாக மலரும். மதமும், சாதியும் ஜீவகாருண்யத்துக்கு எதிரானவை.



Wednesday, July 6, 2022

தாய் மாமா அருணாசலம் - நினைவஞ்சலி

வாசலின் இடதுபுறமாக ஓங்கி வளர்ந்த நாவல் மரம். வலது புறமாக பல மரங்கள். கற்கள் பாவிய வாசல். ஒன்றரை அடி அகல சுவர் வைத்த அந்தக் கால ஓடு வேய்ந்த வீடு. வீட்டுக்குள் நுழைந்தால் திண்ணை, கிழபுறமும் மேற்புறமும் இரு அறைகள், தாண்டியவுடன் நடுவறை, அதைத் தாண்டினால் கிழ புறம் சமையலறை, மேற்புறம் பலசரக்கு வைக்கும் அறை, வடக்குப் புற கதவு திறந்து வந்தால் இடதுபக்கம் மாட்டுத்தொட்டி, வலதுபுறம் தண்ணீர் நிரம்பிய பொக்கைகள், குடங்கள், குடத்தடி மாமரம், மேற்கு மூலையில் மாட்டுச்சாணக்குழி, தாண்டியவுடன் கிழக்கும் மேற்குமாய் இருபது அடி அகலத்தில் நீண்டு கிடக்கும் வைக்கோல் போர், அதை தாண்டியவுடன் ஐந்து பேர் சேர்த்து கட்டிப் பிடிக்கும் விட்டம் கொண்ட பெரிய மாமரம், மாமரத்தின் அடியில் மாடுகள், பசுக்கள், இன்னும் வடக்கே சென்றால் சரியாக வாயு மூலையில் கிணறு. கிணறை ஒட்டியவாறு கிழக்குப் புறமாக பரந்த மாமரங்கள், வேலியோரம் பனை மரங்கள். இதுதான் மாமாக்கள் குழந்தைவேல் – அருணாசலம் அவர்களுடன் நான் பிறந்து, வளர்ந்து, படித்த வீடு. என் அம்மா இருவரின் சகோதரி. வாழ்வியல் சூழலினால் அம்மா தன் பிறந்தகத்திலேயே என்னுடனான சகோதரிகள் மூவருடனும் வாழ்ந்தார். மூத்த சகோதரி ஞானேஸ்வரியை அருணாசலம் மாமா கல்யாணம் கட்டிக் கொண்டார்.

தேவர் மகன் கமல்ஹாசன் என் மாமா போல இருப்பார். அச்சு அசலாய். மாமாவுக்கு தலையில் முடி குறைவு. ஆனால் அவர் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் கண்ணாடியோ ரொம்பப் பெரிது. 

பர்பெக்ஷன் என்றால் மாமா. சோப்பு டப்பா கூட நீட்டாக கழுவி சுத்தமாய் இருக்கும். ஹமாம் சோப்புதான் உபயோகிப்பார். டூத் பிரஷ், பேஸ்ட், எவர்சில்வர் சோப்பு டப்பா, துண்டுடன் விடிகாலையில் ஆவணத்தான் குளத்துக்கு சைக்கிளில் குளிக்க கிளம்பி விடுவார். குளம் சோப்பு, ஷாம்பு நுரையில் குளிக்குமாம். உடம்பில் பொட்டு அழுக்கு இருக்க கூடாது. சுத்தமென்றால் அப்படி ஒரு சுத்தம். 

என்னை ஒரு முறை குளிக்க கூட்டிக் கொண்டு சென்றார். உடல் முழுக்க சோப்பு தேய்த்து தேய்த்து என் உடல் சிவந்து விட்டது. அய்யோ அம்மா என்று கத்தினாலும் விடவில்லை. படுசுத்தமாய் குளிப்பாட்டி விட்டு சைக்கிளில் தூக்கி வைத்து, கால்களை சீட்டுக்கு அடியில் இணைத்து வைத்து வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் அவர் குளிக்க கிளம்பினால் எங்காவது பதுங்கி விடுவேன்.

வீடு திரும்பிய பின்னால் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு அலங்காரம். மீசைக்கு ஒரு சீப்பு, தலைக்கு ஒரு சீப்பு இருக்கும். வெள்ளை வேஷ்டி, சட்டை அணிவார். அத்துடன் வாசனை திரவியங்கள். வித விதமான பாரின் செண்டுகள், அத்தர்கள். அவர் உபயோகித்த தலை எண்ணெய் பெயர் கியோ கார்பின்( Keo Karpin). வாசமாக இருக்கும்.

வேஷ்டியை மடக்கி கட்டிக் கொண்டு சைக்கிளில் ஆவணத்தில் இருக்கும் தொடக்க கல்வி அலுவலகத்துக்குச் செல்வார். அவர் அரசுப் பணியாளர். அவர் ஆவணம் யூனியன் ஆஃபிஸில் அலுவலராக இருந்தார். எழுதும் போது கைகள் வியர்வையில் குளிக்கும். அவருக்கு அது பெரும் பிரச்சினையாக இருந்தது. ஆதலால் ஆவணம் தொடக்கப்பள்ளிக்கு உதவியாளராக மாற்றிக் கொண்டு வந்தார். எனது ஆரம்ப பள்ளிக்கு என்னை சைக்கிளின் பின்னால் வைத்துக் கொண்டு செல்வார். பின்னால் அவர் உதவி தொடக்கப்பள்ளி அலுவலகத்துக்கு மாறிக் கொண்டார். 

அந்த உதவி தொடக்கப்பள்ளி அலுவலகம் அவருக்காக இயங்கியது எனலாம். மாமாவும் நானும் ரொம்பவும் நெருக்கம். இந்த அலுவலகத்தை எப்படியாவது ஆவணத்தை விட்டு பேராவூரணிக்குக் கொண்டு சென்று விட வேண்டுமென்று நினைத்தார்கள். மாமாவும், நானும் சேர்ந்து சில அரசியல் சித்து விளையாட்டினை நடத்தி, இந்த அலுவலகம் ஆவணத்திலேயே இருக்கும் படி செய்தோம். மாமா சொன்னதை நான் செய்து கொடுத்தேன். என் பங்கு அவ்வளவுதான். அவர் என்னை வழி நடத்தினார். அவர் தன் ஊருக்கு ஒரு அரசு அலுவலகம் அவசியம் வேண்டும் என்று என்னிடம் சொன்னார். 

