குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, October 25, 2014

நிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்

சென்னையிலிருந்து நண்பரின் சிபாரிசின் பேரில் ஒருவர் கோவை வந்து என்னைச் சந்தித்தார். அவருடன் அவருடைய நண்பரும் வந்திருந்தார். இருவரும் பெரிய தொழிலதிபர்கள். கோடிகளில் வருமானம் வருகின்றது. சென்னையின் ஒரு பிரதான இடத்தினை வாங்குவதற்கு லீகல் ஒப்பீனியன் வேண்டுமென்று கேட்டார்கள். 

அவர்களிடமிருந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டேன். அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து கவனமாக ஆராய்ந்து பார்த்தேன்.

அந்த ஆவணத்தில் கணவருக்கும் மனைவிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்திருப்பதும், வழக்கில் மனைவி ஜெயித்திருப்பதும் தெரிய வந்தது. மிகச் சாமர்த்தியமாக கணவன், மனைவி என்பது தெரியாமலே ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன்.

இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று மனதுக்குள் ஆந்தை அலறியது.

சொத்து இருக்கும் கோர்ட்டில் ஏதாவது டாக்குமெண்ட்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்தேன். அங்கு இந்தச் சொத்தினை யாருக்கும் விற்க கூடாது என்று தடையாணை இருந்தது. அது எதுவும் வில்லங்கச் சான்றிதழில் வரவில்லை.

தடையாணை பெற்ற தேதியிலிருந்து மிகச் சரியாக ஒரு மாதம் கழித்து மேற்படிச் சொத்தின் ஆவணத்தினை வேறொரு வங்கியில் வைத்துக் கடனும் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

இந்தச் சொத்தினை வாங்குவதற்கு வந்தவர் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினை போட்டு கோடிகளில் முன்பணம் செலுத்தி இருந்தார். 

மேற்படி விஷயங்களைச் சொன்னது ஆள் பதட்டமாகி விட்டார். அவருக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் இவர் பெரிய  நிறுவனத்தின் முதலாளி. இத்தனைக்கும் அக்ரிமெண்ட் போடுவதற்கு முன்பு வேறொரு வக்கீலிடம் ஒப்பீனியன் வேறு வாங்கியிருக்கிறார். எப்படி இருக்கிறது சேதி பாருங்கள்?

சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட்டை ஆவணமாகக் கூட கருதமுடியாது என்று ஒரு வழக்கு தள்ளுபடி ஆகியிருக்கிறது அவருக்கு தெரியவில்லை. அல்லது அந்த வக்கீலுக்குத் தெரியவில்லை போலும்.

சிக்கிக் கொண்டார் வசமாக. முள்ளின் மீது சேலை பட்டு விட்டது. சாமர்த்தியம் இருந்தால் தான் சேலை கிழியாமல் எடுக்க முடியும்.

மேற்படிச் சொத்தின் பேரில் கடன் இருக்கிறது. மேற்படிப் பிரச்சினை தெரியாமல் கடன் எப்படிக் கொடுத்தார்கள் என்பது வேறு ஒரு விஷயம். 

கோர்ட்டில் விற்க தடையாணை இருக்கிறது. இத்தனை பிரச்சினை இருக்கும் போது மேற்படிச் சொத்தினை எப்படி வாங்க முடியும்?

நிச்சயம் முடியாது அல்லவா? பெரும் பணம் போட்டு ஒரு வில்லங்கச் சொத்தினை எப்படி வாங்க மனது  வரும். 

அவருக்கு ஆறுதல் சொல்லி இந்தச் சொத்தினை உங்களுக்கு கிரையம் செய்து கொடுக்க முயல்கிறேன் என்றுச் சொல்லி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்.

சரியாக இரண்டு மாதங்கள். சொத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்துச் சரி செய்யப்பட்டு, வில்லங்கம் ஏதுமில்லாத சொத்தாக கிரையம் பெற்றார் அவர்.

