குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, July 7, 2022

கேரளாவில் நடந்த தீண்டாமைக் கொடுமைகள்

கடவுளின் மாநிலம் கேரளா. எனக்கு நிரம்பவும் பிடித்த நிலப்பகுதி. மலைக்கும் கடலுக்கும் இடையிலான பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றார்கள், இனி எதிர்காலத்தில் கேரளாவில் இந்துக்களே இருக்கமாட்டார்கள் என்றொருவர் சொன்னார். எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது? ஏன்? என்ன காரணம்? அதை ஆராய்ந்து தெளிவது நல்லது என்று நினைத்தேன். 

நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் இனி வரப்போகும் சங்கதிகள் உண்மை. 

பிராமணரிடம் ஈழவ இனத்தவன் 36 அடி தூரத்திலிருக்க வேண்டும். புலயர் இனத்தவன் 96 அடி தள்ளி நிற்க வேண்டும். அடிமை வம்சத்தைப் பார்க்க நேரிடும் பிராமணர் தீட்டுப்பட்டவராக ஆவார். அவர் குளத்திலோ, அருவியிலோ குளித்து தீட்டுக் கழிக்காமல் உணவு உண்டால் சாதியிலிருந்து தள்ளி வைக்கப்படுவான்.

நாயர்களிடம் 12 அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும். புலயன் 60 அடி தூரம் தள்ளி நிற்க வேண்டும். முக்குவர்கள் என்ற இனத்தினர் நாயர் இனத்தவரைப் பார்த்தால் தரையில் நெடுஞ்சாண் கிடையாக படுக்க வேண்டும். அவர்கள் சென்ற பிறகு எழுந்து செல்ல வேண்டும். கீழ்சாதியினர் வீட்டை ஒட்டி வரும் போது குச்சியால் தட்டிக் கொண்டே வர வேண்டும். அந்தச் சத்தம் யாரோ ஒரு கீழ்சாதிக்காரன் வருகின்றான் என்று நாயருக்குத் தெரிவிக்கும். வயல்களில் வேலை செய்யும் கீழ் சாதிக்காரர்கள் பச்சை இலைகளை சொருகி வைப்பார்கள். ஜமிந்தார்கள் வரும் இலைகளுக்கு அப்பால் நின்று கட்டளைகளைச் சொல்வார்கள்.

பொதுக் கிணறுகள், குளங்கள், சந்தைகளுக்கு கீழ்சாதிக்காரர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டனர். கோவில்களுக்கு அனுமதியே இல்லை. கோவிலைச் சுற்றி இருக்கும் பிராமணர், நாயர்கள் வீடுகளுக்குள் வரவும் தடை இருந்தது. தெருமறிச்சான்கள் வைத்து கீழ் சாதிக்காரர்கள் வேறு வழியில் செல்ல வைக்கப்பட்டனர்.

இதுமட்டுமல்ல நாயர் ஒருவர் கீழ்சாதிக்காரனை விலகச் சொல்லி, அவன் விலகா விட்டால் கொலை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அரசு அலுவலகங்களில், கோர்ட்டுகளில் கீழ்சாதி சாட்சிகள் சுமார் 60 அடி தூரத்துக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். நீதிபதிக்கும் சாட்சிக்கும் இடையில் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டு கீழ்சாதிக்காரர் சொல்வதைக் கேட்டு நீதிபதிக்குச் சொல்வார். நீதிபதி சொல்வதைக் கேட்டு கீழ்சாதிக்காரரிடம் சொல்வார்.

ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை இங்கு பகிர வேண்டும்.

ஒரு நாயர் குடித்து விட்டு தெருவில் நடந்து வந்திருக்கிறார். அப்போது பறையர் இனத்தைச் சேர்ந்த ஒரு வயதான மூதாட்டி நகர முடியாமல் தெருவில் கிடந்திருக்கிறார். அதைக் கண்ட நாயர் அவரை அடித்திருக்கிறார். கண்டு பொறுக்காமல் கிழவியின் மகன் நாயரை அடித்திருக்கிறார். நாயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். வழக்கு தொடுத்த நாளில் இருந்து ஒரு மாதம் கழித்து நாயர் இறந்து விடுகிறார். நாயர் இறந்ததுக்கு காரணம் அடித்ததுதான் என்று கூறி கொலை வழக்காக மாற்றி பெரும் கொடுமைகளைச் செய்தார்கள்.

இந்தச் செய்திக்கு உதவியது : திருமதி முனைவர் ஜெயகலா அவர்கள் எழுதிய திருவிதாங்கூர் மன்னராட்சியும் தீண்டாமையும் என்ற ஆய்வுக்கட்டுரை. இணையத்தில் இருக்கிறது தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து குடியரசு பத்திரிக்கையில் 1925ல் வெளியான ஒரு கட்டுரை. படமாக இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். 

இந்தியாவில் இன்றும் இருக்கும் சாதீய வன் கொடுமைகளுக்கு என்று தான் தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை. 
நன்றி : குடியரசு பத்திரிக்கை.

இனி என்ன சொல்ல? பெரியாரைப் பற்றி எழுதினால் ஆதாரம் வேண்டும் என்பார்கள். ஆய்வுக் கட்டுரையோ பெரியார் எழுதி இருப்பதை விட பெரும் கொடுமைகளை வெளிப்படுத்துகிறது.

சாதி ஒழிந்தால் மட்டுமே இந்தியா ஆன்மீக பூமியாக மலரும். மதமும், சாதியும் ஜீவகாருண்யத்துக்கு எதிரானவை.0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.