நானும் என் மகள் நிவேதிதாவும் கோவை புரோஷோன் மாலில் இருக்கும் செண்ட்களை ஆராய்வோம். மனைவி கோபமாய் கடித்து கொள்வாள். மாமாவிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்டது அவருடைய பர்பெக்ஷன். அடுத்து வாசனை திரவியங்கள் பழக்கம். அவர் உணவுப் பிரியர் அதுவும் தொற்றிக் கொண்டது. அத்துடன் அவருடைய நோயான பிளட் பிரஷர் எனக்கும் வந்து விட்டது. 

டாக்டர் ’உங்கள் தாய் மாமாவுக்கு பிளட் பிரஷர் இருக்கிறதா? இருந்தால் உங்களுக்கும் வரும்’ என்றார்.

தீபாவளி உடைகளை எனக்கும் தங்கை டிம்பிள் கபாடியாவுக்கும் வாங்கி வருவார். தையற்கடையில் துணி தைக்க கொடுக்க சைக்கிளில் அழைத்துச் செல்வார். தீபாவளி அன்று வெடிக்க பட்டாசுகள் வாங்கி வைத்திருப்பார். சரவெடி மட்டும் நான் வெடிக்க கூடாது. மற்ற வெடிகள் எல்லாவற்றையும் நானும் தங்கையும் தான் வெடிப்போம். ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்து வெடிக்க வைத்து விட்டுச் செல்வார். 

பொங்கலன்றும் மாமா அடுப்புக்கு குழி வெட்ட, நான் மண் எடுத்துப் போடுவேன். சாமி கும்பிட்டு விட்டு முதல் சோறு எனக்குத்தான். அவர் என்னை தன் மகன் போலவே வளர்த்தார். கல்லூரி படிப்பின் போது பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். அவரின் வழிகாட்டுதலில் இன்று உலகமெங்கும் நான் தொழில் செய்கிறேன். நடக்க முடியாத என் வாழ்க்கையைப் பற்றி அவருக்கு கவலை இருந்திருக்கலாம். ஆனால் நான் நன்றாகப் படித்ததினால் அந்தக் கவலையை மறந்தார். 

நான் ஒருவனே அவர் குடும்ப உறுப்பினர்களில் முதன் முதலாய் டிகிரி முடித்தவன். எனக்குப் பிறகு என் தங்கை மகன் குருவும், மகள் ரூபாவும் டிகிரி படித்திருக்கிறார்கள். இப்போது மகன் ரித்திக் நந்தா படிக்கிறான். 

மாமா தன்னை தாயாக காட்டிய ஒரு நிகழ்வினை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.

ஏழாம் வகுப்பு என நினைவு. நானும் தங்கையும் டியூசன் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போது நாட்டியக்குதிரைப் புகழ் வி.எஸ்.எம் ராவுத்தர் வீட்டில் டெக்கில் பாசமலர் படம் ஓடிக் கொண்டிருந்தது. ராவுத்தர் பொண்டாட்டி என்னையும் தங்கையையும் உள்ளே வரச் சொல்லி விட இருவரும் படம் பார்க்க உட்கார்ந்து விட்டோம். அப்போது வயலில் நெல் அறுவடை நடந்து கொண்டிருந்தது. கூலி ஆட்களும், வேலை ஆட்களும் வேலை செய்து கொண்டிருந்தனர். படம் பார்த்துக் கொண்ட எங்களுக்கு நேரமானது தெரியவில்லை. மணி ஒன்பதுக்கும் மேல் ஆகி விட்டது. டியூசன் சென்ற பிள்ளைகள் இன்னும் வரவில்லை என்று எல்லோரும் தேடி அலைந்திருக்கின்றனர். ஒன்பதரை போல வீட்டுக்கு வந்தோம். இருவருக்கும் பூவரசு குச்சியால் அடி வெளுத்து விட்டார். உடம்பு எல்லாம் தடித்து விட்டது. நான் தான் ரொம்பவும் அடி வாங்கினேன்.

அடுத்த ஒரு மாதத்தில் வீட்டிற்கு டயனோரா டிவி வந்து விட்டது. ஊரே வீட்டிற்கு ஒளியும் ஒலியும் பார்க்க வரும். டிவி ஆபரேட்டர் நானே. ரூபவாஹினியும் தெரியும் என்பதால் சனிக்கிழமை படங்கள், தூர்தர்சனின் ஞாயிறு படங்கள் என வீடே களைகட்டும்.

மாமாவின் அன்புக்கு நிகர் ஏது? மாமா அன்றைக்கு தாயாக மாறினார்.

திடீரென்று லீவு லெட்டர் எழுதச் சொல்வார். விண்ணப்பங்கள் எழுதச் சொல்வார். எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தாய் இருக்க வேண்டும். ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்க கூடாது. ‘த’ எழுத்து எழுதும் போது த நன்றாக மடங்கி இழுத்து விடப்பட்டிருக்க வேண்டும். ’அ’ எழுத்தின் சுழிக்கு பின்னால் வரும் பகுதி நீண்டு இருக்க வேண்டும். நான் சுருக்காக எழுதுவேன். 

கண்ணாடி முன் நின்று கொண்டு மீசையை சீப்பினால் சீவிக் கொண்டே அவர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும். தவறாக எழுதி இருந்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். எழுது முடித்து விட்டு வாங்கிப் படிப்பார். கிழித்து விட்டு புதிதாய் எழுது என்பார். ஒவ்வொரு தவறுக்கும் ஒரு குட்டு. கிர்ரென்று இருக்கும். வலிக்கும். விடமாட்டார். அக்காவும், அம்மாவும் அவருடன் சண்டை போடுவர். அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார். நான்கைந்து முறை எழுதி சரி பார்த்து விட்டு கையொப்பம் போட்டுக் கொடுத்து மடிக்கச் சொல்லி கவரினுள் இடச் சொல்வார்.