இப்படி ஒரு சொத்தின் மீது கண்ணுக்குத் தெரியாத பல வில்லங்கங்கள் இருக்கும். வெறும் வில்லங்கச் சான்றிதழால் மட்டுமே அதனைக் கண்டுபிடித்து விட முடியாது. கோர்ட்டில் இருக்கும் பிரச்சினையை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாவிட்டால் வில்லங்கம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.

ஆகவே ஒரு சொத்தினை வாங்கப் போகின்றீர்கள் என்றால் வெகு கவனம் தேவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரியாத வில்லங்கங்களை சாமர்த்தியம் உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் உண்மை. முதன் முதலாகச் சொத்து வாங்குபவர்களுக்கு வெகு சிரமம் தான்.





Wednesday, October 8, 2014

நீதியா வென்றது?

உண்மை என்பது எப்போதும் இருப்பது. எப்போதும் பேசுவதுமில்லை. சாட்சியாக வந்து நிற்பதும் இல்லை. உண்மையின் அர்த்தமே மனிதனின் வாழ்க்கையோடு சூட்சுமமாய் புதைந்து கிடப்பது. உண்மை மனிதனின் மனசாட்சியுடன் தொடர்புடையது.

விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஈராக் அதிபர் சதாம் ஹூசேன் புதை குழியில் பதுங்கி இருந்த போது அவருடன் உரையாடிக்கொண்டிருந்துப்பது எதுவோ அது தான் உண்மை. என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு நிச்சயம் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்.

உண்மையும் நீதியும் வேறு வேறு. நீதிக்கு என்று தனி வரையறை. உண்மைக்கென்று தனி வரையறை. இன்னும் புரியும் படிச் சொல்ல வேண்டுமென்றால் மகாபாரதக்கதையை எடுத்துக் கொள்வோம்.

மகாபாரதத்திலே பாண்டவரின் அரண்மனையில் தண்ணீரில் வழுக்கி விழுந்த துரியோதனனைப் பார்த்து நகைத்த பாஞ்சாலி சிரிப்பு முகத்தினால் துரியோதனன் நடந்து கொண்டது அவனுக்கான நீதி. இந்த ஒரு காரணத்தால் அவிழ்ந்து விழுந்த கூந்தலுக்காக கொன்று குவிக்கப்பட்டார்கள் துரியோதனாதிகள். ஆனால் அதுதான் உண்மையா? உண்மை என்பது என்ன? என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

உண்மை தனக்கானவற்றை என்றேனும் பெற்றுக் கொண்டு விடும். மனிதர்களின் வேதனைகளுடனும், துன்பங்களுடனும், துயரங்களுடனும் பின்னிக் கிடப்பது உண்மை. அந்த உண்மையின் வீச்சு படு கொடூரமானதாய் இருப்பினும் அதனிடமிருந்து தப்பிப்பது முடியாத காரியம்.

வாழும் வரை பிறருக்கு உபயோகமாய், பிறரை கிஞ்சித்தும் வஞ்சித்து அவர்களின் சாபங்களைப் பெறாத வரையில் உண்மை உறங்கிக் கொண்டிருக்கும். சாபங்கள் தான் உண்மைக்கு உரம். உரமில்லாத உண்மையால் யாருக்கும் எந்த வித துன்பமுமில்லை. துயரமுமில்லை.

உரத்தை தயார் செய்வது அவரவர் செயலில் உள்ளது.


Wednesday, October 1, 2014

பாலைக் கொதிக்க வைப்பதில்லை

திருவள்ளுவர் மருந்து என்ற தலைப்பில் உணவு பற்றி பத்து குறள்களை அருளியிருக்கிறார். அதிலொன்று,

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் (945)

உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவை அளவோடு உண்டு வந்தால் உயிருக்கு துன்பமில்லை என்பது தான் மேலே கண்ட குறளின் அர்த்தம்.

