குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label காமத்துப்பால். Show all posts
Showing posts with label காமத்துப்பால். Show all posts

Wednesday, June 15, 2022

கேஜிஎஃப் 2வில் பசப்புறுபருவரல்

அரசியல், பொருளாதாரம், அதிகாரம், ஆணவம், அக்கிரமம் எல்லாவற்றையும் ஓரமாக வைத்து விட்டு பசலை நோய் பற்றி பார்க்கலாம். அதென்ன பசலை நோய் என்கின்றீர்களா இப்போதைய மனிதர்களுக்கு சுத்தமாக தெரிந்து இருக்காது. 

பசலை நோய் கொரானா நோயை விடக் கொடியது. கொரானாவுக்கு மருந்துண்டு. பசலை வித்தியாசமான நோய்.

காமத்துபாலில் பசப்புறுபருவரல் என்றொரு அதிகாரத்தின் கீழ் நம் திருவள்ளுவர் பத்து திருக்குறள்களை எழுதி இருக்கிறார். அந்தளவுக்கு திருவள்ளுவருக்கு பசப்புறுபருவரலின் மீது என்ன ஆர்வம்? இருக்கிறது.

ரசிகனய்யா அவர். ரசிகன். கலா ரசிகன். 

காமத்தைச் சிற்றின்பம் என்பார்கள். சிற்றின்பமல்ல அது பேரின்பம். இயற்கை உயிர்களுக்கு கொடுத்திருக்கும் கொடை.  ஐந்தறிவு கொண்ட உயிர்களுக்கு காமம் என்பது படைப்பு செயலாக்கம். ஆனால் ஆறறறிவு உயிருக்கு காமம் என்பது பேரின்பம்.

காமம் இன்றி இவ்வுலகம் இயங்காது. அரசியல், பொருள், அதிகாரம், போர், அக்கிரமங்கள் எல்லாம் காமத்தின் காரணமாகவே நடக்கிறது.

காமம் அற்ற ஒருவன் வாழவே தகுதியற்றவன் என்கிறது இயற்கை. ஓஷோவை நான் இங்கு துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். 

பசி என்பது இயற்கை. அடக்குதல் என்பது வன்முறை. 

காமத்தை அடக்கி ஆண்டால் கடவுளை அடையலாம் என்பார்கள்.

கட உள் என்றால் என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு உயிர்களின் உள்ளத்தில் இருக்கும் காமத்தைக் கடப்பது தான் என்று அர்த்தம்.  சண்டைக்கு வந்து விடாதீர்கள். தமிழ் மொழி கொடுத்திருக்கும் வசதி இது. 

கட உள் என்றால் உள்ளத்தைக் கட என்றும் அர்த்தம் வரும். நான் எழுதி இருப்பது போலவும் வரும். ஆகவே சர்ச்சைகளைத் தவிர்த்து தொடர்ந்து படியுங்கள்.

விரும்பவும், வெறுக்கவும் செய்வது காமமே. உலகை உய்விக்க வந்த உணர்வு காமம். 

அடங்கவே அடங்காத உணர்வு காமம். ஆண்களின் காமத்தினை விட பெண்களின் காமம் எரிமலை போன்றது. அதன் வீரியம் தெரிந்த திருவள்ளுவர் தனி அதிகாரமே எழுதி உள்ளார். 

பசப்புறுபருவரல் என்றால் பெண்களின் மேனி மீது ஊறும் பசலை. பாம்பு போல் ஊர்ந்து உடலெங்கும் பரவும் வியாதி. இந்த வியாதி எப்போது வரும்? எப்படி தீர்ப்பது?

இப்போது கே.ஜி.எப் பாடலுக்குப் போகலாமா?

இந்தப் பாடலைத் தனியாக அமர்ந்து கொண்டு பார்க்கவும். பார்த்து விட்டீர்களா? கீழே படியுங்கள்.

ஊருண் கேணி யுண்டுறைக் தொக்க

பாசி யற்றே பசலை காதலர்

தொடுவுழித் தொடுவுழி நீங்கி

விடுவுழி விடுவுழிப் பரத்த லானே

(அகநானூற்றுப் பாடல்)

பாசி படர்ந்த குளத்தில் கைகளால் பாசியை விலக்கி விட்டு நீரை அருந்திச் செல்வர். விலகிய பாசி மீண்டும் ஒன்று சேர்ந்து விடும்.  அதைப் போல காதலன் (தலைவன்) காதலியை தழுவும் போதெல்லாம் விலகிய பசலை நோய், அவன் விலகிய போது மீண்டும் படர்ந்து விடுகிறது என்கிறது அகம் நானூறு.

