குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பார்பனீய கொடுமை. Show all posts
Showing posts with label பார்பனீய கொடுமை. Show all posts

Tuesday, June 28, 2022

தர்மம் தலைகாக்குமா? ஓர் உண்மைச் சம்பவம்

பிளாக்கைப் படித்து வருபவர்களுக்கு நானொரு திமுக உ.பி என்று நினைக்கத் தோன்றும். ஏனென்றால் பிஜேபியையும், நூலிபான்கள் என்று சொல்லக்கூடிய பிராமணீயத்தையும் பற்றி எழுதுகிறேன். எனக்கு பிஜேபி, பிராமணீயம் ஆகியவற்றின் மீது வெறுப்பெல்லாம் இல்லை. 

பிஜேபியின் திட்டம் தெளிவானது மதக்கலவரம், ஆட்சி அதிகாரம். 

பிராமணியத் திட்டம் தெளிவானது எப்போதும் போல ஆட்சி, அதிகாரம், கொள்ளை, தன் சாதி, தன் இன மக்கள் நலன். பிறரை கீழ்சாதி என்று அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வது. நூற்றாண்டு காலமாக இவர்கள் தொடர்ந்து செய்து வரும் அக்கிரமம்.

தேவர் இனத்துக்கும் பிராமணர்களுக்கும் ஒரு இணைப்பு எப்போதும் உண்டு. தேவரினத்தவர்கள் சாமி, சாமி என்று கொண்டாடுவது பிராமணர்களை மட்டுமே. நானும் சிறு வயதில் அப்படித்தான் இருந்தேன். இப்பவும் அப்படித்தான் இருக்கிறேன். பிராமணர்கள் என்றால் சாமி என்று தானாகவே அழைத்து விடுவேன். என்னளவில் கருவறை பிரச்சினை வந்ததில்லை. என்னை யாரும் தடுத்ததும் இல்லை. 

இளம் பிராயங்களில் பிராமணர்கள் பற்றி அதிகம் தெரியாது. புன்னியாசனம், தெவசம் போன்றவற்றுக்கு வீட்டுக்கு பெரியவர்கள் வருவார்கள். பின்னர் என் பார்ப்பன நண்பன் வந்தான். அவனுக்கும் எனக்கும் மந்திரங்கள் உச்சரிப்பதில் குழப்பம் வரும். டென்சனாவான். ’சும்மா இரேண்டா’ என்று திட்டுவான். அதெல்லாம் ஒரு காலம். இப்போது பிராமணிய சாதிய நரித்தனங்களை, அவர்கள் செய்யும் சூக்கும கொடுமைகளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வந்து விட்டது. 

எல்லோரும் வாழ வேண்டும், விட வேண்டும், உதவ வேண்டும். இன்றிருப்பார் நாளை இல்லை என்கிற போது,  தன் இனம், மொழி, உணவு, உடை, கலாச்சாரம் மட்டுமே உயர்வானது என்கிற தற்குறித்தனத்தைப் பற்றி எழுத தான் வேண்டும். 

முற்காலங்களில் சிறார்களுக்குத் திருமணம் செய்து வைத்ததது பார்ப்பனியம். சிறுவன் இறந்து போனால் சிறுமிக்கு மொட்டை அடித்து, வெள்ளை உடை கொடுத்து முடங்க வைத்தது. ஆதாரம் இல்லாமல் அள்ளி விடாதே என்று நினைக்க வேண்டாம். செங்கோட்டை ஆவுடை அக்காள் ஒருவரே சாட்சி.

பார்ப்பனர்கள் காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் மாறவில்லை. வடமாநில கோவில்களில் சுவாமி சிலைகளை தொட்டு ஆராதிக்கும் போது ஆகமங்கள் எதுவும் குறுக்கே வருவதில்லை. தமிழகத்தில் உள்ள சுவாமி சிலைகள் மட்டும் ஆகமத்துக்கு உட்பட்டவை என்கிற பொய்யையும், புரட்டையும் நம்பிக் கொண்டிருக்கும் தமிழர்களைத் தான் காரணம் சொல்ல வேண்டும். 