நாமெல்லாம் முன்னோர்கள் சொல் கேளா நவீன கால மாந்தர்கள் அல்லவா? தந்தையுடன் அமர்ந்து மது அருந்தச் சொல்லிக் கொடுத்த மாபெரும் கலைஞர்கள் இருக்கும் மாநிலமல்லவா நமது மாநிலம். இப்பேர்பட்ட பெரும் மகான்களுக்கு அரசு கலைமாமணி விருதுகளைக் கொடுத்து கவுரவிக்கின்றது. இதைக் காலத்தின் கொடுமை என்றுச் சொல்வதற்கில்லை. இது அரசியல் சார்ந்தது. அது கிடக்கட்டும் சாக்கடை.

தமிழக மாந்தர்களின் தற்போதைய நிலை சர்க்கரை வியாதி. 40 வயதுக்குள்ளேயே சர்க்கரை வியாதி. மூட்டை மூட்டையாக மாத்திரைகளை வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள். 

வயிறு பாவம், உள்ளே வருவதை எல்லாம் அரைத்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறது. மனிதன் சாகிற வரை வயிறு செய்யும் செயல் பற்றி ஒரு துளியாவது எவராவது நினைத்துப் பார்க்கின்றார்களா? 

நிச்சயம் இல்லை. அதைத்தான் நாக்கும், மூக்கும் தடுத்து விடுகிறதே. ஆசையை அறு என்று இதற்குத்தான் சொன்னார்கள் போலும்.

விடிந்தவுடன் டீக்கடை, சூடாக பஜ்ஜி, வடை, போண்டா. காலையிலேயே வயிற்றை அடித்துத் துவைத்து பிழிய வைத்து விடுகின்றார்கள். பெரும்பாலான டீக்கடைகளில் பால் பாக்கெட்டுகளை பால் கொதித்துக் கொண்டிருக்கும் தட்டின் மீது வைத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல கொதிக்கும் பால் பாத்திரத்தில், பால் குறைந்தவுடன் மற்றொரு பால் பாக்கெட்டை பிய்த்து ஊற்றி விடுகின்றார்கள். அந்தப் பால் கொதிப்பதைப் பற்றி டீ மாஸ்டர் (இவருக்கெல்லாம் மாஸ்டர் என்று எவர் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை) கவலைப்படுவதும் இல்லை. கொதிக்காத பாலில் உடலைக்கெடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம்.

ஆவின் பாலில் கலப்படம் செய்தவரைக் கைது செய்து விட்டார்கள். கலப்பட பாலைக் குடித்தவர்களைப் பற்றி எவரும் பேசுவதும் இல்லை. இந்த உணவுக் கலப்படக்காரர்களுக்கு “ஒரு நாள் முழுவதும் சித்ரவதை செய்து மரண தண்டனை” விதிக்க வேண்டும். எத்தனை பேரின் உடலைச் சித்ரவதைச் செய்கின்றார்கள் இவர்கள் என்று நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

கொதிக்காத பாலும், ஊறு விளைவிக்கும் பஜ்ஜியும் அவசியம் தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.



Friday, September 26, 2014

நிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா?

சமீபத்தில் ஒருவர் என்னைச் சந்தித்தார். பழைய ஆவணங்களாக எடுத்துக் கொடுத்து எனது தாத்தாவுக்குச் சொந்தமான சொத்து. புது பட்டாக்காப்பியையும் எடுத்துக் கொடுத்து தாத்தா பெயரில் பட்டா இருக்கிறது என்றுச் சொல்லி வாரிசு சான்றிதழ்களை எடுத்துக் கொடுத்தார்.

அவரின் தாத்தா கிரையம் பெற்ற டாக்குமெண்ட், பட்டா எல்லாம் பர்பெக்ட். சொத்துக்கு விலை சொன்னார். எல்லாம் கேட்டுக்கொண்டேன். இரண்டு நாள் கழித்து என்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டேன்.

அந்த ஆவணங்களை கவனமாகப் பரிசீலித்துப் பார்த்ததில் அவரின் தாத்தாவுக்குப் பாத்தியமான விவசாய பூமியை அவர் காலத்திற்குள்ளேயே விற்று விட்டார் என்பது புரிந்தது. சொத்து விற்ற பிறகு பட்டா மற்றும் பெயர் மாற்றம் செய்யாமலேயே இருந்திருக்கின்றது. தாத்தா இறந்து விட, பேரன் சொத்துக்கு உரிமை கொண்டாடி டாக்குமெண்டைத் தூக்கி கொண்டு யாருக்கோ சொந்தமான சொத்தை விற்க கிளம்பி விட்டார்.

