என்னால் இப்படித்தான் பார்க்க முடிகிறது. நெடுவாசல் கிராமத்தை மட்டுமல்ல தமிழகத்தையே சுடுகாடாக்காமல் மத்திய அரசு விடாது. தமிழர்களை அகதிகளாக்கி அலைய விடாமல் விடமாட்டார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியும் சரி பாஜகவும் சரி தொடர்ந்து செய்து வருவார்கள். காரணம் தமிழகத்தின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கருப்புத் தங்கம். தற்போதுதான் மீடியாக்களில் தமிழகத்தில் புதையுண்டு கிடக்கும் கருப்புத் தங்கம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக செய்திகள் கசிய ஆரம்பிக்கிறது.
இதற்காகத்தான் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தன் ஆராய்ச்சியை தமிழகமெங்கும் நடத்தியது. ஆராய்ச்சி நடத்திய காலங்களில் டெக்னாலஜி வளரவில்லை. டிவி செய்திகளும் பத்திரிக்கைச் செய்திகளும் கிடைப்பதற்கும் உலகளாவிய அறிவியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வசதியும் இல்லாத காலத்தில் ஓ.என்.ஜி.சி ஆராய்ச்சி நடத்தியதால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அதை அரசியல் கோடிகளும்,கோடிகளுக்கு மாமா வேலை பார்க்கும் மாமாக்களும் ”அப்போது சும்மா இருந்தீர்கள், இப்போது ஏன் எதிர்க்கின்றீர்கள்?” என்று மடத்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என்பதை நான் இதனுடன் சேர்த்து பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் இதுதான் உண்மை எனக் காட்டுகிறது. மழை அதிகம் பெய்தால் வேறு வழி இன்றி கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவது இயற்கையை எதிர்க்க முடியாமல் தான். காவிரி தண்ணீருக்கும் இந்தத் தமிழகத்தின் கருப்புத் தங்கத்துக்கும் நிச்சயம் தொடர்பு இருந்தே ஆக வேண்டும். அது அப்படித்தான் இருக்கமுடியும்.
காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வந்தால் முப்போகமும் தமிழகத்தில் விளையும். அவ்வாறு விளைய ஆரம்பித்தால் கருப்புத்தங்கம் பற்றி பேச்சே எடுக்க முடியாது. வறட்சி, ஏழ்மையை உருவாக்கி விட்டால் மக்களை எளிதில் மடக்கி விடலாம் என்ற திட்டமாகக் கூட இருக்கலாம்.
சுப்ரீம் கோர்ட் தண்ணீர் திறந்து விடு என்று உத்தரவு போடுகிறது. ஆனால் கர்நாடகா அதைச் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டவுடன் சசிகலாவைக் கைது செய்கிறது காவல்துறை. தமிழகத்தில் மட்டும் சட்டம் காப்பற்றப்பட வேண்டும் ஆனால் கர்நாடகத்தை எவரும் கேள்வி கூட கேட்கவில்லை. மத்திய அரசு சட்டத்தை மதிக்காத மாநில அரசிடம் விளக்கம் கூட கோரவில்லை. ஆனால் தமிழகத்தில் எது நடந்தாலும் கேள்வி கேட்கிறது. இதிலிருந்து தெரிகிறதா கருப்புத்தங்கத்தின் அரசியல்? காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத காரணம் தமிழகத்தின் அடியில் இருக்கும் கருப்புத்தங்கம் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்.
பாஜகவின் இல.கணேசனின் பேச்சு இதை உறுதிப்படுத்துகிறது. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஊர் அழியலாம் என்று பேச இந்தக் கருப்புத் தங்கமும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களும் தான் காரணமாக இருக்க முடியும்.
காவிரி வழக்குகள் ஆண்டாண்டுகாலம் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பதிலும் ஏதோ ஒரு அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்றே நம்பத்தோன்றுகிறது. தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய வேகம் காவிரி வழக்குகளில் எங்கே சென்றன? போபால் விஷ வாயு வழக்கில் 15000 பேர் கொல்லப்பட்டார்கள். குற்றவாளி எந்த தண்டனையும் இன்றி சுகமாக இறந்து போனார். சாதாரண முறையில் தண்டனை பெற்று வெளி வந்தார்கள் அனைத்துக் குற்றவாளிகளும்.
