குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, August 26, 2025

ஆவணம் சின்னையன் - நாற்பது வருடங்களுக்குப் பிறகான சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆவணம் கிராமத்தில் வசித்து வரும் ராமநாததேவரின் பேரனும், ராமமூர்த்தி அவர்களின் மகனுமான சின்னையன் அவர்களை சுமார் நாற்பது வருடங்கள் கழித்து நேரில் சந்தித்தேன்.

17 ஆகஸ்ட் 2025 விடிகாலையில் சின்னையனின் நினைவு வந்தது. ஏனென்று தெரியவில்லை. ஆவணம் பள்ளித் தோழர்களின் வாட்சப் குரூப்பில் சின்னையனின் தொடர்பு எண் வேண்டுமென கேட்டிருந்தேன். 

பள்ளித்தோழன் அருண் அழைத்திருந்தான். அவனின் முகம் எனக்குப் புலப்படவே இல்லை. அவனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். கோதைக்கு ஒரே சிரிப்பு. முகத்தினைப் பார்த்து அகத்தைக் கண்டுபிடித்து விடுவாள். அதெப்படி முகம் தெரியாத ஒருவரிடம் இவ்வளவு நேரம்? பேசமுடியும்? அவளுக்கு எங்கே தெரியப் போகிறது நானென்ல்லாம் ஐ.சி.க்யூ பயன்படுத்தியவன் என. (ICQ - தெரியும் தானே உங்களுக்கு)

மாரிமுத்துவுக்கு அழைத்து சின்னையன் நம்பர் வாங்கினேன். அவருக்கு அழைத்தேன். எடுக்கவில்லை. ஆனால் அடுத்த நொடி அவரிடமிருந்து அழைப்பு. 

”தங்கவேல் பேசுகிறேன். நல்லா இருக்கீங்களா?” ஆரம்பித்தேன்.

பேசும்போது படபடப்பு இருந்தது. பேசி முடித்ததும் அமைதியானது நெஞ்சம்.

ஆவணம் கைகாட்டிக்குச் செல்லும் வழியில் ஜோசப் வாத்தியார் டியூசன் செண்டரை தாண்டி - இந்தியன் ஓவர் சீஸ் வங்கியைக் கடந்து செல்லும் போது  வலது பக்கமாய் புல்வெளியுடன் ஒரு பங்களா இருக்கும். அதுதான் ராமநாததேவரின் வீடு. பெரிய பணக்காரர்.

அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன் - அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என. அவர் வீட்டுக்கு அருகில் நெல் அரவை மில்கள் இருந்தன என நினைவு. அந்த வீட்டுப் பக்கம் எவரும் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பார் அம்மா. 

ஆவணம் கைகாட்டியில் தாத்தா மாணிக்கதேவரின் கொல்லை இருந்தது. அதற்கு சனி, ஞாயிறுகளில் வேலைக்காரர்கள் ஜெயராஜ், போஸ் இவர்களுடன் மாட்டு வண்டியில் செல்லும் போது, அந்தப் பங்களாவைப் பார்ப்பதுண்டு. அந்தப் பங்களாவைப் பார்க்கும் போதெல்லாம் திக்கென்று இருக்கும். 

காஞ்சனா - சின்னையனின் தங்கை. எனது வகுப்பில் படித்தார். ஆவணம் அரசு துவக்கப்பள்ளியில் படித்த போது, சின்னையனும், காஞ்சனாவும் தான் அலுமினியத்தில் செய்த சூட்கேஸ் போன்ற ஒரு பெட்டியில் புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். பணக்கார தாத்தா - அதுவும் துப்பாக்கி வைத்திருக்கும் தாத்தா.

காஞ்சனா யாரிடமும் பேசாது. ஆனால் சின்னையனும் நானும் அப்படி அல்ல. எனக்கு ஒரு வகுப்பு முன்னால் படித்தார். 

பள்ளியில் கொண்டு போய் விட்டு, என்னைத் தூக்கி வருவது அம்மா அல்லது தாத்தா. அருணாசலம் மாமா பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்த போது அவருடன் சைக்கிளில் செல்வதுண்டு. அவர் உதவி தொடக்கல்வித் துறைக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டார். 

அதன் பிறகு அம்மா, தாத்தா, ஜெயம், சின்னப்பொன்னு (இருவரும் இறந்து போன சிங்காரவேல் மாமாவின் பெண்கள்), பின்னர் எனது பள்ளித் தோழர்கள் உப்பு மூட்டைத் தூக்கி வருவார்கள். நாகராஜன் என்ற தோழன், என்னை முதுகில் தூக்கிக் கொண்டு தூண்டிக்கார கோவில், வயல்கள் என வலம் வருவான். அவன் என்ன ஆனானோ தெரியவில்லை.

தினமும் பிள்ளையார் கோவிலில் என்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதுண்டு. ஏனென்றால் நான் நன்றாகப் படிப்பேன்.

ஒரு தடவை என்னை சின்னையன் முதுகில் உப்புமூட்டை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவரின் தாத்தா வடக்கித் தெரு சுப்பையாதேவர் - மில் காரர் என நினைக்கிறேன், அவனை அடித்து, என்னை பிள்ளையார் கோவில் இறங்கச் சொல்லி விட்டார். அவருக்கு அழுகை தாளாமல் என் வீட்டுக்கு ஓடி அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். அம்மா அவரைத் தேற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, என்னை வந்து தூக்கிச் சென்றார். அம்மா கோதையிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். அவன் நல்ல பையன் - இவன் மீது கொள்ளைப் பிரியம் அவனுக்கு என.

இந்த நிகழ்வு மட்டும் எனக்குள் அச்சாணி போல பதிந்து விட்டது. 

சின்னையனுக்கும், ஆவணம் திருநாவுக்கரசு மகளுக்கும் திருமணம் பேசினார்கள். அவரின் திருமணப் பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுத்தார். 

“நீ அவசியம் திருமணத்துக்கு வா தங்கவேலு” என்று அவர் கேட்டதும் எனக்கு நினைவில் பதிந்திருக்கிறது. 

அதன் பிறகு இப்போதுதான் போனில் பேசினேன்.

20 ஆகஸ்ட் - 2025 புதன் கிழமை அன்று அவரிடமிருந்து போன். 

“கோவைக்கு வருகிறேன் பார்க்கலாமா?”

“வருகிறேன்”

காலையில் சில பணிகளை முடித்து விட்டு, ஜோதி சுவாமியைப் பார்த்து விட்டு மாலை மூன்று மணி போல நானும், கோதையும் (கார் டிரைவர்) கிளம்பினோம்.

என்ன பேசுவார்? என்னைப் பார்த்ததும் என்ன சொல்வார்? என்றெல்லாம் சிந்தனை. நானென்ன பேசுவது? எப்படி ஆரம்பிக்கலாம்? என்று பல ஐடியாக்களை மூளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தது.

வெற்று மேலுடன், கால்சட்டை போட்டுக் கொண்டு, மண் தரையில் உழன்று கொண்டிருந்த தங்கவேலைப் பார்த்தவர், இப்போது என்ன நினைப்பார் என்றெல்லாம் எனக்குள் பலவித எண்ணங்கள்.

கோவை டிராபிக் - பெங்களூரை மிஞ்சப் போகிறது. டவுனுக்குள் செல்வது என்பது கொடுமை. பைக் ஓட்டிகளின் சாலைச் சாகசங்கள் ஒரு பக்கம், பேரூந்துகளின் ஹார்ன் சாகசங்கள் ஒரு பக்கமென - சாலையில் சர்க்கஸ் நடத்துகிறார்கள். கோதையின் சாமர்த்தியமான டிரைவிங். 

ஒரு வழியாக அறை எண் 310 - கதவு திறந்தது.

“வா தங்கவேலு, நல்லா இருக்கியா? வாங்கம்மா” 

சிறுவாணி ஹோட்டல் - காஃபி அருமையாக இருந்தது. 

இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். என்ன செய்கிறேன், என்ன செய்கிறார் என்பதற்கான பொழிப்புரை, விரிவுரைகள் எனச் சென்றது. சுவாரசியமில்லாத சந்திப்பு என்பதாய்த் தோன்றியது.

அவ்வளவுதான். 

பிள்ளையார் கோவிலில் என்னை இறங்கி விட்டு வந்து, அம்மாவிடம் அழுத சின்னையனையும் காணவில்லை. அன்றிருந்த தங்கவேலையும் காணவில்லை.

