குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, July 15, 2022

வலிகளுடன் ஸ்வரங்கள் இசைக்கப்படுகின்றன

சங்கீதத்திலே சரிகமபதநி என ஏழு ஸ்வரங்கள் உண்டு. இந்த ஸ்வரங்களை ஆதாரமாகக் கொண்டு ராகங்கள் இசைக்கப்படுகின்றன. ராகங்கள் ஸ்வரங்களின் கூட்டுக் கலவை ஒலியாக இருப்பவை.

இசைக்கருவிகள் வழியாக வழிந்து வரும் இசைக்கோர்வைகள் ஒவ்வொன்றும் வலிகளின் பின்புலத்திலிருந்து வருகின்றன. மிருதங்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும் தோலிருந்து வெளிவரும் நாத இசைக்கு ஒரு உயிர் பலியாக்கப்படுகிறது. இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றின் உயிர் பலியின் மீது உருவாக்கப்படுகின்றன. கூர்ந்து அவதானித்துப் பாருங்கள். 

வயலின் கூட அவ்வாறு தான் உருவாக்கப்படுகிறது. வயலினில் பயன்படுத்தும் ஸ்வர தந்திக் கம்பிகளும் அவ்வாறே. குரலோசையோ தொண்டை வலியின் வழியே பாடப்படுகின்றது.

இசையானது வலிகள் நிரம்பியவை.  வலிகளுடனே தான் மனிதனும் வாழ்க்கை நடத்துகிறான். வலி எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இசை எங்கணம் வலிகளுடன் உருவாக்கப்படுகிறதோ அது போலவே மனிதனின் வாழ்க்கையும் வலிகளுடனே பயணப்படுகிறது. ஏதோ ஒரு தருணத்திலே மனிதர்கள் வலிகளை உணர்வர். பலர் வலி தாளாமல் அழுவதுண்டு. ஒரு சிலர் கண்களில் திரையிடும் கண்ணீர் வழியாக வலியை மறைப்பர். 

அந்த வீட்டில் எல்லா வசதிகளும் உண்டு. பொருளாதராத்தில் நிறைவான வீடு. அந்த வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் எனக்குள் உண்டாகும் வலியின் வேதனையை வார்த்தைகளால் விவரித்து விடமுடியாது.

என் மகள் நிவேதிதா, கே.எம்.சி.எச். மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு படுத்திருந்தாள். அவளின் அருகில் அமர்ந்திருந்தேன். கழிவறை செல்ல ஊசி நீக்கப்படும் ஒவ்வொரு தருணத்திலும்.’அப்பா..! வலிக்குதுப்பா’ என்பாள். அவளுக்குள் உடலில் வலி. ஆனால் எனக்கு உயிருக்குள் வலிக்கும். கடவுள் மீது கோபம் கொப்பளிக்கும் தருணங்கள் அவை. 

எனக்கு மகள் பிறந்த பிறகு தான் தகப்பன் என்ற தர்மத்தை அறிந்து கொண்டேன். அதன் பிறகு பெண்களைப் பார்க்கும் விதம் மாறிப் போனது. நானொரு தகப்பன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றைக்கும். தகப்பனாக இருப்பது ஒரு தவமென கருதுகிறேன். என் அறமற்ற செயல்கள் என் பிள்ளைகளை எந்த விதத்திலேனும் பாதித்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன். எவரையும் துன்பப்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கிறேன்.

மாறிப்போனது வாழ்க்கை என் மகள் பிறப்பின் பின்பு.

நீண்ட நாள் கழித்து அந்த வீட்டுக்குச் சென்றேன்.

அம்மா வாங்கிக் கொடுத்தாங்க என்று விளையாட்டு பொருட்களைக் கொண்டு வந்து காட்டுகிறது. இது தலைக்கு ஹேர் பின், இது பொம்மை, இது சைக்கிள், புத்தகம் என ஒவ்வொன்றாய் என்னிடம் கொண்டு வந்து காட்டுகிறது. அழகிய வெண்சிட்டு போல சுறுசுறுப்பு. மெல்லிய, மென்மை தழுவும் கள்ளம் கபடமற்ற முகம் அக்குழந்தைக்கு. கண்களில் ஏதோ ஒரு சோகம். 

நானும் அவளும் ஒன்று தான்.

