குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 27, 2011

இப்படியும் சில மனிதர்கள்

இந்தப் பையன் மூன்று மாதக் குழந்தையாக இங்கு வந்தான். இன்றைக்கு ஆறு வயதாகி விட்டது என்றார் ஃபாதர். பையன் ”வணக்கம் சார்” என்றான். நேற்றைக்கு எனது நண்பரும், ஃபாதருமானவருடன், அவரின் குடும்பத்தார் நடத்தும் அனாதை விடுதிக்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 70 குழந்தைகள் அங்கு பராமரிக்கப்பட்டு, கல்வி கற்க அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் மலர்ச்சி, மகிழ்ச்சி தெரிந்தது. சந்தோஷமாய் விளையாடுகிறார்கள், படிக்கின்றார்கள். நல்ல போஷாக்குடன் இருக்கின்றார்கள். சுத்தமாய் இருக்கின்றார்கள். மிக ஆச்சரியம் தந்த விஷயம் இது. 

ஆரம்பகாலத்தில், கீரைக்கட்டினைத் திருடிக் கொண்டு வந்து, கடைந்து குழந்தைகளுக்கு கொடுப்போம் என்றார் ஃபாதர். குழந்தைகளின் பசி அழுகையைத் தாங்காமல், இரவில் தென்னைமரம் ஏறி தேங்காய்களைத் திருடி வந்து சாப்பிடக் கொடுப்பேன் என்றார் அவர்.

இப்போதெல்லாம் அனாதை இல்லங்கள் நடத்துவது என்பது எளிதானது அல்ல என்றார். பெண் குழந்தைகளைப் பராமரிக்க ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றுச் சொன்னார். தினசரி 1000 ரூபாய் வேண்டுமென்றார். எங்கிருந்தோவெல்லாம் குழந்தைகளுக்குச் சாப்பாடு வருகிறது. உடைகளும் வருகின்றன. யார் யாரோ தன் உழைப்பினைத் தந்து ஆதரவற்றவர்களுக்கு உணவும், உடையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

கோடி கோடியாய் மனச்சாட்சியே இல்லாமல் கொள்ளை அடிப்பவர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள். பிறருக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சிலரும் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை நினைக்கையில், இறைவனின் திட்டம் என்னவாக இருக்க முடியும் என்றுப் புரிந்து கொள்ள முயலவில்லை.

இந்த விடுதிக்கு உதவி செய்ய விரும்புவோர் மெயில் அனுப்பவும். மேலதிக தகவல்களைத் தந்து உதவுகிறேன்.

Saturday, June 25, 2011

நோய் ஏன் வருகிறது ?

150 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டலாம். காற்றைக் கிழித்துக் கொண்டு படு வேகமாய் பைக்கில் பறக்கலாம். ஆகாய விமானத்தில் சாகஜம் செய்யலாம். ஓடலாம், பாடலாம், ஆடலாம் எல்லாம் செய்யலாம். எதுவரையிலும் என்றால் உடல் நலம் கெடும் வரையில்.

பலரும் சொல்லக் கேட்டிருப்போம் ”நல்லாத்தான் இருந்தாரு, திடீரென்று படுத்துட்டாரு”. ஏன் திடீரென்று படுத்து விட்டார்? காரணம் ஏதும் இல்லாமலா இருக்கும்? நிச்சயம் இருக்கும். என்ன தான் மருத்துவம் செய்தாலும் சிலருக்கு உடம்பு நோய் தீரவே தீராது. அதற்கொரு காரணத்தை நம் முன்னோர் பாட்டொன்றில் சொல்லி இருக்கின்றார்கள்.

பஞ்சமாபா தகர்க்கும் பழிதனை நினைப்பவர்க்கும்
கெஞ்சியே மருந்துசெய்து கேடுகள் நினைப்வர்க்கும்
அஞ்சிடா வஞ்சகர்க்கும் அநியாயக்கா ரருக்கும்
நஞ்சினும் கொடியவர்க்கும் நாடியபிணி தீராதே

இப்படி ஒரு பாடல் வைத்திய சார சங்கிரகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மேற்படி ஆட்கள் எல்லாம் கெடுதல் செய்வதையே தொழிலாய் வைத்திருப்பதால், உடம்பைப் பேண மாட்டார்கள். உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி நன்றாக இருக்கும் வரை ஆடிக் கொண்டிருப்பவர்கள், எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும் போது நோய் வாய்ப்பட்டு விடுவார்கள். தீர்க்கவே முடியாத நோய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, செய்த வினையோடு எதிரே நின்று கொண்டிருக்கும்.

வினையைப் பற்றிக் கண்ணதாசன் தன் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் விரிவாக எழுதி இருக்கிறார்.