அங்கிருந்தது நிறுவனத்தின் தலைவர் தங்கவேல், மற்றொரு நிறுவனத்தின் சின்னையன். குழந்தைகளின் தந்தைகள். கணவர்கள்.

இதுதான் வாழ்க்கையா? இதற்குத்தானா வாழ்கிறோம்?

குழந்தைப் பருவத்தின் அன்பினைக் கூட பகிர்ந்து கொள்ளவும், மகிழ்ச்சி அடையவும் கூட முடியாத நிலைக்கா வாழ்க்கை நம்மை தள்ளிச் செல்கிறது? 

அவர் என்னை தூக்கட்டுமா எனக் கேட்பார் என நினைத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

என்னைத் தூக்குங்கள் என கேட்டிருக்க வேண்டும். நானும் கேட்கவில்லை.

வாழ்வியல் சிக்கல்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமானவை. எல்லாவற்றையும் ஒரே தராசில் போட்டு எடை போட்டு அளவீடுகளை கணக்கிட முடியாது. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல். சூழலுக்கு ஏற்ற வாழ்வியல் முறைகள். அது தொடர்பான சிக்கல்கள். அதிலிருந்து நாம் கற்பவை, களைபவை, வெளியேறுபவைகள், தோல்விகள், வெற்றிகள் என அந்தப் பயணத்தில் - அந்தப் போராட்டமான வாழ்க்கையில் - இது போன்ற நிகழ்வுகள் - பாலைவனப் பயணிக்கு கிடைக்கும் ஒரு வாய் தண்ணீர் போல அல்லவா?

திருவள்ளுவர் எங்களது இந்த நட்பை பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா? என ஆராய்ந்த போது நட்பு, நட்பாராய்தல் ஆகிய இரு அதிகாரங்களையும் படித்தேன். பிள்ளைப்பிராயத்தின் நட்பு - வயதானவர்களின் நட்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

சமீபத்தில் மலேசியாவிலிருந்து வந்த எனது நண்பருடன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். கையில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்த ஒரு வயதானவரை மற்றொரு வயதானவர் கை பிடித்து அழைத்துச் சென்றார். அவர்களிடத்தில் ”நீங்கள் இருவரும் நண்பர்களா?” எனக் கேட்டேன்.

”ஆமாம்” என்றனர்.

சின்னையன் கார் நிறுத்தியிருந்த இடம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

அவருக்கு வியாபார அழைப்புகள் காத்திருந்தன. 

எனக்கோ ஒன்றரை மணி நேரப் பயணம் காத்திருந்தது. 

இது இரயில் சினேகமல்ல. அதையும் தாண்டியது என நினைக்கிறேன்.

வளமுடன் வாழ்க...!

26.08.2025

பெண்களே உங்களுக்கு இந்த அவமானம் தேவையா?

ஒரு கடவுள் மொழி, சாதி, மதம், பேதம் பார்பாரா? அப்படி அவர் இருந்தால் அவர் கடவுளா? 

கடவுள் எவரிடமும் வந்து எனக்கு இதைச் செய், அதைச் செய் என்று கேட்கவில்லை. மனித ரூபத்தில் இருக்கும் பலருக்கு மனப்பிராந்தி நோய் ஏற்பட்டதால், கடவுளின் பெயரால் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொண்டு, அதைப் புனிதம் என பொய்யையும், புரட்டையும் திணிக்கிறார்கள்.

பெண்களின் உதிரத்தில் உதித்தவர்கள் பெண்களை இழிவு செய்வதை தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

இன்றைய தினகரனில் வெளியான இந்தச் செய்தியைப் படித்துப் பாருங்கள்.

பூமியைத் தாய் என்கிறோம். ஆனால் கோவில்களின் நிலையோ கொடூரங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

முலைக்கு வரிப் போட்ட கேரளாவில், அம்மன் வழிபாடு அதிகமிருக்கும் கேரளாவில், கடவுளின் இருப்பிடமென சொல்லப்படும் கேரளாவில், இப்படி ஒரு நிகழ்வு.

குருவாயூரில் கடவுள் இருந்தால் இந்த நிகழ்வுக்கான விளைவை அவரே செயல்படுத்தட்டும்.

பெண் இன்றி இந்த உலகம் ஒரு நொடியும் இயங்காது என்பதுதான் மாற்றவே முடியாத உண்மை. மதிகெட்ட கெடுமதியாளர்களுக்கு எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதோ தெரியவில்லை. 

இதோ அந்தச் செய்தி...!



நன்றி : தினகரன் 26.08.2025 செய்தி

Tuesday, July 29, 2025

கோவை புத்தக திருவிழா - தாத்தா - ஈகை பற்றிய புது விளக்கம்

வருடா வருடம் மகனுக்கும் மகளுக்கும் புத்தகத் திருவிழாவில் சுமார் 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த வருடம் மகன் படிக்கச் சென்றிருப்பதால், மகள் கோவை கொடிசீயாவில் நடந்து கொண்டிருந்த புத்தகத் திருவிழா 2025க்கு போக வேண்டுமென்று சொல்லி இருந்தார்.  ஞாயிற்றுக் கிழமை ஹாஸ்டலுக்குச் சென்று, அவரை அழைத்துக் கொண்டு நேரடியாக புத்தகத் திருவிழாவுக்குச் சென்று விட்டோம்.

இந்த வருடம் புத்தக விற்பனை மந்தமாக இருக்கிறது எனச் சொன்னார்கள். அரங்குகளில் கூட்டம் இல்லை. பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். ஆளுக்கொரு தின்பண்டப் பையைக் கொடுத்து அதைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு புத்தக கடைக்குள்ளும் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

மகள் படிப்பதற்கு நல்ல நாவல் பரிந்துரைக்கவும் எனக் கேட்டார். கி.ராஜநாராயணனின் நாவல், சிறுகதை தொகுப்பு ஒன்றினைப் பார்த்தேன். வாங்கிக் கொடுத்தேன். 

முதலில் அகிலனின் சித்திரப்பாவையை எடுத்தேன். அதை விட மண்ணின் வாழ்வியல் தடத்தைப் பதித்த எழுத்துகள் மகளுக்கு தெரிய வேண்டுமென்ற ஆவலில், வாங்கிக் கொடுத்தேன்.

அடுத்து பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மடத்தின் புத்தக் கடைக்குச் சென்று நிவேதிதா பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். 

பின்னர் மகள் பல ஆங்கில புத்தகங்களை வாங்கினார்.  இறுதியில் முத்து காமிக்ஸ் சென்றோம். 

வழமை போல பல புத்தகங்களை வாங்கினார். நான் வீல்சேரில் அமர்ந்திருந்தேன். அப்போது அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் ஒரு சிறு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கினான். 20 ரூபாய் இருக்கும். அவனிடம் அது என்ன காமிக்ஸ் என்று காட்டச் சொன்னேன்.

”தாத்தா, அப்பாகிட்டே 200 ரூபாய் கேட்டேன். அவர் 100 ரூபாய் தான் கொடுத்தார். காமராஜர் வாழ்க்கை வரலாறு வாங்கலாம்னு வந்தேன். ஆனால் அது விலை அதிகமாக இருக்கு, அதனால இதை வாங்கினேன்” என்றான்.

மகளுக்கு அவன் என்னை தாத்தா என்று சொல்லுகிறானே என ஒரே சந்தோஷம். 

அவனிடம் இங்கே இருக்கும் காமிக்ஸ் புத்தகத்தில் உனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள் என்றேன். மறுத்தான். மகள் அவனை வற்புறுத்தி ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தாள். அவனை அழைத்துக் கொண்டு மீனாட்சி புத்தகக் கடைக்குச் சென்று, காமராஜரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எடுத்து அவனிடம் கொடுத்த போது வாங்கவே மாட்டேன் என சொல்லி விட்டான். 

விலை அதிகமாம். அந்த புத்தகத்தின் விலை 400 ரூபாய்.

”ஏற்கனவே காமிக்ஸ் வாங்கிக் கொடுத்திட்டீங்க, இது வேணாம்” என்று மறுத்தான். 

அவனை சரி செய்து புத்தகத்தை வாங்கி அவன் கையில் கொடுத்து விட்டு, ”நல்லா படி” எனச் சொல்லி விட்டு வந்தேன். அவன் மீண்டும் ”நன்றி தாத்தா” என்றான். 

மகளுக்கும், மனைவிக்கும் ஒரே சிரிப்பு.