அமர்க்களமான பேச்சு, நடை உடை பாவனையில் பெரும் கோடீஸ்வரர்களையே மிஞ்சி விட்டார் வந்தவர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அந்தச் சொத்துக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான்.

விலை குறைத்துக் கேட்டு, விலை படியவில்லை என்றுச் சொல்லி, வேண்டாம் என்றுச் சொல்லி விட முடியும். ஆனால் இவர் இதே வேலையாகச் சுற்றிக் கொண்டு அவரின் நேரத்தையும், பிறரின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பார் என்பதால் உண்மை என்ன என்பதைச் சொல்லி விட முடிவு செய்தேன். அதை அவர் நம்புவாரா என்பதும் எனக்குப் புரியவில்லை. ஆனால் இதற்கொரு முடிவு செய்து விட வேண்டுமென்று நினைத்தேன்.

ஒருவரின் பெயரில் பட்டா இருந்தால் அவர் தான் அந்தச் சொத்துக்கு உரிமையாளராக இருப்பார் என்று  1800ல் இப்படி ஒருவர் சொன்னால் அது உண்மையாகும். இந்தக் காலத்தில் அப்படிச் சொன்னால் நில அபகரிப்பு வழக்கு போட்டு உள்ளே தூக்கிப் போட்டு விடுவார்கள்.

சொத்தின் டைட்டில் (பத்திரம்) யார் பெயரில் இருக்கிறதோ அவரே சொத்துக்கு உரிமையாளர். பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதற்காக சொத்துக்கு உரிமை கோருவது முட்டாள்தனம். அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த டைட்டில் மிகத் துல்லியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். காமா சோமாவென்று பத்திரம் தயாரித்தால் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டி வரும்.

டைட்டில் எழுதுவதும், சொத்து வாங்கும் முன்பு சொத்தினைக் குறித்து அலசி ஆராய்வதும் மிக முக்கியம். மிக மிக முக்கியம்.

அவர் வந்தார். அமரிக்கையாக அமர்ந்து விலை பற்றியும், பூமியின் பெருமை பற்றியும் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பேச விட்டு பின்னர் மெதுவாக ஆரம்பித்து விபரம் முழுவதும் சொன்னேன். பரிசீலித்த ஆவணங்களையும், வில்லங்கச் சான்றிதழ்களையும் காட்டி விளக்கினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. முடிவில் இந்த டாக்குமெண்ட்களை வைத்துக் கொண்டு எவராவது கிரையம் கொடுத்தீர்கள் என்றால் ஜெயில் கம்பிதான் முடிவில் என்றும் சொன்னேன்.

ஒரு தம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அமைதியாக வணக்கம் சொல்லி விடை பெற்றார்.

தொடரும் விரைவில் ...

Tuesday, September 16, 2014

நிலம் (11) - செக்குபந்தி

எனது நண்பரொருவர் விற்கிரைய உடன்படிக்கை பத்திரம் ஒன்றினைக் கொண்டு வந்து கொடுத்தார். மனை ஒன்றினை வாங்குவதற்காக அக்ரிமெண்ட் அது. படித்துக் கொண்டே வந்தேன். சொத்து விபரத்தில் மனை எண், நீளம், அகலம், செக்குபந்தி விபரமெல்லாம் வெகு தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது எந்த சர்வே எண், கிராமம் என்று குறிப்பிட மறந்து விட்டார் ஆவண எழுத்தர்.

இந்த அக்ரிமெண்டிட் எழுதி வாங்கியவர் கதியை நினைத்தால் “அய்யோ பாவம்”.