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து

காமத்துப்பால் 1183 வது திருக்குறள்


அவர் என்னைப் பிரிகிற போது பிரிவெனும் காதல் துன்பத்தையும், பசலையையும்  எனக்குக் கொடுத்து விட்டு அதற்கு கைமாறாக எனது நாணத்தையும்,  என் அழகையும் கொண்டு போய் விட்டார் என்கிறாள் பசலை நோயில் சிக்குண்ட காதலி.


புல்லிக் கிடந்தேன் பெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு

காமத்துப் பால் 1187வது திருக்குறள்

காதலனுடன் தழுவிக் கிடந்தேன். சற்றே விலகினேன். அவ்வளவுதான் பசலை என்னை அள்ளிக் கொண்டது என்கிறாள் காதலி. 

அதென்னதான் செய்கிறது காதலியை?

உடல் சோரும், உள்ளம் நடுங்கும், உதடுகள் வெம்மையினால் காயும், நாக்கு வரளும், உடல் மெலியும், நிற்க முடியாது, அவனின் நினைப்பாலே உடல் ஏங்கும். காற்றுச் சுடும், வெயில் குளிரும். 

காமத்தில் தகிக்கும் சூடு. காதலனுடன் முயங்கிய காதலிக்கு காமம் கொடுக்கும் நோய். பசலை நோய்.

பசலை நோய் காதலனை நீங்கும் போது காதலியைப் பீடிக்கும் நோய். பசலை நோய் பெண்ணுக்கு மட்டுமல்ல. ஆணுக்கும் உண்டு. அங்கே அவள் காத்திருக்கிறாள் என்று உடல் துடித்து நினைவெல்லாம் நித்யாவென்றிருக்கும் நிலையையும் பசலை தான்.

இப்போது பாடலைப் பாருங்கள். மீண்டும் படியுங்கள்.

நாயகி நாயகன் கை பிடித்து இழுத்துச் செல்கிறாள். கதவு மூடப்படுகிறது. சிற்றின்ப மலர்கள் வாசம் வீசுகின்றன. மறுநாள் நாயகியைச் சுற்றி வரும் மலர்களின் வாசத்தில் அவர் ஆடுகிறாள். நாயகனைத் தேடுகிறாள். அவனைக் காணாது எதிரே வந்த பெண்ணைக் கட்டித் தழுவுகிறாள். 

வாயிலில் அமர்ந்து அவன் வரவுக்காக காத்திருக்கிறாள். நாயகன் வருகிறான். அவனைக் கண்டதும் பசலை நோயால் பீடிக்கப்பட்டவள் நோய் தாளாது அருகிலிருந்த பணிப்பெண்ணைக் கட்டி அணைக்கிறாள். நாயகன் கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறான். பசலை நோய் விலகா நாயகி ஓடிச் சென்று அவனைக் கட்டித் தழுவுகிறாள். நாயகனைத் தழுவும் போது விலகி ஓடி விடும் பசலை நோய்.



பசலை நோய் நீங்க பெரும் நாயகி ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறாள். பெண் ஆளப்படுபவள். பெண்மை படர்தலில் இன்பம். இரு மனமும் ஒன்றிய நிலையில், அந்த நொடியில் உடல்கள் உணரும் நிலையே இன்பம். மனமற்ற நிலையில் உடல் வழி நுகரப்படும் ஈடு சொல்ல முடியா நிலையே காமனின்பம்.

காமம் கெடுதி அல்ல. காமம் தவறு என்றுச் சொல்லும் ஆன்மீகம் தவறு. காமமற்ற எதுவும் இயற்கை அல்ல. இயற்கைக்கு எதிரான எல்லாமும் தவறே.

கேஜிஎஃப் படக்காட்சிகள் வழியே பசலை நோயைப் படமாக்கிய இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு வாழ்த்துகள். 

படத்தில் நடித்த யாஷ், ஸ்ரீனிதி ஷெட்டிக்கும் வாழ்த்துக்கள். 

காட்சிகளின் தொடரமைப்பு பசலை நோய் பீடித்த நாயகியை பார்ப்பவர்கள் உணரச் செய்யும் வித்தை ஆஹா. மனதைக் கவ்விக் கொள்கிறது பாடலும் காட்சிகளும். 

அக நானூறு பாடலும், திருக்குறளின் காமத்துப்பாலும் ஒருங்கே காட்சிகளாய் விரிகிறது. 

காதலும் காமமும் முழுமையாக கிடைக்கப் பெறாதவர்களே பாபத்துக்குரியவர்கள்.

பிரசாந்த் நீல் கலா ரசிகன்....!

பசலை - பசப்புறுபருவரல் - இல்லறத்தின் மருந்தற்ற நோய்