அப்படியே ஒவ்வொரு புத்தக கடையாக வலம் வந்து கொண்டிருந்த போது, சுப அறவாணனின் மனைவி, அவரின் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் எனச் சொல்லி கேட்டார். அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கி புரட்டிக் கொண்டிருந்த போது, அருகில் ஒரு பெரியவரும், அவரின் பேத்தியும் கையில் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தனர். 

அந்த அம்மா என்னிடம் ”அய்யா, இவரைப் பாருங்கள், இந்த புத்தகங்களை சிறைச்சாலை வாசிகளுக்கு படிக்க வாங்கிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

குள்ள உருவம், நரைத்த தலைமுடி, கனத்த கண்ணாடி, அருகில் அவரின் பேத்தி, அவர்கள் இருவரையும் பார்த்தேன். மனம் நெகிழ்ந்தது. 

நுழைவாயிலின் ஒரம் சிறைச்சாலை வாசிகளுக்கு புத்தகங்கள் தானம் செய்ய கேட்டு, ஒரு பாக்ஸ் இருந்ததைப் பார்த்தேன்.

நல்ல இதயங்களும், நான்கு பேருக்கு உதவ வேண்டுமென்ற நல்லவர்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைத்ததில் மகளுக்கு நிரம்பவும் சந்தோஷம்.

நான் கலீல் ஜிப்ரானின் புத்தகங்கள் சிலவும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புத்தகமும், தினவு இதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து விட்டேன்.

அந்த அரசுப் பள்ளி மாணவனைப் பற்றிய நினைவு வந்தது. பசங்க வேலைக்குச் சென்றதும், வருடம் தோறும் கொஞ்சம் பணத்துடன் புத்தக விழாவுக்குச் சென்று பசங்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தர வேண்டுமெனெ நினைத்துக் கொண்டிருந்த போது, கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன்.

”உன்னைக் காட்டிலும் எனக்கு மிகவும் தேவையானதை எனக்கு கொடுப்பது அல்ல ஈகை, என்னைக் காட்டிலும் உனக்கு மிகவும் தேவையானதை எனக்குத் தருகிறாயே அது தான் ஈகை.”

மண்டையில் சுத்தியலால் தட்டியது போல வலித்தது. 

அடச்சே, இது என்ன இப்படி சொல்லி இருக்கிறாரே என்ற எண்ணமும், தொடர்ந்து பல நினைவுகளும் ஊடாடின.

தமிழர் வரலாற்றில் தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று சொல்லி இருக்கிறார்கள். பாத்திரம் அறிந்து தானம் செய் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை ஏன் சொன்னார்கள் என்பதற்கான காரணங்கள் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடும் வார்த்தைகள் கலீல் ஜிப்ரான் சொன்னது.

மகாபாரதத்திலே கர்ணன் தான் செய்த புண்ணியங்களை கூட தானம் செய்திருந்தாலும், அன்னதானம் செய்யாத காரணத்தினாலே, அவனுக்கு சிவலோகத்தில் அனுமதி கிடைக்காமல், வைகுண்டத்திலே அனுமதி கிடைத்தது என்றுச் சொல்வார்கள். தர்மத்தையே பெயராக கொண்ட தர்மத்தில் சிறந்தவன் தர்மன் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.

இப்படி ஈகையிலும் கூட வகைகள் உள்ளன.

ஆனால் தமிழர்கள் இவை எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருப்பதும், கலீல் ஜிப்ரான் என்ற மேலை நாட்டுக்கார எழுத்தாளரின் வார்த்தைகள் எழுதப்படும் முன்பே,  அவர்கள் செயல்படுத்தியதும் நினைவிலாடியது.

தனக்குத் தேவையான தேரை, படர வழியின்றி காற்றில் அலைந்து கொண்டிருந்த முல்லைக் கொடி படர்ந்து தழைக்கக் கொடுத்து விட்டு, நடந்து வந்தவர் பாரி வள்ளல் என்ற தமிழ் மன்னன்.
 
கர்ணன் என்ற புராண கதைப் பாத்திரம் கூட தமிழ் மன்னனிடம் தோற்று விட்டது அல்லவா?

பாரி வள்ளல் தன்மைக்கு முன்னால் நாமெல்லாம் செய்யும் ஈகை ஈகையா?  தனக்குத் தேவையானதை செடிக்கு தானமளித்து விட்டு வரும் அரசனின் அப்போதைய மனநிலை நமக்கு வராது. கணக்கு வழக்குகள் பார்த்துதான் ஈகை செய்வோம். அரசன் செய்வான், நம்மால் முடியுமா? என்று தோன்றும். அதுவல்ல இங்கே காரணம் - அந்த நொடியின் மனநிலை. அவ்வளவுதான். 

* * * 

உலகில் சொல்லப்பட்ட எல்லா நாகரீகத்தினையும் விட, உயர்ந்த நாகரீகத்தையும், பண்பாட்டையும் கொண்ட தமிழர்கள் கீழடி நாகரீகத்தை வெளியிட மறுத்து விட்டார்கள் இந்திய ஒன்றிய மோடி அரசு. அதிகாரங்கள் மாறும் போது, தடை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அறம் எப்போதும் விழித்திருக்கும்.

யாரும் இங்கே தப்பவே முடியாது. செய்யும் செயலின் பலன்கள் அவரவரைச் சார்ந்தது.

வளமுடன் வாழ்க.


29.07.2025












Wednesday, July 16, 2025

வேத பாடசாலை சம்பவம்

போன் இன்றி ஒரு அணுவும் அசையாத நிலைக்கு உலகம் வந்து விட்டது. ஆதார் கார்டு இன்றி இனி அஃபீஷியலாக எதுவும் செய்ய முடியாது என்று அரசு சொன்னாலும், கோர்ட்டில் ஆதார் அடையாள அட்டை ஒரு ஆவணமே இல்லை என சொல்கிறது ஒன்றிய அரசு. பீகார் ஓட்டு லிஸ்ட் பிரச்சினை தெரியும் தானே உங்களுக்கு. அதைத்தான் சொன்னேன்.

போலி ஆதார் கார்டு கொடுப்பதும், குற்றம் சொல்வதும் அரசாங்கம். சரி செய்ய வேண்டிய அரசாங்கம் வழங்கும் ஒரு முக்கியமான ஆவணத்தை ஏற்க முடியாது எனக் கோர்ட்டில் சொல்வது, என்ன விதமானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

போனைத் திறந்தால் பெண் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. சோஷியல் மீடியாக்களில் பெண்களின் அரை நிர்வாணமும், பச்சை பச்சையாக பேசும் வீடியோக்களும், ஷார்ட்சுகளும் உலா. 

விஜய் டிவியில் ஆஃபீஸ் என்றொரு தொடரில் ஒரு பெண் நடிக்கிறார். முகத்தில் கொஞ்சம் சிவப்பு தழும்புகளாய். அந்தம்மாவின் இன்ஸ்டாகிராம் ஷார்ட்ஸ் - ஆபாசம். 

விஜய் டிவி தமிழ் கலாச்சாரத்துக்கு பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது. தாவணி பாவாடை போடச் சொல்லும், ஆனால் கண்டவனை கட்டிப் பிடிக்கச் சொல்லி கலாரசனை நிகழ்ச்சிகளை நடத்தும். யார் இதையெல்லாம் கேட்பது? 

ஒரு நகைக்கடை அதிபரிடம் ஒருவர் எதற்காக விளம்பரங்களுக்கு நடிகைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டார். பணமகள் வேண்டுமென்றால் விலை மகளும் வேண்டும் என்றாராம். மாற்றி எழுதி இருக்கிறேன். விலை மகள் என்றால் விபச்சாரம் என எடுத்துக் கொள்ள கூடாது. பணம் கொடுத்தால் நடிக்க வருகிறார்கள் அல்லவா? அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சம்பவம். இன்றைய மாணவர்களின் நிலை என்னவாகி இருக்கிறது என அறிந்து கொள்ளுங்கள்.

அது ஒரு வேத பாடசாலை. அங்கு பல ஊர்களிலும் இருந்தும் அப்கோர்ஸ் பார்ப்பனர்களின் பசங்க - வேதம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அங்கு ஒரு மாணவன் - மிக நல்ல குணமும், நல்ல படிப்பும் கொண்டவன். வேதம் படித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பாடசாலைக்கு வேறொரு ஊரில் இருந்து, ஒரு பார்ப்பன சிறுவன் புதிதாக சேர்ந்திருக்கிறான். புதிதாக வந்தவனுக்கு வயது கொஞ்சம் அதிகம். அந்த சின்னப் பையன் நன்றாகப் படிக்கிறானே என உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை. 