ஒவ்வொரு பத்திரத்திலும் சொத்து விபரமென்பது பத்திரத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தச் சொத்து விபரத்தில் சொத்து இருக்கும் மாவட்டம், தாலுக்கா, கிராமம், சர்வே எண், சப்டிவிஷன் எண்கள், மொத்த ஏரியா, அதில் எழுதக்கூடிய டைட்டிலுக்கு கட்டுப்பட்ட சொத்தின் அளவு, அது மொத்த ஏரியாவில் எந்தப் பக்கம் இருக்கிறது என்ற செக்குபந்தி விபரங்கள் இருக்கும்.

இந்தச் செக்குபந்தியில் ஒரு முக்கியமான, அவசியமான விபரத்தை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

அந்தக் காலங்களில் பத்திரங்கள் எழுதும் போது, செக்குபந்தியில் பக்கத்து பூமியின் சொந்தக்காரர் யாரோ அவரின் பெயரைக் குறிப்பிட்டு, இவருக்குப் பாத்தியப்பட்ட பூமிக்கும் கிழக்கு, வடக்கு என்று எழுதப்பட்டிருக்கும். இந்தச் செக்குபந்தி கிராமப்பக்கம் சரியாக இருக்கும். கிராமத்தில் யார் சொத்து யாருக்குச் சொந்தம் என்று பரம்பரையாகத் தெரியும். ஆனால் நகர்புறங்களில் அது சாத்தியமில்லை. யார் யாரோ வாங்குவார்கள், விற்பார்கள். ஒவ்வொரு முறையும் பெயர்கள் மாறிக் கொண்டே இருக்கும். என்ன வழி என்று கேட்பீர்கள். இதோ அந்த வழி.

செக்குபந்தியில் சொத்து விபரம் குறிப்பிடும் போது நிலத்தின் கிழ, மேல், தென், வடல் பகுதிகளின் சர்வே நெம்பரைக் குறிப்பிட்டு விட்டால் போதும். சர்வே எண் மாறாது அல்லவா? ஆகவே இனிமேல் சொத்துக்கள் வாங்கும் போது செக்குபந்தியில் கொஞ்சம் கவனம் வைக்கவும். மனையிடங்கள் வாங்கும் போது சொத்து விபரத்தில் இன்ன சர்வே நெம்பரில் வரக்கூடிய மனை எண் என்று குறிப்பிட்டு கிழமேல், வடதென் மனைகளைக் குறிப்பிட வேண்டும்.

புரிந்து விட்டதா? 

தொடரும் விரைவில்....


Saturday, September 13, 2014

நிலம் (10) - மலைப்பகுதியில் மனை நிலம்

சமீபத்தில் கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தின் அறிக்கையினை செய்தித்தாளில் படித்தேன். வெகு முக்கியமான விஷயம் என்பதால் இப்பதிவு உங்களுக்காக எழுதுகிறேன்.

கோவையில் மலைப்பகுதி கிராமங்களின் பெயர்கள் கீழே.
  1. தேவராயபுரம்
  2. கலிக்க நாயக்கன்பாளையம்
  3. பூலுவப்பட்டி
  4. தென்கரை
  5. மாதம்பட்டி
  6. தீத்திபாளையம்
  7. பேரூர் செட்டிபாளையம்
  8. சுண்டக்காமுத்தூர்
  9.  நாயக்கன்பாளையம்
  10. கூடலூர்
  11. நரசிம்ம நாயக்கன்பாளையம்
  12. எட்டிமடை
  13. தொண்டாமுத்தூர்
  14. நஞ்சுண்டாபுரம்
  15. சின்னதடாகம்
  16. வீரபாண்டி
  17. சோமையாம்பாளையம்
மேற்கண்ட மலைக்கிராமங்களில் விற்கக்கூடிய மனைப்பிரிவுகளுக்கு என்று ஒரு ஸ்பெஷல் அனுமதிகள் பெற வேண்டும். வனத்துறை, வேளான் பொறியிடல் துறை, புவியியல் சுரங்கத்துறை, தாசில்தார், பொதுப்பணித்துறை(ஓடை இருந்தால்) போன்ற அமைப்புகளிடமிருந்து தடையின்மைச் சான்று பெறுதல் மிக முக்கியம். அதனைத் தொடர்ந்து உள்ளூர் திட்டக்குழு அனுமதிககான விண்ணப்பம் மற்றும் இன்ன பிற வேலைகளைச் செய்து மனையிட அனுமதி பெற வேண்டியது மிக அவசியம்.