நோய் எதிர்ப்புச் சக்தி ஏன் குறைகிறது? உடம்பிற்கு நோய் ஏன் ஏற்படுகிறது. இரண்டு வழிகளால் தான் நம் உடல் நோயால் பீடிக்கப்படுகிறது. ஒன்று காற்று மற்றொன்று உணவு. நம் உடலுக்குள் செல்பவை இவை மட்டும் தானே ?

செல்லும் காற்றையும், சாப்பிடும் உணவினையும் சரி செய்தால் நோய் விட்டுப் போய் விடும் அல்லவா? ஆனால் அதை இன்றைய காலத்தில் யார் செய்கின்றார்கள்? 

மணமணக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், மட்டன் மசாலா கிரேவி, செட்டி நாடு சிக்கன் வறுவல் என்று சாப்பிடுவோர் என்றாவது ஒரு நாள் மட்டும் தானே சாப்பிடுகிறோம், அதனால் ஒன்றும் தொந்தரவு வராது என்று தனக்குள்ளே நினைத்துக் கொள்வார்கள்.

உண்மை என்ன தெரியுமா? உடம்பிற்கு ஒவ்வாத உணவு உண்ணப்பட்ட பிறகு, அதன் விஷத்தன்மையை உடம்பிலிருந்து வெளியேற்ற உடம்பு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்தும். கத்தி, ரத்தம் எல்லாம் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி தான் அந்தப் போராட்டத்தை நிகழ்த்தும். இப்படியே நாள் தோறும் போராடிக் கொண்டே வந்தால், உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸின் நிலை என்னவாகும் என்பதை நீங்களே யோசித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

நோய் வரக்காரணம் காற்றும், உணவும். இதைச் சரி செய்தால் நோய் ஏன் வருகிறது???

நம் உடம்பு ரசாயணத்தினால் ஆன ஒரு கூட்டுக் கலவை. இறைவனின் அற்புதப் படைப்பு. அதை ஒழுங்காகப் பேணி வந்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும். கண்டதைத் தின்று திரிந்தால் வரும் விளைவுகளுக்கு மருத்துவர் பொறுப்பாக மாட்டார்.

ஒரு கணம் சிந்திப்பீர்.

Monday, June 20, 2011

வாழும் சங்ககால மன்னன் செங்கண்ணனின் தாய்

புறநானூறு பாடிய மன்னர்களில் ஒருவன் கணைக்கால் இரும்பொறை, கோச்செங்கண்ணான் என்ற மன்னனிடம் போரில் தோற்று சிறைப்பட்டிருந்தான். சிறையிலிருந்த காலத்தில் பாடிய பாடல் புற நானூற்றில் இருக்கும் 74 வது “குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்” என்ற பாடலை நாம் பிள்ளைப் பிராயத்தில் படித்திருப்போம். இரும்பொறை மன்னாக இருந்து போரில் தோற்றுச் சிறைப்பட்டவன். தண்ணீர் தாகமெடுத்த காரணத்தால், சிறைக்காவலனிடம் தண்ணீர் கேட்க, அவன் நேரத்தே கொண்டு வந்து கொடுக்காத காரணத்தால், தண்ணீரே குடிக்காமல் செத்த மானமுள்ள வீரன் இரும்பொறை. கதை இவரைப் பற்றியதல்ல. சோழ மன்னன் செங்கண்ணான் பற்றியது.

இவனுககு ஏன் செங்கண்ணன் என்ற பெயர் வந்தது தெரியுமா? செங்கண்ணனின் தாய் நிறைமாதக் கர்ப்பிணி. ஜோசியக்காரர் இன்னும் சிறிது நேரம் கழித்துப் பிறந்தால், பிறக்கும் குழந்தை தரணியாள்வான் என்றுச் சொல்லி இருக்கிறார். ஆனால் பிரசவ வலி வந்து விட்டது. குழந்தை பிறந்து விடும் போல இருக்கிறது. இன்னும் சிறிது நேரம் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றாள் கோச்செங்கண்ணானின் தாய். 

பிரசவ வலி என்பது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உலுக்கி எடுக்கும் கொடூரமானது. பிறப்புறுப்பு வழியாக குழந்தை வெளியேற உடம்பே அதிர அதிர அமிலத்தில் ஊறிய உடம்பாய் வலியில் துடிதுடிக்கும் அந்த நேரத்தின் வலியை சுகப்பிரசவமடைந்த பெண்கள் உணருவார்கள். அப்படிப்பட்ட வலியில் துடித்த செங்கண்ணானின் தாய் தன்னை தலைகீழாக கட்டி தொங்க விடச் சொல்கிறாள். உயிரே போய் விடும் என்று கணவனும், பிறரும் துடிக்கின்றார்கள். என் உயிர் பெரிதல்ல. என் மகன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்கான என் உயிரையும் நான் இழப்பேன் என்கிறாள் அந்த தமிழச்சி.

