வாசலின் இடதுபுறமாக ஓங்கி வளர்ந்த நாவல் மரம். வலது புறமாக பல மரங்கள். கற்கள் பாவிய வாசல். ஒன்றரை அடி அகல சுவர் வைத்த அந்தக் கால ஓடு வேய்ந்த வீடு. வீட்டுக்குள் நுழைந்தால் திண்ணை, கிழபுறமும் மேற்புறமும் இரு அறைகள், தாண்டியவுடன் நடுவறை, அதைத் தாண்டினால் கிழ புறம் சமையலறை, மேற்புறம் பலசரக்கு வைக்கும் அறை, வடக்குப் புற கதவு திறந்து வந்தால் இடதுபக்கம் மாட்டுத்தொட்டி, வலதுபுறம் தண்ணீர் நிரம்பிய பொக்கைகள், குடங்கள், குடத்தடி மாமரம், மேற்கு மூலையில் மாட்டுச்சாணக்குழி, தாண்டியவுடன் கிழக்கும் மேற்குமாய் இருபது அடி அகலத்தில் நீண்டு கிடக்கும் வைக்கோல் போர், அதை தாண்டியவுடன் ஐந்து பேர் சேர்த்து கட்டிப் பிடிக்கும் விட்டம் கொண்ட பெரிய மாமரம், மாமரத்தின் அடியில் மாடுகள், பசுக்கள், இன்னும் வடக்கே சென்றால் சரியாக வாயு மூலையில் கிணறு. கிணறை ஒட்டியவாறு கிழக்குப் புறமாக பரந்த மாமரங்கள், வேலியோரம் பனை மரங்கள். இதுதான் மாமாக்கள் குழந்தைவேல் – அருணாசலம் அவர்களுடன் நான் பிறந்து, வளர்ந்து, படித்த வீடு. என் அம்மா இருவரின் சகோதரி. வாழ்வியல் சூழலினால் அம்மா தன் பிறந்தகத்திலேயே என்னுடனான சகோதரிகள் மூவருடனும் வாழ்ந்தார். மூத்த சகோதரி ஞானேஸ்வரியை அருணாசலம் மாமா கல்யாணம் கட்டிக் கொண்டார்.
தேவர் மகன் கமல்ஹாசன் என் மாமா போல இருப்பார். அச்சு அசலாய். மாமாவுக்கு தலையில் முடி குறைவு. ஆனால் அவர் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் கண்ணாடியோ ரொம்பப் பெரிது.
பர்பெக்ஷன் என்றால் மாமா. சோப்பு டப்பா கூட நீட்டாக கழுவி சுத்தமாய் இருக்கும். ஹமாம் சோப்புதான் உபயோகிப்பார். டூத் பிரஷ், பேஸ்ட், எவர்சில்வர் சோப்பு டப்பா, துண்டுடன் விடிகாலையில் ஆவணத்தான் குளத்துக்கு சைக்கிளில் குளிக்க கிளம்பி விடுவார். குளம் சோப்பு, ஷாம்பு நுரையில் குளிக்குமாம். உடம்பில் பொட்டு அழுக்கு இருக்க கூடாது. சுத்தமென்றால் அப்படி ஒரு சுத்தம்.
என்னை ஒரு முறை குளிக்க கூட்டிக் கொண்டு சென்றார். உடல் முழுக்க சோப்பு தேய்த்து தேய்த்து என் உடல் சிவந்து விட்டது. அய்யோ அம்மா என்று கத்தினாலும் விடவில்லை. படுசுத்தமாய் குளிப்பாட்டி விட்டு சைக்கிளில் தூக்கி வைத்து, கால்களை சீட்டுக்கு அடியில் இணைத்து வைத்து வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் அவர் குளிக்க கிளம்பினால் எங்காவது பதுங்கி விடுவேன்.
வீடு திரும்பிய பின்னால் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு அலங்காரம். மீசைக்கு ஒரு சீப்பு, தலைக்கு ஒரு சீப்பு இருக்கும். வெள்ளை வேஷ்டி, சட்டை அணிவார். அத்துடன் வாசனை திரவியங்கள். வித விதமான பாரின் செண்டுகள், அத்தர்கள். அவர் உபயோகித்த தலை எண்ணெய் பெயர் கியோ கார்பின்( Keo Karpin). வாசமாக இருக்கும்.
