குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வில்லங்க சான்றிதழ். Show all posts
Showing posts with label வில்லங்க சான்றிதழ். Show all posts

Saturday, October 25, 2014

நிலம் (13) - தெரியாத வில்லங்கங்கள்

சென்னையிலிருந்து நண்பரின் சிபாரிசின் பேரில் ஒருவர் கோவை வந்து என்னைச் சந்தித்தார். அவருடன் அவருடைய நண்பரும் வந்திருந்தார். இருவரும் பெரிய தொழிலதிபர்கள். கோடிகளில் வருமானம் வருகின்றது. சென்னையின் ஒரு பிரதான இடத்தினை வாங்குவதற்கு லீகல் ஒப்பீனியன் வேண்டுமென்று கேட்டார்கள். 

அவர்களிடமிருந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டேன். அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து கவனமாக ஆராய்ந்து பார்த்தேன்.

அந்த ஆவணத்தில் கணவருக்கும் மனைவிக்கும் கோர்ட்டில் வழக்கு நடந்திருப்பதும், வழக்கில் மனைவி ஜெயித்திருப்பதும் தெரிய வந்தது. மிகச் சாமர்த்தியமாக கணவன், மனைவி என்பது தெரியாமலே ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன்.

இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று மனதுக்குள் ஆந்தை அலறியது.

சொத்து இருக்கும் கோர்ட்டில் ஏதாவது டாக்குமெண்ட்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்தேன். அங்கு இந்தச் சொத்தினை யாருக்கும் விற்க கூடாது என்று தடையாணை இருந்தது. அது எதுவும் வில்லங்கச் சான்றிதழில் வரவில்லை.

தடையாணை பெற்ற தேதியிலிருந்து மிகச் சரியாக ஒரு மாதம் கழித்து மேற்படிச் சொத்தின் ஆவணத்தினை வேறொரு வங்கியில் வைத்துக் கடனும் பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

இந்தச் சொத்தினை வாங்குவதற்கு வந்தவர் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் ஒன்றினை போட்டு கோடிகளில் முன்பணம் செலுத்தி இருந்தார். 

மேற்படி விஷயங்களைச் சொன்னது ஆள் பதட்டமாகி விட்டார். அவருக்கு வியர்க்க ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் இவர் பெரிய  நிறுவனத்தின் முதலாளி. இத்தனைக்கும் அக்ரிமெண்ட் போடுவதற்கு முன்பு வேறொரு வக்கீலிடம் ஒப்பீனியன் வேறு வாங்கியிருக்கிறார். எப்படி இருக்கிறது சேதி பாருங்கள்?

சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட்டை ஆவணமாகக் கூட கருதமுடியாது என்று ஒரு வழக்கு தள்ளுபடி ஆகியிருக்கிறது அவருக்கு தெரியவில்லை. அல்லது அந்த வக்கீலுக்குத் தெரியவில்லை போலும்.

சிக்கிக் கொண்டார் வசமாக. முள்ளின் மீது சேலை பட்டு விட்டது. சாமர்த்தியம் இருந்தால் தான் சேலை கிழியாமல் எடுக்க முடியும்.

மேற்படிச் சொத்தின் பேரில் கடன் இருக்கிறது. மேற்படிப் பிரச்சினை தெரியாமல் கடன் எப்படிக் கொடுத்தார்கள் என்பது வேறு ஒரு விஷயம். 

கோர்ட்டில் விற்க தடையாணை இருக்கிறது. இத்தனை பிரச்சினை இருக்கும் போது மேற்படிச் சொத்தினை எப்படி வாங்க முடியும்?

நிச்சயம் முடியாது அல்லவா? பெரும் பணம் போட்டு ஒரு வில்லங்கச் சொத்தினை எப்படி வாங்க மனது  வரும். 

அவருக்கு ஆறுதல் சொல்லி இந்தச் சொத்தினை உங்களுக்கு கிரையம் செய்து கொடுக்க முயல்கிறேன் என்றுச் சொல்லி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கினோம்.

சரியாக இரண்டு மாதங்கள். சொத்தில் உள்ள பிரச்சினைகள் அனைத்துச் சரி செய்யப்பட்டு, வில்லங்கம் ஏதுமில்லாத சொத்தாக கிரையம் பெற்றார் அவர்.

இப்படி ஒரு சொத்தின் மீது கண்ணுக்குத் தெரியாத பல வில்லங்கங்கள் இருக்கும். வெறும் வில்லங்கச் சான்றிதழால் மட்டுமே அதனைக் கண்டுபிடித்து விட முடியாது. கோர்ட்டில் இருக்கும் பிரச்சினையை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யாவிட்டால் வில்லங்கம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.

ஆகவே ஒரு சொத்தினை வாங்கப் போகின்றீர்கள் என்றால் வெகு கவனம் தேவை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்குத் தெரியாத வில்லங்கங்களை சாமர்த்தியம் உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் உண்மை. முதன் முதலாகச் சொத்து வாங்குபவர்களுக்கு வெகு சிரமம் தான்.