தலைகீழாக கட்டித் தொங்கவிடப்படுகிறாள் அந்த தாய். நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரம் வந்ததும் கீழே இறக்கப்படுகிறாள். குழந்தையும் பிறக்கிறது. அக்குழந்தையின் கண்கள் இரண்டும் கொவ்வைப் பழம் போல சிவந்திருக்கிறது. என்னை ஆளும் செங்கண்ணை உடைய எங்கோச் செங்கண்ணான் என்றுச் சொல்லி முடித்து தன் குழந்தை தரணி ஆள தன்னுயிரை விடுகிறாள் அவள். அவள் அப்படி சொன்னதாலே மன்னனின் பெயர் செங்கண்ணன் என்று ஆனது.

தாயின் தியாகத்தால் கண்களிரண்டும் செவந்து போன காரணத்தால் இம்மன்னன் செங்கண்ணான் என்று பெயர் பெற்றான். தமிழகத்தில் ஆயிரம் சிவன் கோவில்களைக் கட்டிய பெருமை உடையவன் இந்த மன்னன்.

தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் மகன் தரணியாள வேண்டுமென்று நினைக்கும் தாய் இருந்த புண்ணிய பூமி தமிழர்கள் பூமி.

தன் மகன் இறந்த பிறகும் அவன் எழுதி வந்த பிளாக்கை தொடர்ந்து எழுதி, அவன் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கும், அன்பின் உருவமான தாய் ஒருவரின் பிளாக்கை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். 


அன்பும், தியாகமும், பாசமும் நிரம்பிய இது போன்ற தாய்கள் இருப்பதால் தான், நம் பூமி இன்றைக்கும் பசுமையாக இருக்கிறது போலும். நான் தமிழனாய் பிறந்ததில் பெரும் பெருமையடைகிறேன்.

* * *


Saturday, June 18, 2011

டாஸ்மாக்கால் அழியும் குடும்பங்கள் - உண்மைக் கதை

விடிகாலையில் உழவர் சந்தைக்கு காய் வாங்குவதற்காக மழையில் நனைந்து கொண்டே மனையாளுடன் சென்றேன். மழை அரும்புகள் சாரையாய் பூமியைத் தழுவிக் கொண்டிருந்தன. ”பூமி தன்னைத் தானே குளிர்விக்கிறது போலும் கோதை” என்றேன். வழக்கம் போல, ”ஓ அப்படியா?” என்று பதில் வந்தது.

செல்வ விநாயகர் கோவிலைத் தாண்டும் போது பார்வை அவரை நோக்கிச் செல்ல, அங்கு அவருக்கே ஏதும் இல்லாத நிலை போல. மார்கழி மாதம் வந்தால் பொங்கல், பிரசாதம் என்று களையாக இருப்பார் பிள்ளையார். நானும் வாரா வாரம் பிள்ளையாரை நேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இனிப்பு பொங்கல் சூடாய் கிடைக்கும். சில சமயம் சுண்டலும் தருவார்கள். எந்த பாரியாளின் கைப்பக்குவத்திற்கும் எட்டாத சுவையாக இருக்கும் பிரசாதம். 

இப்போதெல்லாம் பிள்ளையார் கோவிலில் அதிகம் கூட்டம் காணாது. இடது பக்கமாய் இருக்கும் கலைஞர் படிப்பகத்தின் திண்ணையில் ஒன்றிரண்டு பேர் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். மழையினால் இன்றைக்கு ஒருவரையும் காணோம்.

சந்தையின் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பெண் தலை மீது பிளாஸ்டிக் பை சிவப்பாய் மாட்டப்பட்டிருந்தது. எப்போது பார்த்தாலும் மலர்ந்த பூவை  நூலோடு கோர்த்துக் கொண்டே இருப்பார் அந்தப் பெண்.பைக்குளுக்கு டோக்கன் வாங்கும் பாட்டி எப்போதும் புன்னகையுடனே இருப்பார். அவரைப் பார்த்து சிரிப்பொன்றினை சிந்து விட்டு, வண்டியை கீரைக்கார கவுண்டர் இருக்குமிடம் விட்டேன்.

”மழை வந்து இன்னிக்கு வியாபாரத்தை கெடுத்துப் போச்சுங்க” என்றார்.

“மழை வந்தாலும் சங்கடம், வல்லேன்னாலும் சங்கடம் தான் போல” என்று சொல்லிவிட்டு, ”நவாப்பழத்தை பசங்ககிட்டே கொடுத்தேன்னா, அவங்க உருட்டி விளையாடுறாங்க” என்றேன்.

கேட்டு விட்டு சிரி சிரியென்று சிரித்தார். உழவர் சந்தை நவாப்பழம் ஒன்றும் அப்படிச் சுவையாக இருப்பதில்லை.கொஞ்சம் துவர்ப்பு தட்டுது. ஆசையாக் கேட்டேன்னு கவுண்டரு பறிச்சிக் கொடுத்தாரு. அதுல இரண்டைக் கொண்டு போயி பிள்ளையளுக்கு கொடுங்கோன்னு சொன்னாரு. அந்தப் பழத்தை வாங்கி பசங்க, கீழே பளிங்கு போல உருட்டி விளையாட ஆரம்பிச்சுட்டானுங்க. 