இன்றைக்கும் கூட அ – த எழுதும் போது அவர் நினைவிலாடுவார். என் இறப்பு வரை மறக்க முடியுமா? 

மாமா தன் அக்கா-தங்கை மீது பிரியம் கொண்டவர். ஒரு முறை வீரியன்கோட்டையில் கட்டிக் கொடுத்த ருக்மணி சித்திக்கு கோவிலில் பொங்கல் வைக்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள். கேள்விப்பட்ட மாமா சித்தி வீட்டுக்குச் சென்று சித்தியை இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையில் அருவாளுடன் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்று பொங்கல் வைக்கச் செய்தார். ருக்மணி சித்தியை யாரோ ஒருவர் ஆவணம் கடைத்தெருவில் கிண்டல் செய்து விட, கேள்விப்பட்ட மாமா அடித்து துவைத்து விட்டார் என்று சித்தி என்னிடம் சொன்னார்.


(அருணாசலதேவர் - ஆவணம்)

03.06.2022 இரவன்று அக்கா பையன் பிரவீன் போனில் அழைத்தான். ‘பெரியப்பா செத்துட்டாரு மாமா’ என்றுச் சொல்லி அழுதான். ஒரு நொடி இதயம் நின்று பின் துடிக்க ஆரம்பித்தது. இனி அருணாசலம் மாமா இல்லை என்ற உண்மை முகத்தில் அறைந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்கே ஆவணம் நோக்கிச் சென்றேன். மகன், மகள், மனைவி கார் ஓட்ட சாலைகள் வெறுமையாக கிடந்தது. சரக்கு வாகனங்கள், அவ்வப்போது கார்கள் தென்பட்டன. கோதை திருச்சி வரை காரோட்டினாள். பின்னர் மகன் ஓட்டினான். புதுக்கோட்டையில் ஒரு மாலை வாங்கிக் கொண்டேன். வீட்டுக்குள் செல்லும் பாதையின் இடது புறமாக இரண்டுக்கு மூன்று சைசில் ஒரு பேனர் இருந்தது. அதில் வெண்முடி தோளில் துண்டுடன் மாமா போஸ்டரில் புகைப்படமாக இருந்தார்.

வீட்டின் முன் வாசலில் ஐஸ் பெட்டிக்குள் இருந்தார் மாமா. என் மாமாவின் முகம் எனக்குள் பசுமையாய் பதிந்து இருந்தது இப்போதைய முகம் அல்ல. அது வேறு. அவர் எனது ஹீரோ. அந்த முகமல்ல இது. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்து விட்டு வீட்டின் பின்னால் சென்று விட்டேன். 

அவருடனான எனது கடந்த நாட்களை மனம் வலியுடன் நினைவுக்கு கொண்டு வந்தபடி இருந்தது. கண்ணில் கசியும் கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டேன். வியர்வையோடு அதுவும் பிறர் காணா வண்ணம் கரைந்தது என் மாமாவின் உயிர் காற்றோடு கலந்தது போல. மாமாவுக்கும் எனக்குமான உறவு என்பது தந்தை மகன் உறவு. அவர் தன் பிள்ளைகளை என்னைப் போல வளர்க்கவில்லை. அவர்களைப் பாசத்துடன் வளர்த்தார். ஆனால் அவர் என்னை மகன் போல வளர்த்தார்.

எனக்கு சடங்கு, சம்பிரதாயங்களில் ஈர்ப்பு இல்லை. அங்கு இசைக்கப்பட்ட சத்தத்தில் என்னால் அவரின் அருகில் அமர்ந்திருக்க முடியவில்லை. சத்தம் எனக்கு பிடிக்காது. ஆகவே அவரால் வளர்க்கப்பட்ட மரங்களுடன் சென்று அமர்ந்து கொண்டேன். அவர் தண்ணீர் ஊற்றி வளர்த்த மரங்களிடமிருந்து இலைகள் கொட்டிக் கொண்டிருந்தன. அவருக்காக அன்று மரங்கள் இலைகளை அதிகம் உதிர்த்து தங்களின் கண்ணீரை வெளிப்படுத்தின. 

மரங்கள் மவுனமானவை. ஆனால் அவைகள் தான் மனிதர்களுக்கு உயிர் கொடுப்பவை. சந்தன மரங்கள் கூட அன்று மணக்கவில்லை. வீடெங்கும் இலைகளாய் நிரம்பிக் கிடந்தது.

மாமா என்னைப் பெறாத தகப்பன். எனக்குத் தந்தைப் பாசம் கிடைத்தில்லை.  தந்தையற்ற குறையை அவர் போக்கி இருந்தார்.

மாமா நான் உங்களை சிகிச்சைக்கு அழைத்தேன். மறுத்து விட்டீர்கள். மருந்துகளைப் பரிந்துரைத்தேன். எடுத்தீர்களா என்று தெரியவில்லை.

என்னால் உங்களின் கடைசிக் காலங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை. காலம் செய்த கோலம் மாமா இது. உங்கள் மருமகன் காலோடு இருந்திருந்தால் உங்களைப் பார்க்க ஓடோடி வந்திருப்பேன். உங்களை என் தோளில் தூக்கிக் கொண்டு போய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால் என்னை யாரோ ஒருவர் அழைத்துக் கொண்டு வரணுமே மாமா. 

நானென்ன செய்வேன்?

இன்று என்னை விட்டு விட்டுச் சென்று விட்டீர்கள்.

நான் உங்களை என்னுள் சுமந்தபடியே தான் வாழ்கிறேன் மாமா. 