சமீப காலங்களில் பல மலைக்கிராமங்களில் வீட்டு மனைகள் விற்பனைக்கு என்று விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வீட்டு மனைகளை வாங்க விரும்புவோர் மேற்கண்ட தடையின்மைச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

விரைவில் கோவையின் ஒரு பகுதி மக்களை பேரின்பத்தில் ஆழ்த்தக்கூடிய அற்புதமான ஒரு கட்டுரை விரைவில் எழுதப்படும்.


Friday, September 5, 2014

தமிழகத்தின் நிலை கவலைக்கிடமா?

நான்கு வருடங்களுக்கு முன்னால் சென்னை தொழில் துவங்க நல்ல நகரம் என்ற நிலைமை மாறிப்போய் விட்டது. தமிழகத்தின் பெரு நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில் இன்றைய தமிழகம் மாறி விட்டது.

24 நான்கு மணி மின்சாரம், எளிய முறையில் அனுமதி மற்றும் நிலம் ஆகியவற்றைத் தருவதாக பிற மாநில முதல்வர்கள் உறுதியளிக்கின்றார்கள். கோவை பக்கம் சத்தமில்லாமல் பல நிறுவனங்கள் பல மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றார்கள்.

2009-2010ம் ஆண்டில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 29.18 சதவீதமாக இருந்தது. ஆனால் 2013-2014ம் ஆண்டிலோ 3.5% சதவீதமாக குறைந்து விட்டது. 2009-2010ம் ஆண்டில் தொழிற்துறையின் வளர்ச்சி 20.93 சதவீதமாக இருந்தது 2014ம் ஆண்டில் 2013-2014ம் ஆண்டில் 1.61 சதவீதமாக குறைந்திருக்கிறது.

இதற்கெல்லாம் ஒரே காரணம் : மின்சாரம். 

திருப்பூர் பனியன் தொழில் தற்போது விறுவிறுப்படைந்திருக்கிறது. சீனாவில் மனித சக்தி குறைபாட்டால் இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரில் பல இடங்களில் வேலைக்கு ஆட்கள் தேவை போர்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

கோவையிலோ தலைகீழ் மாற்றம். நூல் மில்கள் மட்டுமே வேறு வழி இன்றி இங்கே இருக்கின்றன என்கிறார்கள்.

மின்சாரம், எளிய தொழில் அனுமதி, தொழில் சம்மந்தப்பட்ட உயர்மட்ட சந்திப்புகள் எதுவும் தமிழகத்தில் சாத்தியமில்லை என்கிறார்கள் பல தொழிலதிபர்கள்.

காற்றாலை மின்சாரம் இல்லையென்றால் தமிழகத்தின் மின் நிலமை மிக மோசமாகி விடும் என்கிறார்கள். காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு இன்னும் பழைய பாக்கிகள் கொடுக்கப்படவில்லையாம். இது பற்றிய விரிவான அலசலை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய தினசரியில் படிக்கலாம்.


என்ன செய்யப்போகின்றார்கள் தமிழர்கள்?

Thursday, September 4, 2014

நிலம் (9) மூதாதையர் சொத்தில் பெண்களுக்குப் பங்கு உண்டா? தொடர்ச்சி

வெகு நீண்ட நாட்களாகி விட்டன. தொடர்ந்து எழுத வேண்டுமென்ற ஆவல் ஒரு பக்கம் இருந்தாலும் பணிச்சுமை அதிகமானதால் இந்தத் தாமதம். நிலம் தொடரைப் படித்து பல நண்பர்கள் போனில் ஆலோசனை கேட்கின்றார்கள். ஒரு சில விஷயங்களுக்கு ஆலோசனை சொல்லலாம். ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் ஆலோசனை சொல்ல இயலாது. ஏனென்றால் தகுந்த ஆவணங்கள் இன்றி ஆலோசனை சொல்வது பெரிய துன்பத்தைக் கொண்டு வந்து விடும். ஆகவே என்னை ஆலோசனைக்காக அணுகும் நபர்கள் தகுந்த ஆவணங்களை அனுப்பி வைத்து விட்டு அதன் பிறகு ஆலோசனை கேட்கவும்.