வியாபாரம் ஒன்னும் சரியில்லை. கூட்டமும் குறைவாத்தான் இருந்தது. எதிர்த்த கடைக்காரர் அழுகிப் போன பூசணிக்காய குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கி போட்டுக்கிட்டு இருந்தாரு. கருவேப்பிலை விக்கிற அம்மாவைக் காணல. 

”அண்ணன் மருமவன் ஆக்சிடெண்டில செத்துப் போனாரு இல்லைங்களா, அந்தப் புள்ள மருந்தைக் குடிச்சிட்டு, குழந்தைக்கும் கொடுத்துட்டு இப்போ குழைந்தையும் செத்துப் போச்சுங்க.அந்தப் புள்ளய மட்டும் காப்பாத்திட்டோம். என்ன ஏன் காப்பாத்துறீங்க. நான் செத்துத்தான் போவப்போறேன்னு சொல்லிகிட்டு இருக்குன்னாரு” கவுண்டரு.

போனவாரம் சந்தைக்கு போன போது, ”லாரி சந்துக்குள்ளே இருந்து வந்த குடிகாரன் ஒருத்தன் கவுண்டர் அண்ணன் மருமகன் மீது வண்டிய ஒரே தாட்டா தாட்டிட்டானாம்.ஆளு ஸ்பாட்லே அவுட்டுங்கன்னாரு கவுண்டரு. அடப்பாவமேன்னு கேட்டுக்கிட்டு வந்தேன். இந்தவாரம் இப்படி ஒரு செய்தி.

'ஆக மொத்தம் ஒரு குடும்பமே காலி. யாரோ ஒரு குடிகாரப் பய குடிச்சிட்டு வந்து எதுக்க வந்தவன் மேல மோதி கொன்னுட்டான். ஊரு முழுக்க எங்கன பாத்தாலும் டாஸ்மாக் கடை. குடிச்சவன் செத்தான்னா அதை அவன் விதின்னு சொல்லலாம். குடிக்காதவன் குடிச்சவன்னால சாகுறானே அதை என்னன்னு சொல்லுறது? யாரைக் குத்தம் சொல்லுறது. இன்னிக்கு ஒரு குடும்பமே காணமா போச்சே அதுக்கு யாரைக் குத்தம் சொல்லுறது? என்ன உலகம்டா இதுன்னு என்னென்னவோ மனசுக்கு வந்து போச்சு.'

'இந்தப் புள்ளைக்கி அறிவு எங்க போச்சு, புருஷன் செத்தா என்ன இப்போ? புள்ளை இருக்குல்லே, நாளொன்னைக்கு லட்சம் லட்சமா டைவோர்ஸ் வாங்குற இந்தக் காலத்துல இப்படி ஒரு புள்ளையான்னு' மனசுக்குள்ளே தோணுச்சு. 

வண்டியில மனையாள கூட்டிக்கிட்டு வரும் போது, பிள்ளையார் கோவிலைப் பார்த்தேன். கர்ப்பக் கிரகத்துக்குள்ளே உட்கார்ந்திருந்தார். வாசலில் யாருமில்லை. அய்யரு மட்டும் சோகமா உட்கார்ந்திருந்தார்.  ஏனோ முகம் தெரியாத அந்த ஆக்சிடெண்ட் ஆன மகராசன் மனசுக்குள் வந்து போனார்.

* * *

Friday, June 17, 2011

மெட்ரிக் பள்ளி பாடங்கள் - ஏமாற்றும் வித்தை

மெட்ரிக் பள்ளிகள் எல்கேஜியிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலும் தாங்களே பாடத்திட்டத்தினை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பத்தாம் வகுப்பிற்கு தமிழக அரசின் பாடத்திட்டத்தினைத் தான் படிக்க வேண்டும். பதினொன்றாம் வகுப்பிற்கும், பனிரெண்டாம் வகுப்பிற்கும் இதே நிலைதான்.

இதைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பான்மையான பெற்றோருக்கு இருப்பதில்லை. எல்கேஜியிலிருந்து என்ன தான் விதவிதமான பாடத்திட்டங்களைப் படித்தாலும் கடைசியில் படிக்கப் போவது அரசுப் பாடத்திட்டம் தான்.  

நான் கரூரில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியராய் பணியாற்றிய போது, பிரின்ஸ்பல் பள்ளிக்கு வந்திருக்கும் வெவ்வேறான புத்தக கம்பெனிகளின் புத்தகங்களைக் கொடுத்து, நல்ல சிலபஸாய் இருக்கும் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் படி சொல்வார். கஷ்டப்பட்டு அனைத்துப் புத்தகங்களையும் படித்துப் பார்த்து, நல்ல பாடத்திட்டமாய் தேர்ந்தெடுத்துக் கொடுத்தால், மேனேஜ்மெண்ட் எந்தக் கம்பெனி அதிக டிஸ்கவுண்ட் தருகிறதோ அப்பாடத்தினைத்தான் டிக் செய்யும்.

