திருவள்ளுவர் மருந்து என்ற தலைப்பில் உணவு பற்றி பத்து குறள்களை அருளியிருக்கிறார். அதிலொன்று,
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு - குறள் (945)
உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவை அளவோடு உண்டு வந்தால் உயிருக்கு துன்பமில்லை என்பது தான் மேலே கண்ட குறளின் அர்த்தம்.
நாமெல்லாம் முன்னோர்கள் சொல் கேளா நவீன கால மாந்தர்கள் அல்லவா? தந்தையுடன் அமர்ந்து மது அருந்தச் சொல்லிக் கொடுத்த மாபெரும் கலைஞர்கள் இருக்கும் மாநிலமல்லவா நமது மாநிலம். இப்பேர்பட்ட பெரும் மகான்களுக்கு அரசு கலைமாமணி விருதுகளைக் கொடுத்து கவுரவிக்கின்றது. இதைக் காலத்தின் கொடுமை என்றுச் சொல்வதற்கில்லை. இது அரசியல் சார்ந்தது. அது கிடக்கட்டும் சாக்கடை.
தமிழக மாந்தர்களின் தற்போதைய நிலை சர்க்கரை வியாதி. 40 வயதுக்குள்ளேயே சர்க்கரை வியாதி. மூட்டை மூட்டையாக மாத்திரைகளை வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டே இருக்கின்றார்கள்.
வயிறு பாவம், உள்ளே வருவதை எல்லாம் அரைத்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறது. மனிதன் சாகிற வரை வயிறு செய்யும் செயல் பற்றி ஒரு துளியாவது எவராவது நினைத்துப் பார்க்கின்றார்களா?
நிச்சயம் இல்லை. அதைத்தான் நாக்கும், மூக்கும் தடுத்து விடுகிறதே. ஆசையை அறு என்று இதற்குத்தான் சொன்னார்கள் போலும்.
விடிந்தவுடன் டீக்கடை, சூடாக பஜ்ஜி, வடை, போண்டா. காலையிலேயே வயிற்றை அடித்துத் துவைத்து பிழிய வைத்து விடுகின்றார்கள். பெரும்பாலான டீக்கடைகளில் பால் பாக்கெட்டுகளை பால் கொதித்துக் கொண்டிருக்கும் தட்டின் மீது வைத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல கொதிக்கும் பால் பாத்திரத்தில், பால் குறைந்தவுடன் மற்றொரு பால் பாக்கெட்டை பிய்த்து ஊற்றி விடுகின்றார்கள். அந்தப் பால் கொதிப்பதைப் பற்றி டீ மாஸ்டர் (இவருக்கெல்லாம் மாஸ்டர் என்று எவர் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை) கவலைப்படுவதும் இல்லை. கொதிக்காத பாலில் உடலைக்கெடுக்கும் பாக்டீரியாக்கள் அதிகம்.
ஆவின் பாலில் கலப்படம் செய்தவரைக் கைது செய்து விட்டார்கள். கலப்பட பாலைக் குடித்தவர்களைப் பற்றி எவரும் பேசுவதும் இல்லை. இந்த உணவுக் கலப்படக்காரர்களுக்கு “ஒரு நாள் முழுவதும் சித்ரவதை செய்து மரண தண்டனை” விதிக்க வேண்டும். எத்தனை பேரின் உடலைச் சித்ரவதைச் செய்கின்றார்கள் இவர்கள் என்று நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
கொதிக்காத பாலும், ஊறு விளைவிக்கும் பஜ்ஜியும் அவசியம் தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.