நிறுவனங்களை ஆரம்பிக்கும் போது பூசை, ஹோமம் செய்யப்படுவது வாடிக்கை. அது எதையும் செய்யாது என்று கூட தெரியாத மடையர்கள் தமிழகத்தில் அதிகம். செய்யும் தொழிலே தெய்வம் அன்றி ஹோமமும், பூசையுமா தொழிலை நடத்தும்? உலகையே ஆட்டிபடைக்கும் அமெரிக்காவில் எந்த ஹோமம் நடத்துகிறார்கள்? ஆகமம் பேசும் நூலிபான்கள் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறார்களே அந்தக் கம்பெனிகள் லாபம் ஈட்டாமலா இருக்கின்றன? 

கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டிருக்கும் மடையர்களால் மட்டுமே தமிழர்கள் முன்னேறாமல் முடங்கிக் கிடக்கின்றனர். 

பார்ப்பனர்கள் செய்யும் இந்த அக்கிரமங்களைத் தர்மம் தண்டிக்கிறதா என்றால் ஆம், தண்டிக்கிறது என்பதற்கான சாட்சிகள் என்னிடம் உண்டு. அவர்கள் தாங்களாகவே அழிந்து கொண்டிருக்கின்றனர். தெரிந்து கொள்ள நல்ல புகழ் பெற்ற பரிகார தல கோவில்களில் கவனியுங்கள். 

தர்மம் அது இதுவென்று உளறிக் கொண்டிருக்காதே? தர்மமாவது, புண்ணியமாவது என்று கேட்பது எனக்குத் தெரிகிறது.  

ஒரு உண்மைச் சம்பவத்தைப் படியுங்கள்.

கோவை பள்ளப்பாளையத்தில் விவேகானந்தர் அனாதை சிறுவர் இல்லம் இயங்கி வருகிறது. சுவாமி ஆத்மானந்தர் அவர்களால் நடத்தப்பட்டு வரும் இல்லத்தில் பல மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அரசு விதிகளுக்கு உட்பட்டு நீண்டகாலமாக நடந்து வருகிறது. கரூர் ஆசிரமத்தில் ஒரு ஆசாரி இருந்தார். ஆசிரமத்தில் உள்ள அத்தனை வேலைகளையும் அவர் தான் செய்வார். கணிணி துறைக்கு டேபிள்கள் செய்வதிலிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் அலுவலகம் அமைத்து தந்ததால் அவரை நன்கறிவேன். இவர் தன் உறவினர் பையனை அனாதை சிறுவர் இல்லத்தில் கொண்டு வந்து விடுகிறார். பையன் இங்கு தங்கிப் படிக்க முடியாது என்று மறுக்கிறான். அவனிடம் ஏதேதோ சொல்லி இல்லத்தில் விட்டுச் செல்கின்றனர்.

அன்று இரவு பையன் தூக்குப் போட்டுக் கொண்டான். விடிகாலையில் கண்ட நிர்வாகி அவசரப்பட்டு பையனை இறக்கி பார்க்க உயிரில்லை. உடனே கயிற்றை எரித்து விட்டு, இடத்தைச் சுத்தப் படுத்தி விட்டார். ஆசாரியிடம் விஷயத்தைச் சொல்லி, பையனை அவனது ஊருக்கு கொண்டு செல்ல முயன்ற போது, காவல்துறையில் புகார் கொடுத்து விட்டனர். 

காவல்துறை வருகிறது. விசாரனை ஆரம்பிக்கிறது. 

’கயிறு எங்கே?’, எரித்து விட்டார்கள், ‘ஏன் எரித்தீர்கள்?’ என்றால் பதில் இல்லை. சந்தேகம் விழுந்து விட்டது. தூக்கில் தொங்கிய இடமோ படு சுத்தமாக இருக்கிறது. பையனை அடித்து தூக்கில் தொங்க விட்டு விட்டனர் என்ற முடிவுக்கு வந்து விட்டது. சின்னப்பையன் தானாகவா வந்து தூக்கில் தொங்குவான்? இதில் மர்மம் இருக்கிறது. கொலையாக இருக்க 99 சதவீதம் சாத்தியக்கூறுகள் உள்ளன என்று காவல்துறை முடிவுக்கு வந்து விட்டது. 

சாட்சிகள் எல்லாம் எதிராய் இருக்கிறது. 

