குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, July 20, 2022

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஜெயகாந்தன் எழுதிய நாவல். அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததாக எழுதப்பட்ட இந்த நாவலை இன்றைக்குப் படிக்கும் போது வாழ்க்கையின் போக்கு என்பது அவரவர் முடிவில் தான் உள்ளது என்பது புரிந்தது.

கங்கா, அவளின் அம்மா, வெங்கு மாமா, கணேசன், பிரபு, மஞ்சு ஆகியோருடன் பயணிக்கும் இந்தக் கதையின் நாயகியான கங்கா இளம் வயதில் இக்கட்டான ஒரு நேரத்தில் முன் பின் அறியாத பிரபுவுடன் உறவு கொண்டு விடுகிறாள். அதை அவளின் அம்மாவிடம் சொல்ல கங்காவின் வாழ்க்கையை அவள் அம்மா சீரழிக்க ஆரம்பித்து விடுகிறார். பிராமணக் குடும்பத்தில் நிகழும் இந்தச் சம்பவத்தினால் கங்காவின் வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் சம்பவங்களின் தொகுப்பாய் விரியும் அந்த நாவலில் மன விசாரங்களை ஜெயகாந்தன் சம்பாஷனைகளாக விவரிக்கிறார்.கங்காவை அவளின் அண்ணன் கணேசன் அடித்து விரட்டி விடுகிறான். வெங்கு மாமா அம்மாவையும் கங்காவையும் அழைத்துச் சென்று கங்காவைப் படிக்க வைக்கிறார். வெங்கு மாமா கங்காவை புணருவதற்கான கால நேரத்திற்காக விவாதங்களை கங்காவுடன் நிகழ்த்துவம் மட்டுமன்றி அவளுடன் பாலியல் சீண்டல்களை நிகழ்த்தி வருகிறார். 

பெண்களின் பெரும் பிரச்சினை இது. கையறு நிலையில் இருக்கும் பெண்கள் இந்தக் காலம் வரை ஆண்களால் வெங்கு மாமாவைப் போல சீண்டுகிறார்கள். வேறு வழி இன்றி பெண்கள் இணங்க வேண்டி வருகிறது.

சினிமாவில் பெண்களின் மீது ரகசிய வன்முறையை நிகழ்த்துகிறார்கள். எனது நண்பர் பைனான்ஸ் செய்திருந்த ஒரு படத்தின் சூட்டிங்க் சென்றிருந்தேன். நடிகை ஒத்து வர மாட்டேன் என்பதால் காலையில் மேக்கப் போட்டு சேரில் அமர வைக்கப்பட்டு மாலை வரை ஷூட் எடுக்காமலே அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்படி உட்கார்ந்திருப்பது எவ்வளவு நரகம் என்று அவளுக்கு மட்டுமே தெரியும். புரடக்‌ஷன் ஆளை அழைத்து விசாரித்தேன். அதெல்லாம் ஒரு கணக்கு சார் என்று சிரித்தார். கணக்கின் விடையையும் அவிழ்த்தார்.

பாலியல் சீண்டல்களை சினிமா ரகசியமாக நாசூக்காக செய்கிறது. பணம் வேண்டுமா? புகழ் வேண்டுமா? அப்போ இதைச் செய் என்று சொல்லாமல் சொல்கிறது. இப்போதெல்லாம் எல்லாக் கணக்குகளையும் தெரிந்து கொண்டுதான் சினிமா உலகம் பயணிக்கிறது. பணம் புகழின் முன்னால் அறம் என்ற ஒன்று இருக்கவே முடியாது. 

கங்காவுடன் அடையாளம் தெரியாத நிலையில் உறவு கொண்ட பிரபு தான் அவளின் கணவன், அவள் வேறு எவரையாவது திருமணம் செய்து கொண்டால் அது அறமல்ல என்ற கருத்தினை வெங்கு மாமாவும், கங்காவின் அம்மாவும் வைக்கிறார்கள். கங்காவின் மனதும் அதை நோக்கியே பயணிக்கிறது. கங்கா அவனைக் கண்டுபிடிக்கிறாள். அவனுக்கு திருமணமாகி குடும்பம் பிள்ளைகள் இருக்கிறது. அக்குடும்பத்துடன் நெருங்கிப் பழகுகிறாள். பிரபுவுடன் நெருங்கிப் பழகி அவனை உறவுக்கு அழைக்கிறாள். வப்பாட்டியாவது வைத்துக் கொள் என்கிறாள். அவன் மறுக்கிறான். கங்கா அவனை விட்டு விலகுகிறாள். கங்கா குடிக்கவும் புகைக்கவும் ஆரம்பிக்கிறாள். 

பெண் சூழலுக்கு கட்டுப்பட்டவள். தனித்தன்மையுடன் அவள் வாழ முற்பட்டால் சனாதன தர்மம் போல சூழல் தர்மம் அவளை நிர்மூலப்படுத்தி விடுகிறது. அவளைச் சார்ந்த உறவுகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி தன்னிலை குலைகிறாள்.

ஒழுக்கம் என்ற வேலியைத் தாண்டி அவள் வரும் போது, ஆண்களால் அவள் சூரையாடப்படுகிறாள். அவமானப்படுத்தப்படுகிறாள். கைவிடப்படுகிறாள். அவளின் மனம் குத்திக் கிழிக்கப்படுகிறது. பெரும்பான்மையான இந்திய பெண்களின் நிலை இன்றும் இப்படித்தான் இருக்கிறது. 

பொருளாதாரத்தில் நிறைவான பெண்கள் விட்டில் பூச்சிகளாய் மாறி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.எது சரி? எது தவறு? என்றும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் போக்கினை பொருளாதார சுதந்திரம் மறைத்து விடுகிறது.