மக்கள் கொல்லப்பட்டால் கூட நீதிமன்றத்தால் எதையும் செய்து விட முடியாது என்பதை இந்த வழக்கும், வழக்கு நடத்தப்பட்ட விதமும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.
மக்கள் அரசு அதிகாரத்தின் முன்பு அடிமைகள் என்பதை போபால் விஷவாயு வழக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றங்கள் அரசியலின் முன்னே எதுவும் செய்ய முடியாது. உத்தரவு போட்டாலும் நிறைவேற்றுவது அரசு தானே? அந்த உத்தரவு அரசுக்கு எதிராக இருந்தால் எந்த அரசு நிறைவேற்றும்? நீதிமன்றத்தால் என்ன செய்து விட முடியும்? சட்டம் அரசியலின் முன்னே வாய் மூடி நிற்கின்றது.
அரசியலில் சுயநலக்கோடிகள் கூட்டம் மிகுந்திருக்கிறது. வாரிசுகள் வரிசை கட்டி அரசுக்கட்டிலில் அமர போட்டி போடுகின்றார்கள். கூடவே மாமாக்களையும் சேர்த்துக் கொண்டு குதிரையின் முன்னே கட்டித் தொங்க விடப்படும் கொள்ளுப் பையைப் போல பதவி, பணம் இரண்டையும் காட்டி தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக பிறரைப் பேச வைக்கின்றார்கள்.
நீதிமன்றத்தில் வழக்குப் போட்டாலும் ஜெயிக்க முடியாது. ஏனென்றால் நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றுச் சொல்லிய தீர்ப்புகள் இருக்கின்றன. மத்திய அரசின் கொள்கை முடிவு தமிழக மக்களை கூண்டோடு கைலாசம் அனுப்புவது அல்லது அகதிகளாக தமிழர்களை ஓட விடுவது. இந்தக் கொள்கை முடிவினை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளத்தானே செய்யும்? மக்கள் கொல்லப்படனும் என்று அரசு நினைத்தால் அதைக் கூட அரசின் கொள்கை முடிவு என்றுச் சொல்லி நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதி விடும். பாஜகவின் இல.கணேசன் தான் அரசின் கொள்கை என்னவென்று தெளிவாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றாரே? இதை விட வேறு என்ன சாட்சியம் தேவைப்படுகிறது?
தமிழகத்தில் இப்போது இருக்கக் கூடிய அரசியல் நிலவரம் சரியில்லை. பாஜகவின் ஆட்டி வைக்கும் பொம்மை அரசியல் தான் நடைபெறுகிறது என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அம்பிக்களின் பத்திரிக்கைகள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். மக்களைத் திசை திருப்புவார்கள். அம்பிக்களின் மீடியாவும், சுயநலம் மட்டுமே பொது நலமென கொள்கை கொண்ட ஒரு சில தமிழ் மீடியாக்களும் எல்லாவற்றையும் மறைத்து விடுவார்கள்.
மத்திய அரசின் அசைவுகளுக்குத் தகுந்தாற்போல அசையும் மாநில அரசினால் மக்களுக்கு நன்மை செய்து விட முடியும் என்று நினைக்க முடியவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றுச் சொல்வதெல்லாம் அரசியல் என்றே நினைக்கிறேன். பெட்ரோலியத்துறையின் அரசாணைகள், மாற்றப்பட்ட விதிமுறைகள் எதையும் எவரும் படிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். ஏற்கனவே ஏலம் விட்டு இந்த நிறுவனத்துக்கு தான் இந்த இடம் என்று அனுமதி கொடுத்து விட்டது மத்திய அரசு. அதுமட்டுமல்ல மக்களுக்கு எந்த விதக் கெடுதலும் ஏற்படாது என்று செய்தி அறிக்கையும் வெளியிடுகிறது. மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட மாநில அரசு அனுமதி தர மாட்டோம் என்கிறது என்றுச் சொல்வதில் இருக்கும் வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டும்.