ஐந்து வருட கால ஆசிரியர் பணியின்போது நான் நேரில் கண்டது. பிரின்ஸ்பலிடம் ஆட்சேபனையைத் தெரிவித்தால், நீங்கள் பேசுவது மாதிரி நான் மேனேஜ்மெண்ட்டிடம் பேசினால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான் என்பார். மேனேஜ்மெண்ட்டிடம் பேசியபோது, இந்த சிலபசே போதும் என்றுச் சொல்லி விடுவார்கள்.

ஐந்து பிரிவுகளாய் இருக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, சமூக அறிவியல் என்ற அரசுப்பாடத்திட்டம், மெட்ரிக் பள்ளியில் பனிரெண்டு வகைகளாய் பிரிக்கப்பட்டு விடும். பிள்ளைகளுக்கு மிக அதிக பளுவான திட்டம். இப்பாடத்தினால் விசாலமான அறிவு கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்கவே கிடைக்காது என்று நான் அடித்துச் சொல்லுவேன். மனப்பாடம் செய் என்பதைத் தவிர வேறொன்றினையும் மெட்ரிக் பள்ளிகள் கற்றுக் கொடுக்காது.

மெட்ரிக் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் பாடத்திட்டங்கள் அனைத்தும், மேனேஜ்மெண்ட்டின் லாபத்திற்காக மட்டுமே நடத்தப்படுகின்றன என்பதினை நான் அறுதியிட்டுக் கூறுகிறேன்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லது செய்கிறேன் என்று மன அழுத்தம் என்ற கிணற்றில் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 

ஆசிரியராகப் பணியாற்றி அனுபவத்தில் மெட்ரிக் பள்ளிப் பாடங்கள் பெற்றோர்களை ஏமாற்றும் வித்தையாகத்தான் நான் பார்க்கிறேன். 

மெட்ரிக் பள்ளிக் கட்டணங்கள் - இணையத்தில் வெளியீடு

அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கரை கொண்டிருக்கிறது என்பதையும், மக்களுக்கு நன்மை செய்ய முதலமைச்சர் விரும்புகிறார் என்பதையும் சமீபத்திய நிகழ்வுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பெற்றோரையும் நேரடியாகப் பாதிக்கும் இந்த தனியார் கல்வி கட்டணப் பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தமிழகத்தின் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் விதிக்க வகை செய்ய வேண்டும். இல்லையென்றால் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்தி, தமிழ் மக்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க ஏதுவன செய்ய வேண்டும். அம்மா நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பல டிவிக்களில் கல்விக் கட்டணத்தை முன் வைத்து, பல மாதிரியான பிரச்சினைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா என்றால் அதிரடி என்று பெயர். நிச்சயம் அம்மா அவர்கள் நல்ல முடிவினை எடுப்பார்கள் என்று நம்பலாம்.

இதோ பள்ளிக் கல்விக் கட்டணங்களை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கின்றார்கள். பெற்றோர்கள் கல்விக் கட்டணங்களை அறிந்து கொள்ளுங்கள்.





Wednesday, June 15, 2011

வாழை இலையில் உணவு பரிமாறும் முறை



அந்தக் காலத்தில் பெண்கள் தலைமுறை தலைமுறையாக சில பழக்க வழக்கங்களை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்து வருவார்கள். உடனடி மருத்துவம் முதல் பல வகையான வழக்கங்கள் வாழையடி வாழையாக வரும். ஆனால் இன்றைய காலத்தில் அதெல்லாம் ஒழிந்து விட்டது. இன்றைக்கு வாழை இலையில் சாப்பாடு பரிமாறுதல் எப்படி என்பதையும், எப்படி உண்பது என்பதையும் பார்க்கலாம்.

வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும்.மேல்பகுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும்.இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாறவும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக தயிர் சோற்றுடன் பரிமாறி முடித்தல் வேண்டும்.

வாழை இலையில் பரிமாறுதல் எப்படி என்பதினை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இனி சாப்பிடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்.

இப்பதிவு எழுத உதவியது : தாவர போஷன சமையல் புத்தகம் - 1978 பதிக்கப்பட்டது.