அவனை இவன் பாத்ரூமிக்குள் அழைத்துச் சென்று பெண்ணின் யோனி படத்தை சுவற்றில் வரைந்து காட்டி, இதைப் பார்த்திருக்கிறாயா? எனக் கேட்டிருக்கிறான். அது மட்டுமின்றி பல்வேறு காமம் தொடர்பான பல சில்மிஷ வேலைகளையும் செய்திருக்கிறான். அவனின் நோக்கம் அந்தச் சிறுவனின் படிப்பைக் கெடுப்பது. 

பையனும் வலையில் வீழ்ந்து அவன் சொன்னவாறு ஏதேதோ செய்திருக்கிறான். நாளடைவில் அந்தப் பையனின் அம்மாவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. பையன் மன உளைச்சலில் மனநிலை பிறழ்ந்து விட்டான். புதிதாக வந்தவன் இவனின் படிப்பையும், நன்னடைத்தையும் காலி செய்து விட்டான்.

இது போன்று வேத பாடசாலையில் மட்டும் நடக்கவில்லை. பல பள்ளிகளில், கல்விக் கூடங்களில் எல்லாக் காலங்களிலும் நடக்கும் கொடுமை. 

எனக்குப் பள்ளியில் எனது பள்ளி வாத்தியாரே செய்தார். அவருக்குப் பிடித்த மாணவனுக்கு அதிக மார்க் போட்டு விடுவார். அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பது போல செல்போன், இணையம் எதுவும் இல்லை. 

பி.இ படிக்க எனக்கு கட் ஆஃப் மார்க் இருந்தும், படிக்க முடியாது எனச் சொல்லி விட்டார். அவர் சொன்னது உண்மை என நம்பி பின்னர் பி.எஸ்.ஸி கணிப்பொறி டிகிரி படித்தேன். 

பின்னாளில் தான் தெரிந்தது, என் மீது எரிச்சலில் இருந்திருக்கிறார் என. ஏன் என எனக்குப் புரிந்தது. என் அப்பாவின் சொத்துக்கள்.

அவனின் அம்மா அந்தப் பையனை அழைத்துக் கொண்டு கோவில் கோவிலாக போய் இருக்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. மருத்துவமனையில் காட்டி மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள். ம்ஹூம்.

வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி - ஜோதி சுவாமியைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு குடும்பத்துடன் வாசியோகப் பயிற்சியைக் கற்றுக் கொடுத்து, ஒரு சில ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பையன் வெகு சிரத்தையாகப் பயிற்சியைச் செய்திருக்கிறான். பாடசாலைக்குச் சென்றிருக்கிறான். அந்தப் பையனை எதிர்த்துப் பேசி மூடிட்டு போடானுட்டான். 

பாட சாலையின் குருக்களுக்கு பையனின் நடத்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். பையனின் அம்மாவுக்குப் போன் செய்து என்ன நடந்தது என விசாரித்திருக்கிறார்.  

இப்போது பையன் மிகச் சரியான வகையில் வேதம் படித்துக் கொண்டிருக்கிறான். அதைக் கேள்விப்பட்ட எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவன் நன்றாக இருக்க வேண்டும். 

புதிதாக வந்த பையனின் வாழ்க்கையும் சிறக்க வேண்டும். அவனுக்கும் நல்லன நடக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

இன்றைய மக்களுக்கு உடனுக்குடன் சினிமாவில் ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது போல எல்லாமும் நடந்து விட வேண்டுமென ஆவல். அத்தனைக்கும் ஆசைப்படுவதால் வரும் வினை. எதுவும் நடக்காது. திட்டமிடல், செயல்படுத்தல், வெற்றி அடைதல் என்பது வார்த்தைகளில் இருக்கும். ஆனால் உண்மையில் எதுவும் நடக்காது. இழப்பு தான் வரும். அனுபவமே கற்றுக் கொடுக்கும்.

ஒரு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர், தன் ஓய்விற்குப் பிறகு 800 கோடி சம்பாதித்திருக்கிறார். அது எப்படி? சாத்தியமா? எனக் கேட்பீர்கள். ஆம் அவர் சாத்தியப்படுத்தினார். நிறைய வங்கியாளர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் அவர்களால் இந்தளவு சம்பாதிப்பது பற்றி யோசிக்கவே முடியாது.

அனுபவம் என்பது ரொம்பவும் முக்கியமானது வெற்றிக்கு.

உங்கள் குழந்தைகளின் நடத்தைகளை கொஞ்சமாவது கவனியுங்கள். அவர்களின் பாதையில் காமம் பற்றிய சேறு கொட்டிக் கிடக்கிறது. தெரிய கூடாத வயதில் தெரியக் கூடாதவைகளைத் தெரிந்து கொண்டு வழி மாறி விடுகிறார்கள்.

முதலில் சினிமாவை உங்கள் வீட்டில் இருந்து துரத்தி அடியுங்கள். சினிமா ஹீரோக்களும், ஹீரோயின்களும் போலிகள் என்பதை நினைவில் நீங்கள் வையுங்கள். அவர்களின் ஒவ்வொன்றும் போலியானவை - அதாவது நடிப்பு - அது உண்மையில்லை. அவர்கள் உங்களிடமிருந்து பெறுவது உங்கள் வாழ்க்கையை. போலியை நம்பி வாழ்க்கையை இழக்காதீர்கள்.

உங்கள் வாரிசுகளிடம் சொல்லி வளருங்கள். 

சினிமாவில் காட்டப்படுவது போல எவரும் வாழவே முடியாது அஃப்கோர்ஸ் நடிகர்களும் கூட அப்படித்தான் வாழ்கிறார்கள். திரை வாழ்க்கை திரையோடு போய் விடும் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். காமத்தின் வழியாக ஒவ்வொருவரின் மனதுக்குள் ஊடுறுவும் போலிகள் - நம்மை ஆட்சி செய்ய - நம்மிடமிருக்கும் செல்வத்தை ஆஹோவென வாழ பயன்படுத்த சினிமா மூலம் தூண்டில் போடுகிறார்கள்.

கவனமாய் இருங்கள்.






Tuesday, June 17, 2025

நிலம் (121) - கட்டிடத்தின் ஒரு பகுதியை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியது என்ன?

சோஷியல் மீடியா மூலம் ஒருவர் என்னை அணுகினார். 

அவருக்கு கோவையில் ஒரு வீடும், நிலமும் இருப்பதாகவும், அந்த நிலத்தினை அவரது சொந்தக்காரர் ஆக்கிரமித்துக் கொண்டு, விற்க விடாமல் செய்கிறார் எனவும், ஆகவே நீங்கள் எனக்கு அந்தச் சொத்தை விற்பனை செய்து கொடுக்க முடியுமா? எனக் கேட்டார். 

ஆவணங்களை வாட்சப்பில் அனுப்பினார். ஒழுங்கற்றவைகளாக இருந்தன.  என்னால் படிக்க முடியவில்லை.

ஆகவே கொரியரில் அனுப்பச் சொன்னேன். 

கொரியரும் வந்தது. 

ஆவணங்களைப் படித்துப் பார்த்ததும் தலை சுற்றியது.

பத்து செண்ட் இடத்தில் கட்டப்பட்ட வீட்டின் மேல் மாடியில் ஒரு போர்சனை மட்டும் அவர் விலைக்கு வாங்கி இருந்தார். அந்த விற்பனைப் பத்திரத்தில் நிலத்தில் உரிமை இல்லை எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதெப்படி நிலத்தில் உரிமை இல்லாமல் தொங்கும் வீட்டினை விற்க முடியும் என சந்தேகம் வந்து விட்டது. அது சட்டப்படி தவறு.

அதைப் பற்றி மேலுமொரு ஒப்பீனியனுக்காக, எனது வக்கீல் நண்பருக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தேன்.  

இந்த சொத்து முறையற்ற பதிவு அதாவது முழுமையில்லாத பதிவு செய்யப்பட்ட சொத்து. இப்படியெல்லாம் சார் பதிவாளர்கள் சொத்துக்களை பதிவு செய்து கொடுக்கிறார்களா என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

இது விற்பனைக்கோ அல்லது வாங்கவோ தகுந்த சொத்து அல்ல என சொன்னார். 

அது தொடர்பான பல நீதிமன்ற வழக்கின் தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டினார்.