வேஷ்டியை மடக்கி கட்டிக் கொண்டு சைக்கிளில் ஆவணத்தில் இருக்கும் தொடக்க கல்வி அலுவலகத்துக்குச் செல்வார். அவர் அரசுப் பணியாளர். அவர் ஆவணம் யூனியன் ஆஃபிஸில் அலுவலராக இருந்தார். எழுதும் போது கைகள் வியர்வையில் குளிக்கும். அவருக்கு அது பெரும் பிரச்சினையாக இருந்தது. ஆதலால் ஆவணம் தொடக்கப்பள்ளிக்கு உதவியாளராக மாற்றிக் கொண்டு வந்தார். எனது ஆரம்ப பள்ளிக்கு என்னை சைக்கிளின் பின்னால் வைத்துக் கொண்டு செல்வார். பின்னால் அவர் உதவி தொடக்கப்பள்ளி அலுவலகத்துக்கு மாறிக் கொண்டார்.
அந்த உதவி தொடக்கப்பள்ளி அலுவலகம் அவருக்காக இயங்கியது எனலாம். மாமாவும் நானும் ரொம்பவும் நெருக்கம். இந்த அலுவலகத்தை எப்படியாவது ஆவணத்தை விட்டு பேராவூரணிக்குக் கொண்டு சென்று விட வேண்டுமென்று நினைத்தார்கள். மாமாவும், நானும் சேர்ந்து சில அரசியல் சித்து விளையாட்டினை நடத்தி, இந்த அலுவலகம் ஆவணத்திலேயே இருக்கும் படி செய்தோம். மாமா சொன்னதை நான் செய்து கொடுத்தேன். என் பங்கு அவ்வளவுதான். அவர் என்னை வழி நடத்தினார். அவர் தன் ஊருக்கு ஒரு அரசு அலுவலகம் அவசியம் வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.
நானும் என் மகள் நிவேதிதாவும் கோவை புரோஷோன் மாலில் இருக்கும் செண்ட்களை ஆராய்வோம். மனைவி கோபமாய் கடித்து கொள்வாள். மாமாவிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்டது அவருடைய பர்பெக்ஷன். அடுத்து வாசனை திரவியங்கள் பழக்கம். அவர் உணவுப் பிரியர் அதுவும் தொற்றிக் கொண்டது. அத்துடன் அவருடைய நோயான பிளட் பிரஷர் எனக்கும் வந்து விட்டது.
டாக்டர் ’உங்கள் தாய் மாமாவுக்கு பிளட் பிரஷர் இருக்கிறதா? இருந்தால் உங்களுக்கும் வரும்’ என்றார்.
தீபாவளி உடைகளை எனக்கும் தங்கை டிம்பிள் கபாடியாவுக்கும் வாங்கி வருவார். தையற்கடையில் துணி தைக்க கொடுக்க சைக்கிளில் அழைத்துச் செல்வார். தீபாவளி அன்று வெடிக்க பட்டாசுகள் வாங்கி வைத்திருப்பார். சரவெடி மட்டும் நான் வெடிக்க கூடாது. மற்ற வெடிகள் எல்லாவற்றையும் நானும் தங்கையும் தான் வெடிப்போம். ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்து வெடிக்க வைத்து விட்டுச் செல்வார்.
பொங்கலன்றும் மாமா அடுப்புக்கு குழி வெட்ட, நான் மண் எடுத்துப் போடுவேன். சாமி கும்பிட்டு விட்டு முதல் சோறு எனக்குத்தான். அவர் என்னை தன் மகன் போலவே வளர்த்தார். கல்லூரி படிப்பின் போது பல விஷயங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். ஆச்சரியமாக இருக்கும். அவரின் வழிகாட்டுதலில் இன்று உலகமெங்கும் நான் தொழில் செய்கிறேன். நடக்க முடியாத என் வாழ்க்கையைப் பற்றி அவருக்கு கவலை இருந்திருக்கலாம். ஆனால் நான் நன்றாகப் படித்ததினால் அந்தக் கவலையை மறந்தார்.
நான் ஒருவனே அவர் குடும்ப உறுப்பினர்களில் முதன் முதலாய் டிகிரி முடித்தவன். எனக்குப் பிறகு என் தங்கை மகன் குருவும், மகள் ரூபாவும் டிகிரி படித்திருக்கிறார்கள். இப்போது மகன் ரித்திக் நந்தா படிக்கிறான்.
மாமா தன்னை தாயாக காட்டிய ஒரு நிகழ்வினை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.