பாஜகவின் ஒலிபெருக்கிகள் ”சமூக விரோதிகள் சேர்ந்து விட்டார்கள், கலவரம் நடக்கும், தியாகம் செய்ய வேண்டும், பெட்ரோலிய இறக்குமதி குறைக்கப்பட வேண்டும்” என்றெல்லாம் விடாது ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் கேஸ் விலையை அதிரடியாக உயர்த்துகிறது மத்திய அரசு. இனி பெட்ரோலின் விலையையும் அதிரடியாக உயர்த்துவார்கள். இறக்குமதி அதிகமாகிறது என்பார்கள். பொருளாதார விற்பன்னர்கள் விலையேற்றத்துக்கு காரணங்களை அடுக்குவார்கள். விலை குறைக்கப்பட வேண்டுமெனில் உள் நாட்டுப் பெட்ரோலிய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கட்டாயத்தை உருவாக்குவார்கள். மக்களும் வேறு வழி இன்றி நெடுவாசல் கிராமம் மட்டுமல்ல தமிழக விவசாயத்தைப் பலி கொடுக்க ஆதரவு தர ஆரம்பித்து விடுவார்கள்.
இதில் ஒரு நன்மை என்னவென்றால் பெட்ரோலியத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த நேரம் சன் பெட்ரோ கெமிக்கல்ஸ், டகால்டி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் தமிழகத்தைச் சுடுகாட்டுச் சாம்பலாக்கி இருக்கும். மலையையே விழுங்கியவர்கள் இதையெல்லாம் விட்டிருப்பார்களா? இதன் காரணமாகத்தான் மக்களுக்கு ஆதரவாக எதிர்க்கின்றார்களோ என்னவோ தெரியவில்லை. எதிலும் பலனில்லாமல் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதில் கேடிகளுக்கு என்ன லாபம்? ஆற்று மணல் எடுக்க காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என்று அரசியல் கேடிகளுக்குப் பணம் கொடுத்தார்கள் என்று செய்திகள் கசிந்தன. நெருப்பு இல்லாமலா புகை வரும்?
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழக பூமியின் அடியில் கிடக்கும் கருப்புத் தங்கத்தை எடுக்கும் வரை மத்திய அரசு விடாது ஓயாது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தென் தமிழகம் பாலைவனமாகி தமிழர்கள் அகதிகளாகப் போகும் நாட்கள் கண்ணில் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
மக்களின் போராட்டங்கள் நூற்றுக் கணக்கான் உயிர்களைப் பலி வாங்க ஆரம்பித்தால் பிசுபிசுத்துப் போய் விடும் என்று அரசியல் கோடிகளுக்கு நன்கு தெரியும். மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் தெரிந்தும் அனுமதி கொடுக்கிறது மத்திய அரசு என்றால் அவர்கள் சொல்லும் ஜால்ஜாப்புகளை நம்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை மாதிரி தான் இருக்கிறது.
ஆடு - மக்கள், ஓநாய் - அரசு. இறுதியில் வெற்றி யாருக்கு என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
1000 கோடி ரூபாய் வருமானம் கொண்டவர்கள் கட்சி மாறி கட்சிக்கு வந்து அமைச்சராகி அல்லக்கை ஆகி பின்னர் நான் நல்லவன் என்றுப் பேசிக் கொண்டலைகின்றார்களே இவர்களைத்தான் அரசியல் கோடிகள் என்று எழுதி இருக்கிறேன். கோடிகள் இல்லையென்றால் குப்பனும் சுப்பனும் கல்வி அமைச்சராக முடியுமா? இல்லை திடீர் புனிதர் வேஷமும் போட முடியுமா? வயிற்றுப்பாட்டுக்கு வழி இல்லாதவர்கள் தானே தர்மம் பற்றி பேசுவார்கள். நாங்கள் நல்லவர்கள் என்று கோடிகள் தான் பேசுவார்கள். பணத்தின் வாசம் சாக்கடையையும் மணக்க வைத்து விடும் அல்லவா?