எனக்கு இது புது விதமான பிரச்சினையாக இருந்ததால், எனக்கும் எதற்கும் ஒரு மேல் ஒப்பீனியன் இருக்கட்டுமே என்பதற்காக அவரிடமிருந்து கருத்து பெற்றேன்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்தச் சொத்து வாங்க லோன் பெற்று, அந்த லோனும் திரும்ப கட்டப்பட்டிருக்கிறது. 

லோன் கொடுத்த மேனேஜர், அதை ஆராய்ந்த லீகல் டீம், வருடம் தோறும் ஆடிட்டிங்க் செய்த டீம் ஆகியோருக்கு இதெல்லாம் தெரியாதா? வங்கியை மோசடி ஆவணங்களை வைத்து, ஏமாற்றி கடன் பெற்று, கடன் கட்டப்பட்டிருக்கிறது.

அவரிடம் இதைச் சொன்ன போது, எப்படியாவது விற்றுக் கொடுங்கள் என  ஆரம்பித்தார். நான் முடியாது எனச் சொன்னேன்.

அடுத்த நிமிடம் எனக்கு ஆவணங்களைத் திரும்ப அனுப்பி வையுங்கள் என்றார். அனுப்பி வைத்து விட்டேன். 

பணம், நேர விரயம் என நினைக்கவில்லை.  அனுபவமாக எடுத்துக் கொண்டேன். 

கட்டப் பட்ட இடமாக இருக்கும் பட்சத்தில், அதில் ஒரு பகுதியை நீங்கள் வாங்க விரும்பினால், அந்த சொத்து அமைந்திருக்கும் இடத்தில் பிரிபடாத பாக நிலத்தினையும் குறிப்பிட்டு - வாங்கிக் கொள்ளுங்கள்.

அவ்வாறு வாங்க வில்லையெனில் அது சட்டப்படியான கிரைய ஆவணம் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு வாங்கவும் கூடாது, வாங்கினால் வங்கிக் கடன் பெறவும் கூடாது. இரண்டும் சட்ட விரோதம்.

வளமுடன் வாழ்க.


Tuesday, June 3, 2025

நிலம் (120) - மனை அப்ரூவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

டிடிசிபி, எல்.பி.ஏ., சி.எம்.டி.ஏ. ஆகிய மனை அப்ரூவல் செய்யும் அமைப்புகள் இருந்த போது, ரியல் எஸ்டேட் செய்த பலர், பஞ்சாயத்து போர்டு அப்ரூவல் என ஒரு பொய்யை சொல்லி வீட்டு மனைகளை விற்பனை செய்து வந்தனர்.

இது பற்றி ஆளும் அரசுகளுக்கு நன்கு தெரிந்தும் கண்டும் காணாமலும் இருந்தனர். யானை ராஜேந்திரன் என்பவர் ஹை கோர்ட்டில் வழக்கு தொடுத்து, 2016ஆம் ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகளை வரன்முறை செய்து கொள்ள அன்றைக்கு ஆண்ட அதிமுக அரசு வரன்முறை திட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த திட்டத்தில் ஏக போக பலன் அடைந்தவர்கள் யார், எத்தனை ஆயிரம் கோடி பணம் வசூலிக்கப்பட்டது என்பது பெரும்பாலான பொது மக்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால் வீட்டு மனைகளை வாங்கிய மக்களுக்குத் தெரியும்.  

சதுர அடிக்கு இவ்வளவு என பணம் புரண்டது. ஏமாந்தவர்களுக்கு தண்டனை. ஏமாற்றியவர்களுக்கு அரசு அனுமதி,

ஒரு சட்ட மீறல், அதற்கு ஒரு அங்கீகாரம் என சட்டத்தை கேவலப்படுத்தினார்கள். தேவையில்லாமல் மேலே குறிப்பிட்ட மூன்று அமைப்புகளும் எதற்கு? 

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஒரு புது அறிவிப்பைப் போட்டு, அதை சட்டமாக்கி விடுவோம் என்பதெல்லாம் எவ்வளவு அவலமானது. 

வரன்முறை படுத்தாத மனைகளை விற்றவர்கள் ஜாலியாக இருந்தனர். சட்டப்படி வீட்டு மனைகளை வரன்முறை செய்து விற்பனை செய்தவர்கள் ஏமாளிகள் அல்லவா?

சட்டத்தை மதித்தால் இதுதான் பலனா? 

ஏழைகளுக்கு மிக குறைந்த விலையில் வீட்டு மனை கிடைத்தது என்று பேசலாம். ஆனால் அது சட்டப்படி தவறு அல்லவா? இப்போது மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை. அதற்கு அப்ரூவல் மனைகளை வாங்கி இருக்கலாம் அல்லவா?

இது ஒரு பக்கம். நேற்று காளப்பட்டி வரை செல்ல வேண்டி இருந்தது. 

கோவையில் சாலை விதி மீறல்கள் வாடிக்கை. காவல்துறை எவ்வளவுதான் அபராதம் விதித்தாலும் எவரும் திருந்துவதாக இல்லை. இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல, பாதசாரிகளும் விதி மீறல்களை செய்கிறார்கள்.  நேற்று ஒரு பைக்கில் இரு வாலிபர்கள், அவிநாசி சாலையில் கட் அடித்து படு வேகமாக செல்கிறார்கள். அதைப் பார்க்கும் பலருக்கும் அதிர்ச்சி.  

என்ன செய்ய முடியும்?

சுய ஒழுக்கமும், சுய ஒழுங்கும் இல்லாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். 

சட்ட மீறலை ஹீரோயிசம் என நம்ப வைக்கப்படுகிறோம் பலரால். இந்த நிலை எல்லோருக்கும் பிரச்சினையை தரும். நன்மையை தராது.  மக்கள் தான் திருந்த வேண்டும். 

இனி செய்தி.

நேற்று திமுக அரசு அன் அப்ரூவ்டு வீட்டு மனைகளை அப்ரூவல் செய்யும் காலத்தை நீட்டித்து உள்ளது. கீழே இருக்கும் இணைப்பில் அப்ளை செய்து, செய்ய வேண்டியதை செய்து, பலன் பெறுக.

http://www.tnlayoutreg.in/

டிடிசிபி இணைய தளத்தில் முன்பு அப்ரூவ்ட் வீட்டு மனைகளின் வரை படங்கள் மற்றும் நிலத்தின் உபயோக தன்மையை அறிந்து கொள்ளும் வசதிகள் இருந்தன. இப்போது அவைகளை நீக்கி விட்டார்கள். அலுவலகம் சென்று விண்ணப்பித்து, வரைபடங்களை பெற வேண்டும். 

இது பற்றி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வைத்தேன். டிடிசிபி அலுவலகத்திலிருந்து பதில் வந்தது, அந்த இணைய தள சுட்டி வேலை செய்கிறது என. ஆனால் வேலை செய்யவில்லை. மீண்டும் மேல் முறையீடு செய்தேன். பலன் இல்லை. இப்போதும் வேலை செய்யவில்லை. ஏற்கனவே இருந்த வசதியை நீக்கி விட்டார்கள். ஏன் என தெரியவில்லை. இரண்டாவது முறையீடு செய்தும் ஒரே பதில். 


மேலே இருப்பது எனக்கு வந்த பதில்.

ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட வீட்டு மனைகளின் வரைபடத்தையும், நில உபயோகம் ஆகிய விபரத்தையும் ஆன்லைனில் அரசு வெளியிட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இது நிலமோ அல்லது வீட்டு மனையோ வாங்குபவரகளுக்கு நன்மை தரும். 

ஒருங்கிணைந்த அந்த இணைய தள சுட்டியை மீண்டும் உபயோகப்படுத்த அனுமதிக்கவும். அரசு ஆவண செய்யும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

நான் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய விண்ணப்பம் கீழே.



வளமுடன் வாழ்க.



Friday, May 9, 2025

வாழ்க்கையின் நிலையாமை - அபூர்வம் சித்தியின் மறைவு

பத்தாம் வகுப்பு வரை ஆவணம் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். மூன்று சக்கர சைக்கிள் உதவியுடன் பள்ளித் தோழர்களின் உதவியால் வீட்டுக்கும் பள்ளிக்கும் சென்று வருவது பிரச்சினையாக இல்லை. பனிரெண்டாம் வகுப்புக்கு கீரமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க வேண்டி இருந்தது.

மச்சான் ஆத்மநாதன் அங்கு தான் படித்தான். இருவரும் பள்ளிக்கு சென்று வருவோம். இடையில் என் அம்மாவுக்கும், அவனது அம்மாவுக்கும் கிராமத்து சண்டை வர, அவன் என்னை சைக்கிளில் அழைத்து செல்ல மறுத்து விட்டான். ஒரு வாரம் லீவு. 