ஏழாம் வகுப்பு என நினைவு. நானும் தங்கையும் டியூசன் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த போது நாட்டியக்குதிரைப் புகழ் வி.எஸ்.எம் ராவுத்தர் வீட்டில் டெக்கில் பாசமலர் படம் ஓடிக் கொண்டிருந்தது. ராவுத்தர் பொண்டாட்டி என்னையும் தங்கையையும் உள்ளே வரச் சொல்லி விட இருவரும் படம் பார்க்க உட்கார்ந்து விட்டோம். அப்போது வயலில் நெல் அறுவடை நடந்து கொண்டிருந்தது. கூலி ஆட்களும், வேலை ஆட்களும் வேலை செய்து கொண்டிருந்தனர். படம் பார்த்துக் கொண்ட எங்களுக்கு நேரமானது தெரியவில்லை. மணி ஒன்பதுக்கும் மேல் ஆகி விட்டது. டியூசன் சென்ற பிள்ளைகள் இன்னும் வரவில்லை என்று எல்லோரும் தேடி அலைந்திருக்கின்றனர். ஒன்பதரை போல வீட்டுக்கு வந்தோம். இருவருக்கும் பூவரசு குச்சியால் அடி வெளுத்து விட்டார். உடம்பு எல்லாம் தடித்து விட்டது. நான் தான் ரொம்பவும் அடி வாங்கினேன்.
அடுத்த ஒரு மாதத்தில் வீட்டிற்கு டயனோரா டிவி வந்து விட்டது. ஊரே வீட்டிற்கு ஒளியும் ஒலியும் பார்க்க வரும். டிவி ஆபரேட்டர் நானே. ரூபவாஹினியும் தெரியும் என்பதால் சனிக்கிழமை படங்கள், தூர்தர்சனின் ஞாயிறு படங்கள் என வீடே களைகட்டும்.
மாமாவின் அன்புக்கு நிகர் ஏது? மாமா அன்றைக்கு தாயாக மாறினார்.
திடீரென்று லீவு லெட்டர் எழுதச் சொல்வார். விண்ணப்பங்கள் எழுதச் சொல்வார். எழுத்துக்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தாய் இருக்க வேண்டும். ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் இருக்க கூடாது. ‘த’ எழுத்து எழுதும் போது த நன்றாக மடங்கி இழுத்து விடப்பட்டிருக்க வேண்டும். ’அ’ எழுத்தின் சுழிக்கு பின்னால் வரும் பகுதி நீண்டு இருக்க வேண்டும். நான் சுருக்காக எழுதுவேன்.
கண்ணாடி முன் நின்று கொண்டு மீசையை சீப்பினால் சீவிக் கொண்டே அவர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும். தவறாக எழுதி இருந்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார். எழுது முடித்து விட்டு வாங்கிப் படிப்பார். கிழித்து விட்டு புதிதாய் எழுது என்பார். ஒவ்வொரு தவறுக்கும் ஒரு குட்டு. கிர்ரென்று இருக்கும். வலிக்கும். விடமாட்டார். அக்காவும், அம்மாவும் அவருடன் சண்டை போடுவர். அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டார். நான்கைந்து முறை எழுதி சரி பார்த்து விட்டு கையொப்பம் போட்டுக் கொடுத்து மடிக்கச் சொல்லி கவரினுள் இடச் சொல்வார்.
இன்றைக்கும் கூட அ – த எழுதும் போது அவர் நினைவிலாடுவார். என் இறப்பு வரை மறக்க முடியுமா?
மாமா தன் அக்கா-தங்கை மீது பிரியம் கொண்டவர். ஒரு முறை வீரியன்கோட்டையில் கட்டிக் கொடுத்த ருக்மணி சித்திக்கு கோவிலில் பொங்கல் வைக்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள். கேள்விப்பட்ட மாமா சித்தி வீட்டுக்குச் சென்று சித்தியை இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையில் அருவாளுடன் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்று பொங்கல் வைக்கச் செய்தார். ருக்மணி சித்தியை யாரோ ஒருவர் ஆவணம் கடைத்தெருவில் கிண்டல் செய்து விட, கேள்விப்பட்ட மாமா அடித்து துவைத்து விட்டார் என்று சித்தி என்னிடம் சொன்னார்.
03.06.2022 இரவன்று அக்கா பையன் பிரவீன் போனில் அழைத்தான். ‘பெரியப்பா செத்துட்டாரு மாமா’ என்றுச் சொல்லி அழுதான். ஒரு நொடி இதயம் நின்று பின் துடிக்க ஆரம்பித்தது. இனி அருணாசலம் மாமா இல்லை என்ற உண்மை முகத்தில் அறைந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்கே ஆவணம் நோக்கிச் சென்றேன். மகன், மகள், மனைவி கார் ஓட்ட சாலைகள் வெறுமையாக கிடந்தது. சரக்கு வாகனங்கள், அவ்வப்போது கார்கள் தென்பட்டன. கோதை திருச்சி வரை காரோட்டினாள். பின்னர் மகன் ஓட்டினான். புதுக்கோட்டையில் ஒரு மாலை வாங்கிக் கொண்டேன். வீட்டுக்குள் செல்லும் பாதையின் இடது புறமாக இரண்டுக்கு மூன்று சைசில் ஒரு பேனர் இருந்தது. அதில் வெண்முடி தோளில் துண்டுடன் மாமா போஸ்டரில் புகைப்படமாக இருந்தார்.