முப்பது ஆண்டுகாலம் வேலை செய்த ஆசாரி லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றிருக்கிறார். 

அவருக்கு நன்கு தெரியும் பையன் இருக்க முடியாது என்று சொல்லியும் விட்டுச் சென்றதால் அவன் அந்த முடிவினை எடுத்திருக்கிறான் என்பது. இருப்பினும் ஆசை விடவில்லை. 

இதற்குள் பத்திரிக்கையாளர்கள் வந்து விட்டனர். அனாதை இல்லத்தில் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டான் என்று தலைப்புச் செய்தி போட்டு விட்டனர். ஒரு சிலர் பணம் கேட்க ஆரம்பித்திருக்கின்றார்கள். 

ஆனால் நடந்தது என்ன? பையனுக்கு இங்கே இருக்கப் பிடிக்கவில்லை. அவன் கோபத்தில் அவசர முடிவு எடுத்து விட்டான். இதை நிரூபிப்பது எப்படி?

அன்பு நண்பர்களே, உண்மைக்கு எப்போதும் ஒரு தன்மை உண்டு. தன்னை மிகச் சரியானதொரு நேரத்தில் வெளிப்படுத்திக் கொள்ளும். 

இந்தக் கொலைப் புகாரில் இருந்து வெளியே வந்தது அந்த அனாதை இல்லம்.

எப்படி?

அன்று மாலை வரை அங்கிருக்கும் சிசிடிவி கேமரா பற்றி எவருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் அது இருந்த இடம் அப்படி. சிசிடிவி கேமரா புட்டேஜ்களைக் கொண்டு போய் காவல்துறையில் கொடுக்கிறார்கள். 

அதில் அந்தச் சிறுவன் விடிகாலையில் கயிறு எடுத்துக் கொண்டு போய், பள்ளி வராண்டாவில் உள்ள வளையத்தில் மாட்டி, கழுத்தில் கட்டிக் கொண்டு, வரண்டாவிலிருந்து காலை விடுவித்து தொங்கியதை அட்சர சுத்தமாக பதிவு செய்திருக்கிறது கேமரா. அவன் தொங்கி நீண்ட நேரம் சென்ற பிறகு நிர்வாகி வந்து பார்ப்பதும், அவனை இறக்கி உயிர் இருக்கிறதா என்று பார்ப்பதும், பின்னர் இடத்தைச் சுத்தப்படுத்தியதையும் பார்த்த காவல்துறை அது தற்கொலை என்று வழக்கை முடிவுக்கு கொண்டு வருகிறது.

இல்லத்தின் மீது புகார் கொடுத்த ஆசாரி கையைப் பிசைந்து கொண்டு நின்றாராம். பத்திரிக்கைகள் மறுப்புச் செய்தி கூட போடவில்லை. அந்தளவுக்கு பிணங்களின் மீது பத்திரிக்கைகளுக்கு பிடிப்பு. எது உண்மை? எது பொய் என்று விசாரிப்பதில்லை. உடனே தலைப்புச் செய்தி, பரபரப்பு கிளப்பி பத்திரிக்கையை விற்று விட வேண்டும். 

அவ்வளவுதான். ஆசாரி, காவல்துறை, பத்திரிக்கைகள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் என்பதை தர்மம் உலகிற்கு உணர்த்தியது மீண்டும் மீண்டும்.

அந்த வீடியோ புட்டேஜ் மட்டும் இல்லையென்றால் இல்லம் மூடப்பட்டிருக்கும் இல்லையா?

நீதிமன்றமும், காவல்துறையும், பத்திரிக்கைகளும், ஆசாரியும் இணைந்து அந்த இல்லத்தை அழித்திருப்பார்கள் அல்லவா?

ஆனால் நடக்கவில்லை. ஏன் தெரியுமா? அந்த இடத்தில் சுவாமி ஆத்மானந்தா அவர்கள் செய்து வரும் தர்மம்.

தர்மம் என்றைக்கும் தலைகாக்கும்.

ஆனால் அக்கிரமக்காரர்களுக்கு தலையை எடுத்து விடும். ஒரே உதாரணம் யார்? நான் சொல்லியா தெரிய வேண்டும்?

வாழ்க வளமுடன்...!