ஒரு வழியாக நெடுவாசலில் இருந்து வரும் பாலநாதன் என்னை அழைத்துச் செல்வான். கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம். ஆவணம் கைகாட்டியில் இருந்து செல்லும் ஆனந்தனும் அழைத்துச் செல்வான். ஒரு கட்டத்தில் கீரமங்கலத்தில் தங்கும் அறையொன்றினை வாடகைக்குப் பிடித்து தங்கி விட்டேன். 

கீரமங்கலம் போலீஸ் ஸ்டேசன் பின்னால் தங்கும் அறை.  மண்பானை விற்ற பள்ளித் தோழன் இப்ராம்ஷா உதவி. தினமும் காலையில் ஹோட்டலில் இட்லி, மதியம் பட்டினி, இரவில் ஒரு தோசை என ஏற்பாடு. அரசு ஹாஸ்டலில் தங்க எனக்கு அனுமதி கிடைத்தது. அது ஒரு நரகம். சாப்பாடோ கொடுமை.

இப்படித்தான் எனது உயர்நிலை பள்ளிக் கல்வி கடந்தது. பெரிய கொடுமையை அனுபவித்தேன். சாப்பாடு கிடைக்காது. இப்ராம்ஷா வரவில்லை எனில் அல்லது மறந்து விட்டாலோ பட்டினி. பள்ளிக்கும் போக முடியாது. அன்றைக்கு லீவு. இந்த லட்சணத்தில் எங்கே படிப்பது? ஒரு வழியாக முட்டி மோதி படித்துக் கொண்டிருந்தேன்.

அபூர்வம் சின்னம்மா பைங்கால். கீரமங்கலத்துக்கு பக்கத்து ஊர். சித்தப்பா நாகப்பன். அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. என் அப்பாவின் தங்கையின் மகள். சித்தி கூட பிறந்தது வீரப்பன், குட்டியப்பன், வீரியம்மாள், சிவையாள், பாப்பாத்தி, அபூர்வம் மற்றும் நாகம்மாள் என ஏழு பேர். 

அம்மா சித்தியிடம் பேசி, பைங்காலில் தங்கிக் கொண்டு, நாகப்பன் சித்தப்பாவின் அண்ணன் மகன் நடராஜனுடன் கீரமங்கலம் பள்ளிக்கு சென்று வர ஏற்பாடு செய்தார்கள்.

பைங்கால் வாசி ஆகி விட்டேன். ரெஸ்ட் ரூம் பெரிய பிரச்சினை. குளிக்க ஆத்துக்கு நடராஜன் அழைத்து செல்வான். நினைத்தவுடன் ஒன்றுக்கு போக முடியாது. கிராமங்களில் கழிவறையெல்லாம் இருக்காது. ஒப்பன் கழிவறை. என் நிலையெல்லாம் நினைத்துப் பாருங்கள். வாழும் போதே நரகத்தை அனுபவித்தேன்.

சித்தி வீடு எனக்கு சொர்க்கம். சித்தப்பா பாலனின் மகள் மாலதி எனது தங்கை, அங்கையற்கண்ணி இன்னொரு தங்கை, ராமசாமி தம்பி, பாட்டி மற்றும் நடராஜன் என உறவுகள். விடிகாலையில் மாலதி ஒரு குவளை காப்பி தரும். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அபூர்வம் சித்தி எருமை பாலில் காப்பி தரும். தினமும் சூடான சாப்பாடு. மாலதி தினமும் வெண்ணெய் கொண்டு வந்து சோற்றுக்குள் வைக்கும். நெடுவாசலில் கட்டிக் கொடுத்த மாலதி, ஏதோ பிரச்சினையால் இறந்து போச்சு. இன்று வரை என்னால் மறக்கவே முடியாத தங்கை. மாலதி என யாரவது தெரிந்தால் போதும், கண்கள் கலங்கி விடும்.

பள்ளிக்கு பத்து பைசா வாங்கி செல்லும் அங்கையற்கண்ணி, ஒரு மிட்டாய் வாங்கி உள்ளங்கைக்குள் வைத்து கொண்டு, மாலையில் பள்ளியில் இருந்து வரும் எனக்கு ஈரத்தால் கசிந்து போனதை தரும். ராமசாமி இரவில் என்னுடன் படுத்துக் கொள்வான். கொல்லைப்பக்கம் போக எனக்கு உதவி செய்வான். 

மாலையில் பாட்டியின் படுக்கையில் தான் படுத்திருப்பேன். தூங்கி விடுவேன். பாட்டி தனது சேலையால் போர்த்தி விட்டு, சத்தம் காட்டாமல் இருப்பார்கள். அபூர்வம் சித்தி ஒன்பது மணிபோல எழுப்பி வேறு அறையில் தூங்க வைக்கும்.

நாகப்பன் சித்தப்பா கீரமங்கலம் தியேட்டருக்கு படம் பார்க்க சென்று திரும்பி வரும் போது, பலகாரம் வாங்கி வருவார். இரவில் எழுப்பி சாப்பிட சொல்வார். தூக்க கலக்கத்துடன் சாப்பிட்டு விட்டு, தூங்கி விடுவேன். பாப்பாத்தி சித்தி, அவ்வப்போது வீட்டில் ஏதாவது ஸ்பெஷல் செய்தால் கொண்டு வந்து தரும்.

அபூர்வம் சித்தியின் கைப்பக்குவம் போல யாருக்கும் வாய்க்காது. இறால் குழம்பும், வறுவலும், மீன் குழம்பும், மீன் வறுவலும், சாம்பாரும், வற்றல் குழம்பு, ரசம் - சொல்லால் எழுத முடியாது. வாரா வாரம் பேராவூரணிக்கு சென்று வரும் சித்தி, எனக்கு பலகாரகங்கள் வாங்கி தரும். ஒரு வாரம் பலகாரகங்கள் சாப்பிட வரும்.

கெச்சலான உடல். திருத்திய முகம் என தெய்வாம்சம் பொருந்திய சித்தி இன்றைக்கு இல்லை. அவர் இறைவனை நாடி சென்று விட்டார். பல்வேறு பணி சுமைகளால் என்னால் அவர் உடல் நிலை சரியில்லாத நிலையில் சென்று பார்க்க முடியவில்லை. நேற்றைக்கு முதல் நாள் இரவு 11 மணிக்கு காலமாகி விட்டார் என அண்ணன் கேசவன் சொன்னார். 

அபூர்வம் சித்தி - நாசூக்கானவர். அவரின் உடை உடுத்தும் விதம், மற்றவர்களுடன் உரையாடும் விதம், பேசும் விதம் எல்லாம் கெத்தாக இருக்கும். வீரப்பன் மாமா, குட்டியப்பன் மாமா - அபூர்வம் சித்தி மூவரும் ஒரே மாதிரி இருப்பார்கள். இறந்து போன எனது தாய்மாமா அருணாசலத்துக்கும், என் அம்மாவுக்கும் பிடித்தவர். 

விடிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி, மாடுகளுக்கு தீவனம் போட்டு, சாணக் கழிவுகளை எடுத்து, பால் கறந்து, உலை வைத்து சோறு பொங்க அடுப்பை தூண்டி விட்டு, எனக்கு காப்பி போட்டுக் கொடுத்து விட்டு, வயல்காட்டுக்கு சென்று, வேலையாட்களை பார்த்து விட்டு, சித்தப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு என பம்பரம் தோற்றுப் போய் விடும். நினைத்துப் பார்க்க முடியாது. ஓயாது ஒழியாது வேலை வேலை என ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

மூன்று மாதங்கள் என நினைவு. சித்தி வீட்டில் இருந்து பள்ளி சென்று வந்து பனிரெண்டாம் வகுப்பு முடித்தேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். ஊருக்கு சென்று வரும் போதெல்லாம் சித்தப்பாவையும், சித்தியையும் பார்த்து விட்டு வருவேன். இனி?

சித்தப்பாவுடன் கல்யாணத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது - டிவிஎஸ் பைக்கின் பின்புறம் அமர்ந்து இருந்தவர் பின்னால் விழுந்து விட்டார். தலையில் அடி. சித்தப்பா பெரிய செலவு செய்து சிகிச்சை கொடுத்தார். சித்திக்கு சரியாகவில்லை. 