இதோ இந்த எழுத்துக்கும் காரணம் நீங்களே மாமா. என் எழுத்துக்களை பல நாடுகளில் படிக்கின்றார்கள் மாமா. பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறேன் மாமா. பலரின் துயரம் துடைக்கும் பணியில் இருக்கிறேன். தர்மம் சாராத எந்தத் தொழிலையும் செய்வதில்லை மாமா. அற வழியில் உங்களை என்னுள் சுமந்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மாமா. 

கண்ணீருடன் உங்களுக்கு விடை கொடுக்கிறேன் மாமா….! 

* * *

Tuesday, June 28, 2022

தர்மம் தலைகாக்குமா? ஓர் உண்மைச் சம்பவம்

பிளாக்கைப் படித்து வருபவர்களுக்கு நானொரு திமுக உ.பி என்று நினைக்கத் தோன்றும். ஏனென்றால் பிஜேபியையும், நூலிபான்கள் என்று சொல்லக்கூடிய பிராமணீயத்தையும் பற்றி எழுதுகிறேன். எனக்கு பிஜேபி, பிராமணீயம் ஆகியவற்றின் மீது வெறுப்பெல்லாம் இல்லை. 

பிஜேபியின் திட்டம் தெளிவானது மதக்கலவரம், ஆட்சி அதிகாரம். 

பிராமணியத் திட்டம் தெளிவானது எப்போதும் போல ஆட்சி, அதிகாரம், கொள்ளை, தன் சாதி, தன் இன மக்கள் நலன். பிறரை கீழ்சாதி என்று அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வது. நூற்றாண்டு காலமாக இவர்கள் தொடர்ந்து செய்து வரும் அக்கிரமம்.

தேவர் இனத்துக்கும் பிராமணர்களுக்கும் ஒரு இணைப்பு எப்போதும் உண்டு. தேவரினத்தவர்கள் சாமி, சாமி என்று கொண்டாடுவது பிராமணர்களை மட்டுமே. நானும் சிறு வயதில் அப்படித்தான் இருந்தேன். இப்பவும் அப்படித்தான் இருக்கிறேன். பிராமணர்கள் என்றால் சாமி என்று தானாகவே அழைத்து விடுவேன். என்னளவில் கருவறை பிரச்சினை வந்ததில்லை. என்னை யாரும் தடுத்ததும் இல்லை. 

இளம் பிராயங்களில் பிராமணர்கள் பற்றி அதிகம் தெரியாது. புன்னியாசனம், தெவசம் போன்றவற்றுக்கு வீட்டுக்கு பெரியவர்கள் வருவார்கள். பின்னர் என் பார்ப்பன நண்பன் வந்தான். அவனுக்கும் எனக்கும் மந்திரங்கள் உச்சரிப்பதில் குழப்பம் வரும். டென்சனாவான். ’சும்மா இரேண்டா’ என்று திட்டுவான். அதெல்லாம் ஒரு காலம். இப்போது பிராமணிய சாதிய நரித்தனங்களை, அவர்கள் செய்யும் சூக்கும கொடுமைகளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வந்து விட்டது. 

எல்லோரும் வாழ வேண்டும், விட வேண்டும், உதவ வேண்டும். இன்றிருப்பார் நாளை இல்லை என்கிற போது,  தன் இனம், மொழி, உணவு, உடை, கலாச்சாரம் மட்டுமே உயர்வானது என்கிற தற்குறித்தனத்தைப் பற்றி எழுத தான் வேண்டும். 

முற்காலங்களில் சிறார்களுக்குத் திருமணம் செய்து வைத்ததது பார்ப்பனியம். சிறுவன் இறந்து போனால் சிறுமிக்கு மொட்டை அடித்து, வெள்ளை உடை கொடுத்து முடங்க வைத்தது. ஆதாரம் இல்லாமல் அள்ளி விடாதே என்று நினைக்க வேண்டாம். செங்கோட்டை ஆவுடை அக்காள் ஒருவரே சாட்சி.

பார்ப்பனர்கள் காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் மாறவில்லை. வடமாநில கோவில்களில் சுவாமி சிலைகளை தொட்டு ஆராதிக்கும் போது ஆகமங்கள் எதுவும் குறுக்கே வருவதில்லை. தமிழகத்தில் உள்ள சுவாமி சிலைகள் மட்டும் ஆகமத்துக்கு உட்பட்டவை என்கிற பொய்யையும், புரட்டையும் நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்களைத் தான் காரணம் சொல்ல வேண்டும். 

நிறுவனங்களை ஆரம்பிக்கும் போது பூசை, ஹோமம் செய்யப்படுவது வாடிக்கை. அது எதையும் செய்யாது என்று கூட தெரியாத மடையர்கள் தமிழகத்தில் அதிகம். செய்யும் தொழிலே தெய்வம் அன்றி ஹோமமும், பூசையுமா தொழிலை நடத்தும்? உலகையே ஆட்டிபடைக்கும் அமெரிக்காவில் எந்த ஹோமம் நடத்துகிறார்கள்? ஆகமம் பேசும் நூலிபான்கள் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறார்களே அந்தக் கம்பெனிகள் லாபம் ஈட்டாமலா இருக்கின்றன? 

கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருக்கும் மடையர்களால் மட்டுமே தமிழர்கள் முன்னேறாமல் முடங்கிக் கிடக்கின்றனர். 

பார்ப்பனர்கள் செய்யும் இந்த அக்கிரமங்களைத் தர்மம் தண்டிக்கிறதா என்றால் ஆம், தண்டிக்கிறது என்பதற்கான சாட்சிகள் என்னிடம் உண்டு. அவர்கள் தாங்களாகவே அழிந்து கொண்டிருக்கின்றனர். தெரிந்து கொள்ள நல்ல புகழ் பெற்ற பரிகார தல கோவில்களில் கவனியுங்கள். 

தர்மம் அது இதுவென்று உளறிக் கொண்டிருக்காதே? தர்மமாவது, புண்ணியமாவது என்று கேட்பது எனக்குத் தெரிகிறது.  

ஒரு உண்மைச் சம்பவத்தைப் படியுங்கள்.