மூதாதையரிடமிருந்து பாகமாக வந்த சொத்தினை தந்தை ஒருவர் காலமான பிறகு, அந்தத் தந்தையின் வாரிகளுக்கு கூட்டாக பாத்தியப்பட்டது. இந்தச் சொத்தில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பங்கு உண்டு என்கிறது இந்து வாரிசுரிமைச் சட்டம். தந்தையின் ஆண் வாரிசுகளுக்கும், பெண் வாரிசுகளுக்கும் மேற்படிச் சொத்தில் முழு உரிமை உண்டு. அது தான் உண்மை என்றாலும் கூட ஒரு சில விதி விலக்குகளும் உண்டு.

சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒரு நபர் என் தங்கை என் மீது வழக்குப் போட்டிருக்கிறார். அவரின் கல்யாணத்துக்கு தந்தை தன் சொத்தை விற்று தான் செலவு செய்தார். தந்தை இறப்புக்குப் பிறகு, என் பங்குச் சொத்திலும் அவருக்கு பங்கு வேண்டுமென்று கேட்டு வழக்குப் போட்டிருக்கிறார் என்று கண்ணீர் மல்க பெருத்த சோகத்துடன் சொன்னார். என் தங்கை பெரிய பணக்காரி. நானோ மில்லில் வேலை செய்து ஓய்வு பெற்று விட்டேன். வழக்கு நடத்தக்கூட வசதியில்லை. என்ன செய்வது என்றே தெரியவில்ல தங்கம் என்று புலம்பினார். 

அவரின் சொத்து பத்திரங்களை அனைத்தையும் கொண்டு வரச் சொன்னேன். கொண்டு வந்து கொடுத்தார். அனைத்தையும் படித்தேன். இதுவரை நீதிமன்றங்களில் நடந்து பாகப்பிரிவினை வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளைப் படித்தேன். அதில் ஒரு தீர்ப்பில், ஒரு கூட்டுக்குடும்பச் சொத்தை குடும்பத்தலைவர் என்கிற முறையில் குடும்பத்தின் நியாயமான தேவைகளுக்காக விற்பனை செய்தால் அந்த விற்பனை, அனைத்து பங்கு உரிமை உள்ளவர்களையும் கட்டுப்படுத்தும் என்றுச் சொல்லப்பட்டிருந்தது.

என்னிடம் வந்த நபரின் தந்தை சொத்தினை விற்கும் போது வெகு தெளிவாக தன் மகளின் பங்கினை அவரின் திருமணத்திற்காகத்தான் விற்பனை செய்கிறேன் என்று தெளிவாக எழுதியிருந்தார். அந்தப் பாயிண்டைக் குறித்து வைத்துக் கொண்டு அவரிடம் தெளிவாக, உங்கள் தங்கைக்கு உங்கள் சொத்தில் பங்கு இல்லை என்று சொன்னேன். எனது வழக்கறிஞர் நண்பரிடம் அனுப்பி ஒரே ஒரு நோட்டீஸில் பிரச்சினையைத் தீர்த்து வைத்தேன்.

இப்போது தெரிந்திருக்கும் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் பங்கு உண்டா இல்லையா என்பதில் இருக்கும் விதி விலக்கு.


விரைவில் அடுத்த பகுதி


Monday, August 18, 2014

பொன்போலப் பிரகாசிக்கும் உடம்பு வேண்டுமா?