என் தோழியிடம் கங்காவைப் பற்றிப் பேசினேன். இதெல்லாம் ஒரு கதையா என்று ஜெயகாந்தனை கிழித்து தொங்க விட்டாள். ஜெயகாந்தனுக்கு இவளைப் போல பெண்கள் வேண்டியிருக்கும். அதனால் இப்படியான கதைகளை எழுதி இருப்பார் போல என்று கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினாள். இன்றைய நவ நாகரீகப் பெண்ணின் மன நிலை இது. இந்த நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதினைப் பரிந்துரைத்தவர்கள் மடையர்கள் என்று சாடினாள்.

அப்படி அல்ல, அந்தக் காலத்தில் இந்த நாவல் ஒரு பெண்ணின் புரட்சியாகப் பார்க்கப்பட்டது என்பதால் விருது வழங்கப்பட்டிருக்கிறது. பிராமண சமூகத்தில் பெண்களை இழிவு செய்தது போல வேறு எந்தச் சமூகமும் இழிவு படுத்தவில்லை என்பதற்கான பல்வேறு தரவுகள் இருக்கின்றன என்று விவரித்தேன். சனாதன தர்மங்கள் அழிவுக்கானவை என்று சாட்சியங்களுடன் விவரித்தேன்.

பன்னாட்டு நிறுவனத்தின் மேலாளராக இருக்கும் அவருக்கு ஆண்கள் என்றால் யூஸ் அண்ட் த்ரோ. சிங்கிள் மதராக இருக்கிறார். கொடுமை என்னவென்றால் தன் மகன் மீது அவர் வைத்திருக்கும் பிரியம். மீண்டும் சிறைக்குள் சிக்கிக் கொண்டிருந்தார்.

வாழ்க்கையின் சிக்கல் இங்கு தான் ஆரம்பிக்கிறது. ஒரு ஆணை வெறுக்கும் பெண், தன் உறவில் உருவான மற்றொரு மகன் என்கிற ஆண் மீது வைக்கும் பாசமென்பது வேடிக்கையானது.

மனிதர்கள் சக மனிதர்களுடன் நேசம் கொள்ளவில்லை எனில் பைத்தியமாகி விடுவார்கள். அரவணைப்பு, அன்பு, பாசம், நட்பு இன்றி வாழவே முடியாது. அப்படி வாழ்ந்த எவரும் தன் இறுதிக் காலத்தில் நிலைகுலைவர்.

ஒரு பறவை முட்டை இட்டு, குஞ்சு பொறித்து, இரை கொடுத்து வளர்த்து, குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்தவுடன் விட்டு விடுகிறது. மனிதன் தான் கடைசி வரை இழுத்துக் கொண்டு தொங்குகிறான்.

என் அம்மாவுக்கும் மனைவிக்கும் சச்சரவு உண்டானது. நான் அம்மாவிடம் சொன்னேன், ”என்னுடன் அவள்தான் பயணிக்கப் போகிறாள், உனது பயணம் இவள் வந்தவுடன் நின்று விட்டது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னேன். சண்டையும் இல்லை, சச்சரவும் இல்லை. அம்மாவின் வாழ்வியல் சூழல் வேறு, மனைவியின் வாழ்க்கைச் சூழல் வேறு.  எப்படி சச்சரவு இல்லாமல் இருக்கும்? அதை சரி செய்யும் வழி என்ன? யோசித்தேன். விடை கிடைத்தது. இன்றைக்கு அம்மாவின் மனதுக்குப் பிடித்த மருமகள் ஆகி விட்டாள். அவ்வளவுதான் விஷயம்.

நான் என் தோழியிடம் சொன்னேன், ”உன் மகன் உனக்கு உரியவன் அல்ல, வேறு எவளுக்கோ உரியவன். அவனால் உருவாகும் பிள்ளைகளுக்கு அவன் தகப்பன். எவரோ ஒருவருக்கு மருமகன், மச்சான். அவனை நல்ல முறையில் வளர்த்து, நல் குணங்களுடன் இன்னொரு பெண்ணிடம் ஒப்படைப்பதே உன் வேலை, அதை விட்டு விட்டு என் மகன் தான் எனக்கு எல்லாம் என்று கதை விட்டுக் கொண்டிருக்காதே” என்று தெளிவு படுத்தினேன்.

மகன் இன்றைக்கு திருமணமாகி மிக நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 

கங்கா வாழ்ந்த காலமும், அவளின் சூழலும் யாரால் அவளுக்கு பிரச்சினைகள் உருவானதோ அவனுடனேயே உறவு கொண்டு, தன் அடையாளத்தை அவன் பின்னால் மறைத்துக் கொள்ள தூண்டியது. அவன் கிடைக்கவில்லை என்கிற போது அவளின் வாழ்க்கை முறை மாறுகிறது. சூழல் முடிவுகள் எப்போதும் சுதந்திரமானவை அல்ல. அது எப்போதும் சிக்கல்களையே தரும்.

பெண்கள் எப்போதும் வேலிகளைப் போட்டு வைத்துக் கொண்டு, அந்த வேலிக்குள்ளேயே நின்று கொண்டு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அது மேலும் மேலும் துயரங்களையே அவர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.

தீராத சிக்கல்கள் அவர்களின் இறப்பின் வரை இருந்து கொண்டே இருக்கிறது.

சில நேரங்களில் சில மனிதர்கள் போலத்தான் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள். நேரமும் சூழலும் தான் மனிதர்களின் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கிறது. ஆகவே எப்போதும் மறந்து விடவே கூடாதது,”சில நேரங்களில் சில மனிதர்கள்”.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.