எல்லோருக்கும் பிடித்த அவர் இன்று இல்லை. அவரை இழந்து வாடும் சித்தப்பாவுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் தகாது. சித்தியின் மகன் நீதிக்கு என்ன ஆறுதல் சொல்வது எனவும் தெரியவில்லை.

என்னால் இந்த இழப்பில் இருந்து மீள முடியவில்லை. அம்மா, அப்புறம் சித்தி என இயற்கையின் செயலால் உண்டான இழப்புகள் என்னை வாட்டி வதைக்கிறது. 

சித்தியின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்

 09.05.2024 (5.25AM)

Tuesday, May 6, 2025

ஐந்து ரூபாய் கட்டணம்

இன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு.

கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல. 

சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்? 

இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே அது இதை விடக் கொடுமையானது. படிக்காதவர்கள் என்றால் சிவில் வழக்குகளின் கொடூரமென்பது கொலையை விட கொடுமையான தாக்கத்தை அவர்கள் வாழ்வில் உண்டாக்கும். ஒரு வி ஏ ஓ செய்யும் ஒரு தவறை சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என நினைத்துப் பாருங்கள். எத்தனை ஊழல் கைதுகள், எத்தனை சஸ்பெண்டுகள் நடக்கின்றன. செய்திகளைப் படித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், துயரமும் எதை வைத்து சரி செய்ய முடியும்? 

நான் இறந்து விட்டேன் என சொல்லி ஒரு வி ஏ ஓ பட்டாவில் இருந்து பெயரை நீக்கி விட்டான். ஜமா பந்தியில் என் அம்மா, என்னைத் தூக்கி கொண்டு போய்  டி. ஆர். ஓவிடம் விட்டு இவனை இங்கேயே கொன்னு போடுங்க. இவன் பெயரில் சொத்து பத்திரம் இருக்கிறது, இந்தப் படுபாவி இவன் இறந்து விட்டான் என பட்டா கொடுத்திருக்கிறான் என்று கதறியது. இப்படியெல்லாம் சொத்தினால் துன்பத்தில் ஆழ்ந்தவன் நான். 

இதுவே பணம் இல்லாதவர்கள் எனில் என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். நிலத்தின் மீது நடத்தப்படும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரணன் இனி ஒரு வீடு வாங்க முடியுமா? இப்போது சம்பளம் 12000 ரூபாயிலிருந்து 25000 வரைக்கும்தான் கொடுக்கிறார்கள். 

விலைவாசி உயர்வு, வீடு வாடகை உயர்வு, போக்குவரத்து கட்டணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இப்படி சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துபாட்டுக்கே சரியாக இருக்கும் போது வீடு வாங்க முடியுமா?

கல்லில் கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் பூக்களுக்காகவும், பூசைக்காகவும், பார்ப்பான் தட்டுக்களில் போடும் காசினால் அந்தக் கடவுள் அவர்களுக்கு எதையும் தருவதில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் அவை தரும். நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ்ந்து விட போராடும் ஒவ்வொருவரும் தன் வாழ் நாள் வரையிலும் ஏதோ நடக்கும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் வாழ்வை வாழ்ந்து விடுகிறார்கள்.

முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு, இனி உனக்கு சொந்தமில்லை என ஒருவர் சொல்லும் போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஒரு சாதாரண குடும்பத்தால்? இப்படியான ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு நாட்கள் ஆகின. உண்மை என்ன என கண்டுபிடிக்க. அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நிலை அப்படி. அது என்ன, எப்படி சரி செய்ய வேண்டுமென சரியான விபரங்களுடன் அவர்களுக்குப் புரிய வைத்து, அது தொடர்பான பணிகளைச் செய்ய சொன்னேன். அவர்களுக்கு இதை எப்படி கையாளனும் என சொல்லிக் கொடுத்தேன். 

இனி அந்தப் பிரச்சினை தொடர்ந்து நடக்கும். சிவில் பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதம். எல்லோருக்கும் அது எளிதில் புரிந்து விடாது. சிவில் வழக்குகள் என்பவை சரியான ஆதாரங்களுடன் நடத்தப்பட வேண்டியவை. அப்படி இருக்கலாம், இப்படி இருக்காலம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை.

ஆவண சாட்சியங்கள் வேண்டும். அது இல்லாமல் சிவில் வழக்குகள் சரியான தீர்வைத் தராது. பணம் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அதிகார மீறலும் வேலை செய்யாது. புத்திசாலித்தனமும், நிதானமும் வேண்டும்.

இன்று காலையில் அவர்கள் எனக்கு கட்டணமாக பெரிய தொகை கொடுத்தார்கள். அது அவர்களுக்கு ரொம்பவும் பெரியது. 

"ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்" என்றேன். 

திகைத்து நின்றார் அவர். 

சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டெஸ்கில் வைத்தார். 

திடீரென்று என் கையைத் தொட்டு வணங்கினார். 

"அய்யா, அதோ என் குருநாதர் அவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னேன். 

அவர் என் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமியை வணங்கிவிட்டு சென்றார். 

கோதையிடம் "இதை எடுத்துக் கொண்டு போய் பத்திரமாக வை" எனச் சொன்னேன்.

படிக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொண்டு செய்வதை விட வேறு என்ன பெரியதாய் செய்து விட முடியும்? 

என்னால் நடக்க முடியாது. என் உடலே எனக்கு எதிரி. என் உடலை வெற்றி கொள்வதில் தான் என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. 

இல்லையெனில் இந்தியா இன்னொரு சேகுவேராவைப் பார்த்திருக்கும். 

ஒரு சக மனிதன் - இல்லாதாவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதிகாரத்தினால், சதியால் வாழ்வை இழந்தவர்களுக்கும் ஆதரவாய் போராடிக் கொண்டிருப்பான்.

இதைப் படிக்கும் எவராவது ஒருவர் துன்பத்தில் உழலும் சக மனிதனுக்கு உதவினால் அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை. 

இதை விட இன்னும் ஒன்று இருக்கிறது. எவருக்கும் எந்த துன்பமும் தராமல் இருந்தாலே அதுவே கடவுளை விட பெரியது. 

கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா?

வளமுடன் வாழ்க.

Saturday, May 3, 2025

கடவுள் இருக்கின்றாரா? மீண்டும் ஓர் ஆய்வு

என்னிடத்தில் ஒருவர் அவர் தொடர்பான பிரச்சினையை சொல்லி உதவும் படி கேட்டுக் கொண்டார். அதற்காக அவரிடத்தில் ஒரு ஆலோசனை அக்ரிமெண்ட் பெற்று அவருக்குத் தேவையான ஆவணங்களை எடுத்துக் கொடுத்தேன். 

இதைக் கண்ட அவரது எதிரி (கோர்ட் வார்த்தை) தொடர்ச்சியாக அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து, தமிழக அரசால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையை கவனத்தில் கொள்ளாத, ஒரு இன்ஸ்பெக்டர் வெள்ளிக்கிழமை இரவு அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்து விட்டார். 

அவருக்கு உடனடியாக உதவ யாரும் இல்லை. பெயில் எடுக்க வேண்டும். 

அவரைக் காவல்துறையில் விசாரணை செய்யும் போது, அதாவது கைது செய்யும் முன்பு சென்று பார்த்தேன். ஒரு வக்கீலை அறிமுகம் செய்து வைத்தேன். அதை அவர் நினைவில் வைத்திருந்தார். 

ஞாயிற்றுக் கிழமை காலை அவரைப் பார்க்க அவரது மகனுடன் நானும் ஜெயிலுக்கு சென்றிருந்தேன். அதற்குள் வேறு இருவர் மனு கொடுத்து உள்ளே சென்று விட்டனர்.

ஏன் தெரியுமா?

அவரிடம் இருந்து வேறு வக்கீல்கள் வக்காலத்தில் கையொப்பம் வாங்கினால், அவரின் உண்மையான வக்கீல், ஜாமீன் கோரி வாதாடும் போது, பல வக்கீல்கள் எழுந்து நான் தான் அவரின் வக்கீல் என ஆட்சேபனை தெரிவித்தால் ஜட்ஜ் அய்யா கடுப்பாகி ஜாமீன் கொடுக்க மாட்டார். 

நண்பரின் மீது புகார் கொடுத்தவரின் திட்டம் இது.  