துருத்தி உண்டு; கொல்லன் உண்டு; சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாம் மனத்தில் உன்னித் திகழ ஊத வல்லிரேல்
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும் 
நிருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே

கொல்லனுடைய துருத்தி ஒழுங்காக இருந்து விட்டால் இரும்பைப் பழுக்க வைத்து எந்த வடிவம் தேவையோ அதைப் பெற்று விடலாம்.  நம் உடம்பினிலே உயிரின் நிலையைப் பாதுகாத்துக் கொள்ள மூச்சுக்காற்றை ஒழுங்குப் படுத்தினால் ஜோதியாய் மாறிடும் என்கிறார் சிவவாக்கியர் சித்தர் அவர்கள்.

தியானம், யோகம், தவம் என்பன மூச்சுக்காற்றை ஒழுங்குப்படுத்துவதில் உள்ளது. தினம் தோறும் பிராணயாமம் செய்தால் ஈளை, இரைப்பு, இரத்தக் கொதிப்பு போன்றவை நீங்கி உடல் சுத்தமடையும். மூச்சுக்காற்றினைச் சுத்தப்படுத்தி கபாலத்தில் ஏற்றினால் உண்டாகும் யோகமே வாசியோகம். முதுமை அண்டாது, இளைமை எய்தி உடம்பு பொன் போல பிரகாசிக்கும். 

இதோ சிவவாக்கியரின் அடுத்த பாடல் அதைச் செப்புகிறது.

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே !


அவசியம் நண்பர்கள் அனைவரும் முயற்சி செய்து பாருங்கள்.

பட்டினத்தார் நம் உடலைப் பற்றி எழுதி இருப்பதைக் கீழே படியுங்கள்.

நாறும் உடலை நரிப்பொதி சோற்றினை நான் தினமும்
சோறும் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமும் சோரும் குழியில் விழாது
ஏறும்படி அருள்வாய் இறைவா கச்சி ஏகம்பனே.


மேற்கண்ட பயிற்சியை எனது குரு ஜோதி ஸ்வாமி அன்பர்களுக்கு வழங்குகிறார். விருப்பமுள்ளோர் அவரை அணுகவும். கட்டணம் ஏதுமில்லை. ஒழுங்காகப் பயிற்சி செய்தால் போதும். குரு இல்லாமல் செய்யவே முடியாது. அப்படிச் செய்வது ஆபத்தை அழைப்பதுக்கு ஒப்பாகும்.

Saturday, August 16, 2014

பெண்ணின் அவஸ்தையில் இதுவும் ஒன்று

மானிடப் படைப்பில் பெண் என்பவளைப் போன்ற அற்புதம் வேறு இவ்வுலகில் கிடையவே கிடையாது. அவள் வாழும் போதே கடவுள் தன்மையில் வாழ்கிறாள். சகிப்புத் தன்மையின் மறு அவதாரம் பெண்கள்.

ஒரு உதட்டுச் சுழிப்பில் ஆணின் உயிரைப் பறித்து விடும் மகத்துவம் கொண்டவள் அவள். ஒரு அசட்டுச் சிரிப்பில் உலகையே சுடுகாடாக்கி விடுவாள். அவளின்றி  இயங்காது இப்பூவுலகம். 

அப்படிப்பட்ட மகா அற்புதமான பெண்ணின் அவஸ்தையில் இதுவும் ஒன்று. அடியேனும் இப்படிப்பட்ட அவஸ்தையில் சிக்கி இருக்கிறேன். பெற்றோர்கள் அனைவருக்கும் இந்த அவஸ்தை நிச்சயம் ஏற்பட்டிருக்கும். 

இளையராஜாவின் அற்புதமான இசைக்கோர்ப்பில் வார்த்தைகள் இசையுடன் சேர்ந்து தாலாட்டும் இந்தப் பாடல், ஏதோ ஒரு இன்பலோகத்துக்குள் அமிழ்த்தும் சக்தி கொண்டது.

தனிமையில் கேட்டுப்பாருங்கள். 




இதில் வரும் லட்சுமி கேரக்டரைப் பற்றி விரிவாக “குறுஞ்செய்தி” இதழில் காதலும் கலவியும் என்றொரு தொடரில் பார்ப்போம்.