Tuesday, June 14, 2011

மகனின் முதல் பாக்கெட் மணி

மகன் சீருடை அணியும் போது பாக்கெட்டில் காசு சத்தத்தைக் கேட்ட மனைவி அதை பாக்கெட்டில் இருந்து வெளியில் எடுத்தார். அழுது கதறி விட்டான். என் ஃப்ரண்ட் தான் எடுத்து வரச் சொன்னான் என்று அழுதான். அவ்வாறு கொண்டு வரவில்லை என்றால் டீச்சரிடம் சொல்லி விடுவதாய் மிரட்டினான் என்று சொல்ல எனக்கு கிர்ரென ஆகி விட்டது.  இந்த வயதில் வீட்டிலிருந்து காசு எடுத்து வா என்று யாரோ ஒரு பையன் மிரட்டுகின்றானே என்ற கோபம். மனைவியோ படு மோசமாக வெலவெலத்துப் போய் விட்டார். பையன் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பணத்தை எடுத்து வைத்திருக்கின்றானே என்று அப்செட் ஆகி வெடவெடத்து விட்டாள். இவ்வளவுக்கும் பையன் தான் வகுப்புத் தலைவன், பள்ளியிலேயே நல்ல மாணவன் என்று பெயரெடுத்தவன். எனக்கு எல்லையில்லா கோபம் வந்து விட்டது. காசை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு, பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டோம்.

நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் சாக்லெட், எண்ணெய்ப் பலகாரம், நொறுக்குத் தீனிகள் வாங்கிக் கொடுப்பது இல்லை. பெரும்பாலும் மகனின் அப்பத்தா செய்து கொடுக்கும் முறுக்குகள், மடக்குப் பணியாரம் மற்றும் வீட்டிலேயே செய்யும் நொறுக்குத் தீனிகளையும், பிஸ்கட்டுகளையும் தான் பள்ளிக்குக் கொடுத்து அனுப்புவோம். பிள்ளைகள் இருவரும் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமாட்டார்கள். இது நாள் வரையிலும் இவ்வாறு தான் மனைவி குழந்தைகளை கவனித்து வந்தாள்.

என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பி, இருவரும் பள்ளிக்குச் சென்றோம். அங்கு பிரின்ஸிபல் மேடம் எங்களை அன்பாக வரவேற்று விசயத்தைக் கேட்டார்கள். நாங்கள் மேற்படிச் சம்பவத்தைச் சொன்னோம்.

மகனின் வகுப்புத் தோழன் நொறுக்குத் தீனி வாங்கிக் கொடுத்திருக்கிறான். மகனிடம் நாளைக்கு நீ வாங்கி கொடுக்கணும் இல்லையென்றால் மேம்மிடம் சொல்லி விடுவேன் என்றுச் சொல்லி இருக்கிறான். என் பையன் படு சென்ஸ்டிவ்வானவன். அவனை யாரும் குறையோ, குற்றமோ சொல்லக்கூடாது என்று நினைப்பவன். அனைவரும் அவனை நல்லவன் என்றுச் சொல்ல வேண்டுமென்று நினைப்பவன். அதன்படியே நடந்து கொள்ள முனைவான். யாரும் தவறு செய்தால் கோபம் வந்து விடும். எங்களிடம் சொன்னால் திட்டுவோம் என்று நினைத்துக் கொண்டு, முதன் முதலாய் பணத்தை எடுத்து வைத்திருக்கிறான். அசிஸ்டண்ட் பிரின்ஸ்பல் விசாரித்துக் கொண்டு வந்து எங்களிடம் சொன்னார்கள்.

அதன் பிறகு இரண்டாவது படிக்கும் குழந்தைகளின் வயதில் இருப்பவர்களுக்கு, பள்ளிக் கேண்டீன் மற்றும் கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கிச் சாப்பிடவும், காசு கொடுத்து சில்லறை பெறவும் ஆசை இருக்குமாம்.இது இந்த வயதில் சகஜமான விஷயமாம்.  அதுவும் இரண்டு வருடத்திற்குதான் அவ்வாறு இருக்கும். அதன்பிறகு கேண்டீன் உணவு சரியில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள். ஆகையால் அவனுக்கு பாக்கெட் மணி கொடுத்து அனுப்புங்கள். அதுவும் தினமும் கொடுக்காமல் வாரத்திற்கொருமுறையோ அல்லது இரு முறையோ கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். அப்போதுதான் காலையிலிருந்து பதட்டத்தில் இருந்த மனைவி சற்றே ஆசுவாசப்பட்டாள். எனக்கும் மனசு கொஞ்சம் லேசானது போல இருந்தது. மகன் வரிசையில் முதல் ஆளாய் வந்து கொண்டிருந்தான். மனைவி டீச்சரிடம் செல்ல, மனைவியை கட்டிப் பிடித்த டீச்சர், ஹி ஈஸ் எ காட் கிஃப்ட் சைல்ட் ஃபார் யூ என்று சொல்லி இருக்கிறார்.

மகனை அழைத்த நான், காலையில் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தினைக் கொடுத்து, உன் நண்பனும் நீயும் கேண்டீனில் தேவையானவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள் என்றுச் சொல்லி விட்டு, லேசான மனதோடு பள்ளியில் இருந்து திரும்பி வந்தோம்.

