Saturday, September 17, 2022
பெரியாரை பின்பற்றுவோம் - மனிதாபிமானத்தைப் போற்றுவோம்
Monday, July 25, 2022
நடிகர் சூர்யாவுக்கு ஒரு கடிதம்
2022ம் வருடத்திய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் விடைபெற்று இருக்கும் என நினைக்கிறேன் சூர்யா. உங்களுக்கு முகம் தெரியாத எத்தனையோ ரசிகர்கள் வாழ்த்துக்களை சோஷியல் மீடியாக்கள் மூலம் தெரிவித்திருப்பார்கள். மனம் மகிழ்ந்திருப்பார்கள். நெருக்கமானவர்களின் அன்பில் நெகிழ்ந்திருப்பீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
தங்களின் ஆரம்பகால படங்களில் இருந்து தங்களைக் கவனித்து வரக் காரணம் உங்களின் தந்தையார் சிவகுமார். சுத்தமான நடிகரின் வாரிசுகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற ஆய்வுக்காகவும் உங்களைப் பின் தொடர்ந்தேன். அதைத் தொடர்கிறேன். தர்மத்தின் பாதை சூக்குமமானது அல்லவா? அதை அறியும் ஆவல் எனக்கு நிரம்ப உண்டு.
ஆரம்பகால திரைச்சித்திரங்களிலிருந்து தற்போது வரையுள்ள உங்களின் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் திரைச்சித்திர மாற்றங்களையும் கவனித்தே வருகிறேன். எவரும் செய்திடா ஒரு பணியை மக்களுக்குச் செய்து வருவதால், தாங்களின் அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி அறிவித்தவன் கடவுள் ஆவான் ஆனீர்கள் பலருக்கு.
கல்வியை காசுக்கு விற்பனை செய்யும் இந்திய ஜனநாயகத்தில் வாழவே தகுதியற்ற ஏழைகளின் வாரிசுகளுக்கு தாங்கள் செய்யும் பணிக்கு பாராட்டுகள் என்பது சரியாக இருக்காது.
ஒரு சக மனிதனின் துயரத்தில், அவனது முன்னேற்றத்தில் ஒரு படியைக் கடக்க தாங்கள் செய்யும் அறச்செயலை இலவசம் என்றுச் சொல்ல முடியாது. கடமை என்றுச் சொல்வதுதான் சரியாக இருக்கும். அந்த வகையில் தாங்கள் பலரைக் கவர்ந்திருக்கின்றீர்கள்.
தாங்கள் நடித்த திரைச்சித்திரங்களில் ஜெய் பீம் படத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஃபிரிஞ்ச் எலிமெண்ட்ஸ் என்றுச் சொல்லக்கூடிய மத, இன, சாதிய விழுமியங்களை தங்களின் வயிற்றுப்பிழைப்புக்கு வைத்திருக்கும் பலர் எதிர்த்த்து போல உலகில் வேறு எங்கேயும் எவரும் எதிர்க்கவில்லை.
ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
ஜெய் பீம் படமானது எளியவர்களுக்கு நீதி கிடைப்பதைப் பற்றிப் பேசி இருக்கிறது. எளியவர்களுக்கு நீதி கிடைத்து விட்டால் ஃபிரிஞ்ச் எலிமெண்ட்ஸுகளுக்கு வயிற்றால் போய் விடும் என்பதை அவர்களின் எதிர்ப்பில் இருந்து கவனித்திருக்கலாம். எளியவர்களுக்கு எதுவும் கிடைத்து விடக்கூடாது என்பதில் இன, சாதிய வன்முறை ஜனநாயக போலி அமைப்புகள் மிகக் கவனம் கொண்டுள்ளன என்பது தாங்களுக்குப் புரிந்து இருக்கும்.
எத்தனையோ கொடுமைகள் அனு தினமும் நடந்து கொண்டிருக்கும் உலகில் ஒரு காலண்டரும், ஒரு பெயரும் தான் சாதிய வன்முறை ஜனநாயக போலிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர்கள் கதறிய போது அவர்களின் அரசியல் களம் எதுவென உலக மக்களுக்கு தெளிவுபடுத்தியது.
இந்தியா எவ்வளவு பெரிய போராட்டங்களைச் செய்து, எளியவர்களின் வாழ்க்கையை மைய நீரோட்டத்துடன் இணைத்துள்ளது என்பதை அறிய அம்பேத்கார் அவர்களின் ‘இந்துவாக சாகமாட்டேன்’ என்ற புத்தகத்தின் சிறிய பகுதியை இங்கு அவர்களின் அன்பு அனுமதியுடன் பதிகிறேன்.