நாங்கள் இருவரும் அப்பா இல்லாதவர்கள். எனக்கும் அவளுக்கும் அப்பா இருந்தும் இல்லை. அம்மாவின் அரவணைப்பிலே வளர்ந்தவன் அடியேன். அதுவும் அப்படியே. என்னுடன் ஒட்டிக் கொண்டது. வாஞ்சையுடன் அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். மனசோடு ஒட்டிக் கொண்டது. விட்டுப் பிரிய மனமில்லை. ஆனால் பணி என்னை அழைத்தது.

என்னுடன் அவளை கார் பார்க்கிங்கிற்கு அழைத்து வந்தேன். ஓடிப் போய் காரின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே அமர்ந்து கொண்டது. நானும் கூட வருவேன் என்றது. 

எனக்குத் தெரியும் அவளை அங்கேயே விட்டு விட்டு திரும்பப் போகிறேன் என. அவளுக்குத் தெரியாது. நான் அவளை அழைத்துச் செல்லப் போகிறேன் என்று நம்பினாள். அவளிடம் சமாதானம் செய்த போது, எனக்குள் ஊசி குத்த ஆரம்பித்தது. வலி தாளாமல் கண்கள் வெடித்து விடுவது போல இருந்தது. அந்த வலியின் வேதனையை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். 

அன்றலர்ந்த மலர் போல ஒரு பூங்கொத்தாய் அக்குழந்தை என்னுடன் வர, அந்தச் சின்னஞ்சிறு உள்ளத்திலே நம்பிக்கை பூத்திருந்தது. நான் அந்த நம்பிக்கையை கசக்கி எரிந்தேன்.

’ஹாஸ்பிட்டலுக்குச் சென்று விட்டு வந்து அழைத்துச் செல்கிறேன்’ என சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தக் கண்கள் நம்பிக்கையுடன் என்னைப் பார்த்துக் கொண்டே ’நானும் வாரேன்’ என்று சொல்லச் சொல்ல, என் இதயம் வெடித்து விடும் போல வலிக்க ஆரம்பித்தது. 

சிறிது நேரத்தில் அவளுக்கு தெரிந்து விட்டது நான் அழைத்துச் செல்லமாட்டேன் என. அந்த ஏமாற்றத்தை அழுகைக்கு முன்பு வரும் ஒரு உதட்டுச் சுழிப்பில் அக்குழந்தை மறைத்ததைக் கண்டேன்.

அவளும் என்னைப் போலத்தான். ஏமாற்றங்களை நாங்கள் அப்படித்தான் மறைத்துக் கொள்கிறோம்.

வலித்தது நிரம்பவும். 

அந்த வலியோடு இன்னொரு தீரா வலியும் பாரமாய் நெஞ்சில் அழுத்திக் கொண்டிருந்தது. அது அந்தக் குழந்தையின் அம்மா. என் மகள் வளர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார் அவர். 

‘வாங்க, அங்கிள்’ என்று வரவேற்ற போது எனக்குள் உண்டான மனபாரத்தை இதோ எழுதிக் கொண்டிருக்கும் போதும் கூட இறக்கி வைக்க முடியவில்லை. அவரும் எனக்கு மகளே. எந்தப் பெண்ணாலும் மகள் என்று நினைப்பு வந்து விடுகிறது.

எந்த ஜீவனாக இருந்தாலும் கருணை கொள்வது, கருணையுடன் அணுகுவது என்ற மனப்பான்மை எனக்குள் முகிழ்த்து விட்டது. கருணையினால் நான் அடைவது வலிகள். அந்த வலிகள் தீரவே தீராது என்கிற போது உண்டாகும் வெம்மையினால் அவ்வப்போது மனசு உடைந்து போகிறேன். 

இயற்கையின் டிசைனான ஒவ்வொரு உயிரினங்களும் வலிகளுடனே வாழ உருவாக்கப்பட்டவை தானே. 

நீங்களும் உங்கள் வலிகளுடன் பயணம் கொண்டிருப்பீர்கள். தகிக்கும் பூமியில் கிடைக்கும் மர நிழல் போல, எல்லாம் சரியாகும் என்ற நினைப்பே வலிகளைச் சற்றே ஆசுவாசப்படுத்தும்.

ஸ்வரங்கள் உருவாக்கும் ராகங்கள் வழியே, நம் வலிகளை சற்றே மறக்கலாம் என்பதால் ராகங்களும் வலிகளுடனே இசைக்கப்படுகின்றன போலும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.