என் மகனின் முதல் பாக்கெட் மணி ரூபாய் 16.00


நான் ஒழுக்கத்தையும், நேர்மையையும், பிறரை புண்படுத்தா எண்ணமும் கொண்டவர்களாய் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளவன். அதன்படி குழந்தைகளை வளர்க்க முற்பட்டு வருகிறேன். மேற்படி சம்பவத்தை மகன் விவரித்துச் சொல்லத் தெரியாமல், அதன் காரணமாய் நானும் என் மனைவியும் பதட்டப்பட்டு விட்டோம். இச்சம்பவம் எனது வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். பள்ளியில் பதட்டப்பட்ட மிகச் சரியாக  எங்களை வழி நடத்தி, பிரச்சினை தீர வழி செய்தார்கள். இச்சமயத்தில் பள்ளியின் பிரின்ஸ்பலுக்கும், அசிஸ்டண்ட் பிரின்ஸ்பலுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவசியமான முதலீடு - வீடு





வரும் காலங்களில் இன்றைக்கு இருப்பதை விட விலைவாசி அதிகரிக்குமே ஒழிய குறைவதற்கான எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. ஏறும் விலைவாசிக்கு ஏற்ப சம்பளமும் ஏறுகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதே போல மற்ற பொருட்களின் விலையும் ஏறி விடுவதால் வாங்கும் சம்பளம் சாப்பாடு மற்றும் இன்னபிற அத்திவசியமான் தேவைகளுக்கே சரியாக இருப்பதால் சொத்து, சேமிப்பு என்பதெல்லாம் வெறும் கனவாகவே சென்று விடுகிறது. 

உலகில் கோடீஸ்வரர்கள் கொஞ்சம் பேர்தான். ஆனால் கோடீஸ்வரர்களாய் நடிப்பவர்களே அதிகம். இருபத்தைந்தாயிரம் கொடுத்தால் புத்தம் புதிய கார் வீட்டு வாசலுக்கே வந்து விடுகிறது. மாதத்தவணை, மெயிண்டனன்ஸ், எரிபொருள் செலவென்று காருக்குச் செலவழிக்கும் பணத்தைக் கொண்டே அரை கிரவுண்ட் நிலம் வாங்கி விடலாம்.சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் தேவைக்கல்லாமல் செலவழிப்பவர்கள் எதிர்காலத்தில் பணக்கஷ்டத்தினை அனுபவித்தே ஆக வேண்டும். இன்றைய மனிதர்கள் தேவைக்கு ஏற்ப செலவழிக்காமல், ஈகோவிற்காக செலவழிக்கின்றார்கள். வாரம் ஒரு படம் பார்க்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் 500 ரூபாய் ஆகிறது என்றால் மாதம் 2000 ரூபாய் செலவாகும். அதைச் சேமித்தால் மூன்று வருடங்களில் உங்களிடம் அரை கிரவுண்ட் நிலம் இருக்கும்.

கோயமுத்தூர் தமிழ் நாட்டில் மக்கள் வாழ மிகச் சிறந்த ஒரு இடம். நல்ல காற்று, தண்ணீர் மற்றும் சீதோஷண நிலை என்று இயற்கையாகவே சிறந்த இடமாய் இருக்கின்றது. இந்த ஊரில் உங்களுக்கு ஒரு வீட்டு மனை இருந்தால் நல்லது தானே.

டிடிசிபி அப்ரூவல் ஆகி இருக்கிறதா, நல்ல சாலை வசதி இருக்கிறதா, தண்ணீர் வசதி இருக்கிறதா என்பதெல்லாம் வெகு முக்கியமான விஷயங்கள். மேற்படி விஷயங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து, மிகச் சிறந்த, நல்ல மதிப்புடைய வீட்டு மனைகள் பலவற்றினை நாங்கள் விற்பனைக்கு வைத்திருக்கிறோம்.

செண்ட் ஐம்பதாயிரத்திலிருந்து பத்து லட்சம் வரை இருக்கும் வீட்டு மனைகள் வேண்டுவோர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். மாதத் தவனையில் மனை வாங்க இயலுமா என்றெல்லாம் யோசிப்பவர்கள் எங்களை மெயில் மூலம் அல்லது போன் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். சம்பாதிக்கும் போதே ஏதேனும் கொஞ்சமாய் சேமித்து ஒரு சொத்தினை வாங்கி, அதைப் பாதுகாப்பாய் வைத்துக் கொள்ள விரும்புவர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

முதலில் உங்களின் மாதாந்திர சேமிப்பு செலவெல்லாம் போக எவ்வளவு வரும் என்பதை திட்டமிட்டுக் கொண்டு, அந்தச் சேமிப்பினை வைத்து சொத்துகள் வாங்கலாமா என்பதை எங்களிடம் விசாரியுங்கள். நாங்கள் உங்களுக்கு ஏற்ற முதலீட்டினைச் சொல்கிறோம். அதன்படி நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.  

