குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பிஏசிஎல். Show all posts
Showing posts with label பிஏசிஎல். Show all posts

Tuesday, July 26, 2022

நிலம் (100) - PACL LTD நிலங்கள் ஜாக்கிரதை

பி.ஏ.சி.எல் (Pearl Agriculture Private Limited) நிறுவனமானது சிட் பண்ட்ஸ் வணிகத்தில் முதலீட்டாளர்களுக்கு நிலம் வாங்கித் தரப்படும் என்று அறிவித்திருந்தது கண்டு கிட்டத்தட்ட 5.6 கோடி முதலீட்டாளர்கள் மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்த தொகை சுமாராக ஆறாயிரம் கோடி.

இந்த நிறுவனமானது 1996ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 120 கோடி முதலீட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிரந்தர நிர்வாகியாக சுப்ரதா பட்டாசார்யா நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனமானது குறைந்த விலையில் நிலங்கள் தருவதாக விளம்பரம் செய்தது. முதலீட்டாளர்கள் குவிந்தனர். இந்தியா முழுமையிலும் நிலங்களை வாங்கிக் குவித்தது. அதன் பிறகு இந்த நிறுவனம் சுமார் 640 புதிய நிறுவனங்களை உருவாக்கி ஷேர்மார்க்கெட் மற்றும் இதர தொழில்களைச் செய்தன.

இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கவனித்த செபி (SEBI) உசாரடைந்ததது. நிறுவனத்தின் செயல்களை நிறுத்தியதுடன் சுமார் 7269 கோடி ரூபாய் அபராதம் விதித்தது மட்டுமின்றி, இயக்குனர்களையும் கைது செய்தது. அன்றிலிருந்து இந்த நிறுவனம் செபி விதித்த அபராத தொகையினையும் கட்டவில்லை, முதலீட்டாளர்களிடமிருந்து பெற்ற தொகையினையும் திருப்பிக் கொடுக்கவில்லை.  இதனால் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் கமிட்டி உருவாக்கி சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. முதலில் சொகுசுக் கார்கள் ஏலம் விடப்பட்டன. 

இந்த நிறுவனத்திற்கு 23 மாநிலங்களில் சுமார் 26,500 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் நாட்டில் மட்டும்  8,193 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. 

சென்னை, திண்டுகல், காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, ராம நாதபுரம், சேலம், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சொத்துக்களை வாங்கி உள்ளனர். உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சொத்தின் ஆவணத்தினை கீழே பார்க்கவும்.


இவ்வாறு தமிழ் நாட்டில் வாங்கிக் குவிக்கப்பட்ட நிலங்களை அதிமுக ஆட்சியின் போது பல்வேறு சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த வித விசாரணையும் இன்றி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழக பதிவுத்துறையின் சுற்றறிக்கையை துச்சமென நினைத்து பல மாவட்ட துணைப்பதிவாளர்கள் மோசடியாக பல ஆவணங்களைப் பதிவு செய்து கொடுத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் பிஏசிஎல் நிறுவனம் வாங்கி வைத்திருந்த சொத்துக்களை முடக்க செபி முயற்சி எடுத்து சுமார் 523 கோடி சொத்துக்களையும், சுமார் 889 கோடி மதிப்புள்ள ஷெரட்டன் மிரேஜ் ஹோட்டல் சொத்துக்களையும் முடக்கியது. ஆனால் இந்தச் சொத்துக்களின் தற்போதைய நிலை என்ன என்று செபி தெரிவிக்கவில்லை என முதலீட்டாளர்கள் குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.


மேற்கண்ட நிலங்களை விற்பனை செய்து, வரக்கூடிய பணத்தினை முதலீட்டாளர்களுக்குத் திருப்பிக் கொடுக்க செயல்பட்டுக் கொண்டிருந்த போது தமிழகத்தில் உள்ள நிலங்களை முறைகேடாக விற்பனை செய்தது போல ஆவணங்களை அதிமுக ஆட்சியின் போது பதிந்தார்கள். இந்த பதிவுகளை அறப்போர் இயக்கம் ஆர்.டி.ஐ மூலம் கண்டுபிடித்து பல்வேறு துணைப்பதிவர்கள் மீதும், பத்திரப்பதிவு துறையினர் மீதும் புகார் கொடுத்தது. 

இது பற்றி தற்போது ஆராய திமுக அரசு முறைகேடான பத்திரப் பதிவு ஆய்வுகளைக் கண்டறிய குழு அமைத்துள்ளது. பல துணைப்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் சொல்கின்றன.

இனி என்ன ஆகும்?

கோர்ட்டுகளில் இனி பத்திரம் பதிவு செய்தவர்கள் வழக்குத் தொடுப்பார்கள்.  பிஏசிஎல் முதலீட்டாளர்களுக்கு அவ்வளவு விரைவில் பணம் கிடைத்து விடுமா என்றால் வாய்ப்புகள் குறைவு என்பது நிதர்சனம்.  அதுமட்டுமல்ல இதுவரைக்கும் பிஏசிஎல் கம்பெனியில் முதலீடு செய்தவர்கள் அதற்கான ஆவணங்களை வைத்திருப்பார்களா? அப்படி வைத்திருப்பவர்கள் இறந்து போயிருந்தால் வாரிசுகளுக்கு அது தெரியுமா? என்ற பல கேள்விகள் இருக்கின்றன.

அப்படியே விற்றாலும் சுமார் 60 சதவீதம் தவிர இதர 40 சதவீதம் என்னவாகும் என்பதும் ஒரு கேள்விக் குறிதான்.

செபியில் சித்ரா ராமகிருஷ்ணன் போல பலர் வருவர். வந்தால் பிஏசிஎல் சொத்துக்களை  விற்பனை செய்ய விடுவார்களா? என்பது ஒரு கேள்விக் குறி.

ஆஸ்திரேலியாவில் முடக்கப்பட்ட ஹோட்டல் சொத்துக்கள் விற்கப்பட்டனவா என்று யாருக்கும் தெரியாது? அதன் நிலை என்னவென்றும் தெரியாது. 

தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்க விரும்புவர்களுக்கு பிஏசிஎல் சொத்துக்கள் எவையென்று தெரியாது. என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள். கட்டணத்துடன் கூடிய சேவை தர தயராக உள்ளேன்.

தெரிவிக்க வேண்டும் என நினைத்ததை எழுதி விட்டேன். 

தேவைப்படுபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.