கோவை பள்ளப்பாளையத்தில் விவேகானந்தர் அனாதை சிறுவர் இல்லம் இயங்கி வருகிறது. சுவாமி ஆத்மானந்தர் அவர்களால் நடத்தப்பட்டு வரும் இல்லத்தில் பல மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அரசு விதிகளுக்கு உட்பட்டு நீண்டகாலமாக நடந்து வருகிறது. கரூர் ஆசிரமத்தில் ஒரு ஆசாரி இருந்தார். ஆசிரமத்தில் உள்ள அத்தனை வேலைகளையும் அவர் தான் செய்வார். கணிணி துறைக்கு டேபிள்கள் செய்வதிலிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் அலுவலகம் அமைத்து தந்ததால் அவரை நன்கறிவேன். இவர் தன் உறவினர் பையனை அனாதை சிறுவர் இல்லத்தில் கொண்டு வந்து விடுகிறார். பையன் இங்கு தங்கிப் படிக்க முடியாது என்று மறுக்கிறான். அவனிடம் ஏதேதோ சொல்லி இல்லத்தில் விட்டுச் செல்கின்றனர்.

அன்று இரவு பையன் தூக்குப் போட்டுக் கொண்டான். விடிகாலையில் கண்ட நிர்வாகி அவசரப்பட்டு பையனை இறக்கி பார்க்க உயிரில்லை. உடனே கயிற்றை எரித்து விட்டு, இடத்தைச் சுத்தப் படுத்தி விட்டார். ஆசாரியிடம் விஷயத்தைச் சொல்லி, பையனை அவனது ஊருக்கு கொண்டு செல்ல முயன்ற போது, காவல்துறையில் புகார் கொடுத்து விட்டனர். 

காவல்துறை வருகிறது. விசாரனை ஆரம்பிக்கிறது. 

’கயிறு எங்கே?’, எரித்து விட்டார்கள், ‘ஏன் எரித்தீர்கள்?’ என்றால் பதில் இல்லை. சந்தேகம் விழுந்து விட்டது. தூக்கில் தொங்கிய இடமோ படு சுத்தமாக இருக்கிறது. பையனை அடித்து தூக்கில் தொங்க விட்டு விட்டனர் என்ற முடிவுக்கு வந்து விட்டது. சின்னப்பையன் தானாகவா வந்து தூக்கில் தொங்குவான்? இதில் மர்மம் இருக்கிறது. கொலையாக இருக்க 99 சதவீதம் சாத்தியக்கூறுகள் உள்ளன என்று காவல்துறை முடிவுக்கு வந்து விட்டது. 

சாட்சிகள் எல்லாம் எதிராய் இருக்கிறது. 

முப்பது ஆண்டுகாலம் வேலை செய்த ஆசாரி லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றிருக்கிறார். 

அவருக்கு நன்கு தெரியும் பையன் இருக்க முடியாது என்று சொல்லியும் விட்டுச் சென்றதால் அவன் அந்த முடிவினை எடுத்திருக்கிறான் என்பது. இருப்பினும் ஆசை விடவில்லை. 

இதற்குள் பத்திரிக்கையாளர்கள் வந்து விட்டனர். அனாதை இல்லத்தில் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டான் என்று தலைப்புச் செய்தி போட்டு விட்டனர். ஒரு சிலர் பணம் கேட்க ஆரம்பித்திருக்கின்றார்கள். 

ஆனால் நடந்தது என்ன? பையனுக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அவன் கோபத்தில் அவசர முடிவு எடுத்து விட்டான். இதை நிரூபிப்பது எப்படி?

அன்பு நண்பர்களே, உண்மைக்கு எப்போதும் ஒரு தன்மை உண்டு. தன்னை மிகச் சரியானதொரு நேரத்தில் வெளிப்படுத்திக் கொள்ளும். 

இந்தக் கொலைப் புகாரில் இருந்து வெளியே வந்தது அந்த அனாதை இல்லம்.

எப்படி?

அன்று மாலை வரை அங்கிருக்கும் சிசிடிவி கேமரா பற்றி எவருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் அது இருந்த இடம் அப்படி. சிசிடிவி கேமரா புட்டேஜ்களைக் கொண்டு போய் காவல்துறையில் கொடுக்கிறார்கள். 

அதில் அந்தச் சிறுவன் விடிகாலையில் கயிறு எடுத்துக் கொண்டு போய், பள்ளி வராண்டாவில் உள்ள வளையத்தில் மாட்டி, கழுத்தில் கட்டிக் கொண்டு, வரண்டாவிலிருந்து காலை விடுவித்து தொங்கியதை அட்சர சுத்தமாக பதிவு செய்திருக்கிறது கேமரா. அவன் தொங்கி நீண்ட நேரம் சென்ற பிறகு நிர்வாகி வந்து பார்ப்பதும், அவனை இறக்கி உயிர் இருக்கிறதா என்று பார்ப்பதும், பின்னர் இடத்தைச் சுத்தப்படுத்தியதையும் பார்த்த காவல்துறை அது தற்கொலை என்று வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறது.

இல்லத்தின் மீது புகார் கொடுத்த ஆசாரி கையைப் பிசைந்து கொண்டு நின்றாராம். பத்திரிக்கைகள் மறுப்புச் செய்தி கூட போடவில்லை. அந்தளவுக்கு பிணங்களின் மீது பத்திரிக்கைகளுக்கு பிடிப்பு. எது உண்மை? எது பொய் என்று விசாரிப்பதில்லை. உடனே தலைப்புச் செய்தி, பரபரப்பு கிளப்பி பத்திரிக்கையை விற்று விட வேண்டும். 

அவ்வளவுதான். ஆசாரி, காவல்துறை, பத்திரிக்கைகள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்பதை தர்மம் உலகிற்கு உணர்த்தியது மீண்டும் மீண்டும்.

அந்த வீடியோ புட்டேஜ் மட்டும் இல்லையென்றால் இல்லம் மூடப்பட்டிருக்கும் இல்லையா?