Thanks to Periyar Kazhagam
மேலே இருக்கும் பகுதிகளைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
உருவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாத சக மனிதர்களுக்கு, தான் உயர் சாதி என்று கருதிக் கொண்ட மனிதர்களால் செய்யப்பட்ட கொடுமைகளில் இருந்து இந்தியர்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதன் தாக்கம் இன்னும் சாதிய சுவடுகளாய் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சுயநலத்திற்காகவும், தன் வயிற்றுப் பிழைப்புக்காகவும், அதிகார வெறிக்காகவும் ஜனநாயகம் வழங்கும் சட்டத்தின் பாதுகாப்பில் சுகமாக அமர்ந்து கொண்டு சாதிய வன்முறைகளை கட்டவிழ்த்து வரும் பல அமைப்புகள், சாதி வெறியினை இன்றைக்கும் நீரு பூத்த நெருப்பு போல ஊதிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்.
இன்றைய இந்தியாவிற்கும் அம்பேத்கர், பெரியார் வாழ்ந்த காலத்து இந்தியாவுக்குமான வேறுபாட்டினை நினைத்துப் பார்க்க வேண்டும்.
தூய்மையான துணி கூட உடுத்தக் கூடாது என்று அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில், பிரிட்டிஷாருடன் அதிகாரத்தில் அமர்ந்திருந்தவர்கள் செய்த கொடுமைகளைப் பட்டியல் இட்டுக் காட்டிட முடியுமா? அவ்வளவு எளிதில் நிறைவடையும் வேலையா அவைகள். கேரளாவில் பெண்களின் முலைக்கு வரி வசூலித்த வரலாற்று உண்மையைத் தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
அடிமைகள் இல்லாது போனால், தங்களது சுகபோகம் சின்னாபின்னமாகி விடுமே என்று கவலைப்பட்ட ஃபிரிஞ்ச் எலிமெண்டுசுகள் சாதியை மதமாக மாற்றி விட்டார்கள். மதத்தின் பின்னால் சாதியை மறைத்துக் கொண்டு வெறியூட்டப்படும் தன்மையில் மக்களை அரசியல் போர்வையில் வன்முறையாளர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஃபிரிஞ்ச் எலிமெண்ட்சுகள்.
சாதி போய் இப்போது மதம் வந்து விட்டது. மதத்தில் ஆகமங்கள், நியமங்கள், விதிகள் நீதிமன்றத்திலும் நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கின்றன என்பதை சமீபத்திய தீர்ப்புகள் வழியாக தாங்கள் அறிவீர்கள். ஒரு எளியவனுக்கு கடவுள் என்பது தீண்டக் கூடாத ஒன்றாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.
ஜெய் பீம் படத்தின் வெற்றி என்பது தாங்கள் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்திற்கு அளித்த ஒரு கோடி ரூபாயில் இருக்கிறது. அதுமட்டுமின்றி ரத்தமும் சதையுமாக நம் கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் அடிபட்டே செத்தவரின் குடும்பத்துக்கு பொருள் கொடுத்து கைதூக்கி விட்ட பண்பும் ஜெய் பீம் படத்தின் நோக்கத்தின் வெற்றிக்குச் சான்று.
சமூக பிரக்ஞையுடன் இனி வெளிவரப்போகும் தங்களின் திரைச்சித்திரங்கள் இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் மகிழ்ச்சியே. டிவிட்டரில் தங்களின் அடையாளமாக அகரம் பவுண்டேஷனை வைத்திருப்பது ஒன்றே போதுமானது. உலகில் நாம் பெற்றுக் கொண்டதை திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்வதுதான் வாழ்க்கை. அதைத் திறம்பட செய்து கொண்டிருக்கும் பலரில் தாங்களும் ஒருவர் என்பது உலகறிந்தது.
இப்போது உங்களைச் சுற்றி வரும் ஒரு சில விஷயங்கள் தான் உங்களுக்கு ஒரு கடிதத்தை எழுதுவோம் என்று நினைக்க வைத்தது.
”சூஃபி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்?” என ஒரு மாணாக்கன் சூஃபி ஞானி அப்துல்லா பின் அப்துல் அஜீஸிடம் கேட்டான்.
”அதற்கு சாதாரண மனிதனாக இருந்தாலே போதும்” என்றார் சூஃபி.
“அப்படியென்றால்?”
“சக்திக்கு மீறி எதையும் செய்யாதவனாக இருந்தாலே போதும்”
“என் இளவயதில் என் சக்திக்கும் மீறி அதிகமாக கற்க விரும்புகிறேன். அது தவறா?” என்றான் மாணவன்.
“தவறில்லை”
“பின்னே சூஃபி ஆவதுதான் எப்படி?”
“சூஃபி என்ற பெயர் கூட பொது நலத்தால் மனிதனுக்கு கிடைக்கிறது. இந்தப் பெயர் மனிதனை எந்த விதத்திலும் உயர்த்துவதில்லை. அப்படி ஒருவன் நினைத்து விட்டாலே அவன் தன்னை இழக்கிறான் என்று பொருள்”
“ஓஹோ! பெருமை தேடி வரும் போது கூட அதைப் பெருமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது, அப்படித்தானே ஜனாப்?”
சிரித்த சூஃபி அவனுக்கு ஒரு கதையினைச் சொல்கிறார்.