அதற்காக இருவரை முன்பே அனுப்பி வைத்திருந்தார். ஒரு தடவை ஒருவரை பார்க்க அனுமதித்தால் மறுபடியும் அனுமதி கிடைக்காது. வெளியில் என்ன நடக்குது என அவருக்கு தெரியாமல் ஜாமீன் கொடுக்க வேறு வக்கீலை அனுப்பி இருப்பதாக நினைத்து வக்காலத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டால் அடுத்த 40 நாட்கள் ஜெயில் வாசம். அடுத்தும் இதேபோல செய்து தொடர்ச்சியாக ஜெயில் வைத்து விடலாம் என திட்டம்.

அதை நிறைவேற்ற வேறு ஆட்கள் உள்ளே சென்று விட்டார்கள். 

நானும் பையனும் செய்வதறியாது திகைத்து நின்றோம். 

அப்போது ஜெயில் பாதுகாப்பில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து விசாரித்தார். 

விபரம் சொன்னேன். இரத்த உறவுக்குதான் முதல் அனுமதி தருவோம். இது ஏதோ பிரச்சனை போல இருக்கு என சொல்லி, மனு கொடுத்து உள்ளே சென்ற இருவரையும் உடனடியாக தடுத்து நிறுத்தி, மீண்டும் அழைத்து வந்து விட்டார்.

வந்த இருவரும் என்னைப் பார்த்ததும் தலையை எடுத்து விடுவேன், கையை உடைத்து விடுவேன், நீ இப்படி இருந்து கொண்டு என்னெவெல்லாம் செய்கிறாய். உன்னை சும்மா விடமாட்டேன் என ஜெயில் வாசலிலில் நின்று கொண்டு மிரட்ட ஆரம்பித்தனர். 

பயத்தில் உடலெல்லாம் நடுங்கி வியர்த்து வழிந்து அய்யோ என்னை விட்டு விடுங்க என அவரிடத்தில் கதறி விட்டேன். ஓட கூட முடியாது. என் நிலையை பார்த்தீர்களா? அவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டேன். இனி வரவே மாட்டேன் அய்யா என கதறி விட்டேன். நானென்ன ஹீரோ பாலகிருஷ்ணாவா? சவால் விட்டு, ஒரே உதையில் இருவரையும் பறக்க விட? இல்லை பனையூர் பண்ணையாரா? பயந்து தானே ஆகனும்?

ஆனால் அவர்கள் கொடுத்த மனு  ரத்து செய்யப்பட்டு நானும் அவரின் பையனும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தோம். சனிக்கிழமை அன்றே ஒரு சில வக்கீல்கள் உள்ளே சென்று வக்காலத்கில் கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். அவர் முடியாது என சொல்லி விட்டார். அந்த கடுப்புக்காக அவரை மிரட்ட தான் இவர்கள் வந்திருக்கிறார்கள்.

வெளியில் வந்ததும் அவர்கள் இருவரும் ஜெயிலின் வாசலில் காத்துக் கொண்டிருந்தனர். இனி அவரின் வழக்கில் தலை இட கூடாது என மிரட்டினார்கள். நானும் இனி அவர் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்து விட்டு வந்தேன். நானென்ன அரிச்சந்திரனா சத்தியத்தைக் காப்பாற்ற? அடியேன் புனர்பூச நடசத்திரத்தில் பிறந்த கிருஷ்ணர் அவதாரம். (மன்னிக்கவும் - பழக்க தோஷம் விடாது கருப்பு போல தொடர்கிறது)

திங்கள் கிழமை பெயில் எடுத்து - நான் ஜாமீன் கொடுத்தேன். அவர்கள் சுமார் பதினைந்து பேர்கள் வந்திருந்தனர். நாக்கை நீட்டி மிரட்டினார்களாம், கொலை செய்து விடுவேன் என கையால் கழுத்தில் காட்டினார்களாம். 

ஜாமீன் கிடைத்த பிறகு கூட இருந்த நண்பர் என்னிடத்தில் சொன்னார். அன்றைக்குப் பார்த்து கண்ணில் கோளாறு. ஆகையால் அவர்களை பார்க்க முடியவில்லை. 

செவ்வாய் கிழமை அவரை வீட்டில் விட்டு வீடு வந்தேன். மாலையில் தான் ஜாமின் ஆர்டர் கிடைத்தது. அதற்குள் ஜெயிலில் ஜாமீன் விடுவதற்கான நேரம் முடிந்தது.

இங்கே கடவுள் எங்கே வந்தார் என கேட்கின்றீர்களா? புரியவில்லை எனில் தொடருங்கள்.

என்னை விசாரிக்க வந்தார் அல்லவா ஒரு காவல்துறை அலுவலர், அவரே தான். 

ஒரு காவலர் உள்ளே போடுகிறார். ஒரு காவலர் உதவுகிறார். இது என்ன விதமான செயல்பாடு? இதற்கும் கடவுளுக்கும் தொடர்பு உண்டா? 

கேள்விகள், கேள்விகள். 

விடை சொல்ல முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்றா? 

நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றா? இது எது? 

இதற்கெல்லாம் பதில் என்னிடத்தில் இருக்கிறது. ஆனால் அதை சொல்ல முடியாது. 

ஏனெனில் அதன் தத்துவம், அதன் அர்த்தம் நாம் வாழும் வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவத்தில் கிடைக்காது. 

நம்மிடத்தில் இருக்கும் அறிவு பிறரால் புகுத்தப்பட்டது. இந்த அறிவு அடிமைக்கானது. அடிமை வாழ்வுக்கானது. அதுவே உன்னதமானது என சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நம்மால் விட முடியாது. உண்மையை உணரவும் முடியாது.

வளமுடன் வாழ்க.

Thursday, May 1, 2025

தலைவன் எப்படி உருவாகிறான்?

ஒரு ஊரில் ஒரு அரசியல்வாதி இருந்தான். அவனிடம் பிச்சைனு ஒரு எடுப்பாள் இருந்தான். அரசியல்வாதிக்கு எடுப்பாள் மீது  உள்ளூர கடுப்பு இருந்தது. அவன் இவன் மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வான் என்பதால்.

பிச்சைக்கு அரசியல்வாதி உயிர் போல.  செம்புல நீர்போல பேச்சு இருந்தாலும் ஒரு நாள் வெளுத்துப் போகுமே?

தேர்தல்  அறிவித்தார்கள் ஜனா நாயகத்தைக் காக்கும் தேர்தல் கமி சனர்கள். 

அரசியல்வாதிக்கு பிச்சை மேல இருந்த எரிச்சலில் பிரச்சாரத்தின் போது பிச்சைக்காரர்கள் இல்லாத ஊராக மாற்றுவேன் என வாக்கு கொடுத்தான். 

பிரச்சாரமும் நடந்து கொண்டிருந்தது. 

கோவிலில் தங்கி இருந்து, பரநாட்டத்தின் மீது பற்றுக் கொண்டு, இல்லற வாழ்க்கையை தியாகம் செய்து, காவி உடுத்தி, வீடு வாசல் துறந்து, வயித்துப் பசி தீர்க்க மகளுக்கு அருளாசி புரிந்து, ஆண்டியாய், சாமியாராய் அலைந்து திரிந்து, சித்தம் போக்கு சிவன் போக்கு என்னும் வாக்குக்கு இணங்க திரிந்து கொண்டிருந்த பல பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

காவல்துறை புலன் ஆய்ந்து இது கொலைதான் என கண்டுபிடித்தார்கள்.  ஒரு சில சிவ பெருமானின் ஊழித் தாண்டவமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்கள். சூலாயுதத்தால் கொல்லப்பட்டிருந்தார்கள் அவர்கள். 

தேர்தலில் அரசியல்வாதி தோற்று விட்டான்.

பிச்சைக்காரர்கள் கொலையைப் பற்றி போலீஸ் விசாரிக்க அரசியல்வாதியிடம் வந்ததது. 

அவர்கள் சென்றவுடன் அரசியல்வாதிக்கு சந்தேகம் எழ  பிச்சையை அழைத்தான்.

அதேதான் வாக்கை நிறைவேற்ற பிச்சை தான் பிச்சைக்காரர்களைக் கொலை செய்திருக்கிறான்.

"என்னடா இப்படி செஞ்சு வச்சிருக்கே?"

"நீங்க சொன்னீங்க, நான் செஞ்சேன், யாரு கேட்டாலும் அப்படித்தான் சொல்வேன்" என்றான்.

அடுத்த ஒரு சில நாட்களில் பிச்சை, தலைவர் பிச்சை ஆனார்.

டெல்லிக்கு செல்லும் தமிழன் என பிச்சையை அறிமுகம் செய்து வைத்தார் பத்திரைக்கைகார்களிடம். 

* * *