நீதிமன்றமும், காவல்துறையும், பத்திரிக்கைகளும், ஆசாரியும் இணைந்து அந்த இல்லத்தை அழித்திருப்பார்கள் அல்லவா?

ஆனால் நடக்கவில்லை. ஏன் தெரியுமா? அந்த இடத்தில் சுவாமி ஆத்மானந்தா அவர்கள் செய்து வரும் தர்மம்.

தர்மம் என்றைக்கும் தலைகாக்கும்.

ஆனால் அக்கிரமக்காரர்களுக்கு தலையை எடுத்து விடும். ஒரே உதாரணம் யார்? நான் சொல்லியா தெரிய வேண்டும்?

வாழ்க வளமுடன்...!

Monday, June 20, 2022

நரலீலைகள் (14) - விக்கிரோம் திரை விமர்சனம்

”இன்னிக்கு 2000 கிலோ டிரக்ஸ் வந்திருக்கு. உம் போலீஸை அனுப்பி பிடிச்சு பேப்பர்ல போட்டுக்கோ. கெட்ட பேரா? அப்படியா? என்ன கேள்வியெல்லாம் கேக்கிறாய்? சொல்றதைச் செய்டா வெண்ணெ”

அன்றைக்கு தினசரிகளில் துறைமுகத்தில் கண்டெய்னர்களில் பதுக்கி வைத்த 30000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது என்ற செய்தி வெளியாகி இருந்தது. மக்களில் பெரும்பாலானோர் அரசு அது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்.

இந்த தகவல் உளவாளிகள் மூலம் அரசுக்குச் சென்றது. அஸாசிலின் அரசியல் தந்திரத்தை எண்ணி ஃப்ளையருக்கு மகிழ்ச்சி உண்டானது.

“இன்னிக்கு 50000 கோடி ஹெராயின் பிடிபட்டது என்று பேப்பரில் செய்தி வரணும். புரிஞ்சுதா?”

அடுத்த இரண்டாவது மாதத்தில் தினசரிகளில் பெரிய அளவில் போதைப் பொருள் பிடிபட்டது என்ற செய்தி வெளியானது. மக்கள் அரசின் இந்தச் செயலை பாராட்டி மகிழ்ந்தனர். 

”கதையே இல்லாத ஸ்கிரிப்டை நன்றாக படம் பிடிக்கும் இயக்குனர்களைக் கண்டுபிடித்து ஒரு லிஸ்ட், விலை போகாத பெரிய நடிகர்கள் இருப்பார்கள் அவர்களின் லிஸ்ட், வெப் சீரிஸ் எடுக்கும் இயக்குனர்களின் லிஸ்ட்டும் வேண்டும்” என்றான் அஸாசில்.

ஒரே நாளில் அஸாஸில் கையில் லிஸ்ட் கொடுக்கப்பட்டது.

அந்த லிஸ்டில் பலரை டிக் அடித்தான் அஸாசில். 

* * *

”ஏம்பா மாயா, இதென்ன அஸாசில் இப்படி ஒரு லிஸ்ட் கேட்டிருக்கானே? எதற்காக இருக்கும்? உனக்கு ஏதாவது புரியுதா?” என்றான் சந்து.

”மனம் எப்போதும் நெகட்டிவ் அதாவது எதிர்மறை செயல்களின் பால் ஈர்ப்புக் கொண்டது சந்து. மனமொரு குரங்கு. நல்லவைகளை நாடுவதை விட தீயவைகளின் மீதான கவனம் கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் தான் நல்லதையே கேளுங்கள், நல்லதையே பாருங்கள் என்றுச் சொல்வார்கள்”

“சரி, நீ சொல்வதுக்கும் நான் கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்?”

“சந்து, ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் அல்லவா? அவர்களை நோக்கி டிரக்ஸ் வலை வீச அஸாசில் திட்டம் போட்டிருக்கிறான்”

“என்ன? டிரக்ஸா அப்டின்னா போதைப் பொருள் தானே?”

“ஆமா சந்து, இளைஞர்கள் மனசு எப்போதும் ஆபத்தான செயல்களை விரும்புவார்கள். அதைச் சாதனையாக நினைப்பார்கள் அல்லவா? பைக்கில் ஸ்டண்ட் செய்வது, நடிகர்களைப் பார்த்து ஹேர் கட் செய்து கொள்வது, நடிகர்கள் போலவே டிரஸ் போட்டுக் கொள்வது இப்படியாக உணர்ச்சிகளின் கலவையாக இருப்பார்கள். அவர்கள் கையில் ஸ்மார்ட் போன் இருக்கிறது அல்லவா? அதை வலையாகப் பயன்படுத்தி சினிமா, வெப்சீரிஸ் மூலம் போதைப் பொருள் விற்பனையை அதிகரிக்கப் போகின்றார்கள்”

”என்ன மாயா சொல்கிறாய்?”

”ஆமாம் சந்து, போதைப் பொருள் உடலுக்கு கேடு என்று ஹீரோ லெக்‌ஷர் அடிப்பார். போதைப் பொருள் கடத்தலை ஹீரோ தடுக்கிறார் என்று தான் கதை எழுதுவார்கள். ஆனால் படத்தின் கரு என்ன? போதைப் பொருள். அதென்ன போதைப் பொருள். ஒரு தடவை அனுபவித்துப் பார்ப்போம். பின்னால் விட்டுக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். ஆனால் விட முடியாது. குடிக்கும் போது உண்டாகும் போதையை விட மிக அதிக போதையைத் தருகிறது டிரக்ஸ் என்கிறது பல படங்கள், வெப் சீரிஸ்கள்.”

”மாயா, இதென்ன பெரும் கொடுமையாக இருக்கிறதே?”

“கொடுமை தான் சினிமாவும், வெப் சீரிஸ்களும் இளைஞர்கள் மீது வலையை வீசுகின்றன. இவ்வகையான படங்களையோ, சீரிஸ்களையோ பார்க்கும் இளைஞர்கள், மனதின்  நெகட்டிவ் தன்மையால் ஈர்க்கப்படுகிறார்கள். தூண்டில்கள் அதற்கான வேலையைச் சரியே செய்து விடும்”

“அய்யோ...! மாயா.... கொடூரம்...!”