”அரண்மனையில் பணியாள் ஒருவன், அங்கு வரக்கூடியவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பணியைச் செய்து கொண்டிருந்தான். அவ்வாறான நாளிலே, ஒருவன் தண்ணீர் குடிப்பது போல நடித்து, மறைத்து வைத்திருந்த கத்தியை பாதுஷா மீது எறிந்து அவரைக் கொல்ல முயன்றான். சமயோஜிதமாக செயல்பட்டு கத்தி வீச முயன்றவனை மடக்கிப் பிடித்து விட்டான். தன் உயிரைக் காப்பாற்றிய பணியாளனிடம், ’உனக்கு என்ன வேண்டுமென்று கேட்க, அதற்கு அவனோ எனக்கு ஒன்றும் வேண்டாம்’ என்றுச் சொல்லி விட்டான். பாதுஷாவோ மீண்டும் மீண்டும் அவனிடம் கேட்க, ’எனக்கு இந்த தண்ணீர் கொடுக்கும் பணியே போதுமானது’ என்றுச் சொல்லி விட்டான். இதைக் கேள்விப்பட்ட நாட்டு மக்கள் அவனை வான் அளவுக்குப் புகழ்ந்தனர். எத்தனையோ பேர் பாராட்டினர். அப்பாராட்டினால் மகிழ்ந்து அவன் தன் பணியைச் செய்யாமல் இல்லை. தொடர்ந்து தண்ணீர் கொடுக்கும் வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வந்தான். தன் பணி நிறைவான பின்பு அவன் சூஃபியாக மாறி விட்டான் என்று கேள்விப்பட்டேன்”
”அந்த சூஃபி யாரென்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். சொல்வீர்களா?” என்றான் மாணவன்.
“சூஃபி யாரென்று தெரியாது. ஆனால் அந்த அரண்மனையில் தண்ணீர் கொடுத்த பணியாள் நான் தான்” என்றுச் சொன்னார் அப்துல் அஜீஸ் என்கிற சூஃபி ஞானி.
கதை முடிந்தது சூர்யா.
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
தாங்கள் இனிமேல் எந்த வித எதிர்ப்புக்கும் பணிய மாட்டீர்கள் என்று தெரிந்து கொண்ட ஃபிரிஞ்ச் எலிமெண்ட்சுகள் உங்களை முற்றிலுமாக சமூகத்திலிருந்து நீக்க முனைந்திருக்கின்றன என தற்போது தங்களைச் சுற்றி நிகழ்ந்து வரும் நிகழ்ச்சிகள் கட்டியம் கூறுகின்றன.
சூரரைப் போற்று திரைப்படத்துக்கு அளிக்கப்பட்ட விருதுகளையும், ஆஸ்கார் அவார்டு கமிட்டியில் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் நான் அவ்வாறே பார்க்கிறேன்.
விருதுகள் ஒருவனின் ஓட்டத்தை முடித்து விடும் தன்மை கொண்டவை. விருதுகள் என்பவை ஈகோவிற்கு கிடைத்த அங்கீகாரம். விருதுகளால் பெருபவர்களுக்கு பயன் ஒன்றும் இல்லை. ஓரிரு நாட்களுக்கு மக்களும், பத்திரிக்கை உலகமும் பேசும். பின்னர் மறந்து போகும். அப்துல் கலாம் விஞ்ஞானியாக தொடர்ந்திருந்தால் இந்தியாவிற்கு பல நலன்கள் கிடைத்திருக்க கூடும். ஆனால் அவரின் விதி மாற்றப்பட்டது. மனிதன் என்றைக்கும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
விருதுகள் என்பவை மனதிற்கு போடப்பட்ட கை விலங்குகள் போன்றவை. எதிர்ப்புகளும், சதிகாரர்களின் நய வஞ்சக நரித்தனமான அரசியல் நகர்வுகளுமே, எளியோரின் நன்மைக்காக வாழ்பவர்களுக்கு, அவர்களின் கடமையைச் செய்ய உதவும் தூண்டுகோல்களாக இருப்பவை. பெரியார் மூத்திரப்பையை சுமந்து கொண்டே சாதிய வன்முறைகளுக்கு எதிரான சமூக நீதிப்போரைத் தொடர்ந்தார் என்பதை நினைவில் கொள்க.
பெரியார் என்பது சாதாரண வார்த்தை இல்லை. அந்த வரிசையில் ஈரோட்டுப் பெரியாருக்குப் பின்பு தான் சார்ந்த, அசுர பலம் கொண்ட மீடியாவில் இருக்கும் தாங்களை ‘இளைய பெரியாராகப்’ பார்க்கிறேன்.
ஆகவே விருதுகளை அகத்திலிருந்து நீக்கி விட்டு, தொடர்ந்து எளியோரின் வாழ்க்கையில் ஃப்ரிஞ்ச் எலிமெண்ட்சுகள் செய்யும் வன்முறைகளை உலகறியச் செய்திடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மனத்தூய்மையே பலத்திற்கு அடி நாதமென்பார்கள். அத்துடன் அறத்தூய்மையும் சேர்ந்து உங்களின் முயற்சிக்கு உதவட்டும்.
அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்
காருண்யா நகர், கோவை.
25.07.2022