நான் வெளியூரில் இருக்கிறேன் சொத்து வாங்கிப் போட்டு விட்டு, பின்னர் அதை யார் பாதுகாப்பது என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். அதையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எங்கிருந்தாலும், உட்கார்ந்த இடத்திலேயே சொத்தினை நிர்வகிக்கலாம்.அதுபற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு ஆன்லைனில் இருக்கும். வேண்டும் போது நீங்கள் உங்கள் சொத்தினை, உங்கள் வீட்டின் கம்ப்யூட்டரில் இருந்து சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம். இதற்கென்று ஃபார்ச்சூன் பிரிக்ஸ் கொஞ்சமே கொஞ்சமான சர்வீஸ் சார்ஜ் பெற்றுக் கொள்ளும்.

மேலே இருக்கும் மேப்பினை ஒரு முறை கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். நண்பர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள். எங்கு முதலீடு செய்யலாம் என்பதையும் முடிவு செய்து கொண்டு, எங்களை அணுகவும். முடிந்தவரை சம்பாதிக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து, ஏதாவது சொத்தில் சேர்த்து வைத்துக் கொள்ள முயற்சிக்கவும். உங்கள் முயற்சி வெற்றியடைய உங்களுடன் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் துணையாக வரும், துணையாக இருக்கும் எந்தக் காலத்திலும்.

எங்களது அரசு பதிவு பெற்ற ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் நிலத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை வரவேற்கிறது. விருப்பமுள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

- தங்கவேல் மாணிக்கம் - எக்சிகியூட்டிவ் டைரக்டர்
தொடர்பு எண் : + 91 96005 77755 
இமெயில் : thangavelmanickam@gmail.com

Monday, June 13, 2011

அவசிய உணவுக்குறிப்புகள் பகுதி - 4

நான் பிறந்த சமூகம் காரம், புளி இவற்றினை அதிக அளவு பயன்படுத்தும். குழம்பு என்றால் சிவப்புக் கலரில் இருக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன். நாக்கு பற்றி எரிய வேண்டும். அந்தளவு காரம் இருக்கும். கரூரில் இருக்கும் போது நானும் எனது நண்பர் விஜயகுமாரும் மாயனூர் ஆற்றுக்குச் செல்வோம்.மாயனூரில் ஆற்றில் மீன் பிடித்து, வலைக்குள்ளே போட்டு தண்ணீரில் முக்கி வைத்திருப்பார்கள். இருநூறு ரூபாய் கொண்டு செல்வோம். மூன்று கிலோ மீன் வாங்கி அங்கேயே சுத்தம் செய்து, ஆற்று நீரில் அலசும் போது, மனைவிக்கு போன் போட்டு விடுவேன்.

வீட்டிற்கு கொண்டு வந்து காரம், புளி சேர்த்து குழம்பும், வறுவலையும் ஒரு மணி நேரத்திற்குள் தயார் செய்து விடுவார் மனைவி. விஜயகுமார் முள் எல்லாம் எடுக்காமல் அப்படியே சாப்பிடுவார். படுரசனையான ஆள். ஆனால் எனக்கு கவுச்சி வாடையே பிடிக்காது. மீன் குழம்பில் கவுச்சி வாடை அடித்தால் அது நல்ல குழம்பாக இருக்காது. இப்பதிவு எழுதும் போது மேற்கண்ட சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது. அதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தவை. இப்போது என் உணவுகளோ முற்றிலும் மாறிவிட்டது.

அதிக காரம், புளி இவற்றால் தான் மூல வியாதி வரலாம். முற்றிலுமாய் இவற்றை தவிர்க்க முடியாவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்த்து விடுங்கள். அதுமட்டுமின்றி மலச்சிக்கல் வந்தால் மூலம் நிச்சயம். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், ஓட்டுனர்கள், அதிக எடை உள்ளவர்களுக்கு இந்த மூலம் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்பு மூன்று துண்டுகள் பப்பாளி சேர்த்து வாருங்கள். காலையில் மலம் எளிதாய் போகும். பப்பாளி ஆரம்பத்தில் சூட்டினைக் கிளப்பும். பப்பாளி சாப்பிடாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உடலைப் பப்பாளியை ஏற்றுக்கொள்ளும்படி பக்குவப்படுத்த வேண்டும்.வாரம் ஒரு முறை கோவைக்காய் சமையல் செய்து சாப்பிட்டு வாருங்கள். தினம் தோறும் கொஞ்சமேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். கீரை, காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மட்டன், சிக்கன் போன்றவை வேண்டவே மாதமொருமுறையோ அல்லது ஆறு மாதத்திற்கொரு தடவையோ எடுத்துக் கொள்ளுங்கள்.

விரைவில் வாழை இலையில் சாப்பாடு பரிமாறுவதைப் பற்றிய பதிவொன்றினை எழுதவிருக்கிறேன்.