“என்ன செய்ய முடியும் சந்து? மனிதர்கள் நம்பி நம்பியே அழிபவர்கள் தானே, கீழே இருக்கும் படங்கள் இந்தியா டுடே அக்டோபர் 2022 இதழில் வெளியானது  சந்து, இதைப் பாரேன்”






”மாயா, அய்யோ பெரும் கொடூரமாய் இருக்கிறதே?”

“ஆமா சந்து, இருபத்து மூன்றாம் புலிகேசி படத்தில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உற்சாக பானம் விற்பதை விளம்பரப்படுத்துவார்களே நினைவுக்கு வருதா உனக்கு?”

“ஆமா...!”

“அது நேரடி விளம்பரம், இது மனதுக்குள் ரகசியமாக பதிய வைக்கும் நரித் தந்திரம். பிள்ளைக்கறி விற்கிறார்கள். அதைத் தடுக்கனும், போராடனும் என்பார்கள். இதில் விஷயம் என்னவென்றால் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, பிள்ளைக் கறி விற்கிறார்கள் என்பதுதான் சந்து. எந்த ஹீரோ போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கிறான்? இல்லையே? போதைப் பொருள் பற்றி ஏன் பெரிய மீடியாவில் காட்டணும்? அதைச் சொல்லணும்? தேவையே இல்லையே. இதில் போதைப் பொருள் பற்றிய பல விளக்கங்கள் வேறு சொல்வார்கள். இதெல்லாம் நல்ல மனிதர்கள் செய்ய மாட்டார்கள் சந்து”

“ஆமா மாயா, நீ சொல்வது உண்மைதான். போலி வேடங்களில் ஒளிந்திருக்கும் நய வஞ்சர்களின் நரித்தனமே இது”

“சந்து, இன்னொரு விஷயம் இருக்கு. THE DRUGS AND MAGIC REMEDIES (OBJECTIONABLE ADVERTISEMENTS) ACT, 1954 இந்தச் சட்டத்தின் படி விளம்பரமே செய்ய கூடாதவைகள் என்னென்ன என லிஸ்ட் இருக்கிறது. கீழே படித்துப் பாரும். டிவி விளம்பரங்களைப் பார். என்ன நடக்கிறது இங்கே என்று தெரிந்து கொள். நம்புவர்கள் நாசமாய் போவார்கள் என்பதற்கு இதை விட சாட்சி ஏதும் உண்டா?”







* * *

அஸாசில் டிக் அடித்தவர்கள் பெரும் தொகையினைப் பெற்றுக் கொண்டு பல படங்கள், சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். விமர்சனம் முடிந்தது.

* * *
குறிப்பு :  இது ஒரு நாவல். யாரையும் எவரையும் குறிப்பது இல்லை. 

Wednesday, June 15, 2022

கேஜிஎஃப் 2வில் பசப்புறுபருவரல்

அரசியல், பொருளாதாரம், அதிகாரம், ஆணவம், அக்கிரமம் எல்லாவற்றையும் ஓரமாக வைத்து விட்டு பசலை நோய் பற்றி பார்க்கலாம். அதென்ன பசலை நோய் என்கின்றீர்களா இப்போதைய மனிதர்களுக்கு சுத்தமாக தெரிந்து இருக்காது. 

பசலை நோய் கொரானா நோயை விடக் கொடியது. கொரானாவுக்கு மருந்துண்டு. பசலை வித்தியாசமான நோய்.

காமத்துபாலில் பசப்புறுபருவரல் என்றொரு அதிகாரத்தின் கீழ் நம் திருவள்ளுவர் பத்து திருக்குறள்களை எழுதி இருக்கிறார். அந்தளவுக்கு திருவள்ளுவருக்கு பசப்புறுபருவரலின் மீது என்ன ஆர்வம்? இருக்கிறது.

ரசிகனய்யா அவர். ரசிகன். கலா ரசிகன். 

காமத்தைச் சிற்றின்பம் என்பார்கள். சிற்றின்பமல்ல அது பேரின்பம். இயற்கை உயிர்களுக்கு கொடுத்திருக்கும் கொடை.  ஐந்தறிவு கொண்ட உயிர்களுக்கு காமம் என்பது படைப்பு செயலாக்கம். ஆனால் ஆறறறிவு உயிருக்கு காமம் என்பது பேரின்பம்.

காமம் இன்றி இவ்வுலகம் இயங்காது. அரசியல், பொருள், அதிகாரம், போர், அக்கிரமங்கள் எல்லாம் காமத்தின் காரணமாகவே நடக்கிறது.

காமம் அற்ற ஒருவன் வாழவே தகுதியற்றவன் என்கிறது இயற்கை. ஓஷோவை நான் இங்கு துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். 

பசி என்பது இயற்கை. அடக்குதல் என்பது வன்முறை. 

காமத்தை அடக்கி ஆண்டால் கடவுளை அடையலாம் என்பார்கள்.

கட உள் என்றால் என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு உயிர்களின் உள்ளத்தில் இருக்கும் காமத்தைக் கடப்பது தான் என்று அர்த்தம்.  சண்டைக்கு வந்து விடாதீர்கள். தமிழ் மொழி கொடுத்திருக்கும் வசதி இது. 

கட உள் என்றால் உள்ளத்தைக் கட என்றும் அர்த்தம் வரும். நான் எழுதி இருப்பது போலவும் வரும். ஆகவே சர்ச்சைகளைத் தவிர்த்து தொடர்ந்து படியுங்கள்.

விரும்பவும், வெறுக்கவும் செய்வது காமமே. உலகை உய்விக்க வந்த உணர்வு காமம். 

அடங்கவே அடங்காத உணர்வு காமம். ஆண்களின் காமத்தினை விட பெண்களின் காமம் எரிமலை போன்றது. அதன் வீரியம் தெரிந்த திருவள்ளுவர் தனி அதிகாரமே எழுதி உள்ளார். 