வீட்டின் முன் வாசலில் ஐஸ் பெட்டிக்குள் இருந்தார் மாமா. என் மாமாவின் முகம் எனக்குள் பசுமையாய் பதிந்து இருந்தது இப்போதைய முகம் அல்ல. அது வேறு. அவர் எனது ஹீரோ. அந்த முகமல்ல இது. சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்து விட்டு வீட்டின் பின்னால் சென்று விட்டேன்.
அவருடனான எனது கடந்த நாட்களை மனம் வலியுடன் நினைவுக்கு கொண்டு வந்தபடி இருந்தது. கண்ணில் கசியும் கண்ணீர் துளிகளை துடைத்துக் கொண்டேன். வியர்வையோடு அதுவும் பிறர் காணா வண்ணம் கரைந்தது என் மாமாவின் உயிர் காற்றோடு கலந்தது போல. மாமாவுக்கும் எனக்குமான உறவு என்பது தந்தை மகன் உறவு. அவர் தன் பிள்ளைகளை என்னைப் போல வளர்க்கவில்லை. அவர்களைப் பாசத்துடன் வளர்த்தார். ஆனால் அவர் என்னை மகன் போல வளர்த்தார்.
எனக்கு சடங்கு, சம்பிரதாயங்களில் ஈர்ப்பு இல்லை. அங்கு இசைக்கப்பட்ட சத்தத்தில் என்னால் அவரின் அருகில் அமர்ந்திருக்க முடியவில்லை. சத்தம் எனக்கு பிடிக்காது. ஆகவே அவரால் வளர்க்கப்பட்ட மரங்களுடன் சென்று அமர்ந்து கொண்டேன். அவர் தண்ணீர் ஊற்றி வளர்த்த மரங்களிடமிருந்து இலைகள் கொட்டிக் கொண்டிருந்தன. அவருக்காக அன்று மரங்கள் இலைகளை அதிகம் உதிர்த்து தங்களின் கண்ணீரை வெளிப்படுத்தின.
மரங்கள் மவுனமானவை. ஆனால் அவைகள் தான் மனிதர்களுக்கு உயிர் கொடுப்பவை. சந்தன மரங்கள் கூட அன்று மணக்கவில்லை. வீடெங்கும் இலைகளாய் நிரம்பிக் கிடந்தது.
மாமா என்னைப் பெறாத தகப்பன். எனக்குத் தந்தைப் பாசம் கிடைத்தில்லை. தந்தையற்ற குறையை அவர் போக்கி இருந்தார்.
மாமா நான் உங்களை சிகிச்சைக்கு அழைத்தேன். மறுத்து விட்டீர்கள். மருந்துகளைப் பரிந்துரைத்தேன். எடுத்தீர்களா என்று தெரியவில்லை.
என்னால் உங்களின் கடைசிக் காலங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை. காலம் செய்த கோலம் மாமா இது. உங்கள் மருமகன் காலோடு இருந்திருந்தால் உங்களைப் பார்க்க ஓடோடி வந்திருப்பேன். உங்களை என் தோளில் தூக்கிக் கொண்டு போய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால் என்னை யாரோ ஒருவர் அழைத்துக் கொண்டு வரணுமே மாமா.
நானென்ன செய்வேன்?
இன்று என்னை விட்டு விட்டுச் சென்று விட்டீர்கள்.
நான் உங்களை என்னுள் சுமந்தபடியே தான் வாழ்கிறேன் மாமா.
இதோ இந்த எழுத்துக்கும் காரணம் நீங்களே மாமா. என் எழுத்துக்களை பல நாடுகளில் படிக்கின்றார்கள் மாமா. பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறேன் மாமா. பலரின் துயரம் துடைக்கும் பணியில் இருக்கிறேன். தர்மம் சாராத எந்தத் தொழிலையும் செய்வதில்லை மாமா. அற வழியில் உங்களை என்னுள் சுமந்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் மாமா.
கண்ணீருடன் உங்களுக்கு விடை கொடுக்கிறேன் மாமா….!
* * *
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.