பசப்புறுபருவரல் என்றால் பெண்களின் மேனி மீது ஊறும் பசலை. பாம்பு போல் ஊர்ந்து உடலெங்கும் பரவும் வியாதி. இந்த வியாதி எப்போது வரும்? எப்படி தீர்ப்பது?

இப்போது கே.ஜி.எப் பாடலுக்குப் போகலாமா?

இந்தப் பாடலைத் தனியாக அமர்ந்து கொண்டு பார்க்கவும். பார்த்து விட்டீர்களா? கீழே படியுங்கள்.

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க

பாசி யற்றே பசலை காதலர்

தொடுவுழித் தொடுவுழி நீங்கி

விடுவுழி விடுவுழிப் பரத்த லானே

(அகநானூற்றுப் பாடல்)

பாசி படர்ந்த குளத்தில் கைகளால் பாசியை விலக்கி விட்டு நீரை அருந்திச் செல்வர். விலகிய பாசி மீண்டும் ஒன்று சேர்ந்து விடும்.  அதைப் போல காதலன் (தலைவன்) காதலியை தழுவும் போதெல்லாம் விலகிய பசலை நோய், அவன் விலகிய போது மீண்டும் படர்ந்து விடுகிறது என்கிறது அகம் நானூறு.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து

காமத்துப்பால் 1183 வது திருக்குறள்


அவர் என்னைப் பிரிகிற போது பிரிவெனும் காதல் துன்பத்தையும், பசலையையும்  எனக்குக் கொடுத்து விட்டு அதற்கு கைமாறாக எனது நாணத்தையும்,  என் அழகையும் கொண்டு போய் விட்டார் என்கிறாள் பசலை நோயில் சிக்குண்ட காதலி.


புல்லிக் கிடந்தேன் பெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு

காமத்துப் பால் 1187வது திருக்குறள்

காதலனுடன் தழுவிக் கிடந்தேன். சற்றே விலகினேன். அவ்வளவுதான் பசலை என்னை அள்ளிக் கொண்டது என்கிறாள் காதலி. 

அதென்னதான் செய்கிறது காதலியை?

உடல் சோரும், உள்ளம் நடுங்கும், உதடுகள் வெம்மையினால் காயும், நாக்கு வரளும், உடல் மெலியும், நிற்க முடியாது, அவனின் நினைப்பாலே உடல் ஏங்கும். காற்றுச் சுடும், வெயில் குளிரும். 

காமத்தில் தகிக்கும் சூடு. காதலனுடன் முயங்கிய காதலிக்கு காமம் கொடுக்கும் நோய். பசலை நோய்.

பசலை நோய் காதலனை நீங்கும் போது காதலியைப் பீடிக்கும் நோய். பசலை நோய் பெண்ணுக்கு மட்டுமல்ல. ஆணுக்கும் உண்டு. அங்கே அவள் காத்திருக்கிறாள் என்று உடல் துடித்து நினைவெல்லாம் நித்யாவென்றிருக்கும் நிலையையும் பசலை தான்.

இப்போது பாடலைப் பாருங்கள். மீண்டும் படியுங்கள்.

நாயகி நாயகன் கை பிடித்து இழுத்துச் செல்கிறாள். கதவு மூடப்படுகிறது. சிற்றின்ப மலர்கள் வாசம் வீசுகின்றன. மறுநாள் நாயகியைச் சுற்றி வரும் மலர்களின் வாசத்தில் அவர் ஆடுகிறாள். நாயகனைத் தேடுகிறாள். அவனைக் காணாது எதிரே வந்த பெண்ணைக் கட்டித் தழுவுகிறாள். 

வாயிலில் அமர்ந்து அவன் வரவுக்காக காத்திருக்கிறாள். நாயகன் வருகிறான். அவனைக் கண்டதும் பசலை நோயால் பீடிக்கப்பட்டவள் நோய் தாளாது அருகிலிருந்த பணிப்பெண்ணைக் கட்டி அணைக்கிறாள். நாயகன் கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறான். பசலை நோய் விலகா நாயகி ஓடிச் சென்று அவனைக் கட்டித் தழுவுகிறாள். நாயகனைத் தழுவும் போது விலகி ஓடி விடும் பசலை நோய்.



பசலை நோய் நீங்க பெரும் நாயகி ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறாள். பெண் ஆளப்படுபவள். பெண்மை படர்தலில் இன்பம். இரு மனமும் ஒன்றிய நிலையில், அந்த நொடியில் உடல்கள் உணரும் நிலையே இன்பம். மனமற்ற நிலையில் உடல் வழி நுகரப்படும் ஈடு சொல்ல முடியா நிலையே காமனின்பம்.

காமம் கெடுதி அல்ல. காமம் தவறு என்றுச் சொல்லும் ஆன்மீகம் தவறு. காமமற்ற எதுவும் இயற்கை அல்ல. இயற்கைக்கு எதிரான எல்லாமும் தவறே.

கேஜிஎஃப் படக்காட்சிகள் வழியே பசலை நோயைப் படமாக்கிய இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு வாழ்த்துகள். 

படத்தில் நடித்த யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டிக்கும் வாழ்த்துக்கள். 

காட்சிகளின் தொடரமைப்பு பசலை நோய் பீடித்த நாயகியை பார்ப்பவர்கள் உணரச் செய்யும் வித்தை ஆஹா. மனதைக் கவ்விக் கொள்கிறது பாடலும் காட்சிகளும். 

அக நானூறு பாடலும், திருக்குறளின் காமத்துப்பாலும் ஒருங்கே காட்சிகளாய் விரிகிறது. 

காதலும் காமமும் முழுமையாக கிடைக்கப் பெறாதவர்களே பாபத்துக்குரியவர்கள்.

பிரசாந்த் நீல் கலா ரசிகன்....!

பசலை - பசப்புறுபருவரல் - இல்லறத்தின் மருந்தற்ற நோய்